சிறீதரன் மீது வீசப்படும் கற்கள்
இரா. துரைரத்தினம்
01.07.2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது சில பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் குற்றச்சாட்டுக்களும், தூற்றுதல்களும் மலிந்து கிடக்கின்றன. அதற்கு மேல் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்களால் கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருந்தன. “சுமந்திரன் துரோகி ……..சுட்டுக்கொல்ல வேண்டும்’ என்று முகநூல்களில் சிலர் வெளிப்படையாக எழுதி இருந்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.
சுமந்திரன் வழங்கும் செவ்விகள், பேச்சுக்களை தேடித் தேடி அதில் எங்கோ ஓர் இடத்திலாவது அவர் சொன்ன வார்த்தையை வைத்து அவர் துரோகி என தூற்றுபவர்களும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள்.
நீண்ட காலமாக சுமந்திரனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வந்த இந்த தரப்பு கடந்த ஒரு வாரகாலமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பக்கம் திரும்பியிருக்கிறது.
சுமந்திரனுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என சிறீதரன் முடிவெடுத்த வேளையிலிருந்து அவர் மீதான தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருந்தார்கள்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பேசிய பேச்சு சிறீதரன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலாளிகளால் சிறீதரன் மீது பின்வரும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன:-
சிங்கள தொலைக்காட்சி ஒன்றிற்கு சுமந்திரன் வழங்கிய செவ்வி தொடர்பாக சிறீதரன் கண்டனம் தெரிவிக்கவில்லை.
சுமந்திரனுடன் இணைந்து சிறீதரன் தேர்தல் பிரசாரம் செய்வது.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் சுமந்திரனை இணைத்துப் பேசியது.
சுமந்திரன் போன்ற ஆளுமை உள்ளவர்கள் எமது கட்சிக்கும் எமது இனத்திற்கும் தேவை என சிறீதரன் பேசியது.
சுமந்திரனின் தொலைக்காட்சிச் செவ்வி தொடர்பாகக் கண்டனம் தெரிவிக்காமை சிறீதரனின் தனிமனித சுதந்திரம் சம்பந்தமானது. அந்தச் செவ்வியில் உள்ள சரி,பிழை பற்றி கட்சி பார்த்துக்கொள்ளட்டும். கட்சித் தலைமைப்பீடம் பார்க்க வேண்டிய வேலைக்குள் நாங்கள் தலைபோட முடியாது என்பது சிறீதரன் தரப்பு வாதம். அதையும் மீறி சுமந்திரன் மீது கண்டன அறிக்கை வெளியிடுமாறு சிறீதரனுக்கு யாரும் நெருக்குதல் கொடுக்க முடியாது. சிலர் அவ்வாறு நெருக்குதல்களைக் கொடுத்த போதிலும் சிறீதரன் அந்தப் பிரச்சினையிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
சுமந்திரனுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்யவேண்டாம் என சுமந்திரனுக்கு எதிரான தரப்புக்கள் மற்றும் சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் தரப்புக்கள் வலியுறுத்தி இருந்த போதிலும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுவும் சிறீதரனின் தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்டதுதான். ஒருவர் தான் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை அமைத்து செயற்படுவது வழமையான ஒன்றுதான். தான் யாருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டால் தனக்கு வெற்றி வாய்ப்பு இலகுவாகக் கிடைக்கும் என நம்புகிறாரோ அவருடன் இணைந்து செயற்படுவது தேர்தல் வியூகங்களில் ஒன்று. யாழ். மாவட்டத்தில் மட்டுமல்ல, ஏனைய மாவட்டங்களிலும் ஒரே கட்சியை சேர்ந்த இருவர் அல்லது மூவர் இணைந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் சுமந்திரனை இணைத்து பேசிய விடயமே பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
வடமராட்சிகிழக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே சிறீதரன் இதனைக் கூறியிருந்தார்.
சிறீதரன் அக்கூட்டத்தில் பேசிய வீடியோவை நான் இரண்டு தடவைகள் கேட்டுப்பார்த்தேன்.
அந்த பேச்சின் சுருக்கம் இதுதான்:-
சமாதான காலத்தில் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை ஒன்றிற்கான சட்டவரைவைத் தயாரித்தபோது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் இருந்திருந்தால் பெரும் உதவியாக இருந்திருக்கும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கூறியிருந்தார்.
சந்திரிக்கா அரசாங்க காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு அளப்பரியது. அவரது ஆளுமை ஆற்றல்களில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தோம்.
அது போன்ற ஆளுமை மிக்க ஒருவர்தான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கு இவரைப் போன்ற பல ஆளுமை மிக்கவர்கள் வேண்டும். எங்கள் இனம் விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் சுமந்திரன் போன்ற ஆளுமைகளின் பங்களிப்பு அவசியமாகும்.
எமது இனம் தேசிய அடையாளத்துடன் இருக்க வேண்டுமாக இருந்தால் புத்திஜீவிகள் அறிவாளிகளின் இருப்பு அவசியமாகும்.
உணர்வு தளத்தில் இருப்பவர்கள், அறிவு தளத்தில் இருப்பவர்கள் எல்லோரின் அரசியலையும் இணைத்து எமது இனத்தின் உரிமைகளை வெல்ல வேண்டும். சர்வதேசத்தை வெல்ல வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
நாங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். மக்கள் தான் முடிவெடுப்பார்கள் என்று அமைந்தது.
இந்தப் பேச்சே தமிழரசுக்கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் தரப்பிற்கும் சுமந்திரனுக்கு எதிராக கொலைவெறியுடன் திரியும் மேற்குலக நாடுகளில் உள்ள சில தமிழர் தரப்பிற்கும் சிறீதரனுக்கு அடிப்பதற்கு சரியான பொல்லுக் கிடைத்தது போல் அமைந்தது.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்து இருந்தால் சிறீதரன் மீது இவ்வளவு தாக்குதல் இருந்திருக்காது. இவ்வாறான ஒப்பீடுகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும். சிறீதரன் மீது தாக்குதல் நடத்தக் காத்திருந்தவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நாலா புறமும் நின்று தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சிறீதரனை பொறுத்தவரை 2010ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தியே வாக்கு சேர்க்கும் உத்தியை கையாண்டு வந்தவர். சுமந்திரனை தவிர தமிழரசுக் கட்சியில் உள்ள ஏனைய வேட்பாளர்கள் சிலரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் விடு தலைப்புலிகளின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்பதில் மும்முரமாக உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தியாகத்தையும் பெயரையும் சொல்லி வாக்கு கேட்கும் போக்கு மாற வேண்டும். சிறீதரன் எதிர்காலத்தில் அதனை மாற்றிக்கொள்வார் என நம்புகிறேன்.
சுமந்திரன் மீது நியாயமான சில குற்றச் சாட்டுக்கள் உண்டு.
சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து சர்வாதிகாரப் போக்கில் முடிவுகளை எடுக்கின்றமை.
கடந்த அரசாங்க காலத்தில் வரையறைகளையும் மீறி ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியது.
ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதிகள் விடுதலை உட் பட தமிழர் தரப்பின் சில எதிர்பார்ப்புக்களை நிறை வேற்றத் தவறியமை.
கடந்த வேட்பாளர் தெரிவின் போது தலையீடுகளை செய்து குழப்பங்களை ஏற்படுத்தியமை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவின் போது மாவட்ட வேட்பாளர் தெரிவுக்குழுவின் தீர்மானத்தை கணக்கில் எடுக்காது தனது செல்வாக்கில் வேட்பாளர் ஒருவரை சுமந்திரன் நியமிக்க முற்பட்டமை. இவை நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டுக்கள்.
இது தவிர புலம்பெயர் சில தமிழர் தரப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் எழுந்தமானத்திற்கு வழங்கும் “துரோகி’ பட்டங்கள் பற்றி அவர்களிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.
நான்காவது விடயம் – சுமந்திரன் போன்ற ஆளுமை மிக்கவர்கள் எமது கட்சிக்கும் எமது இனத்திற்கும் தேவை என சிறிதரன் பேசியது.
சுமந்திரன் போன்ற ஆளுமை மிக்கவர்கள் எமது கட்சிக்கும் எமது இனத்திற்கும் தேவை என சிறீதரன் 2020 இல் பேசிய பேச்சைத்தான் 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராசா யாழ்.மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று பேசியிருந்தார். 2015 இல் மாவை பேசியதை 2020ல் சிறீதரன் பேசியிருக்கிறார்.
தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா 2015 இல் சுமந்திரன் போன்ற ஆளுமை மிக்கவர்கள் எமது கட்சிக்கும் இனத்திற்கும் தேவை என பேசியதற்கு பல காரணங்கள் உண்டு.
அவற்றில் முக்கியமான சில காரணங்களை இங்கே தருகிறேன்.
13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 15க்கு மேற்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறித்தெடுத்து பஸில் ராஜபக்சவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு கடந்த மஹிந்த ராஜபக்ச அரசு முற்பட்டது. திவிநெகும ( வாழ்வின் எழுச்சித்திட்டம்) என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது.
மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் இத்திட்டத்தை எதிர்த்து மாவை சேனாதிராசாவின் பெயரில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 9 மாகாணங்களில் அனைத்து மாகாணங்களிடமும் தனித்தனியாக சம்மதம் பெற வேண்டும், ஒரு மாகாணம் எதிர்த்தால் கூட எதிர்த்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
கிழக்கு மாகாணம் உட்பட 8 மாகாணங்களும் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறித்தெடுப்பதற்கு சம்மதம் எனத் தீர்மானங்களை நிறைவேற்றன.
கிழக்கு மாகாணசபையில் மஹிந்த ராஜபக்rவால் நியமிக்கப்பட்ட பிள்ளையான் முதலமைச்சராக இருந்தமையால் மாகாணத்தின் அதிகாரத்தை பறித்தெடுக்கும் திட்டத்திற்கு சம்மதம் வழங்கினார்.
வடமாகாணம் மட்டும் ஆளுநர் நிர்வாகத்தில் இருந்தது. வடமாகாண ஆளுநரிடம் அதற்கான சம்மதத்தை பெற்ற போது அதனை ஆட்சேபித்து மீண்டும் ஒரு வழக்கை மாவை சேனாதிராசாவின் பெயரில் உயர்நீதிமன்றில் சுமந்திரன் தாக்கல் செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பும் தமிழர் தரப்பிற்கு வெற்றியாக அமைந்த போது உடனடியாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்கினார் ஜனாதிபதி.
பிரதம நீதியரசரை நீக்கிய விடயம் சர்வதேச அரங்கில் சிறிலங்கா அரசு பலத்த கண்டத்திற்கு உள்ளாகியது. இலங்கையில் நீதித்துறையில் மஹிந்த அரசு தலையீடு செய்கிறது என ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல நாடுகள் இலங்கை மீது கண்டனங்களைத் தெரிவித்தன.
இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளிய ஒரு வழக்காக அது அமைந்தது.
சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த நிலங்களை விடுவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஒருவரான மாவை சேனாதிராசா உட்பட பொதுமக்கள் சிலரின் பெயரில் உயர்நீதிமன்றில் சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்தார். பொதுமக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்பை தொடர்ந்தே 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் பெயரில் சமஷ்டி என்ற பெயர் இருக்கிறது. அக்கட்சி தனிநாடு கோருகிறது. எனவே அக்கட்சியை தடைசெய்ய வேண்டும் என சிங்கள பேரினவாத அமைப்பு ஒன்று உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் துரைராசசிங்கம் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழரசுக்கட்சி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜரானார். சமஷ்டியை கோருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 2017ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கும் குழு ஒன்றை அரசாங்கம் நியமித்தது. இந்த யாப்பை தயாரிப்பதில் தமிழர்கள் சார்பில் முக்கிய பங்கை வகித்தவர் சட்டத்தரணி சுமந்திரன் ஆவார். இந்த யாப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டாலும் அதிகார பகிர்வுக்கு எடுக்கப்பட்ட நல்ல முயற்சியாகக் கருதப்படுகிறது.
கடந்த அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் முக்கியமானது 19ஆவது திருத்த சட்டமாகும். நிறைவேற்று அதிகார முறையை வலுவிழக்க செய்து சுதந்திர ஆணைக்குழுக்கள் மூலம் முக்கிய நிர்வாக கட்டமைப்பை நிர்வாகிப்பதே இந்த 19ஆவது திருத்த சட்ட மூலமாகும்.
இந்த ஆணைக்குழுக்களில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில் இச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது.
இதனை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களாவர். 19ஆவது திருத்த சட்டத்தில் சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் தான் கோட்டாபய அரசு 19ஆவது திருத்த சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோரிவருகிறது.
கன்னியா வெந்நீர் ஊற்று, உட்பட தமிழர் நலன் சார்ந்த 20க்கு மேற்பட்ட சட்டத்துறை சார்ந்த நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
இந்த விடயங்களை ஆளுமை உள்ள ஒருவரால்தான் செய்ய முடியும். சட்டத்துறை சம்பந்தமான இந்த விடயங்களை சுமந்திரனை தவிர 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வேறு யாரால் இதனை செய்திருக்க முடியும்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியே தமிழர் தரப்பில் பல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்களில் யார் இந்த விடயங்களை செய்வதற்கு முன்வந்தார்கள்? யாரும் இந்த விடயங்களை செய்ய முன்வராததாலேயே சுமந்திரன் கட்சிக்குள்ளும் வெளியிலும் முதன்மைப்படுத்தப்பட்டார்.
இதனால்தான் 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராசா அவர்கள் சுமந்திரன் போன்ற ஆளுமை மிக்கவர்கள் எமது கட்சிக்கும் இனத்திற்கும் தேவை என மக்களி டம் கேட்டுக்கொண்டார்.
தமிழ் மக்கள் ஓரளவுக்கு நீதித்துறையைத்தான் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. நிறைவேற்று அதிகார ( ஜனாதிபதி ) துறை தமிழர் நலன்களில் அக்கறை கொண்டதல்ல. எனவே தமிழர்களுக்கு நெருக்கடிகள் வருகின்ற போது நீதித்துறையை நாட வேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.
ஆளுமை மிக்கவர்களை ஓரம் கட்டி விட்டு அமெரிக்க தேர்தலில் கிளாரி வெல்ல வேண்டும் என நல்லூர் கோவிலில் ஆயிரம் தேங்காய் உடைப்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?
சுமந்திரன் மட்டுமல்ல சுமந்திரனைப் போன்ற பல ஆளுமைகள் தமிழர்கள் மத்தியில் தேவை. இதனை தானே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது?
Leave a Reply
You must be logged in to post a comment.