யாழ்ப்பாண உதயன் நாளேட்டின் ஊடக அதர்மம்!

யாழ்ப்பாண உதயன் நாளேட்டின் ஊடக அதர்மம்!

நக்கீரன்

சுமந்திரனால் மட்டும் 20 பேர் அரசியல் கைதிகள்! என்ற தலைப்பிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேடு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில் 5 பேரும் தற்போது 15 பேருமாக 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுத்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதங்களுடன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகளைச் செய்து அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகையை நீதிமன்றில் தாக்கல் செய்வது விசாரணையாளரின் பொறுப்பாகும். இங்கு எந்த வகையில் சுமந்திரன் பொறுப்பாளியாவர்? சட்டம் பற்றிய சாதாரண அறிவு கூட உதயன் நாளேட்டின் ஆசிரியருக்கு இல்லையா? சுமந்திரனை யார் கழுத்தை முறித்தேனும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த ஏட்டின் ஆசிரியர் முடிவு செய்துவிட்டாரா?

ஒரு மாதத்துக்கு முன்னர் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் யாழ்ப்பாண உதயன் நாளேட்டின்  முன்பக்கத்தைப்  படம் எடுத்து இணைக்கப்பட்டிருந்தது.  கள்ளுக்குடிக்கிறவன் பனைக்குக் கீழே இருந்து பால் குடித்தாலும் மற்றவர்கள் அவன் கள்ளுக்குடிக்கிறான் என்றுதான் நினைப்பார்கள்.

உதயன்  நாளேடு கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அரசுக் கட்சிக்கு, குறிப்பாக சுமந்திரனுக்கு பாதகமான  செய்திகளை, தலையங்களை எழுதி வருகிறது. இது தொடர்பாக சரவணபவன் கனடா  வந்த போது ஒரு நண்பர்  தக்க  சான்றுகளோடு  அவற்றை அவருக்குப் படித்துக் காட்டினார்.

இந்தப் பின்னணியில் அண்மையில் “போர்க்குற்ற விசாரணையில் மகிந்தாவைக் காப்பாற்றியதற்கு சுமந்திரனுக்கு 120 கோடி”   என்ற தலைப்பில் “சர்வதேச போர்க்குற்ற சாட்சியங்களை செல்லாதபடி ஆக்கி  மகிந்த தரப்பினரைக் காப்பாற்றியதற்காக 120 கோடி ரூபாய்கள்  சுமந்திரனுக்கு இரகசியமாகக் கையளிக்கப்பட்டது” என  ஒரு செய்தி உதயனில் வெளிவந்தது. அதனை ஒருவர் எனது பார்வைக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்.

அதைப் படித்த எனக்கு சுமந்திரன் பற்றிய அந்தச் செய்தி உண்மையென்று நினைத்துவிட்டேன். அதனை ‘இது சாக்கடை ஊடகவியல்  என்ற ஒரு குறிப்போடு சரவணபவனுக்கு அனுப்பி வைத்தேன். அவர் “Before making comments please ensure that you read the original uthayan daily” என்று பதில் எழுதியிருந்தார். அப்போதுதான் அந்தச் செய்தி விசமத்தனமாக ஒருவாரால்  இடைச் செருகல் செய்யப்பட்டது என்பது புரிந்தது. நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தேன்.

இந்தப் பின்புலத்தில்தான் “சுமந்திரனால் மட்டும் 20 பேர் அரசியல் கைதிகள்!” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீதான கொலை முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 2000 ஆண்டு 5 பேரும் தற்போது 15 பேருமாக மொத்தமாக 20 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உதயனன் நாளேடு செய்தி  வெளியிட்டுள்ளது.

Screen Shot 2020-06-14 at 12.18.25 AM

இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவிஎம் டிவிநியூஸ் பெஸ்ட் என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன

இந்தச் செய்தியைப் படிக்கும் சராசரி வாசகன் என்ன நினைப்பான்?  சுமந்திரனின் முறைப்பாட்டை அடுத்து 20  பேர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் எனத்தான் நினைப்பான்.  சுமந்திரன் மீது சேறு பூச வேண்டும் என்ற அவசரத்தில் உதயன் நாளேடு  செய்திகளைத் திரிக்கிறது. ஊடக அறத்தைக் காற்றில் பறக்க விடுகிறது. சரவணபவன் எந்தக் கட்சியில் தேர்தலில் நிற்கிறாரோ அதே கட்சியில்தான் சுமந்திரனும் நிற்கிறார். அது மட்டுமல்ல சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவர். அதன் பேச்சாளரும் அவர்தான்.

உதயனைப் பின்பற்றி இன்னொரு ஊடக நிறுவனமான ஐபிசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பரப்புரையைச் செய்து வருகிறது. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுமாப் போலல்லாமல் நேரடியாகத்  தாக்கி வருகிறது.

யாழ்ப்பாண உதயன் நாளேட்டில் வந்த செய்தியை அப்படியே படியெடுத்து தமிழ்வின்  வெளியிட்டுள்ளது. தமிழ்வின் ஊடக நிறுவனத்தை ஐபிசி விலைக்கு வாங்கி விட்டது  தெரிந்ததே.

பொதுவாக ஊடக முதலாளிகள்  தங்களால் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்த நவீன பிரமாக்கள் எனத் தங்களை  நினைக்கிறார்கள்.

ஒரு காலத்தில் – தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர் – ஏரிக்கரை ஊடக நிறுவன முதலாளி டி.ஆர். விஜயவர்த்தனா  இந்தப் பணியைச்  செய்து கொண்டிருந்தார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் 10 ஆவது பிரதமருமான இரணில் விக்கிரமசிங்க இவரின் பேரன் ஆவார்.

இன்று மகாராசா குடும்பத்துக்குச் சொந்தமான மகாராசா கூட்டு நிறுவனத்தின் சக்தி ஊடகம் இந்தத் திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது.  இது மகாராசா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச தொலைக்காட்சி, எம்டிவி, நியூஸ் பெஸ்ட் என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன.  இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ரங்கா என்பவருக்கு தேசியப் பட்டியல் மூலம்  நியமனம் கேட்கப்பட்டது. அதனைக் கொடுக்க இரணில் விக்கிரமசிங்க மறுத்தார். அதன் பின் இரணிலையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் தாக்கு தாக்கென்று  மகாராசா கூட்டு நிறுவன ஊடகங்கள்  தாக்கி வருகிறது. 

ஏன் கனடாவில் உள்ள சிஎம்ஆர் ஊடக நிறுவனம் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிறுமைப்படுத்தும் திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது. அண்மையில் ஊடக சாம்பவான் எனத் தன்னை நினைத்துக் கொள்ளும் ஒலிபரப்பாளர் உதயன்  கேள்வி கேட்பதற்குப் பதில் சுமந்திரனைக்  குறுக்குவிசாரணை செய்தார். விமர்சனம் செய்தார். சந்திரிகா குமாரதுங்காவிடம்  இருந்து 35 இலட்சம் ருபாயை சம்பளமாகப் பெற்றார் எனக் குற்றம் சாட்டினார். ஊடக அறம் குற்றுயிரும் குலையுயிருமாய் கெட்டுக் கிடக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

சுமந்திரனால் மட்டும் 20 பேர் அரசியல் கைதிகள்! என்ற  செய்திபற்றி நான் எழுதுவதை விட  உள்வீட்டு  வெளிவீட்டு சங்கதிகள் எல்லாம் தெரிந்த காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் எழுதியிருப்பதை அப்படியே தருகிறேன். படித்து ஊடக அறம் படும்பாட்டைப் பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள். 

நேற்று ஒரு நாளிதழ் செய்தியைத் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அரசியல் பதவிக்காக – அதிகார ஆசைக்காக – பேனாக்கள் எப்படியும் வளைந்து எழுதும் என்பதைப் பார்க்கும்போது நிச்சயமாக அதிர்ச்சியாகத்தான் இருந்தது.அந்தச் செய்திக்குத் தலைப்பு “சுமந்திர0னால் மட்டும் 20 பேர் அரசியல் கைதிகள்’ என்று போடப்பட்டிருந்தது. செய்தியிலும் தவறில்லை. தலைப்பிலும் தவறில்லை. ஊடக தார்மீகத்தில்தான்தவறு.

அந்தச் செய்தியைப் புனைந்த விதம் சுமந்திரன் இழைத்த நடவடிக்கையால் இருபது பேர் அரசியல் கைதிகளாக சிறையில் வாடுகின்றார்கள் என்ற கருத்தைமக்கள் மனதில் விதைப்பது என்பது சொல்லாமல் சொல்லும் நோக்கம். அந்தச் செய்தி சரியானதுதான், அதில் தப்பில்லை, அது நியாயமானது என்று எந்த விதண்டாவாதத்தை முன்வைத்தாலும் அச் செய்தி புனையப்பட்ட விதம் இதழியல்துறை இழிவியல் துறையாகின்றது என்பதற்கான உதாரணம்தான்.

சுமந்திரனைக் கொல்ல முயற்சிகள் நடைபெற்றன எனக் கூறப்படுகின்றது. அது தொடர்பில் இருபது பேர் வரை (அந்தஊடகச் செய்தியின்படி) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை முயற்சிகள் தொடர்பாக முறைப்பாட்டாளர் சுமந்திரன் இல்லை. 

இப்படித் தம்மைக் கொல்ல முயற்சி நடப்பது குறித்து மேற்படி சந்தேக நபர்களைக் கைது செய்த பின்னர் பொலிஸ் தரப்புக்கூறித்தான் சுமந்திரனுக்கே விடயம் தெரியும். அப்படி இருக்கையில் இந்த இருபது கைதிகள் உள்ளே இருப்பதற்கு சுமந்திரன் எப்படிக் பொறுப்பாவார்? எப்படிக் காரணமாவார்?

சுமந்திரன், அந்த இருபது பேரையும் விட்டுவிடுங்கள் என்று கூறினால் கூட இலங்கைச் சட்டத்தின் கீழ் அவர்களை விடமுடியாது. அப்படி இருக்கையில் இந்த இருபது பேரும் உள்ளே இருப்பதற்கு சுமந்திரன் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

சுமந்திரன் பொறுப்பு என்று நாங்கள் கூறினோமா என்று அந்தச் செய்தியைப்பிரசுரித்த ஊடகம் கேட்கலாம். நீங்கள்
அப்படிக் கூறவில்லை. ஆனால் இந்தச்செய்தியை தலைப்பிட்டுப் புனைந்த விதம் அத்தகைய கருத்தைத்தான் தந்து நிற்கின்றது. இதில் இன்னும் சில வேடிக்கைகள் உண்டு.

அந்த ஊடகம் குறிப்பிடும் 20 அரசியல் கைதிகளில் – சுமந்திரன் கொலை முயற்சி தொடர்பாக “உள்ளே’ இருக்கும் இருபது பேரில் – ஏழு பேர் சிங்களவர்கள்.பாதாள உலகக் கோஷ்டியைப் சேர்ந்தவர்கள். சுமந்திரனைக் கொல்வதற்கு “contract’ எடுத்த குழுவோடு சேர்ந்து இயங்கியவர்கள். சுமந்திரன் கொலை முயற்சி விவகாரமும் அவர்கள் “உள்ளே’ சுமந்திரனைக் சொல்ல முயன்ற “சாதனை’யில் அவர்கள் அடங்குவதால் அந்த ஊடகத்தின் பார்வையில் அந்த “மாபியா’ குழு உறுப்பினர்கள் ஏழு பேரும் கூட “அரசியல் கைதி’ அந்தஸ்தைப் பெற்று விட்டார்கள். அதில் மற்றொருவர் முன்னர்ஈ.பி.டி.பியிலும், பின்னர் அண்மையில் மொட்டுக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிட்டவர். அவரும் சுமந்திரனைக் கொல்ல முயன்ற “அரிய பணி’ காரணமாக இந்த ஊடக முதலாளியின் பார்வையில் “அரசியல்கைதி’ அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார்.

இந்த விவகாரத்திலே – சுமந்திரனைக் கொல்ல முயன்ற விடயத்திலே – இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் சம்பவம் தொடர்பில் முதலில்கைதான ஐவரும் பெரும்பாலும் முன்னாள் போராளிகள்.

இவர்கள் கைது செய்யப்பட்ட காலத்திலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகளை பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் தொடுப்பது தவறானது சாதாரண சட்டத்தில் விடயத்தைக் கையாளுங்கள் என்ற கோரிக்கை சுமந்திரன் சார்பில் அரசுத் தரப்பிடம் முன் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைப்படி முதலில் அவர்கள் சாதாரண சட்டத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். அதனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், வழக்குத் தொடுக்கப்பட்டபோது தட்டை மாற்றிப் போட்டு விட்டது. சட்டமா அதிபர் திணைக்களம். குற்றப்பத்திரம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

முதலில் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாதமையால் அவரை விடுவித்தது அரசு தரப்பு.

ஏனைய நால்வருக்கும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவருமாக ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் பட்டது – பயங்கரவாதத் தடைச் சட்டத்தில்.

அதனால் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த நால்வரும் மீண்டும் கைதாகினர். இப்போதும் தடுப்பில் உள்ளனர்.

இவர்கள் மீளக் கைது செய்யப்பட்ட காலத்திலே இவ்விடயத்தை ஒட்டித்தாம் ஒரு சட்டத்தரணி என்ற முறையில் சுமந்திரன் அப்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை (இப்போதைய பிரதம நீதியரசர்) நேரில் சென்று சந்தித்தார்.

“நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என்று நாடாளுமன்றத்தில் வாதிடுறோம். நல்லாட்சி அரசின் கட்சிகள் பலவும் அதனை ஒப்புக் கொண்டு அந்தச் சட்டத்தை மாற்ற முயல்கின்றன. எனவே இவர்களுக்கு எதிரான வழக்கைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடுத்ததை வாபஸ் பெறுங்கள். சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கைத் தொடுக்கலாம்” – என்று வாதிட்டார். ஆனால் அது பயன்தரவில்லை.

இப்படித் தன்னை கொல்ல சதி செய்தனர் என்ற வழக்கைக் கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கக்கூடாது என்று வற்புறுத்தியவர் சுமந்திரன்.

அடுத்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பாதாள உலகக் கோஷ்டிக்காரர்கள்.

இப்படி சுமந்திரனைக் சொல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றிய முழுவிவரத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்தியமையும் கூட அந்த ஊடகம்தான்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தனது பத்திரிகையில் ஒன்றரைப் பக்கத்துக்கு மேல் “சுமந்திரனுக்கு வைக்கப்பட்ட குறி!’ என்ற தலைப்பில் முழு விவரமாக இந்தக் கொலை முயற்சி பற்றி விவரணம் வெளியிட்டு, அந்தச் செய்தியையும் பணமாக்கிக் கொண்ட அந்த ஊடகம், இன்று விருப்பு வாக்குகளுக்காக சுமந்திரனைச் கொல்லச் சதி செய்தவர்கள் சிறையில் வாடுவதற்கு சுமந்திரன்தான் காரணம் என்பது போல படம் போட முயல்கின்றது.

சிங்கள மாபியா கும்பலை தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலில் அணி சேர்க்கின்றது.

இவ்விடயத்தில் இன்னும் விவரமாகப் பல விடயங்கள் எழுதலாம். எனினும் வேண்டாம், விட்டுவிடுவோம்.

ஆனால் இப்படி விதண்டாவாதச் செய்தியைப் பிரசுரிப்பது பத்திரிகை இயலுக்கே அபத்தம்…! பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள் யாரும், இப்படி முதலாளியைத் திருப்திப்படுத்துவதற்காக இழிநிலை இதழியலுக்குப் போக மாட்டார்கள். அப்படிப் போகக் கூடியவர்கள் இருப்பதால் தான் இப்படி இழிநிலை இதழியல் இன்னும் தப்பிப் பிழைக்கின்றது…! -மின்னல்-

உதயன் போன்ற ஒரு மூத்த நாளேடு  எந்தச் சந்தர்ப்பத்திலும் தரம் தாழக் கூடாது. ஊடக அறத்தைப் பொன்னே போல் பேணி நடக்க வேண்டும். காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் சமூக அவலங்களையும்  ஆட்சியாளரின் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு அவை திருத்தப்படவும் மாற்றங்கள் ஏற்படவும் உழைக்க வேண்டும்.

செய்திகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப  திரிக்கக் கூடாது.  செய்தியைச் செய்தியாகப் போட்டுவிட்டு அது பற்றிய உண்மை, பொய், பொருத்தம், பொருத்தமின்மை பற்றி  ஆசிரிய தலையங்கம் ஊடக விமர்ச்சிக்கலாம். விமர்ச்சிக்க வேண்டும். அதுதான் ஊடக அறம்!

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply