நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்குத்  தமிழ்மக்கள் நகர வேண்டும்

நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்குத்  தமிழ்மக்கள் நகர வேண்டும்!

நக்கீரன்

ஆங்கில மொழியில் ஒரு சொற்றொடர் உண்டு.  ஒரு வயதுவந்த நாய்க்கு புதிய தந்திரங்களைக் கற்பிக்க முடியாது (You can’t teach an old dog new tricks) என்பதுதான் அந்தச் சொற்றொடர்.  அதாவது ஒருவருக்கு புதிதாக ஒன்றைக் கற்பிப்பது வில்லங்கமானது.  வழக்கமாக ஒருவர் நீண்ட  காலமாக சில விடயங்களை ஒரு குறிப்பிட்ட வழியில் செய்து வருவதால் அவற்றைப் புதிதாக வேறு வழிகளில் அந்த விடயங்களைக் கற்றுக்கொள்ள மிகவும் பிடிவாதமாக இருப்பார்.

மகிந்த இராசபக்ச தனது ஐம்பது ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பயணத்தை அண்மையில் கொண்டாடி இருக்கிறார். 1970 இல் நாடாளுமன்றத்துக்குத் தனது 25 ஆவது அகவையில் தெரிவு செய்யப்பட்ட அவர் அமைச்சர், பிரதமர், சனாதிபதி எனப்  பல பதவிகளை வகித்தவர். 1977 இல் நடந்த நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலிலும் பின்னர் 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்த இராசபக்ச தோற்றாலும் தென்னிலங்கை அரசியலில் அசைக்க முடியாத சிங்கள – பவுத்த மக்களின் கதாநாயகனாக விளங்குகிறார். பண்டாரநாயக்க குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இராசபக்ச குடும்ப அரசியலுக்கு அத்திவாரம் இட்டுள்ளார்.

கடந்த மே 04 இல் மகிந்த இராசபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் களின் கூட்டம் ஒன்றை கொழும்பில் கூட்டியிருந்தார். அதனை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்து கொண்டது. கூட்ட முடிவில் திரு சம்பந்தன் மற்றும் ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு தமிழ்மக்கள் எதிர்நோக்கும்  காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் போனோர்  போன்ற  பல சிக்கல்கள் பற்றி உரையாடினார்கள்.

மே 04 இல் சனாதிபதி மாளிகையில்  நடைபெற்ற கூட்டத்தை எதிர்க்கட்சி களுடன் இணைந்து ததேகூ  புறக்கனிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கூட்டத்தில் திரு சம்பந்தன் தலைமையில்  தமிழ் மக்களின் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும் கூட்டமைப்பினர் பங்கேற்றது மகிந்த இராசபக்சவை மகிழ்ச்சிப் படுத்தியிருந்திருக்க வேண்டும்.

இதனையடுத்து மறுநாள் மே 5 அன்று  மகிந்த இராசபக்ச அவர்களுக்கும்  ததேகூ உறுப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை தொடர்ந்தது.

பேச்சு வார்த்தை முடிவில் “தமிழ் மக்கள் பிரச்சினைக்குப் படிப்படியாகத்  தீர்வு காணப்படும் எனப் பிரதமர் மகிந்த இராசபக்ச உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில், “சனாதிபதி மாளிகை மற்றும் தனது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு திருப்திகரமாக இருந்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, அவைகளில் பெரும்பாலானவை தமிழ் மக்களுக்கு சார்பாகவே உள்ளது. தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்” என உறுதியளித்தார்.

மேலும் “புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்புத் தொடர்பாக, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் பேசுவோம் என்று கூட்டமைப்பை அண்மையில் சந்தித்தபோது உறுதி யளித்துள்ளேன். எனவே, புதிய அரசில், எல்லோரும் இலங்கை மக்கள் என்ற அடிப்படையிலேயே தீர்வை வழங்குவோம். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்த்து தீர்வை வழங்கமாட்டோம்” என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது அழைப்பை ஏற்றுத் தன்னை வந்து சந்தித்ததாகவும் இதனை எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் விமர்சிப்பதாகவும் தெரிவித்த இராசபக்ச, “அரசியல் இலாபத்துக்காக அவர்கள் அவ்வாறு விமர்சிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது, நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு உரிய பதிலை மக்கள் வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

வழக்கம் போல தங்களை அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆனந்தசங்கரி போன்றோர் மகிந்த இராசபக்சவுடன் ததேகூ நடத்திய பேச்சு வார்த்தைகளைக் கடுமையாக விமர்ச்சித்திருந்தார்கள். ( http://asiantribune.com/node/93988 )

“தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை. அதனைக் கைவிடவேண்டும் என்று நீங்கள் (மகிந்த) அண்மையில் தெரிவித்திருந்தீர்கள். ததேகூ  தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இப்போதும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் தமிழ்த் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்”? என்று பிரதமர் மகிந்தவிடம் ஊடகம் ஒன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சமஷ்டிக் கோரிக்கையையும் ததேகூ கைவிடவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மகிந்த இராசபக்சவின் பதில் தமிழ்மக்களின் அடிப்படை சிக்கல்களான அதிகாரப் பகிர்வு, வட – கிழக்கு இணைப்பு இரண்டிலும்  மகிந்த இராசபக்ச அவர்களது நிலைப்பாடு துளியும் மாறவில்லை என்பதை  ஒரு மாதம் கழித்து அவர் பேசிய பேச்சில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

1987 இல்  இராசீவ்  காந்தி – ஜே.ஆர். ஜெயவர்த்தனா இருவருக்கும் இடையில்1987ம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி (29.07.1987)  உடன்பாடு  ஒன்று எழுதப்பட்டது.   அந்த உடன்பாட்டில் –

1) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வாழ்விடங்கள் என்பதை அங்கீகரிப்பது,

2) சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர், ஒரு முதலமைச்சர், ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும்.

2006 ஆம் ஆண்டு வட – கிழக்கு இணைப்புக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி  தொடுத்த வழக்கில் வழக்கில் வட – கிழக்கு இணைப்பை அரசிதழ் மூலம் இணைப்பது சட்ட வலுவற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்த இணைப்பை சட்டப்படி செய்யலாம் என உயர் நீதிமன்றம் கூறியது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறவில்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக  எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டிற்கான சட்ட வடிவம் நொவெம்பர் 14,1987 அன்று இலங்கை நாடாளுமன்றம் இயற்றிய  13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது.  

13 ஆவது திருத்தத்தின் ஒரு முக்கிய கூறு இரு மாகாணங்கள் விரும்பினால் ஒன்றாக இணந்து கொள்ளலாம் என்பது. இந்த அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே தமிழ் மாகாணம் ஒன்று நிறுவப்பட்டு 1988 இல் ஒரு தேர்தலும் நடத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஒரு கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுப் பின்னர் இந்த இணைப்பு நிரந்தரமாக்கப்படும் என்பது 13 ஆவது திருத்தத்தின் முக்கிய கூறாகும்.

மேலும் மே 19, 2009  இல் போர் முடிந்த பின்னர் மே 25 இல் இலங்கைக்கு வருகை தந்த அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு இதே மகிந்த இராசபக்ச இனச் சிக்கலுக்குத் தீர்வாக 13 ஏ ட்ட திருத்தத்தை  முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என  இருவரும் ஒருமித்து விட்ட அறிக்கையில்  ஒப்புக் கொண்டிருந்தார்! (https://www.un.org/press/en/2009/sg2151.doc.htm)

தமிழர்களது போராட்ட வரலாற்றில்  இந்திய – இலங்கை உடன்பாடும் அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 13 ஏ சட்ட திருத்தமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய அரசின் நேரடித் தலையீடு காரணமாகவே  இது சாத்தியமாயிற்று.

13 ஏ இல் காணப்படும் சில உறுப்புக்கள் இந்திய அரசியல் யாப்பில் இருந்து வரிக்கு வரி பார்த்து எழுதப்பட்டனவாகும். இப்போது ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மாகாண சபையின் அமைச்சர் வாரியத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் இலங்கையின் அரசமைப்பு இணைப்பாட்சிக்கான குணாம்சங்களைக் கொண்டிருக்கும்.

கடந்த நாடாளுமன்றத்தில் பாதியில் கைவிடப்பட்ட  அரசியலமைப்பு வரைவில் ஆளுநருக்குரிய அதிகாரங்கள் அமைச்சர் வாரியத்துக்கு வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கதாகும். 

மகிந்த இராசபக்ச ததேகூ வட – கிழக்கு இணைப்பை மட்டுமல்ல சமஷ்டிக் கோரிக்கையையும் கைவிட்டுவிட்டு வரவேண்டும் எனக் கூறுகிறார். அவரைப் பொறுத்த மட்டில் அல்ல  சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் நிலைப்பாடும் சமஷ்டி என்றால் பிரிவினை – தனிநாடு என்றே  பொருள் கொள்கிறார்கள்.

கடந்த மாதம் மே 8 ஆம் நாள்  சுமந்திரனை சிங்களத்தில் நேர்காணல் கண்ட  சமுதித்த சமரசேகர என்ற ஊடகவியலாளர் கீழ்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

சமுதித்த: நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சுமந்திரன்: ஒன்றாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அனைத்து இனங்களுக்கும் உரிமையோடு வாழக் கூடிய தன்மை இருக்க வேண்டும். அரசியல் பலத்தை அனைவரும் பாவிக்கக் கூடியதாக இந்த அரசியல் இருக்க வேண்டும்.

சமுதித்த: அப்படியானால் தேசிய கூட்டமைப்பு ஏன் சமஷ்டி வேண்டும் என்று கேட்கிறது?

சுமந்திரன்: சமஷ்டி முறையைத்தான் நாங்கள் கேட் கிறோம். சமஷ்டி முறையால்தான் அனைத்து இனங்களுக் கும் ஆள உரிமை கிடைக்கும் எனும் உறுதி இருக்கிறது.

சமுதித்த: அதாவது இன்னொரு நாடு.

சுமந்திரன்: இல்லை! சமஷ்டி என்பது இன்னொரு நாடு என்பதல்ல.

சமுதித்த: சமஷ்டிஎன்பது இன்னொரு நாடு. சமஷ்டி என்றதும் நாடு பிரிந்தது என்றுதான் அர்த்தம்?

சுமந்திரன்: அமெரிக்காவில் இருப்பதும் சமஷ்டி முறை. ஆஸ்திரேலியாவில் இருப்பதும் சமஷ்டி முறை. கனடாவில் இருப்பதும் சமஷ்டி முறை. ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் இருப்பதும் இந்த சமஷ்டி முறை. அவை எல்லாம் வேறு வேறு நாடுகள் என்று யாரும் சொல்வதில்லை. அவை அனைத்தும் பலமான நாடுகள். அப்படி இருப்பதால்தான் அந்த நாடுகள் பலமாக இருக்கின்றன.

மகிந்த இராபச்சவின் அரசியல் நிலைப்பாடு  தமிழர் – சிங்ளவர்களுக்கு இடையில் உள்ள இன முரண்பாட்டைப் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையை மழுங்கடித்துள்ளது. 

இதனால் வட மாகாண சபைத் தலைவர் சி.வீ.கே.  சிவஞானம் போன்றவர்கள் “சிங்களத் தலைவர்கள் எவராக இருந்தாலும் – அது மகிந்தவாகவோ, இரணிலாகவோ, ஜெயவர்த்தனவாகவோ இருக்கலாம் – எவரொருவரும் எங்களுக்குத் தீர்வை இணங்கித் தருவார்கள் என்று எமக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் அப்படித் தருவார்கள் என்று எந்தக் காலத்திலும் நாம் எதிர்பார்க்கவும் முடியாது”  என்று கூறியிருக்கிறார்.  “அவரது கூற்று முற்றிலும் சரியானது.  அதுதான் நாம் கற்றுக் கொண்டுள்ள படிப்பினை” என வேறு சிலர் வழிமொழிகிறார்கள்.

இந்தப் பின்னணியில் ததேகூ இன் தலைவர்  திரு சம்பந்தன் ஒருவர்தான் நம்பிக்கை தருமாறு பேசிவருகிறார்.

“சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின்றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாமல் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுக்கின்றோம். கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். எனவே, உண்மையின் அடிப்படையில் நீதியின்அடிப்படையில் நியாயத்தின் அடிப்படையில் சமத்துவத்தின் அடிப்படையில் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை சனாதிபதி கோட்டாபய இரசபக்ச, மகிந்த இராசபக்ச இருவராலும் தடுக்கமுடியாது. எவராலும் தடுக்க முடியாது”  என்கிறார்.

அதே நேரம் “சனாதிபதி கோட்டாபய இராசபக்சவையோ அல்லது அவர் தலைமையிலான அரசையோ வெருட்டி – மிரட்டித் தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும்” என இராசபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹலிய இரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை அரசை மீறி சர்வதேசம் எதையும் செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இருந்தும் அடுத்த ஆண்டு ஜெனீவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  ஐக்கிய இராச்சியம், கனடா உட்பட ஐந்து நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர இருக்கின்றன. 

ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்பது ஒரு பொது விதி.

தடை பல வந்தாலும்  சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கை யோடு அடுத்த கட்டத்துக்குத்  தமிழ்மக்கள் நகர வேண்டும்!

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply