அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்!

அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார்,  சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்!

நக்கீரன்

இந்த மாதத் தொடக்கத்தில் (மே 08)  சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என அறிக்கையொன்றை விட்டுள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணி யின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன்.

இது  தொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கையில் “கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ்மக்களை ஏமாற்றப் பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய சம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்தமை உண்மையே. ஆனால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை” குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்னவென்றால் விக்னேஸ்வரனிடம் சம்பந்தர் ஏமாறவில்லை.  மாறாக சம்பந்தரை, விக்னேஸ்வரன் ஏமாற்றிவிட்டார். ஏறிய ஏணியை எட்டி உதைத்து விட்டார். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டார். வளர்த்த கடா சம்பந்தரின் மார்பில் பாய்ந்துவிட்டது!

நெற்றியில் திருநூறு, குங்குமப் பொட்டு,  சந்தணம், வேட்டி, சால்வை, வெண்தாடி போதாக் குறைக்கு ஆன்மீகவாதி என்ற படத்தைப் பார்த்து சம்பந்தர் ஐயா ஏமாந்து போனார்.

உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவரை வட மாகண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தால் அது தமிழ்மக்களின் அரசியல் பலத்தைக் கூட்டும்  என சம்பந்தன் ஐயா நினைத்தார். குறிப்பாக வெளிநாட்டு இராசதந்திரிகளை சந்திக்கும்போது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை, அவர்களது வேட்கைகளை, வரலாற்றைப்  பக்குவமாக விக்னேஸ்வரன் எடுத்துச் சொல்வார் என சம்பந்தர் ஐயா எதிர்பார்த்தார் என்பது உண்மையே.  ஆனால் விக்னேஸ்வரன், சம்பந்தன் ஐயாவை  மொத்தமாக ஏமாற்றிவிட்டார்.

சம்பந்தர் ஐயா விக்னேஸ்வரனை அரசியலுக்கு அழைத்து வருமுன் அவரது ‘சாதகத்தை’ சரியாகப் படிக்கவில்லை. அவரது சாதகத்தில் ஏழரைச் சனியன் சஞ்சரிப்பதை அவர் கவனிக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கு ஒரு இருண்ட பக்கம் இருந்தது தெரியவில்லை.  எல்லாம் தெருவாலே போன சனியனை விலைக்கு வாங்கின கதையாகப் போய்விட்டது.

விக்னேஸ்வரன் 13 இலங்கைத் தமிழ் ஏதிலிப் பிள்ளைகளை (இதில் 3 பிள்ளைகள் வயதுக்கு வராதவர்கள்) கற்பழித்த குற்றத்துக்காகவும் இரவி என்ற இன்னொரு இளைஞனை அடித்துக் கொன்று ஆச்சிரமத்தில் புதைத்த குற்றத்துக்காகவும்  இந்திய நீதிமன்றங்கள் இரண்டு தொடர் ஆயுள் தண்டனை (two consecutive life sentence without bail)  விதிக்கப்பெற்ற  பிரேமானந்தாவின் பிரதம சீடர் என்பது  சம்பந்தன் ஐயாவுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பிரேமானந்தா சார்பில்  விக்னேஸ்வரன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்னதும் அவரது சாட்சியத்தை செவி மடுத்த  3 நீதியரசர்கள் விக்னேஸ்வரனை “wishful thinker” ( it is the illusion that what you wish for is actually true – ஒன்றை விரும்புபவர் அது உள்ளபடி உண்மைதான் என்ற மாயை) என வருணித்து அவரது தலையில் குட்டினார்கள்.

விக்னேஸ்வரன் ஒரு படி மேலே சென்று இந்திய நாட்டின் நீதித்துறை அநீதியான நீதித்துறை என்று அர்ச்சனை செய்தார்.

பிரேமானந்தாவுக்கு எதிராக வைத்த வழக்குப் பொய் வழக்கு என்று இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர  மோடிக்கு  வட மாகாண சபையின் முதலமைச்சர் என்ற முறையில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

பிரேமானந்தாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அவரது நான்கு சீடர்களையும் (இலங்கையர்)  ஆச்சிரமத்தைப் பராமரிக்க ஆட்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை சிறையில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“சிறுவர் பாலியல் குற்றம், கொலை,மோசடி மற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா?”

என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் “குற்றவாளியாகக் காணப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட ஒருவரை 2000 ஆண்டுகளாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா” என்று சர்வ சாதாணமாகப்  பதிலளித்தார்.

அதாவது இன்றும்  பல நூறுகோடி கிறித்தவ மதத்தவர்களால் கடவுளுக்கு இணையாக வணங்கப்படும் யேசுநாதரையும் பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் இரண்டு  தொடர் ஆயுள் தண்ணடனை, தண்டப் பணம் விதித்த பாலியல் சாமி பிரேமானந்தாவையும் ஒரே தராசில் போட்டு விக்னேஸ்வரன் நிறுக்கிறார்.

யேசுநாதர் கற்பழித்தார், கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என எங்கேயாவது யாராவது சொல்லியிருக்கிறார்களா?

பிரேமானந்தாவின் விக்கிரகம்

இன்று கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை இறை தூதர் என ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாம் சமயத்தில் இயேசு கடவுள் அனுப்பிய முக்கியமான இறைதூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார்.  இவையெலலாம்  மெத்தப் படித்த ஒரு நீதியரசர் விக்னேஸ்வருக்குத் தெரியாதா?  யாரை, யாரோடு ஒப்பிடுவது என்ற ஒரு ஓழுங்குமுறை கூட அவர் தெரிந்திருக்கவில்லையா?

விக்னேஸ்வரன் பெண் குலத்துக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே படுமோசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

ஆனால் அப்படியான திருக்கல்யாண குணங்களைக் கொண்ட ஒருவருக்குத்தான் அருந்தவபாலன் சாமரம் வீசுகிறார். குடை பிடிக்கிறார். இந்திரன் சந்திரன் எனப் புகழ்கிறார்!

யேசுநாதரின் போதனையை எதிர்த்தவர்களே அவரை எதிரி என்றும், தமது மதக்கோட்பாடுகளுக்கு அடங்க மறுத்த குற்றவாளி என்றும் கூறி அவரைத் தாக்கினார்களே தவிர, கொலைகாரனான பிரேமானந்தாவை நியாயப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் அளவுக்கு குற்றச் சாட்டுக்களுக்கு ஆளானவராக யேசுநாதர் ஒருபோதும் இருக்கவில்லை. ஆகையால்தான் யேசுநாதர் இன்றும் பல நூறுகோடி மக்களினால்  வணங்கப்படுகின்றார்.

போலிச் சாமிகள் விரித்த வலையில் படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் விழுந்து விடுவது காலத்துக்குக் காலம்  நடக்கிற சம்பவங்கள்தான். ஆனால் தன்னால் நம்பப்பட்டவர் சாமி அல்ல ஆசாமி, கடவுள் அருள் பெற்ற அவதாரம் அல்ல கடைந்தெடுத்த காமுகன், பஞ்சமாக பாதகன், பகலிலிலே இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவிலே  பெண் குழந்தைகளை கசக்கிப் பிழியும் அயோக்கியன் என்று தெரிந்த பின்னரும் அந்தப் படுபாதகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதும், கோயில் கட்டி அவனது சிலையை பிரதிட்டை பண்ணுவதும், மூன்று காலப் பூசை செய்வதும் கொடிய பாவங்களாகும்.

பிரேமானந்தா ஆச்சிரமம் திருச்சி

அருந்தவபாலன் முன்னாள் முதலமைச்சர்  விக்னேஸ்வரன் மக்களை ஏமாற்றவில்லை என்கிறார். ஏமாற்றினால் கூடப் பருவாயில்லை. அவர்களது வயிற்றில் அடித்தார். அவர்களது தலையில்  மண்ணை அள்ளிப் போட்டார்.

2015 இல் யூஎன்டிபி நிறுவனம் அ.டொலர் 150 மில்லியன் (ரூபா 2,250 கோடி) நிதியுதவியை வட மாகாண சபைக்கு கொடுக்க  முன்வந்தது. இந்த நிதியின் மூலம் வட மாகாண விவசாயிகளின், தோட்டக்காரர்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்துவதே நோக்கம் ஆகும். இந்த நிதி 1913- 2008 வரை 5 ஆண்டுகள் வட மாகாண சபைக்கு மத்திய அரசு முதலீட்டுச் செலவுக்கு  ஒதுக்கிய உரூபா 1725.6 கோடியை விட அதிகமானது! விக்னேஸ்வரன் அந்த நிதியை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கியிருப்பார் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆனால் விக்னேஸ்வரன் என்ன செய்தார்?

தனது மருமகன் கார்த்திகேசு நிர்மலனுக்கு அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000  (ருபா 875,000) சம்பளத்தில் வேலை கேட்டு விக்னேஸ்வரன் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.  உடனே கொதித்தெழுந்த விக்னேஸ்வரன் அந்த நிதியே வேண்டாம் என்று திமிரோடு சொல்லிவிட்டார். வட மாகாணத்து  விவசாயிகள், தோட்டக்காரர்கள் பாவப்பட்ட பிறவிகள். சபிக்கப்பட்ட ஏழைகள். ஆனால் அவர்களது வயிற்றில் பால்வார்ப்பதற்குப் பதில் வயிற்றில் அடித்தார்.

இப்போது தேர்தலுக்கு வாக்குக் கேட்டு வரப்போகிறார். தெரியாமல்தான் கேட்கிறோம் எந்த முகத்தோடு வருகிறார்? பரப்புரைச் செயலாளர் அருந்தவபாலன் அவர்களது பதில் என்ன? பித்தளையை தங்கம் என ஏமாற்றி விற்பது பாவம் இல்லையா? கூழாங்கற்களை பட்டை தீட்டிய  வயிரம் எனக் காட்ட முனவைது மோசடியில்லையா?

அருந்தவபாலன் வெளிநாட்டில்  விக்னேஸ்வரன் நிதி சேகரிக்கப் போவதில்லை என்கிறார். அது உண்மையல்ல. கொள்கை பரப்புச் செயலாளர் செய்தித்தாள்கள் படிப்பதில்லை போல் தெரிகிறது.  2017 இல் கனடா வந்த விக்னேஸ்வரனுக்கு கனடிய டொலர் 50,150 கையளிக்கப்பட்டது. அந்த நிதி விக்னேஸ்வரன் கலந்து கொண்ட  இரவு விருந்தின் போது திரட்டப்பட்டது. இதைவிட மக்கள் வட மாகாண அபிவிருத்திக்கு என அவருக்குப் பணமாகவும் காசோலையாகவும் அள்ளிக் கொடுத்தார்கள். ரொறன்ரோவில் மட்டுமல்ல, நியூ யோர்க், இலண்டனிலும் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது? அந்தப் பணத்தில் என்னென்ன அபிவிருத்தி செய்யப்பட்டன?

வெளிநாட்டில்  விக்னேஸ்வரன்  ததேகூ க்கு நிதி சேகரிக்கச் சென்றதில்லை என்பது உண்மைதான். சம்பந்தர் ஐயா, சுமந்திரன், மாவை சேனாதிராசா  ஆகியோரே கனடாவில் நிதி திரட்ட நடத்தப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அவ்வப்போது கலந்து கொண்டார்கள்.

இப்படித் திரட்டிய நிதியில் இருந்து  சில இலட்சங்கள் சாட்சாத் விக்னேஸ்வரனது  தேர்தல் செலவுக்கு அவரது  வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. ‘தேர்தலுக்கு செலவழிக்க என்னிடம் பணம் இல்லை. எனக்கு மாதாமாதம் வரும் ரூபா 35,000  ஓய்வூப் பணத்திலேயே சீவிக்கிறேன்’ என விக்னேஸ்வரன், சம்பந்தர் ஐயாவிடம் அழாத குறையாகச் சொல்ல ‘அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அதற்கான ஒழுங்குகளை நான்  செய்கிறேன்’ என சம்பந்தர்  ஆறுதல் சொல்லிவிட்டு கனடா ததேகூ மூலம் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

ஏன் அருந்தவபாலனுக்கும்  ஏனைய ததேகூ வேட்பாளர்களது தேர்தல் (2010, 2015)  செலவுக்கு  கனடா ததேகூ நிதி சேர்த்து அனுப்பியது. இப்போது அருந்தவபாலன்  சம்பந்தர் ஐயா, சுமந்திரன், மாவை நிதி சேகரித்ததை நையாண்டி செய்கிறார்.

2015 ஆம் ஆண்டு   நிதி சேகரிப்பு நிகழ்ச்சி இரவு விருந்தில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு அனுப்பினோம். ஆனால் விக்னேஸ்வரன் “எனக்கு முதுகில் புண், நீண்ட தூரம் விமானத்தில் பயணம் செய்ய முடியாது” என்றார்.   மருத்துவர் சத்தியலிங்கத்தை ஒழுங்கு செய்கிறோம், அவரோடு வாருங்கள் என்று சொன்னோம். அதனை அவர் ஏற்கவில்லை. “என்னை வைத்து இவர்கள் மக்களிடம் காசு சேர்க்கப் பார்க்கிறார்கள்” எனத் தனது நண்பர்களிடம் கூறினார் எனக் கேள்விப் பட்டோம்.

விக்னேஸ்வரன் கனடாவுக்கு வருவதில்லை என்று முடிவு செய்துவிட்டு எங்களுக்கு நொண்டிச் சாட்டுக்கள்  சொன்னார். “உங்களது முடிவு நன்றி கொன்றதற்கு ஈடானது” எனத் திருக்குறளை மேற்கோள் காட்டி கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கடிதம் எழுதினார்.

“நீங்கள் நல்ல தமிழ் எழுதுகிறீர்கள்” என மின்னஞ்சலில் பதில் வந்தது! “என்னை வைத்து இவர்கள் தேர்தலுக்குப்  பணம் சேர்க்கப் பார்க்கிறார்கள்” என அவருக்கு  நெருங்கிய வட்டாரத்துக்கு சொல்லி  அவர் ஆனந்தப்பட்டதாக பின்னர் அறிந்தோம்.

அருந்தவபாலனின் இன்னொரு கண்டு பிடிப்பு  ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் விக்னேஸ்வரன் பதவி, பணம், சுகபோகங்களுக்காக விலை போகவில்லையாம். 

தெரியாமல்தான் கேட்கிறோம் விக்னேஸ்வரன் மாதா மாதம் ஒரு மாகாண ஆளுநருக்கு  கொடுக்கப்படும் ரூபா 140,000 சம்பளத்தில் ரூபா 50 கழித்து மிகுதி ரூபா 139,950  சம்பளத்தை வாங்கினாரா  இல்லையா? அரச செலவில்  மூன்று வாகனங்கள், பொலீஸ் பாதுகாப்பு,  குடியிருக்க மாதம் உரூபா 75,000  செலவில்  வாடகை வீடு போன்றவற்றை அவர் அனுபவித்தாரா இல்லையா? யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் எனப் பயணம் செய்ய  இராணுவ ஆளுநர் சந்திரசிறி கொடுத்த சலுகையில் அவரும் அவரது தனிச் செயலாளரும் பயணம் செய்தார்களா இல்லையா? அதற்கான செலவு உரூபா 22 இலட்சம் என்பது பொய்யா?

விக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாகத் தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை எனச் சொல்கிறார். அருந்தவபாலன் யாருக்கு காதில் பூச்சுத்த நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கட்சி என்பது தமிழ் மக்கள் பேரவை பெற்றெடுத்த குழந்தைதான். முன்னதில் விக்னேஸ்வரன் இணைத்தலைவர். பின்னதில் செயலாளர் நாயகம். அருந்தவபாலன் பேரவையிலும் இருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் பரப்புரைச் செயலாளராகவும் இருக்கிறார். வேறு விதமாகச் சொன்னால் தமிழ் மக்கள் பேரவை மோதகம் என்றால் தமிழ்த் தேசியக் கட்சி கொழுக்கட்டை! உள்ளடக்கம் ஒன்று உருவந்தான் வித்தியாசம்!

இல்லை நான் தமிழ் மக்கள் பேரவையில் இப்போது இல்லை என்று வாதிப்பாரேயானால் அதனை அம்போ என்று கைவிட்டு விட்டு – அனாதையாக்விட்டு – விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கட்சிக்குப் போய்விட்டார் என்பது பொருளாகும்!

“இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகு தாளங்களை மறைப்பதற்குத் துணை போக வில்லை” என்கிறார் அருந்தவபாலன். என்ன திருகுதாளங்கள்? விக்னேஸ்வரனது திருகுதாளங்களை நாம் வரிசைப் படுத்தினால் அருந்தவபாலன் குளம், குட்டையை தேடி ஓடவேண்டி வரும். அல்லது ஒரு முழக் கயிறு வாங்க ஓட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்திடம் சம்பந்தனும் சுமந்திரனும் ஏமாற்றி விட்டார்கள் என்று அருந்தவபாலன் அழுதுவடிக்கிறார். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை. நல்லாட்சி அரசில் சனநநாயகத்துக்கான இடைவெளி அதிகரித்திருந்தது. இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. வட கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வடக்கில் மயிலிட்டி  மீன்பிடித் துறைமுகம் அ.டொலர் 150 மில்லியன் செலவில் மீள்கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது அ.மொலர் 245 மில்லியனில் இரண்டாவது மீள்கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம்   அ. டொலர் 47.5 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

நெதெலாந்து நாட்டின் 60 மில்லியன் யூரோ (12,000 மில்லியன் ரூபா) நிதியுதவியில் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மருத்துவமனைகள் கட்டப்படுகிறது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2.25 பில்லியன் (2250 மில்லியன்) ரூபா செலவில் கட்டிமுடிக்க உள்ளது. முதல் கட்டமாக இந்த விமான நிலையத்தில் பிராந்திய விமான சேவைகள் கடந்த ஆண்டு ஒக்தோபர் 17 அன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

2015 சனவரியில் இருந்து 2019 மார்ச் வரை இராணுவம் கைப்பற்றியிருந்த  மொத்தம் 76,595 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளில் 47,604 ஏக்கர் காணி (75.48 விழுக்காடு) இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வேளாண் ஆராய்ச்சி  மையம் 30 மில்லியன் ருபா செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  

கிளிநொச்சி மாவட்டத்தில் பொது மருத்துவமனை 4.4 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட இருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்தில் ரூபா 9,200 மில்லியன் செலவில்  அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுள்ளன. 41 குளங்கள் தூர்வாரப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில்  வேளாண்மை செய்வதற்கு வழி பிறந்துள்ளது. மொத்தம் 1,100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 680 வீடுகள் தமிழ்நாட்டில் இருந்து  திருகோணமலையில் மீள் குடியேறிய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

வலிந்து காணாமல் போனோர் குடும்பத்துக்கு மாத கொடுப்பனவு செய்வதற்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபா இடைக்கால உதவியாக வழங்கப்படுகிறது.

2015 சனவரியில் இருந்து 2019 மார்ச் வரை இராணுவம் கைப்பற்றியிருந்த  மொத்தம் 76,253 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளில் 47,604 ஏக்கர் காணி (75.48 விழுக்காடு) இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளில் 71.30  சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 88.05 விழுக்காடு  தனியாருக்குரியவை காணியாகும்..

யாழ்ப்பாண மாநகர சபைக்கு ரூபா 2,350 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான அடிக்கல் 2019 ஆண்டு செப்தெம்பர் மாதம் அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க அவர்களால் நாட்டப்பட்டது.

கம்பெரலியா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபா வட – கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்பட்பட்டது. அந்த நிதியில் இருந்து சாலைகள், பள்ளிக்கூடங்கள், குளங்கள் கிராமப்புற பாடசாலைகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி, பாடசாலை மைதானங்கள் புனரமைப்பு, மின்சாரமற்ற வீடுகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி என பல திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்பட்டன. வட – கிழக்கு பொருளாதார அபிவிருந்திக்கு எக்கச்சக்கமான பணத்தை செலவழித்ததே சனாதிபதி தேர்தலில் ஐதேக வேட்பாளர் தோற்றதற்குக் காரணம் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சொல்லி வருகிறார். 

விக்னேஸ்வரனிடம் சம்பந்தன் ஏமாந்தார் என்று புலம்புவதை விட விக்னேஸ்வரன் தனது 5 ஆண்டு காலப் பதவிக் காலத்தில் எதை வெட்டிப் பிடுங்கினார் என்று சொல்ல வேண்டும். அவரது சாதனைகளை அருந்தவபாலன்  பட்டியல்  இடவேண்டும். 

நாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும்.  தமிழ்த் தேசியக் கட்சி என்ற ‘மாபெரும்’ கட்சியின் பரப்புரைச் செயலாளர் என்ற பதவியில் இருப்பவர் அந்தக் கட்சி பற்றியும் அந்தக் கட்சியின் தலைவர் பற்றியும்  போற்றி பாட வேண்டும்.  கோட்டான் கத்துவதைக் குயில் கூவுது என்று சொல்ல வேண்டும். வான்கோழியின் நடையை தோகை விரித்தாடும் அழகான மயிலின் ஆட்டம்  என்று புகழ வேண்டும். முயல் சிங்கத்தை எதிர்த்து வென்றதாகக் கதை சொல்ல வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார்.  சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்!

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply