காலத்தைக் கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் எனப் பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
நக்கீரன்
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழி போல கொரோனோ கோதாரி நோயைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்தது போல பயன் அளிப்பதாக இல்லை. கொரோனா கோதாரி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமேயுள்ளன. ஊரடங்கச் சட்டம், சமூக விலக்கல், கதவடைப்பு, வீட்டுக் காவல், நாட்டின் எல்லைகளை ரூடுதல் எதிர்பார்த்த அளவு பயன் தரவில்லை.
உலக அளவில் கொரோனா கோதாரி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு (மே 13) பின்வருமாறு.
நாடு | பாதிக்கப் பட்டவர்கள் | இறப்பு | தற்சமயம் பாதிக்கப் பட்டவர்கள் | குணமடைந்த வர்கள் |
அமெரிக்கா | 1427739 | 85014 | 1034862 | 307836 |
ஸ்பெயின் | 271095 | 27104 | 60764 | 183227 |
உருசியா | 242271 | 2212 | 192056 | 48003 |
ஐக்கிய இராச்சிம் | 229705 | 3186 | 196175 | – |
இத்தாலி | 222104 | 31106 | 196175 | 112541 |
பிரேசில் | 188974 | 13149 | 78457 | 101715 |
பிரான்ஸ் | 178060 | 27074 | 97401 | 78124 |
ஜெர்மனி | 174098 | 7589 | 17539 | 148700 |
துருக்கி | 143114 | 3952 | 17539 | 101715 |
இரான் | 112725 | 6783 | 37447 | 89428 |
சீனா | 82926 | 4633 | 104 | 78189 |
இந்தியா | 78055 | 2551 | 49104 | 26400 |
பேரு | 76306 | 2169 | 49813 | 24324 |
கனடா | 72278 | 5302 | – | 35164 |
உலகம் | 4,429,235 | 298,165 | 2,472,075 | 1,658,995 |
இலங்கையைப் பொறுத்தளவில் கொரோனா கோதாரி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு ஆகும். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் ( மே 14) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 382 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். சிறிலங்கா மேற்கொண்ட அவசரகால அறிவிப்பு, பள்ளிகள், உணவகங்கள் மூடல், போக்குவரத்துத் தடை, ஊரடங்கச் சட்டம் போன்றவை காரணிகளாக இருக்கலாம்.
கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உருசியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் அமெரிக்கா, உருசியா முன்னணியில் இருக்கின்றன. நேற்று (மே 13) மட்டும் அமெரிக்காவில் 1763, ஐக்கிய இராச்சியம் 495, இத்தாலி 195, பிரான்ஸ்’ 83 பேர் இறந்துள்ளார்கள்.
கொரோனா தொற்று நோயோடு சண்டை பிடித்துக் களைத்துப் போன நாடுகள் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தளர்த்தத்தொடங்கியுள்ளன. அப்படிச் செய்யாவிட்டால் பொருளாதாரம் படுத்துவிடும் என ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். உயிர்களைக் காப்பாற்றுவா? பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதா? என்ற கேள்விக்கு உயிர்கள் போனாலும் பருவாயில்லை பொருளாதாரத்தை சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு பல நாடுகளின் ஆட்சியாளர்கள் வந்துள்ளார்கள். கடைகள், தொழில் நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இந்தியாவின் நல்வாழ்வு அமைச்சர் மக்கள் கொரோனா நோயோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பேசியிருக்கிறார். சமூக இடைவெளி, முகக் கவசம் அணியுங்கள், அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
ஒட்டு மொத்தத்தில் உலகில் கொரோனா நோயின் தாக்கம் குறைவதற்குப் பதில் கூடிக் கொண்டு போகின்றது. இப்படியே போனால் நாட்டின் மக்களில் பெரும்பாலோர் பட்டினி கிடக்க வேண்டி வரும். காசை அச்சடித்து மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அப்படிச் செய்வதால் பண வீக்கம் அதிகரித்து நாணயத்தின் மதிப்பைக் குறைந்துவிடும். ஒரு சாக்கில் பணத்தைக் கொண்டுபோய் ஒரு பையில் பொருட்களை வாங்க வேண்டிய நிலை தோன்றும்.
உலக வங்கி 2020 ஆம் ஆண்டில் 49 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்படுவர் என எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி “ஒரு மோசமான சூழ்நிலையில், நாங்கள் சுமார் முப்பது, நாற்பது நாடுகளில் பஞ்சத்தைப் பார்க்க முடியும். கொரோனா வைரஸ் காரணமாக, 2020 கடைசியில் கூடுதலாக 130 மில்லியன் மக்கள் வறுமையின் விளிப்பிற்குத் தள்ளப்படக்கூடும். இது ஏற்கனவே வறுமையில் வாடும் 135 மில்லியன் மக்களை உள்ளடக்காது.
கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா.சபை கணித்துள்ளது. 1930 இல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருக்கும் என்பதுடன் சுமார் மூன்றரை கோடி பேர் கொடிய வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் அது தெரிவித்துள்ளது. கொரோனாவால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் 8.5 லட்சம் கோடி டொலர் என்ற அளவுக்கு இழப்பை சந்திக்கும் என்றும் இது கடந்த 4 ஆண்டுகளில் பெற்ற அனைத்து வளர்ச்சிக்கும் ஈடானது என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் 2020 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சி -3 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று மதிப்பிடுகிறது, இது 2020 சனவரியில் மதிப்பீடுகளிலிருந்து 6.3 விழுக்காடு தரமிறக்குதல் ஆகும். உலகளாவிய வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 5.8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2020 இன் பிற்பகுதியில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடுகள் எடுத்த நடடிவடிக்கையைப் பொறுத்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொற்றுநோயிலிருந்து ஒட்டுமொத்த உற்பத்தி இழப்பு 9 டிரில்லியன் டொலர்களை எட்டக்கூடும். ஐக்கிய இராச்சியத்தின் பரதமர் பொறிஸ் யோன்சன் தங்களது நாடு பொருளாதாரத்தில் இருந்து மீண்டு பழைய நிலையை அடைவதற்கு 3 ஆண்டுகளபிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
இதே சமயம் கொரோனா நோயினால் சில நன்மைகளும் உண்டாகியுள்ளது. காற்றில் உள்ள மாசு குறைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 20% – 30% மாசு குறைந்துள்ளது. வீதிகளில் வாகன நெருக்கடி குறைந்துள்ளது.
கண்ணுக்குத் தெரியாது இருந்த இமயமலையையின் சில பகுதிகள் இப்போது துல்லியமாகப் பார்க்க முடிகிறதாம். கங்கை ஆறு தூய்மைப் படுத்துள்ளது. ஒசோனில் ஏற்பட்ட ஓட்டை தானாக மூடிக் கொண்டுள்ளது. இந்தியாவில் லக்னவ் விலங்குக் காட்சிச்சாலையில் உள்ள மிருகங்களும் பறவைகளும் மனித தொந்தரவு இல்லாமல் மகிழ்ச்சியோடு காணப்படுகின்றன.
சீனாவின் ஷென்ஷான் நகரம் நாய், பூனை இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள lநாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.
எது எப்படியிருப்பினும் உலகம் பழைய உலகமாக இருக்கப் போவதில்லை. காலத்தைக் கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் எனப் பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.