அரசியல் ஏமாளி சுமந்திரன்
இன்றைய தமிழ் அரசியலில் பரிதாபத்துக்குரிய நபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் – அல்லது தமிழரசுக் கட்சியின் – பேச்சாளர் சுமந்திரன்தான்.
போகிற போக்கில் அதுவும் கூட – “பேச் சாளர் பதவியும்’ கூட – இப்போது அவருக்கு இருக்கும் “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்ற பட்டம் போல “முன்னாள் பேச்சாளர்’ என்று ஆகிவிடுமோ, என்னவோ? அப்படித்தான் இருக்கின்றது நிலைமை.
அரசியலில் வெளிப்படையாகப் பேசி, அதற்காக வாங்கிக் கட்டும் நபராக அவர் தென்படுகின்றார்.
அரசியலுக்கு முதலில் தேவை நடிப்பு. நடிக்கத் தெரியாமல் – பாவனை பண்ண அறியாமல் – மனதில் பட்டதை வெளிப் படையாகப் பேசி, அதற்காகத் கடித்துக் குதறப்படும் நிலைக்குக் தள்ளப்பட்டிருக்கின்றார் அவர்.
புளொட் தலைவர் சித்தார்த்தன் கூறியமை போல சிறுவயது முதல் கொழும்பில் வாழ்ந்து வந்தமையால் வரலாற்று ஓட்டத்தை அறியாமல் சுமந்திரன் அப்படிக் கருத்துக் கூறினார் என்றே வைத்துக் கொள்வோம்.
சரி, அறியாமல்தான் அப்படி சுமந்திரன் என்ன கூறியிருக்கின்றார்?
அவரது அரசியல் எதிரிகளான நீதியரசர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதற் கொண்டு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரால் மட்டுமல்லா மல், அவரது கட்சியைப் சேர்ந்த சார்ள்ஸ் நிமலநாதன், சரவணபவன், அரியநேந்திரன் போன்றவர்களுடன் கடைசியாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் வரையிலும் எல்லோராலுமே இந்த விடயத் தில் “தீண்டத்தகாதவராக’ நோக்கப்படும் நிலைமைக்கு சுமந்திரன் தள்ளப்பட்டிருக்கின்றாரா?
சுமந்திரனின் சிங்களச் செல்வி இவர்களில் சிலருக்கு குருடன் யானை பார்த்த கதை போன்றது என்றே தோன்றுகின்றது.
ஆயதப் போராட்டத்தோடு பயணித்து வந்தவர்களின் கதை வேறுமாதிரியானது. நீதியரசர் விக்னேஸ்வரன் அரச நீதித்துறைப் பதவியோடு பாதுகாப்பாக இருந்து கொண்டு தூரத்திலிருந்தபடி போராட் டத்தை நோட்டமிட்டவர். அதனால்தான் இன்றுவரை அவருக்கு பிரபாகரன் “தம்பி பிரபாகரன்’ ஆகத் தெரிகிறார். இதுவரை ஒரு நாளுமே அவருக்குப் பிரபாகரன் “தலைவர் பிரபாகரன்’ ஆகத் தெரியவேயில்லை.
மாவை சேனாதிராஜா அந்தப் போராட்டத்துக்கான ஆரம்பத் தில் மண்வெட்டி போட்டு கொத்தி, வயலைப் பண்படுத்திக், போராட்டக் களத்தை வளப்படுத்திய பிதாமகர்களுள் ஒருவர். அதற்காக வருடக்கணக்கில் சிறைவாசமும் அனுபவித்தவர். ஏதோ கார ணங்களினால் நேரடி ஆயுதப் போராட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி நிற்க வேண்டியவரானார். ஆனாலும் உணர்வும் உயிரு மாகப் போராட்டத்துடன் நின்றவர். அதற்காகத் தலைவர் பிரபா கரனால் மெச்சப்பட்டவர்.
கஜேந்திரகுமார் போன்றோர் ஆயுதம் தூக்காவிட்டாலும் அந்தப் போராளிகளுக்கு நிகரான நிலைப்பாட்டில் நின்றவர்கள்; இன்னும் நிற்கின்றவர்கள். வேறு சிலர் – பெயர் குறிப்பிட விரும்பவில்லை – யாருடைய போராட்டத் தியாகத்திலும் பாடுகளிலும் தமது அரசியலை விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வியாபார அரசியலாக்கிக் கொண்டு தொடர்பவர்கள்.
இன்னும் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் போன்றோர். மற்றவர்கள் சித்தார்த் தனின் புளொட் அணி சார்ந்தோர். இந்தத் தரப்பினர் எல்லோ ருமே ஆயுதப் போராட்டத்தை வரித்தவர்கள்தாம். தலைவர் பிர பாகரனுடன் சேர்ந்து ஆயுதம் தூக்கியவர்கள்தாம்.
இந்தியப் படையின் வருகையுடன் ஆயுதங்களைக் கைவிட்டனர் என்று கூறினார்கள். அதன் பின்னர், அதுவரை காலமும் நடந்தவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்யும் தரப்பில் இணைந்து முழுமையாகப் புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்புலமான அரசியல் சக்தியாகினர் – சுரேஷ், செல்வம் தரப்பினர். இன்னும் அந்நிலை நீடிக்கின்றது எனலாம்.
அடுத்தது – புளொட். 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் வரையிலும், ஏன் அதற்குப் பின்னர் 2010 ஜனாதிபதித் தேர்தல் கடந்தும், தமிழினத்துக்குப் பேரழிவை ஏற்படுத்திய மஹிந்த – கோட்டா தரப்புடன் நின்றவர்கள். புலிகளுடன் இணைந்துதான் அதைச் செய்தோம் என்பது அவர்களின் இப்போதைய வாதம்.
இவர்கள் எல்லோரும் ஏறி நின்று “கடித்துக்குதறும்’ நிலைக்கு சுமந்திரன் சென்றமைக்கு அவர் என்ன தவறு செய்திருக்கின்றார் என்று தேடிப் பார்த்தோம்.
“நான் ஆயுதம் தூக்கிப் போராடுவதை வரவேற்பவன் அல்லன். அதனால் ஆயுதப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிக்க வில்லை” – இதுதான் அவர் கூறிய விடயங்கள். இப்படிக் கூறுவது ஆயுதப் போராட்டத்துக்கு எதிரானதா? ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா?
பிரபாகரன் களத்தில் இருக்கும் வரை புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கி அவர்களை அழித்தவர்களை எல்லாம் இன்னும் பெரும் வீரர்களாகப் பேற்றும் தமிழினத்துக்கு அந்த வகைய றாக்களுக்குள் அடங்காத – அவர்களைப் போல அரசியல் அரிதார நடிப்பு பண்ணாத – புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தனது வாக்கு வங்கிக்கான அரசியல் பிரசார உத்திக்குரிய மூலதன மாகப் பயன்படுத்த தெரியாத – சுமந்திரன் உண்மையில் அரசியல் ஏமாளிதான்!
(யாழ்ப்பாணத்தில் இருந்து மே 12, 2020 அன்று வெளியான ‘காலைக்கதிர்’ இணையதளத்தில் வெளியான ஆசிரியர் பார்வை)
அடைக்கலநாதனின் ரெலோ, பிறேமச்சந்திரனின் இபிஆர்எல்எவ், போராட்டக் குழுக்கள் அரசுக்கு எதிராகப் போராடியதைவிட வி.புலிகளுக்கு எதிராக நீண்ட காலம் போராடியன. 1987 இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் நுழைந்த போது அதனோடு சேர்ந்து வி.புலிகளுக்கு எதிராக போராடிய குழுக்கள் இவை. இபிஆர்எல்எவ் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. இக் கொலைகளுக்குத் தலைமை தாங்கியவர் இன்றைய “தமிழ்த் தேசியவாதி” சுரேஷ் பிரேமச்சந்திரன். இந்திய இராணுவத்தின் அனுசரணையுடன் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைக்குழுவை உருவாக்கி, விடுதலைப் புலிகளுடன் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது இந்திய இராணுவம். அவ்வேளையில் தெருக்களில் சென்ற இளைஞர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட அத் துணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதனைத் தலைமை தாங்கியவர்களுள் பிரேமச்சந்திரனும் ஒருவர்.
‘மண்டையன் குழு’ என்ற கொலைப்படையை வழி நடத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன் தானே நேரில் கொலைசெய்ததைப் பார்த்த ஆதாரஙக்ள் உண்டு. மிகவும் கோரமான கொலைகளில் ஈடுபட்ட பிரேமச்சந்திரன் இன்றைய தமிழ்த் தேசியவாதி. இந்திய இராணுவ காலத்தின் போர்க்குற்றவாளியான பிரேமச்சந்திரன் ஐ.நா வரை சென்று போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று போரின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளிடமே மன்றாடினார்.
இதே போல் ரெலோவும் இந்திய அமைதிப் படையோடு சேர்ந்து கடைசி வரை வி.புலிகளுடன் சண்டை பிடித்தார்கள்.
சித்தார்தனின் கதை வேறு மாதிரியானது. மாலைதீவு படையெடுப்பு தோல்வி கண்டபின் அரசிடம் தஞ்சம் புகுந்தது. கடைசிக் காலத்தில் அரசின் கூலிப்படையாகவே இயங்கியது. மே 2009 இல் போர் முடிந்தபோது வி.புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு இருந்ததாக சித்தார்த்தன் சொல்லிப் பெருமை பட்டுக் கொன்றார்.
இவர்கள்தான் இன்று வி.புலிகளுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் சிங்கள இராணுவத்தைக் கொல்வதற்குப் பதில் சகோதர யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார்கள்.