காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி

காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி

அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !

தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது.

உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று. காங்கிரஸ்காரனும் கருணாநிதி முதுகில் ஏறி கரை ஏறி விட்டான். அதே கெத்தோடு போய் ஏழு மந்திரிப் பதவிகளையாவது பெற்று விட வேண்டும். பிள்ளைகளையோ பேரனையோ அனுப்பினால் பேரம் படியாது தான் போனால்தான் சரிவரும் என்றுதான் முதுமையின் தொல்லைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல் டில்லியில் தவம் கிடந்து தோல்வியோடு திரும்பியிருக்கிறார்.

சிவகங்கையில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்ற ப. சிதம்பரம் கருணாநிதிக்கு நன்றி சொல்லும் போது எழுத்தின் மூலமே வெற்றியை ஈட்டிக் கொடுத்தவர் என்று புகழ்ந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றோ அல்லது மறுநாளோ கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”ஈழத் தமிழர்களுக்காக என் எழுத்துப் பணி ஓயாது”” என்று சொல்லியிருந்தார். கருணாநிதியின் இறுதிக்கால இந்த அரசியல் வியாபரத்தில் கடிதமும், பயணமும் இரண்டரக் கலந்திருக்கிறது. ஓட்டுக் கேட்டு வாக்காளர்களைப் போய் சந்திக்க பயணம் போக வேண்டியதில்லை. மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டு கழிவிரக்க கடிதங்கள் எழுதினால் போதும். அழகிரியின் தலைமையில் திருமங்கலம் வெற்றியை மாடலாக வைத்து செல்வமும் செல்வாக்கும் (ரௌடிகள் செல்வாக்கு) உள்ள வேட்பாளர்களை நிறுத்தி பணத்தை வீசினால் வாக்காளன் ஓட்டுப் போட்டு விடுவான். அந்த வேலை முடிந்தது.

கொத்துக் குண்டுகளுக்கு செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழனுக்காக ஏதாவது செய்யுங்கள் என்றால், “நான் நேற்று கடிதம் எழுதினேன், அதற்கு முந்தைய நாள் கவிதை எழுதினேன், நேற்று கூட சிதம்பரத்தோடு பேசினேன், நாளை தந்தியடிக்கிறேன், மறு நாள் தந்தியும் கடிதமும் சேர்த்தடிக்கிறேன்” என்று கபடியாடுகிறார்.பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட மக்களுக்காக கடிதம் எழுதி கண்ணீர் வடித்த கருணாநிதி, கடைசியாக நடத்திய உண்ணாவிரதம்தான் கொலைக்களத்தில் பலியாகி விழுந்த ஈழத் தமிழர்களுக்கு கடைசியாய் நடந்த இழிவு.

“கனரக ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம், யுத்த நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டோம், இனி மக்களை மீட்கும் நடவடிக்கைதான்”” என்று இலங்கை அரசு அறிவித்ததை போர் நிறுத்தம் என்று முழுப்பொய்யைச் சொல்லி ஆறு மணி நேர உண்ணாவிரதத்தை முடித்து விட்டுச் சென்று விட்டார். போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்கிறீர்களே? அங்கே மக்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டதற்கு மழைவிட்டும் தூவானம் விட வில்லை என்றார்.

போர் முடிவுக்கு வந்தாக அறிவிக்கப்பட்ட கடைசி மூன்று நாட்களில் மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.  கருணாநிதியின் அகராதியில் தூவனம் என்பதன் பொருள் ஐம்பதாயிரம் மக்கள் படுகொலையாக இருக்குமோ என்னமோ? இத்தனை நடந்தும் கடிதம், உண்ணாவிரதம், என்று ஈழ விவாகரத்தில் காரியம் சாதித்ததாக தம்பட்டம் அடித்தவர்.  ஏன் அதே கடிதத்தால் தனது வாரிசுகளுக்குத் தேவையான கேபினெட் மந்திரிப் பதவிகளைப் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாதா? காங்கிரஸ் கட்சியின் பார்முலாவில் இதற்கெல்லாம் எவ்வித முக்கியத்துவமும் கிடையாதா? என்றால் கிடையாதுதான். கடிதத்திற்கு மட்டுமல்ல கருணாநிதிக்கே முக்கியத்துவம் கிடையாது.

மத்தியில் தேர்தல் கமிஷன் தலைவராக நவீன் சாவ்லா கொண்டு வரப்பட்ட போதே காங்கிரஸ் பார்முலா மாறிவிட்டது. சரி அது என்ன காங்கிரஸ் பார்முலா. மிகவும் சிம்பிள்தான். இந்தத் தேர்தல் முடிவுகளின் போது காங்ரஸ் நாடு முழுவதும் மண்ணைக் கவ்வும் என்று பொதுவாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பணம், அதிகாரம். தேர்தல் கமிஷன் துணையோடு மாநிலக் கட்சிகளுக்கு அல்வா கொடுத்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான சீட்டுகள் வந்ததோடு. சில புதிய கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு மாநிலக் கட்சிகளின் காலைவாரி விடுகிறது. காரியம் முடியும் வரை காலில் விழுந்து கெஞ்சுவது; அடுத்தவன் முதுகில் ஏறி சவாரி வருவது; காரியம் முடிந்ததும் அப்படியே காலைவாரி விடுவது, இதுதான் காங்கிரஸ் கட்சியின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வரலாறு. இன்று கருணாநிதியின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அதனால்தான் டில்லியில் வைத்தே ”அளவுக்கு மீறி ஆசைப்படுகிறது திமுக” ‘என்று வெளிப்படையாகவே கருணாநிதியை மிரட்டினார்கள் காங்கிரஸ்காரர்கள். அத்தோடு ஆங்கில ஊடகங்களை தூண்டி விட்டு திமுகவின் டி.ஆர்.பாலுவையும், ஆ.ராசாவையும் ஊழல்வாதிகள் என்று பிரச்சாரம் செய்தார்கள்.இவர்கள் இருவருமே மகா யோக்கிய உத்தமர்கள் என்று சொல்வதற்கில்லை. மீடியாக்காரர்களுக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் இவர்கள் இருவரும் ஊழல்வாதிகள் என்பது இப்போதுதான் தெரிந்ததாக்கும்.

காங்கிரசிடம் கேட்ட ஏழு மந்திரிப் பதவிகளும் கிடைக்கவில்லை, தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதிய கருணாநிதி சொல்லாமல் கொள்ளாமல் ஜெட் ஏர்வேஸ் மூலம் டிக்கெட் போட்டு சென்னைக்கு வந்து விட்டாராம். நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தினார், என்றும் உலகத் தமிழர்களின் காதில் திமுக பூச்சுற்றி விட்டது என்று உலக மகாயோக்கியர் ராமதாஸ் சொன்ன போது…….ஈழத்துக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகி முத்துக்குமார் கருணாநிதியை தன் கடிதத்தில் வருத்தெடுத்த போது வந்த கோபமும் ஆத்திரமும் ஏன்  கேட்ட மந்திரிப் பதவிகளை தர மறுக்கும் காங்கிரஸ் மீது இவருக்கு வரவில்லை.வராது… வரவும் கூடாது. கெட்ட நேரம் பார்த்து சூடு சுரணை வந்து தொலைத்தால் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் பீஸைப் பிடுங்கி விடுவான் என்ற பயம. உண்மையில் திமுகவின் மெயின் சுவிட்சே இப்போது காங்கிரஸ் கையில்தான் இருக்கிறது. மேலும் வாரிசுகளுக்கு பதவிகளை எப்படியாவது பெற்றுத் தறவேண்டுமென ஆலாய்ப் பறக்கும் கருணாநிதிக்கு தன்மான உணர்ச்சிகளெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

பதவி, அதிகார வெறி, வாரிசு அரசியலால் வீழ்ச்சியடைந்துள்ள தனது கட்சியின் நிலை தெரியாமல் பழைய நினைப்பில் நடந்து கொள்கிற திமுகவின் தலைவர் கருணாநிதியின் இன்றைய நிலை என்ன? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மத்தியிலோ மாநிலத்திலோ பதவியில் இருப்பதன் மூலம் தொடர்ந்து வலுவான நிலையில் கட்சி இருப்பது போல காட்டிக் கொண்டு மீண்டும் மத்தியில் வாரிசுகளுக்கும் அடிப்பொடிகளுக்கும் மந்திரிப் பதவி வாங்கி விடத் துடிக்கிற கருணாநிதி இந்த இடைப்பட்ட காலத்தில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்குடைந்து காங்கிரஸ் வலுப்பெற்றதை கவனிக்கத் துவங்குகிறார். தமிழகத்தில் திமுகவின் வெற்றியை மட்டுமே வைத்து நினைத்ததை சாதித்து விட நினைக்கும் கருணாநிதி மாநிலத்தில் மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் கட்சியை நம்பி இருப்பதையும் மறந்து விடுகிறார்.

முன்னெப்போதையும் விட கருணாநிதியைப் புரிந்து கொள்ளும் அப்பட்டமான அரசியல் சூழல் இப்போது தமிழகத்தில் நிலவுகிறது. தேர்தல் நேரத்தில் நான் ” என் சொல்படி கேட்டு நடக்கும் மத்திய அரசு வந்தால் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்”” என்று கதறிய ஜெயலலிதா தன் பேச்சை தமிழக மக்கள் நம்பவில்லை என்று தெரிந்ததும், ”இலங்கையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என அடக்கி வாசிக்கிறார். கருணாநிதியின் கட்சி பலவீனமானாலும் அவரது செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் பழுதோ பாதகமோ இல்லாமல் இன்னும் பதவி அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் ஜெயலலிதாதான். ஆமாம் ஜெயலலிதாவின் பலம் கருணாநிதிதான். கருணாநிதியின் பலம் ஜெயலலிதாதான்.  சூழ நிலவும் கேவலங்களை மறைத்து தன் துதி பாட கருணாநிதி வழக்கமாக கையாள்வது தன்னைச் சூழ நிறுத்தி வைத்திருக்கும் அல்லக்கைகளைத்தான்.

இந்த அல்லக்கைகளில் முக்கியமானவர் மாமா..னமிகு வீரமணி. கருணாநிதியின் மந்திரி பதவிக்கான பேரங்களை ஏதோ மாபெரும் சமூகநீதியாகச் சித்தரிக்கும் வீரமணி அதை பார்ப்பன பத்திரிகைகள் அவதூறு செய்வதாக சீறுகிறார்.ஈழத்தின் மக்கள் புலிகள் என்ற பெயரில் கொல்லப்படுவதாக இதே பார்ப்பன ஊடகங்களும், காங்கிரசு அரசும் பிரச்சாரம் செய்யும் போது வராத கோபம், இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதை நியாயப்படுத்தும் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று பேசும்போது இல்லாத சுயமரியாதை உணர்வு இப்போது மட்டும் சீறிப்பாயும் மர்மமென்ன?

கனிவான இதயம் கொண்டவர், மென்மையான பண்பு கொண்டவர், நுட்பமான கவிதை எழுதுபவர், தாயகத்தில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தபோது கண்ணீருடன் நிறுத்தச் சொன்னவர் என்று இலக்கியவாதிகளால் அறியப்படும் கனிமொழி இந்த பதவி வேட்டைக்காக தந்தையின் நிழல் போல வந்ததும், எல்லா இடங்களிலும் ஏதோ மகாபாரதப் போர் நடத்தும் உணர்ச்சியுடன் டெல்லியை சுற்றி வந்ததும் சரியாகச் சொன்னால் ஆபாசம். ஈழத்திற்காக கடைசிக் கட்டத்தில் புலிகளை சரணடையச் செய்ய நண்பர் ஜெகத்கஸ்பாருடன் முயற்சி செய்தாராம் கனிமொழி. இத்தகைய அதிகார பலம் கொண்டவர் அடுத்தநாளே ஈழத்தில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டவுடன் எதுவும் நடக்காதது போல கேபினட் பதவிக்காக டெல்லியின் அதிகார பீடங்களை சுற்றி வந்த்திலிருந்து இவரது இதயம் ஈழத்திற்காக எப்படியெல்லாம் துடித்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. கனிமொழியியை தன் இலக்கிய வாரிசு என்றார் கருணாநிதி. பதவி வெறியிலும் அந்த வாரிசுரிமையை தனது அண்ணன்களோடு சேர்த்து வெளிப்படுத்துகிறார் கனிமொழி.

ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், செல்வி போன்றோரெல்லாம் கருணாநிதியின் வாரிசுகளுக்கு கேபினட் மந்திரி பதவி வாங்கித் தராமல் சென்னை திரும்பக் கூடாத என தமிழினத் தலைவரை மிரட்டியிருப்பார்கள் போலும். ஆனால் ஈழத்து மக்களுக்காக இப்படியொரு மிரட்டலை செய்வதற்கு தமிழகத்தின் மக்களுக்கு அதிகாரமில்லாமல் போனதே?

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply