பிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது!
நக்கீரன்
நுணலும் தன் வாயால் தான் கெடும் என்பது பழமொழி. தவளை தன்வாயினாலேயே கெட்டுப்போகும் என்பதே இதன் பொருள். மழை பெய்து குளங்களில் தண்ணீர் நிரம்பிவிட்டால் தவளைக்கு ஆனந்தம். அது தானாகவே கத்திக் கொண்டிருக்கும். தவளையை உணவுக்காகத் தேடித் திரியும் பாம்பு, அது இருக்கும் இடத்தை எளிதிலே தெரிந்துகொண்டுவிடும். பாம்பு சென்று அதைப் பிடித்து விழுங்கிவிடும். இதனால்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டாயிற்று.
‘‘பிறர் மேல் பொல்லாங்கு சொல்லிக்கொண்டு ஒளிந்து திரியும் அறிவிலிகள் சிலர் உண்டு. அவர்களை யாரும் தேடிப்பிடிக்க வேண்டுவதே இல்லை. அவர்களே அகப்பட்டுக் கொள்ளுவார்கள். அவர்களுடைய சொற்களே அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும். நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப இருப்பவர்கள் இவர்கள்தாம்.
சுரேஸ் பிறேமச்சந்திரனும் இந்தத் தவளை போன்றவர்தான். சுமந்திரன் அனைத்து விடயங்களிலும் பொய் பேசுகிறார். அவர் எப்போதும் உண்மை பேசியது கிடையாது, விக்கிரமசிங்க அரசுக்கு முண்டு கொடுத்தவர் எனப் புழுதி வாரித் தூற்றி வருகிறார். அவர் தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வருவராக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக அமையும் என்றும் பிறேமச்சந்திரன் ஒப்பாரி வைத்து அழுகிறார்! சுமந்திரன் ஏன் தமிழர்களது தலைவராக வரமுடியாது? அவர் என்ன படியாதவரா? மும்மொழியிலும் பேசத் தெரியாதவரா? சட்ட அறிவு இல்லாதவரா? கப்பம் கேட்டு ஆட்களைக் கடத்திக் கொலை செய்தவரா? வங்கிகளைக் கொள்ளையடித்தவரா?
இப்படி அவர் நாவடக்கம் இல்லாது பேசும் போது மற்றவர்கள் அவரது பழைய இரத்தக் கறை படிந்த வரலாற்றைத் தோண்டி எடுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்!
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கால அவகாசம் அரசாங்கங்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தார். தேர்தல் நெருங்கும் வேளைகளில் இலங்கை அரசைப் பொறிக்குள் சிக்க வைப்போம் என அறிக்கையை வெளியிடுகின்றார். நான்கு வருடங்களாக இந்த இலங்கை அரசை பொறிக்குள் சிக்க வைக்க முடியாத சுமந்திரன் நாங்கள் கால அவகாசம் வழங்கவில்லை இலங்கை அரசை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிறேமச்சந்திரன் வாயிலும் வயிற்றிலும் அடித்து நிலத்தில் வீழ்ந்து புரண்டு ஒப்பாரி வைக்கிறார்.
நாற்பத்தியேழு உறுப்பினர்களைக் கொண்ட ஐநாம உரிமைப் பேரவை சுமந்திரன் சொல்லி சிறிலங்காவுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்தது என்றால் அவர் எவ்வளவு கெட்டிக்காரனாக இருக்க வேண்டும்? சுமந்திரன் ஐநாமஉரிமைப் பேரவையின் இல. 30-1 தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா அரசைப் பொறிக்குள் தள்ளி இருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தத் தீர்மானத்தின் நகலை ஜெனிவாத் தெருக்களில் போட்டு எரித்தவர்கள் அந்தத் தீர்மானம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இன்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் அந்தத் தீர்மானம் கத்திபோல சிறிலங்கா அரசின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது! சிறிலங்காவின் காலைச் சுற்றிய பாம்பு போல இருக்கிறது!
ஐநாமஉரிமைப் பேரவையின் ஆணையாளர் யுத்தகாலத்தில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பாக நியமித்த மூவர் கொண்ட சர்வதேச விசாரணை அறிக்கையின் அடிப்படையில்தான் இன்று இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. தடைக்கு அந்த அறிக்கைதான் காரணம் என அமெரிக்கா வெளிப்படையாகச் சொல்கிறது!
கடந்த காலத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன், அவரது சீடன் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பலர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள். ஆனால் அரசுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொன்னவர்கள் பெரும்பாலும் தமிழ்மக்களைத்தான் – தமிழ்ப் பொதுமக்களைத்தான் – அதிக எண்ணிக்கையில், வகைதொகை இல்லாது கொலை செய்தார்கள். இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் வேறு இயக்கங்களின் போராளிகளைத்தான் கேட்டுக் கேள்வியின்றிக் கொரூரமான முறையில் கொலை செய்தார்கள். பொது மக்களை அச்சுறுத்திக் கப்பம் வாங்கினார்கள். தங்களுக் வேண்டாதவர்களைப் பிடித்து வந்து அவர்களது தலையில் ஆணியை அடித்துக் கொலை செய்தார்கள். இதனால் பிறேமச்சந்திரனுக்கு மண்டையன் குழுத்தலைவர் என்ற பட்டம் ஊர்மக்களால் கொடுக்கப்பட்டது.
பிரதமர் விக்கிரமசிங்க ஆட்சியில் தொகுதி மேம்பாட்டுக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டது. அந்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து முன்பள்ளிக் கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள், சாலைகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றுக்கு ததேகூ இன் நா.உறுப்பினர்கள் கொடுத்த முன்மொழிவுகளுக்கு அமைய மாவட்டச் செயலகம் அந்தத் திட்டங்களை செயல்ப்படுத்தியது.
ஆனால் சிவசக்தி ஆனந்தன் என்ன சொன்னார்? அரசாங்கம் ததேகூ நா.உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் இலஞ்சம் கொடுத்துவிட்டது என்று ஊர் தோறும் மேடை போட்டு தம்பட்டம் அடித்தார். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது மெய்யாகிவிடும் என அவர் நினைத்தார்.
பின்னர் சிவசக்தி ஆனந்தனே அரசிடம் இருந்து 5 கோடி நிதியை இறைஞ்சிப் பெற்றார். அதனைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார். அதாவது மாமியார் உடைத்தால் பொன் குடம், மருமகள் உடைத்தால் மண்குடம் என்ற மாதிரி நடந்து கொண்டார். தான் வாங்கினால் அது அபிவிருத்தி நிதி, அதே நிதியை ததேகூ நா.உறுப்பினர்கள் வாங்கினால் அதற்குப் பெயர் இலஞ்சம்!
“சனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸை சந்தித்துக் கலந்துரையாடி உள்ளது. கம்பெரலிய திட்டத்தினூடாகக் கடந்த கால அரசின் மூலம் விடு விக்கப்பட்ட நிதியைத் தற்போதுள்ள அரசு ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பெரலிய திட்டத்தினூடாகப் பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு முயற்சிக்கின்றனர்” என்று உளறுகிறார். இதன் பொருள் என்ன?
இரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஒதுக்கிய நிதியை தற்போதுள்ள அரசாங்கத்திடம் கேட்கக் கூடாது, அதனை அப்படியே விட்டு விட வேண்டும். அந்த நிதியைப் பெற்று வட கிழக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக் கூடாது. அவர்கள் தொடர்ந்து ஏழ்மையில் தவிக்க விட வேண்டும். அவர்கள் ஓலைக் குடிசையில்தான் வாழ வேண்டும். ஓட்டு வீட்டில்தான் வாழக் கூடாது. சோறு உண்ணக் கூடாது கஞ்சிதான் குடிக்க வேண்டும். வேட்டி கட்டக் கூடாது கோவணத்தோடுதான் திரிய வேண்டும். இது என்னமாதிரியான குரூர எண்ணம், சிந்தனை?
எடுத்துக் காட்டாக தென்னமரவடியில் ஒரு பால்பண்ணை அமைக்க முந்திய அரசாங்கம் ஊரெழுச்சித் திட்டத்தின் கீழ் ரூபா 28 மில்லியன் ஒதுக்கியிருந்தது. அந்த நிதி திருகோணமலைக் கச்சேரிக்கும் வந்து விட்டது. ஆனால் அந்தப் பண்ணைக்குரிய 25 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து 33 ஆண்டு குத்தகை அடிப்படையில் எடுப்பதற்குக் காலதாமதமாகி விட்டது. அதனால் பண்ணை வேலை நொவெம்பர் 16 க்கு முன்னர் தொடங்க முடியவில்லை. இப்போது கனடிய தமிழர் பேரவை, கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கம் திரட்டி நிதியில் இருந்து வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் முடக்கப்பட்ட ரூபா 28 மில்லியனை விடுவிக்க வேண்டும் என்று சம்பந்தன் ஐயா இந்த அரசிடம் கேட்கக் கூடாதா? கேட்டால் அது பஞ்சமா பாதகம் என பிறேமச்சந்திரன் சொல்கிறாரா? இப்படியான குரூரமான, குறுகிய மனப்பான்மை கொண்ட ஒருவரை இனம்கண்டு தமிழ்மக்கள் தேர்தலில் நிராகரிப்பதில் வியப்பு இருக்கிறதா?
கடந்த ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணிக்குமாறு சுரேஸ் பிறேமச்சந்திரன் கேட்டிருந்தார். இல்லை வாக்குப் போட விருப்பம் என்றால் சிவாஜிலிங்கத்துக்குப் போடுமாறு கேட்டிருந்தார். எத்தனை பேர் அவரது சொல்லைக் கேட்டு சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தார்கள்? சிவாஜிலிங்கத்துக்கு தமிழ்மக்கள் போட்ட வாக்குகள் எத்தனை? அதற்குப் பின்னராவது பிறேமச்சந்திரன் தனது வாயை மூடிக்கொண்டு இருந்திருக்க வேண்டாமா?
பிறேமச்சந்திரனுக்கு ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறோம். இந்த அரசு பதவிக்கு வருமுன்னர் (நொவெம்பர் 16, 2019) முந்திய அரசு ஒதுக்கிய நிதியை விடுவிக்குமாறு இந்த அரசோடும் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பேசுவது எங்களது சனநாயக உரிமை. தமிழ்மக்களும் அரசாங்கத்துக்கு வரி செலுத்துகிறார்கள்.
சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் பொய் பேசுகிறார், அவருக்கு அரசாங்கம் கொழும்பில் சொகுசு பங்களா ஒன்றை வழங்கியிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டு திரிகிறார். இவர் ஏதோ தான் மட்டும் அரிச்சந்திரன் என நினைக்கிறார் போலும். ததேகூ, குறிப்பாக சுமந்திரன் பற்றிப் பொய்யுரைப்பதையே இவர் தனது முழுநேர அரசியலாகக் கொண்டுள்ளார். சுமந்திரனுக்குக் கொழும்பில் ஒரேயொரு வீடுதான் உள்ளது! அதுவும் அரசியலுக்கு வருமுன் எந்த வீட்டில் இருந்தாரோ அந்த வீட்டில்தான் இப்போதும் இருக்கிறார்! கொஞ்சமாவது மனச்சாட்சி உள்ள எவரும் இப்படிக் ‘கோயபல்ஸ்’ பரப்புரையில் ஈடுபட மாட்டார்கள். தலை சுகம் இல்லாதவர்களே இப்படிப் பிதற்றித் திரிவார்கள்.
போதாக்குறைக்கு சுமந்திரன் தமிழ்மக்களின் சாபக்கேடு என்று திட்டுகிறார். அப்படித் திட்டுகிறவரின் யோக்கியதை என்ன?
2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கூட இருந்து குழிபறிக்கும் வேலையைப் பிறேமச்சந்திரன் படுகச்சிதமாகச் செய்தார். திருகோணமலையில் சம்பந்தரையும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனையும் தோற்கடித்து அவர்கள் இருவரையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் அதற்குப் பெருநிதி வேண்டும் என மின்னஞல் மூலம் புலத்தில் இருக்கும் தனது நண்பர்களைக் கேட்டிருந்தார். அதாவது ததேகூக்குள் இருந்து கொண்டு சம்பந்தர் – சுமந்திரன் இருவருக்கும் குழி வெட்டும் வேலையில் இறங்கியிருந்தார்.
ஆனால் எமது மக்கள் மகா புத்திசாலிகள். அரசியல் ஞானம் படைத்தவர்கள். தேர்தல் முடிவுகள் வந்த போது சம்பந்தர் ஐயா திருகோணமலையில் 33,000 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தேர்தலில் தோற்க நேரிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகச் சொன்ன சுமந்திரன் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 58,043 விருப்பு வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்தார். சம்பந்தன் ஐயாவுக்கும் சுமந்திரனுக்கும் குளிவெட்டிய பிறேமச்சந்திரன் தான் வெட்டிய குழியில் தானே விழுந்தார். மொத்தம் 29,906 வாக்குகள் பெற்றுப் படுதோல்வியடைந்தார்! இது சுமந்திரனுக்கு விழுந்த வாக்குகளில் சரி பாதி!
தோல்வியடைந்த பின்னரும் தான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தன்னைத் தேசியப்பட்டியல் மூலம் நா.உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றார். அதாவது 42,925 வாக்குகளைப் பெற்ற அருந்தவபாலனை ஒதுக்கிவிட்டுத் தனக்குப் பதவி வேண்டும் என்றார். அது மறுக்கப்பட்ட போதுதான் ததேகூக்குள் சனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டிவிட்டு விலகிப் போனார்.
2018 மார்ச் மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் போட்டியிட்ட நான்கு தமிழ்க் கட்சிகளுக்குள் குறைந்த வாக்குகளைப் பெற்றுக் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கட்சி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோடு கூட்டு வைத்து போட்டியிட்ட இபிஆர்எல்எவ் கட்சிதான். அதற்குக் கிடைத்த வாக்குகள் 36,183 மட்டுமே. இபிஆர்எல்எவ் கட்சி தனித்துப் போட்டியிட்டிருந்தால் இதில் பாதி வாக்குகள் கூடக் கிடைத்திராது!
இப்போது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியோடு இபிஆர்எல்எவ் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் இருப்பவர்களை ஒரு இபோச வண்டியில் அடைத்து அனுப்பி விடலாம். அனந்தி சசிதரனின் கட்சிக்கு ஒரு சின்ன வாடகை வண்டியே போதும்.
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, சிறிகாந்தா – சிவாஜி இருவரும் தொடங்கியுள்ள தமிழ் தேசியக் கட்சி, அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் இவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சிகள். லெட்டர் பாட் கட்சிகள். பத்திரிகை அறிக்கை, செய்தியாளர் மாநாடு போன்றவற்றோடு தங்களது அரசியலை முடித்துவிடும் கட்சிகள். ஆண்டுக் கூட்டம், செயல் குழு, பொதுக் குழுக் கூட்டம் என எதுவும் கிடையாது. விக்னேஸ்வரன், அனந்தி, சிவாஜிலிங்கம் தங்களைத் தாங்களே செயலாளர் நாயகம் என அறிவித்திருக்கிறார்கள்! இதில் சிவாஜிலிங்கம் – சிறிகந்தா சோடி புதிய கட்சி ஒன்றைத் தோற்றுவிப்பது இது மூன்றாவது தடவை! நகைச் சுவையில் கவுண்டன் – செந்தில் இரண்டு பேரையும் இந்த இரண்டு பேரும் தோற்கடித்துவிட்டார்கள்!
இந்தக் கட்சிகளுக்கு இடையே இன்னொரு ஒற்றுமை இருக்கிறது. இந்தக் கட்சிகள் எல்லாம் யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்திய கட்சிகள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் கட்சிகள்.
சுமந்திரன் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கிறார், காப்பாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டை ஓயாது ஒழியாது பிறேமச்சந்திரன் முன்வைத்து வருகிறார். சரி, அதனை உண்மையென்றே ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம். ஒருவன் பலவீனமாக இருந்து இரண்டு பகைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தால் அதில் ஒரு பகையோடு நட்புப் பாராட்டி மற்றப் பகையைத் தோற்கடிக்க வேண்டும். அதுதான் அரசியல் சாணக்கியம். இதன் அடிப்படையில்தான் ததேகூ விக்கிரமசிங்க அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இதில் என்ன பிழை இருக்கிறது?
ததேகூ விக்கிரமசிங்கவுக்கு முண்டு கொடுத்தது எனப் புலம்பும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் யோக்கியதை என்ன? 2018 ஓகஸ்ட் மாதம் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்த போது பிறேமச்சந்திரன் தலைவராக இருக்கும் இபிஆர்எல்எவ் கட்சியின் நா.உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தார்! அப்படியென்றால் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றியவர்கள் யார்? முண்டு கொடுத்தவர்கள் யார்?
ஒப்பீட்டளவில் ஏனைய சிங்களத் தலைவர்களை விட விக்கிரமசிங்க பச்சை இனவாதம் பேசுபவர் அல்லர். கடந்த அரசில் வட – கிழக்கப் பொருளாதார மேம்பாட்டை விக்கிரமசிங்க கையில் எடுத்த பின்னரே ஊரெழுச்சி, பனை மரம் போன்ற திட்டங்களின் கீழ் வட கிழக்கில் பாரிய அபிவிருத்தி இடம்பெற்றன. யாழ்ப்பாணம் பன்னாட்டு ஊர்திநிலையம் உருவானதற்கு முக்கிய காரணம் பிரதமர் விக்கிரமசிங்க ஆவர். அப்படித் தொடங்கியிருக்காவிட்டால் இனவாத இராசபக்ச அரசு அதனைக் கிடப்பில் போட்டிருக்கும். மயிலிட்டி, காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்கள் மேம்படுத்தப் பட்டு வருவதற்குக் காரண கர்த்தா பிரதமர் விக்கிரமசிங்க ஆவார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனோரின் தாய்மார்கள் உறவினர்கள் கிழமைக்கு ஒரு ஆர்ப்பாட்டம் ஆவது செய்து வந்தார்கள். சம்பந்தன் ஐயா, சுமந்திரன் பொம்மைகளை எரித்துக் காடாத்தவும் செய்தார்கள். ஆனால் இப்போது நிலைமை என்ன? காணாமல் போனோர் தொடர்பாகத் தொடர் போராட்டம் நடத்தியவர்கள் அரசின் புலனாய்வுத் துறையால் அச்சுறுத்தப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் மிரட்டப் படுகிறார்கள். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி வாரியத்துக்கு கோட்டாபய அரசாங்கம் ஒரு சிங்களவரைத் தலைவராக நியமித்துள்ளது!
சுரேஸ் பிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது! அதனால் அவருக்குத்தான் இழப்பு!
பிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது!
Leave a Reply
You must be logged in to post a comment.