ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (34-43)

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (34-43)

34. சாஸ்திரி – ஸ்ரீமாவோ ஒப்பந்தமும் விளைவுகளும்!

சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.

பின்னர் நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தை புது டெல்லியில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்திய அரசாங்கம் நாடற்ற மலையக மக்களை இலங்கையர் என்றது; இலங்கை அரசோ அவர்களை இந்தியர் என்றது. இவ்வாறு இப்பிரச்னை இழுபறியான சமயத்தில் ஒரு திடீர் சூழ்நிலை ஏற்பட்டது.

1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று, பர்மாவில் இருந்தும் (3,00,000 பேர்), உகாண்டாவில் இருந்தும் (28,755 பேர்) அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்தியர்களை விரட்டி அடித்தன. இத்தகைய ஒரு நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என இந்தியா விரும்பியது. அடுத்ததாக நடைபெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்து, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.

இறுதியாக, அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அயூப்கான், “”இலங்கையில் உள்ள சகல பாகிஸ்தானியர்களையும் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயார்” என்று இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இலங்கையில் 5749 பாகிஸ்தானியர்களே வாழ்ந்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அவர்களை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமானதாக இல்லை.

அதே கடிதத்தில் அவர் “”இந்தியா தனது அண்டை நாடு எதனுடனும் சுமுகமாகப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை” எனக் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, சீனாவுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இந்தியா தன் பெயரை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

இந்தச் சமயத்தில் நேரு காலமானார். அதற்குப்பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இவருக்கும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஆறு நாட்கள் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தை அக்டோபர் 30-ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றுதான் உலகமே கண்டித்த, மிக மோசமான சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இலங்கையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1964 செப்டம்பர் 25-ஆம் தேதி கணக்குப்படி 10,08,269 பேர் ஆகும்.

இதில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 28,269. மீதம் இருந்த 9,75,000 பேரின் பிரஜா உரிமை பற்றியே இம்மாநாடு முடிவு செய்தது.

சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி, 9,75,000 பேரில் 5,25,000 பேருக்கு 15 வருடகாலத்தில் (அவர்களின் இயற்கை அதிகரிப்புடன்) இந்தியப் பிரஜை உரிமை வழங்குவதென்றும், அதே காலத்தில் 3,00,000 பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கைப் பிரஜா உரிமை வழங்குவதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள 1,50,000 பேரின் பிரஜா உரிமை அந்தஸ்து பற்றி 1974-ஆம் ஆண்டு தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1974-ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் 1,50,000 பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

இந்த ஒப்பந்தங்களைக் கண்டிக்காத சர்வதேச மனிதாபிமான இயக்கங்களே இல்லை எனலாம். இருந்தும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தை மனிதாபிமான அமைப்புகளும் இயக்கங்களும் சர்வதேச அளவில் கண்டித்தன. ஆடு, மாடுகளைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வதுபோல மனிதர்களைப் பங்குபோடும் அதிகாரத்தை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளித்தது யார் என்கிற கேள்விகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்பட்டன.

சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இரு அரசுகளும் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிய ஒப்பந்தம் இது. அதாவது இதனை ஒரு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பாராமல் அந்தப் பத்து லட்சம் மக்களின் தலைவிதியை, அவர்கள் பங்கு பெறாமலே இரு அரசாங்கங்களும், வெறும் எண்களைக் கருத்தில் கொண்டு கணித முறையில் முடிவு செய்தன.

இப்பேச்சு வார்த்தை நடந்தபோது குறைந்தபட்சம் அம்மக்களின் பிரதிநிதியின் கருத்துகூட கேட்டு அறியப்படவில்லை.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவு ஒருகட்டாய அடிப்படையில் அமல் நடத்தப்பட்டது என்பதுதான் அதைவிட வேடிக்கை. இதற்கான மனுக்கள் கோரப்பட்டபோது இலங்கை பிரஜா உரிமை கோரி சுமார் 7,00,000 மனுக்கள் தாக்கல் ஆயின. ஆனால், இவ்வொப்பந்தப்படி இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் 3,75,000 பேர் மாத்திரமே. இந்தியப் பிரஜா உரிமை 6,00,000 பேருக்கு வழங்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது இந்தியப் பிரஜா உரிமை கோரி மனு செய்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 மட்டுமே. ஒருவேளை இலங்கை பிரஜா உரிமை மறுக்கப்பட்டால் இந்தியப் பிரஜா உரிமையாவது கிடைக்கட்டுமே என்று இரண்டிற்கும் மனு செய்தவர்கள் தொகை கணிசமானது.

அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் அமலாகும்போது இந்தியாவில் அமையப்போகும் “”புதுவாழ்வு” பற்றி மிகக் கவர்ச்சியான சித்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட இந்தியா செல்வதற்கு இவர்கள் மத்தியில் இருந்து மிகக் குறைவாகவே ஆர்வம் காணப்பட்டது.

இவ்வாறு இம்மக்களின் சுய விருப்பத்திற்கு மாறாகப் பல்வேறு நிர்பந்தங்களாலும், ஏமாற்றுகளாலும் திணிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் மனித அடிப்படை உரிமைக்கு முரணானது.

1948 டிசம்பர் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனத்தின் 15-வது ஷரத்து * பின்வருமாறு கூறுகிறது:

“”தேசிய இனத்துவ உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவருடைய தேசிய இனத்துவம் வேண்டுமென்றே பறிக்கப்படுவதோ, அல்லது அவரது தேசிய இனத்துவத்தை மாற்றிக் கொள்வதற்குள்ள அவரது உரிமையை மறுப்பதோ கூடாது.”

இதன்படி பார்க்கும்போது இந்த இரு அரசாங்கங்களுமே உலக மனித உரிமை சாசனத்தை மிக மோசமாக மீறி இருக்கின்றன என்பது புலனாகிறது.

இந்தியா செல்வதற்குத் தயாராதல், புறப்படுதல் போன்ற முறைகளில் இம்மக்கள் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாளில் இருந்து சகல ஒப்பந்தங்களையும் செய்து முடிக்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் (விசா) வழங்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதி, சேவைக் கால உபகாரப் பணம், நாணயப் பரிவர்த்தனை, அனுமதிப் பத்திரம், குடும்ப அட்டை ஆகிய அனைத்தையும் ஒரு வருட காலத்துக்குள் கல்வி அறிவு அற்ற இத்தொழிலாளர் பெற்றுத் தீர வேண்டும். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோட்ட நிர்வாகிகள் போன்றோர், இடைத் தரகர்களாக மாறி இவர்களைக் கொள்ளை அடித்தனர்.

இதன் பின்னர் வெளியேற்ற அறிவித்தல் (ணன்ண்ற் சர்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கினால் அவரைக் கைது செய்து நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. 1971-77 ஆண்டுகளில் நாய்களைப் பிடித்துச் செல்வது போல இம்மக்களைப் பிடித்து ஜீப்புகளில் ஏற்றி, இடுப்புத் துணியோடு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இதிலும் சாத் முரண்பாடு தலைதூக்கியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ராமேஸ்வரம் வரை பயணம் செய்யும்போது, பியூன் முதல் போர்ட்டர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் இவர்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்து செல்வோரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட்டன. பிரஜா உரிமை முடிவு செய்யப்பட்டபோது மைனர் குழந்தைகளுக்குத் தந்தையுடன் சேர்த்து அதே பிரஜா உரிமை வழங்கப்பட்டு விடுகிறது. அனால் 18 வயது கடந்த அவர்களது குழந்தைகள் தனியாக மனு செய்து இலங்கை அல்லது இந்தியாவில் பிரஜா உரிமை பெறவேண்டும். வெளியேற்ற அறிவித்தல் வந்துவிட்டால்… தந்தையும், குடும்பத்தினரும் பிரிய நேரும். ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், தம்பிக்கு இந்தியப் பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு விடுகிறது.

பிறந்த நாட்டையும், வளர்ந்த மண்ணையும், பழகிய நண்பர்களையும் விட்டுப் பிரியும்போது அழுது, கதறித் துடிக்கும் பரிதாபகரமான காட்சியை மலை நாட்டில் உள்ள சகல புகைவண்டி நிலையங்களிலும் காண முடிந்தது. காதலனைப் பிரியும் காதலி, அண்ணனைப் பிரியும் தம்பி, பெற்றோரைப் பிரியும் பிள்ளை, இப்படி மனித உறவை அறுத்தெறியும் அந்தக் கொடிய காட்சி இரும்பு இதயத்தைக்கூட உருகச் செய்யும்.

புதுவாழ்வைத் தேடி இந்தியாவுக்கு விரட்டப்பட்ட இவர்களுக்கு இந்திய மண்ணில்கூட நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடையாது. இன்று இந்த அகதிகள் இந்தியத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களின் கண்களின் வெறித்த பார்வையில், தங்கள் பிறந்த மண்ணும், உற்றார் உறவினரும், வஞ்சிக்கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்து போகும் விஷயங்கள் ஆகிவிட்டன.

மலையகத் தமிழர்களின் தலைவராக இருந்த எஸ்.தொண்டமான், பெரிய கங்காணி ஒருவரின் மகனாக இருந்து ஆரம்ப காலத் தியாகத்தால் மலையக மக்கள் இதயத்தில் வலுவான இடம்பெற்றுவிட்டவர். இலங்கையில் ஒரு தனிநபரின் குரலுக்கு ஆறு லட்சம் மக்கள் அணி திரள்கிறார்கள் என்றால், அது தொண்டமானுக்கு மட்டும்தான் இருந்தது.

அவர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் ஸ்தாபனப்பட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் இருந்தார்கள். அந்தத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். விண்ணை அதிரவைக்கும் இந்த மகத்தான சக்தியால் தாங்கப்படும் ஒரு மனிதர் எவ்வளவு வலிமை மிக்கவராக இருக்க வேண்டும்? ஆனால் தொண்டமானோ அற்பப் பதவிக்காக ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்ற பலமான குற்றச்சாட்டு இவர் பேரில் உண்டு.

இந்த நிலையில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுடைய நிலையைச் சுருக்கமாகச் சிலவரிகளில் கூறிவிடலாம். பொருளாதார ரீதியில் சாகாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இலங்கையில் விலைவாசி அதிகரித்துவிட்டிருந்தது.

தமிழர் என்ற முறையில் எப்படி சிங்கள குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் எனச் சதா சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குத் தேசிய இன ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. மேலும் அரசியல் விழிப்புணர்ச்சி மிக்க நல்ல தலைமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது கூட அவர்கள் சிந்தனையில் இடம்பெற ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக மற்றும் ஜெயவர்தன போன்ற சிங்கள இனவாதத் தலைவர்களில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பலியானார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. தமிழன் என்ற உணர்வுடன் இவர்கள் கைகோர்த்து செயல்படத் தவறியதையும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகியதையும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை சரித்திரம் மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்துவிட்ட தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் ஒரு நியாயமான முடிவை எட்ட முடியாமல் போனதற்கு, இவர்களுக்குள் காணப்பட்ட பிளவுதான் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

* Article 15 of Universal Declaration of Human Rights. (Dec.10.1948) ‘‘Every one has the right to a nationality; no one shall be arbitarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’

35: தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேயன்துறை) இலங்கையில் 1918-இல் “இலங்கை தேசிய காங்கிரஸ்’ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, “தமிழ் லீக்’ (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க “தனிநாடு’ வேண்டும் என்பதாகும்.

பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூற “இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்’ (1944) நிறுவப்பட்டது. அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம். அவர் தனது வாதங்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்த போதிலும் சோல்பரிக் குழுவினர் சிங்களவரின் கோரிக்கைக்கே இணங்கினர்.

பின்னர் ஏற்பட்ட சுதந்திர அரசில் பங்கேற்பது குறித்தும், இந்திய-பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரிப்பது தொடர்பாகவும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949-இல் மலர்ந்தது. தந்தை செல்வா தலைமையில் இக்கட்சி தமிழர்களின் சமவாழ்வு மற்றும் உரிமைகளுக்காகப் போராடியும் கேட்காமல் 1972-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி புதிய சிங்கள புத்தக் குடியரசு அமைந்தது. இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை இழப்பதற்கான சிங்கள அரசு ஏற்பட்டதும், தமிழ் மண்ணில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்தது. தனி ஆட்சி முறையில் தமிழர்களின் சமநிலை உரிமையும்-மண்பாதுகாப்பும் பறிக்கப்படும் என்பதைக் கண்டுபிடிக்க தமிழர் அமைப்புகளுக்கு மேலும் 24 ஆண்டுகள் பிடித்தன.

இந்நிலையில் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 3-இல் தந்தை செல்வா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

“இந்நாட்டில், சென்ற 24 ஆண்டுகளாக (1948-1972) நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழர்கள் இங்கு ஓர் அடிமை இனமாக -அழிவதா அல்லது விடுதலை பெற்ற மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கை. விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பேன். இந்தக் கொள்கையில் அரசாங்கமே என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வியடைந்தால் என் கொள்கையை விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தனது கொள்கையையோ, அரசின் திட்டத்தையோ தமிழர்கள் ஆதரிப்பதாக மேற்கொண்டும் கூறக்கூடாது.’ (கு.வே.கி. ஆசான் எழுதிய ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் -1948-1966).

செல்வா பதவி விலகியதால் காலியான காங்கேயன்துறை இடைத்தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் தந்தை செல்வாவே காங்கேயன்துறை வேட்பாளராக நின்றார். அரசு ஆதரவு கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் நாடாளுமன்றத்தில் 1976, பிப்ரவரி 4-இல் செல்வா பேசியதாவது:

“இலங்கையில் ஓர் ஆளப்படும் இனமாக வாழும் நிலையைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அடிமைத்தனத்திற்கு எதிராகப் புரட்சியில் இறங்குவார்கள். எங்கள் இனம் அழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு தனித் தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக நின்றே இந்த அவையில் இதைக் கூறுகின்றேன்.’ (ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் 1948-1996 கு.வே.கி.ஆசான்).

இதனைத் தொடர்ந்து காங்கேயன்துறை, உடுவில், மூதூர், வவுனியா, திருகோணமலை, கோப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 12 தொகுதிகளின் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஈழ விடுதலைக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தின் கடைசி வரி இவ்வாறு அமைந்திருந்தது. அது வருமாறு:

“காங்கேயன்துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற அரசுரிமை உடைய, மதச்சார்பற்ற, சமனிய நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய செயலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.’

1976 மே 22-இல் சிங்களவர் குடியரசு நாள் கொண்டாட்டத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடியபோது, தமிழர் பகுதிகளில் விடுதலை கோரும் அறிக்கையை அ.அமிர்தலிங்கம், வ.ந.நவரத்தினம், க.பொ.இரத்தினம், க.துரைரத்தினம் ஆகிய தமிழர் தலைவர்கள் விநியோகம் செய்தனர். அரசு இவர்களைக் கைது செய்து அரசுத் துரோகக் குற்றச்சாட்டினைச் சுமத்தியது.

இத்தலைவர்கள் மீது மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு (பழ்ண்ஹப் ஹற் ஆஹழ்) என்ற சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களான தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளைநாயகம் முதலானோர் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் வாதாடியதையொட்டி, நால்வரும் (1976 டிசம்பர் 10-ம் தேதி) விடுதலை பெற்றனர். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

மலையகத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து “தமிழர் விடுதலைக் கூட்டணி’ (பமகஊ) 1976-இல் அமையப் பெற்றது. 1977 ஏப்ரல் 26-இல் ஈழத் தந்தை செல்வநாயகம் மறைந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஈழவிடுதலையை முன்வைத்து “தமிழர் விடுதலைக் கூட்டணி’யினர் போட்டியிட்டனர். தமிழர் பகுதியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றனர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி (யு.என்.பி.) 140 இடங்களையும் கடந்த நாடாளுமன்றத்தில் 116 இடங்களைப் பெற்றிருந்த ஸ்ரீமாவோ கட்சி எட்டே இடங்களையும்தான் பெறமுடிந்தது. இதன்மூலம் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிற்று.

சிங்கள மேலாதிக்கத்தில் நாட்டம் கொண்ட இனவெறியர்களுக்குத் தமிழரின் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியானது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நாடெங்கும் இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஸ்ரீமாவோ கட்சி முயன்றது. இலங்கைக் காவல்துறையில் 17 ஆயிரம் போலீஸôர் இருந்தனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் ஸ்ரீமாவோ ஆட்சியில் நியமிக்கப்பட்ட இனவெறியர் ஆவர். இவர்களே இனக்கலவரத்துக்கு மூலகாரணம் என்று கருதப்படுகிறது.

யாழ் மருத்துவமனையில் (1977 ஆகஸ்ட் 12-13) புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்த நிதி திரட்டும் விழாவொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கையில், சீருடை அணியாத போலீஸôர் கூட்டத்தினரிடையே புகுந்து முறைகேடாக நடந்தனர். பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலிசார் இருவர் காயமடைந்தனர்.

இதனைச் சாக்கிட்டு “யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கு ஆபத்து’ என வதந்தி, நாடு முழுவதும் பரப்பப்பட்டு கடைவீதிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். எல்லா இடங்களிலும் (1977 ஆகஸ்டு 17) தமிழர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இன்றுவரை தொடர்ந்து நடந்துவரும் அடக்கு முறைகளும், ரத்தக் கிளரிக்கும் பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட இந்தக் தாக்குதல்தான்.

36. ஜெயவர்த்தனாவின் அடக்குமுறைகள்

1977-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன் வைத்து நிற்கும் அதே வேளையில் தமிழர் மத்தியிலான எழுச்சி, உணர்ச்சி ஊட்டக்கூடியதாக மாறியது. அதேபோன்று சிங்கள வெறியர்களின் வெறியாட்டமும் வேகமடைந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டுமே இனக் கலவரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதை ஒட்டியே 1977-ஆம் ஆண்டுக் கலகத்தை காண வேண்டும்.

1977-ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி அடைந்து ஆட்சியை அமைத்தது வெறிக் கூட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

அநுராதாபுரம், குருனாகலை, கோகாலை, களனியா, கொழும்பு, கந்தளாய், அம்பாறை, திருகோணமலை, மூதூர், இரத்னபுரி, கண்டி ஆகிய மாவட்டப் பகுதிகள் கலவரத்தின் அடித்தளமாக விளங்கின. 1977-இல் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் மடிந்தனர். இக் கலவரத்தால் 77,000 தோட்டத் தொழிலாளர்கள் வீடிழந்து அகதிகளாயினர்.

அரசாங்கத்தின் தலைவர்கள் வெறிமிக்க வகையில் அறிக்கைகளை விடுத்தனர். “போர் என்றால் போர்’ “சமாதானம் என்றால் சமாதானம்’ என்று ஜெயவர்த்தன கொக்கரித்தார். “சிங்களவரோடு போரிட்டு மடியப் போகிறீர்களா அல்லது இணங்கி வாழப் போகிறீர்களா என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தவர் ஜெயவர்த்தன.

தமிழ் ஈழத்திற்காகப் போராடுவோர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியே இந்த அடக்குமுறையைச் சிங்களவர்கள் கையாண்டனர்.

அரசு தரப்பில் உள்ள வெறியர்களாலேயே தமிழ் எதிர்ப்புப் பிரசாரம் செய்யப்பட்டது. அமைச்சர் சிறில் மத்தியூ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், “”பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமான வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது; யாரும் தடுத்து நிறுத்தியதும் இல்லை. பயங்கரவாதம், பயங்கரவாதத்தாலேதான் இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.*

இந்தக் கலவரத்தில் குண்டர்களை அணி திரட்டுவது என்பது போய், அரசே போலீசை அணி திரட்டி தாக்குதலை மேற்கொண்டது. இதில் இரண்டு வகைத் தந்திரங்கள் கையாளப்பட்டன.

சிங்களவர்கள் பெரும்பான்மையாய் உள்ள தென் பகுதியில், சிங்கள மக்களில் இருந்து குண்டர்களைத் திரட்டிச் சிறுபான்மைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் வட பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அரசின் காவல் துறையே ஆயுதமேந்தித் தாக்கியது. அரசு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் இக்கலவரத்தை முன்னின்று நடத்த வழிகாட்டியாய் இருந்த டி.ஐ.ஜி. கலவரம் முடிந்தவுடன் ஐ.ஜி. ஆகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்.

1977-இல் நடந்த இந்த மோசமான கலவரத்தைப் பற்றி அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைக் கழகங்கள் நிர்ப்பந்தித்தன. கலவரத்தைப் பற்றி விசாரிக்க அனா செனிவரத்தினாவையே அரசு நியமிக்கிறது. அவர் அளித்த அறிக்கையை 1983-இல்தான் அரசு வெளியிட்டது. அந்தச் சமயம் அவர் மலேசியாவில் ஹை கமிஷனராக பதவி பெற்றுப் போய்விட்டார்.

அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிடுகிறார்: “தேர்தல் நேரத்தில் நடந்த வன்முறையில் 7,817 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 78 துப்பாக்கிச்சூடும், 62 கொலைகளும், திருட்டு, கொள்ளை அடிப்பு, சூறையாடல், கற்பழிப்பு அனைத்தும் இதில் அடங்கும்.

மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் 3,327 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 131 கொலைகளும், 74 கற்பழிப்புகள் உட்பட சூறையாடல்களும், தாக்குதல்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 77-ஆம் ஆண்டு முடிவில் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யும்போது மொத்தம் 83,082 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 76-ஆம் ஆண்டு கலவரத்தை ஒப்பிடுகையில் 48 சதவிகிதம் அதிகமாகி உள்ளது.

இன ரீதியான தாக்குதல்களின் விளைவாகத்தான் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்பட்டு இந்த 48 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டது’ என்கிறார்.

1978-ஆம் ஆண்டு ஜெயவர்த்தன புதிய அரசியல் சட்டத்தை அமல்படுத்துகிறார். இதற்கிடையில் அரசாங்கத்தினுடைய அதிரடி விசாரணைக் கைதுகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து நடக்கின்றன. சித்திரவதை புரிவதில் மிகச் சிறந்த திறமைசாலியாகப் பேர் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை என்பவர் தீவிரவாத தமிழ் இளைஞர்களால் 25.4.78 அன்று (விடுதலைப்புலிகளால்) துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கப்படுகிறார். (“புலிகள் வரலாறு’ 1975-1984)

அதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஒரு போலீஸ் கோஷ்டியே தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. (இன்ஸ்பெக்டர் பேரம்பலம், காவலர் பாலசிங்கம், போலீஸ் டிரைவர் ஸ்ரீவர்த்தனா ஆகியோர்)

உடனடியாக அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவசரநிலைப் பிரகடனம் செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.

6 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதிய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு ஒட்டுமொத்தமான அதிகாரம் அளிக்கும் வகையில், புத்தமதமும், சிங்கள மொழியும் விசேஷ அந்தஸ்தைப் பெற்று, தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தமிழ் இளைஞர்களால், ஏர்சிலோன் கம்பனியின் ஆவ்ரோ விமானம் நொறுக்கப்படுகிறது. (7.9.1978-)

இந்நிகழ்ச்சி அரசுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், தமிழ்ச் சுதந்திர இயக்கத்திற்கு ஓர் உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. இதற்கிடையில் பல வங்கிகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

1979-இல் தொடர்ந்து வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமலாக்குகிறார். அரசியல் சட்டத்தில் மனித உரிமைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. எந்தவிதமான விசாரணையுமின்றி, யாரையும் கைது செய்யவோ, 18 மாதம் வரை காவலில் வைக்கவோ ஒரு தனி அதிகாரத்தை ராணுவம் பெறுகிறது. கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்குவதற்கு இது வழிவகுத்தது.

யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணப் பகுதிக்கு ராணுவப் பட்டாளங்கள் மேலும் பல அனுப்பப்படுகின்றன.

பிரிகேடியர் வீரதுங்காவிற்குத் தனி அதிகாரம் அளிக்கப்பட்டு, “தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுங்கள்’ என்ற ஜனாதிபதியின் கட்டளையுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுகிறார்.

6 மாதத்தில் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்து, சட்டத்தால் தனித்த அதிகாரம் அளிக்கப்பட்டு, அரசால் ஊக்குவிக்கப்பட்டு யாழ் பகுதிக்கு அவர் வருகிறார். யாழ் பகுதியில் ஒரு பாசிச ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் கைதும், சித்திரவதையும் மிருகத்தனமாக நடைபெறுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் சாலையோரத்தில் தூக்கி வீசப்படுகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமும் பல்வேறு சங்கங்களும் இந்தப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டிக்கின்றன. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டவுடனேயே வீடு புகுந்து கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இப்படி மறைந்து போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு சில மாதத்திலேயே மிக உயர்ந்த பட்சமாக வளர்கிறது. யாழ் நகரம் ஒரு மாபெரும் சுடுகாடாக ராணுவத்தால் ஆக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்த்துக் கேட்க ஆளில்லாத ஒரு நிலைமையும் தோன்றியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துடன் ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்படவும் ஏற்பாடாயிற்று.

1979 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை உலகம் கண்டிராத காட்டுமிராண்டித் தர்பார் யாழ் பகுதியிலே நடந்தது. 1980-ஆம் ஆண்டில் ராணுவத்தின் வெறித்தாக்குதல் நடக்கும் அதே நேரத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மாவட்டங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வழி ஏதும் இதில் இல்லை.

இதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் 1981-ஆம் ஆண்டு வருகிறது.

இவ்வாண்டில் அரசுக் காட்டுதர்பாரின் பயங்கரத் தாக்குதல் உச்சநிலையை அடைகிறது. மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் நின்ற ஒரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் இரு போலீஸôரும் தமிழ் இளைஞர்களால் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் போலீஸ்காரர் காயம் அடைந்தார். அதற்குமுன் நீர்வேலியில் ஒரு வங்கிக் கொள்ளை நடைபெறுகிறது. இதையொட்டி, பெருமளவில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.

ராணுவத்தினர் திட்டமிட்ட முறையில் தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகத்தின் (“பிரைட் ஆஃப் நார்த்’ வடக்கின் பெருமை) என்ற கட்டிடப் பகுதி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதில் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட கிடைத்தற்கரிய விலை மதிப்பற்ற நூல்களும், தமிழ் இன வரலாற்று ஆதாரப் பொருட்களும் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகளும் சாம்பலாக்கப்பட்டன. இதன் மூலம் வடக்குப் பகுதியின் கெüரவத்தைக் கொளுத்திவிட்டதாக தமிழ் மக்கள் ஆவேச வெறி கொண்டனர்.

உலகின் அனைத்து முனைகளிலும் உள்ள அறிஞர்களும் இந்நூலக எரிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம், ஈழநாடு நாளிதழ் அச்சகம், யாழ்ப்பாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம், சுன்னாகம் பொதுக்கடை வீதி ஆகியவைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன!

கடைத்தெருவில் பொதுமக்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். அதில் பலர் காயமடைந்தனர். 5 பேர் மரணம் அடைந்தனர்.

இந்தப் பயங்கர சூழ்நிலையையும், குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜூன் நான்காம் நாள் நடைபெற்றன. நிர்வாகக் குழப்பத்தைப் பயன்படுத்தி அரசு தேர்தலில் பயங்கர ஊழல்கள் மற்றும் தில்லுமுல்லுகளைச் செய்தது.

அன்று காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜெயவர்த்தனாவின் வேட்பாளர் அனைவரும் தமிழர் பகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

யாழ் பகுதியில் நடந்த அச்சுறுத்தும் அரச பயங்கரவாத அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டறிந்து வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ங.ஐ.த.ஒ.உ. (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற் ர்ச் ஐய்ற்ங்ழ் தஹஸ்ரீண்ஹப் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் அய்க் உவ்ன்ஹப்ண்ற்ஹ்) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் அபயசேகர உள்ளிட்ட உண்மை அறியும் குழு ஒன்று யாழ் பகுதியில் விசாரணை செய்தது. ஆனால் அவர்கள் தங்கள் அறிக்கையை கொழும்பில் வெளியிட முனைந்தபோது அரசு குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் இந்துக்கோவில் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.

ஜூலை முதல் வாரத்திற்குள் அம்பாறை, பதுளை, வெலிஓயா, பண்டாரவளை, நீர்கொழும்பு, கேகாலை போன்ற இடங்களில் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஜாஎவை, பேலியாகொடை, அம்பிலிப்பிட்டி, பண்டாரகமை ஆகிய பகுதிகளில் நவீனவகை குண்டர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த நவீன வகைத் தாக்குதலின் முதல் நிகழ்ச்சியாக, ஒரு புகைவண்டி வழியில் நிறுத்தப்பட்டுக் கொளுத்தப்படுகிறது. பல தமிழர்கள் வண்டியிலிருந்து பிடித்து வெளியில் இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். பல பிரயாணிகள் பலத்த காயமடைகிறார்கள். அவர்களில் தமிழ் எம்.பி.யும் ஒருவர்.

கலவரம் பல பகுதிகளில் பரவுகிறது. பண்டாரவளைப் பகுதியில் ஜூலை 11-ஆம் நாள் இரண்டாவது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இது நீர்கொழும்பையும், கெüனியாவையும் தொற்றுகிறது.

மலையகத் தோட்டப்பகுதியிலும் கலவரம் மூண்டு எட்டியாந்தோட்டை என்ற பகுதியில் மூன்று தமிழ் தோட்டத் தொழிலாளிகள் பேருந்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். பின்னர் பேருந்திற்குத் தீ வைக்கப்பட்டு அதில் தமிழர்கள் எரிக்கப்படுகிறார்கள்.

இரத்தினபுரிப் பகுதியில் கடைகள் சூறையாடப்படுகின்றன; கடைகளைக் கொளுத்திய பின் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் தலைமையில் ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

மதகுரு எதிரிலேயே ஒரு தமிழர் கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, அங்குள்ள எஸ்டேட்டிலும் பல தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

பயங்கரவாதம் ஒரு உச்சநிலைக்குச் சென்றது. இலங்கையே தீப்பற்றி எரியும் வகையில் இனவெறி மிக உச்சமான கோரத்தாண்டவம் ஆடியது.

37. அடக்குமுறையின் உச்சகட்டம்!

கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நெல்லியடி என்ற இடத்தில் நான்கு போலீஸôர் கொலை செய்யப்படுகின்றனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் கடுமையாகக் காயம் அடைகின்றனர்.

ஒருவர் இருவராகத் தமிழர்களைக் கொன்ற இனவாதம் இப்போது வேறு உருவம் எடுத்துக் கும்பல் கும்பலாக தமிழர்களைக் கொல்லும் போக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் படுபயங்கர நிகழ்ச்சிகளையும், தமிழர்களின் வேதனையையும் முழுமையாகச் சொல்வதற்கு இந்தப் புத்தகம் போதவே போதாது. மேலும் அந்தக் கொடூரத் தாக்குதல்களைச் சரியாகச் சொல்ல எந்த மொழியாலும் முடியவும் முடியாது.

ஆவேசத்தின் வேகத்திலும், உணர்ச்சியின் உச்சகட்டத்திலும் இருந்த தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கும் போலீஸýக்கும் எதிராகப் பல இடங்களில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் (விடுதலைப்புலிகள் வரலாறு 1975-84).

சாகவச்சேரிப் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு, பலர் காயம் அடைகின்றனர். போலீஸ் ஒடுக்குமுறையைத் தீவிரமாகக் கையாண்ட பருத்தித்துறைக் காவல் நிலைய அதிகாரி போலீஸ் நிலைய வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடன் ஜீப் டிரைவர் ராஜபட்சவும் கொல்லப்பட்டார். உமையாள்புரம், பரந்தன் என்ற பகுதியில் ஒரு ராணுவ லாரி தாக்கப்பட்டு ராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் தீவிர மோதல் ஏற்பட்டுப் பல ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும், பலர் காயத்துடனும் தப்பி ஓடுகின்றனர்.

யாழ்ப்பாணம் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகக் கூட்டப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடு-உள்ளே நடந்து கொண்டிருக்கையில் செயலகக் கட்டிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது (விடுதலைப்புலிகள் வரலாறு 1875-84).

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று தீவிர ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் உள்ளூர் தேர்தல் வேட்பாளர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கின்றனர்.

அக்டோபர் 15-ஆம் நாள் ராணுவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதை ஒட்டி ஆத்திரம் கொண்ட ராணுவம் வெறித் தாக்குதல் நடத்தியது. சாலையில் போவோர் வருவோரைத் தாக்குவது, பஸ், ரயில் வண்டியில் பயணம் செய்வோரை வழிமறித்துத் தாக்குவது, கடைகளைச் சூறையாடுவது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தியது ராணுவம்.

அக்டோபர் 21-ஆம் நாள் கிளிநொச்சியில் ஒரு வங்கி கொள்ளை அடிக்கப்பட்டு, கொள்ளை அடித்தவர்கள் வெளியேறியபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

இது நிலைமையை மோசமாக்கி மேலும் ராணுவத்தினரின் கொலை வெறி அதிகமாகியது.

அக்டோபர் 25-ஆம் நாள் இங்கிலாந்து அரசி இலங்கை வரவேண்டி இருந்ததால் ராணுவத்தினர் அரசினரால் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் பகுதிக்கு இடையில் இருந்த எல்லை மாவட்டமான வவுனியா மாவட்டத்தில் ராணுவமும் போலீஸýம் அடக்குமுறை அட்டகாசத்தைத் துவக்கியது.

1970-ஆம் ஆண்டு முதல் இந்தியத் தமிழர் குடும்பங்களும் இலங்கைத் தமிழர் குடும்பங்களும், மலைப்பகுதித் தோட்டங்களில் இருந்தும், மற்றும் தென்பகுதியில் இருந்தும் கலவரங்களால் பாதிக்கப்பட்டு வீடு, சொத்துச் சுகங்களை இழந்து வவுனியா மாவட்டத்தில் தங்கி வாழ முயற்சி செய்து கொண்டிருந்தனர். இங்கு அரசின் பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டது.

ஏற்கெனவே கலவரங்களில் குடும்பங்களை இழந்து பாதிப்படைந்திருந்த இவர்கள் திரும்பவும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சின்னாபின்னமானார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் மகத்தான பொறுமையும் தாங்கும் சக்தியும் கொண்டிருந்ததால்தான் இந்த மோசமான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடிந்தது. மறுபடியும் இவர்களைக் குடியமர்த்துவதில் பெரும் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் இவர்களுக்கு உதவினர்.

பல பகுதியில் இருந்து அகதிகள் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டுக் காந்தீயம் நிறுவனத்தால் குடி அமர்த்தப்பட்டனர். அகில இலங்கை விவசாயக் காங்கிரஸ் மூலமாகவும் அகதி முகாம் அமைக்கப்பட்டது.

இந்தக் கலவரங்களுக்குப்பின் நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் தோன்றின. நவம்பர் மாத முடிவில் இப்பகுதியில் காடுகளில் தங்கி இருக்கும் தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இப்பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியது.

பண்ணைகளின் உள்ளே புகுந்து அகதிகளை அடித்து நொறுக்கி, கைது செய்தபோது இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சமூக சேவகிகள் தாக்கப்பட்டனர்; மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர்.

இந்தக் கலவரங்களை அரசு தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்ததற்கு முக்கியமான காரணங்கள்:-

ஒன்று, தொடர்ந்து இனவாத ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ளுவதற்கு. இரண்டாவதாக, நாடு தழுவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களைத் திசை திருப்ப. மூன்றாவதாக, புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்களின் சீர்கேடுகளை மறைத்துக் கொள்ள!

இதுவரை காணாத மிகப் பெரிய பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளை அரசு சந்தித்துக் கொண்டிருந்தது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப இந்த அணுகுமுறை உதவியது.

தேசிய இனப்பிரச்னைக்கான கேள்வியில் சிங்கள பாசிச ராணுவ பயங்கரவாதம் மக்களைப் பெருமளவில் இனப்படுகொலை செய்வதை மட்டுமே தனது ஒரே தீர்வாக வைத்திருந்தது.

சிங்கள ஆட்சியாளர்கள் மிகப் பெரும் அளவிலான மக்கள் படுகொலைகள், உடமைகளைச் சேதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரத் தேசிய இன உணர்வை நசுக்கிவிடலாம் என்று கனவு கண்டதும் இந்தத் தொடர் வன்முறைக்கு ஒரு காரணமாகும்.

மேலும் ஓர் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல்,

சேனநாயக்கா (முன்னாள் பிரதம மந்திரி) சட்டங்களின் மூலம் தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தார். பிறகு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கூட்ட வன்முறை (mass violence) மூலம் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் சித்திரவதைகள் செய்தார். ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன எல்லாவற்றிற்கும் மேலாக ஒருபடி மேலே சென்று, ஒரு பாசிசவாதியாக மாறி, அரசு ஆயுத சக்திகளின் பயங்கரவாதத்தின் மூலம் தமிழர்களை ஒடுக்க நினைக்கிறார்.*

இவையெல்லாம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி ஈழத்தைப் பெறுவதையும், தமிழ் மக்களின் கெüரவம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதையும், மதச்சிறுபான்மையினரின் சுயபாதுகாப்பு உரிமையையும் ஒடுக்குவதற்கு உருவான ஒரு புதிய வடிவமும் ஆகும்.

* கெயில் ஓம் விடட் (Gail Om Vedtt) Article in Frontier, Calcutta, Sept. 83.

38. தீவிரவாதம் உருவான காரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தி வந்தவரை, ஓர் ஐக்கிய அரசின் அமைப்பிற்குள் தங்களின் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது ஒன்றே வழி என தமிழ் மக்கள் கருதி வந்தனர். ஆனால் 1970-க்குப் பின் நிலைமை வேகமாக மாறியது.

அரசியல் தீர்வு பெறாத தமிழர் பிரச்னை, வளர்ந்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றின் விளைவாக 1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான வீரசாகச அரசியல் கலவரத்தின் செல்வாக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் இனப்படுகொலையும் தமிழர் மத்தியில் தீவிரவாதம் உருவாகக் காரணமாயின.

இந்தச் சூழ்நிலையில்தான், தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராகக் தமிழ் இளைஞர் பேரவை உருவாகிறது. இவர்கள் வெகுஜன இயக்கத்தின் மூலம் சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டனர்.

இளைஞர்கள் ஓரளவு அரசியல் தெளிவுடன், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கி இருந்தனர். தமிழ்த் தலைவர்களின் மிதவாதமும், இனவாத ஒடுக்குமுறையின் விளைவாக நிகழ்ந்த படுகொலைகளும் இவர்களை ஆவேசமூட்டி வேகமடையச் செய்தது. இவ்வுணர்வே விடுதலைப் புலிகளின் இயக்கம் 1971-இல் உருவாகக் காரணமாயின.

இந்த நிலையில் 1974-இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் நிகழ்கின்றன. இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் சிவகுமாரன் தலைமையில் பழிக்குப்பழி வாங்கச் சபதம் செய்கின்றனர்.

மாநாட்டில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சந்திரசேகராவை எப்படியும் தீர்த்துக் கட்டுவது என்றும் இந்தப் படுகொலைகளுக்குப் பக்க பலமாக விளங்கிய தமிழின துரோகி யாழ் நகர மேயர் துரையப்பாவை கொல்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

போலீஸ் அதிகாரி மீது இரண்டு முறை தாக்குதல் நடக்கிறது. மேயர் துரையப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார்.

போலீஸ் அதிகாரியைக் குறி வைத்துக் கொல்ல முயற்சி எடுக்கும் போது சிவகுமாரன் வளைத்துப் பிடிக்கப்படுகிறார். போலீஸ் கையில் சிக்காமல் இருக்க, சயனைட் குடித்துத் தியாக மரணம் அடைகிறார். இவரது வீரமரணம் நிகழ்ந்தது 1974-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி ஆகும்.

சிவகுமாரன் தலைமையிலான தமிழ் மாணவர் பேரவைத் தொடர்ந்து இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்தது. அதே காலத்தில் தொடர்ச்சியாக “தமிழ் புதிய புலிகள்” (Tamil New Tigers) என்ற தீவிரவாத இயக்கத்தினரும் போராடி வந்தனர்.

சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் விருப்பப்படி தமிழர் கூட்டணியின் உட்கிளையாக தமிழ் இளைஞர் பேரவை அமைகிறது.

இவ்வாண்டின் நடுப் பகுதியில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புதிய புலிகளின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் என்ற செட்டி 1976-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்.

இதற்குப் பின் தமிழ்ப் புதிய புலிகள் இயக்கம் 1976-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற புதிய இயக்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் தலைவராக வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் பொறுப்பேற்கிறார்.

இதே நேரத்தில் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் தனி ஈழக் கோஷத்தை முன்வைத்துத் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976-இல் உருவாகிறது. இதுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தக் கால கட்டத்தில் ஒரு சில தீவிரவாத அமைப்புகளும் தலைமறைவு இயக்கமாக சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO)

ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வியக்கத்தின் ஆரம்ப காலத் தலைவர்கள் அனைவரும் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து உருவானவர்களே.

தமிழ் மாணவர் பேரவை உருவானதிலும் இத்தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். அப்போதிருந்த தரப்படுத்துதல் சட்டம் மற்றும் பல்வேறு வகையான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவர்கள் போராடி வந்தனர்.

தமிழ் மிதவாதத் தலைவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூலம் இன ஒடுக்குமுறையை எதிர்க்க முடியாது என்றும் தனி ஈழத்தைக் கட்டமைக்க முடியாது என்றும் இவர்கள் கருதினர்.

இதன் ஆரம்பகால முன்னணித் தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஆவார்கள்.

போலீஸ் அதிகாரி சந்திரசேகரா புகழ் சிவகுமாரனுடன் சேர்ந்து இவர்களும் மாணவர் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர்.

அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது குட்டிமணியும், பிற தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ் மாநாட்டிற்கு முந்தைய இனப் படுகொலைக்கு எதிராகப் போராடியதன் விளைவுதான் இவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் காரணமாகும். குட்டிமணியுடன் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ என்கிற சபாரத்தினம். சாட்சியம் இல்லாததால் இவர் விடுதலை செய்யப்படுகிறார்.

யாழ் மேயர் துரையப்பா கொல்லப்பட்டதன் விளைவாகக் குற்ற செயல்களுக்காகத் தேடப்படுவர் பட்டியலை அரசு சுவரொட்டியாக ஒட்டியது. அதில் இவர்கள் பெயரும், இவர்களது தலைக்கு விலையாக 1 லட்சம் ரூபாயும், அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் 1971-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

1977-இல் ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த பல இனப் படுகொலைகளுக்குப் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இவர்கள் அமைப்பு ஈடுபட்டது.

1969-ஆம் ஆண்டிலிருந்தே தங்கதுரை “தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமே வழி” என்று முடிவு கட்டுகிறார். அப்போதிருந்தே அதற்கான நடைமுறைப் போர்த் தந்திரங்களையும், இயக்க விதிமுறைகளையும் உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டார். சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு தங்கதுரை தனக்குக் கீழே ஒரு குழுவாக அமைத்துச் செயல்பட்டார்.

கட்டுப்பாடும், உறுதியும் நிறைந்த இயக்கமாகப் படிப்படியாக வளர்ந்து 1981-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கமாகப் பரிணமிக்கிறது. இதில் பிரபாகரன் இணைந்து கொள்கிறார்.

1981 ஏப்ரல் 5-ஆம் தேதி தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.

22-ஆம் தேதி நடந்த அரசு நடவடிக்கையில் இதன் மற்றொரு தலைவரான ஜெகனும், பிற இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைதானபின் அமைப்பு ஸ்தம்பிக்கிறது.

இந்த நேரத்தில் பிரபாகரன் மீண்டும் வெளியேறித் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒருங்கிணைக்கிறார்.

1983-ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆயுதப் படைகளின் விரிவாக்கத்தை இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

1983 கடைசியில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் விரிவான பகுதி வெலிக்கடை சிறைப்படுகொலைகள் என்னும் பிரிவில் பிறகு கூறப்படும்.

39. ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்!

உண்மையில் விடுதலைப் புலிகளின் இயக்கம் 1972-லேயே உருவாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ்ப் புதிய புலிகளாக இருந்த பின்னால் பெயர் மாற்றம் அடைந்ததே இது.

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஆயுத எதிர்த்தாக்குதல் இயக்கமே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே தனி ஈழம் கட்டமைக்க முடியும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் இவர்கள்.

இவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது 16-ஆவது வயதிலேயே தமிழ் இன ஒடுக்கு முறையை எதிர்க்கும் மனோபாவத்தைக் கொண்டிருந்தார்.

சிறு வயதாக இருந்ததால் மற்றச் சக புரட்சியாளர்கள் இவரைத் “தம்பி’ என்றனர்.

இவர் ராணுவ வெளித்தாக்குதல்களை எதிர்த்துத் தீவிர எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார்.

1983-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியில் இவ்வியக்கம் முதன்மைப் பங்கெடுத்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மூவர் மீது ராணுவ நடவடிக்கை தொடுத்தது. அதேபோன்று 1983 ஜூன் 5-ஆம் தேதி காங்கேயன் துறைத் தாக்குதலும், சாவகச் சேரிப் போலீஸ் நிலையத் தாக்குதலும், நெல்லியடியில் அரசுப்படையினருக்கு எதிராக 1982-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலும் ஆவ்ரோ விமானத் தகர்ப்பும் இவ்வமைப்பால் நடத்தப்பட்டவை ஆகும்.

தமிழ் மாணவர் பேரவை உருவானபின் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமை உருவாக ஆரம்பித்தது. தரப்படுத்துதல் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் பல வந்தபின், முதல் தடவையாக தமிழ் இளைஞர்கள் இனவாதத்திற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயம் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதப் போராட்டங்கள் உருவாயின.

1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையின் கீழ் ஏற்பட்ட அரசுக்கு எதிரான எழுச்சியில் பல்வேறு இளைஞர்களைக் கும்பல் கும்பலாகக் கைது செய்து அரசாங்கம் காவலில் வைக்கிறது. இந்தக் கைது படலத்தில் தமிழ் இளைஞர்களும் இருந்தனர்.

இந்த இளைஞர்கள் விடுதலையானபின் அரசுக்கு எதிராகத் தீவிர எதிர்த்தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர்.

அரசு பதில் நடவடிக்கையாகக் கொடூரமான ஒடுக்குமுறையை மேற்கொள்ளுகிறது.

இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் மூன்று விதமான போக்கு வெளிப்படுகிறது.

1. தலைமறைவு ஆதல்.

2. ஒதுங்குதல்.

3. அரசால் கைது செய்யப்படுதல்.

தலைமறைவான இளைஞர்களில் அரசியல் தெளிவு பெற்ற ஒரு சிலர் லண்டனில் கூடி ஈராஸ் (EROS) என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இதனுடன் மாணவர்களுக்கான அமைப்பான கஸ் (GUES)சும் உருவாகிறது. (General Union of Eelam Students)

ஆரம்பத்தில் இவ்விரண்டு அமைப்பும் ஒன்றாக இணைந்தே செயல்படுகின்றன.

ஈராஸ் படிப்படியாக ஆயுதப் படைக் குழுக்கள் கட்டமைப்பதற்கான வேலைகளைச் செய்கிறது. அதே நேரத்தில் பல பிரிவு வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்ற கருத்தும் உருவாகி, அதற்கான செயல்களில் சில தலைவர்களும் ஈடுபடுகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக 1980-இல் ஒரு பிளவு ஏற்படுகிறது. இப்பிளவில் இருந்து உருவானதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகும்.EROS-இன் தலைவர் பாலகுமார் ஆவார்.

ஈராசிலிருந்து வெளியேறி வந்த தலைவர்கள் உருவாக்கிய அமைப்பே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகும்.

1981 அக்டோபர் 10-ஆம் நாள் இவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிடுகின்றனர்.

இந்த அமைப்பு மூன்று மிக முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாகும்.

1. ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் தேசத்தை விடுவித்து தனி ஈழம் காண்பது.

2. ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, கலாசாரச் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியல் சுதந்திரத்தைப் பெற்று ஒரு சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைப்பது.

3. சர்வதேச முற்போக்குப் போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், மிதவாத இனவாதத்திற்கும் எதிராகப் போராடுவது.

இம்மூன்று நோக்கங்களை உள்ளடக்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கட்டமைக்கப் பலதரப்பட்ட பிரிவு மக்கள் மத்தியில் இறங்கிப் பல வகையான மக்கள் இயக்கங்களை உருவாக்கித் தனி ஈழத்திற்காகப் போராட வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

கஸ் ((GUES)அமைப்பு, பின்னால் இவர்களுடன் இணைந்து விட்டது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை அமைப்புகளாக, மாணவர் அமைப்பாக கஸ் (GUES) கிராமப்புறத் தொழிலாளர் விவசாயிகள் முன்னணி (Rural Workers & Peasants Front), ஈழ இளைஞர்கள் முன்னணி (Eelam Youth Front), தோட்டத் தொழிலாளர் முன்னணி (Plantation Proletariat Front), ஈழ பெண்கள் விடுதலை முன்னணி (Eelam Women’s Liberation Front), மீனவத் தொழிலாளர் முன்னணி (Fishery Workers Front) ஆகியவைகளும் அடங்கும்.

1983-ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஆயுதப்படைப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் விடுதலைப் படை உருவானது.

இது பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும், இனவாத அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகப் பத்மனாபா இருந்தார்.

இது 1980-இல் LTTE – தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து உருவான ஒரு அமைப்புதான் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கம்- PLOT.. இது முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் தலைமையில் செயல்பட்டது.

இவரது தலைமையில் உள்ள இயக்கம் பல ஆயுத எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது.

இந்த ஐந்து (EROS, EPRLF, TELO, LTTE, PLOT) அமைப்புகளையும் தவிர மற்றும் சில சிறு ஆயுதக் குழுக்கள் இலங்கை மண்ணில் இருக்கத்தான் செய்தன. அதைத் தவிர ஒரு சில மனித உரிமை மற்றும் பல மக்கள் இயக்கங்களும் இலங்கை மண்ணில் இனவாத ஒடுக்குமுறையை எதிர்த்து இயங்கி வந்தன.

ஆனால் இந்த ஐந்து இயக்கங்கள் மட்டும்தான் ஆயுதப் படைப்பிரிவைக் கட்டமைத்து அரசு பயங்கரவாதத்தை வீரத்துடன் எதிர்த்துத் தியாகம் பல புரிந்து வந்தன.

ஒரு காலகட்டத்தில் EROS, EPRLF, LTTE, TELO ஆகிய நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக முடிவெடுத்தன. அதன்படி வேறு சில மக்கள் இயக்கங்களுடன் (23 மக்கள் இயக்கங்கள்) இணைந்து இனவாத எதிர்ப்பு மக்கள் அணிகளைக் கட்டமைத்தும் அதே சமயம் ஆயுதப்படைப் பிரிவுகளின் மூலம் ராணுவ பதிலடியும் தந்தனர்.

பிரபலமாக உள்ள அமைப்புகளைத் தவிர (TELO, EPRLF, EROS, LTTE, PLOT) வேறு சில குழுக்களும் சிறிய அளவில் செயல்பட்டு வந்தன என்று சொன்னோம். இவற்றில் இரண்டு அமைப்புகள் நம் கவனத்திற்குரியது.

தமிழ் ஈழ விடுதலை ராணுவம் (TELA) என்கிற அமைப்பு TELO விலிருந்து பிரிந்ததாகும். இவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் “”ஓபராய்” தேவன் என்பவர். இவர் இலங்கையில் தியாகியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஜூலை கலவரத்திற்குமுன் யாழ் பல்கலைக்கழக மாணவியரைக் கடத்திச் சென்று கற்பழித்த ராணுவ வீரர்களைக் கொன்ற தாக்குதல் நடவடிக்கை இவர்கள் எடுத்ததே ஆகும்.

இவைத் தவிர (TEA, TELE) என்ற ராணுவ அமைப்புகளும் உள்ளன.

தமிழ் ஈழ தேசிய ராணுவம் (TENA) என்கிற அமைப்பு தமிழ் விடுதலைக் கூட்டணியின் (TULF)ன் தலைவரான அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனால் உருவாக்கப்பட்டதாகும். மற்ற விடுதலைக் குழுக்கள் இவ்வமைப்பைத் தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவருடைய துணை அமைப்பு என்றே குறிப்பிட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை முன்னணி (Tamil Eelam Liberation Front) என்பது ஈழவேந்தன் தலைமையில் உருவான அமைப்பாகும்.

அதேபோன்று எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனால் வெளியேறிய இலங்கைத் தமிழரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு PROTEG. இலங்கையில் இருக்கும் மதத் தலைவர்கள் (புத்த, கிறிஸ்துவ முஸ்லிம்) தமிழ்நாட்டில் உள்ள விடுதலைக் குழுக்களுடன் பேசுவதற்கு வரும்போது இவ்விரு அமைப்புகளுடனேயே பேச விரும்பியதற்குக் காரணம், இவர்களின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு என்கிற விமர்சனம் உண்டு.

இவைகளைத் தவிர அகதிகளுக்கு உதவும், வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் OFERR என்ற ஓர் அமைப்பும் உள்ளது.

மேலும் ஆயுதப் போராட்ட விடுதலைக் குழுக்களைத் தவிர பரந்த அளவில் தமிழ் ஈழத்துக்காக மக்களைத் திரட்டிப் போராடும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு வெகுஜன அமைப்பும் குறிப்பிடத்தக்கது. இது 1983 ஜூலை கலவரத்திற்குப் பின் பல்வேறு மக்கள் போராட்டங்களை இலங்கையில் கட்டமைத்துள்ளது.

நம்மால் அறியப்பட முடியாமல் இலங்கையில் இயங்கிய பல சிறு சிறு அமைப்புகளும் கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த அமைப்புகளும் விரிவான தொடர்பின்மையின் காரணமாக அவ்வமைப்புகளைப் பற்றிய தெளிவான விஷயங்களை அறியமுடியவில்லை.

நாளை:

40: தீக்கிரையானது யாழ் நூலகம்!

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும்.

-ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்

உள்ள 700 நூல்கள்

-சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்)

-ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,

தத்துவம் பற்றிய நூல்கள் 250)

-கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்)

-ஆறுமுக நாவலர் நூல் தொகுதி

-பைபிள் – முதன்முதலாக தமிழில்

எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி

-ஏட்டுச்சுவடிகள்

-பிரிட்டானியா கலைக்களஞ்சியம்

-அமெரிக்க கலைக்களஞ்சியம்

-கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம்

-விஞ்ஞான தொழில்நுட்பக்

கலைக்களஞ்சியம்

-சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்

-மருத்துவக் கலைக்களஞ்சியம்

-மாக்மில்லன் கலைக்களஞ்சியம்

-குழந்தைகள் கலைக்களஞ்சியம்

-அகராதிகள் (பல்வேறு வகை)

-கைடுகள் (பல்வேறு வகை)

-புவியியல் வரைபடங்கள், வரைபட நூல்கள்

-தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்

பெருமக்களின் நூல்கள்

-ஆங்கில பிரெஞ்சு – ஜெர்மானிய –

அரபி மொழியிலான நூல்கள்

-பத்திரிகைகள்.

இவ்வளவுமாகச் சேர்ந்து 97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வீதிக்கு வந்து கதறி அழுதனர். வரலாற்றில் மன்னிக்க முடியாத கருப்பு நாள் இது!

யாழ்ப்பாணத்தில் நூலக இயக்கம் என்பது 1915 டிசம்பர் 18-ஆம் தேதி அன்றைய பருத்தித்துறை அரசியல்வாதி கே.பாலசிங்கம் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் நூலகங்கள் அமைய வேண்டிய அவசியம் குறித்து பேசினார். இந்தச் செய்தி வெளியான 9-வது நாளில், டிசம்பர் 27-ஆம் தேதி – யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள கீரிமலை, காங்கேசன் துறைக்கு அண்மையில் கடற்கரையொட்டிய ஊரில் உள்ள நகுலேஸ்வரர் கோயில் மண்டபத்தில் அமைந்த நூலகத்துக்கு நகுலேஸ்வர படிப்பகமும் நூல் நிலையமும் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நூல் நிலையத்தை நிறுவியவர் சைவப் பெரியார் சி.நமசிவாயம். இதனைத் திறந்து வைத்தவர்: ஆன்மிகத்துறவி சர்வானந்த அடிகள். (தகவல்: ஆவணஞானி இரா.கனகரத்தினம்)

1916-ஆம் ஆண்டு கீரிமலை நகுலேஸ்வர நூலகம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் கன்னிமரா நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தஞ்சை சரஸ்வதி மகால் (1918), ஆல்காட் ஆரம்பித்து வைத்த அடையாறு நூலகம் (1880), மறைமலை அடிகள் நூலகம் (1958), உ.வே.சாமிநாதய்யர் நூலகம் (1943) ஆகியவை உலகப் புகழ்பெற்றது போலவே, யாழ்ப்பாண நூலகமும் சரித்திரப் புகழ் கொண்டதாகும்.

யாழ்ப்பாண நூலகம் 1934-ஆம் ஆண்டில் 844 நூல்களுடன் (கலாநிதி ஐசக் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்டடத்தில் எடுத்த முடிவுப்படி) ஆஸ்பத்திரி வீதியில், வாடகை வீட்டில், தொடங்கப்பட்டு 1936-இல் நகரசபைக் கட்டடத்தில் நிறுவப்பட்டது. பெருகி வரும் வாசகர்களுக்கேற்ப அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகம் ஒன்றினை அமைக்க 1952-இல் யாழ் மேயர் சாம்.ஏ.சபாபதி தலைமையில் கூடிய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டபடி லாட்டரி சீட்டு மூலம் நிதி திரட்டப்பட்டது.

இந்த நூலகம் அமைப்பதில் அருட்தந்தை லாங் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். நூலகம் அமைப்பதற்கான திட்டங்களை நூலகத்தின் தந்தை என்று தமிழகத்தில் அறியப்பட்ட எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்தளிக்க, கட்டுமானப் பணிகளை சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் கே.எஸ்.நரசிம்மன் ஏற்றார். திராவிடக் கலையம்சம் பொருந்திய இந்த நூலகம் 11.10.1959-இல் திறந்து வைக்கப்பட்டது.

காவல்துறைத் தலைவர் மற்றும் பிரிகேடியர் வீரதுங்கா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், தமிழர்களின் பண்பாட்டின் வைப்பகமாக உருவான யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 97 ஆயிரம் சிறப்பு வாய்ந்த நூல்கள் எரிந்து சாம்பலாயின. உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி என்று பெயரெடுத்த ஹிட்லர்கூட இங்கிலாந்து சென்று தாக்கும் தனது விமானப் படையினருக்கு, “ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்மீது குண்டு போடாதீர்கள்’ என்று எச்சரித்ததாகத் தகவல்கள் உண்டு. அதே போன்று, “ஜெர்மனியில் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தைத் தாக்காதீர்கள்’ என்று பிரிட்டன் விமானப் படைப்பிரிவுக்கும் அறிவுறுத்தப் பட்டதாகவும் சொல்வார்கள்.

ஆனால் ஜெயவர்த்தனாவின் சீடன் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்பார்வையில், தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகத்தைத் தகர்க்க வேண்டும் என்ற வெறியில், தீமூட்டி எரித்தார்கள். (இதற்காகவே, இரு தினங்கள் முன்பாக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம், மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல் வேலைகள் என்ற சாக்கில் காமினி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து திட்டம் தீட்டியதாக தகவல்). நூலகத்துக்கு எதிரே சில அடி தூரத்தில்தான் யாழ் தலைமைக் காவல்நிலையம் உள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்புக்கு என கொழும்பிலிருந்து வந்திருந்த போலீஸôர் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டரங்கமும் நூலகத்துக்கு எதிரேதான் இருக்கிறது. இவ்வகையான பாதுகாப்பு உள்ள நூலகம் தீப்பிடித்து எரிந்தது என்றால் ஆச்சரியம்தான்!

மே 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நூலகத்தில் நுழைந்த போலீஸ் உடைக் கொடியவர்கள் அங்கிருந்த காவலர்களைத் துரத்தி, நூலகத்தின் கதவை உடைத்து, நூல்களின் வரிசைக்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அழிக்கின்றனர் என்று பலரும் சாட்சியம் அளித்தனர். லெண்டிங் செக்ஷன், ரெபரென்ஸ் செக்ஷன், குழந்தைகள் பிரிவு யாவும் எரிந்தன. சுவர்கள், ஜன்னல்கள் வெப்பத்தால் வெடித்து சிதறி, எங்கும் சாம்பல் குவியல். பேய் வீடாகி விட்டது. இச்சம்பவம் தமிழின அழிப்பு என்கிற சிங்கள இனவாதிகளின் மனவோட்டத்தை உலகினருக்கு சந்தேகமின்றி வெளிப்படுத்தி விட்டது.

“இப்படியொரு மிருகச் செயலா?’- என்று கண்டனம் தெரிவித்த அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நூலக எரிப்புச் செய்திகளை வெளியிடக்கூடாது என பல தடைகளை விதித்தார். ஆனாலும் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. இச்சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, இழப்பீடாக ரூபாய் ஒரு கோடியை அரசு வழங்க வேண்டும் என்று பணித்தது.

ஆனால் ஜெயவர்த்தன அரசு ஒரு ரூபாய்கூட அளிக்கவில்லை. மாறாக, “இயற்கை இடர்கள் மூலம் இழப்பு ஏற்பட்டால் அளிக்கப்படும் நிதியிலிருந்து’ சிறு தொகை மட்டும் அளிக்க உத்தரவிட்டார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரிகாவும் கடும் கண்டனம் தெரிவித்து, யாழ் மக்களின் மனங்களை வெல்ல “புத்தமும் செங்கல்லும்’ என்று கோஷம் வைத்தார். அவர் சேகரித்த செங்கற்கள் எங்கே போயின என்பது தெரியவில்லை; அவர் சேகரித்த நூல்களோ பெரும்பாலும் சிங்கள நூல்கள் என்பது பின்னர் தெரிய வந்தது என்கிறார் யாழ்வாசி ஒருவர்.

யாழ் நூலகம் எரிப்பு குறித்து தமிழர்களின் குற்றச்சாட்டுக்கிடையே சிங்களரான அதிபர் பிரேமதாசா கூறியது என்ன?

“”வடக்கு-கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? இதற்கு பிரதான காரணம் காமினியே. பத்து வருடங்களுக்கு முன் 1981-இல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில் இது ஒரு கறை படிந்த – துயரமான சம்பவமாகும்.

பாராளுமன்றத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை நாம் கொண்டு வந்தபோது – அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றபோது – காமினி எதிர்த்தார். தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து கள்ளவாக்குகளைப் போட்டார். இதனை நான் கூறவில்லை. பாராளுமன்றத்தில் காமினி பிரசன்னமாய் இருந்தபோது கூட்டணி செயலதிபர் ஆற்றிய உரை என்னிடம் உள்ளது.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்களில் சதிநாச வேலைகள் இடம்பெற்ற பின்னர், ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நிலையம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுகளால் நீதியைப் பெறுவதற்கு எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியைக் குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ்த் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் இறங்கினார்கள்” என்பதாகும். (ஈழநாடு- (யாழ்பாணம்) 26.10.1991-இல் வெளிவந்தபடி).

இதற்கு ஒருபடி மேலே சென்று ஐக்கிய முன்னணியின் புத்தளம் அமைப்பாளர் ஜனாப் எம்.எச்.எம்.நவாஸ் கூறுகையில், “”தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாக விளங்கிய யாழ் நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு முக்கிய சூத்ரதாரியாக இருந்த காமினி திசநாயக்காவுக்கு ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

நாளை:

41: தங்கதுரையின் சூளுரை

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் புகழ்பெற்றவை. அந்த உரை, தனக்கு மரண தண்டனை நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் தனது கொள்கைகளிலிருந்து மாறாது உறுதியாய் நின்ற சாக்ரட்டீஸின் உரைக்கு நிகரானது அந்த உரை. நவீன கால உதாரணம் சொல்ல வேண்டுமானால், கியூபாவின் விடுதலைக்காக ஆயுதமேந்தி அப்போதிருந்த அரசிடம் மாட்டிக் கொண்டு நீதிபதிமுன் நிறுத்தப்பட்ட ஃபெடல் காஸ்ட்ரோவின் உரைக்கு ஒப்பானவை எனலாம்.

1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: *

”கனம் நீதிபதி அவர்களே!

ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.

எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.

இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?

நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.

இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?

காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?

பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.

இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?

பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.

இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.

எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.

எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.

ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.

வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு – நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு – தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.

உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.

இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.

விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ”இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?” என்றார்.

”எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.

நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸôரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.

* நாம் வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர் – தங்கதுரை

(வெளியீடு: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்).

42. நீதிமன்றம் மெüனமானது!

நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.

இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.

தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.

எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்.

இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸôர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?

நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.

சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா?

அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.

நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?

இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா?

இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும்.

இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே.

இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.

தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம்.

இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.

எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை.

ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.

வாழ்க தமிழ்

வளர்க தமிழ் ஈழம்

அகன்று போகட்டும் வறுமையும்

அணுவாயுதப் பயமுறுத்தலும்.

ஒழிக பசியும் பிணியும்.

ஓங்கட்டும் மனித நேயம்.

தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம் மெனமானது.

43. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்!

சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது.

இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்)கட்டப்பட்டதாகும்.

இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிருக்கும் ஏனைய சிங்களக் கைதிகளைப் போல் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்திப் பத்திரிகைகள் வாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ, வானொலி கேட்கவோ, காற்றோட்டமான வசதிகளோ, சிறை நூலக வசதியோ மறுக்கப்பட்டு இருட்டு குகையில் வசிக்கிற நிலைமையைத் தோற்றுவித்தார்கள்.

தமிழ்ப் பகுதிகளில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவங்களுக்கான வழக்குகள் யாவும் சிங்களப் பகுதிகளிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாவரையும் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையம் வெளியிட்ட ஸ்ரீலங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் நூலிலிருந்து-சிறிதே திருத்தப்பட்ட பகுதி இதோ:

இங்குள்ள பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட சப்பல் கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேஷ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டும் சாதாரணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மேல்மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர்.

இவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, தீவைப்பு, வீடுடைப்புப் போன்ற பலதரமான குற்றங்களைச் செய்த இவர்கள், தமிழ் இளைஞர்களைக் கொலை செய்வதற்கு அதிகாரிகளால் ஏவிவிடப்பட்டனர்.

கீழ்ப் பகுதியின் விசேஷ நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் தண்டிக்கப்பட்ட கைதிகளாக, வேறு சில சிங்கள விசேஷ சிறைக் கைதிகளுடன் தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமில் சித்திரவதையை அனுபவித்தபின் கொண்டுவரப்பட்ட 28 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வறைகள் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகளாகும். டி-3 பிரிவில் 29 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் இருந்தனர். ஏ-3 பிரிவில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த சிங்கள விசாரணைக் கைதிகள் இருந்தனர்.

பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பூட்டுக்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இப் பிரிவு திறந்து விட்டாலன்றி எவரும் (சக அதிகாரிகள் உள்பட) உள்ளே செல்ல முடியாது. டி-3 பிரிவின் கதவு பலகையால் இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும்.

இந்த நான்கு விசேஷ பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு ஜெயிலரும், ஒரு பொறுப்பதிகாரியும், நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்களும் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். இக்கட்டடத்தைச் சுற்றி இருவரிசை முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வெளியே பலத்த ராணுவக் காவல் போடப்பட்டிருந்தது.

25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள்.

ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித-காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள்.

திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு.

தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின.

வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன.

சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள்.

ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து “”ஜெயவேவா” (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.

குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர்.

பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர்.

சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து “”சில்” அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும்.

சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply