பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு! நக்கீரன்

வி பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு!

நக்கீரன்

சுஜாதை படைத்த பால் அன்னம் உண்ட போதிசத்துவரான கௌதம முனிவர், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று காயாவின் உருவேலா சமவெளியில் போதி (அரச) மரத்தின் கீழ் கிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் 49 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். வைகாசி மாத பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்போதி ஞானம் அடைந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கமல் குணரத்தின எந்தப் போதிமரத்தின் கீழ் அமர்ந்தாரோ தெரியாது ஆனால் அவருக்கு ஞானம் பிறந்திருக்கிறது.

கடந்த டிசெம்பர் 09 ஆம் நாள்  பாதுகாப்புச் செயலாளராகப் பதவி ஏற்ற பின்னர்  முன்னாள் இராணுவ தளபதி கமல் குணரத்தின  முதன் முறையாக  இலங்கை இராணுவத்தின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அப்போது  “பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும், புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது” என்றார்.

தனித் தமிழீழம் கேட்டு அரசுக்கு எதிரான வி.புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆட்சியாளர்கள் பயங்கரவாதப் போராட்டம் என்றே வருணித்து வருகிறார்கள். அதை ஒரு விடுதலைப் போராட்டம் எனப் பார்க்கவில்லை.  செப்தெம்பர் 11, 2001  அன்று   அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்கித் தரைமட்டமாக்கினார்கள். அதன் பின்னர் பயங்கரவாதிகளில் நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகள் என்ற வரையறை அடிபட்டுப் போய்விட்டது.  உலகம் ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றையும் பயங்கரவாதப் பட்டியலில் போட்டுவிட்டது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பும்  32 நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் இடம் பெற்றது.  இந்தத் திருப்பத்தை சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாகத் தனக்குச் சாதகமாக்கிக்  கொண்டது.  

அதனால்தான் குணரத்தின  “பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும், புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது” என்கிறார். 9/11 க்குப் பின்னர் வி.புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் போட்டாலும் தமிழ்மக்கள் அந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பார்க்கவில்லை. தமிழ்மக்களின் விடுதலைக்க ஆயுதம் தாங்கி மறவழியில் போராடும் ஓர் அமைப்பாகவே பார்த்தார்கள். தமிழ்மக்களில் பெரும்பான்மையோர் வி.புலிகளை ஆதரித்தார்கள் என்பதுதான் யதார்த்தம். மக்களின் பேராதரவுதான் ஒரு விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கமா அல்லது விடுதலை இயக்கமா என்பதைத் தீர்மானிக்கிறது.

போராட்ட காலத்தில் வி.புலிகள் மனித உரிமை மீறல்களை இழைத்திருக்கிறார்கள். ஆனால் அவை போர்க்குற்றங்கள். பயங்கரவாதம் அல்ல.

மேலும் சுதந்திரமான தமிழீழ அரசுதான் தமிழ்மக்களின் வேட்கை என்பதை  1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. 

         (1) இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

        (2) அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

        (3) அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும்.

1977 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தே தேர்தலில் வட கிழக்கில் பெரும் வெற்றி பெற்றது. தமிழீழத்துக்கான ஆணையையும் பெற்றது.

கமல் குணரத்தின குறிப்பிடும் வி. புலிகளின் சித்தாந்தம் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை அடித்தளமாகக் கொண்டது. அது இன்றும் நீடிக்கிறது. இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான, நீண்டு நிலைத்து நிற்கக் கூடிய தீர்வு காணப்படும் வரை இந்தச் சித்தாந்தம் மக்கள் மனங்களில் வாழவே செய்யும்.

ஆன காரணத்தாலேயே தமிழ்மக்கள் நடைபெறும் தேர்தல்களில்  மகிந்த இராசபக்ச தலைமை தாங்கும் கட்சியையும் அந்தக் கட்சி சார்பாகப் போட்டியிடும் சனாதிபதி வேட்பாளர்களையும்  தேர்தலில் நிராகரித்து வருகிறார்கள்.

தொடர்ந்து பேசிய கமல் குணரத்தின “சமீப காலங்களில், இராணுவத்தினர்  அரசியல்வாதிகளால்  வேட்டையாடப்பட்டனர்.  எங்களது போர்வீரர்கள் சிலர் எந்தவிதமான தவறும் செய்யாமல் இருந்தும் அவர்கள்  சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது எமக்கு  வருத்தமளிக்கிறது ”எனக் குறிப்பிட்டார்.

இராணுவப் பாதுகாப்பு என்பது உலகின் புனிதமான  தொழிலாக இருப்பதால், எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பின் பொறுப்பை ஏற்கவும்  நமது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதை ஒரு  பாரிய பணியாக உறுதிப்படுத்தவும் அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

“இப்போது ஆட்சி மாற்றத்துடன், எங்கள் முன்னுரிமை, கவனம் தேசியப் பாதுகாப்பு மீது உள்ளது. சனாதிபதியும் (கோட்டாபய இராசபக்ச) நானும் இராணுவத் தளபதியும் பொதுமக்களின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகளைக்  கைவிட மாட்டோம்.  இப்போது உங்களுக்கு அந்த உறுதியை என்னால்  தரமுடியும். இது (இராணுவம்) ஒரு அற்புதமான அமைப்பு. இதற்காக முழு நாடும் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது.  மேலும், அந்தப் பெருமைமிக்க அமைப்பில் பங்குதாரர்களாக  நீங்கள் இருப்பதால், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் உங்களுக்குப்  பெரிய பங்கு உள்ளது. தொழில்முறைத் தரங்களுடன் பொருந்த நாம் பெருமைமிக்க வீரராகப் பெருமையுடன் வாழ வேண்டும். உங்களிடம் ஒரு மரியாதைக்குரிய தளபதி (சவேந்திர சில்வவா)  இருக்கிறார், அவர் உங்கள் பிரச்சினைகளை அக்கறையோடு தீர்த்து வைப்பார்.  இராணுவ வீரர்களாகிய  நாம் எமது தரத்திற்கு ஏற்ப வாழ வேண்டும்.

“அதனால்தான் இன்று இது போன்ற மிகவும் ஒரு அற்புதமான புதிய தலைமையகத்தை  நீங்கள் பெற்றுள்ளீர்கள். இதற்கான சனாதிபதியின் பார்வை மற்றும் சிந்தனைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.   இதுபோன்ற பல வெளிநாட்டுத் தலைமையகங்களை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரத்தில் இருக்கும் இந்தத் தலைமையகத்துக்கு இணையான  தலைமையகத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை ”என்றார்.

“ஏப்ரல் 21 தாக்குதலுக்கு வேறு யாரும் காரணமில்லை. மிக உயர்ந்த மட்டத்தில் பொறுப்புள்ள நபர்களின் முழுமையான அலட்சியம் மற்றும் அறியாமைதான் காரணம். இஸ்லாம் என்ற சிறந்த  மதத்தை தவறாக வழிநடத்திய ஒரு சிலரால் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.   நற்பண்புகளைக் கொண்ட இஸ்லாம் மதம்  ஒருபோதும் அப்பாவி பொதுமக்கள்  கொல்லப்படுவதை ஆதரிக்கவில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் மற்ற மதத்தவர்களை நாய்கள் போலச் சுட்டுக் கொல்லுமாறு சொல்லவில்லை. குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்ட காயமடைந்த பொதுமக்கள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.  தேசத்தின் பாதுகாவலர்களாகிய நாங்கள் இத்தகைய வன்முறைகளை மீண்டும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது. “

இப்போது இருக்கும் இராணுவத்துக்குப் புகழாரம் சூட்டும் கமல் குணரத்தின இதே  இராணுவமே ஆட்சிமாற்றத்துக்கு முன்னரும் இருந்தது என்பதை வசதியாக மறந்து விடுகிறார். எடுத்துக் காட்டாக இப்போதுள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதற்கு முந்திய ஆட்சியில் இரண்டு முறை பதவி உயர்வு பெற்றார். லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்த சவேந்திர சில்வா கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி  இலங்கையின் 23  ஆவது இராணுவ தளபதியாக பதவியுயர்த்தப் பட்டார். அதற்கு முன்னர் அவர் இராணுவ பதவி நிலை பிரதானியும், கஜபா, கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமாகவும் இருந்தார். படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

“எங்களது போர்வீரர்கள் சிலர் எந்தவிதமான தவறும் செய்யாமல் இருந்தும் அவர்கள்  சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்” என கமல் குணரத்தின யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பெரும்பாலும் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் 2008 -2009  இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையின் புலனாய்வுத் துறையைச்  சார்ந்தவர்களால்   வெள்ளைவானில் கடந்தப்பட் டு பின்னர் கொல்லப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் தொடர்பாக கொலைக் குற்றம் சாட்டப்பட் வழக்கை அவர் குறிப்பிடுகிறார் போல் தெரிகிறது.

இந்த வெள்ளைவான்  சம்பவம் போர்க்காலத்தில் நடந்தாலும் போர் நடந்த பகுதியில் நடைபெறவில்லை. போர்க்களத்துக்கு வெளியே – போர் நடக்காத கொழும்பில்தான் இந்த 11 தமிழ் இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள். கடத்தப்பட்ட இளைஞர்கள் புலிப் போராளிகளும் அல்லர். இவர்கள் அப்பாவித் தமிழ் இளைஞர்கள். போருக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இவர்கள் பணத்துக்காக கடத்தப்பட்டுத்  திருகோணமலைக் கடற்படைத்தளத்தின் இரகசிய அறைகளில்  அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்தக் கடற்படைக் கொலையாளிகளைத்தான் “எங்களது போர்வீரர்கள் சிலர் எந்தவிதமான தவறும் செய்யாமல் இருந்தும் அவர்கள்  சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது எமக்கு  வருத்தமளிக்கிறது”என்று கமல் குணரத்தின  கூறுகிறார். இவர் போலவே மகிந்த இராசபக்ச, முன்னாள் சனாதிபதி மயித்திரிபால சிறிசேனா இருவரும்   சொல்லி வந்தார்கள் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

மகிந்த இராசபச்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள்  நிகழ்வு  காலி முகத்திடலில் நடைபெற்ற போது குறித்த நிகழ்வில், கொலைக் குற்றச் சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள அட்மிரல் ரவீந்திர குணவர்தனவும் பங்குபற்றியிருந்தார். அவ்வாறு சிறிலங்கா அரச நிகழ்வொன்றில், பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் எப்படி பங்குபற்றினார் என்ற கேள்வி அப்போது மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.

லெப்டினன் ஜெனரல்  சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக  இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதையிட்டு அமெரிக்கா  மிகுந்த கவலையடைந்துள்ளது எனத் தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும். குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் இத்தருணத்தில், சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டிருந்தது. (https://www.virakesari.lk/article/62946)

இராணுவ தளபதி சவேந்திர சில்வா போலவே கமல் குணரத்தின  மீதும் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு அவர் தலைமை தாங்கி வழிநடத்தியிருந்தார். கடந்த  2016 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக அப்போதைய னாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். 

கடந்த காலங்களில் தற்போதைய சனாதிபதி கோத்தாபாய இராசபக்சவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வியத்மக மற்றும் எலிய (வெளிச்சம்) அமைப்புகளில் கமல் குணரத்தின நிரந்தர உறுப்பினராகச் செயற்பட்டு சர்வதேச நாடுகளில் தமது பரப்புரைகளை முன்னெடுத்தார். கோட்டாபய இராசபக்ச  சனாதிபதியாகத் தெரிவானதை அடுத்து ஓய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின பாதுகாப்பு செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

 பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கமல் குணரத்ன னாதிபதி கோட்டாபய இரசபக்சவின் வாழ்க்கை வரலாற்றை    “நந்திக்கடலுக்கான பாதை” (Road to Nandikadal)  என்ற  நூலாக எழுதியுள்ளார்.   இந்தப் புத்தகம் மும்மொழிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.

ஏப்ரில் 21 இல் நடந்த தாக்குதலுக்கு முன்னைய ஆட்சியாளரே காரணம் என கமல் குணரத்தின சொல்வது சரியென்று   ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய சனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் ஏப்ரில் 21 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரவாதி  சஹரான் காசிம் மற்றும் அவனது கூட்டாளிகள் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு இராணுவம் மாதச் சம்பளமாக  ரூபா 35,000 கொடுத்து வந்தது. இராணுவப் குற்றப் புலனாய்வாளர்கள் என்பதால் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அவர்கள்  காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தும்  விலக்களிக்கப்பட்டார்கள்.

சஹரான் மற்றும் அவனது கூட்டாளிகள் மட்டுமல்ல  போர்க்காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டிருந்தார்கள். வி.புலிகளுக்கு எதிரான போரில் தமிழ்த் தெரியாத சிங்கள இராணுவத்தினரால் புலனாய்வில் ஈடுபடுவது வில்லங்கமாக இருந்தது. அதன் காரணமாகவே தமிழ் பேசும் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டார்கள்.

போர்க்காலத்தில் தலைதூக்கிய முஸ்லிம் தீவிரவாதத்தை இராணுவப் புலனாய்வுத் துறை சரி, காவல்துறை குற்றப் புலனாய்வு சரி கண்டும் காணாமல் விட்டு விட்டன.  போர்க் காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினருக்குக்  கொடுக்கப்பட்ட ஆயுதங்களும் ஆயுதப் பயிற்சியும் சஹரான் போன்ற பயங்கரவாதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.

புலிகளின் ‘பயங்கரவாதம்’  மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்த இராணுவம் மற்றும் காவல்துறை முஸ்லிம் பயங்கரவாதம் தலை தூக்கியதைக் அவதானிக்கத் தவறி விட்டன.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள காவல் சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறைக் காவலர்கள்  நொவெம்பர் 30, 2018 அன்று இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு குற்றப்புலனாய்வுக் குழு விசாரணைகளை மேற்கொண்டது. இவர்கள் முன்னெடுத்த விசாரணைகளில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள்  என்பவற்றை நடாத்த மட்டக்களப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணயில்  துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்த பணிக்குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் குறித்த பணிக்குழுவில் பணியாற்றிய உறுப்பினர்களையும் காவல்துறை தேடி வந்தது.  வட்டக்கச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியான இராசநாயகம் சர்வானந்தனையும்  காவல்துறை தேடியதை அடுத்து அவர்  டிசெம்பர் முதல்நாள் காலை கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்தார். இவரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அவர் பாரப்படுத்தப்பட்டார். இது தொடர்பாக இன்னொரு முன்னாள் போராளியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் வேடிக்கை  என்னவென்றால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் இருவரும்  கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்கள் எனக் காவல்துறை தெரிவித்தது!

பின்னர் ஏப்ரில் 21 உயிர்த்த ஞாயுறு அன்று  மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து நாடு முழுதும் சஹரானது   கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டனர். அந்த விசாரணையின் போது வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு  அருகில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினரைச் சுட்டுக் கொன்று அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களைத் பறித்தவர்கள் தாங்களே என்று  அந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். வவுணதீவு வலையிறவுக் கொலைகளைச் சரியான முறையில் குற்றப் புலனாய்வுத்துறை விசாரித்திருந்தால் உண்மையான குற்றவாளிகள் அகப்பட்டிருப்பார்கள். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலும்  நிறைவேறியிருந்திருக்காது.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இப்படியான கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகிற போது  உண்மை, பொய் எது என்று ஆராய்ந்து பாராது குற்றப் புலனாய்வுத் துறையின் ஐயம்  முன்னாள் போராளிகள் மீதுதான் விழுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறாது விட்டிருந்தால்  வலையிறவு பாலத்தில் இடம்பெற்ற கொலைகள் பற்றிய  உண்மை வெளிவந்திராது. முன்னாள் போராளிகள் சிறையில் ஆண்டுக் கணக்காக அடைக்கப்பட்டிருந்திருப்பார்கள். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்.

முன்னாள் இராணுவ தளபதியும் இந்நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கமல் கருணரத்தின ஏற்கனவே பாரதூரமான போர்க் குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கி வருபவர். இப்போது
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் நூறு பக்கம் கொண்ட ஒரு பட்டியலை எழுதி (https://www.colombotelegraph.com/index.php/new-dossier-released-on-alleged-war-crimes-committed-by-sri-lankas-new-defence-secretary-kamal-gunaratne/)
. வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் புகழ்பெற்ற மனிதவுரிமைச்  சட்டத்தரணி யஸ்மின் சூக்கா ஆவர்.

இந்தப் பட்டியலில் இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர் என்பதற்கு  நிரூபணமான சான்றுகள் உள்ளன என அந்த அமைப்புக்  கூறுகிறது.

கமல் குணரத்தின் போரில் 53 படைப் பிரிவின் தளபதியாகவும் இடம் பெயர்ந்தோருக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாகவும் யோசேப் முகாமின் தளபதியாகவும் இருந்தவர்.  யோசேப் முகாம் போருக்குப் பின்னர் படுமோசமான சித்திரவதைக்குப் பெயர் போன இராணுவ முகாமாக மாறியிருந்தது.

கமல் குணரத்தின மீது  சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் பற்றி யஸ்மின் சூக்கா வெளியிட்ட பட்டியலில்  என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.


பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு!

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply