தேர்தல் முடிவுகள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தேசம் துருவப் படுத்தப்பட்டுளதைக் காட்டுகிறது!

தேர்தல் முடிவுகள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தேசம் துருவப் படுத்தப்பட்டுளதைக் காட்டுகிறது!

நக்கீரன்

புதிய சனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய இராசபக்சவுக்கு பல நாட்டுத் தலைவர்கள் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரீவித்துள்ளார்கள். குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா, இரான், யப்பான் போன்ற நாடுகளின் தலைவர்கள் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டுத் தலைவர்களின் நல் வாழ்த்துக்கள் மரபு வழியில் அமையாது வித்தியாசமாக அமைந்துள்ளன.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தமிழ்,  சிங்களம், ஆங்கிலம் ஆகிய  மொழிகளிலும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுத்த அறிக்கையில் “தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு”  புதிய சனாதிபதி கோட்டாபயவைக் கேட்டுள்ளார். அதோடு நில்லாமல் தனது வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கரை இலங்கைக்கு அனுப்பி “தமிழர்களின் வேணவாக்களை நிறைவேற்றக் கூடிய  தீர்வை முன்வைக்குமாறு  கோட்டாபய இராசபக்சவிடம் இந்தியா நேரடியாக வலியுறுத்தியது. இதனை  அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சு  அறிக்கை மூலம் நொவெம்பர் 21 ஆம் நாள் அறிவித்துள்ளது.

கொழும்புக்குக்  கடந்த புதன்கிமை வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சனாதிபதி கோட்டாபய  இராசபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது இந்தியாவின்  விருப்பத்தை ஜெய்சங்கர், கோட்டாபய அவர்களிடம் தெரிவித்தார் என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இரவீஷ் குமார் புதுடில்லியில் நொவெம்பர் 21 இல் நடந்த செய்தியாளர் கூட்டத்தில்  அறிவித்தார்.

இரவீஷ் குமார் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் புதிய அரசுடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது  என்பதோடு தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழக் கூடியதாக -அவர்களது வேணவாக்களை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றைக் காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசு முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை சனாதிபதியிடம் ஜெய்சங்கர் தெரியப்படுத்தினார்.

இனத்துவ அடையாளப் பாகுபாடு இன்றிச் சகல இலங்கையர்களுக்குமான சனாதிபதியாகத் தான் இருக்கப் போவதாக கோட்டாபய இராசபக்ச,  ஜெய்சங்கரிடம் உறுதியளித்தார்.

கோட்டாபய இராசபக்ச சனாதிபதியாகப் பதவியேற்ற அடுத்த நாள், மூன்று மணி நேரத்துக்கள்  அவசர செலவு மேற்கொண்டு கொழும்புக்குச் சென்று இந்தச் செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனைக் கோட்டாபய இராசபக்ச சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நம்பலாம்.

இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்ற  கோட்டாபய பேசும்போது “நான் இப்போது அனைத்து இலங்கையர்களுக்கும் சனாதிபதியாக இருக்கிறேன், அவர்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் இன அல்லது மத நம்பிக்கையைப் பொருட்படுத்த மாட்டேன். தேர்தல் இப்போது முடிந்துவிட்டது, அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய ஒரு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப எனக்கு அனைத்து இலங்கையர்களின் ஆதரவும் தேவை ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய இராசபக்ச வெற்றிபெற்ற பின்னர் நொவெம்பர் 17 அன்று அவர் செய்த ட்வீட்டில் “எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களின் சனாதிபதியாக இருப்பேன். சனாதிபதியாக இருப்பதற்கான வாய்ப்பபை நல்கிய மக்களுக்கு நான் நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்” என்று கூறினார்.

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த காலம் தொட்டு இலங்கைத் தமிழர் நலன்பற்றித்  அது தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியை சம்பந்தன் ஐயா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு அவ்வப்போது சந்தித்துப் பேசி வருவது  தெரிந்ததே. இந்தச் சந்திப்புகளில் இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைத் தென்னிலங்கை சிங்கள ஆளும் தரப்பினர் முன்வைக்க  இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம்  கொடுக்க வேண்டும் என ததேகூ வற்புறுத்தி வந்திருக்கிறது.

அரசியல் தீர்வு தொடர்பாக நூறு விழுக்காடு இந்தியா தமிழர் பக்கத்தில் நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து வந்துள்ளதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

(1) இலங்கைத் தமிழர் தொடர்ந்து பாரபட்சமாக – இரண்டாம் தர மக்களாக – சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டால் அதன்  விளைவு 8.15  கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் நிச்சயம்  எதிரொலிக்கும்.

(2) கஷ்மீரில் சிறுபான்மை இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது போல இலங்கையிலும்  தமிழ் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள் என்ற படிமம் அவரிடம் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்குச்  சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கி மாநிலத்தை இரண்டு பகுதிகளாக  இந்திய அரசு  பிரித்துள்ளது. இப்போது  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது. ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் 66.97  பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.  லடாக் யூனியன் பிரதேசத்தில் பவுத்தர்கள் பெரும்பான்மையாக (45.87) இருக்கிறார்கள்.  லடாக்கிற்கு என சொந்த கலாசார அடையாளம் இருப்பதோடு, அதன் புவியியல், பிற இடங்களைவிட அடிப்படையிலும் வேறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக,  லடாக்  900 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாதீன அடையாளத்துடன் கூடிய பகுதியாக இருந்திருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தமிழ்மக்களின் வேணவாக்களைத்  தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் சம்பந்தன் ஐயா தமிழ்மக்களில் 90% டினர் புதிய சனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்குப் போடுமாறு கேட்டிருந்தார்.

இந்தியா போலவே இலங்கையின் புதிய சனாதிபதி கோட்டாபய இராசபக்ச  மனித உரிமைகளையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பேயோ  தேர்தல் முடிந்த கையோடு வலியுறுத்தி இருக்கிறார்.   வோஷிங்டனில்  நொவெம்பர் 18,  2019  அன்று  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது –

இலங்கையர்களின் சனநாயக ரீதியான தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன், இலங்கையின் புதிய சனாதிபதி என்ற வகையில் கோத்தாபய இராசபக்ஷவுடன் பணியாற்றத் தயாராகவிருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கான மதிப்பு, மற்றும் வன்முறை மீள்நிகழாமை ஆகியவற்றுக்கான இலங்கையின் உறுதிப்பாடுகளை நிலைநாட்டுமாறு சனாதிபதி இராசபக்க்ஷவை நாம் வலியுறுத்துகிறோம். ஆசியாவின் பழமையான சனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வெளிப்படையானதுமான சனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது சனநாயகத்தின் வலிமை மற்றும் மீளெழுச்சியை தொடர்ந்தும் வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை நாம் பாராட்டுகிறோம். இலங்கை ஒரு மதிப்புமிக்க பங்காளி நாடு என்பதுடன், அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய, நல்லாட்சியை வலுப்படுத்தக்கூடிய, மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கக்கூடிய சுதந்திரமானதும் திறந்ததுமான இந்து – பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாத்தல் உட்பட இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பேயோ அவர்களின் அறிக்கை  ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு – முக்கியமாக தீர்மானம் 30-1 (2015) – அமைய இருப்பது கவனிக்கத்தக்கது. அமெரிக்கா சிறிலங்காவை தொடர்ந்து கண்காணித்து வருவது  குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது பூகோள நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரா குற்றங்கள் பற்றி அமுக்கி வாசிக்கும் என சில தரப்பினர் ஓயாது ஒழியாது சொல்லிவருகிறார்கள். ஆனால் இந்திய – அமெரிக்க நாடுகளின் நடவடிக்கைகள் அதனை மறுதலிக்கிறது.

ஒன்றுக்கு இரண்டு கட்சிகளுக்கு தலைவராக இருக்கும் கஜேந்திரகுமார்  தொடர்ந்து இந்தியாவைக் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். இந்தியாவை மட்டுமல்ல இந்தியா பக்கம் நிற்கும் ததேகூ யும் கடுமையாகத் தூற்றிவருகிறார்.

கஜேந்திரகுமார் ததேகூ இந்தியாவின் கைக்கூலிகள், எடுபிடிகள், அடிமைகள், கைப்பொம்மைகள் என வாய்க்கு வந்தபடி அர்ச்சிக்கிறார். இப்போது, 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட 5 கட்சிகளும் மேற்குலக நாடுகளின் முகவர்கள், இந்தியாவின் அடிமைகள்,  கைப்பொம்மைகள் என வசை பாடுகிறார்.

இந்தியா எங்களைப் பயன்படுத்த விடக் கூடாது என்கிறார்.  மொத்தம் 134 கோடி மக்கள் வாழும்  இந்தியாவுக்கு 22 இலட்சம் தமிழர்கள் வேண்டுமா? இல்லை 22 இலட்சம் தமிழர்களுக்கு இந்தியாவின் உதவி, ஆதரவு வேண்டுமா? அதாவது புண்ணுக்கு மருந்து வேண்டுமா? அல்லது  மருந்துக்குப் புண் வேண்டுமா?

தமிழில் ஒரு பழமொழி உண்டு.  ஒன்றில் ஈணத் தெரிய வேண்டும் இல்லாவிட்டால் (கன்றுக் குட்டியை) நக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் தெரியாவிட்டால் என்ன பயன்?

உலக நாடுகளின் உதவியின்றிப் புரையோடிப் போயிருக்கும்   இனச் சிக்கலைத் தீர்க்க முடியுமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக இருந்தாலும்  இந்த நாடுகளின் ஆதரவு வேண்டுமா? வேண்டாமா?  இது தெரியாமல் நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலைக் கஜேந்திரகுமார் புறக்கணிக்குமாறு அறிக்கை விட்டார்.

தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன கஜேந்திரகுமார் அன்ட் கொம்பனியை தமிழ்மக்கள் புறக்கணித்துள்ளார்கள்.  தமிழ்மக்கள் ததேகூ சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்குமாறு அறிக்கை விடுமுன்னரே நடந்து முடிந்த அஞ்சல் வாக்களிப்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 98.75% ரும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 97.71% ரும் வாக்களித்திருந்தனர். வடக்குப்  போலவே  கிழக்கில்  திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில்  (99.10%) மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில்  (99.35%) வாக்களித்திருந்தார்கள்.

சென்ற 2015 ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் சிறிசேனா பெற்ற வாக்குகளை விட இம்முறை (2019) சஜித் பிரேமதாசா 174,513 (13.14%) கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதே போல் வாக்களிப்பு விழுக்காடும் கூடியுள்ளது. மாறாக தென்னிலங்கையில் வாக்கு விழுக்காடு முன்னரைவிடக் கணிசமான அளவு குறைந்துள்ளது. கீழேயுள்ள அட்டவணை தேர்தல் முடிவுகளைக் காட்டுகிறது.

சனாதிபதி தேர்தல் முடிவுகள் – 2019, 2015

அட்டவணை 1

தேர்தல் மாவட்டம் 

கோட்டாபய
சஜித் மற்றவர்கள்  செல்லுபடியான வாக்குகள் இராசபக்ச  சிறிசேனா  T/O
2019  2019  2019  2019 2015 2015 2019
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் வாக்குகள் % வாக்குகள் % %
மட்டக்களப்பு 38,460 12.68 238,649 78.70 26,112 8.61 303,221 41,631 16.22 209,422 81.62 77.20
திகாமடுல்ல 135,058 32.82 259,673 63.09 16,839 4.09 411,570 121,027 33.82 233,360 65.22 82.32
திருகோணமலை 54,135 23.39 166,841 72.10 10,434 1.49 231,410 52,111 26.67 140,338 71.84 82.97
கிழக்கு 227,653 22.96 665,063 71.30 53,385  1.4 946,201 214,869  26.54 583,120  72.01  80.83
யாழ்ப்பாணம் 23,261 6.24 312,722 83.86 36,930 9.9 372,913 74,454 21.85 253,574 74.42 68.03
வன்னி 26,105 12.27 174,739 82.12 11,934 5.61 212,778 34,377 19.07 141,417 78.47 76.59
வடக்கு 49,366 9.20 487,461 83.49 48,864 3.29 585,691 108831 20.89 394,991 75.82  72.31
வடக்கு+கிழக்கு 277,019 24.32 1,152,524 77.40 102,249 1.45 1,531,892 323,600 24.32 978,111 72.01  76.57
நுவரேலியா 175,823 36.87 277,913 58.25 23,128 2.07 476,961 145,339 34.06 272,605 63.88 85.06
வடக்கு+கிழக்கு+நுவர 452,842 31.64 1,430,437 67.82 125,377 2.56 2,008,853 468,939 31.64 1,250,716 84.37  80.82
 16  தேர்தல் மாவட்டங்கள் 6,471,413 50.64 4,133,702   638628 0.98 11,243,743 5,299,151 50.64 4,996,446 48.38
22 தேர்தல் மாவட்டங்கள் 6,924,255 52.25 5,564,239 41.99 764,005 5.76 13,252,596 5,768,090 47.58 6,217,162 51.28 83.72
செல்லுபடியான வாக்குகள் 13,252,596 3,578,731
செல்லுபடியாகாத வாக்குகள் 135,452 140,925
மொத்த வாக்குகள் 13,387,951 83.72 12,264,377 81.52
பதிவான வாக்குகள் 15,992,096 15,044,490
பெரும்பான்மை 1,360,116 449,072

ததேகூ என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கரித்துக் கொட்டும் எதிர்த்திருப்பினர் ததேகூ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெரும்பான்மை தமிழ்மக்கள் சஜீத் பிரேமதாசாவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் எனச் சொல்கிறார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை. மக்களின் மனவோட்டத்தைத் ததேகூ சரியாகக் கணித்திருந்தது. அதேபோல் ததேகூ விருப்பத்தையும் மக்கள் சரியாகப் புரிந்திருந்தார்கள்.இந்தத் தேர்தலில் படித்த பாடத்தின் பின்னராவது மலட்டு அரசியல் நடத்தும் கஜேநிதிரகுமார் தனது தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவார் என நம்புகிறோம்.

ஆனால் மக்கள் எங்கள் பக்கம் என மார்தட்டிய  மு முதலமைச்சர் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோர் மக்களது மனவோட்டத்தை ஏன் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள்? ஏன் சனாதிபதி தேர்தலில் விக்னேஸ்வரன் இரண்டு சிங்களக் கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கும்படி தன்னால் சுட்டிக்காட்ட முடியாது என்றும் மக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்குமாறும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் இல்லையேல் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறும் கேட்டார்கள்?

புலத்தில் புல்லைத் தின்னும் புலிகளும் மாற்றுத் தலைமையைத் தேடியலைவர்களும்  தேசியவாதி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு  கேட்டுக் கொண்டார்கள். வழக்கம் போல அவர்  எண்ணி 12,256 (0.09%) வாக்குகளைப் பெற்றுக் கட்டுக் காசை இழந்துள்ளார்! 2010 இல் நடந்த தேர்தலிலும் இதேபோல் கட்டுக்காசைப் பறிகொடுத்தார்!

கிழக்கில் வியாழேந்திரன், கருணா, பிரசன்னா போன்றவர்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்குமாறு கூரையேறிக் கொக்கரித்தார்கள். வியாழேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் அமைச்சர் கனவில்க்  கூட  இருந்தார்கள்! அண்ணனுக்கு  ஆமான அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூட்டம் போட்டுக் கூவினார்கள்!

ஆனால் எமது மக்களில் 80% கும் அதிகமானோர்  சஜித் பிரேமதாசாவுக்கு  ஆதரவாக இரண்டு கைகளாலும் வாக்குகளை அள்ளிப் போட்டு இவர்கள் எல்லோரது   நெற்றியிலும்  ஒரு முழ அகலம் ஒரு முழ நீளம் கொண்ட  நாமத்தைப்  போட்டார்கள்!

தமிழ்மக்கள் கடந்த பல சகாப்தங்களாக அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள். அவர்களது தீர்ப்பு  மகேசன் தீர்ப்பு. அது எப்போதும் சரியாகவே  இருக்கும்!


தேர்தல் முடிவுகள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தேசம் துருவப் படுத்தப்பட்டுளதைக் காட்டுகிறது!

 

About editor 3043 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply