-
சிங்கள பவுத்தம் – மகாவம்சம் ஒரு மீள் பார்வை
-
நக்கீரன்
- சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம் வரலாறு சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் அய்யாயிரம் ஆண்டுகள் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இனப் போருக்கு முரண்பாட்டுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.மகாவம்ச ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பவுத்த சிங்கள தேசிய உணர்வு மெல்ல மெல்ல சிங்கள அறிவுப் பிழைப்பாளர் மற்றும் மேல்தட்டு சிங்களவர் மத்தியில் வேரூன்றத் தொடங்கியது. மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற பவுத்த தேரரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் (epic) ஆகும். மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது இலங்கைபற்றிய செவிவழிக் கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 – 362) முடிவுறுகிறது. இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்டன் கைமுனுவும் மகாசேனனும் வர்ணிக்கப்படுகிறார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகையை விபரிக்கின்றது.இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பவுத்ததேரரால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டன் கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).விஜயனின் வருகையோடுதான் இலங்கையின் வரலாறு தொடங்குகிறது என்பதில் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பிடிவாதமாக உள்ளார்கள்.
அதனை எண்பிக்க தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிர்வாணம் அடையு முன்னர் வீற்றிருந்த அரசகட்டிலில் இருந்தவாறு தேவர்களது அரசனும் புத்தசாசனத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை அழைத்து “லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக” எனக் கட்டளை இட்டார். (மகாவம்சம் – அத்தியாயம் V11, பக்கம் 32)
(Buddha, seated on a throne on which nibbana was achieved the great divine sage, addressed this celebrated injunction to Sakka, the king of gods and the divine protector of the sasana (the dhamma doctrine as taught by Buddha) and instructed him “One Vijaya, son of Sinhabahu, king of the land of Lala together with his 700 officers of state has landed on Lanka. O Lord of devas! My religion will be established in Lanka. On that account thoroughly protect together with his retinue, him and Lanka.” (Mahavamsa –Ch.V11, page 32)
இந்தப் புனைந்துரை பின்னர் எழுதப்பட்ட மதசார்பு சிங்கள வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் பவுத்த சடங்குகளிலும் (சூளவம்சம், புஜவாலியா, தூபவம்சா, இராஜவாலியா….) மீண்டும் மீண்டும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு வருகின்றன. இதனால் அவை இன்றைய சிங்கள – பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளன. சிங்கள அறிஞர்கள் இந்தக் கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் இலங்கையின் தொன்மை வரலாறாகச் சித்திரிதுள்ளனர்.
மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விபரமாக ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் nரியவரும்.
விஜயன் இலங்கைத் தீவில் காலடி எடுத்து வைத்த போது அங்கு பஞ்சஈஸ்வரங்கள் (அய்ந்து ஈஸ்வரங்கள்) இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அய்ந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்ப்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் அதனை விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.
இலங்கைத் தீவுக்கு புத்தபெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. முதல்முறை வந்தபோது ஆட்சியுரிமைபற்றித் தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்க அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டினார் என்று குறிப்பிடுகிறது.
மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.
இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.
புத்தர் இரண்டாம் முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவரது வீரர்களையும் பயம் கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் – தர்மம் – சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.
இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு வருகை செய்கின்றார். கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக மன்னன் மகோதரனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார்.
புத்தர் இலங்கைத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும். புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் அவர் செல்லவில்லை. இருந்தும் மகாவம்சம் புனைந்துள்ள கதையில் மறைந்திருக்கும் சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்களும் நாகர்களும் ஆவர்.
இலங்கையை இயக்கர்குல மன்னனான இராவணன் ஆண்டான் என்ற இதிகாசக் கதை இயக்கர்கள் இலங்கையில் வாழ்ந்ததை எண்பிக்கிறது.
இயக்கர்களை அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் நாக என்ற சொல்லை அடையாகக் கொண்ட பெயர்களும் (நாகநாதன, நாகலிங்கம், நாகமுத்து, நாகம்மா) இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளை மகாவம்சம் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்று சொல்லியிருக்கிறார். அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும். போர் இந்த மூவகை உயிர்களையும் கொல்கிறது.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பவுத்த மத தேரர்கள் ஆயுதப் போரை எப்படி ஆதரிக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தமிழர்களுக்கு எதிரான போரில் களம் செல்லும் படையினர் பவுத்த தேரர்களால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். போருக்குப் பயன்படுத்தப்படும் கொலைக் கருவிகளும் பவுத்த தேரர்களால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. படையினரின் பாதுகாப்புக்கு பிரித் ஓதி அவர்களது கையில் மஞ்சள் கயிறு கட்டப்படுகிறது. “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று நாள்தோறும் ஓதும் பவுத்ததேரர்களே இதனைச் செய்கிறார்கள்.
தமிழர்களுக்கு எதிரான போரை என்ன விலை கொடுத்தும் வெல்ல வேண்டும் என்று அஸ்கிரிய – மல்வத்தை பவுத்த மத பீடாதிபதிகள் குரல் கொடுக்கிறார்கள். ஏனைய ராமண்ணா, அமரபுர பவுத்தமத பீடங்களும் அஸ்கிரிய – மல்வத்தை மதபீடங்களின் பல்லவிக்கு அனுபல்லவி பாடுகின்றன.
பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முந்தி அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவன் நாகர் வம்சத்தைச் சேர்ந்தவன். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான்.
சிகல (பாளி மொழியில் சிங்கம்) என்ற சொல் முதன் முதலாக தீபவம்சம் என்ற நூலிலேயே (4–5 ஆம் நூற்றாண்டு) அதுவும் ஒரே ஒரு முறை குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவைக் குறிக்கவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் (5–6 ஆம் நூற்றாண்டு) இந்தச் சொல் இரண்டு முறையே குறிக்கப்படுகிறது.
கிறித்து பிறப்பதற்கு முந்திய காலப் பகுதியில் இலங்கையில் சிங்கள இனம் என்ற ஒரு இனம் இருக்கவில்லை. கிபி 4 ஆம் நூற்றாண்டிலேயே அப்படியான இனவுணர்வு தலைதூக்கியது. கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே கிட்டத்தட்ட இன்று நாம் காணும் சிங்கள மொழியும் அதன் எழுத்தும் தோற்றம் பெற்றது.
மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என அய்யத்துக்கு உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை (மாகம) அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோதபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவர்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்டன் கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்டன்’ என்ற அடை மொழி கொடுக்கப்பட்டது.
எனவே மகாவம்சத்தின் கதைநாயகனான துட்டன் கைமுனு (கிமு 101-77) தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான்.
இதனால் அவனும் எல்லாளனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்டன் கைமுனு பவுத்த சமயத்தவன். மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் எல்லாளன் – துட்டன் கைமுனுக்கு இடையிலான போரைத் தமிழர் – சிங்களவர் இடையிலான போராக வேண்டுமென்றே சித்திரித்து விட்டார். துட்டன் கைமுனு பவுத்தனாக இருந்தும் அவன் முருக வழிபாடு செய்பவனாக இருந்தான். எல்லாளன் மீது படையெடுத்துப் புறப்படு முன்னர் கதிர்காமக் கந்தனின் அருள் வேண்டி அவரை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மேலும் மகியங்கனை தொடங்கி அனராதபுரம் வரை ஆண்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களைக் கைமுனு போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது.
இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு ‘இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ என சூளுரைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் – அதிகாரம் 25)
துட்டன் கைமுனு எல்லாளன் மீது படையெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
(1) எல்லாளன்தான் அசேலனைக் கொன்று அனராதபுரத்தைக் கைப்பற்றி ஆண்டான். இந்த அசேலன் மூத்தசிவனின் மகனாவான். எனவே தந்தை வழியில் அவன் துட்டன் கைமுனுவின் பாட்டன் ஆவான்.
(2) அனுராதபுரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் முழு இலங்கைக்கும் மன்னன் ஆகவேண்டும் என்ற ஆசை.
துட்டன் கைமுனு – எல்லாளன் போரில் பவுத்தத்தை தழுவிய தமிழர்கள் துட்டன் கைமுனுவின் படையில் இருந்தார்கள். அதே போல் பவுத்தத்தைத் தழுவிய தமிழர்கள் எல்லாளன் படையிலும் இருந்தார்கள். எல்லாளனது படைத்தலைவன் நந்தமித்தன் என்பவனின் உடன்பிறப்பின் மகனான மித்தன் ஆவான். எனவே எல்லாளன் – துட்டன் கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போர் என மகாவம்ச ஆசிரியர் சித்திரிப்பது பொருந்தாது. ஆனால் இன்றைய சிங்களம் மகாவம்சத்தை முழுதாக விழுங்கித் தமிழர்களைத் தனது எதிரியாகப் பார்க்கிறது.
இன்று மகாவம்ச சிந்தனையே சிங்கள ஆட்சியாளர்களை வழி நடத்துகிறது. கைமுனுவின் தந்தை பவுத்தபிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து உருண்டையாக்கி துட்டன் கைமுனுவிடம் கொடுத்து சத்தியம் கேட்கிறார். அதாவது, தமிழர்களுடன் சண்டையிடாதே என்று. அந்த உணவினைத் தூக்கி வீசிய துட்டன் கைமுனு வேகமாகப் போய் படுக்கையில் குறண்டிக்கொண்டுப் படுக்கிறான்.
துட்டனின் தாயார் அவனிடத்தில் கேட்கிறார் கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாகப் படுக்கலாமே மகனே என்கிறாள். அதற்கு துட்டன் கைமுனு பின்வருமாறு கூறுகிறான்:
“மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்?”
ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் “வடக்கே தமிழர்களும் தெற்கே சமுத்திரமும் இருக்கும் போது, நான் எப்படி நிம்மதியாகப் படுக்கமுடியும் என்று திரித்துப் பாடப் புத்தகங்களில் திரிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கைக்கு மேலே என்று உள்ளதை உள்ளபடி கூறினால் தமிழர்கள் மலைப்பகுதியான கண்டிக்கும் மேலேயும் கிமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எண்பிக்கப்படுகிறது. அதனை மறைக்கவே வடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மாற்றிச் எழுதி வைத்துள்ளார்கள்.
வடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அதனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறும் வரலாறு இன்றுவரை பாடப் புத்ததங்களில் எழுதியிருப்பதன் நோக்கம் தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதானே!
கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவர்ணதீசன் “மகா கங்கைக்கு அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதும்” (“Let Tamils rule that side of the Maha Ganga (now Mahaweli Ganga) and the districts this side of the Maha Ganga are more than enough for us to rule.”) எனப் பதில் இறுத்தது கவனிக்கத்தக்கது.
கைமுனுவின் நினைவாகவே ஸ்ரீலங்கா படைப் பிரிவுகளுக்கு கைமுனு படைப்பிரிவு (Gemunu Regiment) சிங்க படைப்பிரிவு (Singha Regiment) எனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதே போல சிங்க, கஜபா, விஜயபாகு போன்ற சிங்களப்பெயர்களில் படைப்பிரிவுகள் இருக்கின்றன.
தமிழீழத் தேசியத் தலைவர் தனது 2005 ஆண்டு மாவீரர் உரையில் குறிப்பிட்டுள்ளது போல சிங்கள மக்கள் மகாவம்ச சிந்தனையில் மூழ்கிக் கிடப்பதால் அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்க முடியாது.
இந்த மகாவம்ச சிந்தனை காரணமாகவே தமிழர்களுக்கு எதிரான போரை என்ன விலை கொடுத்தும் வெல்ல வேண்டும் என்று அஸ்கிரிய – மல்வத்தை பவுத்த மத பீடாதிபதிகள் யுத்த சன்னதம் செய்கிறார்கள். ஏனைய ராமண்ணா, அமரபுர பவுத்தமத பீடங்களும் அஸ்கிரிய – மல்வத்தை மதபீடங்களின் பல்லவிக்கு அனுபல்லவி பாடுகின்றன.
துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக இனத்தவன் ஆவான்!
தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதே எமது நோக்கம். அதற்காகவே வன்னி மீது படையெடுத்து அதன் பெரும் பகுதியை பிடித்துள்ளோம். எமது நோக்கம் முழு இலங்கையையும் எமது இறையாண்மைக்குள் கொண்டு வருவதே. நாட்டின் எந்தப் பகுதியும் ஓரு குறிப்பிட்ட இனத்துக்குச் சொந்தமானதல்ல. தமிழர்களுக்கு ஒரு தாயகம் இருப்பதை நாம் நிராகரிக்கிறோம். அப்படி ஒரு தாயகம் வரலாற்றில் இருந்ததில்லை. அவர்கள் ஒரு தேசிய இனம் இல்லை. அவர்களுக்க தன்னாட்சி உரிமை இல்லை. அவர்களுக்குத் தனியாக ஒரு இராச்சியம் வரலாற்றில் இருந்ததில்லை.
சிங்களவர் பெரும்பான்மையாக (75 விழுக்காடு) இருப்பதால் இந்த நாட்டை ஆளும் உரிமை சிங்களவர்களுக்கே உண்டு. இந்தக் கருத்தியல் தீவிர சிங்கள – பவுத்த அறிவிப் பிழைப்பாளர்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு செப்தெம்பர் 23 அன்று கனடாவில் வெளிவரும் National Post என்ற நாளேட்டுக்கு செவ்வி கொடுத்த படைத்தளபதி சரத் பொன்சேகா இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
“I strongly believe that this country belongs to the Sinhalese but there are minority communities and we treat them like our people…We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country…We are also a strong nation … They can live in this country with us. But they must not try to, under the pretext of being a minority, demand undue things.”
“இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது. ஆனால் சிறுபான்மை சமூகங்களும் இருக்கின்றன. அவர்களை நாங்கள் எங்களைப் போலவே நடத்துகிறோம் ……….. நாங்கள்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள் – 75 விழுக்காடு – எனவே இந்தநாட்டைப் பாதுகாக்கும் உரிமை எங்களுக்குத்தான் உண்டு. அதனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்….நாங்கள் பலம்வாய்ந்த நாட்டை உடையவர்கள் …. அவர்கள் (சிறுபான்மையினர்) எங்களோடு இந்த நாட்டில் வாழலாம். ஆனால் அவர்கள் – சிறுபான்மை என்ற போர்வையில் – தேவைக்கு அதிகமானவற்றை கோர எத்தனிக்கக் கூடாது.”
சரத் பொன்சேகா போலவே சுற்றுச் சூழல் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சம்பிக இரணவக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
The Minister of the Environment, Champika Ranawaka, who belongs to the extremist Jathika Hela Urumaya group, went further and opined that “the Sinhalese are the only organic race of Sri Lanka. Other communities are all visitors to the country, whose arrival was never challenged out of the compassion of Buddhists … What is happening today is pure ingratitude on the part of these visitors.”
“சிங்கள இனம் மட்டுமே ஸ்ரீலங்காவின் ஒரே பூர்வீக இனமாகும். ஏனைய சமூகங்கள் இந்த நாட்டுக்கு வந்துள்ள விருந்தாளிகள் ஆவர். அவர்களது வருகையை நாம் பவுத்தர்களுக்குரிய இரக்கம் காரணமாக எதிர்ப்புக் காட்டாது விட்டு விட்டோம்……. இப்போது நடப்பது என்னவென்றால் அவர்கள் செய்நன்றி இல்லாது நடந்து கொள்கிறார்கள்.”
இப்படியான இனவாதக் கருத்துக்களை பல சிங்களத் தலைவர்கள் நீண்ட காலமாக கூறி வருகிறார்கள்.
அநகாரிக தர்மபாலர் என்பவர் சிங்கள இனத்தின் புகழை புதுப்பித்தவர் என்றும் பவுத்த மதத்தை மீள் எழுச்சிகொள்ளச் செய்தவர் என்றும் கொண்டாடப்படுகிறார். இவரது இயற் பெயர் டொன் டேவிட் ஹேவவிதாரண (Don David Hewawitharane – September 17th, 1864).
அநகாரிக தர்மபாலா சிங்கள மக்களை சிலாகித்து சொல்லும் போது “சிங்களவர் பழைய வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆரிய இனத்தின் இனிமையான, மென்மையான, மிருதுவான பிள்ளைகள்…..(The sweet, tender, gentle Aryan children of an ancient, historic race ……)
சரத் பொன்சேகாவின் கருத்து ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயினால் மறுக்கப்படவில்லை. அது போலவே அமைச்சரின் கூற்றும் மறுக்கப்படவில்லை. இதற்கான காரணத்தைக் கண்டு பிடிப்பதில் வில்லங்கம் இல்லை. இப்படியான சிந்தனையைத்தான் மகாவம்ச சிந்தனை எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். மகிந்த சிந்தனை அதன் மறு பதிப்பாகும்.
இப்போது இந்த மகாவம்ச சிந்தனை பற்றிய வரலாற்றுப் பக்கங்களை சிறிது திரும்பிப் பார்க்கலாம் என எண்ணுகிறேன்.
மகாவம்சம் ஒரு பவுத்த புராணம். அதனை பாலி மொழியில் கிபி அய்ந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாநாம தேரர் என்பவர் எழுதி வைத்துள்ளார். அதில் இலங்கையின் வரலாறு கற்பனை கலந்து பவுத்தமதத்தின் உயர்வுக்கும் பவுத்தர்களின் மகிழ்ச்சிக்கும் ஆக எழுதப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் வரலாறு கலிங்க தேசத்து விஜயனது வருகையோடு தொடங்குகிறது என மகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கதைநாயகனாக துட்ட கைமுனு சித்திரிக்கப்பட்டுள்ளான். சிங்கள அரசனான துட்ட கைமுனு அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனைப் போரில் வென்று ஸ்ரீலங்காவில் பவுத்த மதத்தைச் செழித்தோங்கச் செய்தான் என எழுதப்பட்டுள்ளது.
ஆனால் துட்ட கைமுனு காலத்தில் சிங்களவர் என்ற இனம் இருக்கவில்லை. சிங்களம் என்ற மொழியும் இருக்கவில்லை. துட்ட கைமுனு சிங்களவனும் அல்ல.
இராமாயணம் என்ற இதிகாசத்தில் இலங்கை லங்கா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது இலங்கையில் இயக்கர், அரக்கர், நாகர் என்போர் வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மகாவம்சமும் விஜயன் வருகைக்கு முன் இலங்கையில் இயக்கர், இராட்சதர் வாழ்ந்ததாகச் சொல்கிறது. விஜயன் இயக்கர் குல அரசியான குவேனியை மணந்ததாகக் குறிப்பிடுகிறது. புத்தர் இலங்கைக்கு மும்முறை வருகை தந்ததாகச் சொல்கிறது.
முதல்முறை வந்த போது மகியங்கனையை அண்டி வாழந்த இயக்கர், இராட்சதர்களை பவுத்த மதத்துக்கு மாற்றினார் எனக் கூறுகிறது. எஞ்சிய இருமுறையும் இலங்கையின் வட பகுதியையும் மேற்குப் பகுதியையும் (இன்று களனி என்று அழைக்கப்படும் கல்யாணி) ஆண்ட நாக மன்னர்களுக்கு இடையே நடைபெற்ற அரியணைச் சண்டையைத் தீர்த்துவைக்க வருகை தந்ததாக மகாவம்சம் சொல்கிறது. ஆனால் புத்தர் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை.
அய்ந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாவம்ச ஆசிரியர் தனது காலத்தில் தமிழ் பேசும் இந்துக்களையும் பவுத்த மதத்தைத் தழுவிக் கொண்டு புதிய மொழியைப் (சிங்களம்) பேசுகிறவர்களை வைத்துக் கொண்டு விஜயன் தனது 700 தோழர்களுடன் வங்காள தேசத்தில் இருந்து வந்ததாக ஒரு கதையைப் புனைந்து சிங்களவர்கள் தனியான ஒரு இனம் என நிறுவ முயன்றார்.
அய்ந்தாம் நூற்றாண்டில் கூட ஒரு புராணக் கதையை எழுதுவதற்குரிய வளர்ச்சியை சிங்கள மொழி பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால்தான் மகாவம்சத்தை பாலி மொழியில் மகாநாம தேரர் எழுதினார் என்பது பெறப்படும்.
அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு முத்து சிவன் (கிபி 307 – 247) என்ற அரசன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவனது தந்தையின் பெயர் பாண்டுகாபன்.
முத்து சிவனின் மறைவுக்குப் பின்னர் 247 இல் அவனது மகனான தேவநம்பிய தீசன் அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்திலேயே அசோகப் பேரரசன் அனுப்பி வைத்த மகிந்த தேரரும் சங்கமித்தையும் இலங்கை வந்து இந்துவான தேவநம்பிய தீசனை பவுத்த மதத்துக்கு மதம் மாற்றம் செய்தார்கள். இந்த மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் பல விகாரைகளைக் கட்டினான்.
தேவநம்பிய தீசன் மறைந்த பின்னர் அவனது தம்பியான மகா நாகன் முறைப்படி ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனை நஞ்சு கொடுத்த கொல்ல நினைத்தான் என்ற அய்யத்துக்கு உள்ளானான். அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளைச் சந்திக்க விரும்பாத மகா நாகன் தனது மனைவி அனுரா தேவியோடு உருகுணவுக்குத் தப்பி ஓடினான்.
தேவநம்பிய தீசனின் எஞ்சிய உடன்பிறப்புக்கள் – உத்தியன், மகா சிவன் மற்றும் சூரத் தீசன் – ஒருவர் பின் ஒருவராக ஆட்சி (கிபி 207 – 177) செய்தார்கள்.
சூரத் தீசன் ஆட்சி செய்யும் போது குதிரை வாணிகம் செய்ய வந்த சேனன், குத்தியன் என்ற இரு தமிழ் வணிகர்கள் சூரத் தீசனை கொலை செய்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்த இருவருமே தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வந்து ஆட்சியைக்; கைப்பற்றி அனுராதபரத்தை ஆண்ட தமிழர்கள் (கிபி 187 – 177) என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சேனன், குத்தியன் இருவரையும் அடுத்து தேவநம்பிய தீசனனின் இளவலான அசேலன் (கிபி 155 – 145) பட்டத்துக்கு வந்தான்.
பின்னர் சேனன், குத்தியன் வழியில் எல்லாளன் என்ற சோழ இளவரசன் இலங்கை வந்து அசேலனைக் கொன்று விட்டு அனுராதபுரத்தில் இருந்து 44 ஆண்டுகள் (கிபி 145 – 101) நீதி தவறாத – செங்கோல் வளையாது – ஆட்சி செய்தான்.
அனுராதபுரத்தை விட்டு உருகுணைக்குத் தப்பியோடிய தேவநம்பிய தீசனின் தம்பியான மகா நாகன் அங்கு மாகம என்ற இராச்சியத்தை உருவாக்கி அதனை ஆண்டு வந்தான். தேவநம்பிய தீசனைப் போன்றே இவனும் ஒரு பவுத்தனாவான். உருகுணவில் வாழ்ந்த பவுத்தர்கள் வழிபடுவதற்கு கிரி விகாரை, சந்தகிரி விகாரை, மாணிக்க தூபி மற்றும் குடாரப்பு விகாரை ஆகியவற்றைக் கட்டுவித்தான்.
நாக மன்னர்களான தேவநம்பிய தீசனும் அவனது வழித் தோன்றல்களும் கட்டுவித்த விகாரைகள் நாக விகாரைகள் என அழைக்கப்பட்டன.
மகா நாகனுக்குப் பின்னர் அவனது மகன் யாத்த தீசன் அரியணை ஏறினான்.
பேராசிரியர் மென்டிஸ் ரோகணதீர (Professor Mendi Rohanadheera) அவர்களின் கூற்றுப்படி துறைமுகப் பட்டினங்களான கிரிந்தை, கோதவாயா, ரேகவா, பெறகனியா, தங்காலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகியவற்றில் பாண்டி நாட்டைச் சேர்ந்த தமிழ்மக்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்.
யாத்த தீசனுக்குப் பின்னர் அவனது தம்பியான கோத்தபாய ஆட்சிக்கு வந்தான். அவனை அடுத்து அவனது மகனான காக்கைவர்ண தீசன் ஆட்சிக்கு வந்தான். காக்கையின் நிறத்தை ஒத்தவன் என்ற பொருளில் உள்ள தமிழ்ப் பெயரை மகாவம்ச ஆசிரியர் காகன் தீசன் எனப் பெயர் மாற்றம் செய்து விட்டார்!
காக்கைவர்ண தீசன் அல்லது காவன் தீசன் கல்யாணியை (களனி) ஆண்ட நாக அரசன் மகளான விகாரமா தேவியை மணம் புரிந்தான். இவள் உத்தியனின் நேரடிப் பரம்பரையைச் சேர்ந்தவள் ஆவாள்.
காக்கைவர்ண தீசன் – விகாரமா தேவி இருவருக்கும் இரண்டு ஆண் மகவுகள் பிறந்தன. கைமுனு (கிமு 101 – 77) மற்றும் சாத்த தீசன் என்பதே பெற்றோர்கள் அவர்களுக்குச் சூட்டிய பெயர்கள் ஆகும். கைமுனு தந்தை சொல்லை மதிக்கவில்லை என்பதாலேயே அவன் துட்ட கைமுனு என அழைக்கப்பட்டான்.
எனவே மகாவம்சத்தின் கதைநாயகன் துட்ட கைமுனு அதன் கதைப்படியே தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக இனத்தவன் ஆவான் என்பதும் அவன் சிங்களவன் அல்லன் என்பதும் வெள்ளிடமலையாகத் தெரிகிறது!
விஜயன் மகாநாம தேரரால் உருவாக்கட்பட்ட கற்பனைப் பாத்திரம்,
“போர் என்பது வேறுவழிகளில் முன்னெடுக்கப்படும் அரசியல்” (”War is an extension of politics by other means”) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய தமிழர்-சிங்களவருக்கு இடையிலான ஈழப்போரை இலங்கைத் தீவு யாருக்குச் சொந்தம் என்ற அரசியல் கேள்விக்கு வேறு வழிகளில் பதில் காண முனையும் முயற்சி என்று வருணிப்பதில் தவறில்லை என்றே சொல்லலாம்.தமிழ்மக்களும் சிங்கள மக்களும் இலங்கைத்தீவின் மக்கள். எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கும் தமிழர்களுக்கும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்களுக்கும் நாட்டில் ஒத்த உரிமை, சொந்தம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் இனச் சிக்கல் இருக்காது.
வடக்கும் – கிழக்கும் தமிழ்மக்களது தாயக பூமி, தெற்கும் மேற்கும் மத்தியும் சிங்களமக்களது தாயக பூமி என்ற உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டால் ஒரு தீவில் இரண்டு நாடுகள் இரண்டு மக்கள் சமாதானமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த யதார்த்தத்தை சிங்கள – பவுத்த அறிவுப் பிழைப்பாளர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதையோ அவர்களுக்கும் சிங்களவர் போன்றே ஆட்சியுரிமையில் பங்கு உண்டு என்பதையோ இந்த சிங்கள – பவுத்த தீவிரவாதிகள் ஒத்துக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
சிங்கள – பவுத்த தீவிரவாதிகள் தங்கள் வாதத்துக்குத் துணையாக மகாவம்சம், சூழவம்சம் போன்ற பவுத்த இதிகாசங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். சிங்கள – பவுத்த தேசியத்தின் முன்னோடியெனக் கொண்டாடப்படும் அநகாரிக தர்மபாலர் போன்ற சிங்கள – பவுத்த தேசியவாதிகள் எழுதியதையும் பேசியதையும் மேற்கோள்களாக எடுத்துக் காடடுகின்றனர்.
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ். டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ. குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்று என்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள்.
டி.பி. விஜயதுங்க சிங்களவர்களை மரத்துக்கும் தமிழர்களை அம்மரத்தைச் சுற்றிப் படரும் கொடிக்கும் அந்தக் கொடிக்கு மரத்துக்கு அப்பால் வாழ்வு இல்லை (D.B.Wijetunga compared the Tamils to creepers clinging on to a Sinhalese tree and they had no existence beyond that tree) என வருணித்தார்.
சிங்கள – பவுத்த தீவிரவாதிகளில் ஒருவரான சனாதிபதி சந்திரிகா “தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்த (ஸ்ரீலங்கா) நாட்டைச் சேராதவர்கள் எப்படி தனிநாடு கோரமுடியும்?” என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். அதற்கு முன்னர் அனுராதபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும், நாடும் ஒன்று மக்களும் ஒன்று என்று பேசியிருந்தது நினைவு கூரத்தக்கது.
பாலி மொழியில் சிகல (Sihala) என்ற சொல் சிங்கத்தைக் குறிப்பதாகும். இந்தச் சொல் முதல் முறையாக தீபவம்சத்தில் (4 – 5 நூற்றாண்டு) குறிப்பிடப்படுகிறது. அதுவும் ஒரேயொரு முறை மட்டும் குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவு சிங்கத்தின் காரணமாக சிகல என அழைக்கப்படுகிறது (லங்கா தீபோ அயம் அகு சிகென சிகலய்தி). (தீபவம்ச – அதிகாரம் 9, 6). மகாவம்சத்தில் சிகல என்ற சொல் இருமுறை மட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
மகாவம்சம் முதல் அய்ந்து இயல்களில் புத்தரின் மூன்று வருகை பற்றியும் பவுத்தமதம் பற்றியுமே கூறுகின்றது. ஆறாவது இயல் “விஜயன் வருகை” என அமைந்துள்ளது. தொடர்ந்து அரசர்கள் வரலாறும் பவுத்தசமய வளர்ச்சியும் கூறப்படுகின்றன. இந்நூலில் விஜயன் முதல் மகாசேனன் வரை (கிமு 543 – கிபி 302) பதினான்கு அரசர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
முதலாவது இயலில் மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்) ஆகியோரைக் குறிப்பிடுகிறது. திராவிட இனத்தவர் இயக்கர், இராட்சதர், நாகர், புலிந்தர் என அழைக்கப் படுகின்றனர். விஜயன் இயக்கர் மரபைச் சேர்ந்த இளவரசி குவன்னா (குவேனி) என்பவளை மணந்து அரசனானான். பின் தமிழகப் பாண்டிய மன்னனுடைய மகளை மணந்தான். குவேனி கொல்லப்பட்டாள். புத்தர் நாகதீபம் வந்து பவுத்தக் கோட்பாட்டைப் பரப்பியதும் கூறப்படுகின்றது. நாகதீபம் இலங்கையின் வடமேற்குப் பகுதி என வரலாற்று ஆசிரியர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மகாவம்சத்தின் காவிய நாயகன் துட்டகைமுனு (கி.மு. 164 – 140) ஈழத்துத் தமிழ் அரசனான எல்லாளனை (கி.மு.204 – 164) வென்ற செய்தி முதல் இயலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
“துட்டகாமணி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது இந்த இடத்திற் தங்கியிருக்க நேரிட்டது.”
தமிழில் இலங்கை ஈழம் என சங்க காலம் முதல் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஈழம் என்ற பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. அக் காலத்தில் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவற்றுள் ஒன்று வணிகத் தொடர்பு. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையில் ‘ஈழத் துணவும் காளகத் தாக்கமும்’ என்ற வரி உள்ளது.
மேலும் ஈழத்துப் பூதன்தேவனார் என்ற சங்கப் புலவர் பாடிய ஏழு பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய சங்க நூல்களில் காணப்படுகிறது.
ஈழத்தில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள்மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இவ்வாறு வந்த தமிழர்களுடன் சிங்களவர் நெருங்கி வாழ்ந்த காரணத்தாலேயே சிங்களமொழியில் தமிழ்ச் சொற்கள் பல காணப்படுகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களின் அடிப்படையில் நோக்கும்போது இக்கருத்து தவறானது என்பது தெளிவாகும்.
இராமாயணத்தில் (கிமு 800) இலங்கைத் தீவு லங்கா என அழைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் சிங்களர் என்ற ஒரு இனம் இருக்கவில்லை. கிபி 4 – 5 ஆம் நூற்றண்டுகளில் சிங்களமொழி என அழைக்கப்பட்ட மொழி தீபவம்சம், மகாவம்சம் என்ற புராணங்களை எழுதுவதற்குத் தகுதியான மொழி எனக் கொள்ளப்படவில்லை.
மகாவம்சம் 6 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்ததேரர் ஒருவரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் (Epic) எனக் கண்டோம். மகாவம்சம் என்றால் “பெருங்குடியினர்” என்பது பொருளாகும். இது இலங்கைபற்றிய கர்ணபரம்பரை கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334- 362) முடிவுறுகிறது. இதன்; இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற புத்ததேரலால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டகைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். ( கி.பி. 1137-1186).
மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் தனது காலத்தில் (5 ஆம் நூற்றாண்டில்) இருமொழி பேசிய மக்கள் குழுக்களைப் பார்த்தார். இந்துக்கள் தமிழைப்; பேசினார்கள். பவுத்தத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் புதிய மொழியான சிங்களத்தைப் பேசினார்கள். எனவே பவுத்தர்கள் வேறுபட்ட இனம் என்பதை நிலைநாட்ட லாலா நாட்டிலிருந்து (இன்றைய கலிங்கம் அல்லது வங்காளம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக் கரையை வந்தடைந்ததாக ஒரு கற்பனைக் கதையைப் புனைந்தார்.
நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் ஆகியோர் முன்குறிப்பட்டது போல் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்தவர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.
நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் சிங்களவரே ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும்.
விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள அய்ந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம், இலங்கையின் தென்பகுதியில தொண்டீசுவரமும் இருந்தன. தொண்டீசுவரம் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட கோயிலை அவ்விடத்தைச் (மாத்தறை) சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றி வழிபடுகின்றனர்.
திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோயில்களாகும்.
மேல்குறிப்பிட்ட அய்ந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌலீசுவரர் போன்ற சைவசமய கோயில்களும் நடுவில் சிவனொளிபாத மலையும் இருந்தன.
மேற்சொன்னவாறு திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் தேவாரப் பாடல்பெற்ற தலங்களாகும். சம்பந்தர் ஈழம் சென்று பதிகம் (ஒவ்வொன்றும் பத்துப்பாடல்கள் கொண்டவை) பாடினாரா அல்லது தமிழ்நாட்டில் இருந்தவாறே பாடினாரா என்பது புலப்படவில்லை. அவர் பாடிய தேவாரம் பக்தி காலத்தில் பவுத்தம் மீதும் சமணம் மீதும் சைவம் காட்டிய காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. இந்தப் பாடலை விடக் கடுமையான பாடல்களை சம்பந்தர் பாடியிருக்கிறார்! சைவம் பவுத்தம் மீது தொடுத்த தாக்குதல் காரணமாக பவுத்த தமிழர்கள் இலங்கைக்கு ஓடித் தப்பினார்கள். இவர்கள் நாளைடைவில் சிங்களவர்களாக மாறினார்கள்.
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீசசுசரம் அடைமின்னே!புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பவுத்தர்கள் புறம் பேசுவதையே கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சில சமணர் ஏமாற்று வேலையும் செய்கிறார்கள். அவர்கள் நின்று கொண்டே உண்பவர்கள். அவர்கள் பேச்சை யாரும் கேட்கவே கேட்காதீர்கள்! மத யானையைத் தோலுரித்துப் போர்த்தியவர் ஈசன். அவர் மாதோட்ட நகரிலே (இன்றைய மன்னார்) பாலாவியின் கரையில் கேதீச்சுரத்தில் அருள் செய்கின்றார். அங்கு சென்று அடையுங்கள்!
சுந்தரமூர்த்தியும் திருக்கேதீசுவரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவன் மீது தேவாரம் பாடியிருக்கிறார். ஆனால் சம்பந்தர் காலத்தில் இருந்தது போல் பவுத்த வெறுப்பை அவர் பாடலில் காணமுடியவில்லை. அவர் காலத்தில் சமயப் போர் ஓய்ந்துவிட்டது போலும்.
மூவர் என இருவர் எனமுக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்கேதீச்சரத் தானே! - முத்தொழில் என்றாலும் அதில் நீ உள்ளாய்! இரு தெய்வங்கள் என்றாலும் அதில் நீ உள்ளாய்! முக்கண்ணப்பா!மாம்பழங்கள் தூங்கும் சோலைகள் நிறைய உள்ள மாதோட்டம்!அங்கு பாவங்களைப் போக்க வல்ல நெறியாளர்கள் பலபேர் பயில்கிறார்கள், புழங்குகிறார்கள்.
பாலாவியின் கரை மேல் இருக்கும் தேவரே! என்னை ஆட்கொள்வீர்!
சம்பந்தர் திருகோணமாமலை அமர்ந்த சிவனைச் சிறப்பித்துப் பாடும் தேவாரம்.
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த, கோண மாமலை அமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான், கருத்துடை ஞான சம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை ஈர் ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல் வினை அடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.குற்றம் இல்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஊர். ஒலிக்கும் கடல் சூழ்ந்த ஊர். கோணேசுவரம் என்னும் இந்தத் திருக்கோணமலை. அங்கு அமர்ந்துள்ள சிவ பெருமானை, கற்ற ஞானமும் கேள்வி ஞானமும் கொண்ட இருவருமே வந்து வணங்குகிறார்கள்.
அவர்களின் தலைவனான காழியர் கோன் ஞானசம்பந்தன் என்னும் நான், செந்தமிழில் பதிகம் பாடினேன். கோணமாமலை என்பது செந்தமிழ் மலை! அந்த மலை மீதான இப்பதிகத்தை உரைப்பவர், கேட்பவர் என்று அத்தனை பேரும் உயர்வு காண்பார்கள்! அவர்களுடைய சுற்றமும் நலம் பெறும்! தொல்வினை நீங்கப் பெறுவர். பொலிவுடன் விளங்குவார்கள்!
இன்று கோணேசுவரத்தின் அடிவாரத்தில் பெரிய பவுத்த விகாரையும் சிங்களப் படை முகாமும் உள்ளன. அவற்றைத் தாண்டியே மலையில் உள்ள கோயிலுக்கு அடியார்கள் செல்ல வேண்டும்.
- எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்ட வேண்டும் என்பதே புத்தரின் போதனையாகும்.சிங்கள மொழியில் நாட்டையும் இனத்தையும் குறிக்க ஜாதிய என்ற ஒரு சொல்லே பயன்படுத்தப்படுகிறது.சிங்கள நாட்டை சிங்கள – பவுத்தர்களே ஆள வேண்டும் என்பது அநாகரிக தர்மபாலர் முன்வைத்த முழக்கமாகும். சிங்கள கிறித்தவர்களுக்குக் கூட அந்த உரிமை மறுக்கப்படுகிறது. தமிழர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம் வரலாறு சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் அய்யாயிரம் ஆண்டுகள் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இனப் போருக்கும் இனமுரண்பாட்டுக்கம் அடிப்படைக் காரணம் ஆகும்.
1985 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சிங்கள இராணவ தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பின்வரும் பாடல் பாடப்பெற்றது.
சிங்கக் கொடியின் மீது ஆணை!
சிங்களவரின் வெண்குடையின் கீழ்
மூன்று சிங்களப் பிரதேசத்தையும் கொணர்வோம்!
சிங்கக் கொடியின் மீது ஆணை!
சிங்களவரின் வெண்குடைக்கீழ்
சிங்களவரின் அமைதியைப் பாதுகாப்போம்!
இவ்வுடல் நூற்றாண்டு காலம் வாழ்வது ஏன்?
நம் இனம் காக்கப்படுவதற்காகவே!
எல்லோரும் ஒளித்தொளித்து வாழ்வது எதற்காக
நம் பூமி சீரழிந்து போய்விடும் இக்காலத்தில்?
சிங்கக் கொடியின் மீது ஆணை!
நாம் ஏன் சுகங்களை அனுபவிக்க வேண்டும்?
நமது நாடு எதிரியின் வாயால் விழுங்கப்படும் போது?
ஞாயிறு, திங்கள் வணங்கும்
நமது பூமியை, நாட்டைப் பாதுகாப்போம்
சிங்கக் கொடியின் மீது ஆணை!இந்தப் பாடலில் சிங்கள என்ற சொல்லுக்கு ஜாதிய என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது. இங்கு மூன்று பிரதேசம் என்பது உறுகுணை, மாயரட்டை, இராஜரட்டை என்ற மூன்று நிலப்பரப்பையும் அதாவது முழு இலங்கையும் சிங்களவருக்குச் சொந்தம் என இராணுவம் சொல்கிறது.
தமிழர்களுக்கு எதிரான போரில் களம் செல்லும் படையினர் பவுத்த தேரர்களால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். போருக்குப் பயன்படுத்தப்படும் கொலைக் கருவிகளும் பவுத்த தேரர்களால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. படையினரின் பாதுகாப்புக்கு பிரித் ஓதி அவர்களது கையில் மஞ்சள் கயிறு கட்டப்படுகிறது.
“புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று நாள்தோறும் ஓதும் பவுத்ததேரர்களே இப்படிப் போருக்கு சாமரம் வீசுகிறார்கள்.
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும். போரில் இந்த மூவகை உயிர்களும் கொல்லப்படுகின்றன.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பவுத்த மத தேரர்கள் ஆயுதப் போரை எப்படி ஆதரிக்கலாம் எனறு கேட்கலாம். அதற்கு விடை ஸ்ரீலங்காவில் பவுத்தம் சிங்கள – பவுத்தர்களால் திரிபுபடுத்தப்பட்டுவிட்டது.
பவுத்த மதத்தின் மூலக் கோட்பாடுகள் சிதைக்கப்பட்டுவிட்டன.ஸ்ரீலங்காவில் காணப்படும் சிங்கள – பவுத்த மதத்தை வைத்துப் பவுத்த மதத்தை நாம் எடை போடக்கூடாது. ஸ்ரீலங்காவில் பவுத்தம் அரசியல் மயப்படுத்தப் பட்டுவிட்டது. ஆட்சியைப் பிடிக்க அது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
புத்தரின் உண்மையான போதனைகள் என்ன? அவரது வரலாறு என்ன?
புத்தரது வாழ்க்கை வரலாறு எல்லோரும் அறிந்ததே. ஆதலால் அதனை இங்கு விரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
கிமு 6 ஆம் நூற்றாண்டில் கோசலம், மகதம் என்ற இரண்டு பேரரசுகள் வட இந்தியாவில் செல்வச் செழிப்புடன் விளங்கின. இந்தப் பேரரசுகளின் கீழ் பலம் வாய்ந்த குறுநில மன்னர்கள் வௌ;வேறு பகுதிகளை ஆட்சி செய்தனர்.
கோசலத்துக்கு சிராவஸ்தியும் மகதத்துக்கு இராசகிருகமும் தலைநகர்களாக விளங்கின.
சாக்கிய மரபைச் சேர்ந்த சுத்தோதனன் கபிலவஸ்துக்கு அரசனாக இருந்தான். இவனுக்கு இரண்டு மனைவியர். மூத்தவளாகிய மாயாதேவிக்குப் பிறந்தவரே புத்தர் ஆவார். அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் சித்தார்த்தர் என்பதாகும்.
அவரது பிறப்பைப் பற்றிப் பிற்காலத்தோர் பல புராணப் புளுகுக் கதைகளையும் ஜாதகக் கதைகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
சித்தார்த்தர் பிறந்த அய்ந்தாவது நாள் அவருக்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. நூற்றியெட்டுப் பிராமணர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர் பிறந்த எழாவது நாள் தாயாரான மாயாதேவி இறந்து போனார். அதன்பின் சுத்தோதனனின் இரண்டாவது அரசியார் இளவரசரை வளர்த்துவந்தார். இளவரசர் அரசர்களுக்குரிய செல்வச் செழிப்போடு அரண்மனையில் செல்லமாக வளர்க்கப்பட்டார்.
பதினான்கு வயதில் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. அவரது அரசியின் பெயர் யசோதரை. குழந்தைபெயர் இராகுலன். இராகுலன் என்றால் “பாசம்” என்று பாலி மொழியில் பொருள்.
சித்தார்த்தருக்கு 29 வயது நடக்கும்போது ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே தேரில் சென்றார்.
வீதியில் ஒரு கூன்விழுந்து எலும்பும் தோலுமாகக் காட்சி தந்த ஒரு வயோதிபரை அவர் காணநேரிட்டது. ‘இவர் ஏன் இப்படி கூன்விழுந்து நடக்க முடியாது ஆகிவிட்டார்?” என சித்தார்த்தர் தேர்ப்பாகனைக் கேட்டார். அதற்கு அவன் “இவர் ஒரு வயோதிபர். எல்லா மனிதர்களும் பிற்காலத்தில் இப்படி மூப்பு அடைகிறார்கள். அதுதான் இயற்கை நியதி”என்றான். அரண்மனை திரும்பிய சித்தார்த்தர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
இன்னொரு நாள் ஒரு நோயாளி வீதியோரத்தில் வீழ்ந்து கிடக்கக் கண்டார். இதைக் கண்ட சித்தார்த்தர் கவலைப் பட்டார். அதனைப் பார்த்த தேர்ச்சாரதி ‘இவன் ஒரு நோயாளி. நோய் எல்லா மனிதரையும் பீடிக்கிறது” என விளக்கம் அளித்தான்.
இன்னொரு நாள் ஒரு பிரேத ஊர்வலம் போவதைக் கண்டார். பிறந்த மனிதர்கள் ஏன் இறக்க வேண்டும் என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது.
கடைசியாக ஒரு மஞ்சள் அங்கி அணிந்த ஒரு துறவியைக் காணநேரிட்டது. அந்தத் துறவியின் முகத்தில் அமைதியும் சாந்தமும் இனம் தெரியாத மகிழ்ச்சியும் படர்ந்திருப்பதைப் பார்த்தார்.
எனவே அமைதி, சாந்தம் இவற்றின் மத்தியில் எப்படி உலகில் மூப்பு, பிணி காணப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவலில் ஒரு நாள் நள்ளிரவில் கைப்பிடித்த மனைவியையும் குழந்தையையும் அரச போகத்தையும் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறினார்.
துறவறத்தை மேற்கொண்ட சித்தார்த்தர் சன்னியாசி கோலத்தில் காடு, மேடு, ஊர் என்று அலைந்தார்.
சித்தார்த்தரின் காலத்தில் வட இந்தியாவில் பல சமயப் பிரிவுகள் இருந்தன. வேத சமயம் இருந்தது. கருத்து முதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் என்ற தத்துவவாதிகள் இருந்தார்கள். அவர்களில் சமணர் முக்கியமானவர்கள். அவர்கள் நியதிக்கு முதலிடம் கொடுத்தார்கள். எல்லாம் நியதிப் பயன் என்றார்கள்.
சமணர்கள் செல்வாக்கோடு இருந்தார்கள். சமணம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை உடைய சமயம். பல் விளக்குவதால் பல்லில் உள்ள நுண்கிருமிகள் இறக்க நேரிடும் என்பதால் பல் விளக்குவதை சமணர் தவிர்த்தார்கள். நடனம், இசை போன்ற கலைகளை வெறுத்தார்கள். பெண்கள் மோட்சத்துக்கு தடையாக இருக்கிறார்கள் என நம்பினார்கள். இந்த நம்பிக்கைகள் கலை வெறுப்பு பெண் வெறுப்பாக மாறியது.
கடவுள் நம்பிக்கையில்லாத சமணர் எல்லாவற்றிலும் ஆன்மா உண்டு என்று நம்பினார்கள். உருவத்துக்கு ஏற்றவாறு சிறிய எறும்பில் சிறிய ஆன்மாவும் பெரிய யானையில் பெரிய ஆன்மாவும் உண்டென்றார்கள்.
வைதீக சமயத்தவர் வேதங்களை ஓதினார்கள். யாகம் செய்தார்கள். குதிரை, ஆடு, மாடு, உடும்பு போன்ற விலங்குகளை அந்த யாக குண்டங்களில் போட்டுத் தேவர்களுக்கு ஆகுதி செய்தார்கள். அவற்றின் மாமிசத்தை உண்டார்கள். இந்த உயிர்க் கொலையை சமணர்கள் எதிர்த்தார்கள்.
பல குழுக்கள், பல சமயப் பிரிவுகள் இருந்தாலும் எல்லோரும் பொதுவான சொற்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மோட்சம் அல்லது நிர்வாணம். ஆன்மா அல்லது உயிர். புத்தம் அல்லது ஞானம், தர்மம் அல்லது ஒழுக்கம், யோகம் மற்றும் கர்மம்.
சித்தார்த்தர் ஆச்சிரமங்களில் வாழ்ந்த பல முனிவர்களை அணுகினார். தனது மனதைக் குடைந்து கொண்டிருந்த அய்யங்களுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்டார். விளக்கம் திருப்தியளிக்காத போது வேறு ஆச்சிரமங்களில் வாழ்ந்த முனிவர்களைத் தேடி அலைந்தார்.
உடலை வருத்திக் கடுமையான விரதங்களை அனுட்டித்தால் தவம் கைகூடும் என்றும் அதன் பேறாக இகபரம் இரண்டிலும் சித்தி பெறலாம் என்றும் கூறிய பார்க்கவ முனிவரது ஆச்சிரமத்தில் சேர்ந்து தவமுறைகளை மிகவும் சிரத்தையோடு பயின்றார். உண்ணா நோன்பு நோற்றார். அதனால் எலும்பும் தோலும் ஆகி சாவின் விளிம்புவரை போனார்.
புத்தர் போதித்த நான்கு வாய்மைகள் எட்டுவித நெறிகள்.
அறிவியலாளர்களின் வரையறைகளின் படி, மதம் என்றால் அதற்கு மூன்று அடிப்படைக் கொள்கைகள் இருக்க வேண்டும்.
1) மதம் அறிவியலோடு பொருந்துவதாய் இருக்க வேண்டும்.
2) ஒழுக்கத்தை தன் அடிப்படையாகவும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை தனது கொள்கைகளாகவும் கொண்டிருக்க வேண்டும்.
3) வறுமையை நியாயப்படுத்தவோ, புனிதப்படுத்தவோ கூடாது.
பவுத்தம் இவற்றையே தனது அடிப்படையாக வலியுறுத்துகிறது. புத்தர் இவற்றையே போதித்திருக்கிறார். மனிதர்களின் மீதான பரிவும் அன்புமே அவரிடம் பெருகிக் கிடக்கிறது.
புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய் கருதினார். ஏனெனில் கடவுள் நம்பிக்கை பூசையிலும் பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் – பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர், பூசாரி, குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் சம நோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது.
ஆனால் சராசரி மனிதர்களுக்கு – பாமரமக்களுக்கு – கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. நடக்க முடியாதவனுக்கு ஊன்றுகோல் போல் தன்னம்பிக்கை இல்லாவர்களுக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. சிங்கள பவுத்தர்கள் இந்துக் கடவுளர்களை, குறிப்பாக கதிர்காமக் கந்தனை, வழிபடுவதற்கு அதுவே காரணம்.
பழைய பவுத்தமதம் ‘ஹீனயானம்’, ‘மஹாயானம்’ என்ற இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன. பின்னர் அதிலிருந்து பல்வேறு பிரிவுகள் தோன்றின. இவற்றைத்தவிர, திபெத்தில் பின்பற்றப்படும் பிரிவுக்கு வஜ்ரயானா என்று பெயர்.
பிரிவுகள்பல இருந்தாலும் அனைத்துப் பிரிவுகளும் புத்தரின் மூல போதனகளையே பின்பற்றுகின்றன.
புத்தரின் மூல போதனைகள் மிகவும் எளிதானவை. உலகில் நான்கு வாய்மைகள் உண்டு. அவற்றை அறிந்து அதில் இருந்து விடுபட அட்டாங்க மார்க்கத்தை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டும் அப்படி அவன் அட்டாங்க மார்க்கத்தை கடைப்பிடிப்பானேயானால் அவன் மறுபிறப்பை அறுத்து நிர்வாணம் அல்லது வீடுபேறு அடைவான். இதுதான் பவுத்த மதத்தின் அத்திவாரம்.
நான்கு வாய்மைகள் ஆவன –1. துன்பம்.
வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது. நோய்கள் துன்பத்தைத் தருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் போன்ற எட்டுவகையான துக்கம் துன்பத்தைத் தருகின்றன. கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் அய்ம்புலன்களினாலும் துன்பம் ஏற்படுகிறது.
2. துன்ப காரணம்
ஆசையே துன்பங்களுக்குக் காரணம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பொழுது துன்பம் ஏற்படுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும் நிலையான இன்பம் கிடைப்பதில்லை. மேலும் மேலும் ஆசைகள் பெருகவே அது வழி வகுக்கிறது.
3. துன்ப நீக்கம்
அறியாமையாகிய அஞ்ஞானத்தை ஒழிப்பதும், ஆசை, அவா முதலிய பற்றுக்களை நீக்குவதும் துன்ப நீக்கமாகும். துன்பங்களைத் தடுக்கவும் பேரின்பம் கிட்டவும் வழி உண்டு. தேவையில்லாத ஆசைகளை விட்டொதுக்கி, பொறுமையுடன் சிக்கல்களை எதிர்கொண்டு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் அற்று, இன்றைய பொழுதில் வாழ்ந்தோமானால், முழுமையுடன் வாழ முடியும். நிருவாணம் என்னும் பேரின்ப நிலையை எட்ட முடியும்.
புத்தர் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் மகானென்றோ, அல்லது கடவுளை வணங்குவதால் துன்பங்கள் தொலையும் என்றோ சொன்னதில்லை. ஒவ்வொருவரின் துன்பங்களையும் அவரவராலேயே போக்கிக்கொள்ள முடியும்.
4. துன்பம் நீக்கும் வழி
எட்டுவித உயர்ந்த வழிகளாகிய அஷ்டாங்க மார்க்கத்தைக் கடைப்பிடித்து நடப்பதே துன்பத்தை நீக்கும் வழியாகும்.
பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
எட்டுவித நெறிகள் (அஷ்டாங்க மார்க்கம்) ஆவன-
(1) நற்காட்சி (ஸ்ம்மா திட்டி) – மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது.
(2) நல்லொழுக்கம் (ஸம்மா ஸங்கப்போ) – தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக ,ருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித் துன்பத்தில் இருந்து (துக்கத்தில் இருந்து) விடுதலை அடைவதுதான் என்னும் எண்ணத்தோடு எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல்,சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.
(3) நல்வாய்மை (ஸம்மா வாசா) – பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல் அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.
(4) நற்செய்கை (ஸம்மா கம்மதோ) – கொலை செய்தல், களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களைச் செய்து கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.
(5) நல்வாழ்க்கை (ஸம்மா ஆஜீவோ) – அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காக விலங்குகளை விற்பது, மயக்கம் தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சூதுவாது செய்வது ஆகிய செயலகளைச் செய்யாமல் அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.
(6) நன் முயற்சி (ஸம்மா வியாயாமோ) – தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன் முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களையும் வளர்க்க வேண்டும்.
(7) நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி) – உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து அய்ம்பொறி அய்ம்புலன் இவைகiளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.
(8) நற்றியானம் (ஸம்மா ஸமாது) – மனதை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.
மேலே காட்டிய அட்டாங்கமார்க்கத்தில் 5 ஆவது மார்க்கம் ஊன்றிக் கவனிக்கப்பாலது. கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சூதுவாது செய்வது ஆகிய செயலகளைச் செய்யாமல் அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல் நல்வாழ்க்கை என்று எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
கடவுள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாத பவுத்தமதம் ஒவ்வொருவரும் தத்தமது நிர்வாணத்தை புத்தர் காட்டிய வழிகளில் ஒழுகித்தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. கங்கையில் முழுகுவதாலோ, காவிரியில் குளிப்பதாலோ, விரதம் இருப்பதாலோ, வேள்வி, பூசை, விழா, காவடி, எடுப்பதாலோ, யாத்திரை செய்வதாலோ நிர்வாணத்தை அடைய முடியாது என்பது புத்தரின் போதனையாகும்.
பவுத்த மதத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மும்மணிகளை வணங்கி பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். ஆனால் இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைய முடியாது. துறவறத்தில் நின்றவர்கள் மும்மணிகளை வணங்கி பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்கு வாய்மைகளைக் கடைப் பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகி, ஞானம், யோகம் இவற்றை அனுட்டித்தால் பிறவா நிலையாகிய அல்லது பேரின்பமாகிய நிர்வாண மோட்சத்தை அடைவார்கள்.
பவுத்த சமயத்தவர், துறவறத்தாரும் இல்லறத்தாரும் புத்தர், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச் சரண் அடைய வேண்டும். இதற்குத் திரிசரணம் என்பது பெயர். இந்த திரிசரணத்தின் பாலி மொழி வாசகம் இது. இதனை மும்முறை சொல்ல வேண்டும்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமிபவுத்த கோட்பாடுகளைப் பற்றி மேலும் படித்தறிய விரும்புவோர் தமிழில் உள்ள ஒரேயொரு பவுத்த காப்பியமான மணிமேகலையைப் படிக்கவும்.
பவுத்தம் எல்லாவிதமான போர்களையும் கடுமையாகக் கடிந்து உரைக்கிறது.பவுத்தம் இம்சைக்குப் பதில் அஹிம்சையைப் போதிக்கிறது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேணல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு, எவ்வுயிர்க்கு ஆயினும் இரக்கம் என்பது புத்தரின் போதனைகள் ஆகும்.
பவுத்தர்கள் பஞ்சசீலம் என்ற அய்வகை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். பவுத்த தேரர்கள் இந்த அய்வகை ஒழுக்கத்தோடு பத்துவகை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்.
1) கொலை செய்யாதிருப்பதை கடமையாகக் கொள்வது.
2) திருடாமையை கடமையாகக் கொள்வது.
3) தனக்குரியர்வர்களைத் தவிர பிறர் மீது காம எண்ணங்கள் இல்லாமல் இருப்பது.
4) பொய் பேசாமல் இருப்பது.
5) போதைப் பொருட்களை தொடாமல் இருப்பது.
ஆனால் இன்று ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழினத்துக்கு எதிராக ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே கட்டவுழ்த்துவிட்டுள்ள இனவழிப்புப் போருக்குப் பவுத்தர்களும் பவுத்த தேரர்களும் முழு ஆதரவு அளிக்கிறார்கள்.
ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தமிழினத்தை முற்றாக அழித்து விட வேண்டும் என்றும் ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த தேரர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசுகிறார்கள். போட்டிருக்கும் மஞ்சள் அங்கிக்குக் கூட அவர்கள் மதிப்பளிக்க மறுக்கிறார்கள்.
என்ன விலை கொடுத்தேனும் போரை முன்னெடுக்க வேண்டும் என்று அஸ்கிரிய – மல்வத்தை பவுத்த மத பீடாதிபதிகள் குரல் கொடுக்கிறார்கள். ஏனைய ராமண்ணா, அமரபுர பவுத்தமத பீடங்களும் அஸ்கிரிய – மல்வத்தை மதபீடங்களின் பல்லவிக்கு அனுபல்லவி பாடுகின்றன.
வண. கலபொட ஞானசார தேரர் என்ற பவுத்த தேரர் “இருபதினாயிரம் இளைஞர்களைத் திரட்டிப் போர் முனைக்கு அனுப்பி வைக்க நான் தயார்” என்று சூளுரைத்துள்ளார். இவரைப் போலவே சிங்கள ஊர்களில் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் பவுத்த தேரர்களே முன்னின்று உழைக்கிறார்கள்.
சில பவுத்த தேரர்கள் தங்கள் மஞ்சள் அங்கிகளைக் களைந்து எறிந்துவிட்டு ஏற்கனவே இராணுவத்தில் சேர்ந்து போர்முனையில் ஆயுதபாணியாக நிற்கிறார்கள்.
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்று சொல்லியிருக்கிறார். அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும். போர் இந்த மூவகை உயிர்களையும் கொல்கிறது.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பவுத்த மதத்தில் இருக்கும் துறவிகள் எப்படிப் ஆயுதப் போரை ஆதரிக்க முடியும்? இது பவுத்த மதக் கோட்பாட்டிற்கும் புத்தரின் போதனைக்கும் முரணாக இல்லையா?
புத்தரின் போதனைக்கும் ஸ்ரீலங்காவில் நடைமுறையில் இருக்கும் பவுத்தமதத்திற்கும் பெரிய இடைவெளி இருப்பது கண்கூடு. சொல்லுக்கும் செயலுக்கும் போதனைக்கும் நடைமுறைக்கும் எல்லா மதங்களிலும் இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பவுத்தமதத்தைப் பொறுத்தளவில் இந்த இடைவெளி தென்துருவத்துக்கும் வடதுருவத்துக்கும் இடையில் காணப்படும் இடைவெளி போன்று இருக்கிறது.
தீவிர சிங்கள – பவுத்த இனவாதத்தைக் கக்கும் பவுத்த தேரர்களையும் அரசியல்வாதிகளையும் வைத்து பவுத்த சமயத்தை எடை போடக்கூடாது. ஏனைய மதங்கள் போலவே பவுத்த மதமும் திரிபுக்கு உள்ளாகி விட்டது. இதனால் புத்தரின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அத்திவாரத்தின் மேல் பல கற்பனைக் கதைகள் புராண இதிகாசங்கள் என்ற வடிவில் எழுப்பப்பட்டுவிட்டன. இதனால் புத்தர் கடவுள் நிலைக்கே உயர்த்தப்பட்டு விட்டார்.
பவுத்தம் எல்லாவிதமான போர்களையும் கடுமையாகக் கடிந்து உரைக்கிறது. யுத்தத்தில் தர்மயுத்தம், அதர்மயுத்தம் என்ற வேற்றுமை இல்லை. யுத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை மாறாக அது அழிவையே ஏற்படுத்துகிறது என்று பவுத்தம் திட்;டவட்டமாகச் சொல்கிறது. மாறாக நால் வேதங்கள், பைபிள், குர்ஆன் ஆகிய மத நூல்களில் இருந்தும் போருக்கு ஆதரவான கோட்பாடுகளைக் காட்ட முடியும். இந்து, கிறித்துவம், இஸ்லாம் மதங்களில் “தர்ம யுத்தம்” என்ற கோட்பாடு காணப்படுகிறது.
பழைய பவுத்தம் அசோகனைப் போர் பாதையிலிருந்து விலக்கி சமாதானப் பாதையில் திருப்பியது. ‘விழாக்களில் பார்வையிடப்படவும் அணிவகுப்புகளுக்கும் மட்டுமே இனிப் படைகள்” என அசோகனின் அரசாணைகள் அறிவிக்கின்றன. இதற்கு மாறாக மத உணர்ச்சி மிகுந்த மாமன்னனான ஹர்ஷனோ போரையும் பவுத்தத்தையும் சமரசப்படுத்தினான். முப்பது ஆண்டுக்கால ஓயாத ஆக்கிரமிப்புப் போரில் ஹர்ஷனின் படையானது அறுபதினாயிரம் யானைகள், ஒரு இலட்சம் குதிரைகள் மற்றும் இதைவிட எண்ணிக்கையில் அதிகமான காலாட்படைகளைக் கொண்டதாகப் பெருகியது. அகிம்சா மூர்த்தியைப் பின்பற்றியவன் குருதிக்காக அலைந்தான். ஆசையை விட்டொழிக்கச் சொன்ன புத்தரைப் பின்பற்றியவன் மண்ணாசைக்காக திசையெங்கும் படை நடத்தினான். இருந்தாலும் தன்னால் நிராயுதபாணியாக நிறுத்தப்பட்ட மன்னனை கொன்றுவிடும்படி மற்றவர்கள் கூறியபோது அவனை மன்னித்து விடுதலை அளிக்கும் வகையில் ஹர்ஷன் பவுத்தனாக இருந்தான்.
பகவத் கீதையில் சத்திரியனுடைய சுயதர்மம் போர்புரிதலே எனக் கண்ணன் கூறுகிறான். குருசேத்திர பூமியில் கவுரவர் – பாண்டவர் படைகள் அணிவகுத்து நிற்கின்றன.
போர் தொடங்குவதற்கான அடையாளமாக கொடிகள் அசைக்கப்படுகின்றன. சங்குகள் ஊதப்படுகின்றன. அந்தக் காலத்தில் காலை தொடங்கும் போர் ஞாயிறு மறையும் போது நின்று விடும். பின் மறுநாள் மீண்டும் போர் தொடங்கும்.
காண்டீபமும் கையுமாகக் போர்க்களத்தில் நிற்கும் பார்த்தன் தன்னோடு போர்தொடுக்க அணிவகுத்து நிற்கும் எதிரிகள் யார் யார் எனப் பார்த்துவிட ஆசைப்படுகிறான். அதற்காக தேரோட்டி கண்ணன் தேரை இரண்டு படைகளுக்கு இடையில் நிறுத்துகிறான்.
“பார்த்தா! இங்கு திரண்டிருக்கும் கவுரவ சேனையைப் பார்” என்றான் கண்ணன்.
பார்த்திபன் பார்க்கிறான். நேர் எதிராக அணிவகுத்து நிற்பவர் பீஷ்மர். அவர் அருகில் அவனது வில்லாசிரியர் துரோணர், பாட்டன்மார்கள், அண்ணன் தம்பியர், மாமன்மார் மைத்துனர், உறவினர், நண்பர்கள் என எல்லோரும் அணிவகுத்து நிற்கிறார்கள்.
பார்த்தனின் மனம் சோருகிறது. கையில் இருந்த காண்டீபம் நழுவுகிறது. பார்த்தீபன் சொன்னான். “இவர்களைக் கண்டு என் மனம் சோர்வடைகிறது. உடல் நடுங்குகிறது. நா உலர்கிறது. இவர்களைக் கொல்வதில் எனக்கு நன்மை உண்டென்று நான் நினைக்கவில்லை. இவர்களைக் கொல்வதால்த்தான் எனக்கு அரசபோகம் கிடைக்கும் என்றால் எனக்கு அத்தகைய அரசபோகம் தேவையில்லை. அரசு கிடைத்து எனக்கு ஆகப்போவது என்ன? இன்பங்கள் எதற்காக? ஏன் உயிர் வாழ்வது கூட எதற்காக? இவர்களைக் கொன்றால் எனக்குப் பாவம்தான் மிஞ்சும்! அதற்கு மாறாக தனிமரமாக நிற்கும் என்னை ஆயுதம் தாங்கிய கவுரவர்கள் கொல்வதாயினும் சரியே! நான் நிச்சயம் போர் புரியேன். அதைவிட நான் உலகில் பிச்சை எடுத்து உண்பது நல்லது. ஒன்றில் இவர்கள் எங்களை வெல்வார்கள். அல்லது நாங்கள் அவர்களை வெல்வோம். இவற்றில் எதுவானாலும் எவரைக் கொன்று நாம் வாழ விரும்ப மாட்டோமோ அவர்கள் அல்லவா நம் எதிரில் நிற்கிறார்கள்” எனக் கூறிவிட்டு பார்த்திபன் காண்டீபத்தை எறிந்து விட்டு தேரின் ஒருபுறம் உட்கார்ந்து விடுகிறான்.
“மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் இது செய்யேன்! புவியின் பொருட்டுச் செய்வேனா?” (கீதை, 1ஆம் அத்தியாயம், 32-35 ஆம் சுலோகங்கள்)
பின்னர் போரினால் குலநாசம் ஏற்படும் குலதர்மம் கெடும் குலமாதர் கெட்டுப் போகிறார்கள,; வர்ணக் குழப்பம் உண்டாகும் சாதிதர்மங்களும் ஒழிந்து போகும் என அருச்சுனன் எடுத்துரைக்கிறான்.
“சத்திரிய குலத்தில் பிறந்தவனே! இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகத் தடுப்பது அபகீர்த்தி தருவது அருச்சுனா!
“பார்த்தா, பேடித்தன்மை அடையாதே! இது உனக்குப் பொருந்தாது. இழிவுபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்;! அர்ச்சுனா, சத்திரியான நீ உன் கடமையான போரைச் செய். இந்த மனத்தளர்ச்சியை, இந்தப் பலவீனத்தை ஒழி, எழுந்து நின்று போர் செய்! போரில் கொல்லப்பட்டால் சொர்க்கம்! வெற்றி பெற்றால் இராஜபோகம்! ஆகவே, போர் செய்யத் துணிந்துவிடு. எழுந்து நில்!” இவ்வாறு கடவுள் அவதாரமான கண்ணபரமாத்மா போர் செய்யுமாறு அருச்சுனனுக்குக் குழை அடிக்கிறான்! போரில் படையினர் கொல்லப்படுவதை நியாயப்படுத்துகிறான்!
“அர்ச்சுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும் தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழியவேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும் மற்றோருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால் நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம், அதுவும் ஈச்வரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி அதில் நிலைபெற்று நற்கதியடைவாய்” என்று கண்ணன் அருச்சுனனுக்குச் சொன்னதாக இரண்டாம் அத்தியாயமான “ஸாங்க்ய யோகத்துக்கு” பாரதி முன்னுரை எழுதுகிறான் (ப. 46).
‘உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும்’ என்று கொலைக்கு காரணமாக இருக்கும் போர்த் தொழிலையே கண்ணன் சுட்டுகிறான்.
“ஆதலால் பார்த்தா, போர் செய். இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப்படு வானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன், இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப் படுகையில் இவன் கொல்லப்படான்.” (கீதை, 2:18-20)
“நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை அடைவாய். “உலகத்தார் உனக்கு மாறாத வசையும் உரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னர் எய்தும் அபகீர்த்தி மரணத்திலும் கொடிதன்றோ?” (கீதை, 2:33-34)
எனவே பவுத்தம் நீங்கலாக ஏனைய சமயங்கள் போரை ஆதரிக்கின்றன. போர்க்களத்தில் இறந்து பட்டால் சொர்க்கம் போகலாம் என்று கூட சமயங்கள் ஆசை காட்டுகின்றன.
ஒழுக்கம் பவுத்தத்தின் உயிர்நாடி.
பவத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எளிதானவை என்றும் அவை எவையெவை என்பதையும் முன்னர் பார்த்தோம். நான்கு வாய்மைகள், எட்டு வழிகள், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பஞ்சசீலம், பஞ்சசீலம் உட்பட பவுத்த தேரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தசசீலம் இவையே பவுத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும்.
நான்கு உண்மைகள் ஆவன-1) துன்பம்
2) துன்ப காரணம்
3) துன்ப நீக்கம்
4) துன்பம் நீக்கும் வழிஎட்டு வழிகள் ஆவன
1) நற்காட்சி – மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது. மேற்கூறியவற்றை அய்யம்திரிபறத் தெரிந்து கொள்வதே நற்காட்சி எனப்படும்.
2) நல்லொழுக்கம் – தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித் துன்பத்தில் இருந்து (துக்கத்தில் இருந்து) விடுதலை அடைவதுதான் என்னும் எண்ணத்தோடு எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல், சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.
3) நல்வாய்மை – பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல், அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.
(4) நற்செய்கை – கொலை செய்தல், களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆனசெயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களைச் செய்து கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.
(5) நல்வாழ்க்கை – அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காகப் பிராணிகளை விற்பது, மயக்கந்தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சூதுவாது செய்வது ஆகிய செயல்களைச் செய்யாமல் அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.
(6) நன் முயற்சி – தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன் முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
(7) நற்கடைப்பிடி – உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து ஐம்பொறி ஐம்புலன் இவைகiளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.
(8) நற்றியானம் – மனதை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.
இல்லறத்தாருக்கு உரிய பஞ்ச சீலம் (அய்ந்து ஒழுக்கங்கள்) என்பவை-
1) கொல்லாமை – ஒருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றிடம் அன்பாக இருத்தல்.
2) கள்ளாமை – பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.
3) காமமின்மை – கற்பு நெறியில் சிற்றின்பம் துய்த்தல். அஃதாவது முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
4) பொய்யாமை – உண்மை பேசுதல். பொய் பேசாதிருத்தல்.
5) கள் உண்ணாமை – மயக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்குகிற மது பானங்களை உட்கொள்ளாமை.மேலே கூறப்பட்ட பஞ்ச சீலத்போடு இல்லறத்தாரில் சற்று உயர்நிலை அடைந்தவர் ஒழுக வேண்டிய அஷ்ட (எட்டு) சீலம் என்பவை –
6) இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல்.
7) பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நகராமை.
8) பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல்.
மேலே கூறப்பட்ட எட்டு சீலத்தோடு பவுத்த தேரர்களுக்கு உரிய தச (பத்து) சீலம் என்பவை –
9) இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்.
10) பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல்.
இந்த பவுத்தமத கோட்பாடுகளின் தாக்கமும் செல்வாக்கும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலும் எதிரொலிப்பதைப் பார்க்கிறோம். திருக்குறளின் –
8 ஆவது அதிகாரம் அன்புடைமை பற்றிக் கூறுகிறது.
10 ஆவது அதிகாரம் இனியவை கூறல் பற்றிச் சொல்கிறது.
14 ஆவது அதிகாரம் ஒழுக்கம் உடைமை பற்றிப் பேசுகிறது.
15 ஆவது அதிகாரம் பிறன் இல் விழையாமை பற்றிப் பேசுகிறது.
17 ஆவது அதிகாரம் அழுக்காறு (பொறாமை) பற்றிச் சொல்கிறது.
18 ஆவது அதிகாரம் வெஃகாமை (பிறர் பொருளை இச்சித்தல்) பற்றிக் கூறுகிறது.
19 ஆவது அதிகாரம் புறங்கூறாமை (ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி இழித்துரைத்தல்) பற்றிக் கூறுகிறது.
23 ஆவது அதிகாரம் ஈகை (வறியவருக்குக் கொடுத்தல்) பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
25 ஆவது அதிகாரம் அருள் உடைமை (எல்லா உயிரிடத்தும் அன்பு பாராட்டுதல்) பற்றிப் பேசுகிறது.
26 ஆவது அதிகாரம் புலால் மறுத்தல் (ஊன் உண்ணல்) பற்றிக் கூறுகிறது.
27 ஆவது அதிகாரம் கூடா ஒழுக்கம் (தீயா ஒழுக்கம்) பற்றிப் பேசுகிறது.
29 ஆவது அதிகாரம் கள்ளாமை (களவு) பற்றிப் பேசுகிறது.
30 ஆவது அதிகாரம் வாய்மை (உண்மை பேசுதல்) பற்றிப் பேசுகிறது.
31 ஆவது அதிகாரம் வெகுளாமை (சினத்தல்) பற்றிப் பேசுகிறது.
32 ஆவது அதிகாரம் இன்னா செய்யாமை (தீமை செய்யாமை) பற்றிப் பேசுகிறது.
33 ஆவது அதிகாரம் கொல்லாமை (உயிர்களைக் கொல்லாமை) பற்றி எடுத்துக் கூறுகிறது.
37 ஆவது அதிகாரம் அவா அறுத்தல் (பிறவிக்கு வித்தான ஆசையை ஒழித்தல்) பற்றிப் பேசுகிறது.
93 ஆவது அதிகாரம் கள் உண்ணாமை (மது அருந்தாமை) பற்றிப் பேசுகிறது.
94 ஆவது அதிகாரம் சூது (சூதாட்டம்) பற்றி நவில்கிறது.இவ்வாறு பவுத்த மதம் சொல்லும் தசசீலம் திருக்குறளில் அப்படியே கையாளப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.
திருவள்ளுவர் புத்தருக்குப் பின் சுமார் 500 ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவர். அவர் காலத்தில் தமிழ் நாட்டில் பவுத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்று விளங்கின. எனவே பவுத்த சமயத்தின் தாக்கமும் செல்வாக்கும் திருக்குறளில், குறிப்பாக அறத்துப் பாலில், எதிரொலிப்பதில் வியப்பேதும் இல்லை.
நாம் விரும்பாத பொருள்கள் துக்கத்தை விளைவிக்கின்றன. நாம் விரும்பும் பொருள்கள் கிடைக்காத போனாலும் துக்கம் உண்டாகிறது.
இந்தக் கருத்து திருக்குறள் அறத்துப் பால் அதிகாரம் 37 அவா அறுத்தல் குறள் 368 இல் சொல்லப்பட்டுள்ளது.
“அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.”இதன் பொருள் ஆசை அற்றவருக்கு துன்பம் இல்லை. ஆசை உடையார்க்குத் துன்பம் தொடர்ந்து வரும். ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்பதும், அதை அறுத்தால் மட்டுமே வீடுபேறு கிடைக்கும் என்பது பவுத்தத்திற்கும் இந்து சமயத்துக்கும் பொதுவான கோட்பாடாகும்.
பிறவிக்குக் காரணம் ஆசை என்கிறது பவுத்தம். ஆசையை அறுத்தால் மட்டுமே பிறவித் துன்பத்தில் இருந்து மீளமுடியும். இந்தக் கருத்தை அவா அறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள் 361 தெரிவிக்கிறது.
“அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் பிறவிக்கு வித்து ஆசை என்று கூறுவர்.
மானிடர்களின் அறியாமையை நீக்கி அறிவொளி பரப்புவதே புத்தரின் குறிக்கோளாகும்.,
சரியாகச் சொல்லப் போனால் பவுத்தம் ஒரு மதமல்ல. புத்தரும் ஒரு மகான் அல்ல. பவுத்தம் ஒரு மதமானால் அதற்குக் கடவுள் வேண்டும். புண்ணியம் செய்வோர்க்குப் பரிசு மோட்சம் பாபிகளுக்குத் தண்டனை நரகம் என்று சொல்ல வேண்டும்.எல்லாம் வல்ல படைப்புக் கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. உலகைக் கடவுள் படைத்தார் எனக் கூறுவது கடவுளை யார் படைத்தார் என்ற கேள்விக்கு வழிசமைக்கும் அல்லது கேட்கச் செய்யும்.
மதத்தின் மய்யப்புள்ளி மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்கக்கூடாது என்பதே புத்தரின் போதனையாகும். புத்தர், மதம் என்பது மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரும் இன்புறும் நோக்கில் ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே மதத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
புத்தரின் முதல் நோக்கம் மக்களைப் பகுத்தறிவுப் பாதையில் வழி நடத்துவது. ஏனென்றால், பகுத்தறிவின் நீட்சியே பொதுவுடைமையாகும். இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச் செல்ல மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. அவருடைய மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையின் பலமான மூலத்தை அதாவது எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையைத் தகர்த்தெறிவது ஆகும்.
இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் ஆனது. நீரில் முதலில் தோன்றிய உயிரானது, பல்வேறு விதங்களில் பல்வேறு உயிர் வகைகளாக மாறியது. இவற்றை யாரும் தோற்றுவிக்கவில்லை. இவற்றுக்குத் தொடக்கமும் இல்லை. உலகம் ஒரு விதத்தில் இருந்து, அழிந்து, மறு உருவம் எடுத்துக்கொண்டே இருக்கும். புத்தர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு நேரிடையாக ‘ஆம்’ ‘இல்லை’ என விடை அளிக்க மறுத்துவிட்டார். கடவுள் பற்றிய ஆராய்ச்சி தேவையற்றது எனச் சொன்னார். அது மனித வாழ்க்கைக்கு தேவையில்லாதது எனப் போதித்தார். அது போலவே ஆன்மா உண்டு என்பதையும் புத்தர் மறுத்துரைத்தார். அதே சமயம் மனிதர்கள் இறந்தபின் அவர்களது பாப புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறப்பு உண்டு என்றார். ஆனால் ஆன்மா இல்லாவிட்டால் மறுபிறப்பு என்பது எப்படி சாத்தியம் என்பதற்கு ஒரு விளக்கின் திரியில் இருந்து இன்னொரு திரியில் தீ பரவுவதை சான்று காட்டுகிறார்.
படைப்புக் கடவுளின்றியே உலகம் இயங்குகிறது என்பது பவுத்த நெறியின் கோட்பாடாகும். பவுத்தத்தில் கடவுள் இல்லை. கடவுளின் இடத்தில் ஒழுக்கம் இருக்கிறது. ஒரு மதத்தின் அடிப்படை சாரமாக ஒழுக்கத்தை வைத்தவர் உலகிலேயே முதன்முதலாக புத்தரே ஆவார். இந்து மதம் சமத்துவத்தைக் கற்பிக்கவில்லை. அதில் சமத்துவமே இல்லை.
புத்தரது அக்கறை மானிடர்களை எப்படி மரணத்தில் இருந்தும் மீள் பிறப்பு வட்டத்தில் (cycle of rebirth) இருந்தும் காப்பாற்றலாம் என்பதிலேயே இருந்தது. உலகத்தைப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கக் கூடுமா என்று அவரிடம் கேட்ட போது அவர் பதில் இறுக்க மறுத்தார். பவுத்த தர்மத்தைப் பின்பற்றி வாழும் ஒருவருக்கு அதுபற்றிய விசாரணை தேவை இல்லை என்றார்.
புத்தருடைய சுற்றுப் பயணத்தின்போது “மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதனைப் பிரம்மா என்றோ ஈசன் என்றோ போற்றி வணங்க வேண்டுமென்று பிராமணர்கள் சொல்லுகிறார்களே? அது பற்றித் தங்கள் கருத்தென்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்குப் புத்தர் பின்வருமாறு பதில் இறுத்தார்.
‘பிக்குவே ஒரு வாதத்திற்காக அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளுவோம். நீங்கள் ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேல்வனத்தில் வேல்களை (மூங்கில்; காட்டில் உள்ள மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்துக் கயிற்றால் கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்து கரையில் வைத்து விட்டு ‘என்னை ஆற்றின் அக்கரையில் இருந்து இக்கரை சேர்த்த வேலனே (மூங்கிலே)’ என்று போற்றுவாயா? வேண்டுமானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டி வைத்து விட்டுச் செல்லலாம். அதுவே அறிவுடைமை.’
இன்னொரு முறை அதே கேள்விக்கு அவர் கொடுத்த விடை பின்வருமாறு:
காட்டில் ஒருவன் அம்புபட்டு விழுந்து விடுகிறான். அந்த அம்பை யார் எய்தது? எதற்காக எய்யப்பட்டது? எதனால் அந்த அம்பு செய்யப்பட்டது என்ற விசாரணையில் இறங்குவீர்களா அல்லது அம்பு பட்டவனது உயிரைக் காப்பாற்ற அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் போவீர்களா? கற்பனைக் கருத்தியலான (abstract) கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது வீணான வேலை!”
பவுத்த தேரர்களது தமிழின வெறுப்பும் அதி தீவிர சிங்கள – பவுத்த கோட்பாடும் உண்மையான பவுத்த நெறிக்கு மாறானது. பவுத்த நெறிக்குக் களங்கத்தைக் கற்பிப்பது ஆகும்.
பவுத்தம் ஒரு வாழ்வியல் நெறியாகும். அது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதிpல்லை. பிறப்பால் ஒருவன் பிராமணனாக முடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும். “எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகள் அற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ, கடமையைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்றவனோ, எவன் உத்தமமான ஞானியின் முடிவான நிலையை அடைந்தவனோ அவனையே நான் பிராமணன் என்று அழைப்பேன்” என்கிறார் புத்தர். இவ்வாறு பவுத்தம் எல்லோரையும் சமத்துவமாகப் பார்க்கிறது. எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு செல்கிறது.
பவுத்தம் கட்டளைகள் இடுவதில்லை, அறிவுரைகளை மட்டுமே வழங்குகிறது. தான் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் என்னும் மதத்தை புத்தர் தொடக்கவில்லை. அவருக்குப் பின்னால் வந்தவர்கள் தோற்றுவித்த மதம் அது. பவுத்தத்தில் விதி என்று எதுவும் கிடையாது. “மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எதுவும் கிடையாது. அறிவை நம்பு, பகுத்தறிவைப் பயன்படுத்து, என் உபதேசங்கள் உட்பட எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. கேள்வி கேள், மெய்ப்பொருளை அறிந்து கொள்” எனப் புத்தர் அறிவுறுத்தினார்.
பவுத்தம் மற்ற மதங்களைக் கண்டிப்பதில்லை. பவுத்தத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் புன்னெறியாளர் (கயடளந டிநடநைஎநசள) என்பது பின்னாளில் மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் போன்ற சிங்கள – பவுத்த தேரர்களால் உருவாக்கிய திரிபுக்கோட்பாடாகும்.
பவுத்தம், சிந்தித்தலை, கேள்வி கேட்பதை மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது.
கடவுள் எப்படித் தோன்றினார்? ஒரு எல்லாம் வல்ல கடவுள் இருந்தால், அவர் ஏன் இத்துணை தொல்லைகள், அநீதி, சமத்துவமின்மை, வன்முறை ஆகியவற்றை அனுமதிக்கிறார்?
கடவுள் கருத்து மனிதனின் அறியாமை, மூடநம்பிக்கை, அச்சம், பொருளியல் வசதிக்கான விருப்பம் ஆகியவற்றால் தோன்றுவதேயாகும்.
புத்தர் கேள்விகளை எழுப்பி சுயவிசாரணைக்கு உட்படுத்துமாறு வேண்டுகோள் வைக்கிறார். மானிடர்களின் அறியாமையை நீக்கி அறிவொளி பரப்புவதே புத்தரின் குறிக்கோளாகும்.
எதற்கெடுத்தாலும் ‘ஏன்’ என்று கேள்வி கேட்கச் சொல்வதால் மேற்கத்திய நாடுகளில் பவுத்தம் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. புத்தர் ஞானவழியைக் கடவுள் அருளாலோ கனவில் கண்டதாலோ அடையவில்லை. கடைசிவரை அவர் மனிதனாக வாழ்ந்தவர். அரண்மனையில் பிறந்து செல்வச் செழிப்போடு வளர்ந்து திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தையானவர். அவருடைய இளமைக்கால வரலாறு முதல் முதுமை வரை திறந்த புத்தகமாகவே இருக்கிறது.
பவுத்தத்தின் மையம் மனிதன் தான். மனிதன் என்றால் மானிட வாழ்வு. சீரான, சிறப்பான வாழ்வு. ஒழுக்கத்தின் மீது கட்டப்பட்ட நியதிமிக்க வாழ்வு. பிறப்பையும் இறப்பையும் இரு எல்லைக் கோடுகளாக பார்க்காமல் இடைப்பட்ட வாழ்க்கையை மட்டுமே பவுத்தம் பார்க்கிறது. வாழ்வில் எதிர்ப்படும் அத்தனை துன்பங்களிலிருந்தும் விடுதலை. இதுதான் தம்மத்தின் பாதை. அறிய முடியாத, அறியவேண்டாத இறப்பைக் குறித்தும் ஆன்மாவைக் குறித்தும் சிந்திப்பதைக் காட்டிலும் நடைமுறை வாழ்க்கையை செம்மையாக்குவதே பவுத்தத்தின் குறிக்கோள். நடைமுறைதான் சரியான அறிதல் முறை ஆகும்.
இதனால் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் பிற மதங்களிடமிருந்து பவுத்தம் பெரிதும் வேறுபடுகிறது.
பவுத்தம் முன்வைத்த துக்கம் பற்றிய கருத்தாக்கங்கள், எட்டு நன்னடத்தை விதிகள், நான்கு பெரும் உண்மைகள் மற்றும் மும்மணிகள் எனப்படும் புத்தநிலை ஒரு மாற்று வாழ்க்கை முறையை உருவாக்கியது.
பவுத்தத்தில் வழிபாடு என்பது கிடையாது. தியானமே முக்கியமாகும். அந்தத் தியானத்துக்கு பஞ்ச சீலம் உட்பட்ட தச சீலம், திரிசரணம் உதவுகிறது.
திரிசரணம் என்பது புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்றிலும் சரண் புகுதல்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமிஇதனை வழிபாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் மும்முறை சொல்ல வேண்டும். இரண்டாம் முறை சொல்லும் போது “துதியம்பி” என்ற சொல்லையும் மூன்றாவது முறை சொல்லும் போது “ததியம்பி” என்ற சொல்லையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புத்தம் என்பது புத்தரையும் தம்மம் (பாலி மொழி) என்பது கோட்பாடுகளையும் சங்கம் என்பது நிறுவனத்தையும் குறிக்கும். புத்தம் சரணம் கச்சாமி என்றால் நான் புத்தரிடம் சரண் அடைகிறேன் என்பது பொருளாகும்.
இன்று புத்தம் சரணம் என்பதற்கும் பதில் யுத்தம் சரணம் கச்சாமி என சிங்களவர்கள் சொல்கிறார்கள். அதனால் தமிழர்கள் பவுத்தத்தை வெறுப்பது இயற்கையே. ஆனால் அது அறிவுடமையன்று. தமிழர்கள் பல நூற்றாண்டு காலமாக பவுத்தர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் பவுத்தம் பல நூற்றாண்டு காலமாக மிகுந்த செல்வாக்கோடு விளங்கியது. பவுத்தத்தின் செல்வாக்கை வைதீக மதத்தில் காணலாம். தமிழகத்தில் இன்று புகழ்பெற்று விளங்கும் இந்துக் கோயில்கள் பல ஒரு காலத்தில் பவுத்த விகாரைகளாக இருந்திருக்கின்றன.
புத்தரின் மறைவுக்குப் பின்னர் பல பிரிவுகாளகப் பிரிந்த பவுத்தம்,
பல நூற்றாண்டு காலமாக பவுத்த மதம் தமிழகத்தில் செல்வாக்கோடு விளங்கியது என்பது வரலாற்று உண்மை. தமிழர்கள் பவுத்தர்களாக இருந்திருக்கிறார்கள். தமி;ழகத்தில் மட்டுமல்ல தமிழீழத்திலும் தமிழ்ப் பவுத்தர்கள் இருந்திருக்கிறார்கள். இது பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. தமிழகம் என்று நான் குறிப்பிடுவது இன்றைய தமிழகம் மட்டுமல்ல சேரநாடு (கேரளம்) உட்பட்ட தமிழகம் ஆகும்.பண்டைத் தமிழகத்தின் வட எல்லையாக வேங்கடம் (திருப்பதி) இருந்தது. தொல்காப்பியம் ‘வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகம்’ என்று கூறுகிறது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரம், வேனிற்காதை பின்வருமாறு கூறுகிறது.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவும்
தமிழ்வரம் பறுத்த தண்புன னாட்டு………புத்தர் பரிநிருவாணம் அடைந்த சில காலத்திற்குப் பிறகு பவுத்த மதத்தில் பல பிரிவுகள் தோன்றின. அதில் மகாயான பவுத்தம், கீனயான பவுத்தம் முக்கியமானவை.
ஒரு காலத்தில் பவுத்த மதத்தில் 120 க்கும் அதிகமான பிரிவுகள் (sects) இருந்தன. பல நூறு வழிபாட்டு முறைகள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மை இன்று மறைந்துவிட்டன.
இந்து மதத்தில் புரையோடிப் போன சாதிக் கொடுமை காரணமாக மதம் மாறிய அம்பேத்கார் Buddha and his Dhamma என்ற ஒரு நூலை ஆங்கலத்தில் எழுதியுள்ளார். அதில் பவுத்தத்தில் காணப்படும் பிரிவுகள் பற்றிப் பேசப்படுகிறது. அம்பேத்கார் தனது பவுத்தத்தை ‘நவயாணா’ எனக் குறிப்பிடுகிறார். தனது உயிர்த்தல் என்பது பிறவற்றின் இருப்பில்தான் அடங்கியிருக்கிறது என்பது இதன் பொருள் ஆகும்.கீனயான பவுத்தற்திற்குத் தேரவாத பவுத்தம் என்றும் அனாத்மவாத பவுத்தம் என்றும் பெயர்கள் உண்டு. இதுவே பழைமையான பவுத்த மதம். மகாயான பவுத்தம் பிற்காலத்தில் தோன்றியது ஆகும்.
மகாயான பவுத்தம், கீனயான பவுத்தம் இரண்டும் தமிழ்நாட்டில் இருந்தன. இப்போது தமிழ் நாட்டிலே பவுத்த மதம் முற்றாக மறைந்துவிட்டது. அதே நேரம் இலங்கை, பர்மா, சீனம், தாய்லாந்து, கம்போடியா, யப்பான், கொரியா நாடுகளில் பவுத்தம் செல்வாக்கோடு விளங்குகிறது.
புத்தர் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அவர் தனது 35 ஆவது அகவையில் நிருவாணம் (முக்தி) அடைந்தார். பின்னர் 80 ஆவது அகவை மட்டும் ஊர் ஊராகச் சென்று தனது போதனைகளைப் பரப்புரை செய்வதிலேயே காலத்தைச் செலவிட்டார்.ஒரு நாளில் இரண்டு மணி மட்டுமே அவர் உறங்கியதாகவும் மிகுதி நேரத்தை இரவு பகல் என்று பாராது, மழை வெய்யில் என்று பாராது தனது கோட்பாடுகளைப் போதிப்பதில் செலவழித்தார் எனக் கூறப்படுகிறது.
புத்தர் சமூக ஏணியின் எல்லாவித மக்களோடும் பழகிப் பேசினார். அதில் அரசர், பிராமணர், உழவர், பிச்சைக்காரர்கள், படித்த – படியாத சாதாரண மக்கள் அடங்கியிருந்தனர்.
கேட்பவரது பட்டறிவு, கல்வியறிவு, உள்வாங்கும் ஆற்றல் போன்றவற்றுக்கு ஏற்ப தனது போதனைகளை புத்தர் வடிவமைத்தார். அவரது போதனைகள் பவுத்தவாக்கியம் என அழைக்கப்பட்டது. அவர் காலத்தில் மகாhயன, கீனயான என்ற பிரிவுகள் இருக்கவில்லை.
பவுத்த சங்கத்தை உருவாக்கிய பின்னர் புத்தர் சில ஒழுக்க விதிகளை உருவாக்கினார். அது வினயம் என அழைக்கப்பட்டது. எஞ்சிய அவரது போதனைகள் தருமம் என அழைக்கப்பட்டது.
தருமத்தில் அவர் தேரர்கள், தேரினிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு வழங்கிய அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. புத்தர் நிருவாணம் அடைந்த 3 மாதங்களில் இராஜகிருகம் என்ற இடத்தில் அவரது சீடர்கள் கூடினார்கள். மூத்த தேரர்கள் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்கள். அதில் புத்தரோடு 25 ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஆனந்தர் என்ற தேரரும் இருந்தார். இவரது நினைவாற்றல் போற்றத்தக்க மாதிரி இருந்தது. அவர் புத்தர் போதித்த போதனைகளை வாய்ப்பாடு போல் சொல்வதில் வல்லவராகக் காணப்பட்டார். உபாலி என்ற இன்னொரு தேரர் வினய விதிகளை நன்றாக நினைவில் பதித்திருந்தார்.
இந்த இரண்டுமே – தருமம் மற்றும் வினயம் – முதல் சங்கத்தில் வாய்ப் பாடமாகச் சொல்லப்பட்டது. தருமம் பற்றிக் கருத்து வேற்றுமை யாரிடமும் காணப்படவில்லை. ஆனால் வினய விதிகள் பற்றி மட்டும் முரண்பாடு இருந்தது.
புத்தர் தனது நிருவாணத்துக்கு முன்னர் ஆனந்தரிடம் வினய விதிகளில் சங்கம் சிறிய மாற்றங்கள் செய்ய விரும்பினால் அப்படிச் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். ஆனால் ஆனந்தர் அந்தச் சிறிய மாற்றங்கள் எத்தன்மையானது என்பதைக் கேட்க மறந்துவிட்டார். இதனால் தேரர்கள் வினய விதிகள் பற்றி ஒருமனதாக முடிவு எடுக்க முடியவில்லை.
அப்போது மகா காசியப்பர் என்ற தேரர் புத்தர் வகுத்த வினயத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்றும் எந்தவிதமான புதிய விதிகளையும் செய்யக் கூடாது எனவும் தீர்ப்பளித்தளித்தார். ஆனால் அதற்கான காரணங்களை அவர் கூறவில்லை. “நாங்கள் விதிகளை மாற்றினால் புத்தரது உடல் சுடுகாட்டில் எரிந்து முடியு முன்னரே அவர் வகுத்த விதிகளை அவரது சீடர்கள் மாற்றி விட்டார்கள்” என்று மக்கள் பழிக்கக் கூடும் என்று மட்டும் சொன்னார்.
நூறு ஆண்டுகள் கழித்து இரண்டாவது பவுத்த சங்கம் கூட்டப்பட்டது. இந்தச் சங்கத்திலும் தருமம் பற்றிய கருத்து வேற்றுமை இருக்கவில்லை. ஆனால் வினய விதிகள் பற்றிக் கருத்து முரண்பாடு இருந்தது. வினய விதிளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினார்கள். ஆனால் பழமைவாத தேரர்கள் விதிகளில் எந்தவித மாற்றங்களும் செய்யக் கூடாது என வாதித்தார்கள். இதன் விளைவாக ஒரு பிரிவினர் பிரிந்து சென்று மகாசங்கிகை (பெரிய சமூகம்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அது நாளடைவில் மகாயன பவுத்தம் என்று அழைக்கப்பட்டது.
மீண்டும் கிமு 3 ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் காலத்தில் மூன்றாவது சங்கம் கூடியது. வௌ;வேறு பிரிவினரிடம் காணப்பட்ட கருத்து வேற்றுமைகளைக் களையவே இந்தச் சங்கம் கூட்டப்பட்டது. இம்முறை வினய விதிகளைப் பற்றி மட்டுமல்லாமல் தருமம் பற்றியும் வேற்றுகைகள் தலைதூக்கின. சங்கத்தின் முடிவில் மொக்காலிப்பத்த திசா என்ற தேரர் கதவாது என்ற நூலை எழுதினார். இந்த நூல் பவுத்தம் பற்றிய தவறான, பொய்யான சித்தாந்தங்களை மறுத்தது. சங்கம் அதனை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக் கொண்ட குழுவினர் தேரவாதர் (மூத்தோர்) என அழைக்கப்பட்டனர். அபிதம்ம பிட்டகம் இச் சங்கத்தில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இந்த மூன்றாவது சங்கத்தைத் தொடர்ந்து வண. மகிந்த தேரர் என்பவர் திரிபீடகத்தை (மூன்று கூடைகள்) அதன் விரிவுரையோடு இலங்கைக்குக் கொண்டு வந்தார். அவை இன்றும் ஒரு ஒற்றை தன்னும் மாற்றப்படாமல் பாதுகாத்து வரப்படுகிறது.
திரிபீடகம் பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது. பாலி மொழி புத்தரால் பேசப்பட்ட மகாதி மொழியை அடிப்படையாகக் கொண்டது. வைதீக மதக் கோட்பாடுகள் சமற்கிருத மொழியில் இருந்தன. அதை விரும்பாத புத்தர் மக்கள் பேசிய மகாதி மொழியில் தமது போதனைகளை ஆற்றினார்.
கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் மகாயானம் நன்கு நிலை கொண்டுவிட்டது. நாகர்ச்சுனா என்ற தேரர் அதன் சிந்தாத்தை விளக்கி மத்தியமிகை – காரிகை என்ற நூலை எழுதினார். ‘எல்லாப் பொருள்களும் வானத்தைப் போல் சூனியமானவை. பிறப்பும் இறப்பும் செய்வினையை அனுபவிப்பதும் எதற்குமே இல்லை. இந்த பிரபஞ்சம் என்பது வெறும் அனுமானமே’ என்பது சூனியவாதமாகும்.
இதனை வேறு வழியில் பின்னால் வந்த ஆதிசங்கரர் பிரம்மம் என்று சொன்னார். மகாயான பவுத்த பிரிவின் தத்துவ முறையும் அதன் அடிப்படைகளும் பிறகு கௌடபாதர், சங்கரர் வழியாக ‘அத்வைத வேதாந்தமாக” உருவெடுத்தது. வேதத்திற்கு எதிரான பவுத்தம், விவாதங்கள், உரைகள் மூலம் வேதாந்தங்;களின் அடிப்படை மாற்றப்பட்டது. பவுத்த சங்கத்தைப் பின்பற்றியே சங்கரர் (கி.பி. 788-820) மடங்களை உருவாக்கினார். அதனால்தான் சங்கரர் மறைமுக பவுத்தர் என அழைக்கப்படுகிறார்.
அத்துவிதத்தை உபதேசித்தவர் கௌடபாதர் என்னும் சமய ஆச்சாரியார். இவரையே குருவாகக் கொண்டு அத்துவிதத்தைப் பரப்பியவர் இன்றைய கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனும் சிற்றூரில் பிறந்தவரே சங்கரர்.
அத்வைதம் (அ + துவைதம் = அத்துவிதம்) – அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம் ஆகும்.
இலங்கையில் மகிந்தரால் கொண்டுவரப்பட்ட பவுத்தம் கீனயானப் பிரிவைச் சேர்ந்தது. அப்போது மகாயன பவுத்தம் இருக்கவில்லை..இன்று கீனயான பவுத்தம் உலகில் இல்லை. 1950 இல் கொழும்பில் கூடிய பவுத்தர்கள் இலங்கை, தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற நாடுகளில் காணப்படும் பவுத்தத்தைக் குறிப்பிடும் போது கீனயான என்ற அடைமொழியை விட்டுவிட முடிவெடுத்தார்கள்.
மகாயன பவுத்தத்துக்கும் கீனயான அல்லது தேரவாத (இந்த இரண்டும் முற்றிலும் ஒன்றில்லை) பவுத்தத்துக்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன?
இரண்டும் புத்தரை ஆசிரியராக ஏற்றுக் கொள்கின்றன.
இரண்டிலும் நான்கு வாய்மைகள் எட்டு வழிகள் ஒன்றே.
இரண்டும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழிலைச் செய்கின்ற ஒரு கடவுள் இருப்பதை மறுக்கின்றன.
இரண்டும் அநித்தியம், துக்கம், அனாத்தம் மற்றும் சீலம், சமாதி ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்றன.
மகாயனம் போதிசத்துவ என்ற கோட்பாட்டை முன்னிறுத்துகிறது. அதாவது புத்தரை கடவுளாகச் சித்திரிக்கிறது. தேரவாதம் புத்தர் அரகர் (ஆசிரியர்) என்பதோடு நின்றுவிடுகிறது. புத்தர் ஒரு அரகரே. மகாயனம் அவ்வாறு புத்தரை விளிப்பதில்லை.
.இன்று கீனயான பவுத்தம் உலகில் இல்லை. 1950 இல் கொழும்பில் கூடிய பவுத்த மாநாட்டில் இலங்கை, தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற நாடுகளில் காணப்படும் பவுத்தத்தைக் குறிப்பிடும் போது கீனயான என்ற அடைமொழியை விட்டு விடுவதென முடிவெடுக்கப்பட்டது.
இலங்கையில் இருப்பது சிங்கள பவுத்தம்,
இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா முதல் தடவையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரில் 28 தொடக்கம் மே 10 ஆம் நாள் வரை திருவிழா நடைபெற இருந்தது.இரக்குவானையில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் என்ன?
இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இருந்து வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் மீதுள்ள அச்சத்தினால் இத்தனை ஆண்டுகளும் தமிழர்கள் சிக்கலின்றி வாழ்த்து வந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் களத்தில் பின் நகர்ந்து சென்று விட்டதால் நிலைமை மாறிவிட்டது. இதன் எதிரொலியாக – முதற்கட்டமாக – இரக்குவானையிலுள்ள மிக பழைமை வாய்ந்த கோயில் திருவிழாவை சிங்களவர்கள் தடுத்தி நிறுத்தி விட்டனர் என மலைய மக்கள் நினைக்கிறார்கள்.
பவுத்தர்களது புனித நாளான பவுர்ணமி (போயா) அன்று திருவிழாவை நடத்தினால் பெரும் கலவரம் ஏற்படும் என பவுத்த – சிங்கள தீவிரவாதிகள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாகவே திருவிழா கைவிடப்பட்டதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அறங்காவல் அவை அறிவித்துள்ளது.
பவுர்ணமி நாளென்பது பவுத்தர்களுக்கு மட்டும் அல்லாது இந்துக்களுக்கும் சிறப்பான நாளாகும். அதிலும் சித்திரைத் திங்களில் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்புண்டு.
கடந்த இரு ஆண்டுகளாக சித்திரை பௌர்ணமி நாளன்று பவுத்த விகாரைக்குச் சென்று அமைதியாக வழிபட முடியவில்லை எனவும் எனவே திருவிழா நடைபெறும் நாளைத் தள்ளிப் போடுமாறும் சிங்களவர்கள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. மீறித் திருவிழா நடத்தினால் பெரும் கலவரம் வெடிக்கும் என சிங்களவர்கள் அச்சுறுத்தல் விடுத்தார்கள். தமிழ்மக்களது மத சுதந்திரத்தை மதித்து திருவிழாவை நடத்த இரக்குவானை காவல்துறையும் ஒத்துழைக்க மறுத்துவிட்டது.
இதனால் தமிழ் மக்களது பாதுகாப்புக் கருதி அறங்காவல் அவை கோயில் திருவிழாவை இவ்வாண்டு நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளது. இரத்தினபுரியில் தேர்த் திருவிழா நடைபெறும் ஒரே கோயில் இதுமட்டும் தான்.
வடக்கில் நடக்கும் போரின் முடிவு தெரியாத போதே பச்சை இனவாத்தை வெளிப்படுத்தும் சிங்கள – பவுத்தர்கள் ஸ்ரீலங்கா அரசு போரில் வென்றால் மலையகத் தமிழர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு புறம் தமிழீழத் தமிழர்களை விடுவிக்கவே மனிதாபிமான நடவடிக்கை எடுத்து வருவதாகச் சொல்லும் ஸ்ரீலங்கா அரசு மறுபுறம் மலைநாட்டுத் தமிழர்களது மத சுதந்திரத்தை மதிக்க மறுக்கிறது.
ஸ்ரீலங்காவின் யாப்பு (அதிகாரம் 11 – பவுத்தம்) விதி 9 பவுத்தத்துக்கு முதன்மை இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. அதன் அடிப்படையில் பவுத்த மதத்தை (சாஸனம்) பாதுகாப்பதும் ஆதரவளிப்பதும் அரசின் கடமை ஆகும். அதே சமயம் எல்லா மதங்களுக்கும் யாப்பு விதிகள் 10 மற்றும் 14(1)(இ) அளிக்கும் உரிமைகளை வழங்க உறுதியளிக்கிறது.
CHAPTER II – BUDDHISM
9. The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).
அரசியல் யாப்பு பவுத்தத்துக்கு முதன்மை இடம் கொடுத்து அதன் அடிப்படையில் பவுத்த மதத்தைப் பாதுகாப்பதும் ஆதரவளிப்பதும் அரசின் கடமை என்று சொல்வதின் மூலம் பவுத்த மதத்தவர் முதல்தர குடிமக்கள் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையிலேயே இரக்குவானையில் உள்ள தீவிர பவுத்த சிங்களவர்கள் பவுர்ணமி நாளில் இந்துக் கோயில் ஒன்றில் திருவிழா நடத்தக் கூடாது, நடத்தினால் கலவரம் வெடிக்கும் என அச்சுறுத்தியுள்ளார்கள்.
இவ்வாறு அச்சுறுத்திய பவுத்த சிங்களவர்கள் உண்மையான பவுத்தர்கள் அல்ல. இவர்கள் பவுத்தம் ஊடாக சிங்கள அரசியல், பொருண்மிய, சமூக மேலாண்மையை நிலைநாட்ட நினைக்கும் பவுத்த மத வெறியர்கள் ஆவர். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பவுத்த கோட்பாடுகளைத் திரித்துக் கூறுகிறார்கள்.
கடந்த கிழமை (சனிக்கிழமை) இன்னொரு செய்தியும் வந்தது. பலர் அந்தச் செய்தியைப் படித்திருப்பார்கள்.
ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே, பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்களைத் தீமையில் இருந்து காக்க பவுத்த தேரர்கள் பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் இரவிரவாக பிரித் ஓதினார்கள். 3,000 பவுத்த தேரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
ஆட்சித்;தலைவரும் அவரது துணைவியாரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராபக்ச இந்த வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தார்.
இந்த நிகழ்வுகளை வைத்துக் கொண்டு தேரவாத பவுத்தத்தை நாம் எடை போடக் கூடாது. ஸ்ரீலங்காவில் காணப்படும் பவுத்தத்துக்கும் புத்தர் போதித்த பவுத்தத்துக்கும் தொடர்பே இல்லை.
பவுத்த கோட்பாடுகளுக்கும் அதன் நடைமுறைக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தக் குறை எல்லா மதங்களுக்கும் பொதுவானவை.
ஸ்ரீலங்காவில் பவுத்தம் அரசியல் மயப் படுத்தப்பட்டு அதன் உள்ளுறை சிதைக்கப் பட்டுவிட்டது. இதனைத் தொடக்கி வைத்தவர் அநகாரிக தர்மபாலர் ஆவார்.
இந்த அநகாரிக தர்மபாலரே சிங்கள – பவுத்தாய என்ற சொற்றொடரை முதன் முதலாகப் பயன்படுத்தியவர். ‘சிங்கள – பவுத்த தேசியத்தின்’ பிதாமகன் எனப் போற்றப்படுபவர் இவரே தமிழ் முஸ்லிம் மக்கள் அந்நியர் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தவர். ‘இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடு ஏனையோர் வந்தேறு குடிகள்’ எனும் கொள்கையைப் பரப்பியவர். தமிழர் வந்தேறு குடிகள் என்றொரு வரலாறு இல்லை. சிங்களவர் வந்தேறு குடிகள் என்பதை மகாவம்சம் தெட்டத்தெளிவாகச் சொல்கிறது.
‘ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய கீழ் சாதியினர் நாட்டினுள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்” என்று 1902 இல் அநகாரிக தர்மபால அநாகரிகமாகப் பேசினார்.
அநகாரிக தர்மபாலர் விதைத்த சிங்கள – பவுத்த – தேசியக் கோட்பாட்டை அறுவடை செய்தவர் எஸ்.டபுள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆவார்.
திரு. பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பவுத்த சங்கம், தொழிலாளர்கள், கமக்காரர்கள், சிங்கள மருத்துவர்கள், சிங்கள ஆசிரியர்கள் (பஞ்ச சக்திகள்) கொண்ட கூட்டணியை ஒரு குடையின் கீழ் அணி திரட்டி ஆட்சியைப் பிடித்தார்.
1956 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அரசியல் பவுத்தம் (Political Buddhism) சிங்கள பவுத்தம் (Sinhalese Buddhism) என்ற புது சொல்லாட்சிகள் அகராதியில் வந்தன. திரு. பண்டாரநாயக்க தேர்தலில் பெற்ற வெற்றியால் சிங்கள – பவுத்த – தேசியம் என்ற இனமதக் கோட்பாடு நாட்டில் ஆழ வேரூன்றியது.
1956 க்குப் பின்னரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் பவுத்த தேரர்களது ஆதரவைப் பெறுவதில் போட்டி போட்டன. கட்சி மேடைகளில் பவுத்த தேரர்கள் பச்சை இனவாத அரசியல் பேசினார்கள். பண்டைய சிங்கள அரசர்களது ஆட்சிக் காலம் போல் நாட்டை ஆள்வோர் தங்களது அறிவுரைப்படிதான் ஆள வேண்டும் என்று பவுத்த தேரர்கள் வேண்டினார்கள்.
பவுத்த தேரர்களைக் கட்சியில் சேர்க்க தென்னிலங்கைக் கட்சிகள் தமக்குள் போட்டி போட்டன. அவர்களுக்கு பொன்னும் பொருளும் பதவியும் ஆடம்பர வண்டிகளும் பரிசாகக் கொடுக்கப்பட்டன.
2004 இல் பவுத்த தேரர்கள் நேரடியாகத் தேர்தலில் குவித்தார்கள். அவர்கள் தொடக்கிய ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சி மொத்த வாக்குகளில் 6 விழுக்காட்டைப் பெற்று 9 இருக்கைகளை வென்றது.
தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனமல்ல, தமிழர்கள் என்பது ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். தன்னாட்சி உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, ஸ்ரீலங்காவில் சிங்கள மக்களுக்கே அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. இதுதான் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கொள்கையாகும்.
பவுத்தம் துக்கம் பற்றிய கருத்தாக்கங்கள், எட்டு நன்னடத்தை விதிகள், நான்கு பெரும் உண்மைகள் மற்றும் மும்மணிகள் எனப்படும் புத்தநிலை தர்மம் என்கிற நடைமுறை வாழ்விற்கான போதனைகள், சங்கம் என்கிற கூட்டமைப்பு முறை ஆகியவற்றை கொண்ட ஒரு வாழ்க்கை நெறியாகும்.
பவுத்தம் ஒரு மாற்று வாழ்க்கை முறையை முன்வைத்தது. அது வைதீக பார்ப்பனீய மதம் கூறும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் வாழ்க்கை முறையை மறுத்தது. பிறப்பில் பேதம் இல்லை மக்கள் எல்லோரும் சமம் என்ற மாற்று வாழ்க்கை முறையை முன்வைத்தது.
புத்தரின் பாதை நடுவழிப் பாதை. பொருளுக்கும் புலனுக்கும் உள்ள உறவில் பொருளையோ, புலனையோ முதன்மைப்படுத்தாமல் இரண்டிற்கும் சம அளவிலான முக்கியத்துவத்தை பவுத்தம் கொடுக்கிறது. இந்த பவுத்தத்தை இலங்கையில் பார்க்க முடியாது இருக்கிறது.
பவுத்த மதத்தைப் பரப்பிய பேரரசர் அசோகர்,
பவுத்தம் சங்க காலம் தொடக்கம் தமிழகத்தில் செல்வாக்கோடு விளங்கி வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் குடி புகுந்த பவுத்தம் 14 ஆம் நூற்றாண்டளவில் முற்றாக மறைந்துவிட்டது.வட இந்தியாவில் கவுதம புத்தர் வாழ்ந்த காலம் கிமு 567 – 487 ஆகும். வைதிக சமய வேள்விச் சடங்குகளையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் புத்தர் போதனை செய்தார். புத்தரின் போதனைகள் எளிமையான கோட்பாடுகளைக் கொண்டிருந்ததால் அது வேகமாகப் பரவத் தொடங்கியது எனலாம்.
கவுதம புத்தரை சமணத் தீர்த்தங்கரர்களுள் இறுதியானவரான “வர்த்தமான மகாவீரர் ஒன்று விட்ட உடன்பிறப்பு’ என்று சமண இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மகாவீரரும் புத்தரும் சமகாலத்தவர் ஆவர். இதனால் போலும் இரண்டு சமயங்களின் கோட்பாடுகளிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இரண்டு சமயங்களும் அகிம்சையைச் சிறப்பாக வலியுறுத்துகின்றன.
புத்தர், அவர்; உபதேசித்த தர்மம், உருவாக்கிய சங்கம் ஆகிய மூன்றும் பவுத்த மும்மணிகள் என அழைக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, தமிழகத்தில் பவுத்த துறவிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
பவுத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் கடைச்சங்க நூல்களில் காணப்படவில்லை. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி ஆகிய காப்பியங்களிலும் மதுரைக்காஞ்சியிலும் பவுத்த மதத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. பவுத்தராகிய சீத்தலைச்சாத்தனார் அருளிச் செய்த மணிமேகலை ஒரு முழுமையான பவுத்த காப்பியமாகும். மணிமேகலை பவுத்த மத தத்துவங்களை விளக்குவதற்கும் பரப்புவதற்கும் எழுதப்பட்ட காப்பியமாகும்.
கடைச்சங்க நூல்களில் பவுத்தம் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை என்றாலும் பவுத்தமதத்தைச் சேர்ந்த புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இளம்போதியார் என்ற புலவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணையில் காணப்படுகிறது. அவரது பெயரே (போதி – அரசமரம். அரச மரத்தின் கீழ் இருந்த போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்) அவர் ஒரு பவுத்தர் என்பதைக் காட்டுகிறது.
வட பாரதத்தை ஆண்ட மன்னர்களில் அசோகப் பேரரசர் (கிமு 273 – 232) புகழ் வாய்ந்தவர். தமிழகம் நீங்கலாக எஞ்சிய பாரதத்தை ஒரு குடைக் கீழ் ஆண்டவர். அவர் நிறுவிய கற்தூண்களும் கல்வெட்டுக்களும் இன்றைய வட பாரதம், நேப்பாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான் நாடுகளில் காணப்படுகின்றன.
பேரரசர் அசோகர் தம்முடைய பதின்மூன்றாவது கல்வெட்டில் (Rock Edict) ஆந்திரத்தைத் தம்முடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி என்று கூறுகிறார். மகத அரசின் ஆட்சிமொழி பிராகிருதமாக இருந்ததால் அப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் பிராகிருத மொழியே ஆட்சிமொழியாகவும் சமயம், வணிகம், கல்வி போன்ற துறைகளின் பொதுமொழியாகவும் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் மூவேந்தர்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படும் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் தமிழகத்தை ஆண்டார்கள்.
பண்டைய தமிழகம் நந்த – மவுரியப் பேரரசுகளின் கீழ் ஒருபோதும் அடங்கியிருக்கவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமின்றி அதியமான்கள் போன்ற குறுநில மன்னர்களும் தமிழகத்தில் சுதந்திரமாக ஆட்சி செய்து வந்தனர்.
இந்த உண்மையை பேரரசர் அசோகர் தம்முடைய இரண்டாம் கல்வெட்டில் சோழ, பாண்டிய, கேரளபுத்திர சத்ய – புத்திரர் எனப்படும் அதியமான்களையும் தம்முடைய ‘அண்டை நாட்டுக்காரர்” என்று குறிப்பிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் இறையாண்மையால் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் சமயம், வணிகம் போன்ற துறைகளின் பொதுமொழியாகவும் விளங்கி இருந்தது.
தமிழ்மக்கள் தமிழை எழுதப் பிராமி எழுத்து முறையை ஏற்றுக்கொண்டபோதும் பிராகிருத மொழியை ஆட்சிமொழியாகவோ பொதுமொழியாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. பிராமி எழுத்துமுறையை மாற்றியமைத்துத் தமிழுக்குத் தேவையான எழுத்துகளைக் கூட்டியும் தமிழுக்குத் தேவையில்லாத எழுத்துகளை நீக்கியும் மேலும் சில மாறுதல்களைச் செய்தும் தமிழுக்கென ஒரு தனியான எழுத்து முறையைப் படைத்தனர். இதுவே தமிழ் -பிராமி என்று குறிக்கப்பட்டது.
முற்காலத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பவுத்த – சமண சமய நூல்களில் தமிழகத்தின் பண்டைய எழுத்து முறையை திராவிடி அல்லது தாமிளி என்று குறித்தனர். அக்காலத்தில் தமிழகத்தில் சமயத் தொண்டாற்ற வந்த பவுத்த – சமண முனிவர்களும் தமிழைக் கற்றுக்கொண்டு தங்கள் சமயப்பணியையும் தமிழ்ப்பணியையும் ஒருங்கே ஆற்றினர்.
பிற்காலத்தில் அய்ரோப்பாவிலிருந்து கிறிஸ்தவ மத போதகர்கள் தமிழ்நாடு வந்தபோது அவர்களும் தமிழ்மொழியைப் படித்து அதன் மூலம் சமயத் தொண்டை ஆற்றினர்.
சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்குப் பின்னர் பிறக்கச் செய்தார் என்ற ஒரு கட்டுக் கதையும் உண்டு. இதன் காரணமாகவே பிந்துசாரர் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்.
பிந்துசாரருக்கு பிறகு அரியனை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன்பிறப்புக்களை அசோகர் கொன்றதாக ஒரு கதை உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் அவர் கொல்லவில்லை என்கிறார்கள்.
அசோகர் பிந்துசாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் ஆவர்.
அசோகர் இளம் வயதில் அவந்தி நாட்டை ஆளும் பொறுப்பில் இருந்தார். அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணைக் காதலித்து மணம் புரிந்து கொண்டார். மகாவம்சம் இலங்கைக்குப் பவுத்தமதத்தினைப் பரப்ப அசோகர் அனுப்பிய மகேந்திரனும் சங்கமித்திரையும் முறையே அவரது மகனும் மகளும் எனக் கூறுகிறது. ஆனால் இதற்கான வலுவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை.
கலிங்கப் போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்தார். தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்தார்.
சந்திரகுப்தர், பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சிறிய கால இடைவெளிக்குப் பிறகு கலிங்கம் தனித்து இயங்கத் தொடங்கியது. எனவே பெரிய படை திரட்டி கலிங்க நாட்டைத் தனது காலடிக்குள் கொண்டு வர அசோகர் விரும்பினார்.
கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸ்ஸா நாடாகும். மகத நாடு தற்போதைய பீகார் ஆகும். கலிங்க நாட்டை ஆட்சி செய்தவர்கள் கரவேளர்கள் என்ற அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
அசோகர் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிருமூலமாக்கினார் அப்போரில் 150,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 10,0000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். போர்க்களத்தில் இரு பக்கத்திலும் ஏற்பட்ட உயிர் அழிவுகள் அசோகரின்; மனதை வருத்தியது. கொடிய போர்க்களக்காட்சியை கண்டுதான் அசோகர் பவுத்த மதத்தைத் தழுவினார்.
அசோகர் பவுத்த சமயத்தைத் தழுவி நாட்டில் அமைதி ஓங்கப் பாடுபட்டார். இப்போருக்கு முன்னரே அசோகர் பவுத்தமதத்திற்கு மாறி விட்டார் என்று சொல்லப்படுகிறது. அசோகரின் காதல் மனைவி தேவி புத்தமதத்தவர். அவரை மணக்கும் போதே பவுத்தமதத்தினைத் தழுவி விட்டார் என்றும் ஆனால் முழுதாகப் பவுத்தமதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. போரின் கொடிய விளைவைக்கண்ட பின்னரே முழுதும் மனம் மாறி உலகம் முழுவதும் பவுத்ததர்மம் பரவ வழி செய்தார்.
அசோகர் தனது செல்வம் அனைத்தையும் பவுத்தசங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துன்பமானதாகவும் தனிமையாகவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரைப் புறக்கணித்துக் கவனிக்காமல் விட்டு விட்டார்.
தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார். அசோகர் எழுதிய கற்தூண்களும் கல்வெட்டுக்களுளும் அக் காலத்துப் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டதாகும். ஆனால் அந்த எழுத்துமுறை பின்னர் மறைந்து விட்டது. இதனால் அசோகரது கற்தூண்களையும் கல்வெட்டுக்களையும் யாராலும் படிக்க முடியாது போய்விட்டது.; எனவே அசோகர் தான் அந்தப் புகழ்பெற்ற கலிங்கப் போர் புரிந்த பேரரசர் என்பது நீண்ட நாட்களுக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் James Pincep (1838) என்ற ஒரு ஆங்கில ஆராய்சியாளர்தான் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருவரும்; ஒருவரே என்பதனை மெயப்பித்தார். அது மட்டுமல்ல அசோகர் பாரதம் முழுதும் நிறுவிய கற்தூண்கள் மற்றும் கல்வெட்டுக்கள் அனைத்தையும் மொழிபெயர்த்தவரும் இந்த ஆங்கிலேயரே.
அசோகரின் கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் ஏறத்தாழ தமிழகத்தில் கிடைத்துள்ள பண்டைய தமிழ் – பிராமி எழுத்துக்களை ஒத்தவை. எனவே இவ்விரு எழுத்து முறைகளும் சமகாலத்தவை என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
பேரரசர் அசோகரின் இரண்டாவது கல்வெட்டு தனது ஆட்சிக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும் தாமிரபரணியிலும் (இலங்கை)யவன அரசனாகிய அண்டியொக்ஸ் ஆட்சி செய்யும் தேசத்திலும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களை நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கல்வெட்டு அசோகர் காலத்தில் பவுத்தம் தமிழகத்தில் பரவியிருந்ததைக் காட்டுகிறது.
தமிழகத்தில் பவுத்த மதத்தின் வளர்ச்சி,
போரில் வெற்றியீட்டிய அசோக பேரரசர் பின்னர் போரையே வெறுத்தவராகப் பவுத்த தர்மத்தைப் பரப்புவதற்குத் தலைப்பட்டார். பாரதத்துக்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் பவுத்த தர்மத்தைப் பரவச் செய்தார்.அசோகரே புத்தகாயாவில் முதன் முதலில் புத்தருக்கு விகாரை கட்டியவர் ஆவார். இந்த விகாரை மகாபோதி என்று அழைக்கப்படுகிறது. அங்கு அமர்ந்த நிலையில் புத்தர் அமைதியே உருவாகக் காட்சி தருகிறார்.
அசோகர் தம் ஆட்சிக் காலத்தில் மகிந்த தேரர், சங்கமித்திரை போன்றோரை பவுத்த மதப் பரப்புரை செய்ய தென்னாட்டிற்கும் இலங்கைக்கும் அனுப்பினார்.
பொதிய மலைப் பகுதியில் ‘சங்கமித்திரை மேடு” என்ற ஒரு இடம் இருப்பதால் சங்கமித்திரை பாண்டிய நாட்டில் பவுத்தமதப் பரப்புரை செய்தார் என்று அறிய முடிகிறது. கலிங்கப்போர் முடிந்த பின் அசோகர் அனுப்பிய தேரர்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கொற்கையிலும் பிற இடங்களிலும் பரவி பவுத்த சமயத்தை வளர்த்தனர்.
முதலில் தென்னாட்டிலும் பிறகு தென்னாட்டிலிருந்து பிற கீழை நாடுகளுக்கும் பவுத்த சமயம் பரவத் தொடங்கியது. பவுத்த சமயப் பரப்புரைக்கு இலங்கைக்குச் சென்ற மகிந்த தேரர் தனது ஆறு சகாக்களுடன் வான்வழியாக மிகிந்தலையை வந்தடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அதன் பின்னரே வேட்டைக்குச் சென்றிருந்த தேவநம்பிய தீசனை மகிந்த தேரர் சந்திக்கிறார்.
தமிழ்நாட்டில் அரசர்கள், வணிகர்கள், செல்வந்தர்கள் முதலானவர்களின் பொருள் உதவியுடன் விகாரைகள், பள்ளிகள், சேதியங்கள் (சைத்தியங்கள்) ஆங்காங்கே நிறுவப்பட்டன.
மடங்களில் வாழ்ந்த பவுத்த தேரர்கள் மருத்துவம் பயின்று தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு ஊதியம் வாங்காது மருத்துவம் செய்தார்கள்.பவுத்த துறவிகள் மக்களிடையே கல்வி ஒளியைப் பரப்ப ஆங்காங்கே பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கற்பித்தார்கள்.
பொதுமக்களைத் தங்களது பள்ளிகளுக்கு அழைத்து மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து திரிபீடகம், பவுத்தஜாதகக் கதைகள் போன்றவற்றைச் சொல்லி மதபோதனை செய்தார்கள்.
தேரர்கள், மலைக் குகைகளில் படுக்கைகள் வெட்டி அங்கு வாழ்ந்தார்கள். அவை பள்ளி என அழைக்கப்பட்டன. பள்ளிக்கூடம் என்ற பெயர் அதிலிருந்துதான் பிறந்தது.பவுத்த துறவிகள் மடங்களை நிறுவி சமயத் தொண்டாற்றினார்கள். இந்த பவுத்த மடங்களைப் பின்பற்றியே பிற்காலத்தில் ஸமார்த்த மதத்தினர் மடங்களை நிறுவி சமயத் தொண்டாற்றினர்.
மும்மணிகளில் ஒன்றான சங்கம் பவுத்த சமயத்தின் உயிர் நாடியாகும். முன்னர் குறிப்பிட்டது போல சங்கம் என்பது பவுத்த தேரர்களின் கூட்டமாகும். ஊர்தோறும் மடங்களையும் விகாரைகளையும் நிறுவி சங்கத்தினர் தங்கள் சமயத்தைப் பரப்பி வந்தார்கள்.இந்து மதம் பிறப்பினால் மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பித்தது. பிராமணர், அரசர், வணிகர், சூத்திரர் என நால்வருணத்தைக் கடந்து மக்களிடையே பஞ்சமர் என்ற அய்ந்தாவது பிரிவையும் உருவாக்கியது. இவர்கள் தீண்டாதோர் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
பவுத்தம் இவ்விதமான உயர்வு தாழ்வைக் கற்பிக்கவில்லை. மக்கள் எக்குடியில் பிறந்தாலும் செய்தொழில் எதுவாக இருந்தாலும் அவர்கள் பிறப்பால் சமமானவர்கள் என பவுத்தம் கூறியது. புத்தருடைய தொடக்க கால சீடர்கள் பல ‘சாதி’களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். சாதிப் பாகுபாடு பாராட்டாத தமிழர் பவுத்த மதத்தை எளிதாக ஏற்றுக் கொண்டார்கள்.
பவுத்த தேரர்கள் மத போதனை செய்வதோடு நில்லாமல் ஏழைகள், குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும் உணவு அளிக்க அறச்சாலைகளை அரசர், செல்வந்தர் போன்றவர்களிடம் இருந்து பொருளுதவி பெற்று நிறுவினார்கள்.
மணிமேகலை என்ற பவுத்த காப்பியம் கோவலனது மகள் மணிமேகலை என்பவள் பவுத்த மதம் புகுந்து துறவியாகி புகார்பட்டினத்துக்கு (காவிரிப்பூம்பட்டினம்) அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த அறவி என்னும் அம்பலத்தில் இருந்த செவிடர், குருடர், முடவர், பசிப்பிணிகொண்ட வறியர் ஆகியோருக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை உலக அறவி புக்க காதை (17) கூறுகிறது.
மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க அதனை அறி;ந்த சோழ மன்னன் உனக்கு யான் செய்ய வேண்டியது என்ன என்று கேட்க, அவள் கேட்டவாறு சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றிக் கொடுத்தான். அவ்வறக்கோட்டம் –
அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ………………………………. (உதயகுமாரனை வாளால் எறிந்த காதை – 20)கொடிய பிறவியிற் பிறந்த வருந்தினோர் முன் செய்த நல்வினைப் பயனால் பொருத்தமான நற்பிறவி அடைந்தது போல அரசனுடைய ஆணையினாலும் மணிமேகலையின் அருளாலும் நரக வேதனை செய்யும் சிறைக்கோட்டம் பழைய தன்மையிலிருந்து மாறி விளங்கியது. வாய்மை நான்கினையும் உவந்து விளக்கிய மெய்யறிஞனான புத்தன் கோயில் அங்கே அமைந்தது. அருள் உள்ளங்கொண்ட அறவோர் அங்கே தங்கினார்கள். சோறாக்கும் இடமும் சோறுண்போர் இடமும் ஏற்பட்டன. உறுதியான செல்வக் காப்புடையதாகவும் அவ்விடம் விளங்கியது.
பெண் ஒருத்தி (காயகண்டிகை உருவிலிருந்த மணிமேகலை) அரசனிடம் சென்றதையும் சிறந்த புகழுடைய அரசன் அவளுக்கு அருளிச் செய்ததையும் சிறைச்சாலையை அழித்து அதனை அறவோர் வாழும் அறச்சாலையாக ஆக்கியதையும் உதயகுமரன் கேள்வியுற்றான்.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் “தண்டமிழ் ஆசான்” எனச் சிறப்பித்த சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தை தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்து அறியவேண்டும். மணிமேகலை ஆசிரியர் மகாயன பவுத்த பிரிவைச் சேர்ந்தவர். மணிமேகலையின் கதைச் சுருக்கத்தை பிறிதோர் முறை எழுதுவேன்.
தமிழ்நாட்டில் பவுத்தமதம் வேரூன்றி இருந்தற்கான அகச் சான்றுகள் கிடைக்கின்றன. நாகப்பட்டினத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளில் மட்டும் முந்நூற்றுக்கும் அதிகமான வெள்ளியில் ஆன புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிலைகள் அனைத்தும் முற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.
இவ்வகழ்வாய்வின் வாயிலாக பவுத்த சமயம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. பவுத்த துறவிகளின் சிலைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. 1964 – 65 இல் பல்லவனேசுவரத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழாய்வில் புத்தவிகாரை கண்டறியப்பட்டது. அதில் மொத்தம் அய்ந்து சதுர அறைகள் காணப்படுகின்றன. இங்கு ‘புத்தன் சுடுமண் உருவம்’ இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விகாரை கிபி 4 – 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நிறுவப்பட்டுள்ளது.
அசோகருக்குப் பினனர் ஆட்சிக்கு வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கவில்லை. பவுத்தராகிய அசோகர் படைகளைக் கலைத்துப் புத்தமத பரப்புரைக்கு அனுப்பிவிட்டதால் அவர்கள் வலிமையின்றி இருந்தார்கள்.
மேலும் பவுத்தமதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமணர்கள் அரசைக் கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினான். அத்துடன் அசோகர் கட்டியெழுப்பிய மாபெரும் மவுரிய பேரரசு முடிவுக்கு வந்தது. (வனரும்)
தமிழகத்தில் பவுத்த மதத்தின் வீழ்ச்சி,
தமிழகத்தில் பவுத்த மதம் பரவி வளர்ச்சி அடைந்த வரலாற்றைப் பற்றி முன்னர் ஆராய்ந்தோம். இருந்தும் பவுத்தம் தென்கிழக்கு ஆசியா எங்கணும் பரவிக் கொண்டிருந்த போது அது பிறந்து வளர்ந்த இந்தியாவிலும் தமிழகத்திலும் வீழ்ச்சி அடைந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது முற்றாக மறைந்து விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அப்பேத்கார் எடுத்த முயற்சியின் காரணமாக மகாராஷத்;திர மாநிலத்தில் வாழ்ந்த தலித் மக்கள் பலர் பவுத்த மதத்துக்கு மாறினார்கள்.பவுத்தம் தமிழகம் வந்து சேர்ந்த காலப்பகுதியில் சமணம் (ஆருகதம்) சனாதனதர்மம் என அழைக்கப்படும் வைதீகம், ஆசிவகம் போன்ற மதங்களும் தமிழகம் வந்து சேர்ந்தன.
முன்னர் குறிப்பிட்டது போல புத்தரும் சமண மதத்தை உண்டாக்கிய மகாவீரரும் ஆசீவக மதத்தை உருவாக்கிய கோசால மக்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். இக் காலகட்டத்தில் தமிழர்களிடம் ஒரு நிறுவன சமயம் இருக்கவில்லை. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தெய்வங்களைத் தமிழர்கள் வழிபட்டனர். போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு ஊர்ப்புறத்தில் நடுகல் நாட்டி வழிபட்டனர்.
தொல்காப்பியம் அய்வகை நிலங்களான முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றுக்குரிய தெய்வங்களாக முறையே மாயோன் (திருமால்) சேயோன் (முருகன்) வேந்தன் (இந்திரன்) வருணன், கொற்றவை எனக் குறிக்கிறது.
அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைப் பலி கொடுத்தது சங்க காலத்துத் தமிழரும் தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கி வந்தனர். கள் அருந்தும் பழக்கம் இருந்ததால் கள்ளும் படைக்கப்பட்டது. உயிர்ப் பலியிடுவதைப் பொறுத்தவரையில் தமிழரின் நம்பிக்கையும் வைதீக மதமும் ஒற்றுமை கொண்டிருந்தன. ஆனால், பண்டைத் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய முருகன், திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபட்டு இருக்கவும் இல்லை.
தமிழகம் வந்த சமணம், வைதீகம், பவுத்தம், ஆசிவகம் ஆகிய மதங்கள் தங்களுக்குள் போரிட்டன. ஒன்றையொன்று பழித்துப் பேசின. ஒன்றை மற்றொன்று அழிக்க முயற்சி செய்தது. இதனால் தமிழ்நாட்டில் சமயப் பூசல்கள் தலைவிரித்து ஆடின. இந்த மதங்கள் அரசர்களையும் வணிகர்களையும் மக்களையும் தத்தம் மதத்தில் சேர்க்கப் பெரும் முயற்சி எடுத்தன.
அக்காலத்தில் பட்டிமன்றங்கள் அரசுத் தலைநகரங்களிலும் பெரு நகரங்களிலும் பொது விழாக்களிலும் நடைபெற்றன. மதுரை மாநகரம் ஒரு நிகழ்ச்சியை முரசு அறைந்து தெரிவித்ததை “பெருஞ்செய் ஆடவர் தம்மின்; பிறரும் யாவரும் வருக! ஏனோரும் தம்” என மதுரைக் காஞ்சி கூறுகிறது.
மதவாதிகள் பட்டிமன்றம் ஏறித் தத்தம் கோட்பாடுகளை மக்கள் முன் வைத்தனர். இதற்கான சான்று மணிமேகலை காப்பியத்தில் காணப்படுகிறது.
‘ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்
பற்றா மாக்கள் தம்முடனாயினும்
செற்றமுங்கலாமுஞ் செய்யாது அகலுமின்.. (மணிமேகலை, 1 – காதை 60-63)தமிழகத்தில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவக மதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்து விட்டது. எஞ்சிய வைதீகம், பவுத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் தொடர்ந்து போரிட்டுப் பூசல் விளைத்து வந்தன.பவுத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.
சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்து வருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டி வைத்தனர். பவுத்தனான ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்துக் காட்டிற்கு ஓட்டி விட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான். இந்தக் கதை பவுத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையை வெளிப்படுத்துகிறது.
கவுசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தபோது ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த சமணப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். சமணர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவர் ஆகலின் கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அனுப்பிவிட்டனர்.
பவுத்தருக்கும் சமணருக்கும் இடையில் இருந்த பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பவுத்தர் இயற்றியதும் பவுத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும் இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தெளிவாக்குகின்றன.
இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வைதீகம், பவுத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலை எய்திற்று.
வைதீக சமயம் கொலை வேள்வியைச் செய்து வந்தது. பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும் வேதங்களைப் படிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டென்றும் அவற்றை மற்றவர் படிக்கக்கூடாது என்றும் தடுத்து வந்ததும் அதன் பின்னடைவுக்கு முக்கிய காரணிகளாகும். அன்றியும் “சுவர்ணதானமே, பூமி (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே, கன்னியா தானமே’’ போன்ற தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர்.
இதற்கு நேர்மாறாகப் பவுத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவினார்கள். மற்றும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டு வந்தனர்.
இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பவுத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவை இழந்த வைதீக மதம் பவுத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. சில அரசர்கள் மட்டும் வைதீக முறைப்படி பிராமணர்களைக் கொண்டு பெரும் பொருட் செலவில் யாகங்கள் செய்த செய்தி புறநானூறு போன்ற சங்க காலத்து நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதற்கான சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.
வைதீக மதம் செல்வாக்கு இல்லாது போக பவுத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. பவுத்த சமண துறவிகள் வைதீக மதக் குருமார் போன்று இல்லறத்தில் இல்லாது துறவறம் மேற்கொண்டு துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப் போன்று கோதானம் பூமிதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவு தானத்தை மட்டும் சிறிதளவு பெற்று வந்தார்கள்.
வைதீகம் நலிவடைந்த பின்னர் சமணமும் பவுத்தமும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இரண்டும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பவுத்த மதத்தின் செல்வாக்குக் குன்றி விட்டது.
பவுத்த மதத்தில் பிளவுகள் தோன்றியதால் வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கு இழந்துவிட்டது. சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர் காஞ்சீபுரத்தில் பவுத்தக் கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் கோயிலில் பவுத்த தேரர்களுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற தேரர்கள் இலங்கைக்குத் தப்பிச் சென்றனர்.
இவ்வாறு தமிழ் நாட்டில் வைதீகம் பவுத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.
செல்வாக்குப் பெற்றிருந்த சமண சமயமும் நீடித்து இருக்கவில்லை. பவுத்தத்தைத் தொடர்ந்து சமணமும் செல்வாக்கு இழக்கத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தொடக்கி வைத்த ‘பக்தி’ இயக்கமே.
தமிழகத்தில் பக்தி இயக்கமானது கிபி 6 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கியது. சைவ நாயன்மார்கள் மேற்கொண்ட அனல்வாதம் – புனல்வாதம் போன்றவை பவுத்த சமயத்தைப் புறந்தள்ளின. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இனிய தமிழில் பாடல்களைப் பாடி இறையுணர்வுடன் பக்தி உணர்வையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவச் செய்தனர்.
புதிய சைவ மதத்திற்கு ஆக்கம் தேட சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும் அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும் அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும் அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும் அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட – வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைக்கும் முயற்சியாகும்.மன்னர்களின் ஆதரவின்மை, வைதீக சமயங்களின் புத்துயிர்ப்பு, பவுத்தத்தில் காணப்பட்ட பிரிவுகள், பவுத்த துறவிகளின் ஒழுக்கக் குறைவு கடினமான தத்துவக் கோட்பாடுகள் போன்றவை பவுத்த சமயம் வலுவிழந்து மறையக் காரணங்களாக அமைந்தன. மேலும் கிபி 8 – 9 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குகையிடிக் கலகத்தின் போது பெரும்பாலான பவுத்த குகைகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மன்னர்களின் ஆதரவின்மை, வைதீக சமயங்களின் புத்துயிர்ப்பு, பவுத்தத்தில் காணப்பட்ட பிரிவுகள், பவுத்த துறவிகளின் ஒழுக்கக் குறைவு கடினமான தத்துவக் கோட்பாடுகள் போன்றவை பவுத்த சமயம் வலுவிழந்து மறையக் காரணங்களாக அமைந்தன. மேலும் கிபி 8 – 9 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குகையிடிக் கலகத்தின் போது பெரும்பாலான பவுத்த குகைகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
About editor
3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.
Leave a Reply
You must be logged in to post a comment.