பெரியாரின் போர்ப்படைத் தளபதி…அண்ணாவின் வாழ்க்கைத் தடங்கள்!
ஆ.பழனியப்பன்
காஞ்சிபுரம் தந்த தனிப்பெரும் தலைவன், பெரியாரின் போர்ப்படைத் தளபதி என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள் இன்று.
CN Anndurai
சி.என்.அண்ணாதுரை, ‘அண்ணா’ என்று ஆனது இப்படித்தான்… நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், க.அன்பழகன், மு.கருணாநிதி உள்ளிட்ட பலர் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டு அவருக்கு நெருக்கமானார்கள். அவர்களைத் தம்பி என்று அன்புடன் அழைத்தார் அண்ணா. அவரை, அவர்கள் ‘அண்ணா’ என்று பாசத்துடன் அழைத்தனர். அண்ணா என்ற பெயரே அவருக்கு நிலைபெற்றுவிட்டது.
சொந்த வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் அவர் கடந்துவந்த பாதையின் முக்கியத் தருணங்கள்…
1909: பட்டு நெசவுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் ஓர் ஏழை நெசவாளர் குடும்பத்தில் செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தார். தந்தை நடராஜன் – தாயார் பங்காரு அம்மாள்.
1914: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் பள்ளியில் சேர்ந்தார்.
1927: பட்டப்படிப்புக்காகச் சென்னைக்கு வந்த அண்ணாதுரை, பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். தந்தை மரணமடைந்த சூழலில், கல்விமீது தீராத காதல்கொண்டிருந்த அண்ணாவுக்கு, அவரின் பேராசிரியர்கள் உதவி செய்தனர். படித்த காலத்திலேயே ராணியைத் திருமணமும் செய்துகொண்டார்.
1934: திருப்பூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா-வைச் சந்தித்தார் அண்ணா. பெரியாரைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்டு, பெரியாரின் தொண்டராக மாறினார்.
1934: முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டார். நீதிக்கட்சி சார்பில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவினார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அண்ணாவை தளபதியாக்கினார் பெரியார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அண்ணா கைதுசெய்யப்பட்டார். அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக அவர் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதுதான் அவரின் முதல் சிறைவாசம்.
பெரியாரிடம் மொழிபெயர்ப்பாளராக அண்ணா செயல்பட்டார். அதன்மூலம் பெரியாரின் மிகுந்த நம்பிக்கையை அவர் பெற்றார்.
1939: நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
1940: அம்பேத்கர், முகமது அலி ஜின்னா போன்ற பெரிய தலைவர்களை, பெரியார் சந்தித்தபோதெல்லாம் பெரியாரிடம் மொழிபெயர்ப்பாளராக அண்ணா செயல்பட்டார். அதன்மூலம் பெரியாரின் மிகுந்த நம்பிக்கையை அவர் பெற்றார்.
1944: சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது. நீதிக்கட்சி என்ற பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்தார்.
1949: பெரியார் – மணியம்மை திருமணத்துக்குப் பிறகு, திராவிடர் கழகத்திலிருந்து விலகினார் அண்ணா. பின்னர், ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக்கழகம் செப்டம்பர் 17-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
1950: ‘ஆரிய மாயை’ நூலை எழுதியதற்காக ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1956: 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்காத தி.மு.க, இரண்டாவது பொதுத்தேர்தலில் பங்கேற்பது என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது.
1958: பிரதமர் நேருவின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டத்தை தி.மு.க அறிவித்தது. அண்ணா கைதுசெய்யப்பட்டார்.
1962: மூன்றாவது பொதுத்தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்கடிக்கப்பட்டார். பிறகு, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
1963: தி.மு.க-வின் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார்.
1965: இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர வேண்டுமென்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்தது. அதைக் கண்டித்து குடியரசு தினத்தை கறுப்புத் தினமாக அறிவித்துப் போராட்டம் நடத்தியதற்காக ஜனவரி மாதம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1967: பொதுத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் அண்ணா.
1968: அண்ணா முதல்வராக இருந்தபோது, சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ.9 லட்சம் வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
செப்டம்பர் 10-ம் தேதி சிகிச்சைக்காக நியூயார்க் சென்ற அண்ணாவுக்கு, அங்கு தொண்டையில் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 6-ம் தேதி சென்னை திரும்பினார் அண்ணா.
பிப்ரவரி 3: நள்ளிரவு 12.22 மணிக்கு அண்ணாவின் உயிர் பிரிந்தது.
பிப்ரவரி 4: மெரினா கடற்கரையில் அரசு மரியாதையுடன் அண்ணாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தங்களின் பாசத்தலைவருக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதுமிருந்து பல லட்சம் பேர் சென்னையில் திரண்டனர். அது உலக சாதனைகளில் ஒன்றாகச் சரித்திரத்தில் பதிவானது.
Leave a Reply
You must be logged in to post a comment.