ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது நச்சுப் பாம்புக்கு பால் வார்த்த கதை போன்றது!
நக்கீரன்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா என்ற தீவிர அடைப்படைவாத அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சனாதிபதி சிறிசேனா பொது மன்னிப்பு அளிக்கப் போகிறார் என்ற செய்தி அவ்வப் போது வெளிவந்து கொண்டிருந்தது.
கடந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த சனவரி 16, 2019 இல் எழுதிய கடித மூலம் வலியுறுத்தியிருந்தது. அதற்கு அந்த அமைப்புச் சொன்ன காரணம் ஞானசார தேரரின் மதமாற்றத்திற்கு எதிரான எழுச்சிமிக்க உரைகள் இலங்கை மக்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது என்பதாகும்.
இந்துக் கோயில்களை பவுத்த தேரர்கள் அடாத்தாக கைப்பற்றி அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் பவுத்த விகாரைகளை கட்டி வருவது இந்த இந்து சம்மேளனத்துக்குத் தெரியாது போல் தெரிகிறது. அல்லது முழு இலங்கையையும் பவுத்த நாடாக ஆக்க சிங்கள – பவுத்த பேரினவாதிகள் முயற்சி செய்து வருவது இந்த சம்மேளனத்துக்குத் தெரியாதா?
கவுதம புத்தர் பிறந்த, பரிநிர்வாணம் அடைந்த மற்றும் மறைந்த நாளான விசாக மாதத்தில் வரும் பவுர்ணமி நாளான வெசாக் கொண்டாட்டத்தின் போது ஞானசாரர் விடுதலை ஆவார் என்ற செய்தி உலாவந்தது. ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. கடைசியாக மே 23 மாலை சனாதிபதி அளித்த பொது மன்னிப்பை அடுத்து ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச் சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறைச் சீருடையை களைந்துவிட்டு மஞ்சள் அங்கியை அணிந்து கொண்டு ஒரு திரைப்பட கதாநாயகன் போல் சிறையில் இருந்து வெளிவந்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஹோமகம நீதவான் நீதிமன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நீதவான் முன்னிலையில் நீதி மன்றத்தை நடாத்த விடாது குழப்பம் விளைவித்தது, நீதிமன்றத்தை அவமதித்தது, காணாமல் போன எக்நெலிகொடவின் மனைவி சந்தியாவை அச்சுறுத்தியது உட்பட நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தை அவமதித்த வழக்கை ஹோமகம நீதிபதி இரங்கா திசநாயக்ககா தொடுத்திருந்தார். ஓகஸ்ட் 08, 2018 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எல்லாக் குற்றச்சாட்டுக்களும் நிரூபணம் ஆன நிலையில் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டு நீதிமன்றம் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சமகால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நடைமுறையில் 6 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் வழங்கினார்கள். அதனை எதிர்த்து ஞானசார தேரர் உயர் நீதிமன்றம் சென்றார். உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்தப் பின்னணியை சனாதிபதி சிறிசேனா கிஞ்சித்தும் கருத்தில் எடுக்காது 9 மாத சிறைக்குப் பின் ஞானசார தேரரை தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தண்டனை வழங்கிய நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் அவமானப் படுத்தும் செயலாகும். இதனால் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற கோட்பாடு காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது! எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது!
சிறையில் இருந்து வெளிவந்த ஞானசார தேரர் தனது விடுதலைக்கு எல்லாச் சிங்களவர்களும் தமிழர்களும் பரங்கிகளும் மலாய்க்காரர்களும் பிரார்த்தனை செய்தார்கள் அதன் பலனாக சனாதிபதி தன்னை விடுதலை செய்தார் எனச் சொன்னார்.
ஆனால் முன்னொரு காலத்தில் சனாதிபதி சிறிசேனா முதுகெலும்பு இல்லாதவர், சித்த சுவாதீனம் இல்லாதவர் என்று வசை பாடியவர் இதே ஞானசார தேரர்தான். தனது ஆவேசப் பேச்சுகள் மூலம் கீழ்த்தரமான உணர்வுகளைத் தட்டியெழுப்பியவர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்கியவர். இப்போது சனாதிபதி, கடவுள் மற்றும் கர்மவினை இரண்டின் கருவியாக இருக்கிறார். அதுதான் தனது விடுதலைக்குக் காரணம் என்கிறார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த கையோடு தான் இப்போது திருந்திவிட்டதாகச் சொன்னார். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இனி நான் ஒரு தேரர் என்ற முறையில் எனது நேரத்தை பவுத்த தர்மத்தைப் போதிப்பதில் செலவிட இருக்கிறேன். என்னை சமய காரியங்களுக்காக அர்ப்பணிக்க எண்ணியுள்ளேன் என்கிறார்.
அது சரி இந்த ஞானசாரரின் பழைய கால வரலாறு என்ன? பலருக்கு அவரது பழைய வரலாறு தெரியாது. எனவே அதனைத் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கலகொட அத்தே ஞானசாரர் போதையில் கார் ஓட்டிக் கொண்டு செல்கையில் ஒரு பாதசாரியை முட்டிவிட்டார். பாதசாரி உடைந்த காலோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கில் (எண் 6315/2000) கொழும்பு நீதிமன்ற (Road Motor Vehicle) நீதிபதி குடித்துவிட்டு காரை ஓட்டி ஒருவரை மோதிக் காயப்படுத்திய குற்றத்துக்கும் விபத்தை பொலீசுக்கு அறிவிக்காத குற்றத்துக்கும் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் ஞானசார தேரர் இந்த வழக்கைப் பற்றிக் கேட்டால் சரியான பதில் கொடுக்காமல் மழுப்பி விடுகிறார்.
போர்க்காலத்தில் ஞானசார தேரரை யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை. போர் முடிந்த பின்னர் அவருக்கு ஒரு புது இன எதிரி அகப்பட்டுக் கொண்டது. அது வேறுயாரும் இல்லை. முஸ்லிம்கள்தான். 2012 ஆம் ஆண்டு ஞானசாரர் பொது பல சேனாவை மேளதாளத்தோடு தடபுடலோடு தொடக்கினார். பண்டாரநாயக்க நினவு மண்டபத்தில்தான் தொடக்கக் கூட்டம் இடம் பெற்றது. ஞானசார தேரருக்கு இராசபக்ச குடும்பத்தினரது ஆதரவு இருந்தது. சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டு அவர்களை அடிபணிய வைப்பதே ஞானசார தேரரது குறிக்கோளாக இருந்தது.
அன்று முதல் இன்றுவரை அகிம்சை அல்லது கொல்லாமை தத்துவத்தைக் கைவிட்டு, மனித உயிர்களிடத்து மட்டும் அல்லாது எல்லா உயிர் இனங்களிடத்தும் அன்பு பாராட்ட வேண்டும் என்ற கோட்பாட்டைப் புறம் தள்ளிவிட்டு சிங்கள – பவுத்த பேரினவாதத்தைக் கட்டியெழுப்ப ஞானசார தேரர் மெத்தப் பாடுபட்டு வருகிறார். 2012 க்குப் பின்னர் – இராசபக்ச ஆட்சிக் காலத்தில் – முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. குற்றம் செய்தால் சட்டத்தின் பிடியில் அகப்பட நேரிடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற கவலை அவருக்கு இருக்கவில்லை.
அளுத்கம நகரில் யூன் 2014 ஆம் ஆண்டு பொது பல சேனா அமைப்பால் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அந்தத் தாக்குதலின் போது 4 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். மொத்தம் 78 பேர் காயம் அடைந்தார்கள். அப்போது சனாதிபதியாக இருந்த மகிந்த இராசபக்ச யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என ஒப்புக்குச் சொல்லிவிட்டு பேசாமல் இருந்துவிட்டார். தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம்கள் தாக்கியவர்களோடு சமாதானம் பேசுமாறு யோசனை கூறினார்.
இந்தப் பேரணியில் பேசிய ஞானசார தேரர் “முதுகெலும்பு இல்லாத அமைச்சர்களும் மற்றவர்களும் எங்களை இனவாதிகள் என்கிறார்கள். மத அடிப்படைவாதிகள் என்கிறார்கள், ஆம், நாங்கள் இனவாதிகள்தான், ஆம் நாங்கள் மத அடிப்படைவாதிகள்தான். நாங்கள் இன்றைய நாள் ஒன்றுபட்டு ஒரே குரலில் எமது கடமையைச் செய்யாவிட்டால் இன்னும் பிறக்காத அடுத்த தலைமுறை எதிர்காலத்தில் மின்னல் தாக்கி இறந்து போயிருக்க வேண்டும் என்று சாபம் போடுவார்கள். எனவே அந்தச் சாபத்துக்கு இலக்காகுமுன் எங்களது மூதாதையரைப் பாருங்கள், எமது முன்னோர்களைப் பாருங்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பாருங்கள். எங்களது பழைய பாரம்பரியத்தைக் காப்பாற்ற குருதி, கண்ணீர், வெயர்வை மற்றும் உயிர் போன்றவற்றைப் பலி கொடுத்தார்கள். இன்று நாட்டின் நாலா பக்கத்தில் இருந்தும் தீய, பாவப்பட்ட சக்திகள் இந்தப் பாரம்பரியத்தை கொள்ளையடிக்கப் புறப்பட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரது ஒவ்வொரு சொல்லுக்கும் கூட்டத்தில் இருந்தவர்கள் கையொலி எழுப்பி ஆரவாரித்தார்கள். இவரது பேச்சு காணொளியில் வெளிவந்தது.
இப்போது உச்ச கட்டம். ஞானசாரர் தனது கையை மேலே உயர்த்தி சவால் விடுகிற மாதிரி “இந்த நாட்டில் இன்னும் சிங்கள பொலீஸ் இருக்கிறது. சிங்கள இராணுவம் இருக்கிறது. இன்றுமுதல் மஞ்சள் அங்கி அணிந்த ஒரு பிக்குவை விட்டுவிடுங்கள் ஒரு சிங்களவரைத்தானும் தொட்டால், ஒரு சிங்களவரை ஒரு முஸ்லிம் தொட்டால் அல்லது வேறுயாரேனும் தொட்டால் அது அவர்கள் எல்லோரது முழு அழிவுக்கு வழிவகுக்கும்” என அறைகூவல் விடுத்தார். இதன் பின்னர்தான் அந்தக் கும்பல் வன்முறையில் இறங்கியது.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற வினைக் கோளுக்கு ஒப்ப சில ஆண்டுகள் கழித்து ஞானசார தேரரை ஊழ்வினை வந்து கவ்விக் கொண்டது.
சனவரி 25, 2016. இடம் ஹோமகம நீதிமன்றம். நீதிபதி பிரகீத் எக்நெலிகொட வின் மறைவுக்குக் காரணமாக இருந்த ஐந்து இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இரங்கா திசநாயக்கா தீர்ப்பை எழுதி முடித்தார். அப்போது பார்வையாளர் பக்கம் இருந்து ஞானசாரர் எழுந்தார். “அரச உத்தியோகத்தவர்கள் விடுதலைப் புலிகளை நசுக்கி நாட்டைக் காத்த போர் வீரர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இடுகிறார்கள்” என்று உரத்த குரலில் சத்தமிட்டார். இப்போது அவரது சுடு பார்வை 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுப் பின்னர் காணாமல் போன – ஆனால் இறந்துவிட்டதாக நம்பப்படும் – ஊடகவியலாளர் எக்நெலிகொடவின் மனைவி பக்கம் திரும்பியது. “நீ மேற்கு நாடுகளின் கையாளமாக மாறிவிட்டாய்” என ஞானசாரர் எச்சரிக்கும் பாணியில் சாட்டினார்.
திடுக்கிட்டுப் போன நீதிபதி திசநாயக்கா நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்த ஞானசார தேரரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்காது – மஞ்சள் அங்கிக்கு மரியாதை கொடுப்பது போல தனது தீர்ப்புக்கான காரணத்தையும் சட்டம் தன்மீது விதித்துள்ள கடமையையும் அவருக்கு விளக்க முற்பட்டார். இது போதும் ஞானசார தேரருக்கு. அவர் நீதிபதி மீது பாய்ந்தார். “இது வெள்ளைக்காரனது சட்டம். எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்கள், அதை ஏற்க நான் தயார். இந்த வழக்கத்தை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் தயாரில்லை. ஆன காரணத்தினாலேயே இன்று நாம் இங்கு வந்திருக்கிறோம்” எனச் சொல்லிவிட்டு ஞானசார தேரர் நீதிமன்றத்தை விட்டு புயல் போல வெளியேறினார். அவரை உடனடியபகக் கைது செய்யுமாறு நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
இராஜகிரியாவில் உள்ள இரண்டு அடுக்கு மாளிகை கொண்ட கோயிலில் இருந்து ஞானசார தேரர் பொலீசார் சிலரால் கைது செய்யப்பட்டு அவரது பென்ஸ் காரில் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது வெறிபிடித்த ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்தொலி எழுப்பி ஒரு கதாநாயகனுக்குக் கொடுக்கிற வரவேற்பைக் கொடுத்தார்கள்.
ஏற்கனவே கூறியவாறு ஞானசார தேரர் மேன்முறையீடு நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்துக்குச் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தன தனது தீர்ப்பில் நீதித்துறையில் கண்ணியத்தை பாதுகாக்கும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு இருக்கிறது என்று சொன்னார்.
ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு சனாதிபதி சிறிசேனா பொதுமன்னிப்பு வழங்கியதை ததேகூ வன்மையாகக் கண்டித்துள்ளது.
“ஹோமகம நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரர் சிறையிலிடப்பட்டார். ஞானசார தேரருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணையொன்றின் பின்னரே அவருக்கு 6 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இந்நாட்டின் பவுத்தர் அல்லாத குடிமக்கள் மீதான வன்முறையைத் தூண்டிவிடும் இவர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டதிற்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளியாகக் காணப் பட்டார். எல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால் இனவெறி மற்றும் மதவெறியை கட்டுப்படுத்துவதாகும்.
எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில் பவுத்த தேரர் ஒருவர் மீதான சனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டிற்குத் தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது.
அச்செய்தி யாதெனில், எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது, ஆனால் எண்ணிக்கையில் அதிகமாவர்களுக்கு அசௌகரியம் அளிக்கும் தீங்கற்ற செயல்கள் மிகக் கடுமையாக நோக்கப்படும் என்பதாகும். இது பெரும்பான்மை வாதத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லக் கூடியதாகும்.
சனாதிபதியின் இந்நடவடிக்கையை கண்டனம் செய்து இந்த ஆபத்தான வழக்கத்தை எதிர்மாறாக மாற்றுவதற்கு நேர்வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்” என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
ஞானசார தேரருக்கு சனாதிபதி சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியதை ஒரு சில இடதுசாரி சிங்கள அரசியல்வாதிகளே கண்டித்திருக்கிறார்கள். பெரிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுசன பெரமுனக் கட்சிகள் மவுனம் காப்பது கவனிக்கத்தக்கது.
விடுதலையான கையோடு தான் இனிமேல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் புத்தரின் போதனைகளைப் பரப்பப் போவதாகவும் ஞானசார தேரர் சொல்லுகிறார். அதே நேரம் ஊடக சந்திப்புகளில் இனவாதம் பேசுகிறார். புர்கா, நிகாப் ஆகியவற்றையும், மதரஸாக்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் அதற்கு முஸ்லிம் சமூகத்துடன் ஆலோசனை செய்யத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.
இவ்வாறான சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட ஞானசார தேரரைத்தான் கடந்த கிழமை சனாதிபதி சிறிசேனா பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார். ஆறு ஆண்டுகால சிறைத் தண்டனையில் 10 மாதங்களையே சிறையில் கழித்துள்ளார். இரண்டு நாள் கழித்து ஞானசார தேரரையும் அவரது தாயாரையும் சனாதிபதி சனாதிபதி தனது மாளிகைக்கு அழைத்துப் பேசியுள்ளார்.
இதன் மூலம் சனாதிபதி சிறிசேனா நீதித்துறையை அவமானப் படுத்தியுள்ளார். அதன் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார். வலிந்து காணாமல் போன எக்நேலிக்கொடவின் மனைவி சந்தியாவுக்கு அநீதி இழைத்துள்ளார்.
ஒருவன் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமானப்படுத்தலாம், 19 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை பெறலாம் ஆனால் சனாதிபதி அவனை அற்ப அரசியல் இலாபத்துக்காக பொது மன்னித்து அளித்து விடுதலை செய்து விடலாம். இது நீதித்துறைக்கு ஒரு மோசமான முன் உதாரணமாக இருக்கப் போகிறது.
சனாதிபதி சிறிசேனா ஞானசார தேரரை அரசியல் இலாபத்துக்காக பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருப்பது நாட்டின் நீதித்துறையை அவமானப் படுத்திய குற்றமாகும். இதனால் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற கோட்பாடு காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது! எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது! நாட்டின் இனவாத – மதவாத சக்திகளுக்குப் பச்சைக் கொடி காட்டியது போன்றது. சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற சனநாயக் கோட்பாட்டுக்கு குழிபறிப்பது போன்றது. நச்சுப் பாம்புக்கு பால் வார்த்த கதை போன்றது.
“பவுத்த பிக்கு ஒருவன் தனக்குக் கிடைத்ததை இகழாதிருப்பானாக. மற்றவர்களுடைய ஆஸ்தியைக் கண்டு அழுக்காறு அடையாதிருப்பானாக. மற்றவர் அடைந்த நலத்தைக் கண்டு அழுக்காறு கொள்ளும் பிக்கு சமாதி நிலை அடைய மாட்டான்” – தம்மபாதம்.
Leave a Reply
You must be logged in to post a comment.