தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் சாதிக்கவில்லை என்று வித்தியாதரன் சொல்வது உண்மைக்குப் புறம்பானது! 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் சாதிக்கவில்லை என்று வித்தியாதரன் சொல்வது உண்மைக்குப் புறம்பானவை! 

நக்கீரன்

விழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர் வித்தியாதரனும் அதைத்தான் செய்கிறார்.

உயிர் நீத்த ஞாயிறு  அன்று நடந்தேறிய பயங்கரவாதத்தை அடுத்து அரசாங்கம் அவசர காலச் சட்டம் பிறப்பிதற்கான தீர்மானம் ஒன்றை  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.  அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு ஆதரவாக வாக்களித்தது. அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எந்தப் புத்திசாலியும் சொல்ல மாட்டான். நாட்டில் எழுந்துள்ள பயங்கரவாத நெருக்கடியைக் கையாள அரசாங்கத்துக்கு சாதாரண சட்ட அதிகாரங்களைவிட மேலதிக சட்ட அதிகாரம் தேவைப்படுகிறது.

இப்போது அவசரகால நிலமையைச் சாட்டாக வைத்து இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்து வி.புலிகள் தொடர்பான ஒரு படம் உட்பட சில பொருட்கள் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறையில் இருந்து  கைப்பற்றியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மீது அவசரகாலச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகளின் கீழ்மட்டுமல்ல பிணையில் வெளியே வரமுடியாதவாறு வேறு சட்டங்களின் கீழும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக சுமந்திரன் நா.உ  தெரிவித்துள்ளார்.  அதனை வித்தியாதரன் வரவேற்றுள்ளார். ஆனால் இதனைச் சாட்டாக வைத்து “தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்ந்த மோசமான – கொடூரமான – குரூரமான – யுத்தம் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன. அந்தப் போரழிவுகளிலிருந்தும் பேரழிவுகளிலிருந்தும் தமிழினம் இன்னும் மீளவேயில்லை. யுத்தச் சீரழிவுகள் சீரமைக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப் பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மீள்குடியமர்வு, புனர்நிர்மாணம் தசாப்தம் கடந்தும் பூர்த்தியாகவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை தீர்வின்றித் தொடருகின்றது.

அரசியல் கைதிகள் சிறையில் வாடும் நிலைமை நீடிக்கின்றது. பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் பேரவலத்துக்கு நீதி கிடைக்கவேயில்லை. உண்மைகள் கண்டறியப்படவில்லை. பொறுப்புக் கூறல் நிலைநாட்டப் படவில்லை. மீள நிகழாமை உறுதிப்படுத்தப்படவில்லை. இழப்பீடுகள் சரி வர வழங்கப்படவில்லை. இவ்வளவு “இல்லைகளுக்கு மத்தியிலும் மீள் இராணுவக் கெடுபிடி ஆக்கிரமிப்பு என்ற பேரிடி தமிழரை வந்து தாக்கியிருக்கின்றது” என்று  வித்தியாதரன் புலம்புகிறார்.

போரில் வெற்றிபெற்றவன் வரலாற்றை எழுதுகிறான், எல்லைகளை நிர்ணயிக்கிறான் என்று சொல்வார்கள். அதுதான் சிறிலங்காவில் நடக்கிறது. ஆனால் இந்தப் பட்டியலில் சொல்லப்பட்ட சிக்கல்களுக்கு முழுதாக நாம் தீர்வு காணவில்லை என்பது உண்மைதான். நாம் கேட்டதெல்லாம் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். நினைத்ததெல்லாம் கைகூடவில்லை என்பதும் சரிதான். ஆனால் காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர் பற்றிய விசாரணை, அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆகவே  ஒன்றுமே நடக்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது!

(1) யுத்தச் சீரழிவுகள் சீரமைக்கப்படவில்லை.ஆக்கிரமிக்கப் பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இது உண்மையல்ல.  கணிசமான தனியார் மற்றும் அரச காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு 2,195,284.02 ஏக்கர்களாகும். அவற்றில் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவிற்கு வந்தபோது 46,448.67 ஏக்கர் அரச காணிகளையும் 26,275.48 ஏக்கர் தனியார் காணிகளுமாக மொத்தம் 72,724.15 ஏக்கர் நிலத்தினை அரச படை தனதாக்கிக் கொண்டிருந்தது. இந்த மொத்த நிலத்தில் இதுவரை (மார்ச் 21, 2019)  38,648.98 ஏக்கர் அரச காணிகளும் 23,842.24 ஏக்கர் தனியார் காணிகளும் என மொத்தமாக 62,491.22 ஏக்கர் காணிகள்  அரச படையினரால் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய சிறிலங்கா முப்படை வசம் தற்போது இருந்து வருகின்ற காணியின் பரப்பளவு 10,232.93 ஏக்கர்களாகும்.  அதில் 7,799.69 ஏக்கர் அரச காணி மற்றும்   2,233.24 ஏக்கர் தனியார் காணி  உள்ளடங்குகின்றன. இவற்றையும் விடுவிப்பதற்கான அழுத்தங்கள் கொடுக்கபட்டு வருகின்றன.  

சம்பூரில் வித்தியாதரன் அவர்களின் நண்பர் மகிந்த இராசபக்ச கேட்வே இன்டஸ்றீஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு  அ.டொலர் 4 பில்லியன் முதலீட்டில் கனரக தொழிற்சாலைகள்  நிறுவ 99 ஆண்டுக் குத்தகைக்கு கொடுத்த 818 ஏக்கர் காணியை  நூறு விழுக்காடு மீட்டெடுத்து இடம்பெயர்ந்த  825 குடும்பங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது. அதே போல சம்பூரில் கடற்படை பிடித்து வைத்திருந்த  617 குடும்பங்களுக்குச் சொந்தமான 237  ஏக்கர் காணியும் மீட்கப்பட்டு  சொந்தக்காரர்களுக்கு கையளிக்கப்பட்டது. 

(2) மீள்குடியமர்வு, புனர்நிர்மாணம் தசாப்தம் கடந்தும் பூர்த்தியாகவில்லை

ஆம் பூர்த்தியாகவில்லை என்பது சரியே. ஆனால் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

(அ) இந்தியா 44,000 சிமெந்து வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

(ஆ) சிறிலங்கா அரசு இந்த ஆண்டு ஒவ்வொன்றும் பத்து இலட்சம் பெறுமதியான  20,000 வீடுகளை  வட – கிழக்கில் அமைக்கவுள்ளது. இதற்காக 2019 வரவு செலவுத் திட்டத்தில் உரூபா 750 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(இ) போர்க் காலங்களில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வசித்த வரும்  381 குடும்பங்களுக்கான காணிகளை பெற்று கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தள்ளது. போர்க் காலங்களின் போது 25 அகதிமுகாம்களில் இடம்பெயர்ந்து வசித்துவந்த 577 குடும்பங்களில் 381 குடும்பங்கள் சொந்த காணிகள் அற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் யாழ்பாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதியளவான காணிகள் காணப்படாமையினால் பாரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்காக தனியாருக்குச் சொந்தமான காணிகளை கொள்வனவு செய்து வழங்குவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டள்ளது.(http://www.virakesari.lk/article/53269)

(ஈ) பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெண்களுக்கு உருபா 1,400 மில்லியன் கடன் நிவாரணம் வழங்கும் திட்டத்தை வடக்கில் கடந்த பெப்ரவரியில் தொடக்கி வைத்துள்ளார்.

(உ) போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி அமைச்சு கடந்த நான்கு வருடங்களாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வழங்கி வந்திருக்கிறது. இன நல்லிணக்கம், சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் வட மாகாணத்துக்கென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வரவுசெலவுத் திட்டத்தில் முதல் முறையாக வடக்குக்கு இன நல்லிணக்கம் என்ற பிரிவுக்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போல் கிழக்குக்கு உரூபா 1,250 மில்லியன் பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

(ஊ) இந்த ஆண்டு ஊர்ப்புரட்சி திட்டத்தின் கீழ் ததேகூ நா.உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உரூபா 30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

(எ) ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 158 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்படவுள்ளது. இந்த நிதியைக் கொண்டு,யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறையிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையிலும், இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. மண்டைதீவில் படகுகள் நங்கூரம் பாய்ச்சும் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.மேலும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தலா 8 மீன்பிடித் துறைமுகங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மீன்பிடித் துறைமுகங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 மீன்பிடித் துறைமுகங்களும், திருத்தப்பட வேண்டியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

(ஊ) கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் திட்டங்களுடன் சிறப்பாக முன்மொழியப்பட்ட பரந்தன் முதல் முருகண்டி வரையிலான ஏ9 பாதைக்கான மாற்றுப் பாதையும் தார்ப்படுக்கை வீதியாக அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பணிக்கான உருபா 1,665 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்ப் பட்டுள்ளது. அதேபோன்று ஆயிரம் ஏக்கர் மரமுந்திரிகைத் திட்டம் மற்றும் கிளிநொச்சி பொதுச் சந்தைக் கட்டிட அபிவிருத்திக்கு உரூபா 765 மில்லியன் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன.

() நுண்கடன் நிறுவனங்களினால் நாட்டின் 12 மாவட்டங்களில் 45 ஆயிரத்து 139 பெண்கள் பெற்றுக்கொண்ட 1255 மில்லியன் ரூபா கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில் நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் வடக்கில் 5,081பெண்கள் தங்களின் நுண்கடனை மீளச் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஊ) மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய உருபா450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (http://www.hirunews.lk/tamil/175662/%E0%A) செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (http://gtamils.com/2018/12/11/development-of-the-port-of-mayilithi-port/) இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் உருபா 245 மில்லியன் அலை தடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

(ஐ) காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிதியுதவியாக உருபா 6.9 பில்லியனை (அ.டொலர் 45.27 மில்லியன்)  இந்தியா  வழங்கியுள்ளது. இந்த நிதி உதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக காங்கேசன்துறை பரிணமிக்கும்.

(3) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை தீர்வின்றித் தொடருகின்றது.

ஆம் தொடர்கின்றது. ஆனால் காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் 2018 ஆம் ஆண்டு முதல்  முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அலுவலகத்தை உருவாக்க உரூபா 1400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

(4) அரசியல் கைதிகள் சிறையில் வாடும் நிலைமை நீடிக்கின்றது.

2015 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 217 தமிழ்க் கைதிகள் சிறையில் இருந்தார்கள். அவர்களில் இப்போது 107 பேர்தான் சிறையில் இருக்கிறார்கள். குற்ற ஆவணம் தாக்கல் செய்யாது விசாரணை ஏதுமின்றி ஆண்டுக்கணக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ததேகூ வலியுறுத்தி வருகிறது. இதன் விளைவாக கடந்த மாதம் 50 கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

(5) பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் பேரவலத்துக்கு நீதி கிடைக்கவேயில்லை. உண்மைகள் கண்டறியப்படவில்லை. பொறுப்புக் கூறல் நிலைநாட்டப் படவில்லை. மீள நிகழாமை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தச் சிக்கல்களை தீர்த்து வைக்கத்தான் ஐநாமஉ பேரவையில்   கடந்த ஒக்தோபர் 01, 2015 இல் தீர்மானம் 30-1  நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு கேட்டு தீர்மானங்கள் 34-1 (2017)  40-1 (2019) இல் நிறைவேற்றப்பட்டன. இலங்கைத் தமிழ்மக்களின் சிக்கலை ஐநாமஉ பேரவையில் ஒரு பேசுபொருளாக வைத்ததே ததேகூ த்தான். 2011 ஆம் ஆண்டு சம்பந்தன் ஐயா தலைமையில் அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு 3 நாட்கள் நடத்திய பேச்சு வார்த்தைகளின் பெறுபேறுதான் அமெரிக்கா  சிறிலங்கா பிரச்சனையில் தலையிட்டது என்பது வரலாறு.

அரசியல் ஐக்கியம் வேண்டும் என்கிறார் வித்தியாதரன். இதற்கு யாரும் எதிர்ப்பில்லை. இது வரவேற்க வேண்டியது.  ததேகூ எல்லோரையும் (டக்லஸ் தேவானந்தா நீங்கலாக) அரவணைத்துப் போகவே விரும்புகிறது. 2010 ஆம் ஆண்டு ததேகூ இல் இருந்து  தானாக வெளியேறி கஜேந்திரகுமார் தனிக் கட்சி தொடங்கினார். கெஞ்சிக் கேட்டும் பிடிவாதம் பண்ணி வெளியேறிவிட்டார். புலம்பெயர்ந்த வி.புலி மிச்சங்களின் பேச்சைக் கேட்டுத்தான் கஜேந்திரகுமார் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சுரேஸ் பிறேமச்சந்திரன் தேசியப் பட்டியலில் இடம் கேட்டு அது கொடுக்கவில்லை என்றவுடன் வெளியேறினார். ஆனந்தசங்கரியார் தானாக வந்தார் பின்னர் தானாகவே போய்விட்டார்.

தொடக்கத்தில் ததேகூ இல் சேர மறுத்த சித்தார்த்தன் பின்னர் சேர முன்வந்த போது சேர்த்துக் கொண்டோம். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியைக் கேட்டு அது கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றைத் தோற்றுவித்துள்ளார். அந்தக் கட்சிக்குப் பெயர் தமிழ் மக்கள்  கூட்டணி. ஆனால் இதுவரை ஒரு கட்சிகூட அந்தக் கட்சியோடு கூட்டணி சேரவில்லை!

ஏன் வித்தியாதரனே ததேகூ இல் போட்டியிட வேட்பு மனுக்கேட்டு அது கொடுக்கப்படவில்லை என்றவுடன் புதுக் கட்சியைத் தொடக்கி தேர்தலில் போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்தார். அதற்காக அவர் அற்பத்தனம் பற்றியும் அரசியல் ஐக்கியம் பற்றியும்  பேச அருகதை இல்லை என்று நாம் வாதிட மாட்டோம்.  அது அவரது எழுத்துச் சுதந்திரம். பேச்சுச் சுதந்திரம்.

https://4.bp.blogspot.com/-DYCc0OcY1o0/W5VctdkGhVI/AAAAAAAAo0s/Vm-64dQ7Z-8MA0Gfcs35qC6uwJ5FpZ44gCLcBGAs/s640/Myliddy%2Binvitation%2BFinal%2BPhoto.jpg

Image result for kks harbour 

Image result for cement houses in Northern province 

Image result for Sri lanka Northern province development

About editor 3150 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply