சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!

நக்கீரன்

குரு –  சீடனே! வா அப்பா! என்னதான் செய்திகளை செய்தித் தாள்களில் படித்தாலும் அவற்றை  உன் வாயால்  கேட்பது போன்ற திருப்பி இல்லை.  ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பார்கள்.  இன்னும் சொல்லப் போனால் உன்னோடு பேசுவது போல் அவை பத்தியப்படுவதில்லை.  சில ஊடகங்கள்  கவர்ச்சியான தலைப்புகளைப் போடுகிறார்கள்.  ஆனால் உள்ளே சென்று செய்தியைப் படித்தால் அதில் பரபரப்போ, அதிர்ச்சியோ, பதட்டமோ இருப்பதில்லை!

சீடன் – நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குருவே! இதோ இந்தச் செய்தியைப் படியுங்கள் குருவே!  “கை நரம்பை அறுத்துக்கொண்டு மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை! கெட்ட வார்த்தையால் அசிங்கமாக திட்டிய நடிகை – உண்மை இதோ” என்பதுதான் செய்தித் தலைப்பு.  இதைப் படிப்பவர்கள் மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை  செய்து  இறந்துவிட்டார் என்றுதான் முதலில் நினைப்பார்கள். ஆனால் உள்ளே செய்தியைப் படித்தால் அது வதந்தி என்று போட்டிருக்கிறார்கள். இந்தச் செய்திக்கு “மைக்கேல் ஜாக்சன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வதந்தியாம்”  என்ற தலைப்புப் போட்டிருக்க வேண்டும். இப்படித்தான் 90விழுக்காடு செய்திகள்!

குரு – இந்தச் செய்திபோல் இன்னொரு செய்தி போட்டிருக்கிறார்கள். “ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா? மைத்திரியின் தடாலடிப் பதிலால் கொழும்பு அரசியலில் குழப்பம்” என்பதுதான் செய்தியின் தலைப்பு! இராசபக்ச குடும்பம் புதிதாகத் தொடக்கிய சிறிலங்கா பொதுசன முன்னணி அடுத்த சனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சி சார்பாக கோத்தபாய இராசபக்சாவை நிறுத்துவதென்று போன கிழமையே தீர்மானித்து விட்டார்கள். கோத்தபாயாவும் அடுத்த தேர்தலில் தான் சனாதிபதிப் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்து அதற்கான பரப்புரையிலும் மும்மரமாக இறங்கிவிட்டார். அவரது வெற்றிக்காக தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகள்,இளைப்பாறிய முன்னாள் இராணுவ தளபதிகள், அறிவுப் பிழைப்பாளர்கள், பவுத்த தேரர்கள் எனப் பலர் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்.

சீடன் – நீங்கள் சொல்வது முற்றிலும் சரி குருவே! சனாதிபதிப் பதவிக்கு இராசபக்சா குடும்பம் தவிர்ந்த வேறு யாரையும் நிறுத்த அந்தக் குடும்பம் நிச்சயம் முன்வராது.  இதற்குச் சாத்திரம் பார்க்கத் தேவையில்லை. ஒரு காலத்தில் சேனநாயக்க, பண்டாரநாயக்க குடும்பங்கள் அரசியலில் கோலோச்சின. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சுதந்திரக் கட்சியின் நிறுவனர் சந்திரிகா குமாரதுங்காவே அந்தக் கட்சியால் ஓரங்கட்டப் பட்டுள்ளார். இப்போது இராசபக்ச குடும்பங்கள்தான் ஆட்சிக் கட்டிலில் யார் உட்கார வேண்டும், யார் உட்காரக் கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது!

குரு – பின் எதற்காக சனாதிபதி சிறிசேனா சிறிலங்கா பொதுசன முன்னணி மற்றும் சிமசுமு இரண்டின் சார்பில் தான்தான் சனாதிபதி வேட்பாளர் எனச்  சொல்லிக் கொண்டு இருக்கிறார்?

சீடன் – நல்ல கேள்வி குருவே! அரசியலில் சிறிசேனா இன்னமும் ஒரு பால்குடிப் பிள்ளைதான். அவருக்குத் தனது நண்பன் யார், எதிரி யார் என்பது தெரியாமல் இருக்கிறது! கடந்த ஆண்டு ஒக்தோபர் 26 ஆம் திகதி காதும் காதும் வைத்தது போல மகிந்த இராசபக்சாவைத் தலைமை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகிந்தாவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும் பணத்தை வாரி இறைத்து சிலரை ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) யில் இருந்து இழுத்து எடுக்கலாம் எனக் கணக்குப் போட்டார். அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ள நாடாளுமன்றத்தை  நொவெம்பர் 14 மட்டும் ஒத்திப் போட்டார்! ஆனால் அப்படியும் அது சரிவரவில்லை!

குரு – ஏனாம்?

சீடன் – உறுப்பினர்களை இழுப்பதற்கான விலை அதிகரித்துவிட்டது.  ஓர் உறுப்பினர் கட்சிதாவ  ரூபா 500 மில்லியன் கேட்பதாக சனாதிபதி சிறிசேனாவே சொல்லிக் கவலைப் பட்டார். அந்தளவு பணத்துக்கு எங்கே போவது என அவரே சலித்துக் கொண்டார்!

குரு – அடுத்த சனாதிபதி சிறிலங்கா பொதுசன முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என பசில் இராசபக்ச போற இடம் எல்லாம் சொல்லிக் கொள்கிறார். இந்தச் சூழ்நிலையில் சிறிசேனா தொடர்ந்து சனாதிபதிக் கனவோடு இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது!

சீடன் – ஆசை, ஆசை, ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது? அவர் தலைவராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமும் தேய்ந்து கொண்டு வருகிறது.  மார்ச்சு 12 அன்று அரசாங்கத்தின்  வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் பின்னர் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அதில் வரவு செலவுக்கு ஆதரவாக 119 உறுப்பினர்களும் எதிர்த்து 76 உறுப்பினர்களும் வாக்களித்தார்கள். இருபத்தொன்பது  உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். ஆதரித்து வாக்களித்தவர்களில் 5 உறுப்பினர்கள் சிறிசேனா தலைமை தாங்கும் சிறிலங்கா மக்கள் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்!  ஒரு காலத்தில் சிறிசேனா அணியில் 46 உறுப்பினர்கள் இருந்தார்கள். அமைச்சுப் பதவி கிடைக்காத விரக்தி காரணமாக சிலர் இராசபக்சாவின் புதிய கட்சிப் பக்கம் தாவிவிட்டார்கள். மேலும் சிலர் ஆளும் கட்சிப் பக்கம் போய்விட்டார்கள். இருந்தும் சிறிசேனா தொடர்ந்து சனாதிபதிக் கனவில் மிதக்கிறார்.

குரு – கோத்தபாய இராசபக்சா மீது பல ஊழல் வழக்குகள்  சிறப்பு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி சனாதிபதி வேட்பாளராகக் களம் இறக்குகிறார்கள்?

சீடன் –  சிங்கள வாக்காளர்கள் ஊழல்பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. கடந்த  காலத்தில் மகிந்த இராசபக்சா குடும்பமும் உறவினர்களும் ஊரை அடித்து உலையில்  போட்டார்கள். ஆனால் அதைப் பற்றி சிங்கள மக்கள் அலட்டிக் கொள்வதாக இல்லை! சென்ற ஆண்டு நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுசன முன்னணிக்கு 40. 47 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

குரு – மறைந்த மகிந்த இராசபக்சாவின் தந்தையாருக்கு நினைவு மண்டபமும் அருங்காட்சியகமும்  கட்டுவதில் அரச வளங்களைப் பயன்படுத்தினார்கள் எனச் சொல்கிறார்களே?

சீடன் – அதையேன் கேட்கிறீர்கள் குருவே! இராசபக்ச குடும்பத்தினர் ஊரார் வீட்டுப் பணத்தில்  தங்களது தந்தையாருக்கு நினைவு மண்டபமும்  அருங்காட்சியகமும் கட்டியிருக்கிறார்கள். கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது  இந்தக் கட்டிட வேலையை மேற்கொள்ளுமாறு இலங்கை காணி மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்துக்குக் கட்டளையிட்டார். அந்தத் திட்டத்துக்கான மதிப்பீட்டுச் செலவு  ரூபா 33.9மில்லியன். குறித்த கூட்டுத்தாபனம் கட்டுமான வேலையைக் கடற்படைக்குக் கொடுத்தது. கட்டி முடிந்ததும் கட்டிடச் செலவு  ரூபா 81.30 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டது. இந்தத் தொகையை கட்டுமாறு கோத்தபாயாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. முதலில் ரூபா 25 மில்லியனும் பின்னர் ருபா 8.90 மில்லியன் கட்டப்பட்டது. மிகுதித் தொகையான ரூபா 47.40 கட்டப்படவில்லை. இப்போது இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் முன் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்ற கோத்தபாயாவின் சட்ட வல்லுநர்கள் வாதாடினார்கள். அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

குரு – இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம் என்று சொல்வார்களே அதைவிட இது மோசமாக இருக்கிறது. அரச வளங்களைப் பயன்படுத்தியதே படு பிழை. அதற்கும் மேலாக கட்டிடச் செலவை ஈடுசெய்யாதது பாரதூரமான மோசடி. கோத்தபாய இராசபச்சாவின் தந்தையார் தனது மக்களின்  யோக்கியதை பற்றி என்ன நினைப்பாரோ தெரியவில்லை.

சீடன் – இது மட்டுமல்ல கோத்தபாய மீது இன்னொரு ஊழல்  வழக்கும் வைக்கப்பட்டுள்ளது.  Avant Garde Maritime Services Private Limited என்ற ஆயுத வின்பனை நிறுவனம் பற்றியது.  இந்த நிறுவனம் ஆயுதம் வாங்கி விற்றதில் அரசாங்கத்துக்கு ரூபா 11.4 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராசபக்சா மற்றும் ஆறு கடற்படை அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் கோத்தபாய ஏழாவது எதிரி ஆவர். வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்படி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஒருவர் எப்படி சனாதிபதிப் பதவிக்கு நியமனம் செய்யப்பட இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது!

குரு – ஒருவேளை ஊழல் செய்வது சனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற கோத்தபாயவுக்கு இருக்க வேண்டிய தகைமைகளில் ஒன்றாக இராசபக்சா குடும்பத்தினர் நினைக்கிறார்கள் போல் தெரிகிறது?

சீடன் – அதையேன் கேட்கிறீர்கள் குருவே! மல்வானா இல. 111/03 Malwana River Bank Road இல் உள்ள 16 ஏக்கர் காணியில் ரூபா 240 மில்லியன் செலவில் பசில் இராசபக்சா சகல வசதிகளுடன் ஆன ஒரு மாளிகை கட்டியிருந்தார். பசில் இராசபக்சா கொடுத்த ரூபா 420 மில்லியன் பணத்தில்தான் அந்த வீட்டைக் கட்டியதாகக் கட்டிடக்கலைஞர் முடிதா ஜெயக்கொடி நீதிமன்றத்தில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இந்த மாளிகைக்கான அத்திவாரம்  பெப்ரவரி 10, 2013 இல் போடப்பட்டது.  மாளிகை கட்டப்பட்ட காலத்தில் திருமதி  புஷ்ப்பா இராசபக்ச வந்து மேற்பார்வை செய்துள்ளார். இந்தக் காணியை 25 நொவெம்பர், 2010 இல்  ரூபா64 மில்லியன் கொடுத்து இராசபக்ச குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான திருக்குமரன் நடேசன் வாங்கியிருந்தார். அவருக்குத் தெரியாமல்தான் மாளிகை கட்டப் பட்டததாம். பின்னர் அவருக்கு ரூபா 40 மில்லியன் கொடுக்கப்பட்டது.   இன்றைய மதிப்பீட்டின் படி  காணி மற்றும் மாளிகை இரண்டின் பெறுமதி ரூபா 208 மில்லியன் ஆகும்.  இந்த வழக்கை விசாரித்த பூகொட நீதிபதி டிஏ றுவன் பத்திரான (D. A. Ruwan Pathirana) அந்த வீட்டையும் காணியையும் ஏலத்தில் விற்றுவிட்டு தேறுகிற  பணத்தை திறைச்சேரிக்கு சேர்க்குமாறு உத்தரவு பிறப்பித்தார்!

இந்த வழக்கை FCID  என்று  அழைக்கப்படும் நிதி குற்றம் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்திருந்தது. எதிர்வாதிகள் பசில் இராசபக்ச, திருக்குமரன் நடேசன் மற்றும் முடித ஜெயக்கொடி ஆவர். பணச் சலவைச்  சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

குரு – மில்லியன் எல்லாம் இவர்களுக்கு சில்லறைக் காசு போல் தெரிகிறதே?

சீடன் – அதேதான் குருவே! இந்தப் பணம் இலஞ்சமாகக் கிடைத்தது. அதனை ஒத்துக் கொள்ள முடியாது. அதனை ஒத்துக் கொண்டால் சிறைக்குச் செல்ல வேண்டிவரும். மகிந்தரது ஆட்சியில் முக்கியமான அமைச்சான பொருளாதார மேம்பாடு, சமுர்த்தி அமைச்சராக இருந்தவர்.   பசில் இராசபச்சாவை மற்றவர்கள் ‘மிஸ்டர் 10’ என்று அழைத்தார்கள். அதாவது அவரது தரகு 10 விழுக்காடு ஆகும்.

குரு – இந்த மாதிரியான  இலஞ்சலாவண்யம், ஊழல், கொலை ஆட்கடத்தல் போன்ற குற்றச் சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து வரும்  இராசபக்சா குடும்பம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டை அந்தப் புத்தபிரானினாலும் காப்பாற்ற முடியாது!

சீடன் – எனக்குத் தமிழ் வாக்குகள் தேவையில்லை என்கிறார் கோத்தபாய. காரணம் அவர் தனது வெற்றிக்கு சிங்கள – பவுத்த தீவிர தேசியவாதிகளின் ஆதரவு போதும் என நினைக்கிறார். அவரைப் பொறுத்தளவில் நாட்டில் இனச் சிக்கல் கிடையாது. பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டால் போதும். நாட்டில் தேனும் பாலும் வழிந்தோடும் என நினைக்கிறார்.

குரு – சி(ரி)றிசேனாதான் பாவம். அவர் இன்னமும் சனாதிபதிக் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்! துரும்பைப் பிடித்தாவது கரைசேர நினைக்கிறார். ஆனால் அவரது  சனாதிபதி பதவி நாட்கள் எண்ணப்படுகிறது என்பதுதான் யதார்த்தம்!

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply