கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்

கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3)

அரசியலில் சாணக்கியம் அவசியம்

நக்கீரன்

மறைந்த கோடீஸ்வரன் அவர்களது ஆளுமைபற்றி தமிழ் ஏடுகள் பலவாறு போற்றி எழுதுவருகின்றன. இது மொழிப் போராளியான அவரை தமிழ் மக்கள் மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. கோடீஸ்வரனைப் போற்றுகின்ற சமூகத்தில் அவர் போன்றவர்கள் நாளை தோன்றுவார்கள். போற்றாவிட்டால் அப்படிப்பட்ட மொழிப் போராளிகள்  தோன்ற வாய்ப்பில்லை.

கடந்த மார்ச் 1, 2019  அன்று காலை தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றின் சிறப்பு அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் கூடிய இந்தச் சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வில் மறைந்த மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அமர்வில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமகமலன்,யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், தொழில் நியாய சபையின் தலைவர் வெள்ளத்தம்பி முகம்மட் சியான் மற்றும் சட்டத்தரணிகள், சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரனின் இளைய மகன்  மருத்துவர் கே.சிவகுமார் உள்ளிட்ட உறவினர்கள் பங்கேற்றி இருந்தனர்.

அமர்வின்  தொடக்கத்தில் ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுப்ரமணியம் பரமராசா இரங்கல் உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இரங்கல் உரையாற்றினார்.  அப்போது  “ஏழைகளுக்காக நீதிவேண்டி ஊதியம் பாராது,தன்நலம் கருதாது அவர் ஆற்றிய சேவை, வெளிப்படுத்திய உணர்வுகள், அவர் எடுத்த தற்துணிவான முடிவுகள், அன்னாரை தனித்துவம் மிக்க வராக இனங்காட்டியதுடன் மெய்யிய லாளர் பிளேட்டோவின் சிந்தனைக் கோட்பாடான நிதானம், நீதி, வீரம், பெருந்தன்மை, உண்மை இவைதான் ஆத்மாவின் அணிகலன்கள் என்ற கோட்பாட்டிற்கு ஏற்றவாறு வாழ்ந்த ஒரு கர்மவீரன் என்றால் அது மிகையாகாது” எனக் குறிப்பிட்டார். மேலும் பலர் கோடீஸ்வரனது பன்முக குணாம்சங்களைப் பாராட்டி உரையாற்றினார்கள். (http://www.muthalvannews.com/2019/03/01/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/)

கோடீஸ்வரன் பெயரில் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குப் பற்றிய சில வரலாற்றுச் செய்திகள்  தவறாகப் பதியப்படுவதைப் பற்றி இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளில் சுட்டிக் காட்டியுள்ளேன். வரலாற்றை வரலாறாகப் பதிவு செய்ய வேண்டும். மிகைப் படுத்தியோ குறைத்தோ பதிவு செய்யக் கூடாது. இன்றைய தலைமுறையினரும் இனிவரும் தலைமுறையினரும் எமது வரலாற்றை வரலாற்றாகப் படிக்க வேண்டும்.  வரலாற்றை மிகைப்படுத்தியோ குறைத்தோ பதிவு செய்வதை கோடீஸ்வரனை நன்கு அறிந்தவன் என்ற முறையில்  அவரே விரும்ப மாட்டார்.

“தமிழ் அரச ஊழியர்களை உள்ளடக்கி அரச எழுதுவினைஞர் சங்கத்தை உருவாக்கி அதன் செயற்திட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து அரும்பணி யாற்றியவர்” என்பது பிழையான வரலாறு. நான் முன்னர் குறிப்பிட்டவாறு அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தின் நிறுவனர் என ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் க.சிவானந்தசுந்தரம் அவர்களைத்தான் குறிப்பிட வேண்டும். மேலும் அவர்தான் அதன்  முதல் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

“இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு க ட த் து ம் ச ட் ட ம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து இலங்கைத் தமிழர சுக் கட்சியின் ஊர்கா வற்றுறைப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வ. நவரத்தினத்தின் கரங்களைப் பலப்படுத்து முகமாக அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார்” என்று சொல்லப்படுவதில்   பாதிதான் உண்மை.

1968 இன் முற்பகுதியில் தேசிய அரசாங்கம்  இந்திய – இலங்கை நடைமுறைப்படுத்தும் சட்ட வரைவு (Indo-Ceylon Implementation Bil) ஒன்றை இரண்டாவது வாசிப்புக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. எஸ். தொண்டமான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணமே இந்த சட்ட வரைவு  பிரதமர் டட்லி  சேனநாயக்க அவர்களால் கொண்டு வரப்பட்டது.

இந்த இந்திய – இலங்கை உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் சட்ட வரைவு   நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதனை வ.நவரத்தினம்  தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவும் இல்லை. வாக்களிக்கவும் இல்லை.

அவரது நிலைப்பாட்டைத் தெரிந்து கொண்ட தந்தை செல்வநாயகம் அந்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது நாடாளுமன்றம் வருவதைத் தவிர்க்குமாறு நவரத்தினத்தைக் கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோளுக்கு இணங்க அவர் நாடாளுமன்றத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்டார்.

இந்த இடத்தில் இந்த இந்திய – இலங்கை உடன்பாட்டை  நடைமுறைப்படுத்தும் சட்ட வரைவு தொடர்பான வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை இன்றைய தலைமுறையினருக்குச் சுருக்கமாகச் சொல்வது நல்லதென்று நினைக்கிறேன்.

இலங்கையை பிரித்தானியர்  அரசாட்சி செய்த காலத்தில் அங்குள்ள தேயிலை,  கோப்பி மற்றும் தென்னந் தோட்டங்களில் வேலை செய்ய தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள்  கொண்டு வரப்பட்டனர். 1921 ஆம் ஆண்டு இப்படிக் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1921 ஆம் ஆண்டளவில் 602,700 (15.3 விழுக்காடு) ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை1936 இல் 1,123,000 (15.3 விழுக்காடு) ஆக  உயர்ந்து காணப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பில் நாட்டில் யார் யார் குடிமக்கள், நாட்டின் உத்தியோக மற்றும் தேசிய மொழிகள் எவை என்ற கேள்விகளுக்கு விடை அதில் இருக்கவில்லை. டி.எஸ். சேனநாயக்கா அவற்றை திட்டமிட்டே  தவிர்த்திருந்தார்.

சோல்பரி அரசியல் யாப்பில் நாட்டில் யார் யார் குடிமக்கள், நாட்டின் உத்தியோக மற்றும் தேசிய மொழிகள் எவை என்ற கேள்விகளுக்கு விடை அதில் இருக்கவில்லை.சேனநாயக்கா அவற்றை திட்டமிட்டே  தவிர்த்திருந்தார்.

தீவிர சிங்கள தேசியவாதிகள் இந்தியத் தமிழர்களை திரும்ப இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற1948 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த டிஎஸ் சேனநாயக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக் குடியுரிமை என்ற பெயரில் ஒரு சட்ட வரைவைத் தாக்கல் செய்தார். அந்தச் சட்ட வரைவு  நாடாளுமன்றத்தில் ஓகஸ்ட் 19, 1948 இல் நிறைவேறியது. இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் தந்தை செல்வநாயகம் இந்தியத் தமிழர்கள் சார்பாக உரையாற்றினார். “Today it is the Indian Tamils. Tomorrow, it will be the Sri Lankan Tamils who will be axed …”(இன்று இந்தக் கத்தி மலையகத் தமிழர் கழுத்துக்கு வீசப்பட்டுள்ளது நாளை இது இலங்கைத் தமிழர் மீது வீசப்படும்” என தந்தை செல்வநாயகம் எதிர்வு கூறினார். அவர் சொன்னது போலவே  யூன் 05, 1956 அன்று  சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

On  10 August  1948  SJV Chelvanayakam  registered his strong opposition to the Citizenship Act. “The only communities that are lrage enough like the Tamils, the Indians and Muslims It is such bodies the Honourable Prime Minister wants to hit. He is not hitting us now directly. But when the language issue comes up, which will be the  next one to follow in these series   legislations  we will know where we stand.”

ஓகஸ்ட் 10, 1948 அன்று, செல்வநாயகம் அவர்கள்  குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தனது  கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். “தமிழர்கள்,இந்தியர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற அளவில் பெரிய சமூகங்களை கௌரவ பிரதம மந்திரி அடிக்க விரும்புகிறார். அவர் நேரடியாக நேரடியாக அடிக்கவில்லை. ஆனால் மொழிச் சிக்கல் வரும்போது, இந்தத் தொடர்ச்சியான சட்டங்களுக்கு அடுத்ததாக இருக்கும் நாங்கள் அப்போது எங்கு நிற்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியவரும். ”

இலங்கைக் குடியுரிமைச் சட்ட வரைவை எதிர்த்து தந்தை செல்வநாயகம் உரையாற்றியதோடு நில்லாமல் வாக்களிக்கவும் செய்தார். அவரைப் பின்பற்றி நா.உறுப்பினர்கள் கு.வன்னியசிங்கம், மருத்துவர் இஎம்பி நாகநாதன் போன்றோர் குடிவரவுச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.  பொன்னம்பலம் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட போது அவர் சபையில் இருக்கவில்லை. அதற்குக் காரணம் இருந்தது. சமகாலத்தில் ஜிஜி பொன்னம்பலம் திரைமறைவில் அமைச்சரவையில் சேருவதற்கு டிஎஸ். சேனநாயக்காவோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். குடியுரிமைச் சட்டம் 1948 ஓகஸ்ட் 20 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நொவெம்பர் 15 அன்று ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து சட்டமாகியது.

ஆனால் பொன்னம்பலம் டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் செப்தெம்பர் 03 அன்று கைத்தொழில், தொழில் ஆராய்ச்சி மற்றும் மீன்பிடி  ( Minister of Industries, Industrial Research and Fisheries on 3 September 1948) அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்! இதன் பொருள் என்ன? ஜிஜி பொன்னம்பலம் மந்திரிப்பதவிக்காக தந்தை செல்வநாயகம் போன்றோருக்குத் தெரியாமல் பெரிய சேனநாயக்கா அவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என்பதே. பொன்னம்பலம் செய்த துரோகத்துக்கு இன்றும் தமிழ்மக்கள் வட்டியும் முதலுமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1948 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் 33 இன் கீழ் 5,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே குடியுரிமை பெற முடிந்தது.  பத்து இலட்சத்துக்கு மேலான இந்தியத் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டினர். அடுத்த ஆண்டு1949 இல்  இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்டம்  எண் 48 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டன. 1952 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இந்தியத் தமிழரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவில்லை.

1964 இல் சாஸ்திரி – சிறிமாவோ உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின் கீழ் மொத்தம் 975,000 நாடற்ற இந்தியத் தமிழ் மக்களை தமக்கிடையே பிரித்துக் கொள்ள உடன்பட்டன. இலங்கை 300,000 பேருக்கு குடியுரிமை வழங்க உடன்பட்டது. இந்தியா 525,000 நாடற்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர். எஞ்சியிருந்த 150,000 இந்தியத் தமிழர்களது தலைவிதி பற்றி பின்னர் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த சாஸ்திரி – சிறிமாவோ உடன்படிக்கையை தந்தை செல்வநாயகம் கடுமையாகக் கண்டித்தார். “பன்னாட்டு உறவுகளில் ஐந்து இலட்சம் மக்கள் அரசியல்  அதிகார சதுரங்க விளையாட்டில்   அடமானமாகப்  பயன்படுத்தப்படுகிறார்கள்”  எனக் கண்டித்தார்.

1981 ஆம் ஆண்டளவில் அண்ணளவாக  280,000 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இலங்கை 160,000 பேருக்கு குடியுரிமை வழங்கியது. இந்தியா 1982 இல் சாஸ்திரி -சிறிமாவோ உடன்படிக்கை காலாவாதியகிவிட்டது என்ற காரணத்தைக் காட்டி இல்லாது செய்தது. 1984 இல் போர் காரணமாக இராமேஸ்வரம் படகுப் பயணமும் நின்றுவிட்டது.

கடைசியாக 2003 இல் நாடற்ற இந்தியத் தமிழர்கள் தொடர்பான சிக்கல் முற்றாகத் தீர்த்து வைக்கப்பட்டது. அதற்கான சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1968 இல் ஆட்களை பதிவு செய்யும் சட்ட வரைவு (Persons Registration Act)  நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அப்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி டட்லி சோனநாயக்க அரசில் பங்காளியாக இருந்தது. இந்தச் சட்டம் வயது வந்த குடிமக்கள் எல்லோரும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது. அடையாள அட்டையைக் காட்டத் தவறியவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். இந்தச் சட்ட வரைவை ஆதரிப்பது என தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்தது.

இந்த சட்ட வரைவு பற்றி நாடாளுமன்றத்தில்  இரண்டாவது வாசிப்புக்கு விடப்பட்ட போது அதனை வி. நவரத்தினம் அவர்கள்  மூர்க்கமாக எதிர்த்தார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர் “நான் தமிழர்கள் எதிர்நோக்கப்படக் கூடிய கடும் பேரிடர் பற்றி  கவலை அடைந்தேன். இந்தச் சட்டம் சட்டமாக்கப்பட்டால் அது பெரிய பேரழிவை உண்டாக்கி விடும். செல்வநாயகம் ஒருவரே இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒருவர். எனவே அவரைக் கண்டு இந்த விடயத்தில்  தலையிடுமாறு  கேட்க விரும்பினேன்.  ஆனால் அந்த முயற்சியில் வெற்றியடைவேன் என்ற மாயை என்னிடம் இருக்கவில்லை. இருந்தும் முயற்சி செய்ய விரும்பினேன்.”

சட்ட வரைவுக்கு எதிராக நவரத்தினம் பேசியதோடு நில்லாமல் வாக்களிக்கவும் செய்தார். அப்படிச் செய்த போதுதான் அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.சட்டத்தரணியான வி.நவரத்தினம் தமிழரசுக் கட்சியின் தொடக்க பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டவர்.  தமிழரசுக் கட்சியின் மூளை என்றும் வர்ணிக்கப்பட்டவர். தமிழரசுக் கட்சியில் இருந்த கடும் போக்காளர்களில் அவரும் ஒருவர். வளைந்து கொடுக்க மாட்டார். எதிலும் பிடிவாதம் பிடிப்பவர்.

பலர் நினைப்பது போல “இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு க ட த் து ம் ச ட் ட ம் (1968 இல் ஆட்களைப் பதிவு செய்யும் சட்ட வரைவு)நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வ. நவரத்தினத்தின் கைகளைப் பலப்படுத்து முகமாக அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார்” என்பது தவறு.  நவரத்தினம்  அடையாள அட்டை  சட்டம் நடைமுறைக்கு வந்த போதுதான் அதனை எதிர்த்துப் பேசியதோடு வாக்கும் அளித்திருந்தார்.  அதைத் தொடர்ந்தே  தமிழர் சுயாட்சிக் கழகம் உருவாகியது.

அரசியலில் சாணக்கியம் அவசியம். இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் சில நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்க வேண்டிவரும். புயல் அடிக்கும் போது வளைந்து கொடுக்கும் மரங்கள் தப்பி விடுகின்றன. எதிர்த்து நிற்கும் மரங்கள் சாய்ந்து விடுகின்றன.  பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

நவரத்தினம் அவர்கள் பயந்தது போல அடையாள அட்டை சட்டம் எந்த நெருக்கடியையும் தமிழர்களுக்குக் கொடுக்கவில்லை. இன்று அது பழக்கப்பட்ட –  தேவையான -சட்டமாகிவிட்டது. (வளரும்)

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply