தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!
By கே.எஸ். இராதாகிருஷ்ணன் |
—
உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சுவழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப்பாகுபாடு என்ற இயற்கையான வரையறைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டனர்.
மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர்நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது. ஒரு நாட்டில் நிலையாக வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்திற்குட்பட்டது.
உதாரணத்துக்கு, கனடாவில் கியூபிக் பிரச்னையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டு விடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு தேசிய இனத்தை பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இது குறித்தான விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒருதேசிய இனமாகக் கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில், இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள்இருப்பதால், அதை ஒரு தேசிய இனமாகப் பிரித்துக் காண முடியாது என்றுகருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணான கருத்துகளையும் சிலர் வைக்கின்றனர்.
அரேபிய மொழி பேசும் முஸ்லிம்கள் அரேபியர், துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் துருக்கியர், புஸ்டு மொழி பேசும் முஸ்லிம்கள் புஸ்டுகள் என இந்தோனேசியா வரை வாழும் இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாசாரம், பண்பாடுகளுடன் வாழும் மக்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது.
தேசிய இனத்துக்கு மொழி, மரபு ரீதியான பழக்க வழக்கங்கள், கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பதே கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (ஸ்டேட்) அழைக்கப்படுகிறது. நாடு (ஸ்டேட்) என்பது அரசு, அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தை குறிப்பிடுவதாகும்.
அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாசாரம் கொண்டதாக இயங்க வேண்டும். ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதில்லை என ஜான்ஹட்சின் சன் மற்றும் ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றனர்.
ஒரே மொழியும், கலாசாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம் (நேஷனாலிட்டி – நேஷன் – தேசம்) என்று அழைக்கப்படுகிறது. தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்த ஒரு தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ் மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது.
தொல்காப்பியப் பாயிரம் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய் கல்லெடுத்ததும், யுவான் சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களும், புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்ததெல்லாம் வரலாற்றுச் செய்திகள். பண்டைய தமிழ் இலக்கியங்கள் சங்கத்தமிழ்-இமயம்-பொதிகை-குமரிமுனை வரையான தொடர்புகளைப் பகிர்கின்றன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று, இமயம் முதல் குமரி வரை என்றும், இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தாலும், உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்பு என்பது தடையாக அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்தும் நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒரு தேசிய இனத்தின் கலாசாரம், அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்து விட்டன.
வரலாற்றில் 2008-இல் கொசோவா, தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் நாடுகள், யூக்கோஸ்லோவியாவில் இருந்து ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்த நாடுகள் ஆகும்.
போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும், நியூகலிடோனியா பிரான்ஸ் நாட்டிலிருந்தும், ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை, மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது ஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.
மக்கள் பொது வாக்கெடுப்புகளின் விநோத தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஓர் அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945-ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50-க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு ஆம் என்றும், 25 வாக்கெடுப்புகள் இல்லை என்றும் வாக்களித்துள்ளன. 1990-களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன.
சோவியத் யூனியன் உடைந்தபோது, அவற்றில் 8 நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 3 நாடுகள் பிரிந்தன; எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள போராளிக் குழு எதிர்த்தது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்லும் உரிமைக்கு மாறாக வாக்குகள் அதிகமாக இருந்தது. எனவே, நீண்ட காலமாக எதிர்பார்த்த ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிய இயலவில்லை.
இப்போது தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசியம் சாத்தியப்படுமா என்பதுதான் விவாதப் பொருள். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளும், சூழல்களும் நியாயமான தமிழ் தேசியம் என்ற நோக்கத்துக்குச் சாதகமாக இல்லை. தமிழ் தேசியம் என்பதை யாரும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.
இன்றைய அகப்புறச் சூழலில் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தனி நாட்டுக்குச் சாத்தியமில்லை. ஈழத்தில் கடுமையாகப் போராடி, நியாயங்கள் இருந்தும் வெற்றி இலக்கு அடையப்பட வில்லை. தமிழ் தேசியம் என்ற வகையில் தனி நாடு அமைய உலக நாடுகளின் பார்வையும், அங்கீகாரமும் மிகவும் அவசியம். அது சாத்தியக்கூறா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மற்றொரு பிரச்னை, தமிழ் தேசியம் பேசுபவர்களால் பரவலாக முன்வைக்கப்படும் வந்தேறிகள் என்கிற குற்றச்சாட்டு. தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து, இதை தாயகமாகக் கொண்டு அவர்களின் வழிவழியாக வந்து, தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாகப் போராடும் நல்லுள்ளங்களை வந்தேறிகள் என்று காயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமல்ல.
உலகம் முழுவதும் 1 கோடிக்குமேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் 65 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர்கள், ஏன் பிரதமர் பொறுப்பில்கூடஇருக்கிறார்கள். ஆனால், அவர்கள் குடியேறிய நாட்டிற்காக உழைக்கிறார்கள். வந்தேறிகள் என்று அங்குள்ள தமிழர்கள் மீது ரணங்களை உருவாக்கும் விமர்சனங்கள் எங்கேயும் இல்லை.
தொலைத் தொடர்பு, சமூகவலை தளங்கள், தாராளமயமாக்கல் என்று இன்றைய உலகம் மாறிவிட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. இது உணர்ச்சிபூர்வமான பிரச்னை என்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.
கட்டுரையாளர்
வழக்குரைஞர்
Leave a Reply
You must be logged in to post a comment.