“கடை விரித்தேன் கொள்வாரில்லை”

“கடை விரித்தேன் கொள்வாரில்லை”

அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளல் பெருமான் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” எனச் சொல்லியதாக சன்மார்க்க அன்பர்களிடையே (1) ஏற்புடைக் கருத்தும், (2) மாற்றுக் கருத்தும் காலங் காலமாகவே நிலவி வருகிறது.

ஆனால் இதற்கு பெருமானார் வழங்கியுள்ள திருவருட்பா 6 திருமுறைகளிலும் உபதேசப் பகுதியிலும் சான்று எங்கும் கிடைக்கவில்லை என்ற தகவலும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து ஆகும்.

ஏனெனில் தம்மைச் சுற்றியிருந்த அன்பர்கள் குழாம் கூட தன்னுடன் கூடவே இருந்து, தனது நடைமுறைகளையும் அனுஷ்டானங்களை, நன்கு அறிந்திருந்துங்கூட, தான் சொன்ன சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பதற்காக பல பொழுதுகளிலும் பெருமானார் அவர்கள் வருந்தியுள்ளார்கள்.
மக்கள், அன்றைய நாளில், சமய மதவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த காரணத்தால். கடவுளைப் பற்றிய உண்மையான அறிவை அடைய விடாமல் மூடமாக்கப் பட்டிருந்தனர். தமது மூதாதையர்களால் பின் பற்றப் பட்டு வந்த பெரும்பாலான நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்துக்கள் தலைமுறை தலைமுறைகளகப் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. எனவே,. வள்ளல் பெருமான் தெரிவித்த புதுமையான சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை உடனடியாகக் கடைப்பிடிப்பதில் மக்கள் தயக்கம் காட்டியதற்கு அன்றைய நாளில் இது போன்ற காரணங்கள் பல இருந்தன.

வள்ளல் பெருமான் திரிதேக சித்தி அடையும் நாளை — இவ்வுலகம் கிஞ்சித்தேனும் அன்றைய நாளில் (1874ல்) சிந்தித்திருப்பதற்கு சந்தர்ப்பம் இருந்திருக்காது என்பதுவும் ஒரு உண்மை.

அவர் திரிதேக சித்தி அடைந்த பின்னர் பெருமானாரின் உபதேசங்கள், அன்றைய நாளில் தெரிந்த அன்பர்களிடமிருந்து கிடைத்த தொகுப்புத்தான் என்பது, தற்போதும் வடலூரில் பெருமானைப் பற்றி நன்கறிந்த மூத்த சன்மார்க்க அன்பர்களிடையே உலவி வரும் ஒரு செய்திதான். ஏனெனில் பெருமான் எழுதிய வாசகங்கள், பாக்கள், குறிப்புகள். பல அன்பர்கள் கைகளில் இருந்துள்ளன. பெரும்பாலான செய்திகள், பெருமான் சொன்ன வாசகங்கள் அப்படியே அச்சாகியுள்ளன. ஒரு சில செய்திகள் அன்றைய நாளில் பெருமானாரை அண்டியிருந்த அவரது உறவினர்கள் மற்றும் அன்பர்களிடமிருந்து பெற்றுத் தொகுத்தும், கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் கொடுக்கப் பட்டுள்ளன. ( “இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற-பத்துத் தினமாகிய கொஞ்ச காலம் வரையில், நீங்க ளெல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்”)

இதனைப் படிக்கும் சன்மார்க்க அன்பர்கள் யாரும் இத் தகவலைத் தவறாகக் கொள்ள வேண்டாம்.

சான்று

கடந்த தைப்பூசத்திற்கு வடலூருக்கு, தற்போது ஜாம்பியா நாட்டில் லுசாக்கா இந்திய தூதரகத்தில் பணிபுரியும் சன்மார்க்க அன்பர் திரு ராஜேந்திரன் வந்திருந்தார். அவரது சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி என்றார்.

அவர், சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தாம் வாங்கி வந்த “முடிசூடா மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” என்ற புத்தகத்தில் ஒரு பகுதியை அனுப்பியிருந்தார். எழுதியவர் ஏ.ஆர்.பெருமாள். குமரன் பதிப்பகம், நிர்.3. முத்துக்கிருஷ்ணன் தெரு. பாண்டி பஜார், சென்னை.17. தொலைபேசி எண் (044-28153742)

அதில் ஒரு பகுதி

வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.

வழக்கம் போல் தைப்பூசத்தன்று வடலூரில் தேவர் பேசத் தொடங்குவதற்கு முன்பு. முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

“வடலூர் இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் இராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி இருக்கிறது. அதனை மடத்துக்குத் தந்தால், அச்சில் ஏற்றி நூல் வடிவாக எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்” என்றும் “அடிகளாரின் உறவினரிடம் பல தடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்” என்றும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தேவரிடம் கூறினார்.
“அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று ஓ.பி.ஆரிடம் கூறிவிட்டு தேவர் பேசத் தொடங்கினார்.
இராமலிங்க அடிகளாரின் அருட்பா பற்றி ஒரு மணி நேரம் பேசிவிட்டு இராமலிங்க அடிகளார் உறவினர் பற்றி, “இராமலிங்க அடிகளார் அவர்களால் பாடப்பட்டு. இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துக் கொண்டு மடத்துக்குத் தர மறுப்பதாகவும் ஓ.பி.ஆர். அவர்கள் என்னிடத்திலே சொன்னார்.

அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக சொல்கிறேன். அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள். அல்லது தாங்களே அச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால். அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத் தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

இதுவரை உலகத்திற்குத் தெரியாமல் நீங்கள் ஒளித்து வைத்திருந்த அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள்” என்று மடைதிறந்த வெள்ளம் போல் மடமடவென அந்த ஒன்பது பாடல்களையும் வெங்கல நாதத்தில் தேவர் பாடி முடித்தார். பாடி முடித்த சிறிது நேரத்தில் இராமலிங்க அடிகளாரின் உறவினர் கையில் அந்த ஏட்டுச் சுவடியோடு வந்து தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி, “அய்யா, தாங்கள் தேவரல்ல, தாங்கள்தான் இராமலிங்க சுவாமிகள், என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி. “தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள்தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.

தேவர் அந்தச் சுவடியைப் பெற்றுக் கொண்டு “எல்லாம் ஈசன் செயல்” என்று சொல்லி முடிப்பதற்குள், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் எழுந்து வந்து, தேவர் அவர்களைக் கட்டிப்பிடித்து, அவரது கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு. “இராமலிங்க சுவாமிகளே நீங்கள்தான்” என்று உரக்க சத்தமிட்டுக் கூறியதும் கூடியிருந்த கூட்டம் கரவொலி எழுப்பி பெருத்த ஆரவாரம் செய்தது.

எனவே பெருமான் ஜீவர்களின் அறியாமை குறித்து – தாம் வருந்திய வருத்தத்தைக் கூட – இவ்விதம் சொன்னதாக அன்பர்கள் மத்தியில் அன்று நிலவிய கருத்து, கடை விரித்தேன் கொள்வாரில்லை என அவர்கள் கூறியதாகவே இன்றளவும் சன்மார்க்கிகளின் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதாகத்தான் நாம் கொள்ள வேண்டியுள்ளது.


About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply