பிரபஞ்சவியல் 09 ( பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் IV )

  • நட்சத்திரப் பயணங்கள் 26

  • பிரபஞ்சவியல் 09 ( பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் IV )

    இதில் கடந்த மூன்று தொடர்களிலும் பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் எனும் தலைப்பின் கீழ் வரலாற்று ரீதியாக விண்வெளி பற்றிய மனிதனின் புரிந்துணர்வு எவ்வாறு தெளிவு பெற்று வருகின்றது என விளக்கி வருகின்றோம். இறுதியாக சென்ற தொடரில் நியூட்டனின் காலம் வரை வானியல் அறிவு எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்துள்ளது என ஆராய்ந்திருந்தோம்.
    இதில் நியூட்டனின் கருதுகோளான எல்லையற்ற நிலையான பிரபஞ்சத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் சம அளவில் பரப்பப் பட்டுள்ளன என்றும் இதற்கு மையம் இல்லை என்பதும் விவரிக்கப் பட்டிருந்தது.
    இதைத் தொடர்ந்து வரும் விளக்கங்களை இன்று பார்ப்போம். நியூட்டனின் இக்கருதுகோள் ஜேர்மனிய தத்துவவியலாளரான ‘ஹெயின்ரிச் ஒல்பெர்ஸ்’ (Heinrich Olbers) என்பவரால் விரிவு படுத்தப்பட்டது. இவர் தனது கொள்கைகளை 1823 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நியூட்டனின் சமகாலத்தவர்கள் பலர் அவரது எல்லையற்ற பிரபஞ்சம், எண்ணற்ற நட்சத்திரங்கள் மற்றும் மையமின்மை கொள்கைக்கு எதிராக எழுப்பிய பல கேள்விகளுக்கு எதிராக போலியான வாதங்களை பலர் முன்வைத்த போது ஒல்பெர்ஸின் வாதம் தனித்து உறுதியான ஒன்றாகத் தென்பட்டதால் அவரது விளக்கங்கள் பல அறிஞர்களால் எடுத்து நோக்கப் பட்டன.
  • படம்: Heinrich Olbers

    Infinite Static Universe எனப்படும் எல்லையற்ற நிலையான பிரபஞ்சம் எனும் கருதுகோள் தெளிவாக விளங்குவதற்குத் தடையாக உள்ள காரணம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு பிரபஞ்சத்தில் நமது கண் பார்வை திரும்பக்கூடிய அனைத்துக் கோணங்களிலும் ஏதாவது ஒரு நட்சத்திரம் தென்பட வேண்டும் என்பதும் இதன் காரணத்தால் இரவிலும் வானம் முழுதும் சூரிய வெளிச்சம் போல் மிகுந்த பிரகாசமாகத் தென்பட வேண்டும் எனும் முரண்பாடு இருப்பதாகும். ஒல்பெர்ஸ் முரண்பாடு (Olbers paradox) எனப்படும் இந்த மாறுபாட்டுக்கு ஒல்பெர்ஸ் முன்வைக்கும் எதிர் வாதம் என்னவென்றால் மிகவும் தூரத்திலுள்ள நட்சத்திரங்களில் இருந்து புறப்படும் ஒளி அவற்றுக்கும் பூமிக்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் இடைப்பட்ட சடப்பொருளினால் உறிஞ்சப் படுவதால் அவை மங்கலாக்கப் படுகிறது என்பதாகும்.
  • படம்: Olbers Paradox

    எனினும் இந்த விளக்கம் யதார்த்தமாகாமல் இன்னொரு முரண்பாடும் தோன்றுகின்றது. அதாவது இந்த இந்த இடைப்பட்ட சடப்பொருள் (Intervening Matter) நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை உறிஞ்சினால் இறுதியின் அவை மிகவும் சூடாகி நட்சத்திரங்களைப் போல் பிரகாசமாகி மினுங்கத் தொடங்கி விடும் என்பதே இதைச் சாத்தியமற்றதாக்கும் பிரதிவாதமாகும்.
    இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் ஒரே வழியாக பிரபஞ்சம் எல்லையற்றதாக உள்ள ஒன்று என்ற போதும் அது அழிவற்றது அல்லது நிலையானது எனும் கருத்து பொய், அதாவது Static Universe என்பது ஏற்புடையதல்ல என அக்கால விஞ்ஞானிகள் உணரலாயினர்.
    ஏனெனில் பிரபஞ்சம் கடந்த காலத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றியது என்றும் அது எப்போதாவது அழிவடையும் என்பதையும் ஏற்றுக்கொண்டால் இவ்வுண்மை நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஆகவே நட்சத்திரங்கள் எப்போதும் மின்னிக் கொண்டிருப்பவையல்ல. அவை கடந்த காலத்தில் எப்போதோ வெளியிட்ட ஒளியைத் தான் இன்று நாம் பார்க்கிறோம். வானத்தில் நாம் பார்க்கும் கோணம் எதுவாக இருந்தாலும் அங்கு ஒரு நட்சத்திரம் இருக்கும் வாய்ப்பு இருக்கின்றது எனினும் அவற்றின் ஒளி நம்மை இன்னமும் வந்து சேரவில்லை அல்லது பூமி தோன்ற முன்னமேயே கடந்து போய் விட்டது என்று கருதுவதே இரவு வானம் முழுதும் பகல் போல் பிரகாசமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்று தெளிவு படுத்தும் விளக்கமாகும்.
    இதையன்றி பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே ஒளியை உறிஞ்சும் சடப்பொருள் உள்ளது எனும் விளக்கம் போலியானது என்பதும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதும் இக்கால அறிஞர்களுக்கும் புலனாகும்.
    பிரபஞ்சத்துக்கு தோற்றமும் முடிவும் உண்டு என்பது இப்போதல்ல, அரிஸ்டோட்டிலுக்கு முற்பட்ட பண்டைய காலத்திலேயே இந்நம்பிக்கை ஒரு பகுதியினரிடையே காணப்பட்டது. மனித நாகரீகத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட சில வானியலாளர்கள் மற்றும் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் கலாச்சாரப்படி பிரபஞ்சத்துக்குத் தோற்றம் உள்ளது என்பதும் இது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் என்றல்லாது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்தது எனவும் இது நிகழ்வதற்கு அடிப்படையான முதற் காரணம் (First Cause) எனும் எனும் சம்பவம் ஒன்று இருந்தது எனவும் பரவலாக நம்பப்பட்டது. அதாவது இப்பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னணியிலும் ஒன்றுக்கொன்று காரணத் தொடர்பு இருக்கும் எனவும் ஆனால் பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு அப்படியல்லாமல் குறித்த ஏதேனும் ஒரே காரணம் தான் இருக்க முடியும் எனவும் அதுவே முதற் காரணம் மற்றும் அதிலிருந்து தான் ஏனைய காரணங்கள் தோன்றுகின்றன எனவும் விளக்கப்பட்டது.
  • படம்: முதற்காரணமும் காரண சங்கிலியும்

  • அரிஸ்டோட்டிலுக்குப் பின்னர் கி.பி 354 இல் வாழ்ந்த கிறித்தவ தத்துவவியலாளரான புனித. ஆகஸ்டின் (St.Augustine) எழுதிய புகழ் பெற்ற நூல் ‘கடவுளின் நகரம்’ எனப் பொருள் படும் ‘The City of God.’ இதில் மனித நாகரிகம் செயற்படக் காரணமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றும் தொழிநுட்பங்களையும் யார் கற்பித்ததோ அவரே பிரபஞ்ச இயக்கத்தையும் கற்பித்தவர் (படைத்தவர்) என்ற வாதம் காணப்படுகின்றது. மேலும் ஆகஸ்டின் எழுதிய ‘தொடக்கம்’ (Genesis) எனும் நூலில் கிறிஸ்துக்கு முன் 5000 ஆண்டில் பிரபஞ்சமும் மனித நாகரீகமும் தோன்றியது எனும் குறிப்பு காணப்படுகின்றது.
  • படம்: St.Augustine

  • இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த வருடம் கடைசிக் குளிர்க்காலம் (Last Ice Age) முடிவடைந்த ஆண்டான கிறிஸ்துக்கு முன் 10 000 இல் இருந்து இது வெகு தொலைவில் இல்லை என்பதுடன் அக்குளிர்காலம் முடிவடைந்த ஆண்டே மனித நாகாரிகம் உண்மையில் விருத்தியாகத் தொடங்கியது என தொல்பொருளியாலாளர்கள் (Archaeologists) கூறுவதும் இதனுடன் பொருந்துவதாகும்.
  • படம்: கடைசிக் குளிர்காலத்தில் உலகம்

    எனினும் இவருக்கு முன் வாழ்ந்த (கி.மு 384) அரிஸ்டோட்டில் அவர் கொண்டிருந்த மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டால் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதையோ அழிவடையும் என்பதையோ ஏற்க மறுத்தது. எனவே அவரும் அக்கால அறிஞர்களும் மனித குலம் ஏற்கனவே இருந்தது எனவும் எப்போதும் இருக்கும் எனவும் நம்பினர். மேலும் பருவ கால அடிப்படையிலும் குறித்த கால இடைவெளிகளிலும் அடிக்கடி தோன்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் மனிதனை அழிப்பதற்கன்றி அவர்கள் நாகரீகமடையத் தொடங்க உதவுவதற்கே என்றும் அவர்கள் கூறினர்.
    காலப் பெருவெளியில் ஏதோ ஒரு கட்டத்தில் பிரபஞ்சம் தோன்றியதா? மற்றும் அது எல்லையுடையதா? என்ற கேள்விகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்த தத்துவவியலாளர்களில் முக்கியமானவர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இம்மானுவெல் கான்ட் (Immanuel Kant) இவர் எழுதிய மிக முக்கிய நூலான ‘Critique of Pure Reason’ 1781 இல் வெளிவந்தது. இதில் இவர் மேலே குறிப்பிட்ட இரு கேள்விகளையும் முரண்பாடுகள் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் இக்கேள்விகளுக்கு ஆம் என்பவர்களுக்கும் இல்லை என்பவர்களுக்கும் சமமாக இரு பிரதி வாதங்களை முன்வைக்கலாம் எனவும் இவர் கூறுகின்றார்.
  • படம்: Immanuel Kant

    அதாவது thesis எனப்படும் பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் தோன்றியது என நம்புவர்களுக்குச் சார்பாக இவர் கூறுவது என்னவென்றால் பிரபஞ்சத்துக்கு தோற்றம் இல்லையென்றால் எந்த ஒரு சம்பவத்துக்குப் பின்னும் முடிவற்ற காலம் காணப்படும். எனவே இது நகைப்புக்கு இடமானது ஆகும். இதேவேளை antithesis எனப்படும் பிரபஞ்சம் தோற்றமும் முடிவும் அற்றது என நம்புவர்களுக்குச் சார்பாக இவர் கூறுவது என்னவென்றால், பிரபஞ்சத்துக்கு தோற்றம் உண்டென்றால் அதற்கு முன்னர் முடிவற்ற காலம் எப்போதும் காணப்படும். எனவே ஏன் பிரபஞ்சம் இதில் குறித்த ஒரு பகுதியில் மட்டும் தனித்து தோன்ற வேண்டும்? என்பதாகும்.
    இவர் முன்வைக்கும் இந்த இரு கருத்துக்களும் கூறுவது ஒரே வாதத்தைத் தான் என்பதை சற்று ஆழமாகப் படித்துப் பார்த்தால் புரியும். இது இரண்டிலும் இவர் கூற வரும் கருத்து என்னவென்றால் பிரபஞ்சம் எப்போதும் நிலையாக இருக்கிறதோ இல்லையோ காலம் என்ற ஒன்று முன்னுக்கும் பின்னுக்கும் எப்போதும் உள்ளது என்பதுதான். அதாவது காலத்தைப் பற்றிய இக்கருதுகோள் பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு ஒப்பிடுகையில் அர்த்தமற்ற ஒன்றாக் மாறி விடுகின்றது.
    இக்காரணத்தால் தான் முன்னர் குறிப்பிட்ட கிறித்தவ தத்துவவியலளாரன புனித ஆகஸ்டின் பின்வரும் கருத்தைக் கூறியிருந்தார். அதாவது அவரிடம் ஒருவர் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? எனும் கேள்வியை எழுப்பியிருந்தார்.

  • நட்சத்திரப் பயணங்கள் 27

  • பிரபஞ்சவியல் 10 ( பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் V )

  • படம்: இந்துக்களின் படைத்தற் கடவுள் ‘பிரம்மா’

  • அதாவது, காலத்தைப் பற்றிய பழங்கால நம்பிக்கை அது எப்போதும் உள்ளது என்பதாகும். இதனால் பிரபஞ்சம் இதில் குறித்த ஒரு கட்டத்தில் மட்டும் தோன்றியது என்பதை அறிஞர்களால் ஏற்க முடியவில்லை. மேலும் பண்டைய அறிஞர்கள் ஆன்மிகவாதிகளின் ‘கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்!’ எனும் கூற்றையும் ஏற்க மறுத்தனர். இதற்கு உதாரணமாகப் பினவரும் சம்பவத்தைக் கூறலாம். 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ தத்துவவியலாளரான ஆகஸ்டினிடம் ஒருவர் பின்வரும் சிக்கலான கேள்வியை கேட்டார். அக்கேள்வி இதுதான்.
    ”பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது சரி. ஆனால் அதற்கு முன் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?”
    ஆகஸ்டின் சற்றுத் தயக்கத்துடன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். சிலவேளை அவர் இப்படி யோசித்தாரோ தெரியாது.
    ”இந்த மாதிரி குறுக்குக் கேள்விகள் கேட்பவர்களுக்கான நரகத்தை அவர் படைத்துக் கொண்டிருந்திருக்கலாம்!”
    ஆனால் இதற்குப் பதிலாக அவர் கூறியது என்னவோ இதுதான். ”அதாவது காலம் என்பதும் கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தினுடைய ஒரு அங்கம். இக்காலம் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் காணப்படவில்லை!”
  • படம்: இயேசு கிறிஸ்து

    அக்காலத்தில் பெரும்பாலான மக்கள் பிரபஞ்சம் உறுதிப்பட நிலையானது என்றும் மாறுபாடு அற்றது என்றும் நம்பிய போது அதற்குத் தோற்றம் உண்டா அல்லது இல்லையா என்பது மெட்டா இயற்பியல் (Meta physics) அல்லது சமய நம்பிக்கை (theology) சார்ந்த ஒன்றாகவே இருந்தது. மேலும் இதை நிரூபிக்கத் தேவையான அவதானங்களோ ஆதாரங்களோ இருக்கவில்லை. நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்தின் அளவு நமது பார்வை வீச்சுக்கு உட்பட்டு இருப்பதால் அதற்கு அப்பாலுள்ள விண் பொருட்களின் நிலை பற்றி நாம் ஊகிக்க மட்டுமே முடிகின்றது. மேலும் நாம் இந்தப்பூமியில் தோன்ற முன்பு பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை அறிவதற்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில் பிரபஞ்சம் மாறுபாடில்லாதது என நம்புவது அறிவீனம் என்பதை நிகழ்காலத்தில் நாம் அறிந்துள்ளோம்.
  • படம்: Meta physics குறித்த விவரணம்

  • படம்: Theology குறித்த விவரணம்

    இதற்கு அடிப்படையான விளக்கங்கள் அவதான அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலில் அறியப்பட்டது. 1929 ஆம் ஆண்டு நவீன விஞ்ஞான உலகுக்கு மிக முக்கியமான அவதானத்தை ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சம் விரிவடைந்து வருகின்றது என விஞ்ஞானி எட்வின் ஹபிள் நிரூபித்தார்.
  • படம்: விஞ்ஞானி எட்வின் ஹபிள்

    அதாவது பூமியிலிருந்து வானத்தின் எத்திசையில் நோக்கினாலும் மிகத் தூரத்திலுள்ள அண்டங்கள் (Galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதே இவரது அவதானமாகும். இதனால் பிரபஞ்சம் முழுமையும் விரிவடைகின்றது எனவும் கடந்த காலத்தில் இவை அனைத்தும் மிக அருகில் சேர்ந்து ஒரு தொகுதியாக இருந்திருக்கும் எனவும் கொள்ள முடியும்.
  • படம்: விலகிச் செல்லும் அண்டங்கள்

  • (இந்த முக்கிய கண்டுபிடிப்புக்காக இன்றைய நவீன உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நவீன உலகில் மிகத் தொலைவிலுள்ள அண்டங்கள், கருந்துளைகள், சூப்பர் நோவாக்கள் மற்றும் விண்மீன்களைப் படம் பிடித்து பூமிக்கு தினமும் அனுப்பி வரும் ஹபிள் விண்தொலைக்காட்டி இன்று மிக முக்கிய விஞ்ஞான கருவியாக விளங்குகின்றது.)
  • படம்: ஹபிள் விண் தொலைக்காட்டி

    விஞ்ஞானி ஹபிளின் அவதானம் பிரபஞ்சத்தின் ஆதி நிலை குறித்து பின்வரும் அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. காலப்பெருவெளியில் இறந்த காலத்தில் குறித்த ஒரு புள்ளியில் (Bigbang அல்லது பெருவெடிப்பு) அதாவது ஏறக்குறைய 10 அல்லது 20 ஆயிரம் மில்லியன் புவி வருடங்களுக்கு முன்னர் அண்டங்கள் உட்பட பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் இருந்தது. மேலும் அனைத்து சடப்பொருளும் ஓரிடம் எனும் போது அது முடிவிலி (infinite) அடர்த்தியுடையதாகவும் பூச்சியத்துக்கு மிக அண்மை சிறிதாகவும் இருக்கும் என்பது என்பது மிக விசித்திரமான விஞ்ஞான, கணித ரீதியான கணிப்பாகும்.
  • படம்: முடிவில் அடர்த்தி உருவகப் படம்

    மேலும் இப்படி ஒரு கட்டத்தில் இன்று அறியப்பட்ட அனைத்து விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளும் எதிர்காலம் குறித்த எந்த ஒரு ஊகமும் இதை விளக்கத் திராணியற்றவை ஆகி விடும். ஏனெனில் இந்த ஆதி பெருவெடிப்புக்கு முன்னர் ஏதும் சம்பவம் நடந்திருந்தால் அது இன்றைய நிகழ் காலத்தைப் பாதிக்க வாய்ப்பேயில்லை. அவ்வாறான சம்பவங்களின் தோற்றம் பற்றி நம் கணக்கெடுக்கத் தேவையில்லை ஏனெனில் அவற்றை உறுதிப் படுத்தும் அவதான ஆதாரங்கள் கிடையாது.
    எனினும் துவக்கத்தில் பிரபஞ்சம் மாறுபாடில்லாதது என்று கருதப் பட்ட போதே பிரபஞ்சத்துக்கு வெளியே இருந்து கடவுள் அதை முழுமையாகப் படைத்தார் எனும் நம்பிக்கை சில தரப்பினரிடையே இருந்தது. ஆனால் அப்போது விஞ்ஞான ரீதியாக அது படைக்கப் பட்டது என்று கருதப்படுவதற்கு இடமிருக்கவில்லை. அதாவது பிரபஞ்சம் எப்போதும் உள்ளது என்றே பல விஞ்ஞானிகள் கருதினர்.
    இந்த பெருவெடிப்பு (Bigbang) எனும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞான ரீதியான கொள்கையையும் ஆன்மிகவாதிகள் பயன்படுத்தி தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அதாவது பெருவெடிப்பு என்பதே கடவுளின் செயல் என அவர்கள் விளக்கமளிக்கலாம். ஆனால் அதற்கு முன்னரேயே அவர் படைக்கத் தொடங்கி விட்டார் எனக் கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் விஞ்ஞான ரீதியிலான விளக்கத்துக்குப் படைப்பவர் (Creator) என்பவர் பிரபஞ்சத் தோற்றத்துக்கு அவசியமானவர் அல்ல.
  • படம்: பெருவெடிப்பு வரையிலான அவதான காலக்கோடு

    மேலும் விரிவடையும் பிரபஞ்சத்தில் ஆதியில் கடவுள் எப்போது உலகைப் படைத்தார் என்ற கேள்விக்கு விஞ்ஞான ரீதியாகப் பெருவெடிப்பின் போதே என்று பதில் கூற முடியும். அதாவது அது தன்னிச்சையாக நிகழவில்லை என்றும் கூற முடியும். ஏனெனில் பெருவெடிப்பு (Bigbang) ஏன் நிகழ்ந்தது என்பதற்கு விஞ்ஞானிகளிடம் விடை இல்லை. அதே நேரம், ‘பெருவெடிப்பின் போது கடவுள் எங்கிருந்து பிரபஞ்சத்தைப் படைத்தார்? என்பதும் திகைப்பூட்டுவது குறிப்பிடத்தக்கது.
  • நட்சத்திரப் பயணங்கள் 28

  • பிரபஞ்சவியல் 11 ( பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் VI )

  • சென்ற தொடரில் ஆன்மிகவாதிகள் பெருவெடிப்பின் (Bigbang) போது கடவுள் உலகைப் படைத்தார் என்று தமது நம்பிக்கையை முன்வைப்பதற்கு இடமுண்டு என்று கூறியிருந்தோம்.
    ஆனால் இதன் போது அதாவது காலமும் வெளியும் (Time and Space) தோன்ற முன்னர் கடவுள் எங்கிருந்து இதைப் படைத்திருப்பார் என்பது சிறு பிள்ளைக்கும் தோன்றக் கூடிய கேள்வியாகும். இப்பிரச்சினையை ஆன்மிகவாதிகளின் போக்கிலேயே விட்டு விடுவோம். அதாவது இந்துக்களின் அத்வைதம் அல்லது இஸ்லாமியர்களின் கூற்றுப் படியும் ஏனைய மதங்களின் உட்பொருள் படியும் இவ்வாறு நோக்கலாம்.
    ‘கடவுள் உருவமோ தோற்றம் மறைவோ இல்லாத ஒரு பொருள், அதுவே சத்தியம் மற்றும் எப்போதும் உள்ள பொருள்.’
    இப்படிக் கருதினால் பிரபஞ்சத்தை வெளியில் இருந்து படைப்பதற்கு அவருக்கு இடமோ காலமோ தேவைப் பட்டிருக்காது. எனவே இக்குழப்பத்துக்கு இலகுவில் தீர்வு கிடைத்து விடும்.
  • படம்: அத்வைத வேதம்

  • படம்: இஸ்லாமிய கடவுட் கொள்கை

    இதையே விஞ்ஞானிகளின் அணுகுமுறையைப் பார்த்தால் பிரபஞ்சத்தை விளக்கும் தத்துவம் என்பது இலகுவாக்கப் பட்ட பிரபஞ்சத்தின் ஒரு மாதிரி (model) அல்லது மட்டுப்படுத்தப் பட்ட (Restricted) அதன் ஒரு பாகமாகும். அதாவது நமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட சில அளவீடுகளை விளக்கும் விதிகளின் தொகுப்பு எனலாம். இந்த தத்துவம் நமது மனதால் உருவாக்கப் படுகின்றதே ஒழிய பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மையை உள்ளபடி அப்படியே விளக்கும் வெளிப்பாடு அல்ல.
    விஞ்ஞானத்தால் கையாளப் படுகின்ற ஏதேனும் ஒரு தத்துவம் மிகச் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட அது இரண்டு அம்சங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.
    1. மிகச் சொற்பமான தன்னிச்சையான அம்சங்களைக் கொண்டு பெறப்படும் அனைத்து அவதானங்களிலும் அதிக பட்ச அளவை மிகத் திருத்தமாக விளக்க வேண்டும்.
    2. எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள அவதானங்களின் முடிவுகள் குறித்தும் உறுதியான எதிர்வுகூறல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • படம்: விஞ்ஞான தத்துவம் (Scientific Theory)

    உதாரணமாக, அரிஸ்டோட்டிலின் தத்துவம் சாதாரணமான ஒன்று எனவும் நியூட்டனின் தத்துவம் மிகச் சிறந்தது என்றும் கொள்ளப் பட முடியும். அதாவது அரிஸ்டோட்டில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் 4 மூலகங்களால் ஆனது எனவும் அவை பூமி, காற்று, நெருப்பு, மற்றும் தண்ணீர் என்றார். இது ஒரு எளிமையான விளக்கமாக இருந்த போதும் இதில் எதிர்காலத்துக்கான எதிர்வு கூறல்கள் எதுவும் இல்லை.
  • படம்: உலகம் ஆக்கப்பட்டுள்ள 4 மூலகங்கள்

  • ஆனால் நியூட்டனும் இதைப் போன்ற எளிமையான ஒரு தத்துவத்தைச் சொன்னார். அத்தத்துவம் ஈர்ப்பு விசை பற்றிய அவரது சமன்பாடு ஆகும். விளக்கமாகச் சொன்னால், எந்த இரு பொருளும் தமக்கிடையே ஈர்க்கப் படுகின்றன. இதன் போது அவற்றுக்கிடையே தொழிற்படும் விசையானது அவற்றின் திணிவுக்கு நேர் விகிதசமனாகவும், அவற்றுக்கிடையேயான தூரத்தின் வர்க்கத்துக்கு தலைகீழ் விகிதசமனாகவும் இருக்கும் என்பதே அச்சமன்பாடு ஆகும். இதைக் கணித வடிவில் கொடுத்தால், விசை – F, திணிவுகள் – m1,m2, அகில ஈர்ப்பு மாறிலி – G, இரு திணிவுகளினதும் மையத்துக்கு இடையேயான தூரம் – r எனின் சமன்பாடு இவ்வாறு அமையும்.
  • F = G. m1.m2/r2 , {G = 6.674×10 (−11 ஆம் வலு) N m2 kg−2}

  • படம்: இரு பொருட்களுக்கிடையேயான ஈர்ப்பு

    இதில் அகில ஈர்ப்பு மாறிலியான G இன் பெறுமானம் முழுப் பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். இதனால் இச்சமன்பாடு நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் சூரியன், நட்சத்திரங்கள்,சந்திரன், மற்றும் கிரகங்கள் ஆகியவற்றின் இயக்கத்தை விளக்கப் பயன்பட்டு வருகின்றது. இந்த விசேட தன்மையால் நியூட்டனின் இந்த ஈர்ப்புக் கொள்கை மிகச் சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இன்றைய நவீன வானவியலுக்கு இன்னும் இதுவும் பற்றாத நிலை இருப்பது வியப்பான உண்மையாகும். ஆம். நாம் இந்த ஈர்ப்புத் தத்துவத்தை நிறையுடைய துணிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். துணிக்கை மற்றும் அலை ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட ஒளி போன்ற மின்காந்த அலைகளுக்கோ அல்லது புற ஊதாக் கதிர்கள் பிரபஞ்ச பின்புலக் கதிர்களுக்கோ பிரயோகிக்க முடியாது.
  • படம்: ஒளியின் இருமை இயல்பு

    இச் சந்தர்ப்பத்தில் நாம் 20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையையே கையாள வேண்டியுள்ளது. இச் சார்புக் கொள்கையின் அடிப்படையில் ஒளியை விட வேகமான பொருள் பிரபஞ்சத்தில் கிடையாது என நிரூபிக்கப் பட்டுள்ளது. (ஒளியின் வேகம் – 299 792 458 m / s)
    அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்தி,சடப்பொருள்களும் தகவல்களும் பயணிக்கக் கூடிய அதிகபட்ச வேகம் ஒளியின் வேகமாகும். ஒளியைத் துணிக்கையாகக் கருதினால்தான் நியூட்டனின் தத்துவம் செல்லுபடியாகாத நிலை தோன்றும். ஆனால் மற்றைய சந்தர்ப்பங்களில் பொருள்களின் இயக்கத்துக்குப் பிரயோகிப்பதற்கு நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கைக்கு எப்போதும் இன்றியமையாத மதிப்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
  • படம்: அல்பேர்ட் ஐன்ஸ்டீன்

    பொதுவாக எந்த ஒரு பௌதிகவியல் தத்துவமும் அதன் அனுமான அடிப்படையில் தற்காலிகமானதாகத் தான் இருக்கும். எம்மால் அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது. நாம் எத்தனை முறை பரிசோதனை செய்து பார்த்தாலும் அதே முடிவையே காட்டும். அது அடுத்த முறையேனும் பிழையான முடிவைக் காட்டுமா என எம்மால் ஊகிக்க முடியாது.
    ஆனால் சிலவேளைகளில் மிகச்சிறிய ஒரேயொரு அவதானம் குறித்த தத்துவத்தின் எதிர்வுகூறல்களை பொய்யாக்கி விடலாம். இரசாயனவியலாளர்களுக்கு (Chemists) இந்த அனுபவம் அனேகமாக வாய்த்திருக்கும். விஞ்ஞான உலகின் தத்துவவியலாரான கார்ல் பொப்பெர் பின்வருமாறு கூறுகின்றார் –
    ஒரு சிறந்த தத்துவம் எவ்வாறு வடிவமைக்கப் படுகின்றது என்றால் தனது எதிர்வுகூறல்களை மறுதலிக்கும் அல்லது தவறு என சுட்டிக் காட்டும் அவதானங்கள் குறித்த சில மும்மொழிவுகள் அதன் கொள்கையில் அடங்கியிருக்குமாறு அதைப் பேணுவதன் மூலமாகும். ஏதேனும் ஒரு கட்டத்தில் புதிய ஒரு அவதானம் அதனுடன் முரண்பட்டால் அத்தத்துவத்தைப் புறக்கணிக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ முன்னர் இவ்வாறு செய்தால் அக்கொள்கை குறித்த நமது நம்பிக்கை நிலையாக இருப்பதுடன் எப்போதும் அதைப் பிரயோகிக்கத் தயாராக இருப்போம். மேலும் இக்கொள்கைக்குப் போட்டியாக புதிய அவதானங்களை மேற்கொள்ளும் நபர்களுடன் அவசியமான கேள்விகளைக் கேட்கவும் அதனைத் திருத்தி அமைக்கவும் முடியும்.
  • படம்: கார்ல் பொப்பெர்

    நடைமுறையில் எவ்வாறு அமையுமெனில் புதிதாக உருவாக்கப்படும் தத்துவம் முன்னர் கருதப்பட்ட தத்துவத்தின் தொடர்ச்சியாக அல்லது திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக விரிவாக்கப் படுவதாகும். உதாரணமாக புதன் கிரகத்தின் இயக்கம் குறித்துத் தொலைக் காட்டிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகவும் திருத்தமான அவதானங்கள் நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையின் மூலம் கூறப்பட்ட எதிர்வுகூறலுடன் சிறிய வித்தியாசத்தைக் காட்டியுள்ளன.
    இதேவேளை ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity) மூலம் பெறப்பட்ட எதிர்வுகூறல்கள் மிகச்சரியாகப் பொருந்தியுள்ளன. இந்த முடிவு ஐன்ஸ்டீனின் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான மிகத் திருத்தமான ஒரு சந்தர்ப்பமாகும். இவ்வாறு இருந்த போதும் நடைமுறையில் அதாவது அதிக நுணுக்கம் தேவைப்படாத இடங்களில் நியூட்டனின் கொள்கையே நிகழ்காலத்தில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நியூட்டனின் கொள்கை ஐன்ஸ்டீனுடையதை விட மிக எளிமையாக இருப்பதும் ஆகும்.
    இந்நிலையில் இன்றைய விஞ்ஞான உலகின் முக்கிய தேடலாக முழு பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் முழுமையான ஒரேயொரு சமன்பாட்டைக் கண்டு பிடிப்பது எனும் இலக்கு விளங்குகின்றது. எனினும் இதற்காக தற்போது விஞ்ஞானிகள் பின்பற்றும் அணுகுமுறை இந்தத் தேடலை இரு பிரிவுகளாக பிரித்துப் போட்டுள்ளது.

  • நட்சத்திரப் பயணங்கள் 29

  • பிரபஞ்சவியல் 12 ( பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் VII )

  • படம்: Grand Unified Theory (GUT)

    சென்ற தொடரின் இறுதியில் இன்றைய விஞ்ஞானிகளின் இலக்காக முழுப் பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் ஒரேயொரு சமன்பாட்டைக் கண்டு பிடித்தல் என்ற விடயம் இருப்பதாகவும் இதற்கான விஞ்ஞானிகளின் அணுகுமுறை இந்தத் தேடலை இரு பிரிவுகளாக்கிப் போட்டிருப்பதாகவும் கூறியிருந்தோம். அதன் தொடர்ச்சி இனி…
  • முதலாவது பிரிவு –

    இது இப்பிரபஞ்சம் கால ஓட்டத்தில் எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என விளக்கும் விதிகள் பற்றியது. அதாவது ஏதாவது ஒரு காலத்தில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்தது என்று நாம் அவதானிப்புக்கள் மூலம் கூறினால் இவ்விதிகள் மூலம் இனி வரும் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என எதிர்வுகூற முடியும்.
  • இரண்டாவது பிரிவு –

  • இது நம் பிரபஞ்சத்தின் ஆதி நிலை (தொடக்க நிலை) குறித்தது

    சில அறிவியலாளர்களின் நம்பிக்கைப் படி விஞ்ஞானம் முதலாவது பிரிவுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டாவது பிரிவான பிரபஞ்சத்தின் ஆதி நிலை குறித்த விளக்கத்தை மதம் அல்லது மெட்டா இயற்பியல் (Meta Physics) மூலமே தெளிவு படுத்த முடியும் என்றே இவர்கள் கருதுகின்றனர். இவர்கள் கூற்றுப்படி சர்வ வல்லமை படைத்த கடவுள் தனக்கு விருப்பமான விதத்தில் பிரபஞ்சத்தைப் படைத்த போதும் அதன் இயக்கம் முற்றிலும் தன்னிச்சையாகவே நிகழ்வதாகக் கொள்ளப் படுகின்றது.
    இந்நிலையில் வெளிப்படையாகத் தெரிவது என்னவென்றால் இப்பிரபஞ்சம் சில உறுதியான விதிகளைப் பின்பற்றியே ஒரு பொதுவான ஒழுங்கில் பரிணாமம் அடைந்து வருகிறது அல்லது கடவுள் அவ்வாறு அதைப் பணித்துள்ளார் எனும் கண்ணோட்டம் கிடைத்திருப்பதாகும். இதனால் பிரபஞ்சத்தின் ஆதி நிலையை அல்லது தோற்றத்தை நிர்ணயிக்கும் விஞ்ஞான விதிகளும் இருந்திருக்கலாம் (அது தன்னிச்சையாக இயங்கவில்லை) என்று ஊகிக்க உறுதியான காரணங்களும் எழுந்துள்ளன.
    20 ஆம் நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து முழுப் பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் பூரண கணித சமன்பாட்டைப் பெறும் இலக்கு அறிவியலாளர்களுக்கு மிகவும் சவாலாகவும் மிகக் கடினமானதுமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. இதனால் ஆரம்பத்தில் இப்பிரச்சினையைப் பல பகுதிகளாகப் பிரித்து சிறு சிறு பகுதி சார்ந்த தத்துவங்களை (partial theories) இயற்றினர். இந்த ஒவ்வொரு பகுதி சார்ந்த தத்துவங்கள் அனைத்தும் குறித்த சில முக்கிய அவதானங்களை விளக்குமாறும் ஏனைய புற அளவீடுகளின் (Quantities) தாக்கங்களை அலட்சியம் செய்து, அல்லது எளிய எண்களின் தொகுதியாகக் காட்டுமாறும் இருந்தன.
    ஆனால் இந்த அணுகுமுறை சிலவேளைகளில் முற்றிலும் தவறாக இருக்கலாம் எனவும் தற்போது கருதப்படுகின்றது. இதற்குக் காரணமாக பின்வரும் கண்ணோட்டத்தைக் கூறலாம்.
    இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒழுங்குகளும் அவை வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம் அனைத்தும் எளிமையான அடிப்படை ஒன்றைப் பின்பற்றி இயங்குவதாக இருந்தால், அந்த அடிப்படை விதியை அணுகுவதற்குத் தனித்தனியாக பிரபஞ்சம் பின்பற்றும் ஒரு சில ஒழுங்குகளுக்கான விதிகளைப் பிரித்துப் பிரித்து ஆராய்வதன் மூலம் முயற்சிப்பது முடியாத காரியமாகும்.
    எனினும் நாம் இந்த தவறான பாதையையே உறுதியான வழியாகக் கருதி இதுவரை காலமும் பயணித்துள்ளோம். இதைச் சற்று விளக்குவதற்கு நாம் மறுபடியும் நியூட்டனின் அகில ஈர்ப்பு விதியைத் தான் எடுத்து நோக்க வேண்டியுள்ளது. அதாவது இரு பொருட்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை பொருட்களின் தன்மை அடிப்படையில் பார்த்தால் அவற்றின் திணிவிலேயே தங்கியுள்ளது. ஆனால் அப்பொருட்கள் எப்பதார்த்தத்தால் எக்கட்டமைப்பில் ஆக்கப் பட்டுள்ளன என்பதில் தங்கியில்லை. எனவே விண்ணில் உள்ள சூரியன் மற்றும் கிரகங்களின் ஒழுக்கைக் கணிப்பதற்கு அவற்றின் கட்டமைப்பு அல்லது வடிவம் குறித்த கொள்கைகள் தேவைப்படாது.
    இதைப் போன்றதே பிரபஞ்சத்தின் அடிப்படை விதியை அறிவதற்கான முயற்சியும். சற்று ஒப்பிட்டுப் பார்த்தால் இது இலகுவில் புரியக் கூடியது.
    நிகழ்காலத்தில் விஞ்ஞானிகள் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குவதற்கு பகுதி சார்ந்த இரு அடிப்படை விஞ்ஞான தத்துவங்களைப் பயன்படுத்துகின்றனர். அவையாவன,
  • 1.பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity)

  • 2.குவாண்டம் பொறிமுறை (Quantum Mechanics)

  • படம்: வெளியை வளைக்கும் பொருள் (Special Relativity)

    இவ்விரு கொள்கைகளும் தான் 20 ஆம் நூற்றான்டின் முற்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட மனிதனின் அறிவுக்கூர்மை மிக்க தத்துவங்களாகும். இவற்றில் பொதுச் சார்புக் கொள்கை, ஈர்ப்பு விசை (Force of Gravity) மற்றும் பிரபஞ்சத்தின் பாரிய கட்டமைப்புக் (Large Scale Structure) குறித்த விளக்கங்களைக் கூறுகின்றது.
    (பாரிய கட்டமைப்பு எனும் போது பூமியில் இருந்து சில மைல்கள் தூரத்திலிருந்து அதி உயர் தொலைக் காட்டிகள் மூலம் கூட நோக்கத் தக்க அதிகபட்ச தூரமான மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மைல் தூரத்துக்கு அப்பால் (1 * 10 இன் வலு 24 – அதாவது 1 இற்குப் பின் 24 பூச்சியம் மைல்கள்) தொலைவு வரை அகன்றிருக்கும் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு அல்லது Observable Universe பற்றிய மாதிரியாகும்.)
  • படம்: Observable Universe

    இன்னொரு பக்கத்தில் குவாண்டம் பொறிமுறை பிரபஞ்சத்தின் மிக மிக மிகச் சிறிய (ஒரு இஞ்சின் மில்லியனில் மில்லியன் பங்கு சிறிய) பாகங்களுடன் கணிப்புக்களை மேற்கொள்ளும் கல்வியாக விளங்குகின்றது.
  • படம்: அணுக் கட்டமைப்பு (குவாண்டம் பொறிமுறை)

    ஆனால் இவ்விரு துறைகளும் ஒன்றில் இருந்து இன்னொன்று மாறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கின்றன. அதாவது இவ்விரு கொள்கைகளுமே ஒரே நேரத்தில் சரி எனக் கொள்ள முடியாது. ஏதாவது ஒன்று தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியும். உதாரணத்துக்கு வெறுங்கண்ணுக்கு தெரியும் அளவில் பெரியதான சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களின் இயக்கம் கண்ணுக்குத் தென்படாத அணுக்களிடையே உள்ள கருக்களுக்கும் இலக்ட்ரோன்களுக்குமான இயக்கத்துடன் ஒத்ததல்ல. இரண்டும் வெவ்வேறு இயக்கங்கள் ஆகும்.
    இன்றைய பௌதிகவியலின் மிக முக்கிய இலக்காக பிரபஞ்சம் முழுதுக்குமான ஒரே தியரியைக் கண்டுபிடிப்பது என்ற நோக்கம் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. இந்த இலக்கு பெரியதை விளக்கும் பொதுச் சார்புக் கொள்கையிலும் சிறியதை விளக்கும் குவாண்டம் பொறிமுறையிலும் தங்கியிருப்பதால் இவ்விரண்டையும் இணைக்கும் புதிய கொள்கையை உருவாக்குவதன் மூலம் அந்த இலக்கை அடைய முடியும் என்ற வழி 20 ஆம் நூற்றாண்டில் பிறந்தது. இப்புதிய கொள்கை ஈர்ப்புக்கான குவாண்டம் கொள்கை (Quantum Theory of Gravity) எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதுவரைக்கும் நாம் இந்தக் கொள்கையை வரையறுக்கவில்லை. சிலவேளைகளில் இக்கொள்கையை உருவாக்கப் பல காலம் செல்லக் கூடும். எனினும் இக்கொள்கை கொண்டிருக்கக் கூடிய பல அம்சங்களை இப்போது நாம் அறிந்துள்ளோம்.
  • படம்: Quantum Theory of Gravity

    இப்பிரபஞ்சம் தன்னிச்சையானது அல்ல, அது சில நிச்சயமான விதிகளைப் பின்பற்றுகிறது என நம்பினால், நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியது பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் பகுதி சார்ந்த அனைத்துத் தத்துவங்களையும் (Partial Theories) இணைத்து பிரபஞ்ச இயக்கத்தை முழுமையாக விளக்கும் ஒன்றிணைந்த தத்துவம் (Unified Theory) ஒன்றை உருவாக்குதலாகும். ஆனால் இந்த முழுமையான Unified Theory ஐ உருவாக்குவதற்கு அடிப்படையான முரண்பாடு (Paradox) ஒன்றுள்ளது.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply