இந்து மதமும் தமிழர் சமயமும்

இந்து மதமும் தமிழர் சமயமும்

 

இந்து என்னும் காந்தம்

இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம், இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம் புராண, இதிகாசங்களில் இல்லை என்றால் எப்படி நம்ப முடியும். எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடி கொண்டு வந்தாலும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த நூல்களிலும் இந்து என்ற வார்த்தையைக் காணமுடியாது. மூச்சுவிட மறந்தாலும் இந்துத்வா என்ற வார்த்தையை மறக்காத பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் கூட ஒப்புக்கொண்ட உண்மை இது. அவர்களே ஒப்புக்கொண்ட பின், நாம் பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.

இந்து என்ற வார்த்தையை மொழிபெயர்க்கும் உரிமை எனக்குக் கொடுக்கப்பட்டால் நான் “காந்தம்”என்று மொழிபெயர்ப்பேன். ஆம். அதன் ஈர்ப்புவிசை மிக அதிகம். ஒரு காந்தம் தன்னைச் சுற்றியுள்ள இரும்புத்துகள்களைத் தன்னகத்தே ஈர்த்துக்கொள்வது போல, இந்து மதம் தன்னுள் ஈர்த்துக்கொண்ட மதங்கள் கணக்கிலடங்காது. இது இந்து மதத்தின் நிறைகுறைகளை அலசும் கட்டுரை அன்று. மாறாக இந்து என்ற வார்த்தையின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சில உண்மைகளையும், மேலும் அந்த மதத்தில் உறைந்திருக்கும் சில மர்மங்களையும் அவிழ்க்கும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

சிந்து நதியின் மிசை

மாவீரன் அலெக்சாண்டர் (356 BC – 323 BC) (Alexander III of Macedon) காலத்திலேயே கிரேக்க நாட்டில் இண்டிகா என்ற பெயர் பரவலாக அறியப்பட்டிருந்தது. இண்டிகா என்பது இந்தியாவுக்கு அவர்கள் வைத்த பெயர். அலெக்சாண்டரின் அப்பா இந்தியாவை வெற்றிகொள்ள ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசையை நிறைவேற்றதான் அலெக்சாண்டர் இந்தியா வந்ததாகவும் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் வரலாற்று சான்று என்றால் அது மெகஸ்தனிஸ் (350 BC – 290 BC) (Megasthenes) எழுதிய இண்டிகா என்ற புத்தகம்தான். மெகஸ்தனிஸ் கி.மு. 4ம் நூற்றாண்டை சேர்ந்த கலாச்சார ஆய்வாளர். அப்போதே அவர் இந்தியா வந்து சில ஆண்டுகள் தங்கி, தான் தெரிந்து கொண்டதை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தொகுப்புக்கு இண்டிகா என்று பெயர். அவருடைய புரிதலில் இந்தியா என்றால் சிந்து நதி மற்றும் அதன் அருகில் வசிக்கும் மக்கள். அதனால் அந்த மக்களையே நதியின் பெயரால்தான் அழைத்தார். அவர் மட்டுமல்ல அன்றைய கிரேக்க நாடுகளும் அப்படித்தான் அழைத்தன. சிந்து என்ற வார்த்தையை உச்சரிக்க சற்று சிரமப்பட்டு “சி”யை விழுங்கி சொன்ன மிச்ச வார்த்தைதான் இந்து மற்றும் இண்டிகா.

இந்து  என்ற சொல் பயன்படுத்தப்பட்டப்  பழமையான சான்றுகளில்  முதன்மையானதென்றால் அது மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற புத்தகம்தான். சிந்து நதியின் பெயரை ஒட்டி வளர்ந்த சொல். கிரேக்கர்கள் மட்டுமல்ல பாரசீகர்கள் கூட சிந்துவை “ஹிந்து” என்று அழைத்தார்கள் என்று அறிகிறோம். நம் அறிவுக்கு எட்டியவரை இந்து அல்லது ஹிந்து என்ற சொல் முற்காலத்தில் இந்தியாவுக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும் அது சிந்து நதியை குறிக்கும் சொல் மட்டுமே. கிரேக்கர்களையும், பாரசீகர்களையும் பொறுத்தவரை இந்தியாவில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்தான் அதாவது சிந்து நதியின் அருகினில் வசித்தவர்கள். அப்போது அது ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்தியா என்ற வார்த்தை பரவலாக உலகம் முழுவதும் அறியப்பட்டபோது அது தற்போதைய இந்திய வரைபடம் குறிக்கும் ஒட்டுமொத்த இந்தியாவை ஒருபோதும் குறித்ததில்லை என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை.

சரி, இந்து என்பது மெகஸ்தனிஸும், ஈரான் நாட்டு மக்களும் நமக்கு வைத்த செல்லப்பெயராகவே இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். 1947ல் விடுதலையடைந்து, இந்தியா என்ற தனிநாடு உருவாகி, அண்ணல் அம்பேத்கர் தயவில் 1950ல் இந்தியாவுக்கென்று தனி   சட்டமே இயற்றப்பட்டு விட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்து என்ற வார்தைக்குத் தரும் விளக்கத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, “யார் முஸ்லீம்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ, யார் பார்சீக்கள் இல்லையோ  அவர்கள் எல்லாம் இந்துக்கள்”. ஆக, இந்திய அரசியலமைப்பிலேயே இந்து என்ற வார்த்தைக்கு நேரிடையான அர்த்தம் இல்லை. சில மதங்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று பொதுப்படையாக சொல்லிவிட்டார்கள். இப்படி பொத்தாம்பொதுவாக உதிர்த்துவிட்டுப் போன இந்து என்ற வார்த்தை அதற்கு முன்னர், பல இனத்தைச் சார்ந்த மக்களால் வணங்கப்பட்ட பல கடவுள்களின் வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் துடைத்துப் போட்டது. அப்படி துடைத்தெறியப்பட்ட வரலாற்றுப் பக்கங்களில் தமிழர் சமயத்தைக் குறித்தும், அது ஆரியர்கள் வருகைக்குப் பின்னர் எவ்வாறு அடையாளமிழந்து போனது என்பதையும் ஆராய இருக்கிறோம். மதங்களுக்கள் நுழையும் முன், கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் போன்ற தத்துவங்களைப் புரிந்துகொண்டால்தான் இன்று நாத்திகம் என்று இழிவாகப்பேசப்படும் கடவுள் மறுப்புக்கொள்கை ஒரு காலத்தில் எவ்வளவு அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

கருத்தும் பொருளும்

கடவுள் உண்டா இல்லையா என்று மிகப்பெரிய தர்க்கங்கள் நடக்கத்துவங்கி ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தியா மற்றும் கிரேக்கத்தில் இதற்கான சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வாதங்கள் இரண்டு விதம்.

கருத்துமுதல் வாதம் (Idealism)

பொருள்முதல் வாதம் (Materialism).

கருத்துமுதல் வாதம் என்றால், உலகில் நாம் காணும் அனைத்தும் தானாக தோன்றவில்லை, யாரோ ஒருவர் எங்கோ உட்கார்ந்து கொண்டு சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போல சூரியன், கோள்களை எல்லாம் உருவாக்கி வானத்தில் உருட்டி விட்டுக்கொண்டிருக்கிறார் என்று நம்மை நம்ப வைப்பது. அந்த யாரோ ஒருவர்தான் கடவுள். கடவுள்தான் ஒட்டுமொத்த அண்டசராசரங்களையும் உருவாக்கினார் என்று சொல்வதுதான் கருத்துமுதல் வாதம்.

பொருள்முதல் வாதம் என்றால், இந்த பிரபஞ்சம், வானம், பூமி எல்லாம் இயற்கையாக என்றுமே உள்ளது. அதை யாரும் படைக்கவில்லை. அதன் ஆக்கம், அழிவு எல்லாம் இயற்கையாகவே நடக்கிறது என்ற வாதம். அண்டம், பூமி, உடல், அணு, உயிர் என்று எவ்வளவு நுணுக்கமாகப் பகுத்தாலும் அனைத்தும் ஐம்பூதங்களின் கலவையாகவே இருக்கும் என்ற அறிவியல் சார்ந்த வாதம்தான் பொருள்முதல் வாதம். கடவுள் மறுப்புக் கொள்கைதான் பொருள்முதல் வாதம். உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தையும் இந்த இரண்டு பிரிவின் கீழ் அடக்கி விடலாம். இந்தியாவில் மட்டுமே நூற்றுக்கணக்கான மதங்கள் தோன்றியிருக்கின்றன. இயற்கை வழிபாட்டை முதல் மதமாக எடுத்துக்கொண்டால், அது துவங்கி பல இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். நாம் அவ்வளவு பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. நாகரிகமடைந்த மனிதர்கள் மத்தியில், குறிப்பாக கடந்த 10,000 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்ட மதங்களில் சிலவற்றை நாம் ஆராய்ந்தால் இந்து மதத்தின் ஆக்கிரமிப்பை உணர்ந்துகொள்ள முடியும். அதற்கு நாம் சிந்து சமவெளியில் பயணித்தாக வேண்டும்.

ஹரப்பா முதல் கன்னியாகுமரி வரை

சிந்துசமவெளி நாகரிகம் தமிழரின் அடையாளம். ஆரியர்கள் இந்தியாவுக்குள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நுழையும்போதே அது கிட்டத்தட்ட அழியும் தருவாயில்தான் இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஆரியர்கள் வந்து போராடி சண்டையிட்டு அழிக்கவில்லை. ஆரியர்கள் கூட்டம் சண்டை போடுமளவுக்கு திறமையான கூட்டம் அல்ல. அது ஒரு குள்ளநரி கூட்டம். அவர்களுக்கு வஞ்சனை செய்துதான் அழிக்கத் தெரியும். நாம் சிந்து சமவெளி நாகரிகம் தழைத்திருந்த போது அங்கு நிலவிய சமய சார்புகள் குறித்தும், சிந்துசமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின் வளர்ந்த சமயங்கள் குறித்தும் ஆராய இருக்கிறோம். ஏனென்றால், சிந்துசமவெளி நாகரிகம் செழித்திருந்த போது இந்தியாவில் ஆரியர்கள் இல்லை. அங்கு வழக்கிலிருந்த சமயம் தமிழர் சமயம். தமிழர்கள் மட்டும் வளர்த்தெடுத்த சமயம். சிந்துசமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னர், ஆரியக் கலப்பிற்கு பின்புதான் பல புதிய மதங்கள் உருவாகின.

சிந்துசமவெளி நாகரிகம் 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நாம் முன்னரே குறிப்பிட்டபடி அது தமிழரின் நாகரிகம். சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் வெகுகாலம் பணியாற்றி வரும் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்ப்போலா (Asko Parpola), ஹன்டர் (Hunter) போன்றோர் அது தமிழர்கள் நாகரிகம் என்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். சிந்துசமவெளி நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ எல்லாம் இப்போது பாகிஸ்தானில் இருக்கின்றன. இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா முதல் கன்னியாகுமரி வரை பரவியிருந்தது தமிழர்கள் நாகரிகம்தான். சிந்துசமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்த அதே நேரம், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், கீழடி என்று இன்றைய தமிழகம் வரையிலும், நாகரிகம் உச்சத்தில்தான் இருந்தது. ஆனால் முதலில் ஆரியர்கள் ஊடுருவியது வடக்கில்தான். முதலில் அங்குதான் தமிழர் சமயங்கள் பெருமளவில் மாற்றத்திற்கு உள்ளாகின. நமது சமயங்களின் அழிவுக்கான ஆரிய சங்கு வடக்கில்தான் முதலில் ஊதப்பட்டது. அதனால் வடக்கில் ஏற்பட்ட மதமாற்றங்களை நாம் கவனத்தில் கொள்வது இங்கு அவசிமாகிறது.

இது சிந்துசமவெளி குறித்த கட்டுரை அல்ல, அது குறித்த தகவல்களை பிறிதொரு கட்டுரையில் அலசலாம். சிந்து சமவெளி மக்களின் சமயம் குறித்து மட்டும் நாம் இப்போது பார்க்கலாம். சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுளின் பெயர் பசுபதி. பசுபதி என்பது சிவனின் இன்னொரு பெயர். சிவ வழிபாடுதான் அங்கு தழைத்திருந்தது. கடவுள், சிவன், பசுபதி என்ற சொற்கள் வேறுவேறாக இருந்தாலும், இவை எல்லாவற்றுக்கும் பொருள் ஒன்றுதான் என்றால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படலாம். ஆம், தமிழில் கடவுள் தொடர்பான  வார்த்தைகள் அனைத்துக்குமே ஒரே பொருள்தான். அதுதான் சமயங்கள் உணர்த்தும் மறைபொருள். மறைபொருளைப் புரிந்துகொண்டால்தான் தமிழர் சமயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.  அப்படி என்ன மறைபொருளைத் தமிழன் கண்டு விட்டான்?

மறைபொருளும் தமிழர் சமயமும்

 கடவுள்  என்ற சொல்லை கட + உள் என்று பிரித்துப்பார்த்தால், உள்ளே கடந்து செல் என்ற பொருள் வருகிறது. உனக்குள்ளே கடந்து சென்றால் இறைவனைக் காணலாம் என்று பொருள். இறைவன் என்ற சொல்லை இறை + அவன் என்று பிரித்துப் பார்த்தால், நான் கடவுள் என்ற பொருள் வரும். கடவுள், இறைவன் என்ற சொற்களை நேரிடையாக மொழிபெயர்க்க  வேண்டுமானால், “உயிர்” என்று மொழிபெயர்க்க வேண்டும்.  ஆம், உயிர்தான் கடவுள். இந்த பிரபஞ்சத்தில், ஐம்பூதத்தில் ஒன்றாகிய விசும்பு அல்லது ஆகாயம்தான்  உயிரின் அம்சம். பிரபஞ்சத்தின்  ஒரு துகள்தான் நம் ஒவ்வொருவர் உடலிலும் உயிராய் விளங்குகிறது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்பதன் பொருள் இதுதான். உயிர்தான் மறைபொருள்.  அதுதான் பரம்பொருள். இதில் என்ன மறைபொருள், இது அனைவரும் அறிந்த ஒன்றுதானே என்று என்ன வேண்டாம். மறைபொருளை நாம் இன்னும் முழுமையாக விளக்கவில்லை.

உயிர்தான் மறைபொருள் என்று  பார்த்தோம். அதில் தமிழன் கண்டறிந்த மகத்துவம் என்னவென்றால், உயிரின் உறைவிடம். நம் உடலில் உயிர் எங்கே உறைந்திருக்கிறது என்று கண்டறிந்ததுதான் தமிழன் கண்டறிந்த மறைபொருள். சித்தர்கள் பாடிய பாடல்கள், கோயில் கட்டமைப்பு போன்ற அனைத்தும் நமக்கு  உணர்த்துகின்ற மறைபொருள், உயிரின் உறைவிடம் குறித்த  செய்திகள்தான். ஆர்வமிக்கவர்கள் சித்தர்கள் பாடலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக திருமூலரின் திருமந்திரம். உயிரை அறிந்த பின்புதான், தியானம், சமாதி எல்லாம் சாத்தியம். இந்த  மறைபொருள்தான் தமிழர் சமயத்தின் அடிப்படை. கடவுள், இறைவன் என்ற வரிசையில்  பசுபதி, சிவன் போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டோம். அவற்றையும் ஆராய்ந்தால்தான் தமிழர் சமயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சைவமும் ஆசீவகமும்

சிந்து சமவெளி மக்கள் வணங்கியது பசுபதி. பசுபதி என்பது சிவன் என்று பார்த்தோம். பசுபதி என்ற  வார்த்தையைப் புரிந்துகொள்ள நாம் திருமூலரை நாடவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது திருமூலர் எழுதிய பாடல்.

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

பதி என்றால் இறைவன். பசு என்றால் உயிர். பாசம் என்றால் உலகியல் இன்பங்கள். நம் உயிர், உலகியல் இன்பங்களில் கட்டுண்டு கிடப்பதால் இறைவனை உணர முடியாமல் இருக்கிறது. உலக இன்பங்களைத் துறந்தால் இறைவன் வேறு, உயிர் வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். இதுதான் அந்த பாடலின் அர்த்தம். பசுபதி என்ற வார்த்தையில் பாசம் இல்லை. பாசத்தை நீக்கிவிட்டு அதன் அர்த்தம் என்னவென்று பார்த்தால், “உயிரின் அதிபதி” என்று வரும். பசுபதி என்ற வார்த்தையும் உயிரைத்தான் குறிக்கிறது என்று விளங்குகிறதல்லவா. ஆராய்ந்து பார்த்தால், பசுபதி அல்லது சிவ வழிபாடு என்பது உயிர்வழிபாடுதான் என்பது விளங்கும். பசுபதி என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டோம். இனி, சிவன் என்ற வார்த்தை உணர்த்தும் பொருளைப் பார்க்கலாம்.

சிவன் என்ற வார்த்தைதான் மருவி ஜீவன் என்று  அழைக்கப்படுகிறது. ஜீவன் என்ற  வார்த்தைக்கு உயிர் என்றுதான் பொருள். கடவுள், இறைவன், சிவன், பசுபதி என்று எந்த வார்த்தையை எடுத்துக்கொண்டாலும் அது உயிரில் வந்துதான் முடியும். உயிர் ஒன்று மட்டும்தான் மறைபொருள், தமிழர் சமயத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா சமயத்திலும். இந்த சிவ வழிபாடு என்ற உயிர் வழிபாட்டை மையமாகக் கொண்ட சைவ சமயம்தான் தமிழர் சமயம். சைவம், தமிழர்கள் மட்டுமே கண்டுணர்ந்த மறைபொருள் உணர்த்தும் சமயம். சித்தர்கள் கண்டறிந்த மாபெரும் உண்மை. சித்தர்கள் காட்டிய வழி. உலகில் இன்று வரை வேறு எந்த மதமும், விஞ்ஞானமும் கண்டுணராத மறைபொருளைக் கண்டறிந்த ஒரே சமயம் சைவம். அதைக் கண்டுணர்ந்தவர்கள் சித்தர்கள். தமிழர்கள்.

மறைபொருள் தத்துவத்தைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் வழிபாட்டையும் சைவத்தையும் பிரிக்க முடியாது. சித்தர்கள் பொதுவாக மலைக்குகைகளில் வாழ்வார்கள். நாம் சித்தர்கள் ஆசி பெற அவர்கள் இருப்பிடத்துக்குத்தான் செல்லவேண்டும். அதனால் அவர்கள் இருப்பிடம் ஆசி வழங்கும் இடம் என்றே  அழைக்கப்பட்டது. வழங்குதல் என்பதற்கு ஈவுதல் என்ற பொருளும் உண்டு. ஆசி வழங்கும் இடம்,  ஆசீவகம் (ஆசி + ஈவு + அகம்) என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னாட்களில் ஒரு சமயமாக உருவானது. சைவம், ஆசீவகம் இரண்டுமே தமிழர்கள் சமயம்தான்.

சிவலிங்க தத்துவம்

சைவம் என்பது உயிர்வழிபாடு. சிவ வழிபாட்டை உருவாக்கியவர்கள் சித்தர்கள். சிவ வழிபாடு என்ற உயிர் வழிபாட்டை நமக்கு  அருளிய சித்தர்களையும் நாம் வணங்கினோம். சித்தர் வழிபாடு ஆசீவகம் என்று அழைக்கப்பட்டது. சைவம், ஆசீவகம் என்பது பிரிக்க முடியாத இரண்டு சமயங்கள். இரண்டுமே தமிழர்கள் உருவாக்கிய சமயங்கள். சரி, உயிர் உடலில் எங்கே உறைந்திருக்கிறதென்று சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது என்ன வடிவத்தில் இருக்கிறதென்று கண்டறிந்தார்களா? ஆம். அதுதான் சிவலிங்க தத்துவம்.

உயிரின் வடிவம்தான் சிவலிங்கம். சைவத்தில் கடவுளுக்கு மனித வடிவம் போன்ற சிலைகள் கிடையாது. சிவன், சிலை வடிவில்  செய்யப்பட்டது ஆரியர் நுழைவுக்குப் பின்புதான். தமிழர் வழிபாட்டில் சிவலிங்கம் என்றால் ஒரே உருவம்தான். நமது உடலில் உயிர் சிவலிங்க வடிவில்தான் இருக்கிறது. சிவலிங்கத்தின் வடிவத்தில் இருக்கும் சூட்சுமம் அதுதான். சிதம்பர ரகசியம், ஆன்மீகத்தில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் உண்டோ, அவை அனைத்துக்கும் ஒரே பொருள் உயிர்தான். அந்த உயிர் சிவலிங்க வடிவில்தான் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துவதே சிவலிங்க வழிபாடு. இவ்வளவு உண்மைகளை பகிரங்கமாக போட்டு உடைத்த நாம், உடலில் உயிர் உறைந்திருக்கும் இடத்தை மட்டும் ஏன் சொல்லவில்லை. ஏனென்றால் அது சித்தர்கள் ரகசியம். அதை சித்தர்கள் மட்டும்தான் அறிவிக்க வேண்டும். சித்தர்களைப் பின்பற்றினால் உணர்ந்து கொள்ளலாம். சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் உயிரின் சூட்சுமத்தை சித்தர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். சைவம், ஆசீவகம் போன்று, மேலும் சில சமயங்களும் தமிழர்களிடையே வழக்கிலிருந்தது. அவற்றையும் சிறு குறிப்பாக பார்த்து விடலாம்.

ஐவகை நிலங்களும் தெய்வங்களும்

தமிழர்கள், நிலங்களை 5 வகைகளாக பிரித்து வைத்திருந்தார்கள். மலை சார்ந்த இடம் குறிஞ்சி. காடு சார்ந்த இடம் முல்லை. வயல் சார்ந்த இடம் மருதம். கடல் சார்ந்த இடம் நெய்தல். மருதமும், முல்லையும் வறண்டபோது பாலை என்று அழைக்கப்பட்டது. இந்த ஐவகை நிலங்களுக்கும், தனித்தனியே தெய்வங்கள் உண்டு. குறிஞ்சியின் தெய்வம் முருகன். முல்லைநில தெய்வம் திருமால். மருதநில தெய்வம் இந்திரன்.  நெய்தல்நில தெய்வம் வருணன். பாலையின் தெய்வம் கொற்றவை. ஒவ்வொரு தெய்வங்களையும் ஆராய்ந்தால் இந்த கட்டுரை கன்னித்தீவு கதை போல நீளும், அதனால் பெயர்களோடு நிறுத்திக் கொள்வோம்.

ஐவகை நிலங்களில் வணங்கப்பட்ட தெய்வங்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று முன்னோர்கள் , மற்றொன்று குறியீடு. உதாரணத்துடன் பார்த்தால் தெளிவாக விளங்கும். முதலில் முன்னோர்கள். உதாரணமாக குறிஞ்சி நிலத்தை சிறப்பாக ஆட்சி செய்த அரசன் முருகன். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திய முருகனை அம்மக்கள் தெய்வமாக வணங்கினார்கள். இது முன்னோர் வழிபாடு. இரண்டாவதாக குறியீடு. முல்லை நிலம் என்பது அடர்ந்த காடுகள் கொண்ட இடம். கருமை சூழ்ந்திருக்கும். கருமையின் குறியீடாக மால் என்ற பெயரை வைத்தார்கள். மால் என்ற பெயருக்கு கருப்பு என்றுதான் அர்த்தம். தங்கள் நிலத்தையே தெய்வமாக வணங்கினார்கள். இப்படி தமிழர்கள் சமயங்கள் அனைத்தும் இயற்கை சார்ந்த வழிபாடாகவே இருந்தது. ஆரியர்கள் நுழைவுக்குப் பின் என்ன ஆனது என்று பார்க்கலாம்.

ஆரியர்கள் நுழைவுக்குப் பின்

சைவமும், ஆசீவகமும் தழைத்திருந்த சமயத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன், ஆரியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினார்கள். ஆரியர்கள் வருகைக்கு முன், தமிழர்கள் மத்தியில், உயிர் வழிபாடு மற்றும் இயற்கை சார்ந்த வழிபாடுதான் வழக்கத்தில் இருந்தது. ஆனால் ஆரியர்கள் நுழைவுக்குப் பின் இந்தியாவில், சமயங்களில் நிறைய மாற்றங்கள் வந்தன. ஆரியர்கள் பல புதிய மதங்களை உருவாக்கினார்கள். இவை கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் என்று பிரிக்கப்பட்டன என்று முன்பே பார்த்தோம். இவை அனைத்தும் ஆரியர்கள் வருகைக்குப் பின் உருவாக்கப்பட்ட மதங்கள். ஆரியர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது வேறு. அது உயிர் வழிபாடு அல்ல. நாம் ஏற்கனவே சொன்னபடி, யாரோ ஒருவர், எங்கோ உட்கார்ந்து கொண்டு இந்த அண்ட சராசரங்களை எல்லாம் தொலைகாட்சிப் பெட்டியை கட்டுப்படுத்தும் ரிமோட் போல இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று நம்பினார்கள். சரி, ஆரியர்கள் உருவாக்கிய கருத்துமுதல் வாதத்தை ஏற்றுக்கொண்ட மதங்கள், அதாவது கடவுளை நம்பிய மதங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

நியாயம்

வைசேடிகம்

பூர்வமீமாம்சம்

உத்தர மீமாம்சம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மதங்களும் ஆரியர்கள் உருவாக்கியவை. அவை கடவுளை ஏற்றுக்கொண்ட மதங்கள். கடவுளை மறுத்த மதங்களும் நிறைய இருந்தன. அவை ஆரியர்கள் உருவாக்கிய மதங்களல்ல. அவை இந்தியாவில் தமிழர்கள் அல்லாத பிரிவினர் உருவாக்கிய மதங்கள். சைவமும், ஆசீவகமும் கடவுளை மறுத்த மதங்கள்தான், அவற்றை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டதால் இங்கு அவற்றின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. சரி, பொருள்முதல் வாதம், அல்லது கடவுள் மறுப்பை மையமாக வைத்து வளர்ந்த மதங்கள் வரிசையில் முதன்மையானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மதங்கள் அனைத்தும் ஆரியர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் செழித்திருந்தன. கடவுள் மறுப்பு என்ற அறிவியல் சார்ந்த  பார்வை எவ்வளவு உச்சத்தில் இருந்தன என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

சார்வாகம்

பெளத்தம்

சமணம்

சாங்கியம்

யோகம்

இவற்றில் சாங்கியம், யோகம் போன்ற மதங்கள்  பின்னாட்களில் கடவுளை ஏற்றுக்கொண்ட மதங்களாக மாற்றப்பட்டு விட்டன.  இவை அனைத்தும் கடவுளை மறுத்து வளர்ந்த மதங்கள்தான். ஆனால் இன்று அவை இந்து மதத்தின் அங்கம் போல் காட்சிப்படுத்தப்படுகின்றன. புத்தரை கிருஷ்ணனின் பத்தாவது அவதாரம் என்று குண்டைத் தூக்கிப் போட்டு, புத்த மதத்தையும் ஈர்க்க முயன்றது அன்றைய சனாதன மதங்கள் அல்லது வேத மதங்கள் என்ற ஆரியர்கள் உருவாக்கிய மதங்கள். தனது வாழ்நாள் முழுவதும் ஆரிய மத எதிர்ப்பையே மையமாகக் கொண்டு வாழ்ந்த புத்தருக்கே இந்த கதி.

இவற்றில் பல மதங்கள் காலப்போக்கில் அழிந்து போயின. யோகம், சாங்கியம் போன்ற மதங்கள், மதம் என்ற அடையாளத்தை இழந்து உடற்பயிற்சி என்ற அளவில் சுருங்கி, இன்று இந்து மதத்தின் உட்பிரிவுகள் போல் மாறிப்போய் விட்டன. ஆசீவகம், சார்வாகம் போன்ற மதங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.  ஆரியர்கள் ஆடு, மாடு மேய்க்கும் கூட்டம். அவர்கள் தமிழர்கள் அளவுக்கு நாகரிகமானவர்கள் கிடையாது. ஆனால் தமிழர்கள் மதங்களை விட தங்கள் மதங்கள் உயர்ந்தவை என்று நம்பினார்கள். ஆனால் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பல மதங்கள் அதே வேகத்தில் அழிந்தும் போயின. இனி மதங்களை உருவாக்கி பயனில்லை என்று ஆரியர்கள் முடிவு செய்தார்கள். இங்கு இருக்கிற மதங்களை, நமது மதங்கள் என்று சொல்லிவிடலாம். அது எப்படி சாத்தியம். வரலாற்று வெள்ளத்தில் எல்லாம் சாத்தியம்தான். நினைவில் கொள்க. இன்னும் இந்தியாவில் இந்து என்ற மதம் புழக்கத்தில் வரவில்லை.

குள்ளநரிக்கூட்டம்

தமிழர்களின் மதத்துக்கும், ஆரியர்கள் மதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. தமிழர்கள் கடவுளுக்கு தானியங்களை, உணவுப்பண்டங்களை மட்டுமே படைப்பார்கள். ஆனால் ஆரியர்கள் தங்கள் கடவுள்களுக்கு ஆடு, மாடு, குதிரை போன்ற உயிர்களைப் பலியிடுவார்கள். தமிழர்கள் மனதால் வழிபடுவார்கள். ஆரியர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் சொல்லி வழிபடுவார்கள். ஆரியர்கள் என்ன மந்திர மாயங்கள் செய்தாலும் அவர்கள் மதங்கள் நிலைக்கவில்லை. இங்குதான் ஆரியர்களின் குள்ளநரித்தனம் வேலை செய்யத் துவங்கியது. மகாபாரதத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று சொல்வார்கள். அதாவது எதிரியை கட்டிப்பிடித்தே கொன்று விடுவது திருதராஷ்டிரன் பழக்கம். அதேபோல் தங்களுக்குப் பிடிக்காத மதங்களுக்குள் நுழைந்து அதன் வரலாற்றை அழித்து விடுவது. இதைத்தான் ஆரியர்கள் செய்தார்கள். தாங்கள் வழிபடும் கடவுளும்,  தமிழர்கள் வழிபடும் கடவுளும் ஒன்று என்று நம்பும்படி செய்துவிட்டால்?  பல ஆண்டுகள் கழித்து, அந்த மதத்தையே உருவாக்கியது தாங்கள்தான் என்று சொன்னால், நம்புவதற்கு ஒரு முட்டாள் கூட்டம் இல்லாமலா போய்விடும்? கூட்டமல்ல, நாடே அவர்கள் பக்கம் வருமென்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அது ஆரிய மூளைக்குக் கிடைத்த வெற்றிதான்.

 ஆரியர்கள் செய்த தந்திரம் என்னவென்று பார்க்கலாம். தமிழர்கள் வணங்கும் கடவுளின் பெயர் சிவன், ஆரியர்கள் வணங்கும் கடவுளின் பெயர் ருத்ரன். சிவனும், ருத்ரனும் ஒன்றுதான் என்று பொய் சொல்லி இரண்டையும் இணைத்தார்கள். இதேபோல் தமிழர்கள் வணங்கிய கடவுளின் பெயர் திருமால், ஆரியர்கள் வணங்கிய கடவுளின் பெயர் கிருஷ்ணன். திருமாலும், கிருஷ்ணனும் ஒன்றுதான் என்று இரண்டையும் இணைத்தார்கள். நாம் ஏற்கனவே சொன்னபடி, பல ஆண்டுகள் கழித்து, சிவன், திருமால் எல்லாம் நாங்கள் உருவாக்கிய கடவுள்தான் என்று சொன்னால் மக்கள் நம்பிவிடப் போகிறார்கள். வெள்ளையாக இருக்கிற ஆரியன், புரியாத மொழியில் மந்திரம் சொல்லும் ஆரியன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்குமென்று நம்புவதற்கு நாடே வரும்.

இப்படி கடவுள்களை இணைப்பதால் ஆரியர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது, நாம் என்ன இழந்து விடப் போகிறோம் என்று நாம் சிந்திக்கலாம். நாம் ஏற்கனவே பார்த்தபடி ஆரியர்கள் வழிபாட்டு முறைகளும், நமது வழிபாட்டு முறைகளும் வேறு. சற்று சிந்தித்துப் பாருங்கள், மந்திரங்கள் ஓதாத, யாகங்கள் வளர்க்காத கோயில்கள் எங்கே இருக்கின்றன இப்போது. எல்லா கோயில்களும் ஆரியர்கள் வசம்தான் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் நாம் கட்டிய கோயில்கள். அதுமட்டுமல்லாமல், கோயில்கள் மற்றும் நமது வழிபாட்டு முறைகள் உணர்த்தும் மறைபொருள் ரகசியம் அழிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம்,  நாம் நம் மதங்களை ஆரியர்களிடம் இழந்ததால் வந்த விளைவு. ஆரியமயமாக்கப்பட்ட தமிழர் மதங்கள் சிலவற்றையும் அவற்றுக்குப் பின்னால் இருந்த சில அறிவாளிகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்,

ஷண்மதமும் ஆதிசங்கரரும்

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த பின் உருவாகிய பல மதங்கள் அழிந்துபோய், தமிழர்கள் மதங்கள் பலவற்றை தங்கள் மதங்களுடன் இணைத்துக்கொண்டார்கள் என்று பார்த்தோம். இவை ஆஸ்திகம், நாஸ்திகம் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. கடவுளை அல்லது வேதத்தை ஏற்றுக்கொண்ட,  அதாவது கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் ஆரியர்களை மட்டும் கருவறையில் அனுமதிக்கும் மதங்கள் ஆஸ்தீக மதங்கள் என்று அழைக்கப்பட்டன. அவை மொத்தம் ஆறு. சமஸ்கிருதத்தில் ஆறு என்றால் ஷண். ஆகையால் அந்த ஆறு மதங்களும் ஷண்மதங்கள் என்று அழைக்கப்பட்டன. நமது முருகன் என்ற ஆறுமுகன், ஷண்முகன் ஆன கதை இப்போது விளங்குகிறதல்லவா.  அந்த ஆறு மதங்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சைவம்

வைஷ்ணவம்

காணாபத்தியம்

கௌமாரம்

சாக்தம்

சௌரம் 

சிவ வழிபாடு சைவம். விஷ்ணு வழிபாடு வைஷ்ணவம். கணபதி வழிபாடு காணாபத்தியம். முருக வழிபாடு கௌமாரம். சக்தி வழிபாடு சாக்தம். சூரிய வழிபாடு சௌரம். நமது சைவமும், திருமால் வழிபாடும் ஆரியமயமாக்கப்பட்டதை கவனியுங்கள். இந்த ஆறு மதங்களையும், அதாவது ஆரியர்களுக்கு கோயில் கருவறைகளைத் திறந்துவிட்ட இந்த ஆறு மதங்களையும் இணைப்பதற்கு அரும்பாடு  பட்டவர் ஆதிசங்கரர். கி.பி. 7ம் நூற்றாண்டில் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். அந்த ஊர் தற்போதைய எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. ஆதி சங்கரர் 7ம் நூற்றாண்டில் இந்த மதங்களை எல்லாம் இணைத்து ஷண்மதம் என்றுதான் பெயரிட்டார். அதனால்தான் அவர் ஷண்மத ஸ்தாபகர் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஷண்மதம் என்றுதான் பெயரிட்டார். இந்து என்று பெயரிடவில்லை. ஏனென்றால் அப்போதும் இந்து என்ற வார்த்தை பழக்கத்துக்கு வரவில்லை.

ஆதிசங்கரர் கரடியாய் கத்தினாலும் இந்த மதங்கள் ஒன்றிணைவதாக இல்லை. சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டு செத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்து என்ற மதம் உருவாவதற்கு மூலகாரணமே இந்த ஷண்மதம் என்று  கூறலாம். அந்த வகையில், இந்து மதத்துக்கான முதல் விதையைத் தூவியவர் என்ற பெருமை ஆதிசங்கரரையே சேரும். நாம் சிந்து சமவெளி நாகரிகம் முதல் கி.பி.7ம் நூற்றாண்டு வரை பயணம் செய்து விட்டோம், அனால் இன்னும் இந்து என்ற வார்த்தையைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டிருப்பவர்கள் நலனுக்காக இந்து என்ற வார்த்தை பிறந்த வரலாற்றைப் புரட்டியே ஆகவேண்டும்.

 இந்து என்ற அந்நிய வார்த்தை

1791ம் ஆண்டு, இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலம். அப்போது இந்தியாவுக்கென்று ஒரு சட்டம் இயற்றும் பணி வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் ஒரு நீதிபதி, ஆனால் நீதிபதியாக பணியாற்றவில்லை. அதாவது தலைமை நீதிபதியின் எடுபிடி போன்ற ஒரு பதவி என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்குதான் இந்தியாவுக்கென்று ஒரு சட்டம் இயற்ற வேண்டுமென்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் வழக்கிலிருந்த, அவர் எழுதி முடித்த சட்டத்துக்கு அவர் இந்து சட்டம் (Hindu Law) என்று பெயர்  வைத்தார். அவர்தான் இந்து என்ற வார்த்தையை  இந்தியாவில் முதலில் பயன்படுத்திய பெருமைக்குரியவர். பயன்படுத்திய ஆண்டு 1791. கடைசியில் இந்தியாவுக்கு உள்ளே கூட இந்து என்ற வார்த்தை ஒரு அந்நியரால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டப்படி, இந்து என்ற வார்த்தையின் விளக்கத்தை நாம் மீண்டும் நினைவுகூர வேண்டும். “யார் முஸ்லீம்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ, யார் பார்சீக்கள் இல்லையோ, யார் சீக்கியர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள்”. இந்த வார்த்தைகளில் கூறப்பட்ட மதங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் வழக்கத்திலிருந்த சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, சமணம், பெளத்தம், சீக்கியம் போன்ற மதங்கள் எல்லாம், இந்து என்ற வார்த்தைக்குள் அடங்கிப் போய்விட்டன. இத்தனைக்கும் சைவம், மாலியம், சமணம், பெளத்தம் போன்ற மதங்கள் கடவுளை மறுத்த மதங்கள். இவை தவிர மேலும் நூற்றுக்கணக்கான மதங்கள் இந்து என்ற அந்த ஒற்றை வார்த்தைக்குள் ஈர்க்கப்பட்டு விட்டன. இந்து மதத்திற்கு காந்தம் என்ற பெயர் சரிதான் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் உருவான எந்த ஒரு மதத்துக்கும் இந்து என்ற சாயம் பொருந்தாது. இந்து என்ற வார்த்தையின் வரலாறே 1791ம் ஆண்டுதான் துவங்குகிறது. உங்கள் மதத்தின் வரலாறு தெரிய வேன்றுமென்றால், உங்கள் மதத்தின் உண்மைப்பெயரைக் கண்டறிந்து (அது சைவமோ, கௌமாரமோ, வேறு எதுவோ) அந்த பெயரில் உங்கள் மதத்தின் வரலாற்றைத் தேடுங்கள்.  ஏனென்றால் உங்கள் மதம் எங்கே புதைக்கப்பட்டதோ, அந்த இடத்தில்தான் இந்து என்ற மதமே முளைத்திருக்கிறது.

உதவிய நூல்களும் இணையதளங்களும்

https://en.wikipedia.org/wiki/Megasthenes

https://en.wikipedia.org/wiki/Adi_Shankara

https://en.wikipedia.org/wiki/Hindu

http://www.ttamil.com/2017/02/03_17.html

http://www.ttamil.com/2017/02/01.html

http://www.ttamil.com/2017/02/02_10.html

http://www.ttamil.com/2017/02/04_24.html

https://en.wikipedia.org/wiki/William_Jones_(philologist)

https://www.yarl.com/forum3/topic/104585-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/05/ 

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D)

https://rajeshlingadurai.wordpress.com/2018/04/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE/

 


 

 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

3 Comments

  1. ஐயா, தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கட்டுரை, “இந்து மதமும் தமிழர் சமயமும்” என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை. அது தங்கள் இணையத்தளத்தில் பதிவிட்டதன் நோக்கத்தை அறிய விரும்புகிறேன். தயவுசெய்து பதிலளிக்கவும்.

Leave a Reply