ஈழப் போராட்ட வரலாறு – 5:
அதிகாரத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திணறிய வலதுசாரிகள்
இலங்கை வலதுசாரிகள் பலமான ஆளும்வர்க்கமாக வலுப்பெற்றிருக்காத காரணத்தால் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோதும் அவர்களால் மிகவும் பலவீனமான ஆட்சியையே அமைக்க முடிந்தது. அவர்கள் தம் ஆட்சியை நிலைநிறுத்தத் திண்டாடினார்கள். பலப்பட்டுவந்த தொழிலாளர் இயக்கம் அவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. 1947 இல் நடந்த முதலாவது தேர்தலின் முடிவுகள் அவர்களின் பயத்தை மேலும் அதிகரிக்க வைத்தது. அத்தேர்தலில் LSSP பத்து ஆசனங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. நாடு முழுவதும் போட்டியிட வசதியற்ற காரணத்தால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் போட்டியிட்ட இடதுசாரிகள் மொத்தமாகப் 19 ஆசனங்களைக் கைப்பற்றினர்.
ஆட்சி அமைக்கத் தடுமாறிக் கொண்டிருந்த வலதுசாரிச் ‘சிங்கள’ இனவாதிகளைக் காப்பாற்ற இத்தருணத்தில் தமிழ் வலதுசாரிக் காங்கிரஸ் கட்சியினர் ஓடி வந்தனர்.
ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் அவர்கள் யு.என்.பி அரசுடன் இணைந்தனர். டி.எஸ்.சேனநாயக்கா இலங்கையின் முதற் பிரதமரானார். ஐம்பதுக்கு ஜம்பது என்று முன்பு படம் காட்டியவர் தனக்குப் பதவி கிடைத்ததும் அக்கோரிக்கையைத் தூக்கிக் குப்பையில் எறிந்த காரணத்தால் தமிழ்க் காங்கிரசுக்குள் பிளவுகள் ஏற்பட்டன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் 1949இல் பலர் காங்கிரசிலிருந்து பிரிந்து பிடரல் கட்சியை – இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். இத்தருணத்தில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய சிலோன் இந்தியர் காங்கிரசும் யு.என்.பி.க்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை மலையக மக்கள் தமக்கெதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த யு.என்.பி க்கு வாக்களிக்க மறுத்திருந்தது இங்கு மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. பின்பு மலையக மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் சட்டத்தை யு.என்.பி கொண்டு வந்த போது அதனால் தமது வாக்கு வங்கிக்கு ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தமையை நாம் கவனிக்க வேண்டும். இத்தருணத்தில் மலையக மக்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு ஆதரவு பெருகி வந்தது என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்த கையுடன் சேனநாயக்கா செய்த முதல் வேலை இடதுசாரிகளைத் தாக்கியதே. வரிசையாக அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்தத் தொடங்கினார் அவர். இடதுசாரிகளுக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலிருந்த ஆதரவை உடைக்கவும், தமக்குச் சார்பாகச் சிங்கள இனவாத்தைத் தூண்டவும் மலையக மக்களின் உரிமைகளில் கைவைக்கத் தொடங்கினார். 1949ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. இது தமிழ் பேசும் மக்களின் வாக்கு வீதத்தையும் கணிசமான அளவு குறைத்தது. பழைய கண்டிய பௌத்த முரண்பாடுகளை மீண்டும் தோண்டியெடுத்த சேனநாயக்கா ‘சிங்கள இனவாத’த்தை அறிமுகப்படுத்தினார். வளரும் தொழிலாளர் இயக்கத்தைத் துண்டாட எதையும் செய்யத் தயார் என்று சொன்னவரல்லவா அவர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே பின்பற்றினார்.
1947ஆம் ஆண்டு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1948ஆம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டம் முதலியனவும் தொழிலாளர் அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்கும் நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டன. இவ்வகை உத்திகளும் தூண்டிவிடப்பட்ட சிங்கள பௌத்த பெரும்தேசியவாதமும் யு.என்.பிக்கு அடுத்த தேர்தலில் பெரும் வெற்றியீட்டிக் கொடுத்தது. அவர்கள் இவ்வாறு பலப்பட்டதற்குத் தமிழ் வலதுசாரிகள் முக்கிய பங்காற்றினர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாடு முழுவதும் வறிய மக்கள், தொழிலாளர்கள், மலையக மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் யு.என்.பி செய்த அனைத்துத் தாக்குதல்களுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்த வலதுசாரிகள் தமது முழு ஆதரவும் வழங்கிவந்தனர். இதன் காரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற ‘தமிழ்த் தலைவர்களின்’ செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அவர்கள் தொழிலாளர்களின் நம்பிக்கையை, குறிப்பாகச் சிங்களத் தொழிலாளர்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். யு.என்.பி யுடன் இணைந்து தாக்கிய தமிழ்த் தலைவர்களுக்கெதிரான சிங்களத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பானது பின்பு அவர்கள் மத்தியில் சிங்கள இனவாதம் தூண்டப்பட உதவியது. செல்வாக்கு மங்கிய தமிழ்க் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் பல ஆசனங்களை இழந்தது. இதன்பின் மீண்டும் ஆதரவு தேட தமிழ்க் காங்கிரஸ் மோசமான பல குறுக்குவழிகளைத் தேடியது. எவ்வாறு வலது சாரிய யு.என்.பி சிங்கள பௌத்த இனவாதத்தைக் கையிலெடுத்ததோ, அதே போல் தமிழ்க் காங்கிரஸ் தமக்கு ஆதரவு சேர்க்க தமிழ் இந்துத்துவ இனவாதத்தைக் கையிலெடுத்தது.
யு.என்.பி தேர்தலில் வெற்றி பெற்ற போதும் கிராமப் பகுதிகளில் அவர்களின் செல்வாக்குக் குறைவாகவே இருந்தது. தொழிலாளர் சக்தியை உடைக்க அவர்கள் கையிலெடுத்த இனவாதம் அவர்களை நோக்கித் திரும்பும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யு.என்.பி யின் பெரும்பான்மைத் தலைவர்கள் கொழும்பு மேற்குடியைச் சேர்ந்தவர்களாயும் சிங்கள மொழி சரியாகப் பேச முடியாதவர்களாயும் இருந்தனர். சிங்கள இனவாதம் உக்கிரமடைந்தால் தம்மால் அதற்குத் தலைமை தாங்க முடியாது என்பதை இவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். போதாக்குறைக்கு இவர்களின் மோசமான வலதுசாரியக் கொள்கைகளால் தொழிலாளர் மத்தியில் பெருகிவந்த ஆத்திரத்தையும் அவர்கள் கவனிக்காமலில்லை. இந்த போக்குகளின் தொடர்ச்சியாக யு.என்.பி யின் ஒரு பகுதியினர் SWRD பண்டாரநாயக்கா தலைமையில் பிரிந்து சென்றனர். வளரும் இடதுசாரி ஆதரவைக் கவனித்த SWRD சிங்கள ஏழை மக்களுக்காகப் பேசுபவராகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயன்றார். 1952இல் சிறிலங்கா சுதந்திர கட்சியை (Sri lanka Freedom Party) ஆரம்பித்த அவர் அந்த ஆண்டு தேர்தலில் SWRD க்குச் சரி நிகராக 9 ஆசனங்களைத் தமது கட்சிக்கு வென்றார். தமிழ் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் யு.என்.பி 54 ஆசனங்களை வென்றது. தமிழ் வலதுசாரி வாக்குகளும் யு.என்.பி க்கே சென்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் காங்கிரசால் 4 ஆசனங்களை மட்டுமே பெற முடிந்தது.
இத்தேர்தல் வெற்றி யு.என்.பி க்கும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த வளரும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தமிழ்-சிங்கள முதலாளித்துவ சக்திகளின் பலமான-தலையாய கட்சியாக யு.என்.பி தன்னை நிறுவியது.
இந்த வெற்றிக் கிறக்கத்தில் யு.என்.பி யினர் தாம் சார்ந்த வர்க்கத்துக்கு ஆதரவான கொள்கைகளை அமுல்படுத்துவதில் மும்முரமாக இறங்கினர்.
இதற்கு முன் தமது பலவீனமான அரசாங்கத்தின்போது ஏறத்தாழ 50 வீத அரச செலவுகளைப் பொதுச்சேவை (welfare) சார்ந்து செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தனர். தாம் பலமான ஆட்சியை ஏற்படுத்திய கையுடன் பொதுச் சொத்தைத் தனியார் வியாபாரிகளுக்காகக் கொள்ளைபோடும் கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். ஆத்தருணம் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவைக் காரணங் காட்டிப் பொதுச் சேவைக்கான செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. உணவுப் பண்டங்களின் விலைகள் இருமடங்காகிப் பலமடங்காகிக் கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்லத் தொடங்கின. கடந்த வருடங்களில் பொது வேலை நிறுத்தம் உட்படப் பல்வேறு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்த இலங்கைத் தொழிலாள வர்க்கம் மீண்டும் தமது பலத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது!
யு.என்.பி பெரும் வெற்றி பெற்ற ஒரு வருடத்துக்குள் இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தம் நடந்தேறியது
https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/9883–5-
Leave a Reply
You must be logged in to post a comment.