வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்!

வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்!

நக்கீரன்

GURUகடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்  இருந்து வானியலாளர்கள்  நாம் காணும் அண்டத்தை அளப்பதில் அளப்பெரிய சாதனைகளை ஈட்டி வருகிறார்கள். இந்த விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க  விண்வெளி மையமான நாசா நிறுவனம் முன்னணி வகிக்கிறது.

நாம் வாழும் புவியை ஒத்த செவ்வாய்க் கோளத்தை ஆய்வு செய்ய பல விண்கலங்களை நாசா அனுப்பி வைத்தது. அடுத்து வியாழ கோளை ஆய்வு செய்ய கடந்த 05-08-2011  அன்று புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல்  விமானப்படை ஏவுதளத்தில் (Cape Canaveral Air Force Station) இருந்து ‘யூனோ’ என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.  இதற்கான செலவு  110 கோடி அ. டொலர்கள்.  நன்கு திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட யூனோ விண்கலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக  170 கோடி மைல்கள் (270 கோடி கி. மீற்றர்) பயணம் செய்து  வெற்றிகரமாக வியாழ கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து அதனைச் சுற்றிவரத் தொடங்கியது. அது வியாழ கோளினது தோற்றம்,  பரிணாம வளர்ச்சி, காந்தவயல், தண்ணீர், வழிமண்டலம் போன்றவற்றை ஆய்வு செய்ய இருக்கிறது. இதிகாசங்களின்படி யூனோ உரோமர்களது தேவி ஆவாள்.  சனியின் மகளாவாள். வியாழனின் மனைவி ஆவாள்.

சூரியனிலிருந்து  5 வது  இடத்தில் ஒள்ள  வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும்.  ஞாயிறு  மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும்.

சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் வியாழனில் இல்லாமை குறிப்பிடத்தக்கது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிடத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத்தானே சுற்றி விடுகிறது.

சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல்  தொலைவில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது.  புவிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவை விட ஐந்து மடங்கு கூடியது ஆகும். அதன் விட்டம்  88,846 மைல்களாகும். ஈர்ப்பு சக்தி புவியை விட இரண்டனை மடங்காகும்.

கடந்த  5 ஆண்டுகளாக விண்வெளியை சுற்றிப் பயணித்த யூனோ அமெரிக்க நேரப்படி,  04-07-2016  இரவு 11.53 மணியளவில்  வியாழனுக்குள் நுழைந்த சாதனையை  நாசா வானியலாளர்கள்  மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.0181c-jupiter

வரலாற்றுக்கு முந்திய  காலத்தில் மனிதன் மலையில் உள்ள குகைகளிலும் மரக்கிளைகளில் குடிசை கட்டி வாழ்ந்தான். காட்டில் உள்ள கொடிய விலங்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றவே இப்படி வாழவேண்டியிருந்தது.

மனிதன் நாகரிகம் அடைந்த போது நிலத்தில் சிறு வீடுகளையும் பின்னர் பாதுகாப்பான பெரிய மனைகளையும் கட்டி வாழத் தொடங்கினான். இருந்தும் இயற்கை அவனை மிரட்டியது. இடி, மின்னல், வெள்ளம், நில நடுக்கம், வால்வெள்ளி, எரிமலைகள், விண்ணில் தெரியும் சூரியன், சந்திரன், புதன் முதலிய கோள்களின் தோற்றமும் அசைவும்  அவனுக்கு அச்சத்தை கொடுத்தது. அதனால் அவற்றை வணங்கினான். சூரிய வழிபாடு எல்லாப் பண்பாடுகளுக்கும் உரியனவாகும்.

விண்ணை அண்ணாந்து பார்த்த போது அசையாத விண்மீன்களையும் அசையும் கோள்களையும் கண்டு  மனிதன் வியந்து போனான். அவற்றுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பினான். அவற்றுக்கு சிலை வைத்து வணங்கினான். இன்றைய கோயில்களில்  நவக்கிரக வழிபாடு  முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

மனிதனது ஊனக் கண்களுக்குத் தெரியும்  புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களையும் அவற்றின் ஓட்டங்களையும் கண்டு பிடித்தான். தமிழர்களுக்கு சுய  ஒளி படைத்த சூரியன் ஒரு கோள் என நினைத்தான். அது போலவே சந்திரன் பூமியின் துணைக் கோளாக இருந்தும் அதனையும் கோள்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டான். பின்னர் புராணிகர்கள் இராகு, கேது என்ற நிழல்கோள்களையும் சேர்த்து ஒன்பது கோள்களாக வரித்துக் கொண்டான். ஆனால் இன்றைய வானியலாளர்கள் பூமியை ஒத்த  பல ஆயிரம் கோள்களை  தொலை நோக்கி மூலம் கண்டு பிடித்துள்ளனர்.

143114main_sts114armwalk-lg16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் புவி  இந்த அண்டத்தின் நடுவில் இருப்பதாகவும் ஞாயிறு உட்பட ஏனைய  கோள்கள் அனைத்தும் புவியைச் சுற்றி வருகின்றன என்றே மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.    மேல் நாட்டில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் (கிபி 150)  வாழ்ந்த Ptolemy என்ற  வானியலாளர்/சோதிடர்  கூட புவியை அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்ற அரிஸ்தோட்டரின்  புவிமையக் கோட்பாட்டையே (Geocentric Theory)  நம்பினார்.

கிபி 1512 இல் நிக்கோலஸ் கோபெர்னிக்ஸ்

(Nicolas Copernicus)  என்னும் வானியலாளர்தான் ஞாயிறை மையமாகக் கொண்டு ஏனைய  கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை (Heliocentric theory of Planetary Motion) நிறுவி அதுவரை புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டை உடைந்தெறிந்து எல்லோரையும் குறிப்பாக போப்பாண்டவரை மிரள வைத்தார். அவர் மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுதிய ஞாயிறு மையக் கோட்பாட்டை நிறுவும் நூல் வெளிவந்தது.

நட்சத்திரக் கூட்டங்கள் (இராசிகள்) போலவே  கிரகங்களும் ஞாயிறைச் சுற்றி வெவ்வேறு பாதையில், வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு தொலைவில்  வலம் வருகின்றன. அதனைக் கீழேயுள்ள  அட்டவணை எடுத்துக்காட்டுகிறது.

12 இராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுக்கும் காலம்

கோள் ஞாயிறில் இருந்து (மில்லியன்கிமீ) சூரியனை சுற்றிவரும் காலம் ஒரு இராசியை கடக்கும் காலம்
சந்திரன்(திங்கள்) 150 27 ¼ நாள் 2 ¼ நாள்
புதன் 57.9 1 ஆண்டு 1 மாதம்
சுக்கிரன் 108.2 1 ஆண்டு 1 மாதம்
செவ்வாய் 227.9 1 ½  ஆண்டு 1 ½ மாதம்
குரு(வியாழன்) 778 12 ஆண்டு 1.0 ஆண்டு
சனி (காரி) 1427  30 ஆண்டு 2½ஆண்டு
ராகு, கேது (நிழற்கோள்கள்) 18 ஆண்டு 1 1/2 ஆண்டு

அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு (வியாழன்) ஓர் ஆண்டும் இராகு (Ascending Node)
கேது (Descending Node)  இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2 1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழற்  கோள்கள்.

வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது.  சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.   கோள்களில் மிகப் பெரிய கோளான வியாழன்,  சூரியனை ஒரு சுற்றிவர 12 ஆண்டுகள் எடுக்கிறது.  12 இராசிகள் உள்ள சூரியவீதியில் வியாழன்  ஒவ்வொரு இராசியிலும் சுமார் ஓர் ஆண்டு தரித்து நிற்கும். ஓர் ஆண்டு  கழித்து வியாழன் அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் குருப் பெயர்ச்சி என்று கூறி அதற்குப் பலனும் சொல்கிறார்கள். உண்மையில் வியாழன் வெறுமனே ஞாயிறைச் சுற்றி வருகிறது.  அது இராசி வீடுகளில் புகுந்து வெளியேறுகிறது என்பது எமது கற்பனையாகும். அது மட்டுமல்ல அப்படிப் புகுந்து வெளியேறும் போது அந்தந்த இராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்லது, கெட்டது நடக்கும் என்பதும் கற்பனையே.

இவ்வாறு அமெரிக்க வானியலாளர்கள்  வானை அளப்போம், கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தை  கண்டு தெளிவோம் என்று பாடிய பாரதியாரின் கனவை நினைவாக்கும் போது தமிழர்கள்  குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி,  இராகு கேது பெயர்ச்சி எனச் சொல்லிக் கொண்டு அவற்றால் ஏற்படும் தோசங்களை நீக்க கோயில் குளங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையுமாம்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூசை செய்வது நலம் பயக்கும் மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி தோத்திரம், கனகதாரா தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம்.

ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோசங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேட கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும்.

ஆண்டுக்கு  ஒருமுறை நடைபெறும் குரு  பெயர்ச்சி ஒரு இயற்கை நிகழ்வு. குரு பார்வை கோடி பெறும் என்பது கோள்கள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கை ஆகும்.

தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் அது  மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.

இந்த இடத்தில் பாட்டுக்கொரு புலவன்  பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை எல்லோரும் ஊன்றிப் படிக்க வேண்டும்.

“புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே!

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்! தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.”

பாரதியாரின் அறிவுரையை படிப்பதோடு நின்று விடாமல் தமிழர்கள்  மூடநம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும்.  புது மனிதர்களாக வாழப் பழக வேண்டும். பாடுபட்டுப் பனியிலும் வெய்யிலும் உழைக்கும் பணத்தை திருவிழா, தேர், தீர்த்தம், பூசை, பரிகாரம் என்பவற்றில் கரியாக்கக் கூடாது.  அந்தப் பணத்தை  போரினால் பாதிக்கப்பட்ட  எமது உடன்பிறப்புக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்தக் கொடுத்தால் நிறையப் புண்ணியம் கிடைக்கும்!

வியாழனை அளக்கும் அமெரிக்கர்கள் வியாழ பெயர்ச்சிக்குப் பரிகாரம் தேடும் தமிழர்கள்! – நக்கீரன்

                        

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply