தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசை பாரதி பிறந்ததால் கழிந்தது!
நக்கீரன்
(மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)
வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞர் பாரதியார்.
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
என்று மார்தட்டியவர் பாரதியார். பாரதியால் தமிழ் உயர்ந்ததும் தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.
ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ பாவலர்களுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குக் கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை!
தமிழ்த் தாய்க்கு பாமாலை பாடி புகழ்மாலை சாத்தியவன் பாரதி. தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன் பாரதி. புதிய சுவை, புதிய கற்பனை, புதிய அழகு, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு புதுக் கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் கட்டிச் செந்தமிழ் அன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.
மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றது. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றது.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!
பாரதி காரிகை கற்றுக் கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர்.
தமிழ்த் தாய் அவர் நாவில் நடனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று எழுந்தன. இன்று பத்தி எழுத்தாளர் (Columnist) எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு பாரதிதான் அறிமுகப்படுத்தினார்.
வடமொழி தேவபாஷை தமிழ் மொழி நீசபாஷை என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று முரசறைந்தான்.\
பாரதியாருக்குத் தமிழோடு வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்புப் பட்டறிவின் அடிப்படையிலானது.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே! (செந்தமிழ்)
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் பேடிகள் என்றும் பேதைகள் என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.
வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
………………………………………
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து பாரதி,
நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்
நாயெனத் திரியும் ஒற்றர்கள்
வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்
கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள். (பாரதியார் பாடல்கள்)
என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்டார்.
வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும்
ஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்
கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார் பாடல்கள்)
என்றும்
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி னின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே! (பாரதியார் பாடல்கள்)
என்று பாரதி அன்று பாரதநாட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பாடியது இன்று எமக்கும் பொருத்தமாக இருக்கிறது.
மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றிற்குப் புதிய பொருள் சொன்னார்.
ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்,
போருக்கு நின்றிடும்போதும் -உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்! (பாரதியார் பாடல்கள்)
மேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,
மந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு – களியே
அமிழ்தம், பயன்வருஞ் செய்கையே அறமாம்
அச்சமே நரகம், அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க! (பாரதியார் பாடல்கள்)
பாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா! தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன்! பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்!
இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
மேலும் கேட்பார்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! – பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா
மெனல் கேளீரோ? (பாரதியார் பாடல்கள்)
சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விழிப்பார்,
சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா. (பாரதியார் பாடல்கள்)
அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு மாறானது எதுவோ அவை அனைத்தையும் செய்தார். பிராமணன் மீசை வைக்கக் கூடாது என்ற தடையை உடைத்தெறிந்து பெரிய மீசை வைத்துக் கொண்டார். அதனை எப்போதும் முறுக்கிக் கொண்டே இருப்பார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர் பாரதியார்!
சிவனும் சக்தியும் ஒன்று . சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு பெண்கள் ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றெல்லாம் பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் ஒழிந்தபாடாயில்லை. சாதியின் பேரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.
சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!
சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைத்திடும் வையம்! (பாரதியார் பாடல்கள்)
என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் இன்றும் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ?
பாரதியார் இயற்றிய கண்ணம்மா பாடல்களுக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம். அல்லது அவர் பாடிய பாஞ்சாலி சபதத்திற்குப் பரிசு கொடுத்திருக்கலாம். ஆனால் 1913 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வங்காளிக் கவிஞர் இரவீந்தநாத் தாகூருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம் அவர் ஆங்கிலத்திலும் கவிதைகள் இயற்றி இருந்தார்.
பாரதியார் உயிரோடு இருந்த போது அவரது அருமை பெருமை தெரியாது இருந்துவிட்’டோம். அவனது இறுதிப் பயணத்தில் 21 பேர்தான் கலந்து கொண்டார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ! (மகாகவி பாரதியார்)
பாடியது போலவே மகாகவி பாரதியார் நரை திரை, முதுமை தனது 39 ஆவது அகவையில் பூதவுடலை நீக்கிப் புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882. மறைந்தது புரட்டாதி 11, 1921. இந்த 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, மூடபக்தி ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பேசாத பொருளே இல்லை.
மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி பிரமிக்கத் தக்க வரலாறு படைத்தார்
அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை
இ. இராமச்சந்திரா
உலக வரலாற்றில் மிகக் குறைந்த வாழ்நாளில் பிரமிக்கத்தக்க வரலாறு படைத்த சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் சுப்பிரமணிய பாரதியார். அவர் 1882 இல் பிறந்து 1921 இல் அமரத்துவம் எய்தினார்.
அவருள் வானவில்லிலுள்ள வர்ணங்கள் போல் பன்முக ஆளுமை பொதிந்திருந்தது. அவர் தமிழ் ஆசிரியராக, ஊடகவியலாளராக, கவிஞனாக, இந்தியத் தேசிய விடுதலைப் போராளியாக, தேசிய விடுதலைத் தலைவராக ஆற்றிய பணி, அதை செயல்படுத்த உதவிய களநிலை போன்றவை பற்றி மதிப்பீடு செய்தல் எல்லோருக்கும் உபயோகமாகும்.
பாரதி பிறந்த ஊர் எட்டயபுரம். அது வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்குத் துரோகம் செய்து அவரைக் காட்டிக்கொடுத்த வம்சாவளியினரின் ஆதிக்கத்தில் இருந்தது. பாரதியின் தந்தையார் சின்னச்சாமி ஐயர். அவர் ஆங்கில மொழியில் புலமைபெற்றவர். அவர் ஒரு தேசியவாதி. நாட்டைப் பின்தங்கிய நிலையில் இருந்து மீட்டெடுத்தல், அறியாமையை அகற்றல், கைத்தொழில் மயமாக்கல், நவீனமயப்படுத்தல் போன்ற தொழிற்பாட்டில் ஆர்வம் உள்ளவர்.
அவர் எட்டயபுர இராசதானியில் பணி செய்தவர். அவர் துணி ஆலையைத் தொடங்குவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டவர். அவரின் முயற்சி வெற்றியளிக்கவில்லை. அத்துடன், அவரது சொத்துக் கரைந்தது. அவரின் எதிர்பார்ப்பு, பாரதி பொருளியல் துறையில் தேர்ச்சி பெற்று நாட்டு அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும் என்பதாகும்.
ஆனால், பாரதியோ இயற்கையை ரசித்துப் பெறும் அனுபவத்தில் நாட்டம் காட்டினார். அவரின் வாயில் சொற்கள் முயற்சியின்றி தாராளமாக வந்தன. அவரில் புலமைத் தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதை அவதானித்த கல்விமான்கள் அவருக்கு அவரின் 11ஆவது வயதில் பாரதி என்னும் பட்டத்தை வழங்கினர். இப்பட்டம் மிகவும் பிரபல்யம் அடைந்தது.
பாரதி தனது ஐந்தாவது வயதில் தாய் இலக்குமதியை இழந்தார். தந்தையார் மறுமணம் புரிந்தார். சிற்றன்னை பாரதியிலும் தங்கையிலும் அன்பைப் பொழிந்தார். அவர்களின் சம்பிரதாயப்படி பாரதிக்கு 14 வயதில் 7 வயதுச் சிறுமி செல்லம்மாவுக்கும் திருமணம் நடந்தது. பாரதிக்குத் திருமணம் நடந்து ஒரு வருடத்தின் பின் தந்தை இறந்தார்.
ஆதரவற்று இருந்த பாரதியை அவரது தந்தையின் மூத்த சகோதரி குப்பம்மாவும் அவரது கணவர் சிருஷ்ணசிவனும் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி அழைப்பு விட்டனர். அவர்கள் வாரணாசியில் வசித்தார்கள். பாரதி அவர்களின் அழைப்பையேற்று வாரணாசிக்கு பயணமானார்.
அத்தையின் அரவணைப்பில் வாழ்ந்த பாரதியின் சிந்தனையில் பல குணாம்ச மாற்றங்கள் ஏற்பட்டன. அவரின் சமூக அரசியல் பார்வை விசாலமானது. அவர் மூடநம்பிக்கைகளைப் புறக்கணித்தார். அவரின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவரின் முடி வெட்டப்பட்டது. மீசை வளர்க்கப்பட்டது. இவ்வாறான புறமாற்றங்கள் மாமன் கிருஷ்ணசிவனுக்கு அவமான உணர்வை ஏற்படுத்தியது.
இருப்பினும், பாரதியின் ஆன்மீக ஆக்கங்கள் அவரை இசைவாக்கம் பெற உதவியது. அவரின் 20ஆவது வயதில் மீண்டும் எட்டயபுரத்துக்கு வந்தார். அவரின் தந்தையார் பணிபுரிந்த அரசதானியில் வேலை கிடைத்தது. அவருக்கு அங்கு நடந்த காலத்துக்கொவ்வாத நடைமுறைகள் வெறுப்பை ஏற்படுத்தியன.
சமிந்தாருக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதைத் தவிர்த்தார். இதன் விளைவு அவர் பணி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 1904ஆம் ஆண்டு ஓகஸ்டில் மதுரையில் உள்ள சேதுபதி உயர் பாடசாலையில் தமிழ்ப் பாடம் கற்பித்தார். இத்தொழில் நீண்டகாலம் நீடிக்கவில்லை. 3 மாத ஆசிரிய சேவையுடன் கற்பித்தல் பணி நிறைவுபெற்றது.
இக்காலத்தில் “சுதேச மித்தி’ரன்” பத்திரிகையின் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்தார். பாரதியின் நண்பர், பாரதியை அவருக்கு அறிமுகப்படுத்தினார். சுப்பிரமணிய ஐயர் தனது சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக இணைக்க முன்வந்தார். பாரதி ஏற்றுக்கொண்டார்.
தேசிய காங்கிரஸ் தோற்றம் பெற்று இருபது ஆண்டு காலங்கள் கடந்தும் பெரும் மாற்றங்கள் இல்லாமல் தலைமைத்துவம் நகர்த்தியது. இந்திய தேசியத்தின் குறிக்கோளை முன்னெடுக்கும் முதலாவது தமிழ் தினசரிப் பத்திரிகையான சுதேச மித்திரனின் ஆசிரிய பீடத்தில் பாரதி இணைந்த வேளை தேசிய சுதந்திரத்துக்கான எழுச்சியுறும் தறுவாயில் மக்கள் இருந்தனர்.
பாரதியைப் பற்றியும், திலக் போன்றவர்கள் பற்றியும் சுப்பிரமணிய ஐயர் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தாலும், பாரதியின் தீவிரக் கருத்துகள் சுதேச மித்திரனில் வெளிவருவதை அனுமதிப்பதில்லை. பாரதியின் அரசியல் அல்லாத ஆக்கங்கள்தான் சுதேசமித்திரனில் வெளியாகின.
ஊடகத்தை முழுமையாகப் பயன்படுத்தி மக்களுக்குக் கல்வியூட்டி அவர்களை புரட்சிகரமான போராட்டத்திற்கு அணிதிரட்ட சுதேச மித்திரனில் வாய்ப்புக் குறைவு என்பதை பாரதி உணர்ந்தார். அதேபோல் அவரின் சகாக்களும் உணர்ந்தார்கள். என். திருமலாச்சாரி, பாரதியைச் செயல்பாட்டு ஆசிரியராகக்கொண்டு “இந்தியா’ என்னும் பெயரில் வாராந்தப் பத்திரிகையை 1906 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட ஏற்பாடு செய்தார்.
அது தனது மகுட வாசகமாக பிரென்ஸ்ப் புரட்சியின்போது முன்வைத்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் சுலோகத்தை ஏற்றுச் செயற்பட்டது. அது தமிழ் ஊடகத்துறையில் புதிய ஒளியைப் பாச்சியது. பாரதியின் காரமான வாதத்திறனுடனும் விகடம் கலந்த பாணியிலுமான படைப்புகள், குறுகிய காலத்தில் அதன் விநியோக மட்டம் 4 ஆயிரத்தைத் தொட உதவியது.
அது அக்காலத்தில் பெரிய சாதனை. அது தன் புரட்சிகர வாசனையைப் புலப்படுத்தும் வகையில் சிவப்புத் தாளில் பிரசுரமானது. தமிழ் நாட்டில் முதல் தடவையாக அரசியல் கேலிச்சித்திரம் “இந்தியா’ பத்திரிகையில்தான் தோன்றியது.
ஆனால், திருநெல்வேலியில் வ.ஊ.சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் கைது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா பத்திரிகைக் காரியாலயம் 1908ஆம் ஆண்டு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. அதன் பிரகடனப்படுத்தப்பட்ட ஆசிரியரான சீனிவாசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாரதி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வ.ஊ.சிதம்பரப்பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும், பாரதி கைதாவதைத் தவிர்ப்பதற்காக தப்பிச் செல்லும்படி தகவல் அனுப்பினர். பாரதி தயக்கத்துடன் ஏற்றார். அண்டை மாநிலமான பிரான்ஸ் காலனியான பாண்டிச்சேரிக்கு 1908இல் செப்டெம்பர் மாதம் சென்றார்.
விரைவில் புதிய உறவுகளை யேற்படுத்தி ஒரு மாதத்துக்குள் இந்தியா பத்திரிகையின் அச்சகத்தை இரகசியமாகப் பாண்டிச்சேரிக்கு கடத்திக்கொண்டு செல்லச்செய்தார். ஒக்டோபர் 20 இந்தியா பத்திரிகை பிரசுரம் மீண்டும் ஆரம்பமானது. விற்பனை கூடியது.
பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சக்திக்குட்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து பிரிட்டிஷ் இந்தியாவினுள் பத்திரிகை சென்றடைவதைத் தடுக்க முயன்றனர். இறுதியில் பத்திரிகையைத் தடைசெய்தனர். 1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் நாள் கடைசி வெளியீடு பிரசுரமானது. பாரதி புதிதாகத் தொடங்கிய “விஜய’ என்னும் தினசரிப் பத்திரிகைக்கும் அதே கதிதான் ஏற்பட்டது.
1912 பாரதியின் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் கீதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதே ஆண்டுதான் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு என்பன எழுதப்பட்டன.
1918 இல் போர் முடிந்த பின் பாரதி பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் வந்தார். அவர் கைது செய்யப்பட்டார். பின் விடுவிக்கப்பட்டார். அவர் சுதேச மித்திரன் பத்திரிகையில் உப ஆசிரியராக ஆசிரிய பீடத்தில் இணைந்து கொண்டார். 1917 இல் புதிய சக்தி ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்தது. அதை வாழ்த்திப் போற்றிப் பாராட்டினார்.
முப்பது கோடி மக்களுக்கு ஒரு பொதுநல அரசு. நாட்டின் சொத்து எல்லோருக்கும் சொந்தம். அது ஒரு ஈடு இணையற்ற சமுதாயம். இவ்வாறான ஏற்பாட்டை முழு உலகமும் வியப்புடன் நோக்கும். அதுதான் அவர் கடைசியாக 1920இல் வெளியிட்ட ஆக்கம்.
1921 ஜூலை மாதம் அவர் கோவில் யானைக்கு உணவூட்டும்போது தூக்கிவீசப்பட்டார். அவரின் நண்பர் காப்பாற்றினார். பின் உடல்நிலை சரியாகத் தேறவில்லை. 1921ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வயிற்றுளைவு நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார்.
பாரதி வேண்டிய அரசியல் சுதந்திரம் கிடைத்த போதும் பாரதி வேண்டிய சமத்துவம், சகோதரத்துவம் பொதிந்த சமூகம் இன்னும் தோன்றவில்லை. (உதயன் 11, 2007)
பாட்டுத் திறத்தாலே- இவ்வையத்தைப் பாலித்திட்ட மகாகவி பாரதியார்!
நக்கீரன்
(மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ! (மகாகவி பாரதியார்)
பாடியதுபோலவே மகாகவி பாரதியார் நரை, திரை, மூப்பு வருமுன் தனது 39வது அகவையில் தனது பூதவுடலை நீக்கி புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882, மறைந்தது புரட்டாதி 11, 1921. இந்த 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பாடாத பொருளே இல்லை.
வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞன் பாரதியார்.
ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ கவிகளுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குக் கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை!
தமிழ்த் தாய்க்குப் பாமாலை பாடி புகழ்மாலை சாத்தியவன். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன். புதிய கற்பனை, புதிய அழகு, புதிய சுவை, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு நவகவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் வடித்து செந்தமிழன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.
மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றன. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றன.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!
பாரதி காரிகை கற்று கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. மகாகவி பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர். தமிழ்த் தாய் அவர் நாவில் நர்த்தனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று ஒலித்தன.
வடமொழி “தேவபாஷை” தமிழ் மொழி “நீசபாஷை” என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான் “”யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காண்ம்போம்” பாரதியாருக்கு தமிழைவிட வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரன்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்பு அனுபவபூர்வமானது.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடொன்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே! (செந்தமிழ்)
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் “பேடிகள்” என்றும் “பேதைகள்” என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.
வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து,
“நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்”
“நாயெனத் திரியும் ஒற்றர்கள்”
“வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்
கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்”
என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்கிறார்.
வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும்
ஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்
கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? என்றும்
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி னின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!
என்று பாரதி அன்று பாரதநாட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பாடியது இன்று எமக்கும் பொருத்தமாக இருக்கிறது.
மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றி;ற்கு புதிய பொருள் சொன்னார்.
ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்,
போருக்கு நின்றிடும்போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்!
மேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,
மந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு – களியே
அமிழ்தம், பயன்வருஞ் செய் கையே யறமாம்
அச்சமே நரகம், அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க!
பாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா! தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன்! பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்!
இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
மேலும் கேட்பார்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! – பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா மெனல் கேளீரோ?
சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விழிப்பார்,
சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
முமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா!
சிவனும் சக்தியும் ஒன்று. சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு அந்தச் சக்தி ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்…
ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் ஒழிந்தாபாடாயில்லை. சாதியின் பேரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.
சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்…
சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைத்திடும் வையம்
என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ?
Leave a Reply
You must be logged in to post a comment.