எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதி

வவுனியாவில் சுமந்திரனின் அதிரடி உரை

Posted by Katheeshan Baskaran on Sunday, November 4, 2018

Sumanthiran’s speech on current crisis


 எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதி

எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய ” நீ ” உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்கப் போகிறோம். எங்களுடை ய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்? கபடகாரனாக நீ மாறியிருக்கின்றாய். இது உன்னுடைய அழிவின் ஆரம்பம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றைய  நாள் (03-11-2018)  நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில்  உரையாற்றும் போதே  ஜனாதிபதி பற்றி மிகவும் ஆவேசப்பட்டு  உரையாற்றினார்.

குறித்த நிகழ்வில்   நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிறிசேனா  தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனார் இன்று எம்மை கூறு போட நினைப்பது அழிவின் ஆரம்பமே.     எங்கள் உப்பைத் தின்று ஜனாதிபதியாக வந்து இன்று எங்களையே கூறுபோட நினைப்பது அழிவிற்கான ஆரம்பம்.  தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நாம் 15 ஆக குறைந்து இருக்கின்றோம் அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் அது மேலும் குறைந்து  14 ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் வெற்றி தோல்வியைத்  தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள்தான். அதனைக் கவனமாக பிரயோகிக்க வேண்டும். கவனமாகக் கையாள வேண்டும் .அதேவேளை பேரம் பேச வேண்டும்.  இரண்டையும் செய்கின்றோம். வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக் கூடாது. ஏன் அவரைச் சந்தித்தார். ஏன் இவரைச் சந்தித்தார் என்று குழம்பக் கூடாது.   எல்லோரையும் நாம் சந்திப்போம், ஆனால் எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக இருக்க மாட்டாது. தவறான தீர்மானத்தை நாம் எடுக்க மாட்டோம் . சரியான தீர்மானத்தை நாம் எடுப்போம்.

எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்த தீர்மானம் எடுக்கப்படும். இந் நிலையில் சிறுபிள்ளைத்தனமாக  நாமல் ராஜபக்ச அவர் சிறுபிள்ளை தான்.  இன்று காலையில் ருவிட்டரில் சொல்லியிருக்கின்றார் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றோம்  என்று. கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்துக் கொண்டு வருவோம் என்று நினைக்கின்றார்கள்.  விடுவிப்பதாக  இருந்தால்,  இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை? அது  சரியானது நியாயமானது  என்றால் அவர்கள் ஒரு கணமேனும் அவர்களை சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. நேற்றைய தினம் எங்களுடைய அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடிக் கொடுக்கின்ற அறிக்கைகள் இவை. எங்களுடைய எதிர்ப்பைக் காட்டுவதனால் கைதிகள் விடுவிக்கப்படுவார்களாக  இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பை காட்டுவோம்.

அவ்வாறு எதிர்ப்பைக் காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம். எங்களுடைய அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. வந்தவுடன் அதனைச் சொல்லுகின்றார்கள். அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு செய்கின்றார்கள். அவர்கள் எங்களோடுதான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள் மற்றவர்களெல்லாம் ரொக்கப்பண வேலை தான் செய்வார்கள். பாராளுமன்றத்தை திறக்காவிட்டால் திறக்கவைப்போம்.  நாம் அங்கு செல்வோம். பெரும்பான்மை அங்கே காட்டுவோம் அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர். எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். என அவருக்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாயே ஆறடி நிலத்திற்குள் போகாமல் உன்னை காப்பாற்றியது நாங்கள் அல்லவா?  இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றாய் இது உனது அழிவிற்கான ஆரம்பம்” எனத் தெரிவித்தார்.


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply