ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட  வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

ஒநிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!
நக்கீரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன் ஐயா,  சுமந்திரன் இருவர் மீதும் அரசியல் எதிரிகள் கல் வீசுகிறார்கள். இதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதல் இடத்தில் இருக்கிறார். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைப்பது போல அரசியலி்ல் கற்றுக்குட்டியான விக்னேஸ்வரன் சுமந்திரன் அவர்களை மட்டுமல்ல அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட தலைவர் சம்பந்தனையும்  சாடுகிறார்.

அண்மைக் காலமாக சுமந்திரன் சொல்லாததை சொன்னதாகவும் சொல்லியதைத் திரித்தும் தேய்த்தும் அவரது அரசியல் எதிரிகள் கோபலஸ் பரப்புரை செய்கிறார்கள்.

அண்மையில் விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஏட்டுக்குக் கொடுத்த நேர்காணலில் அவரிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது.

Q: How do you view the attitude and political aspirations of the TNA Leader R. Sampanthan and MP Sumathiran?

A: They are divorced from the aspirations, needs and wants of our people. If left to them we would have to compromise on our fundamental political aspirations. It is sad that the political reality among our people is not recognized by both of them. They believe only in their judgment which is sadly faulty.

இந்த நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து முதலமைச்சரின் அலுவலகம் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது. இந்தக் கேள்வி பின்வருமாறு மொ(மு)ழிபெயர்க்கப்பட்டிருந்தது.

“அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால் எமது அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்.” – என மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்தது.

சும்மாவே தமிழ்த் தேசயக் கூட்டமைப்புக்கு எதிராகக், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக புழுதி வாரித் தூற்றுபவர்களுக்கு இது வாய்ப்பாய் போய்விட்டது. விக்னேஸ்வரனை ஆண்டவனின் அவதாரம் தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என நாளும் பொழுதும்  திருப்புகழ்  பாடி கன்னத்தில் போட்டுக்கொள்ளும்  அடியார்களில்   காலைக்கதிர் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஒருவராகும்.

விக்னேஸ்வரன் அனுப்பிய நேர்காணலை உடனே  காலைக்கதிர் (09-09-2018)  பதிப்பில் முன்பக்கத்தில் கொட்டை எழுத்தில்,

சம்பந்தன், சுமந்திரன் நீடித்தால் தமிழர் கோரிக்கை சறுக்கி விடும் விசனிக்கிறார் விக்கி என்று தலைப்பிட்டு பிரசுரித்தார்.

இந்த மொழிபெயர்ப்பு பிழை என ஒரு மூத்த அரசியல்வாதி வித்தியாதரனுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர்களை அவர்கள் பாட்டில் விட்டால்  நாங்கள் எங்கள் அடிப்படை அரசியல் அபிலாசைகளையிட்டு நாம் சமரசம் செய்ய வேண்டி வரும் என்பதே (‘If left to them we would have to compromise on our fundamental political aspirations’} என்பதே சரியான தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

இப்போது வித்தியாதரனே  எழுதுகிறார் அந்த மொழிபெயர்ப்பை அந்தச் சாரப்படவே தலைப்பிட்டு பிரசுரித்தமை மூலம் சம்பந்தன், சுமந்திரனை நீடிக்க விடக்கூடாது என முதல்வர் கூறியமை போன்ற கருத்து நிலைப் பாட்டை நாம் ஏற்படுத்தி விட்டோம். ஒரு விவகாரத்தை கையாளும் விடயத்தை ஒரு தரப்பிடம் விடக் கூடாது என்பதற்கும் அந்தத் தரப்பையே நீடிக்க விடக்கூடாது என்பதற்கும் அர்த்தங்களில் ஆயிரம் வேறுபாடு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். மொழி பெயர்ப்பை மூல ஆங்கிலப் பேட்டியுடன் ஒப்பிட்டுப்  பார்க்காமல் – குறைந்த பட்சம் தலைபபுக்கு எடுத்த விடயத்தையாவது ஒப்பிட்டுப் பார்க்காமல் – பிரசுரித்தமை தவறுதான். அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். சுட்டிக்காட்டிய அந்த மூத்த அரசியல்வாதிக்கு நன்றிகள்.”

சம்பந்தன் ஐயா, சுமந்திரன் இருவர் மீதும் பூசிய கறை கறைதான். இருந்தும் வித்தியாதரன் தவறை  பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் ஏனைய ஊடகங்கள்? ஆங்கில அறிவு அறவே இல்லாத ஊடக ஆசிரியர்கள் விக்னேஸ்வரன் கொடுத்த மொழிபெயர்ப்பையே பிரசுரித்திருப்பார்கள். ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டு இருக்க மாட்டார்கள்.

இன்று சம்பந்தன் ஐயாவை விட சுமந்திரன் அவர்களே ஊடகங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறார்.  அவர் எதைச் சொன்னாலும் அதனைத் திரித்து அல்லது தேய்த்துப் பொருள் கொள்கிறார்கள். அரசியல் யாப்பு வரைவில் சமஷடி அல்லது ஒற்றையாட்சி என்ற சொற்பதங்கள் இருக்காது என அவர்  ஆவா ஏவா காலத்தில் இருந்து  சொல்லி வருகிறார்.

இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அது ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளது என்று வானத்துக்கும் பூமிக்கும் சிலர் துள்ளிக் குதித்தார்கள்.  வழக்கம் போல தமிழர்களைச் சுமந்திரன் சிங்களவர்களுக்கு விற்றுவிட்டார் என வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் உண்மை என்ன?

இடைக்கால அறிக்கையின் முன்மொழிவுகளில் சமஷ்டி என்ற சொல் இடம் பெறவில்லை. அது போலவே ஒற்றையாட்சியும் இடம் பெறவில்லை. அதாவது அதில் சமஷ்டி – ஒற்றையாட்சி என்ற பலகை இருக்கவில்லை. இதையிட்டுச் சுமந்திரன் தேர்தலுக்கு (2015) முன்னரும் அதன் பின்னரும் விளக்கம் கொடுத்து வருகிறார். பல மேடைகளில், பல நேர்காணல்களில் மிகத் தெளிவாகச் சொல்லி வருகிறார்.

ஒரு மனிதர் ஒரு விடயத்தை எத்தனை முறை திருப்பித் திருப்பிச் சொல்வது?  இதில் வேடிக்கை என்னவென்றால் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கும் இது புரியவில்லை.

சும்மாவே ஆடுகிற பேய்கள் சாம்பிராணிப் புகையைக் கண்டால் விட்டு விடுமா? கடந்த செப்தெம்பர் மாதம் காலியில் நடந்த ஒரு நல்லிணக்க பரப்புரைக் கூட்டத்தில் சிங்களத்தில் பேசிய சுமந்திரன் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர்   “அப்படியானால் சமஷ்டி அரசியலை மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று சிங்களத்தில் கேட்டார். அதுதான் அந்தக் கேள்வி. “நான் வழமையாக சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். ‘சமஷ்டி’ என்ற பெயர்ப் பலகை எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் பெயர்ப்பலகை தேவையில்லை என்று சொன்னதைத் திரித்து  இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் “சமஷ்டி தேவையில்லை” என்ற தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.

ஒன்றரை மணித்தியாலம் நீடித்த இந்த நேர்காணலில் அடுக்கடுக்காகக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுமந்திரன் சளைக்காது பதில் அளித்தார். ஒற்றை வரிக் கேள்விக்கு ஒற்றைவரியில் பதில் அளித்தார். அப்போது சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன, 13 ஏ திருத்தம் பற்றி ஒன்பது நீதிபதிகள் அளித்த தீர்ப்பென்ன? 13 ஏ சட்ட திருத்தம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மீறுகிறது என்று ஐந்து நீதிபதிகளும் இல்லை மீறவில்லை என்று நான்கு நீதிபதிகளும் முதலில் தீர்ப்பளித்தார்கள்.

அரசியல் யாப்பை சட்ட திருத்தம் 13 ஏ மீறுகிறது என்று தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளில் ஒருவர்  இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்டி அதனை அரசாங்கம் திருத்தினால் சட்ட திருத்தத்தை ஆதரிக்கத் தயார் என்றார். அரசாங்கம் அந்தத் திருத்தங்களை செய்தது. அதன் பின்னர் ஐந்து நான்கு என்று நிராகரிக்கப்பட்ட திருத்தம் நான்கு ஐந்து என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே 13ஏ திருத்தம் ஒரு நூலிழையில்தான் தப்பியது.

மாகாண சபை முறைமையை சில திருத்தத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளீர்களே என்று கேட்டதற்கு சுமந்திரன் அளித்த பதில் யாப்பு வரைவில்  இரண்டு அம்சங்கள் இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

(1) இப்போது ஆளுநரிடம் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படும்.

(2) மாகாண சபைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மத்தி தலையிடக் கூடாது.

சமஷ்டி – ஒற்றையாட்சி என்ற சொற்களுக்கு இன்று பொருள் மாறிவிட்டது. சமஷ்டி என்று எழுதப்பட்ட யாப்பில் ஒற்றையாட்சி முறைதான் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி என்று எழுதப்பட்ட யாப்பில் சமஷ்டி அரசியல் அமைப்பைவிட கூடுதலான அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு நல்ல எடுத்துக் காட்டு பிரித்தானியா. ஸ்கொட்லாந்து விரும்பினால்  ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அது பிரிந்து தனிநாடாகப் போகலாம்.

சுமந்திரன் மீது அம்புகள் எய்யும் எதிரணியினர் மா மரத்துக்குப் பின்னால் இருந்து கொண்டு வாலி மீது அம்பெய்து கொன்ற சுக்கீரிவன் போல ஒளிந்து கொண்டுதான் அம்புகள் விடுகிறார்கள்.

இன்றைய இக்கட்டான  கால கட்டத்தில் சுமந்திரன் போன்ற ஒரு திறமையான சட்டவாதியை தமிழினம் பெற்றிருப்பது தமிழ்மக்கள் செய்த புண்ணியம். அப்படித்தான் நான் பார்க்கிறேன். இது பலருக்கு விளங்குதில்லை. அல்லது விளங்கியும் விளங்காதது போல நடிக்கிறார்கள்.

மறைந்த துரையப்பா போல ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட  வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள்  குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

(அதிர்வு கண்ட நேர்காணலின் முன்பகுதி பிறிதோர் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது. தவறாது படிக்கவும்.)


அதிர்வு நேர்காணல்

அதிர்வு: எனது உரை முடிந்த பிறகு, கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுக்கப்பட்ட பதில்தான்  இது.  கேள்வி என்ன வென்றால் பெடரல் முறை என்று (அரசியல் யாப்பில்) இருந்தால் மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இப்போது  நீங்கள் சொன்ன கருத்தை மீண்டும் கேட்கலாம். காணொளி போட்டுக் காட்டப்படுகிறது.

சுமந்திரன்: காலியில் நடந்த கூட்டத்திலும் சமஷ்டியைப் பற்றி நான் பல விடயங்களை சொல்லியிருந்தேன்.  நான் பேசிய  பிறகு கேள்விக்கான நேரத்தில் கொடுக்கப்பட்ட பதில்தான் இது. குறிப்பாக என்னிடம் சிங்களத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.  “அப்படியானால் பெடரல் முறை என்று  இருந்தால் மட்டுந்தான் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கு நான் வழமையாகச் சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். (நேர்காணலுக்கு இடையே சுமந்திரன் பேசிய காணொளி போட்டுக் காட்டப்படுகிறது)

சுமந்திரன்: காலியில் நடந்த கூட்டத்திலும் சமஷ்டி பற்றி பல விடயங்களைப் பேசியிருந்தேன். என்னுடைய பேச்சுக்குப் பிறகு குறிப்பாக கேட்கப்பட்ட கேள்வி – சிங்களத்திலே கேட்கப்பட்ட கேள்வி – அப்படியானால் சமஷ்டி அரசியலை மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுதான் அந்தக் கேள்வி. நான் வழமையாக சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். “சமஷ்டி என்ற பெயர்ப் பலகை எங்களுக்குத் தேவையில்லை. பெயர்ப்பலகை தேவையில்லை என்று நான் சொன்னதை இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் “சமஷ்டி தேவையில்லை” என்ற தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.

அந்தப் பேச்சிலே சமஷ்டி பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேசிய காரணத்தாலே எழுந்த கேள்விதான் “அப்படியானால் சமஷ்டியைக் கொண்டிருக்கிற அரசியல் அமைப்பை மட்டுந்தானானா நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?  ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார்? சமஷ்டியியை வலியுறுத்தின காரணத்தாலேயே அந்தக் கேள்வியைக் கேட்டார்.  அதற்கு உடனடியாக நான் சொன்ன பதில் ‘சமஷ்டி என்று எழுதப் பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் உடனடியாக நான் சொன்னது.  

நேர்காணல் (அதிர்வு) தொடருகிறது.

சரி. இப்போது நீங்கள் புதிய அரசியல் அமைப்பைப் பற்றி நாடு தழுவிய ரீதியில்  பேசி வருகிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை ஒரேயடியாக மாற்றிக் கொண்டதா? என்கிற சந்தேகங்களை எழுப்புகின்ற வகையில் இப்போது இந்த விடயம் அரசியல் தலைவர்களால் கொண்டு செல்லப்படுகின்றது.  அதே நேரத்தில், இப்போது அங்கே நீங்கள் குறிப்பிட்ட விடயம் எனக்கு இரண்டு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. ஒன்று தென்னிலங்கை மக்களைத் திருப்திப்படுவதற்காக அல்லது இந்த அரசியல் அமைப்புக்கு ஆதரவு திரட்டுவதற்காக நீங்கள் அவ்வாறான கருத்தினை முன் வைத்தீர்களா? அதாவது நீங்கள் சொன்ன விடயத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நீங்கள் சொன்ன பதில் சிங்களத்தில் வருகிறது. பெடரல் தம்யத்த  ஓண அதாவது சமஷ்டி முறைமைதான் வேண்டுமா?

அவ்வாறான முறைமை  தேவையில்லை என்றுதான் நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள். அப்படியானால் முறைமை இல்லையென்றால் எப்படி சமஷ்டியை அது உள்ளடக்கும்?  அதாவது சமஷ்டி என்ற பெயருடன் அரசியல் அமைப்பை எடுத்துக் கொண்டால் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு சமஷ்டி அரசியல் அமைப்பு என வரும். நீங்கள் சொல்வது சஷ்டி அரசியல் அமைப்பு அல்ல சமஷ்டி முறைமை அல்லது கட்டமைப்பு இருக்கிற விடயங்களைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

சுமந்திரன் – இதில் இரண்டு விடயங்களை நான் சொல்ல வேண்டும். ஒன்று இன்றைய கால கட்டத்திலே ஒரு அரசியல் அமைப்பு இது ஒற்றையாட்சி இது சமஷ்டி என்று பிரித்துப் பார்க்க முடியாது. அண்மையிலே எங்கள் கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலே – நான் வாதாடி வென்ற வழக்கு – அதிலேயும் சமஷ்டியை நாங்கள் கோரலாம் என்று சொன்னபோது அவர்கள் பல அரசியல் அமைப்புச் சட்டங்களை மேற்பார்வை செய்து  காட்டிச் சொல்லி யிருக்கிறார்கள். இப்பொழுது – 60 வருடங்களுக்கு முந்திய நிலமை வேறு – இது சமஷ்டி இது ஒற்றையாட்சி என்ற பிரிவு தெளிவாகக் கிடையாது. அதுதான் உண்மையான விடயம். நான் இங்கேயே பல தடவைகள்  சொல்லியிருக்கிறேன்.

ஒஸ்ரியா அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமஷ்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் உள்ளே இருக்கிறது ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாகும். ஸ்பெயின் நாட்டிலே ஒற்றையாட்சி என்று எழுதியிருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பது  சமஷ்டி.  ஒற்றையாட்சியின் அத்திவாரமாக கருதப்படும்  பிரித்தானியாவில் இருக்கிற அதிகாரப் பகிர்வு முறை எந்த சமஷ்டி ஆட்சியிலும் கிடையாது.  பிரிந்து போகிற அதிகாரமும் இருக்கிறது. ஆனால் இன்றும் அது ஒற்றையாட்சிதான். சமஷ்டி என்று யாரும் சொல்வதில்லை. ஆனபடியினாலேதான் இது சமஷ்டியா ஒற்றையாட்சியா என்று பிரித்து இரண்டு compartment  ஆக வைத்து  பார்க்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் இருகிறோம்.  ஆனபடியால்தான், இந்தப் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில்  பெயர்ப் பலகைகள் போட வேண்டிய அவசியமில்லை.   ஆட்சி முறையை வருணிக்கலாம். ஆனால் இது சமஷ்டி இது ஒற்றையாட்சி என்று போடமுடியாது.  ஏன் என்றால் உலகத்திலேயே அந்த நிலைப்பாடுகள்  மாறியிருக்கிறது.  

நான் தெளிவாகச் சொல்லியிருக்கிற விடயம், அதைத் தேர்தலுக்கு முன்னரும் சொல்லியிருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலிலே யாழ்ப்பாணத்திலே நடந்த விவாதம் ஒன்றிலே – திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நடந்த விவாதத்தில் இதை நான் சொல்லியிருக்கிறேன் – தேர்தலுக்குப் போகு முன்னரும்  இதனைச் சொல்லியிருக்கிறேன்.  அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெயர்ப் பலகை இருக்காது சமஷ்டி என்ற பெயர்ப் பலகை இருக்காது. இங்கு நடந்த விவாதத்திலும் அதை நான் ஞாபகப்படுத்தினேன். அதை  அவர் ஏற்றுக் கொண்டார். இந்த சமஷ்டியின் குணாதிசயங்கள்  எங்களுக்கு அத்தியாவசியம்.

அதிர்வு:  சரி. குணாதிசயங்கள் எங்கிருந்து வரும்? அந்த முறைமைக்குள்ளேதானே வரும்?

சுமந்திரன்: .இல்லை, முறைமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்திலே அந்த குணாதிசயங்கள் உள்ளடக்கப் படவேண்டும்.

அதிர்வு: குணாதிசயங்களை உள்ளடக்கும் போது சமஷ்டி வராதா? அதன் தன்மைகள் இருக்காதா?

சுமந்திரன்:  தன்மைகள் இருக்கும். ஆனால் பிரித்துப் பார்க்கும் போது இது சமஷ்டியா இல்லை ஒற்றையாட்சியா  என்று சொல்வது கஷ்டமாக இருக்கும். இந்திய அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். அது சமஷ்டியா ஒற்றையாட்சியா என்று சொல்லவிtல்லை.   ஆரம்ப காலத்தில் சமஷ்டியைப் போன்றது இது குவாசி பெ்டரல் (quasi-federal) என வருணித்தன. அதே அரசியல் அமைப்பை இன்று இந்திய உச்ச நீதிமன்றமே சொல்கிறது அது முற்று முழுதான சமஷ்டி எனச் சொல்கிறது. ஆகவே அதற்கு ஒரு லேபல் போடும்போது மாற்றம் ஏற்படலாம்.  ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான்.

அதிர்வு: இங்கு ஒரு வார்த்தையிலா பிரச்சனை இருக்கிறது?

சுமந்திரன் – வார்த்தையில்தான் பிரச்சனை இருக்கிறது.  அவர் கேட்ட கேள்வியில் அது இருக்கிறது. சமஷ்டிமுறை என்று இருந்தால்த்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதாவது இது சமஷ்டி அரசியல் அமைப்பு. ஜெர்மன் அரசியல் அமைப்புச் சட்டத்தை எடுத்துப் பார்ப்பீர்களானால் Federal Republic of Germany என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று இலங்கையின் ஆட்சிமுறை ஒற்றையாட்சி என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை மாற்றிப் பெடரல் ஆட்சிமுறை எழுதப்பட்டால்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுதான் அவர் கேட்ட கேள்வி.

அதிர்வு: இப்படி எடுத்துக் கொள்ளலாமா? கேள்வி சரி நீங்கள் சொல்ல வந்த விடயம் சரி. சொன்ன விதம் பிழை என்று எடுத்துக் கொள்ளலாமா?

சுமந்திரன்:  சொன்ன விதம் பிழையில்லை. கேள்வியோடு பதிலைப் பார்க்க வேண்டும். கேள்வியைப் பார்க்காமல் பதிலைத் தீர்மானிக்க முடியாது. அந்தக் கேள்விக்கு நான் ஆம் என்று சொல்லியிருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்? அல்லது இல்லை என்று சொன்னால் என்ன நடந்திருக்கும்? ஆகவே எப்பொழுதும் கேள்வியோடு சேர்ந்துதான் பதில் வரும். கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லும் போது கேள்வியை முற்று முழுமையாகச் சொல்லிப் பதில் சொல்வதில்லையே?  அவர் நீண்ட கேள்வியைக் கேட்டார். நான் அந்தக் கேள்வியை அப்படியே  திருப்பிச் சொல்லவில்லை. அவர் கேட்ட கேள்வி பெடரல் கிரமய வேணுமா? அப்படிக் கேட்டதாகத்தான் அவரது முழு விளக்கம். அவர் ஒரு கொப்பியைக் கொண்டு வந்து மூன்று நிமிடமாக  அந்தக் கேள்வியைக் கேட்டார். நான் அதைச் சுருக்கமாக பெடரல் கிரமய என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டிருக்க வேண்டுமா?  என்று அவர் கேட்டதாகத்தான்  விளங்கிக் கொண்டேன்.   முற்று முழுதாக சமஷ்டி என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதினால்தான் அதை நான் ஏற்றுக் கொள்வேன் என அவர் நினைத்தார். அப்படியானால் நீங்கள் பெடரல் முறை என்று தெட்டத் தெளிவாக எழுதி சமஷ்டி முறை என்று  இருந்தால் மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?   ஏன் அந்தக் கேள்வியை அவர் கேட்டார் என்பது முக்கியமானது. என்னுடைய பேச்சின் அடிப்படையில் அவர் விளங்கிக் கொண்டது அதுதான். என்னுடைய பேச்சில் இருந்து அவர் நினைத்தார்  முற்று முழுதாக சமஷ்டி என்று எழுதினால்தான்  இவர் ஏற்றுக் கொள்வார் என்று.

மாகாணசபை

அதிர்வு:  அடுத்ததாகக் கூறினீர்கள். இந்த மாகாணசபை விடயத்தில் கொஞ்சம் மாற்றங்களைக் கொண்டுவந்தால் …..

சுமந்திரன்: அதையும் நாள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இந்த மாகாண சபை முறையை சற்று மாற்றினால் அது பெடரல். ஏன் என்று சொன்னால் 13 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த போது நீதி மன்றத்தில்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் -1987 ஆம் ஆண்டில் – வழங்கிய தீர்ப்புக்களை வாசித்துப் பார்க்க வேண்டும். அதிலே ஒன்பது நீதிபதிகள் தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள். ஐந்து பேர் சொன்னார்கள் இது சமஷ்டி என்று. நான்கு பேர் சொன்னார்கள் இது சமஷ்டி இல்லையென்று. அதுதான் தீர்ப்பு.

ஆனால் ஐந்து பேர்களில் ஒருவர் இரண்டு இடங்களை சுட்டிக் காட்டச் சொன்னார்  இது காரணமாகத்தான் இது சமஷ்டி என்றார். அரசாங்கம் அந்த இரண்டையும் மாற்றி அமைத்தது. மாற்றி அமைத்தவுடன்  ஐந்து நான்கு மற்றக் கரையாக மாறியது. ஒரு நூல் இழையிலேதான் அது ஒற்றை ஆட்சிக்கு மாறியது.  அந்த மாற்றம் நடந்திருக்காவிட்டால் அது சமஷ்டி. ஐந்து பேர் சமஷ்டி என்று சொன்ன தீர்ப்பாக இருக்கும். அந்த மாற்றம் ஒரு முக்கியமான பகுதி.  இந்த மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால்தான் அந்தத் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடிந்தது.

13ஏ சட்ட திருத்தத்தின்படி ஒரு மாகாணம் சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சட்டம் அந்த மாகாணத்துக்குப் பொருந்தாது. ஒற்றையாட்சி முறையிலே அப்படியிருக்க முடியாது. அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டது.  அந்தச் சிறிய மாற்றம்தான் சமஷ்டியிலிருந்து (நாட்டை) ஒற்றையாட்சிக்குள் வைத்திருக்கிறது.  இது பலருக்குத் தெரியாத விடயமாக இருக்கலாம்.

நீதிமன்றத் தீர்ப்பை ஐந்து பேரோ ஏழு பேரோ எழுதியியிருக்கிறார்கள். அவற்றை வாசித்துப் பார்த்தால் தெட்டத் தெளிவாக விளங்கும். பரந்த ரணசிங்கா என்ற நீதியரசர் எழுதிய தீர்ப்பில் இரண்டு குறிப்புகளைச் சொன்னார். அவற்றை அரசாங்கம் மாற்றியது. மாற்றிய காரணத்தாலேதான் ஒற்றையாட்சி என்று நாம் இன்று சொல்லுகிறோம். இப்ப அந்த இரண்டையும் மட்டும் மாற்றச் சொல்லவில்லை. அந்த இரண்டும் மாற்றப்பட வேண்டும்.   அது புதிய அரசியல் அமைப்பில் இருக்கிறது.  அதாவது மாகாண சபையின் அனுமதியில்லாமல் மத்தி  மாகாணசபைக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது. புதிய வரைவில் அது இருக்கிறது.

அதைவிட இன்னும் கூடுதலாக இருக்கிறது. ஆளுநருடைய அதிகாரங்கள். நிறைவேற்று அதிகாரங்கள் ஆளுநர் கையில் இருக்கக் கூடாது.  காரணம் ஆளுநருடைய கையில் நிறைவேற்று அதிகாரம் இருந்தால் (மாகாண சபைக்கு) தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகளுக்கு ஆட்சி அதிகாரம் செல்லவில்லை. ஆளுநர் சனாதிபதியினுடைய ஒரு முகவர். அது மாற்றப்பட வேண்டும். அது இந்த புதிய வரைவிலே மாற்றப்பட்டிருக்கிறது. அதைவிடக் கூடுதலான விடயங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறமுடியாது. சமஷடிக்கு இருக்க வேண்டிய இரண்டு குணாம்சங்களைத்தான் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டு வருகிறேன். இன்னும் பல இருக்கின்றன. அவற்றை தோதலுக்கு முன்னும் பின்னரும் இங்கேயும் சொல்லி யிருக்கிறேன்.ஒருவரும் மறுத்தது கிடையாது அந்த இரண்டு குணாதிசயங்கள்,  ஒன்று, மாகாண சபைக்குக் கொடுக்கப்படுகிற அதிகாரம் மத்திய அரசினால் திருப்பிப் பெற முடியாது. இரண்டாவது, கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். அது இரண்டும் இருந்தால் அது சமஷ்டி.

அதிர்வு: நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கருதினால்……….

சுமந்திரன்: நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றல்ல. நாட்டில் இருந்து ஒரு பகுதி பிரிந்து போகும் அபாயம் ஏற்பட்டால் அதை மத்தி கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் அது இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அது இருக்கிற காரணத்தாலே  இந்தியா முழுமையான சமஷ்டி இல்லை என்று சொல்லிவந்தார்கள். ஆனால் இப்பொழுது சொல்கிறார்கள் அது இருந்தாலும் பருவாயில்லை அது முழுமையான சமஷ்டி என்று.  ஒரு நாடாக இருக்கின்ற அடிப்படை அதனாலே சமஷ்டிக்குப் பாதகம் என்று இப்போது ஒருவரும் சிந்திக்கிறது கிடையாது. அது இந்த அரசியல் அமைப்பில் இருக்கிறது. அதாவது ஒரேயொரு இடத்தில் மட்டும். நாடு பிரிந்து போகும் என்ற அபாயம் இருந்தால் மட்டும் அந்த அதிகாரத்தை மத்தி பாவிக்க முடியும். அந்த உத்தரவாதம் இருக்கிறது. அதற்கு நாங்களும் இணங்கி இருக்கிறோம்.

சுமந்திரன் அவர்களோடான நேர்காணலில் முதல் 30 வினாடியில் இடம் பெற்ற உரையாடல் இது.  இந்த நேர்காணல் 1.35 மணி வரை நீடிக்கிறது. நேர்காணலை முழுமையாகக் கேட்க பின்வரும் இணையதள் முகவரிக்குப் போங்கள்.

http://www.newsuthanthiran.com/2018/09/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4/


About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply