சங்கரராமனைக் கொன்றது காஞ்சி ஜெயேந்திரர்


சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும் விடுதலை

 2013-11-28@ 00:05:57

புதுச்சேரி: காஞ்சிபுரம் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்தது. குற்றத்தை நிரூபிக்க போலீஸ் தவறி விட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கர ராமன் கடந்த 2004ம் ஆண்டு கோயில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு  உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக 2004ம் ஆண்டு நவ. 12ம் தேதி அன்று ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். தீபாவளி சமயத்தில் அவர் கைதானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் ஜாமீனில் விடுதலையானார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 1875 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். ஆனால் தமிழகத்தில் வழக்கு விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்ததால் வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் 2005ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் 2009ம் ஆண்டு அரசு வக்கீலான தேவதாஸ் நியமிக்கப்பட்ட பின்னர் விசாரணை சூடுபிடித்தது. அரசு தரப்பில் 380 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். 189 சாட்சிகளை மட்டுமே புதுச்சேரி நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதில் 83 பேர் பிறழ்சாட்சியம் அளித்தனர். கடந்த 9 ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் கடந்த 12ம் தேதி அறிவித்தார்.

தீர்ப்பு தேதியான நேற்று காலை 10.25க்கு நீதிபதி முருகன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயர்களை வாசித்து ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அதன்படி ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேசய்யர், ரகு உட்பட 21 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். தில்பாண்டியன், சில்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் நேரம் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். மீண்டும் 10.50 மணிக்கு அனைவரையும் ஆஜராகுமாறு கூறினார். அப்போது தில் பாண்டியனை தவிர மற்ற அனைவரும் ஆஜராகினர். எனினும், நீதிபதி தீர்ப்பு வாசிக்க துவங்கினார்.

அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். தீர்ப்பில் நீதிபதி கூறுகையில், ‘சங்கரராமன் கொலை வழக்கில் 189 சாட்சிகளில் 83 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்திய போலீஸ் கண்காணிப்பாளர் பிரேம்குமார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சங்கரராமன் மனைவி பத்மா, மகள், மகன் ஆகியோரும் அரசு தரப்பும் குற்றத்தை சரிவர நிரூபிக்காததால் வழக்கில் தொடர்புடைய 23 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்Õ என்றார். அனைவரும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதும் நீதிமன்றத்துக்குள்ளேயே குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரும் ஆரவாரம் செய்தனர். ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் தீர்ப்பு வழங்கியதும் 11 மணிக்கு லிப்ட் மூலம் கீழ் தளத்துக்கு வந்தனர்.

அவர்களிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால் அவர்கள் பேட்டி எதுவும் அளிக்கவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற கட்டிடத்துக்கு வெளியே வந்து காரில் ஏறிச் சென்றனர். காஞ்சி மடத்தில் பட்டாசு வெடித்து கோலாகலமாக ஜெயேந்திரர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இனிப்பையும் வழங்கினர்.

‘சங்கரராமனை கொன்றது யார்?’

சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா: எனது தந்தை சங்கரராமன் கொலை வழக்கில் 23 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. கொலையில் ஈடுபட்டவர்களுக்காவது தண்டனை வழங்கி இருந்தால் எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்கும். இந்த தீர்ப்புப்படி பார்த்தால், சங்கரராமனை கொன்றது யார்? தானாக வெட்டி கொண்டு இறந்தாரா என்ன? நீதித்துறை மீதும், கடவுள் மீதும் இன்னமும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். கடவுளின் கோர்ட்டில் குற்றவாளிகள் தப்ப முடியாது.

சங்கரராமனின் மனைவி பத்மாவதி: இந்த தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அரசு தரப்பு வக்கீல் தேவதாஸ்: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 189 சாட்சிகளில் 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்ததால், அரசு தரப்பில் பலமாக வாதத்தை வைக்க முடியவில்லை. சங்கரராமன் மனைவி, மகன், மகளும் எவ்வித ஆதாரமும் காட்டவில்லை. கூட்டுசதி, கொலைக்கான முகாந்திரம் நிரூபிக்கப்படவில்லை என கருதி நீதிபதி அனைவரையும் விடுதலை செய்துள்ளார். மேல் முறையீடு செய்வது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

ஜெயேந்திரர் தரப்பு வக்கீல் சுப்ரமணியன்: சதிக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இறந்தவரின் மனைவி, மகள் கூட ஆதாரங்களை தர முடிய வில்லை. எஸ்பி.பிரேம் குமார் தன்னிச்சையாக தான்தோன்றி தனமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளதும் தெளிவாக தெரிகிறது. கொலை செய்ய தூண்டியதாகவோ அல்லது கொலை செய்ததாகவோ எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அனைவரும் விடுதலையாகி இருக்கின்றனர்.

‘சதி, குற்றம் நிரூபிக்கப்படவில்லை’

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப் பில் குறிப்பிடத்தக்க தகவல்கள்:

*கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்த சர்மா ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தது மற்றும் கொலைக்கு மூல காரணமான 30.8.2004 தேதியிட்ட கடிதத்தை பொறுத்து தலைமை புலன் விசாரணை அதிகாரி புலன் விசாரணை செய்யாததால் மூல காரணம் நிரூபிக்கப்படவில்லை.

*கிருஷ்ணசாமி என்ற அப்பு மற்றும் கதிரவன் ஆகியோர் சதி திட்டம் தீட்டிய இடத்தில் இல்லை என எதிரி தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் குற்றமுறு சதி நிரூபிக்கப்படவில்லை.

*வழக்கின் புகார்தாரரும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியும் சங்கரராமனுடன் பணிபுரிந்தவருமான கணேஷ், அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் வழக்கின் அடிப்படை ஆவணமாக புகார் நிரூபிக்கப்படவில்லை.

*சம்பவத்தை பார்த்த சாட்சிகளும் சங்கரராமனுடன் பணிபுரிந்த சாட்சிகளுமான கணேஷ், துரைக்கண்ணு, குப்புசாமி ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம்.

*கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேய் கொலையாளிகளை அடையாளம் காட்ட முன்வரவில்லை.

*7 முதல் 12 எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை நிரூபிக்க விசாரிக்கப்பட்ட 20 சாட்சிகள் அரசு தரப்புக்கு எதிரான சாட்சிகள். எனவே பிறழ் சாட்சியம்.

*எதிரிகளை அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டிய எந்த சாட்சிகளும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. 189 சாட்சிகளில் 83 சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறினர்.

*கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அடையாளம் காட்டப்படவில்லை.

*கொலையாளிக்கும் போலீசுக் கும் பணம் கொடுத்ததாக விசாரிக்கப்பட்டவர்கள் பிறழ் சாட்சியம். எதிரிகள் பணம் கொடுத்ததாக நிரூபிக்கப்படவில்லை.

*போலி கொலையாளிகளை 15வது பெருநகர நடுவர் நீதிமன்றம் சென்னையில் ஆஜர் செய்தனர். 85 மற்றும் 179வது சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறிவிட்ட படியால் போலி குற்றவாளிகளை கூட எதிரிகள் தான் சரணடைய வைத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

*எஸ்பி பிரேம்குமார் இந்த வழக் கின் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடும், சட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்துள்ளார் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*தலைமை புலன் விசாரணை அதிகாரி ஏனைய புலன் விசாரணை அதிகாரிகள் செய்த புலன் விசாரணையின் போது உள்ள சான்றுகளை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்த தவறிவிட்டார்.

*இந்த வழக்கில் சில சாட்சிகள் (டிஏ. கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளனர். சில சாட்சிகள் 164வது பிரிவின் படி வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

*சம்பவ சமயத்தில் தலைமை காவலராகவும் தற்போது சார்பு ஆய்வாளராகவும் பணிபுரியும் கண்ணன், 164 பிரிவின்படி வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தி இடைக்கால பணி நீக்கம் செய்து விட்டு, 164 பிரிவின் படி வாக்குமூலம் கொடுத்த பிறகு பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்பது இந்த வழக்கில் 164 பிரிவின்படி சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அச்சுறுத்தல்களால் பெறப்பட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=69533


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply