கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும், மேஜர் மொகான்- இவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?
1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களை கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விகளை காணாமல் போனவர்களின் உறவுகள் எழுப்பியுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது. ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல படுகொலைகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்திருந்த ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்பதை கடந்த காலங்களில் நடந்த பல விசாரணைகளின் மூலம் ஏற்கனவே கண்டறிந்த அரசாங்கங்கள் அந்த குற்றவரிகளை இன்றுவரை தண்டிக்கவில்லை.
இதற்கான சாட்சியாக கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் நடந்த விசாரணை அறிக்கைகளை கூறலாம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அன்று நடந்தது என்ன?
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேர் குறித்தும் அதன்பின்னர் கைது செய்யப்பட்ட 26 பேர் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்ட “வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்களே இம்மாவட்டத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய கைதிகளை கொண்ட குழுவாகும். இக் கைதுகள் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 மற்றம் 23 திகதிகளில் நடைபெற்றன.
முதலாம் நாள் 158 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டாம் நாள் 16 பேர் சிறையில் வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் என கருதப்பட்ட 158 பேரின் பெயர் பட்டியல் ஒன்று இவ்வாணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட 158 பேரில் 92 பேர் காணாமல் போனதை 83 சாட்சிகள் நிறுபித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கைதில் காணாமல் போன 16 பேரில் 10 பேருக்கான சாட்சியங்களும் கொடுக்கப்பட்டன.
சாட்சிகளின் பிரகாரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டு யூலை மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 45000 மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவ் அகதிமுகாமானது பேராசிரியர் மனோ சபாரெட்ணம் டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் திரு.வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டதுடன் அந்தக்காலப்பகுதியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஆதரவும் வழங்கப்பட்டது.
1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி காலை 6மணிக்கு கொம்மாதுரை இராணுவமுகாமில் இருந்த இராணுவத்தினர் வேறு சில முகாமில் இருந்த இராணுவத்தினருடன் இ.போ.ச பஸ்வண்டியில் கிழக்குப் பல்கலைக்கழக வளவினுள் நுழைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளைவான் வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் அகதிகள் அனைவரும் மூன்று வெவ்வேறு வரிசையில் நிற்குமாறு வேண்டப்பட்டனர்.
12 லிருந்து 25 வயதுவரையானோர் முதலாவது வரிசையிலும், 26 இல் இருந்து 40 வயதானோர் இரண்டாவது வரிசையிலும், 40 வயதிற்கு மேற்பட்டோர் மூன்றாவது வரிசையிலும் நிற்குமாறு வேண்டப்பட்டதுடன் இம் மூன்று வரிசையில் உள்ளவர்களை குறிப்பிட்ட இடம் ஒன்றை கடந்துசெல்லுமாறு வேண்டப்பட்டனர்.
அந்த இடத்தில் முகமூடி அணிந்து இராணுவ உடை அணிந்த ஐந்துபேர் கதிரையில் அமர்ந்திருந்தனர். முகமூடி அணிந்தவர்களுக்குப் பின்னால் ஏழு முஸ்லீம்கள் நின்றுகொண்டிருந்தனர். முகமூடி அணிந்தவர்கள் சைகை காட்டும் வேலையில் வரிசையில் இருந்த மக்கள் வேறொரு பக்கத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை முடிவுற்றதும் வரிசையில் இருந்து இழுத்தெடுக்கப்பட்ட 158 பேரும் அவர்களது உறவினர்களால் காட்டப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியில் இராணுவத்தினரால் இழுத்துச்செல்லப்பட்டு இ.போ.ச பஸ்வண்டியில் ஏற்றி கொண்டுசெல்லப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்!
“வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையானது கிழக்கப்பல்கலைகழகத்தில் நடந்த கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் என பின்வரும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இக்கைதுகள் ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த இராணுவத்தினரின் உதவிகளுடன் கொம்மாதுறை இராணுவமுகாமினால் செய்யப்பட்டதற்கும் பின்வரும் இராணுவ உத்தியோகத்தர்களே இச்செயலை புரியவைத்தார்கள் என்பதற்கும் சாட்சியம் இருந்தது.
கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும், மேஜர் மொகான் ஆகியோரே கிழக்குப் பல்கலைகழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
கைதுகள் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அதாவது 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி கிழக்குப்பல்கலைக்கழக அகதிமுகாமிற்கு வருகைதந்த றெஜி டீ சில்வா தமது பொறுப்பில் எடுத்துச்செல்லப்பட்ட 158 பேரும் குற்றவாளிகள் என்று அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்த உத்தியோகத்தர்களிடம் கூறியதற்கு சாட்சிகள் இருந்தது. எனினும் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கு பின்னர் என்ன நடந்தது என்பதனைக் கூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.
அத்துடன் அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை தருமாறு கேட்டதற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை என்பதற்கும் சாட்சிகள் உண்டு.
சமாதானக் குழுவின் செயற்பாடுகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக்காலப்பகுதியில் செயற்பட்ட சமாதானக் குழு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களை மீட்பதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்திருந்தது.
1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமாதானக் குழுவின் தலைவராகிய திரு.தளையசிங்கம் அருணகிரிநாதன் அவர்கள் அப்போதைய விமானப்படைத் தளபதியாக இருந்த திரு. ஏ.டபிள்யூ.பெர்ணான்டோ அவர்களின் ஊடாக பாதுகாப்பு படையினருக்கு காரியதர்சியாக இருந்தவரிடமிருந்து கடிதம் ஒன்றை பெற்றார்.
அதில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதியன்று கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் இருந்து ஆக 32 பேரே கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் 24 மணிநேரத்திற்குள்ளேயே விடுவிக்கப்பட்டனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் சாட்சியத்தில் வெளியாகியுள்ளது. அக் கடிதத்தில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் 32 பேரின் பெயர்பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் அதில் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட எவரும் குறித்த அகதிமுகாமிற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ திரும்பவில்லை என்றும் அவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்த்துப்போன உள்ளக நீதிப் பொறிமுறைகள்!
கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து உள்நாட்டுப் பொறிமுறைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன்பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரினால் உருவாக்கப்பட்ட பாலகிட்ணன் ஆனைக்குழு உட்பட மனிதவுரிமை இல்லத்தினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் அந்தக்காலப் பகுதியில் சமாதானக்குழுவுடன் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அது விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் பல சாட்சியங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில். சம்பவத்திற்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் நீதி மன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாக குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஊடாக இந்தச் சம்பவம் குறித்து உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துவகையான விசாரணைகளும் நீதிமன்ற செயற்பாடுகளும் பொய்த்துப்போயுள்ளது.
இன்நிலையில் ஏற்கனவே விசாரணைகள் மூலம் உண்மைகளை கண்டறிந்த சம்பவங்கள் குறித்து காணாமல் போனோர் அலுவலகம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்பது எந்தவகையில் நியாயமானது என்பதுடன் அது எந்தவகையில் சாத்தியப்படப்போகின்றது என்ற கேள்விகளும் எழவே செய்கின்றது.
குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நடாத்துவது என்பது உண்மைகளை கண்டறிய உதவுவதற்கு பதிலாக உண்மைகள் மறைப்பதற்கே உதவும் என்பது இதற்காக உழைத்தவர்களின் வாதமாக உள்ளது.
ஏற்கனவே இதற்கு சாட்சியாக இருந்தவர்கள் பலர் இறந்துபோயுள்ளனர். இதற்கு காரணமானவர்களாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தெரியாது இன்நிலையில் இது குறித்து மீண்டும் விசாரணைகளை மேற்கொள்வதொன்பது காலத்தை வீனடித்து உண்மைகளை இல்லாமல் செய்வதற்கு சமனானதாக அமைந்துவிடும்.
எனவே ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டு குறித்த சம்பவங்களுக்கான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை வெளியிடவேண்டியது காணாமல்போனோர் அலுவலகத்தின் பணியாக அமையவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்!
கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிற்கு அன்று பொறுப்பாக இருந்தவரும் தற்போது அதே பல்கலைகழகத்தின் உபவேந்தராக உள்ளவருமான பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்கள் 26 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து மீண்டும் தனது கருத்தை பதிவுசெய்யும் போது பின்வருமாறு கூறினார்.
இன்று கானாமல் போனோர்கள் பற்றி அரசாங்கம் மிகவும் சிறப்பான முன்னெடுப்போன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றை திறந்தது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அவற்றின் செயற்பாடுகள் என்பது எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? என்பதை நாம் விமர்சித்துக்கொண்டே போகலாம் எதுவும் நடக்கலாம் எதுவும் நடக்காது என்று கூட கூறலாம் ஆனால் இது ஒரு முதல் படி என்ன நடக்காது என்று நாம் 28 வருடங்களுக்கு முன்னர் கூறினொமோ அது தற்போது நடந்துள்ளது.
அடுத்து நிலைமாறுகால நீதி அது இன்று ஒரு எடுகோளாக வந்துள்ளது. அவற்றில் நான்கு அம்சங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமானது உண்மையை கண்டறிதலாகும். எந்தவோரு செயற்பாட்டிற்கும் மிக முக்கியமானது உண்மையை கண்டறிவதாகும். உண்மையை கண்டறிந்ததன் பின் அதனை எதற்கு பாவிக்கின்றோம் என்பது யாருக்கும் வித்தியாசப்படலாம்.
அவை நல்லிணக்கம் தண்டணைவழங்கள், மீளநிகழாமை, இழப்பீடுவழங்கள்; என எதற்கும் பாவிக்கலாம் அது பின்னர் நாம் யோசிக்கவேண்டியது. ஆனால் எல்லோருக்கும் விசேடமாக தங்களது உறவினர்களை தொலைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிவதற்கான சட்டரீதியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதன் ஊடாக நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக தேடித்தேடி அலைந்து கஸ்டப்பட்டதற்கான ஒரு பலனை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம் என நான் கருதுகின்றேன் என்றார்.
கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அனுமதி மறுப்பது ஏன்?
இன்று 05.09.2018 கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போன 158 பேரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை அனுஸ்டிப்பதற்கு கிழக்குப்பல்கலைகழக நிர்வாகம் அனுமதி தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களை காணாமல் போனவர்களின் உறவுகள் முன்வைத்துவருகின்றனர்.
கடந்த காலங்களில் கூட தாங்கள் வீதியில் உள்ள ஒரு மின்சாரத் தூணில் விளக்கு வைத்தே நினைவு கூர்ந்ததாகவும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு அமைவாக இம்முறையாவது கிழக்குப்பல்கலைகழக வளாகத்திற்குள் காணாமல்போனவர்களுக்கான நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் பல்கலைகழகத்திற்கு வெளியே அதனை அனுஸ்டித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்நிலையில் இதற்கான நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கும் இடம் ஒதுக்கித்தரப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் என பலர் கடந்த பல வருடங்களாக முன்வைத்துவந்த நிலையில் அதனை பல்கலைகழக நிர்hகம் நிராகரித்தே வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தங்களது உறவினர்களை ஏற்றிச் சென்றதை நேரில் கண்ட சாட்சி என்பதுடன் அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதி முகாமிற்கு பொறுப்பாக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருப்பினும் மீண்டு 28 வருடங்களுக்கு பிறகாவது உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும் என்பதோடு அங்கும் இங்குமாக அலைந்து திரியும் இம்மக்கள் ஒரு இடத்தில் கூடி தங்களது உறவுகளை நினைவு கூறுவதற்கு நல்லாட்சி அரசாங்கமும் கிழக்கப்பல்கலைகழக நிர்வாகமும் அவர்களுக்கான இடத்தை ஒதுக்கிதர வேண்டு என்பதே அனைவரினது வேண்டுகோளாகவுள்ளது.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Sethu அவர்களால் வழங்கப்பட்டு 05 Sep 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Sethu என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக்செய்யவும்.
https://www.ibctamil.com/articles/80/105699?ref=ls_d_special
Leave a Reply
You must be logged in to post a comment.