Office
TCWA
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
யூலை 07, 2018
சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்!
தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சராகவும் 1957 ஆம் ஆண்டு தொடக்கம் சட்ட சபைத் தேர்தலில் 13 முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 49 ஆண்டுகளும் அரசியலில் 80 ஆண்டுகளும் ஓய்வின்றி ஒழிதலின்றி இரவு பகலாக உழைத்த கலைஞர் கருணாநிதி நிரந்தர ஓய்வு பெற்றுவிட்டார். நீள் துயிலில் ஆழ்ந்து விட்டார்.
“ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டுள்ளான்” என்ற வாசகம் அவரது கல்லறையில் எழுதப்படவுள்ளது. அண்ணாவின் நினைவிடத்தில் “எதையும் தாங்கும் இதயம் இங்கே தூங்குகிறது” என எழுதி வைத்தவர் கருணாநிதி. அண்ணா இறந்த போது கலைஞர் கருணாநிதி எழுதிய இரங்கல் பாவில்,
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?
என வாஞ்சையோடு பதிவு செய்திருந்தார். இன்று கலைஞர் கருணாநிதியின் ஆசை நிறைவேறியுள்ளது. மெரினாவில் எழுப்பப்பட்டுள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அவரது பூதவுடல் விதைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த முதலமைச்சருக்கும் கொடுக்கப்படாத மரியாதையை இந்திய மத்திய அரசு கலைஞர் கருணாநிதிக்கு வழங்கியுள்ளது. இந்திய நாட்டின் மூவர்ண தேசியக் கொடி நாடு முழுதும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து கலைஞர் கருணாநிதியின் பூதவுடலுக்குத் தனது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி பன்முக ஆளுமை கொண்ட ஒக்காரும் மிக்காரும் இல்லாத பெருந் தலைவர்.
அரசியல், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவு, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பின்தங்கிய சாதியினருக்கு கல்வியில் அரச பணியில் ஒதுக்கீடு என்று பலதுறைகளில் முத்திரை பதித்தவர்.
கலைஞர் கருணாநிதி மாநில அரசுகளின் உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுத்தவர். மாநிலங்களுக்கு இணைப்பாட்சி அடிப்படையில் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனப் போராடியவர். சுதந்திர விழாக்களில் தேசியக் கொடியை ஆளுநர்களுக்குப் பதில் மாநில முதலமைச்சர்கள் ஏற்றி வைக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்த சாதனையாளர்.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இருமுறை (1976, 1991) சட்ட விதி 356 இன் கீழ் கலைக்கப்பட்டது. வேறு எந்தக் கட்சியின் ஆட்சியும் இப்படி இரண்டுமுறை கலைக்கப்படவில்லை.
கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியில் சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம் எழுப்பினார், குமரிமுனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவினார், பூம்புகார் நகரை உருவாக்கினார்.
தெற்காசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நூலகம் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அதை இயங்கவிடாமல் செய்து விட்டார்.
கலைஞர் கருணாநிதி மொத்தம் 13 பல்கலை கழகம், 4 மருத்துவக் கல்லூரி, 5 சட்டக் கல்லூரி, 3400 உயர் நிலை பள்ளிகள், 350 மேம்பாலங்கள், Tidel park , மெட்ரோ ரயில், சென்னை பன்னாட்டு விமான நிலையம் ஆகியவற்றை உருவாக்கினார்.
கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, சமசீர் கல்வி, பின்தங்கிய வகுப்பாருக்கு இட ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சமத்துவபுரம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
ஒரு கல்லூரிப் பேராசிரியர் பெற்றிருக்கும் தமிழ் அறிவைவிட கலைஞர் கருணாநிதி அதிகம் பெற்றிருந்தார். அவர் படித்தவை, உணர்ந்தவை இவை அனைத்துமே தொல்காப்பியப் பூங்காவாக, சங்க இலக்கியமாக, குறளோவியமாக, ரோமாபுரிப் பாண்டியனாக, பாயும் புலி பண்டாரக வன்னியனாக, திருக்குறள் உரையாக இன்னும் பலவாகத் தமிழர்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.
திரையுலகில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்தவர். திரைப்படம் மூலம் சாதி ஒழிப்பு, மூட பக்தி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்றவற்றில் கொண்டுவந்தவர்கள் இருவர். ஒருவர் அறிஞர் அண்ணா. மற்றவர் கலைஞர் கருணாநிதி. அவரது பராசக்தி திரையுலகில் வரலாறு படைத்தது. தமிழ் கொஞ்சி விளையாடியது. பகுத்தறிவு பளிச்சிட்டது.
பராசக்திக்குப் பின்னரே திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதுபவர்களின் பெயர் கொட்டை எழுத்தில் காட்டப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் கனவுகளில் ஒன்றான தை முதல் நாளே தமிழர்களது புத்தாண்டின் தொடக்கம், அந்த நாளே திருவள்ளுவர் பிறந்த நாள், அதுவே திருவள்ளுவர் தொடர் ஆண்டு என 2008 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியவர். ஜெயலலிதா ஆட்சியில் அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் இன்று உலகளாவிய தமிழர்கள் தை முதல் நாளை – தைப்பொங்கல் திருநாளை முப்பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
கலைஞர் கருணாநிதியின் இன்னொரு சாதனை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவர் தமிழக சட்ட சபையில் இயற்றிய சட்டம். இந்த ஆண்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்று வெளியில் வந்த ஒரு தமிழர் மதுரைக் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மகிழ்ச்சியான செய்தி.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது ஒரு இலட்சம் தமிழீழ ஏதிலிகளுக்கு கல்வி, குடியிருப்பு போன்ற பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
கலைஞர் கருணாநிதி எத்தனையோ காட்டாறுகள், எண்ணற்ற நெருப்பாறுகள், கணக்கிலடங்கா இரண்டகங்கள், பலத்த நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் என இவை அனைத்தையும் கடந்து 50 ஆண்டுகளாக திமுக வை தலைமையேற்று நடத்தி வந்ததிருக்கிறார். அவர் மூன்று தலைமுறை கண்ட சாதனையாளர். அவர் நிறைவாக வாழ்ந்து தனது 94 ஆவது அகவையில் புகழோடு மறைந்து விட்டார்!
கலைஞர் கருணாநிதியை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், திமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லோருக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா)
கலைஞர் கருணாநிதியின் மறைவு-பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன்
தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி மறைவு என்ற செய்தியை அறிந்து பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என்மனதில் உணர்ந்தேன் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முது பெரும் தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து, பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன். கடுஞ்சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த கடந்த சில நாட்களாக அவர் பற்றிய கரிசனையோடு நான் இருந்த அதேவேளை அவர் சுகம் அடைந்து உலகத் தமிழர்களுக்குத் தலைவனாகத் தொடர வேண்டுமென்ற பிரார்த்தனையே என் மனதில் இருந்தது. ஆயினும் காலம் அவர் உயிரைக் கவர்ந்து சென்று விட்டது. அவர் | இயற்கையெய்திவிட்டார்.
கடந்த ஆறு தசாப்தங்களாகத் தமிழ் நாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து அரசியல் பணியாற்றிய அவர் ஐந்து தடவைகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், தொடர்ச்சியாக 13 தடவைகள் தமிழ் நாட்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டியவராகவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தின் அரசியல் பணியை ஆற்றியதோடு மட்டுமல்ல, செம்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் சிறப்பான பணிகளைச் செய்தவராகவும், சிறந்த தமிழறிஞர், இலக்கிய அறிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உயர்வான தலைமைப் பண்புகள் கொண்டவர், அரசியல் ஞானி போன்ற பன்முக ஆளுமை | கொண்டவராக அவர் திகழ்ந்தார், இந்திய உப கண்டத்தின் அரசியலிலும் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராகவும், அவர் மதிக்கப்பட்டார். இத்தகைய உன்னத தலைவரின் சாதனைகளை இச்சிறிய அனுதாபச் செய்தியுள் அடக்கிவிட முடியாது.
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் எனக்கும் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புகளும் உறவுகளும் இருந்து வந்தன. நான் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்பும் அவர் எனக்குப் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கியதோடு அவர் இறக்கும் வரை எமது அன்பான தொடர்புகளும் உரையாடல்களும் தொடர்ந்தன. தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பல இலங்கைத் தமிழ் தலைவர்கள் தமிழ்நாட்டில் சீவித்த காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் அவரின் அன்பும், எமக்கான ஒத்துழைப்பும் அதிகமாக இருந்ததோடு, அரசியல் ரீதியிலும் எமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தார். அவரின் பிரிவு என் மனதில் ஆழ்ந்த கவலையைத் தருவதாக உணர்கின்றேன்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். கலவர காலங்களில் தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள், வேதனைகளில் தனது கரிசனையை காண்பித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்பட்டார். அவரின் பிரிவால் இலங்கைத் தமிழ் மக்களும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர் என்பதை தெரிவிப்பதோடு அம்மக்கள் சார்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும், எனது சார்பிலும் எனது ஆழ்ந்த கவலைகளையும் அனுதாபங்களையும் மறைந்த தலைவரின் குடும்ப உறவினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தெரிவிப்பதோடு உலகத் தமிழர்களின் உதய சூரியனாக இருந்து ஒளியூட்டிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Leave a Reply
You must be logged in to post a comment.