அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது! கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்துப் பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இது விடிய விடிய இராமாயணம் விடிந்தபின் சீதைக்கு இராமன் என்ன முறை என்று  கேட்ட புத்திசாலியின் கதையாக இருக்கிறது.

நெருப்புச் சுடும் என்பதை முட்டாள் கையை வைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி நெருப்புச் சுடும் என்பதை மற்றவர்களது பட்டறிவில் இருந்து அறிந்து கொள்கிறான். இதுதான் இருவருக்கும் இடையில் உள்ள வேற்றுமை!

வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளாராக யாரை நிறுத்துவது என்பது பற்றி  இன்னும்  தமிழ்த் தேசியயக் கூட்டமைப்பு  உத்தியோக பூர்வமாக இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை ஆயினும் யாரை நிறுத்தக் கூடாது என்பதில் ஒரு முடிவு  எட்டப்பட்டுள்ளது.

கடந்த யூன் மாதம் 9 ஆம் நாள் வெளிவந்த காலைக்கதிர் நாளேடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளரும்  அதன் பேச்சாளருமான ம.ஆ. சுமந்திரன் உடனான நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இரண்டு பக்கம் நீடித்த அந்த நேர்காணலில்   தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்? என  இரண்டு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

காலைக்கதிர் – தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன?

சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக இனியும் விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. கூட்டமைப்பு அப்படி நிறுத்தாது என்றும் நான் தெரிவித்திருக்கின்றேன். அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூடத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்திருந்தது. அவர் கட்சியோடு முரண்பட்டு நிற்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே வெளிப்படையாகத் தெரிகிற ஒரு விடயம் இருக்கையில் அவருக்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பது தேவையற்றது. அவர் தற்போது தனிக் கட்சி தொடங்கவுள்ளார் எனப்  பேசி வருகின்றார். அப்படியான சூழ்நிலையில் அவரை வேட்பாளராக நியமிக்கின்றமையை மானம் மரியாதை உள்ள எந்தக் கட்சியும் சிந்திக்காது.

காலைக்கதிர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

  சுமந்திரன் – கூட்டமைப்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும். கூட்டமைப்புக்கான ஆதரவு குறையப் போவதும் இல்லை. ஆனால் எவர் பிரிந்து சென்றாலும்  வாக்குகள் பிரிவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. அவர் அது குறித்துச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து அவரைக் கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்கியமைக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதனை நாங்கள் செய்திருந்தோம். ஆனால் அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர் பார்க்க முடியாது.

உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சித்தம் போக்குச் சிவன் போக்கு என்றிருந்தவர் விக்னேஸ்வரன். அவரைச் சம்பந்தன் ஐயா அவர்கள்தான் 2013  இல் அரசியலுக்கு இழுத்து வந்தார். முன்பின் தெரியாத ஒருவரை, அரசியலுக்குப் புதியவரை  பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனது பெயரை  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவகள் முன்மொழிந்தார். பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் “வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்” என்று எச்சரித்தார். இருப்பினும் அவரையும் சமாதானப்படுத்தி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்புக்கு மேலும் ஒரு காரணம் இருந்தது.  முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசா ததேகூ இன் சார்பாக போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட முடிவாகி இருந்தது. தமிழரசுக் கட்சியைவிட பங்காளிக் கட்சிகளான இபிஎல்ஆர்எவ், ரெலோ, புளட் கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசாவுக்கே ஆதரவு தெரிவித்தன.  சம்பந்தன் ஒருவரே விக்னேஸ்வரனைக் கொண்டுவரக் கடும் முயற்சி எடுத்தார். சம்பந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவை சேனாதிராசா பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தார்.

ஓய்வூதியமாக மாதம்  கிடைக்கும்  ரூபா 30,000 ஓய்வூதியப் பணத்தில்தான் தனது சீவியம் நடப்பதாக விக்னேஸ்வரன் சம்பந்தன் ஐயாவுக்குத் தெரியப்படுத்திய போது அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் எனச் சொன்னார்.  சம்பந்தன் ஐயா கேட்டதற்கு இணங்க விக்னேஸ்வரனது தேர்தல் செலவுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் பல இலட்சங்களை  நேரடியாக அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தது!

மக்களுக்கு யார் என்று தெரியாத ஒருவரை தேர்தல் களத்தில் இறக்கி அவரது வெற்றிக்கு  இரவு பகல் பாராது, பசி நோக்காது, கண்துஞ்சாது  உழைத்தவர்கள் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும்தான். ஒரு கட்டத்தில் தான் எங்கே இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவேனோ என்ற ஐயம் அவருக்கு வந்த போது, இல்லை அப்படியொன்றும் நடவாது தென்பாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல்  சொல்லப்பட்டது.

தேர்தல் முடிவு வந்தபோது 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று விக்னேஸ்வரன் முதலிடத்தில் இருந்தார். இரண்டாவது இடத்துக்கு வந்தவரை விட இவருக்கு 44,385 வாக்குகள் கூடுதல் வாக்குகளள் கிடைத்திருந்தது.

இன்று நிலைமை  பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிப் போய்விட்டது! விக்னேஸ்வரனின் இந்தத் தலைகீழ் மாற்றத்திற்குக்  காரணம் 2014 ஆம் அண்டு இறுதிப் பகுதியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகாநாடே  என்கிறார்  அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள்.  “கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராசா அண்ணன் அவர்களுக்குச் சென்றடைந்தமைதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்புக் கனவாயிற்றே என்பதைச் சகித்துக் கொள்வது கடினம் தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல” என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் ஆசைப்பட்டார் என்பது பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு டிசெம்பர்  29 அன்று வெளியிட்ட அறிக்கை மூலமாகவே  மற்றவர்களுக்குத்  தெரிய வந்தது.  இந்தச் செய்தியை  விக்னேஸ்வரன் இதுவரை மறுக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆசை நல்லது ஆனால் அது பேராசையாக இருக்கக் கூடாது.

தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர் விக்னேஸ்வரன் என்ன சொன்னார்? ”நான் யாருடைய தயவாலும் வெற்றி  பெறவில்லை, மக்களிடம்  இருக்கும் எனது சொந்தச் செல்வாக்கினால் வெற்றி பெற்றேன்” என்று பச்சைப் பொய் சொன்னார்! இதற்குத்தான் சொல்வது நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு  இரண்டு ஆடு கேட்கும் என்று!

17-08-2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகளை கொழும்பில் இருந்தவாறு விக்னேஸ்வரன் வெளியிட்டார். தான்  எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வந்து நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். எனவே திறமையான, மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடக் கூடிய, விலைபோகாதவர்களை தெரிவு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இதன் உட்பொருள் தமிழ் அரசுக் கட்சி / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்  என்பதுதான்.

ஆளால் தமிழ் மக்கள்  வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் சாரி சாரியாக வெளியில் வந்து சரியான தலைமைக்கு வாக்களித்து  விக்னேஸ்வரனது முகத்தில் கரி பூசினார்கள். இதன் பின்னரும்  அவர் தமிழரசுக் கட்சித் தலைமையோடு தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டார். மோதல் போக்கை மேற்கொண்டார். இன்றுவரை இந்தப் போக்குத் தொடர்கிறது.

மாற்றுத் தலைமை {தனக்கான தலைமை) வேண்டும் என்ற  தனது ஆசையை நிறைவேற்ற விக்னேஸ்வரன்  தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை டிசெம்பர் 19, 2015 அன்று உருவாக்கினார். எண்ணிப் 17 பேரை யாருக்கும் தெரியாமல், மூடிய அறைக்குள் பேச்சு நடத்தி விட்டு, ஏற்கனவே இரகசியமாக திட்டமிட்டதற்கு அமைய எல்லாவற்றையும் முடித்து விட்டு, அரசியல் சார்புமில்லை, யாருக்கும் எதிரானவர்களுமில்லை என்று விக்னேஸ்வரன் தத்துவம் பேசினார்.

இந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது, சிவில் அமைப்புக்களை கொண்டது என்று விக்னேஸ்வரன் பறை சாற்றினாலும்  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இபிஎல்ஆர்எவ் போன்ற அரசியல் கட்சிகள் அதில் இடம் பிடித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் அரசுக் கட்சிக்கு மட்டும் அழைப்பு இல்லை! அவரது பார்வையில்  அல்லது கணிப்பில் தமிழ் அரசுக் கட்சி ஒரு கட்சியே அல்ல!

ஆண்டிகள் கூடி மடம் கட்டியதுபோல  தமிழ் மக்கள் பேரவை  உள்நாட்டிலும் சரி,  பன்னாட்டு அரங்கிலும் சரி இன்றுவரை எதனையும் சாதித்தது கிடையாது.  வெள்ளை வேட்டி கட்டிக் கொள்ளும் மேட்டுக் குடியினரது அமைப்பாகவே அது  இயங்கி வருகிறது. சாதாரண மக்களுக்கும் அந்த அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வட மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர்  ஒரு நாள் பார்த்து விக்னேஸ்வரன்  தமிழ் அரசுக் கட்சியின் தலைமை  அலுவலகத்துக்கு ஒப்புக்கேனும்  போகவில்லை.  அவர் மீது யூன், 2017 இல் 21 வட மாகாண சபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு போனபோதுதான்  தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இரண்டாவது தடவை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் கால் பதித்தார்.

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னாள் மாகாண கல்வி அமைச்சர்  த.குருகுலராசா அவர்களது இடத்துக்கு இமானுவேல் ஆர்னோல்ட் அவர்களை நியமிப்பது என உடன்பாடு காணப்பட்டது. அதற்கான கடிதத்தை தருமாறு அவசரப்படுத்தியதின் காரணமாக தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலாளரே வட மாகாண சபைக்குச்  சென்று கடிதத்தை நேரில் கொடுத்தார்.

அனந்தி சசிதரன் அவர்களை அமைச்சராக நியமிக்கும் தன விருப்பத்தை விக்னேஸ்வரன் வெளியிட்ட போது  அதற்குப் பதில் அளித்த மாவை சேனாதிராசா  அனந்தி மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து வருக்கிறது எனவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று  தெரிவித்தார்.

ஆனால்  விக்னேஸ்வரன் என்ன செய்தார்? எப்படி நடந்து கொண்டார்? நேர்மையாக நடந்து கொண்டாரா? ன தமிழ் அரசுக்கட்சி சார்பாக  ஆர்னோல்டு அவர்களைக் கல்வி அமைச்சராக நியமிக்கச் சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை அவசர அவசரமாகக் கேட்டுப் பெற்ற பின்னர்  தனது அடிவருடி இபிஎல்ஆர்எவ் உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சிக்கு இரண்டகம் செய்தார். அத்தோடு நிறுத்தாமல்   விக்னேஸ்வரன் அனந்தியை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

தமிழ் அரசுக் கட்சி அமைச்சர்கள் குருகுலராசா மற்றும் சத்தியலிங்கம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் வைக்காத போதும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய ஆணைக்குழு எந்தப் பரிந்துரையையும் செய்யாத போதும் அவர்கள் இருவரும் தங்கள் பதவியைத் துறக்க வேண்டும் என்று சொல்லி சின்னத்தனமாக ஒற்றைக் காலில் நின்றவர் விக்னேஸ்வரன். சத்தியலிங்கத்தை மாட்ட முடியாதா என்று தான் உருவாக்கிய ஆணைக் குழு உறுப்பினர்களையே கேட்ட ‘உத்தமர்’ விக்னேஸ்வரன்!

2018 இல் நடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வந்து  கொண்டிருந்த போது ததேகூ க்கு இது நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது என்று விக்னேஸ்வரன் சொல்லி மகிழ்ந்தார். புளகாங்கிதம் அடைந்தார்.

மொத்தத்தில் விக்னேஸ்வரன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர். ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர். அன்னமிட்ட வீட்டுக்குக் கன்னம் வைத்தவர்.

சரி,  அரசியலில்  விக்னேஸ்வரன் ஒரு இரண்டகர் என்பதை மறந்து விடுவோம். அவரது நிருவாகம் எப்படிப்பட்டது? வட மாகாண சபையை வினைத்திறனோடு  ஆட்சி செய்தாரா?  அப்படி எதுவும் இல்லை. வினைத்திறனற்ற சபை என்பதே பலரது மதிப்பீடாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் யூஎன்டிபியின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி சுபினே   நந்தி (Subinay Nandi)ன வட மாகாணத்தில் வாழும் விவசாயிகளின் வாழ்க்கை  மேம்பாட்டுக்கு Peacebuilding Commission (PBC) என்ற திட்டத்தின் கீழ்  அ.டொலர் 150 மில்லியன் (ருபா225 கோடி) நிதியை கொடுக்க முன்வந்தார். அ.டொலர்  150 மில்லியன் என்பது கொஞ்சநெஞ்சப் பணம் அல்ல.    2017 ஆம் ஆண்டில் மத்திய அரசு வட மாகாண சபையின்  மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி ரூபா 6013.48 மில்லியன் (ருபா 601.34  கோடி) மட்டுமே.   வாராது வந்த இந்த நிதியை விக்னேஸ்வரன் ஓடோடிச் சென்று இரு கையாலும் நன்றியோடு பெற்றுக் கொண்டிருப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் நடந்தது என்ன? அது ஒரு சோகக் கதை.

விக்னேஸ்வரன் தனது தனிச் செயலாளராக பணியில் இருந்த  தனது மருமகன் கார்த்திகேயன் நிமலனை அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000 (ரூபா 750,000 இலட்சம்) சம்பளத்தில் ஒரு சிறப்பு ஆலோசகராக யூஎன்டிபி  நியமிகக  வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த யூஎன்டிபி கொழும்பு வதிவிடப் பிரதிநிதி    “யாரை நியமிப்பது அல்லது நியமியாது விடுவது எங்களுடைய பொறுப்பு. அதனைச் செய்ய எங்களுக்கு சட்ட திட்டங்கள் இருக்கிறது” எனத்  தெரிவித்தார். மேலும்  ” ……குறித்த சிறப்பு ஆலோசகரின் (நிமலன் கார்திகேயன்) அதீத ஆதரவு திரட்டல் காரணமாக  ஐநா அந்த நியமனம் பற்றி  எண்ணிப்பார்ப்பதே சாத்தியம் இல்லாமல் போய்விட்டது (….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to rconsider such an appointment”)  என  நந்தி கடித மூலம் தெரிவித்தார். இன்று அந்த நிதியில் பாதி முன்னாள்  சனாதிபதி  சந்திரிகா குமாராதுங்கா நடத்தும் ஒரு தொண்டு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது!

வலிய வந்த சீதேவியை விக்னேஸ்வரன் தனது மருமகனுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக உதைத்துத் தள்ளினார். இதன் மூலம் வட மாகாண  ஏழை விவசாயிகளது வயிற்றில்  அடித்தார். உண்மையில் நரகம் என்று ஒன்றிருந்தால் அங்கே விக்னேஸ்வரனுக்கு சிறப்பிடம் ஒதுக்கப்படும்!

ஒரு எள்முனை அளவு தன்மானம் உள்ள தமிழ் அரசுக் கட்சிக்காரன் விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு நியமனம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டான்.  ஒரு கட்சிக்குக் கட்டுப்பாடு தேவை. கொள்கை,  கோட்பாடு தேவை. இது உலகெங்கும் காணப்படும்  நடைமுறையாகும்.  அவை தேவையில்லை என்பவர்கள் மட்டுமே  விக்னேஸ்வரனும் சம்பந்தன் ஐயா அவர்களும்  சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்பார்கள்! இருவரும் பேசினால் ஈர மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டிவிடும் என நினைக்கிறார்கள்!

வட மாகாண சபையின் அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்பதை  இலண்டனில் நாலு பேர் கூடிப் பேசி முடிவு எடுக்க முடியாது. அதிலும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் நிச்சயம் முடிவு எடுக்க முடியாது.   “வி்க்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கிய சிலரால் விட்ட தவறை உணர்ந்து வடமாகாண சபையின் அபிவிருத்திக்காக உழைப்பேன் என்று உறுதியளித்து வருகின்றார்”  என்கிறார் ஒருவர்.  விக்னேஸ்வரன் எப்போது? எங்கே?   உறுதி அளித்தார்? அவர் தனிக்கட்சி தொடங்கிப் போட்டியிடப்  போவதாக அல்லவா நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை  அப்படி அவர் உறுதியளித்திருந்தால் அது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்தவன் கதை  போன்றது!

விக்னேஸ்வரன் தனிக் கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார். அதற்கு முன்னோடியாக வட கிழக்கில் உள்ள இளைஞர்கள் இளைஞிகளை அழைத்து அடுத்த மாதம் மாநாடு நடத்த  ஏற்பாடு செய்து வருகிறார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று “எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் தனியாகக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாரா?” என எழுப்பப் பட்ட கேள்விக்கு  விக்னேஸ்வரன்   பதில் அளித்துள்ளார்.

தனக்கு அடுத்த முறை  போட்டியிட வாய்ப்பளிக்கப் படமாட்டாது  எனச் சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு  பெருமளவு மக்கள் தன்னிடம் கேட்கிறார்கள்.  முதலாவதாக கட்சி (தமிழ் அரசுக் கட்சி?) எனக்குப் போட்டியிட இடமளிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால், தான் இன்னாரு கட்சியில்  இணைந்து  போட்டியிட வேண்டியிருக்கும்.  இல்லையேல், தனிக்கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.  (தமிழ்வின்)

விக்னேஸ்வரன் அளித்திருக்கும் பதில்கள் அவர் அரசியலைச்  சந்தையில் பேரம் பேசி மாடு வாங்குகிற வியாபாரமாகப் பார்க்கிறார் என்பது  தெரிகிறது.  தமிழ் அரசுக் கட்சி தான் போட்டியிட  வாய்ப்புத் தரவேண்டும். அப்படி வாய்ப்புத் தராவிட்டால்  இன்னொரு  கட்சியில்  இணைந்து போட்டியிடுவேன். இரண்டும் சாத்தியம்  இல்லாவிட்டால்  தனிக் கட்சி தொடங்கிப்  போட்டியிடுவேன்!

இப்படி ஒரே நேரத்தில்  இரண்டு மூன்று தோணிகளில்  பயணம் செய்ய நினைக்கும் அல்லது மனப்போக்குடைய ஒருவரை தமிழ் அரசுக் கட்சி மட்டுமல்ல வேறெந்த மானமுள்ள கட்சியும் தேர்தலில் போட்டிபோட  நியமனம் வழங்காது.

ஒற்றுமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப் படவேண்டும். அரசியல் கட்சி என்பது ஆண்டிகள் மடம் அல்ல. அது மக்களின் தலைவிதியை மாற்றவல்ல அமைப்பு.  ஆனால் அரசியலில் உட்பகைக்கு உள்ளான கட்சி  அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்பு போல் அழியும். எள்ளின் பிளப்பைப்  போல் சிறியதாக இருந்தாலும்  அதனால் கெடுதி மிகுதியாகும். உட்பகை புற்று நோய் போன்றது.  இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. (குறள் 890)

மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் ஒரு வீட்டில்  கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும் என்கிறார் வள்ளுவர். இங்கே பாம்பு யார் என்பதை யாரும்  சொல்லிக் காட்டத் தேவையில்லை.

அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி/தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் போட்டியிடும். முதலமைச்சராக ஒருவரை முன்னிறுத்தும். ஆனால் அது நிச்சயமாக விக்னேஸ்வரன் ஆக இருக்க மாட்டாது. இருக்கக் கூடாது.

 

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply