அரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது

அரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது – சுமந்திரன் செவ்வி

யாழ்ப்பாணம் யூன் 09, 2018

மைத்திரி – இரணில் அரசுடனான இணக்கப் போக்கைக் கைவிட்டு, உறவை முறித்துக் கொள்ளும் நிலைப்பாட்டுக்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு வந்து விட்டது எனக் கோடி காட்டியிருக்கின்றார் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “இனியும் நாங்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்று சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை. நான் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றவன் என்ற வகையில் கூறுகிறேன். எங்களுடைய எதிர்ப்பை நாம் காட்டவேண்டும்.என்பதும் சர்வதேச சமூகத்தின் சிந்தனையாக இருக்கின்றது” என்றார் அவர்.

கூட்டமைப்பு அரசுக்கு முண்டு கொடுக்கிறது என்பது உண்மை தான். அது  அனைவருக்கும் தெரிந்த விடயம். எங்கள் மக்களின் வாக்குகளால் அமைந்த அரசு என்பதால் அவர்களின் சில செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். குறிப்பாக புதிய அரசமைப்பு முயற்சியில் நாங்கள் அவர்களுடன் இணைந்தே செயற்படுகிறோம். ஆயினும் எமது மக்களின் பிரச் சினைகள் கவனிக்கப்படாதவிடத்து மக்களுடன் இணைந்து அதற்காக நாங்களும் அரசுக்கு எதிராகப் போராடுவோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன்.

“காலைக்கதிர்’ நாளிதழுக்கு தாம் வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். “புதிய ஆட்சி மாற்ற மொன்று 2015 இல் கொண்டு வரப்பட்டது. ஆகையினாலே அவர்களுக்கு ஓர் அவகாசம் கொடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதில் பலருடைய சிந்தனை யின்படி நாங்கள் கூடுதலான அவகாசத்தையே கொடுத்திருக்கின்றோம். அதனால்தான் கூடுதலான விமர்சனங்களும் வந்தன. ஆயினும் அதனை நாங்கள் கவனமாகச் செய்தமைக்கும் காரணங்கள் இருக்கின்றன. அதாவது சர்வதேச சமூகத்திலே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. என்னவெனில், புதிய ஆட்சி மாற்றமடைந்த சூழலில் சேர்ந்தியங்க வேண்டிய நிலை இருந்தது. “நாங்கள் பொறுப்பில்லாமல் செயற்பட்டோம் அல்லது நாங்கள் அரசுக்கு ஆதரவு கொடுக்காத காரணத்தால் சிலவற்றைச் செய்ய முடியாமல் போய்விட்டது என்று எவரும் எம்மீது குற்றம் சொல்லாத வண்ணம் கடந்த மூன்று வருட காலத்தில் பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்திருக்கின்றோம்.

இனிமேலும் அப்படித்தான் இருக்கவேண்டு மென்று எவரும் எதிர்பார்க்கமுடியாது. நான் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறவன். ஆகையினால் அவர் களினுடைய நாடித்துடிப்பை முற்றாக அறிந்தவன் என்ற வகையில்தான் சொல்லுகின்றேன். இனியும் நாங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும் என்று சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை.  எங்களுடைய எதிர்ப்பை நாங்கள் வெளிக் காட்டவேண்டும் என்பது அவர்களுடைய சிந்தனையாகவும் இருக்கின்றது. அதனால்தான் நாங்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறோம்.

“இப்போது கடற்றொழில், நீரியல்வளத் திணைக்களத்தை மறித்து நாங்கள் செய்த நிர்வாக முடக்கல் என்பது ஓர் ஒத்திகை போன்றது. நாங்கள் வடக்கு கிழக்கிலே முழுமையாகச் செய்யவுள்ள அரச அலுவலக நிர்வாக முடக்கலுக்கான ஒத்திகையாகவே இதனைச் செய்தோம்.”  என்றார் அவர்.

அவரது செவ்வியின் முழு விவரமும் வருமாறு:

கேள்வி- முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தொடங்கிய அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் தற்போது வடமராட்சி கிழக்குக்கும் வந்திருக்கின்ற நிலையில் இத்த கைய அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த கூட்டமைப்பு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

பதில்- முல்லைத்திவு மாவட்ட நிலைமைகள் தொடர்பில் அரசுடன் பேசியிருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தே வந்திருக்கின்றோம். இதன் தொடராக வடமராட்சியில் அத்துமீறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். அதே போன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறியிருக்கின்றோம். இந்த விடயங்களுக்குச் சரியான நடவ டிக்கை எடுப்பதாக உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதிலே முன்னேற்றம் இல்லாத காரணத்தினால்தான் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம்.

ஆனால் இங்கு உள்ள அதிகாரிகள் சட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்துவார்களாக இருந்தால் இந்தப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்ந்து விடும். அதை அவர்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளமையால்தான் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பு தொடர்ச்சியாக இது குறித்து அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிர்வாக முடக்கல் போராட்டமும் திருப்பு முனையாகவே அம யுமென்றும் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி- முல்லைத்தீவில் தொடங்கிய சட்டவிரோத அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கள் என்பன நல்லாட்சி அரசிலும் தொடரும் நிலையில் அவற்றுக்கெல்லாம் பலமானதொரு எதிர்ப்பையோ அல்லது தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையோ முன்னெடுக்காமல் அரசுக்கு முண்டு கொடுத்து வருகிறீர்கள் என்றும், வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய தொழில் நடவடிக்கை என்றதும் நீங்களும் கூட்டமைப்பும் பலமாக அரசை எதிர்ப்பதானது உங்களது வாக்குகளுக்காகவே என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறதே?

பதில்-நாங்கள் அரசுக்கு முண்டு கொடுப்பதென்பது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மஹிந்த அரசை அகற்றி இந்த அரசை ஆட்சியில் அமர்த்துவதற்கு நாங்கள் பெரிதும் துணைபுரிந்தோம். அவ்வாறு நாங்கள் என்று சொல்கின்றபோது எங்கள் மக்கள்தான். அவர்களது வாக்குகள்தான் பெரிதாகப் பயன்படுத்தப்பட்டன. அதுவோர் அவசர தேவை என்பதற்காகவே செய்யப்பட்ட செயற்பாடு ஆகும். ஆனால் இந்த அரசு அடக்குமுறையை விட்டு விலகியிருப்பதை நாங்கள் தெளிவாகக் காட்டலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சென்று இப்படியான நாளாந்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதுடன் எங்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உத்தரவாதத்தையும் அவர்கள் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் அதிலும் முன்னேற்றம் காணப்பட வில்லை என்பதும் உண்மை. அப்படியானதொரு முன்னேற்றம் காணப்பட வேண்டுமென்பதற்காகவே அவர்களோடு சேர்ந்து கடந்த மூன்று வருடங்களாக உழைத்திருக்கின்றோம். அந்தக் கால கட் டத்திலே அரசமைப்பு உருவாக்கம் சம்பந்தமாகப் பல முன்னேற்றகரமான நிகழ்வுகள் நடந்தன. அதில் நாங்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அரசோடு சேர்ந்து இயங்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனை நாங்கள் செய்திருக்கின்றோம். ஆயினும் அதிலும் முன்னேற்றம் இல்லாமல் போகின்றபோது நாங்கள் எங்களுடைய நடவடிக் கைகளைத் திரும்பவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

எது எப்படியாக இருந்தாலும் நாளாந்தப் பிரச்சினைகள் சம்மந்தமாக அது எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் நாங்கள் இருக்கவில்லை. கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறோம்.

மீனவர் பிரச்சினையில் முல்லைத்தீவு சம்மந்தமாகவும் ட்றோலர் பிரச்சினையிலும் சென்ற அரசிலும் இந்த அரசிலும் சட்டமூலமொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றோம். ஆகையினால் மக்களின் பிரச்சினைகளைப் புறந்தள்ளி வைத்து அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்பதற் காக நாங்கள் அப்படி இயங்கவில்லை.

எங்கள் மக்களின் நீண்ட காலப் பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே செயற்பட்டி ருக்கின்றோம். அதற்காக அரசுக்கு உதவிகளைச் செய்திருந்தாலும் மக்கள் நலன் சாராமலோ அல்லது அவர்களது நன்மைகளை மீறியதோ கிடையாது. ஆகவே இதுவொரு கண்துடைப்பு நாடகமல்ல. எங்கள் மக்கள் நியாயமாகக் கேள்விகளைக் கேட்டு போராடுகின்றபோது அவர்களுடன் இணைந்து நாங் களும் அந்தக் கேள்விகளைக் கேட்டுப் போராடுகின்றோம்.

கேள்வி- முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் காணி அபகரிப்புக்களும் குடியேற்றங்களும் நடந்து வருகின்றன என குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில் அவற் றைத் தடுப்பதற்குக் கூட்டமைப்பு எத்தகைய நடவடிக் கைகளை எடுத்திருக்கின்றது?

பதில்- முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்புக்கள் மற்றும் குடியேற்றங்க ளைத் தடுத்து நிறுத்துவதற்குக் கூட்டமைப்பு பல வழிகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தி ருக்கின்றது. வடக்கு மாகாண சபையும் நாடாளு மன்ற உறுப்பினர்களும் சந்தித்துக் கலந்துரையாடி செயலணியயான்று உருவாக்கப்பட்டுள்ளது. நாங் களும் கடந்த வாரம் நாடாளுமன்றக் குழுக் கூட்ட  இது தொடர்பில் ஆராய்ந்திருக் கின்றோம். அதேபோன்று எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் இன்னு மொரு கூட்டத்தை ஏற்பாடு செய்தி ருக்கின்றோம். வவுனியா, முல் லைத்தீவு மாவட்டங்களின் எல்லாத் தரவுகளும் எங்களிடம் இருக்கின் றன. அந்தக் கூட்டத்திலே அவை குறித்து கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க இருக் கின்றோம்.

இதேவேளை இந்த மகாவலித் திட்டத்தின் மூலமாகக் கிழக்கு மாகாணம் பறிபோனதென்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அது இப்போது வடக்கு மாகாணத்துக்கும் வந்து வெலிஓயா என்ற பிரதேசமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மேலதிகமாக வேறு இடங்களிலும் குடியேற்றத்திற்கான ஆயத்தங்கள் நடக்கின்றன என்று எங்களுக்குத் தெரிகிறது. ஆகையால் அவற்றை நாங்கள் எதிர்த்திருக்கின்றோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட எங்களுக்கு தண்ணீர்தான் வேண்டும் குடியேற் றங்கள் வேண்டாம் என்று கூறியிருக்கின்றோம். ஆகவே மகாவலிச் சட்டத்தை வைத்தே அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள் ளோம். மேலும் குடியேற்றங்கள் வேண்டாம் என்பதி லும் அதனைத் தடுப்பதிலும் நாங்கள் உறுதியாக வும் தெளிவாகவும் இருக்கின்றோம்.

கேள்வி- வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்றதொரு கேள்வி பரவலாக எழுந்திருக்கும் நிலையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, தன்னைப் போட்டியிடுமாறு கூட்டமைப்பு கோரினால் அது குறித்து தான் பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த முறை தான் போட்டியிடாமல் இழைத்த தவறை இந்த முறையும் செய்யத் தயாரில்லை என்றும் நீங்கள் சார்ந்த கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா கூறியிருக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில் உங்களது கட்சியினதும் பங்காளிக் கட்சிகளினதும் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பதில்- யார் வேட்பாளர் என்பதை நாங்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இதனை நான் முதலில் சொல்லியிருக்கின்றேன். அதேபோன்று தலைவர் சம்பந்தன் ஐயாவும் சொல்லியுள்ளார். அதிலே சென்ற தடவை வடக்கு மாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராசா வர வேண்டுமெனப் பங்காளிக் கட்சிகள் எல்லாம் தீர்மானித்து கோரிக்கை விடுத்திருந்தன என்பது உண்மை. ஆனால் அந்த வேளையிலே நாங்கள் வடக்கு மாகாண சபைக்கு முதலாவது தேர்தல் நடக்கின்ற காரணத்தால் அதனை வேறு விதமாகக் கையாள வேண்டுமென்ற நோக்கில் நீதியரசர் விக்னேஸ்வரனைக் கொண்டு வந்திருந்தோம்.

ஆயினும் அந்த நேரத்தில் மாவை சேனாதிராசாவை எல்லோரும் கேட்டுக் கொண்டபோதிலும் எங்களது அந்தச் சிந்தனைக்கு இடம்கொடுத்து அவர் விட்டுக் கொடுத்தமையால் தான் நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவ்வாறு அவர் நிறுத்தப்பட்டபோது கூட இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே தான் முதலமைச்சராக இருப்பார் என்றும், அதன் பின்னர் தம்பி மாவை அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டு மென்றும் அவரே சொல்லியிருந்தார். ஆனால் இன்று ஐந்து வருடங்கள் முடிவடையும் தறுவாயி லும் அவரே முதலமைச்சராக இருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுகின்றபோது வடக்கு மட்டு மல்ல கிழக்கு தொடர்பிலும் நாங்கள் சிந்திக்கின்றோம். ஏன் என்றால் சென்ற தடவை எங்களுக்குக் கிழக்கிலே கூடுதலான ஆசனங்கள் இருந்தபோதிலும் கூட குறைவான ஆசனங்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து அந்த ஆட்சியில் நாங்களும் ஒரு பங்காளியாக இருந்தோம். கிழக்கு மாகாண சபையிலே நாங்கள் ஒரு முதலமைச்சரைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இம்முறை இருக்கின்றன.

ஆகவே வடக்கிலும் கிழக்கிலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டிய காலம் நெருங்கி வந்திருக்கிறது. அதிலும் வடக்கைப் பொறுத்தவரை அண்ணன் மாவை சேனாதிராசா, சென்ற தடவை போன்று இம்முறையும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் கேட்டுக்கொண்டால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று சொல்லியிருக்கின்றார். அதேபோன்று சென்ற தடவை தான் விட்ட தவறை இந்தமுறை விடமாட்டேன் என்று அவர் சொல்லியிருப்பதன் அர்த்தம், இந்தமுறை தான் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றும் கட்சி கேட்டால் போட்டியிடுவேன் என்றும் சொல்லுகிறார்.

ஆனால் அவருடைய அந்தக் கருத்துத் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தவித தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகவே இரண்டு மாகாணங்களுக்குமான முதலமைச்சர் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான நடவடிக்கைகளை நாங்கள் இனி வரப்போகும் மாதங்களிலே முன்னெடுக்
கவுள்ளோம். இவை குறித்தெல்லாம் ஆராய்ந்து முடிவெடுத்து தெரியப்படுத்துவோம்.

கேள்வி- தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன?

பதில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக இனியும் விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. கூட்டமைப்பு அப்படி நிறுத்தாது என்றும் நான் தெரிவித்திருக்கின்றேன். அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூடத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்திருந்தது. அவர் கட்சியோடு முரண்பட்டு நிற்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே வெளிப்படையாகத் தெரிகிற ஒரு விடயம் இருக்கையில் அவருக்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பது தேவையற்றது. அவர் தற்போது தனிக் கட்சி தொடங்கவுள்ளார் எனப்  பேசி வருகின்றார். அப்படியான சூழ்நிலையில் அவரை வேட்பாளராக நியமிக்கின்றமையை மானம் மரியாதை உள்ள எந்தக் கட்சியும் சிந்திக்காது.

கேள்வி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்- கூட்டமைப்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும். கூட்டமைப்புக்கான ஆதரவு குறையப் போவதும் இல்லை. ஆனால் எவர் பிரிந்து சென்றால் வாக்குகள் பிரிவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. அவர் அது குறித்துச் சிந்திக்க வேண் டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து அவரைக் கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்கியமைக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதனை நாங்கள் செய்திருந்தோம். ஆனால் அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர் பார்க்க முடியாது.

அதேவேளை, தன்னை இதற்குள் அறிமுகப்படுத்திய கட்சியை – இதுநாள் வரை ஒற்றுமையாகச் செயற்படுகின்ற கட்சியை – அந்த ஒற்றுமையின் பலத்தினூடாக எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த கட்சியை  சிதைப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் சிதைப்பதற்குத் தயாரா என்று அவர் தன்னைத் தானே ஒரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்.

கேள்வி- ஒற்றுமை பற்றிப் பேசப்படும் நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியானதொரு கட்சியை ஆரம்பித்து தற்போது கூட்டமைப்பில் பங்காளிகளாக உள்ள கட்சிகளையும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகளையும் இணைத்து ஒருமித்து பயணிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?

பதில்- விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பதற்கப்பால் அவர் வேறு கட்சிகளையும் இணைத்து புதியதோர் கூட்டொன்றை அமைப்பாரா என்றெல்லாம் அவரே பதில் வழங்க வேண்டும். ஏனெனில் அவர் என்ன சிந்தனையில் இருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது. ஆகவே அவரிடம் தான் இது குறித்து கேட்கவேண்டும்.

கேள்வி- தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான அருந்தவபாலன், அனந்தி சசிதரன் ஆகியோர் தமிழரசுக் கட்சி அங்கம் வகிக்காத தமிழ் மக்கள் பேரவையிலும் முதலமைச்சருடனும் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில் அதனைக் கட்சி எவ்வாறு பார்க்கின்றது?

பதில்- ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை நாங்கள் பேண வேண்டும். அந்தக் கட்சிக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்காக யார் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்றபோது அவர்கள் எங்களுக்கு எதிரான தரப்புக்களுடன் ஓடிப்போய் சேர்ந்து செயற்படுவார் கள் என்று பயந்தால் எந்தக் கட்சியும் கட்சிக் கட்டுப்பாட்டைப் பேண முடியாது. ஆகையினாலே அப்படியாகப் போகின்றவர்கள் குறித்து நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவர்களே மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி – ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பில் தனக்குத் தெரியாது என்று சனாதிபதி கூறியிருக்கிறார். அந்த ஆட்சி மாற்றத்திலும்  நூறு நாள வேலைத்திட்டத்திலும் நீங்களும் பங்காற்றியிருக்கின்றீர்கள். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – சனாதிபதி அவ்வாறு சொன்ன பின்னர் என்ன நடந்தது என்று அனைவர்க்கும் தெரியும்.  அந்த வேலைத் திட்டம் தொடர்பில் அவரே புத்தகத்தைக் கையில் ஏந்தியவாறு கூறியிருந்தமையைத் தெற்கு ஊடகங்கள் பிரசுரித்தும் இருக்கின்றன. அந்த வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றபோது நானும் அவருடன் கூட இருந்திருக்கின்றேன். ஆகையினாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை ஏன் அப்படியில்லை என மறுக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு அவர் கூறுவதற்கு மறதியா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று அவர் தான் பதில் கூறவேண்டும்.

கேள்வி- அரசுக்கு எதிரான போராட்டங்களிலோ அல்லது நிர்வாகங்களை முடக்கும் செயற்பாடுகளிலோ இதுவரை நீங்கள் பெரியளவில் ஈடுபட்டதாக இல்லை. ஆயினும் தற்போது இந்தப் போராட்டங்களில் நீங்களே முன்னின்றும் செயற்பட்டு வருவதன் நோக்கம் வாக்குகளைப் பெறுவதற்காகவா? அத்துமீறிய மீனவர்களின் செயற்பாடுகளைத் தடுத்து அவர்களை வெளியேற்றாவிடின் நானே அந்த மீனவர்களின் கொட்டில்களைப் பிடுங்கி எறிவேன் என்றும் நீங்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தின்போது கூறியிருக்கின்றீர்கள். ஏன் இப்போது உங்களிடம் இந்த மாற்றம்?

பதில்- அவ்வாறு கொட்டில்களை நான் பிடுங்கி எறிவேன் எனக் கூறவில்லை. கொட்டில்களைப் பிடிங்கி எறியப் போகிறோம், வாருங்கள் என்று உள்ளூர் மீனவர்கள் கேட்டபோது, நானும் வருகிறேன் என்று கூறினேன். அத்தோடு சட்ட ரீதியாக நீதிமன்றம் அவற்றை அகற்றிய பின்னரும் வெளிமாவட்ட மீனவர்கள் அங்கிருந்தார்களேயானால், அவற்றை அகற்றுவோம் என்றும் கூறியிருந்தேன். சில நாள்களுக்கு முன்னர் நானே பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றேன். அதாவது தீர்வுத் திட் டங்களிலே முன்னேற்றம் இல்லாவிட்டால் அல்லது எமது மக்களின் நாளாந்த அடிப்படைப் பிரச்சினைகளிலே முன்னேற்றம் ஏற்படாவிட்டால் நிர்வாகத்தை முடக்கும் செயற்பாட்டில் இறங்குவோம் என்று நான் கூறியிருந்தேன். இதை நான் கூறுவதற்கு முன்னதாகவே சம்மந்தன் ஐயாவும் பான்கீ மூனிடம் இதையே கூறியிருந்தார்.

நாங்கள் இந்த மூன்று வருட காலம் அரசுக்கு ஒத்துழைப்பாகச் செயற்படுகின்றபோதும் எங்கள் இலக்கை மறந்துவிடவில்லை. 2014 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிர்வாக முடக்கல் போராட்டத்தைச் செய்வோம் என ஓர் தீர்மானத்தையும் கொண்டு வந்தோம். ஆனால் புதிய ஆட்சி மாற்ற மொன்று 2015 இல் கொண்டு வரப்பட்டது. ஆகையினாலே அவர்களுக்கு ஒரு அவகாசம் கொடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.

அதில் பலருடைய சிந்தனையின்படி நாங்கள் கூடுதலான அவகாசத்தையே கொடுத்திருக்கின்றோம். அதனால்தான் கூடுதலான விமர்சனங்களும் வந்தன. ஆயினும் அதனை நாங்கள் கவனமாகச் செய்தமைக்கும் காரணங்கள் இருக்கின்றன. அதாவது சர்வதேச சமூகத்திலே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. என்னவெனில் புதிய ஆட்சி மாற்றமடைந்த சூழலில் சேர்ந்தியங்க வேண்டிய நிலை இருந்தது.

நாங்கள் பொறுப்பில்லாமல் செயற்பட்டோம் அல்லது நாங்கள் அரசுக்கு ஆதரவு கொடுக்காத காரணத்தால் சிலவற்றைச் செய்ய முடியாமல் போய்விட்டது என்று எவரும் எம்மீது குற்றம் சொல்லாத வண்ணம் கடந்த மூன்று வருட காலத்தில் பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்திருக்கின்றோம். இனிமேலும் அப்படித்தான் இருக்கவேண்டு மென்று எவரும் எதிர்பார்க்கமுடியாது. நான் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண் டிருக்கிறவன். ஆகையினால் அவர்களினுடைய நாடித்துடிப்பை முற்றாக அறிந்தவன் என்ற வகையில்தான் சொல்லுகின்றேன். இனியும் நாங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டுமென சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய எதிர்ப்பை நாங்கள் வெளிக் காட்டவேண்டும். என்பது அவர்களுடைய சிந்தனையாகவும் இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் இத்தகைய நடவடிக்கை களில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறோம்.

இன்றைக்கு நாங்கள் செய்த நிர்வாக முடக்கல் என்பது ஓர் ஒத்திகை போன்றது. நாங்கள் வடக்கு- கிழக்கிலே முழுமையாகச் செய்யவுள்ள அரச அலுவலக நிர்வாக முடக்கலுக்கான ஒத்திகையாகவே இதனைச் செய்தோம். அப்படியானதொரு தேவை ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக அதனை நாங்கள் செய்வோம்.

கேள்வி- பிரதிச் சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்படுகின்றமையைக் கூட்டமைப் பின் தலைவரும் நீங்களுமே தடுத்தீர்கள் எனப் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டன. இதே குற்றச்சாட்டை அங்கஜனும் முன்வைத்து தமிழருக்கு அந்தப் பதவியை கிடைக்காமல் செய்தமைக்காக உங்களுக்கு நன்றியும் கூறியிருக்கின்றாரே?

பதில்- அதிகாரங்கள் பகிர்வு தொடர்பில் எங்களுடைய நிலைப்பாடு அதிகாரங்கள் மக்களின் கைகளிலே வரவேண்டும் என்பதே. அது தனிப்பட்டவர்களின் கைகளில் போவதால் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவதில்லை. அவ்வாறு தனிப்பட் டவர்களின் கைகளில் அதிகாரங்கள் வந்தால் பிரச்சினைகளைத் தீர்க்கலாமெனில் நாங்களே  இந்த அரசில் மூன்று, நான்கு அமைச்சுப் பதவிகளை எடுத்திருக்கலாம். எங்களை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு இன்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது எங்கள் மக்களுக்குத் தீர்வாக அமையாது. மக்களால் தெரிவு செய்யப்படும் எங்கள் பிரதிநிதிகளுக்கு மாகாண ரீதியில் அதிகாரங்கள் போய்ச் சேர வேண்டுமென்பதே  எங்கள் எதிர்பார்ப்பு ஆகும்.

அங்கஜன் இராமநாதன் நன்றி தெரிவித்து டுவிட்டரில் சொன்ன கருத்துக்கு வழங்கப்பட்டிருந்த பல பதில்களையும் நான் பார்த்திருக்கின்றேன். சக தமிழரைச் பிரதிச் சபாநாயகராக வருகின்றமையைத் தடுத்திருக்கிறார்கள் என்று அங்கஜன் கூறியமைக்கு, பலர் அவர் ஒரு சக தமிழரா நீங்கள் தமிழரா என்றும் கேள்வியயழுப்பியிருக்கின்றார்கள். மஹிந்த காலத்தில் ஜெனீவாவில் தமிழ் மக்கள் நீதி கேட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் பேரணியொன்றை நடத்தி மஹிந்தவின் ஆட்சியில் தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று
அங்கஜனும் அவரது தகப்பனாரும் கொடுத்த படங்களை  யெல்லாம் இப்போது ஞாபகப்படுத்தி போட்டிருக்கின்றார்கள். ஆகையினாலே அப்படியான ஒருவர் திடீரென்று தமிழருக்கு வரும் பதவியை நாங்கள் தடுத்து விட்டோமென்று கூறுவது மிகவும் வேடிக்கையான கூற்று.

கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள்ளேயே தற்போது உங்களுக்கு எதிரான செயற்பாடுகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் கூறப்படுகிறதே?

பதில்- எனக்கெதிராகச் சிலர் பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் முகத்துக்கு நேராக எவரும் எதுவும் சொல்வது கிடையாது. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளிலும் பின்னால் இருந்து முதுகில் குத்துபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். எங்களுடைய கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல.

கேள்வி- உங்கள் மீது ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களால்தானா அண்மைக் காலமாக ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நீங்கள் முன்வைத்து வருகின்றீர்களா?

பதில்- ஊடகங்கள் பொறுப்பாகச் செயற்பட வில்லை என்பது என்னுடைய கருத்து. அதையும் நான் ஒளிவு மறைவு இல்லாமல் ஊடகங்களுக்கே சொல்லுகிறேன். ஊடகங்கள் சரியாகப் பொறுப்பாகச் செயற்படத் தொடங்குகின்றபோது அதனையும் பாராட்டிச் சொல்வேன். (முற்றும்)



About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply