மாமனிதர் சிவராம் அவர்களின் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!

மாமனிதர் சிவராம் அவர்களின் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!

நக்கீரன்

மறைந்த மாமனிதர் தருமரத்தினம் சிவராம் அவர்களது 13 ஆவது நினைவு நாள் இன்றாகும். அவர் ஏப்ரில் 28, 2005 அன்று இனம் தெரியாதவர்களால் பம்பலப்பிட்டி காவல் நிலையத்துக்கு முன்னால் வைத்து இரவு 10.30 மணியளவில் வானில் கடத்தப்பட்டார். அடுத்த நாள் அவரது உடல சிறி ஜெயவர்த்தனபுர நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்து  பொலீசாரால் மீட்கப்பட்டது. அவரது உடலை குடும்ப உறுப்பினர்களும் அவரது நண்பர்களும் அடையாளம் காட்டினார்கள்.Crime scene behind Sri Lanka Parliament

சிவராம் அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆறுமுகம் சிறிஸ்கந்தராசா அல்லது பீட்டர் என்பவரும் இன்னொருவரும் யூன் மாதம் கைது செய்யப்பட்டனர். பீட்டர்,  புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தர்மலிங்கம் அவரது தனிச் செயலாளராக இருந்தவர். சிவராம் அவர்களைக் கடத்த பயன்படுத்திய சாம்பல் நிற ரோயற்ரா வான் சித்தார்த்தனுக்குச் சொந்தமானது. கைது செய்யப்பட்ட பீட்டர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை மூடி மறைத்தவர் முன்னாள் உதவி பொலீஸ்மா அதிபர் சரத் லுகொட என நம்பப்படுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் காரணம் சொல்லப்பட்டது. இது தொடர்பாக சண்டே லீடர் என்ற செய்தித்தாளில் கவ்சா சப்ரி என்பவர் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். (http://www.thesundayleader.lk/2016/10/10/a-new-twist-in-sivarams-murder-probe/)Image result for Sivaram murder case

இன்று அவரைப் பற்றிய பழைய நினைவலைகளை மீட்டெடுக்கும் போது கவலை அதிகரிக்கிறது. ஆறிய புண்ணை மீண்டும் தோண்டிப் பார்ப்பது போன்றிருக்கிறது.

மாமனிதர் சிவராமின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு அறிவாளியை தமிழினம் இழந்துவிட்டது. இருமொழிகளிலும் புலமை படைத்த ஒரு ஊடகவியலாளனை தமிழினம் இழந்துவிட்டது. சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டது. தமிழ் மண்ணையும் மக்களையும் காதலித்த ஒரு தமிழ்த் தேசியவாதியை இழந்துவிட்டது.

சிவராம் ஒரு சிறந்த எழுத்தாளர்.  தாராக்கி என்ற புனைபெயரில் படைத்துறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை நூற்றுக் கணக்கில் எழுதிக் குவித்தவர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒரு இமயம் போல் வலம் வந்தவர்.

சாவு நிச்சயமானது. அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால் அந்தச் சாவு இயற்கையாக இருக்க வேண்டும். மாமனிதர் சிவராம் இயற்கைச் சாவு எய்தவில்லை. இடையில் அவரது உயிரைக் கொலையாளிகள் பறித்து விட்டார்கள். சித்திரவதை செய்து கொன்றுவிட்டார்கள். அவரது கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

மாமனிதர் சிவராம் கொலை செய்யப்பட்ட போது அவருக்கு அகவை 46.  அவர் இன்னும் பல்லாண்டு இந்த உலகில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவரை அவரது எதிரிகள் இல்லை நண்பர்கள் படுகொலை செய்து விட்டார்கள். இதில் உள்ள சோகம் என்னவென்றால் அவரது முன்னாள் புளட் தோழர்கள்தான் அவரைக் கோழைத்தனமான முறையில் கொலை செய்தார்கள்.

நான் சிவராம் ஐலன்ட் (The Island) நாளேட்டில் எழுதத் தொடங்கின காலம்தொட்டு அவரது ஆக்கங்களைப் படித்து வந்தவன்.  தொடக்க காலத்தில் அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் வி.புலிகளைக் கண்டித்தே எழுதப்பட்டன.

சிவராம் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டுப் பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டாலும் சமவுடமை (சோசலீச) அரசியல் கோள்பாட்டில் இருந்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. ஆனால் தமிழினத்துக்கு எதிரான தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகள் கக்கிய பச்சை இனவாதம் அவரை மெல்ல மெல்ல ஒரு தமிழ்த் தேசியவாதியாக உருமாற்றியது. பிற்காலத்தில் தன் மண்ணின் விடுதலைக்கும் மக்களின் விடுதலைக்கும் தனது பேனாவைப் பயன்படுத்தினார்.Dharmaratnam Sivaram

அவரது ஆங்கிலக் கட்டுரைகள் கடுமையான நடையில் எழுதப்பட்டிருக்கும். ஒரு முன்னாள் போராளி எப்படி ஆங்கிலத்தில் இவ்வளவு சரளமாக எழுதுகிறார் என்ற கேள்வி எனக்குள் பல ஆண்டுகள் நீடித்தது. பொதுவாக தங்கள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பொது சாதாரண தேர்வுக்குப் படித்தவர்கள். கூடியது உயர்தர வகுப்பு வரை படித்தவர்கள். ஒரு சிலரே பல்கலைக் கழகப் படிப்பை இடையில் கைவிட்டு போராட்டத்தில் குதித்தவர்கள். அவர்களில் மாமனிதர் சிவராம் ஒருவர். அவர் பேரதெனியா பல்கலைக் கழகத்தில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த பொழுதே படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு போராட்டத்தில் குதித்துவிட்டார்.

சிவராமின் ஆங்கிலப் புலமைக்கான காரணத்தைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு படித்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பாட்டனார் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் (இன்றைய அம்பாரை மற்றும் மட்டக்களப்பு தெற்கு நிலப்பரப்பு) போட்டியிட்டு வென்று சட்டசபையில் 1938 தொடங்கி 1943 வரை உறுப்பினராக இருந்தவர்.  தருமரத்தினம் வன்னியார் என மக்களால்  அவர் அழைக்கப்பட்டார். அவரது தந்தையார் புவிராஜகீர்த்தி கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் பற்றிப் பலர் கேள்விப்படாத நாட்;களில் அதில் படித்தவர்.

சிறு வயது முதலே சிவராம் அவர்களுக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. அவர் என்னென்ன புத்தகம் வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ உடனே அதை வாங்கிப் படிக்க அவரது தாயார் பணம் கொடுத்துவிடுவார். மட்டக்களப்பு நூல் நிலையத்தில் உள்ள நூல்கள் அத்தனையையும் சிவராம் படித்து முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

காரல் மார்க்ஸ், லெனின், சேக்ஸ்பியர், பேனார்ட் ஷோ, மாக்கியவல்லி, கவுடில்யன், சன் சூ, உமார் கயாம், திருமூலர், திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் எழுதிய நூல்களைப் பள்ளியில் படிக்கும்போதே சிவராம் வாசித்து முடித்துவிட்டார். பதிணெண் சித்தர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. இந்த நூல்களைப் படித்ததினால் கிடைத்த அறிவே அவர் எழுதிய கட்டுரைகளில் காணப்பட்ட கனதிக்கும் புலமைக்கும் காரணமாக இருந்தது.

நான் சிவராம் அவர்களை 1999 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் நேரில் சந்தித்தேன். கால்டன் பல்கலைக் கழக மாணவர்களது அமைப்பான Academic Society of Tamil Students ஒரு அனைத்துலக மாநாட்டை ஒட்டாவாவில் கூட்டியிருந்தது. தமிழ்த் தேசியமும் அமைதிக்கான தேடலும் ((Tamil Nationhood and Search for Peace) என்பதே மாநாட்டின் தொனிப் பொருளாகும். அந்த மாநாட்டில் பல அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராசசிங்கம், மருத்துவர் ஜெயலத் ஜெயவர்த்தனா, எம். வசந்தராசா, வி.புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரன், வழக்கறிஞர் கரன் பார்க்கர், வழக்கறிஞர் குமார் பொன்னப்பலம், கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தின, பேராசிரியர் சி. மனோகரன், மார்க்கரட் வுசயறiஉம, தருமரத்தினம் சிவராம் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள். கலாநிதி வே. இலகுப்பிள்ளை மாநாட்டின் இணைப்பாளராகப் பணியாற்றினார்.

சிவராம் “ஸ்ரீலங்காவில் ஊடக ஓரபட்சமும் மோதல்பற்றிய செய்திகளின் தணிக்கையும்”(Media Bias and  Censorship in Conflict Reporting in Sri Lanka)  என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.

மாநாட்டு அரங்குக்கு வெளியே சிவராம் நன்றாக உடுத்திக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் இங்குள்ள ஒரு எழுத்தாளரின் பெயரைச் சொல்லி “அவன் அள்ளி வைச்சிடுவான,  கவனம்” என்றார். அவர் பேசும்போது பேச்சுத்தமிழிலேயே பேசுவார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை. நான் கேட்கவும் இல்லை. “என்னைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். கொழும்பில் இருக்கும் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அதன் பின் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் தொடர்பு வைத்துக் கொண்டேன். 2004 ஆம் ஆண்டு சிகாகோவில் இயங்கும் உலகத் தமிழ் அமைப்பு  ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு சிவராம் அவாகளை அழைத்திருந்தார்கள். டிசெம்பர் 11 ஆம் நாள் கருத்தரங்கு நடைபெற இருந்தது. எனவே அதற்கு முன்னரே புறப்பட்டு வந்து கனடாவில் 2 கிழமை தங்கி நின்றுவிட்டு நியூ யேர்சிக்குப் போங்கள் என்று அவரிடம் கேட்டேன். அவரது எண்ணமும் அதுவாகவே இருந்தது. முன்னரும் கனடாவில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்களைப் பார்க்கப் பலமுறை இங்கு வந்து சென்றிருக்கிறார். எனவே நம்பிக்கையோடு கனடிய தூதுவராலயத்துக்கு -விசாவுக்கு விண்ணப்பித்தார். அவரது நம்பிக்கைக்குக் காரணம் அதற்கு முன்னர் கனடா வந்து போவதற்கு விசா கொடுத்திருந்தார்கள். ஆனால் இம்முறை அவரை நேரில் கூப்பிட்டு விசாரிக்காமலே “Visa refused ” என்று முத்திரை குத்தி அனுப்பி விட்டார்கள்.

நியூ யேர்சியில் நடந்த கருத்தரங்கில் “தென்கிழக்கு ஆசியாவின் கடல்வழிப் பாதைகளும் அவற்றின் கேந்திர முக்கியத்துவம்” என்ற தலைப்பில் பேசினார்.

அன்றைய கருத்தரங்கில் சிவராமை விட இன்னும் இரண்டு அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகப் பொருளியல் பேராசிரியர் எம். நாகநாதன்.  அப்போது தமிழ்நாடு திட்டமிடல் ஆணையத்தில் துணை ஆணையாளராக இருந்தார். மற்றவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தேசிய செயலாளர் டி. இராசா அவர்கள்.

சிவராம் எந்த குறிப்பும் கையில் இல்லாது ஒரு மணி நேரம் பேசினார். ஒரு பேராசிரியர் வகுப்பு எடுப்பது போன்று அவரது பேச்சு இருந்தது. மிக ஆறுதலாகவே குரலை உயர்த்தி – தாழ்த்தாது பேசினார்.

தெற்காசியா கடல்ப் பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்பும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தின் நடுவில் உள்ள டிகோ கார்சிய தீவில் கேந்திர முக்கியம் வாய்ந்த படைத் தளத்தை அமைத்துள்ளது.

1991 மற்றும் 2003 இல் இராக்குக்கு எதிரான போரில் டிகோ கார்சியா தளம் முக்கிய பங்கு வகித்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி-2, பி-52 குண்டு வீச்சு விமானங்களே 100 க்கும் மேலான நீண்ட தூர ஏவுகளைகளை இராக் மீது வீசின. 2001 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் அதே டிகோ கார்சிய தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி-2, பி-52 விமானங்களைப் பயன்படுத்தி ஆப்கனிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது. பி-52 ரக விமானங்கள் 10,000 கல் தூரம் எண்ணெய் மீள் நிரப்பாது பறக்கக் கூடியன.

டிகோ கார்சியா இந்தோனிசியா – பிலிப்பைன்ஸ் இரண்டுக்கும் சமதூரத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து சற்றுக் குறைந்த தொலைவில் உள்ளது. டிகோ கார்சியா தென்னிந்தியாவில் இருந்து தெற்கே 1,000 கல் தொலைவில் இருக்கிறது. இவை காரணமாக அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தில் கண் வைத்திருப்பதாக சிவராம் விளக்கினார்.

கருத்தரங்கு முடிந்த பின்னர் அவரோடு நின்று படம் எடுக்க அங்கு வந்த எல்லோரும் முண்டியடித்தார்கள். உடனே சிவராம் “நான் செத்தபின் எனது படத்தைப் போடவா படம் எடுக்கிறீர்களா?” என்று பச்சையாகக் கேட்டார். பின்னர் புளரிடா தமிழ்ச் சங்கத்தில் பேசும் போதும் “உங்கள் மத்தியில் உரையாற்றுவது இதுவே கடைசித் தடவையாக இருக்கக் கூடும்” எனப் பேசியதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார்.

சிவராமின் உயிருக்கு நாலா பக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் இருந்தது. சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக்க விமுக்தி பெரமுன சிவராம் ஒரு பயங்கரவாதி என்றும் அவர் வி.புலிகளின் ஒற்றன் என்றும் தூற்றித் தமக்குச் சொந்தமான ஏடுகளில் சிவராமின் படத்தைப் போட்டு செய்திகள் வெளியிட்டன.

கனடாவிற்குத் திரும்பியதும் சிவராமைச் சந்தித்த செய்தியை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னேன். எனது மகன் கேட்டார் “அப்பா சிவராம் அண்ணனின் கைச்செலவுக்கு ஏதாவது கொடுத்தீர்களா?” என்று கேட்டான். “இல்லை” என்றேன். அடுத்த நாள் எனது நண்பர் ஒருவர் மூலம் அவருக்குப் பணம் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

பணம் கிடைத்ததும் சிவராம் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். “எனக்குப் பணம் தேவையில்லை. நான் மண்டையைப் போட்டால் எனது மனைவி பிள்ளைக்குக் கொடுங்கள். அது போதும்” என்றார்.

நாடு திரும்பிய பின்னர் வன்னியில் இருந்து என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “வன்னித் தலைமை பகுத்தறிவைப் பரப்ப தனித் துறையை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளது.  தனது கட்டுரைகளை நூலாக வெளியிட ஏற்பாடு செய்யப் போகிகிறார்கள்” என்று மகிழ்ச்சியோடு சொன்னார். மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.

கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலியில் கிழமைக்கு ஒருதரம் சமகால அரசியல் பற்றி பேசுமாறு சிவராமைக் கேட்ட போது எந்தத் தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்தார். முதல் ஆய்வுரை ஏப்ரில் 17, 2005 இல் ஒலிபரப்பானது. இரண்டாவது ஆய்வுரை ஏப்ரில் 24, 2005 இல் ஒலிபரப்பானது. இதுவே அவரது இறுதி வானொலிப் பேச்சாக இருந்தது.  காரணம் அவர் ஏப்ரில் 28, 2005 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.

மாமனிதர் சிவராம் உயிரோடு இருந்த போது ஒரு கனவு கண்டார். தமிழ்மக்கள் தன்மானத்தோடும் சமத்துவத்தோடும் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழக்கூடிய ஒரு சுதந்திர, சமத்துவ நாடு உருவாக வேண்டும் என்பதே அந்தக் கனவாகும். அந்தக் கனவை நனவாக்கத்  தனது பேனாவைப் பயன்படுத்தினார்.

பேச்சு வார்த்தை மேசையில் தமிழ்மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை சிஙகள-பவுத்த இனவாதிகளிடம் இருந்து பெறமுடியாது என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. “பொதுக்கட்டமைப்பாவது மண்ணாங்கட்டியாவது சிங்களவர்கள் ஒன்றுமே தமிழர்களுக்குத் தரமாட்டார்கள்” என்று எழுதினார்.

மாமனிதர் சிவராம் அவர்களது நினைவுக்கு நாம் நிரந்தரமாகச் செய்யக் கூடிய பணி ஒன்று இருக்கிறது. அவர் விட்டுப்போன பணியினை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கான சூளுரையை அவரது நினைவு நாளான இன்ற நால் எல்லோரும் எடுக்க வேண்டும்.



Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2018/76874/


 

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply