கூட்டமைப்பு செய்த உதவி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து அகற்றுதல், ஐக்கிய தேசியக் கட்சியை நலிவுபடுத்துதல் என்ற திட்டங்களோடு ஆரம்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடைசியில் புஸ்வாணமாகிவிட்டது.
அது மாத்திரமல்ல, அது இலக்குத் தவறிக் கடைசியாக ஒருபுறம் மற்றொரு தேசியக் கட்சியான சுதந்திரக் கட்சியை நலிவடைய வைத்தமையோடு, மறுபுறத்தில், தமது கட்சிக்குள்ளும் பொது
அரசியலிலும் ரணிலின் வலுவை மேலும் ஸ்திரமாக்கிவிட்டது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சமயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சிக்குள் – ஐ.தே.கவுக்குள் – அவருக்கு எதிராகக் கிளம்பிய முணுமுணுப்புகள், சலசலப்புகள்
கூட, அந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றுமுன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டதும் கப்சிப்பென அடங்கிப் போயின. இரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கட்சிக்குள் அதிகம்
பேசிய பாலித ரங்கபண்டார, விஜேதாஸ ராஜபக்சா போன்றோர் கூடக் கடைசியில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய
வர்களானார்கள். அவரது கட்சிக்குள் ஒரு ஈ, காக்கை கூட இரணிலுக்கு எதிராக – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக – வாக்களிக்கத் துணியவில்லை.
அவ்வளவு தூரத்துக்கு இந்தப் பிரேரணையும், அதை ஒட்டி ஐ.தே.கவுக்கு எதிராக நடத்தப்பட்ட சேறு பூசலும் இரணிலுக்குக் கட்சி மீதான பலமான பிடியைத் தந்திருக்கின்றன.
இனிமேல், அவர் தன் விருப்பப்படி கட்சியை மறுசீரமைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் கட்சியினர் யாரேனும் அவரைச் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றும் –
நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்த அவரின் அரசியல் வெற்றி, அவரை வலுவாக ஸ்திரப்படுத்தி, உறுதிப்படுத்தி உள்ளது என்றும் – ஐ.தே.கட்சியின் உள்வட்டாரங்கள் கூறுகின்றன.
மறுபுறத்தில், நல்லாட்சி அரசின் மற்றொரு பங்காளிக் கட்சி யான சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வைத்து நடத்திய அரசியல் போர் அதற்கே வினையாக
வந்து முடிந்துவிட்டது.
ஏற்கனவே அக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் – உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக – சிறுத்துப் போயிருந்தது. பொதுத் தேர்தலில் 96 உறுப்பினர்களை நாடாளு
மன்றத்தில் அக்கட்சி பெற்றதாயினும், பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்r தரப்பிலான அணியினர் பிரிந்து கூட்டு எதிரணிப் பக்கம் செல்ல, 44 எம்.பிக்களே சு.க. பக்கம் எஞ்சினர். அதுவும் நல்லாட்சி அரசின் கீழ் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எனப் பதவி பெற்றவர்கள் போக எஞ்சிய அனைத்து எம்.பிக்களும் கூட்டு எதிரணிப் பக்கம் போய்விட்டனர்.
இப்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற பெயரில் கூட்டு எதிரணி யினர் முன்னெடுத்த காய் நகர்த்தலில் சு.கவின் எஞ்சிய எம்.பிக்கள் எண்ணிக்கையும் மேலும் கரைந்து சிறு தொகையாகும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்து, அதனைக் கட்டளையாக நடைமுறைப்படுத்தச் செய்வதில் சு.க. தலைமை தவறு இழைக்க, எஞ்சி இருந்த எம்.பிக்களும் இரண்டு அணிகளாகப் பிரிந்துவிட்டனர்.
ஆக, எஞ்சியிருந்த 44 எம்.பிக்களில் சிரேஷ்ட தலைவர்கள் பலர் உட்பட சுமார் அரைவாசிப் பேர் நல்லாட்சி அரசில் இருந்து வெளியேறவும், கூட்டு எதிரணியினர் பக்கம் போய் அமரவும்
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்கப் போகின்றார், இதிலிருந்து கட்சியை எப்படி மீட்டெடுக்
கப் போகின்றார், அல்லது கூட்டு எதிரணியின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுக்குள் கட்சி முழுதாகக் கரைந்து போகப் பார்த்திருக்கப் போகின்றாரா என்பவற்றை எல்லாம், இனிப் பொறுத்
திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது, எப்படியயன்றாலும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலுப்படுத்தி, உறுதிப்படுத்தி, வெற்றிகொள்ள வைத்ததில், அவரோடு
இறுதிவரை தமிழ்க் கூட்டமைப்பு உறுதியாக நிற்கும் என்ற செய்தியே முக்கிய பங்கு வகித்தது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியே இரணிலை அகற்றுவதற்கு ஐ.தே.கட்சிக்குள் திட்டம் போட்ட தரப்புகள்கூட, தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவை
வைத்து அந்தப் பிரேரணை முயற்சியைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்படியும் தோற்கடித்து விடுவார் என்ற கருத்தினாலேயே ரணிலுக்கு எதிராகக் கெம்பாமல் அடங்கியிருந்தனர்.
இந்த அரசியல் நெருக்கடிச் சமயத்தில் அத்தகைய உறுதிப்பாட்டைத் தந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அதன் தலைமைக்கும், அக்கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்டுத்தும்
தமிழ் மக்களுக்கும் பிரதமர் ரணிலும், அவரது கட்சி பங்கெடுக்கும் இந்த அரசுத் தரப்பினரும் நியாயமாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றார்கள் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய
விடயங்களே.
தமது கூட்டமைப்புக்குள்ளும், வெளியில் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு, அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியிலேயே இந்தப் பிளவுபடாத – ஐக்கியமான – ஒன்றுபட்ட – தமிழர் ஆதரவை
கூட்டமைப்பின் தலைமை தனக்குப் பெற்றுத்தந்து நின்றமை யைப் பிரதமர் ரணில் மறக்காமல் இருந்தால் சரி. (காலைக்கதிர் – ஆசிரிய தலையங்கம் 06-04-2018)
Leave a Reply
You must be logged in to post a comment.