இது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு – நக்கீரன்!
மேலே இருக்கும் தலைப்பு இன்று (26 மார்ச், 2018) வெளியான உதயன் (யாழ்ப்பாணம்) ஆசிரிய தலையங்கத்தின் தலைப்பாகும்.
இந்த ஆசிரிய தலையங்கத்தில் வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஏனைய கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போன்றவற்றின் ஆதரவோடு ததேகூ யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை, வலவெட்டித்துறை நகர சபை ஆட்சியை ததேகூ கைப்பற்றியுள்ளது. இது எதோ பஞ்சமாபாதகம் என்ற பொருள்பட உதயன் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளார்.
வடக்கில் ததேகூ சாவகச்சேரி, பருத்தித்துறை, நெடுந்தீவு நீங்கலாக ஏனைய சபைகளில் ததேகூ அதிக எண்ணிக்கையுள்ள இருக்கைகளைப் பெற்றுள்ளது.
தேர்தல் முடிந்த கையோடு தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டொரு சபைகள் நீங்கலாக மற்றைய சபைகளில் தொங்கு நிலை காணப்படுகிறது.
எனவே எந்தெந்த சபைகளில் எந்தெந்த கட்சி அதிக எண்ணிக்கையுள்ள இடங்களைப் பெற்றிருக்கிறதோ அந்தச் சபைகளில் அந்தக் கட்சி ஆட்சியமைக்க ததேகூ ஆதரவு வழங்கும் என அறிவித்தார். எடுத்துக் காட்டாக சாவகச்சேரி, பருத்தித்துறை இரண்டிலும் ததேமமு அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது எனவே அந்தக் கட்சி ஆட்சியமைக்க ததேகூ ஆதரவு தரும் என்பது பொருளாகும்.
ஆனால் 26 மார்ச் மாதம் நடந்த யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்தலில் 16 இருக்கைகளில் வெற்றிபெற்ற ததேகூ வேட்பாளர் ஆர்னோல்ட் அவர்களுக்கு எதிராக 13 இருக்கைகளில் மட்டும் வெற்றிபெற்ற மணிவண்ணனை ததேமமு மேயர் தேர்தலில் களம் இறக்கியது. இதே போல் 10 இடங்களில் வெற்றி பெற்ற இபிடிபி றெமீடியசை மேயர் தெரிவிக்கு போட்டி போட வைத்தது. முதல் சுற்று இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். மணிவண்ணன் 13 வாக்குகளையும் றெமீடியஸ் 13 வாக்குகளையும் பெற்றனர். எனவே திவுளச்சீட்டிப் போட்டுப் பார்த்ததில் றெமீடியஸ் பெயர் தெரிவு செய்யப்பட்டது. மணிவண்ணன் நீக்கப்பட்டார். இந்த நேரத்தில் றெமீடியஸ் தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இமானுவேல் ஆர்னோல்ட் மேயர் தெரிவில் வெற்றி பெற்றதாக ஆணையாளர் அறிவித்தார்.
வாக்கெடுப்பு இரகசியமாக இருக்க வேண்டும் என ததேமமு இன் தலைவர் தொடக்க முதலே கேட்டுவந்ததார். காரணம் தெரிந்ததுதான். இரகசிய வாக்கெடுப்பு நடந்தால் ததேகூ இல் இருக்கும் சிலர் தனது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என கஜேந்திரகுமார் சொன்னார். இது அவரது நப்பாசை என்பது பின்னர் எண்பிக்கப்பட்டது.
இதையடுத்துத்தான் ததேகூ சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை இரண்டிலும் தனது வேட்பாளரை நிறுத்தி ஏனைய கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ததேகூ ஆட்சியைக் கைப்பற்றியது. வல்வெட்டித்துறை நகர சபையில் முதல் இடத்துக்கு வந்த ததேகூ (7/17) ஏனைய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியது.
(1) நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் ததேகூ பெரும்பான்மையான சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை வென்றது. எனினும் அது ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையாக இருக்கவில்லை. ஒரு சில சபைகளில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தப் பெரும்பான்மையையும் அது இழந்திருந்தது. கூட்டமைப்பைத் தவிர்த்துப் பார்த்தால் மற்றைய எல்லாக் கட்சிகள், சுயேச்சைகளையும் சேர்த்துப் பார்த்தால் அவற்றின் வசம் அதிக ஆசனங்கள் இருந்தன. கடந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வென்றிருந்ததும் இதற்கொரு முக்கிய காரணம்.
பதில்: கடந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வென்றிருந்தது என்பது சரியே. அது போல ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணியும் கணிசமான இடங்களில் வென்றிருக்கின்றன. ததேமமு 102 இடங்களிலும், இபிடிபி 99 இடங்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி 78 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எனவே ததேகூ க்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததற்கு தமதேமு மட்டுமல்ல. ஏனைய இபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டும் காரணமாகும்.
(2) இத்தகையதொரு பின்னணியிலேயே உள்ளுராட்சிச் சபைகளில் ஆட்சியமைக்கும் பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின. வடக்கில் முதலாவதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் போட்டியே நடைபெற்றது. தொடர்ந்து சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்பவற்றின் ஆட்சிகளும் தீர்மானிக்கப்பட்டன.
இன்றைய நிலவரப்படி இந்த அனைத்துச் சபைகளிலும் ஆட்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியிருக்கின்றது. நெடுந்தீவு தவிர்ந்த ஏனை சபைகளிலும் இந்த நிலமை தொடர்வதற்கே வாய்ப்புகளும் அதிகமுண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டிய தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சி ஆதரவாளர்கள், வெட்கித் தலைகுனியும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டிய தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சி ஆதரவாளர்கள், வெட்கித் தலைகுனியும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் உதயன் ஆசிரியர். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? ஆட்சி உரிமையை மற்றைய கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு ததேகூ இன் தலைவர்கள் வீட்டில் படுத்துக் கிடக்க வேண்டும் என்று உதயன் ஆசிரியர் எதிர்பார்க்கிறாரா? அதுதான் அவரது விருப்பா? ததேகூ என்ன ஆண்டிகளின் மடமா? ததேமமு பிடிவாதம் காரணமாக, தன்முனைப்புக் காரணமாக, அரசியல் சாணக்கியம் இல்லாத காரணமாக சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டையும் ததேகூ இடம் பறிகொடுத்தார்கள். அதற்க ததேகூ நோவது ஏன்?
(3) அதற்குக் காரணம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டுச் சேர்ந்திருக்கும் தரப்புக்கள். இதுவரை காலமும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சியும் அதன் வழியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயணித்தனவோ அதிலிருந்து முற்றிலுமாக விலகிச் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது.
எந்தச் சக்திகளுக்கு எதிராக, எந்த இனவாதக் கட்சிகளுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு 5000 இளைஞர்கள் வாருங்கள் தமீழீழத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றுகூறி தனிநாட்டுக் கொள்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தளபதி அ.அமிர்தலிங்கத்துக்குச் சிலை திறந்து சில வாரங்களுக்குள் அந்த இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றது கூட்டமைப்பு.
பதில்: உதயன் ஆசிரியரது இந்தக் கூற்று அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பு. வரலாறு பற்றிய தனது ஞானசூனியத்தை உதயன் ஆசிரியர் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். “இனவாதக் கட்சிகளுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு 5000 இளைஞர்கள் வாருங்கள் தமீழீழத்தைப் பெற்றுத் தருகின்றேன்” என்று அமிர்தலிங்கம் கூறினார் என்பது கட்டுக்கதை. வரலாற்றுத் திரிபு. இப்படி அமிர்தலிங்கம் சொன்னார் என்பதற்கான சான்று காட்ட முடியுமா? எங்கே? எப்போது? இப்படி அவர் கூறினார்? மேலும் அமிர்தலிங்கம் அவர்களே 1989 இல் நடந்த தேர்தலில் ரெலோ, புளட், இபிஎல்ஆர்எவ் கட்சிகளோடு சேர்ந்துதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். தேர்தலில் தோற்றாலும் தேசியப்பட்டியல் மூலம் அவர் நாடாளுமன்றம் சென்றார். இந்த வரலாறு உதயன் ஆசிரியருக்குத் தெரியாமல் இருப்பது குற்றமல்ல. அதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது கேவலாமானது. சிரிப்புக்கு உரியது.
(4)அதுபோன்றே இறுதிப் போர் வரையிலும் இராணுவத்தினருடன் அவர்களின் உளவாளிகளாகவும், அரசியல் ஏவலாளிகளாகவும் செயற்பட்டு வந்த தமிழ்க் கட்சிகளுடனும் தன்னுடைய கட்சி அரசியல் நலனுக்காகச் சேர்ந்து போகத் தயாராகி இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
பதில்: இந்த வாதம் முட்டாள்த்தனமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளட் இரண்டுமே முன்னாள் ஆயுதக் குழுக்கள்தான். அதில் புளட் கடைசி (2009 மே 18) வரை சிங்கள இராணுவம் பக்கம் நின்று கொண்டு வி.புலிகளுக்கு எதிராகப் போராடியது. ரெலோ இந்திய இராணுவத்தோடு சேர்ந்து பொதுமக்களைக் கொன்ற இயக்கம். சக போராளிகளைக் கொன்ற இயக்கம். தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களான அமரர் வி. தர்மலிங்கம், மு. ஆலாலசுந்தரம் இருவரையும் ஒரே நாளில் போட்டுத்தள்ளிய இயக்கம். போரில் புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு இருக்கிறது என பகிரங்கமாகச் சொன்னவர் சித்தார்த்தன். புளட் அமைப்பை ததேகூ அமைப்பில் சேர்த்துக் கொண்டிருந்த போது உதயன் ஆசிரியர் நித்திரை செய்து கொண்டிருந்தாரா?
பழையவற்றை எல்லாம் மறந்து தமிழ்மக்களது ஒற்றமை கருதித்தான் புளட் கட்சியை ததேகூ சேர்த்துக் கொண்டது. அரசியல் என்பது ஒரு கலை. முடியும் என்பது கலை. சில இடங்களில் இனத்தின் மொத்த நன்மை கருதி சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்குப் பெயர் இராசதந்திரம். வி.புலிகள் தங்களது பரம எதிரியான சனாதிபதி பிரேமதாசாவிடம் 1989 இல் ஆயுதங்களை வாங்கவில்லையா?
(5) கூட்டமைப்பின் இந்தப் போக்கும் பயணமும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதே உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்தவிடம் தோல்வியடைந்தவுடனே புதிய அரசமைப்பு முயற்சிகளைக் கைவிட்டு தமிழர்களை ஏமாளிகளாக்க முயலும் தெற்கின் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணி வைத்துக்கொண்டுவிட்டு, ஜெனிவாவிலும் அமெரிக்காவிலும் போய் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுங்கள் என்று கோருவது அரசியல் ஏமாற்று அன்றி வேறென்ன?
பதில்: இப்படிக் கேட்கிறார் உதயன் ஆசிரியர். ததேகூ நல்லாட்சி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவை நல்குகின்றதேயொழிய நிபந்தனையற்ற ஆதரவை அது வழங்கவில்லை. இணக்க அரசியல் நடத்துகிறதே ஒழிய இபிடிபி போல் சரணாகதி அரசியல் நடத்தவில்லை.
நல்லாட்சி அரசோடு ஒத்துப் போகாமல் அதனை எதிர்த்தால் அது மகிந்த இராசபக்சாவுக்கு அனுகூலமாக அமையும். 2015 சனாதிபதி தேர்தலில் இரண்டு எதிரிகளிள் போட்டி போட்டபோது (மகிந்தா இராசபக்சா மறுபுறம் சிறிசேனா) சிறிசேனாவுக்கு வாக்களிக்குமாறு ததேகூ கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க மக்கள் சிறிசேனாவுக்கு வாக்களித்து அவரது வெற்றிக்கு வழிகோலினர். இது ஒரு அரசியல் இராசதந்திரம். மகிந்தா இராசபக்சா மீண்டும் சனாதிபதியாக வந்திருந்தால் வெள்ளைவான் கடத்தல், கிறீஸ்பூதம், இராணுவ புலனாய்வுப் பிரிவின் கெடுபிடி, காணி சுவீகரிப்பு தொடர்ந்திருக்கும். இந்த யதார்த்தம் ஏன் உதயன் ஆசிரியருக்கு விளங்குதில்லை?
நடந்து முடிந்த தேர்தலில் வடக்கில் தேசியக் கட்சிகளான ஐதேக க்கு 68,035 வாக்குகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 52,596 வாக்குகளையும், சுதந்திரக் கட்சியை ஆதரிக்கிற இபிடிபி கட்சிக்கு 69,266 வாக்குகளையும் தமிழ்மக்கள் அளித்திருக்கிறார்கள். இவ்வளவு பெருந்தொகையில் தமிழ் மக்கள் தேசியக் கட்சிகளுக்கும் அவற்றுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் இபிடிபிக்கும் ஏன் வாக்களித்தார்கள்? ததேகூ யை பிடிக்காவிட்டால் ததேமமு க்கு அல்லவா தமிழ்மக்கள் வாக்களித்திருக்க வேண்டும்? ஏன் வாக்களிக்கவில்லை? உதயன் ஆசிரியரின் பதில் என்ன?
(6) “தமிழ் மக்களின் நலன் கருதி ஒரு அரசியல் கொள்கையில் ஒற்றுமைப்பட்டு வரமுடியாத இந்தக் கட்சிகள் அனைத்தும், கட்சி அரசியல் எனும் சுயநலத்திற்காக ஒன்று சேர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் கூறும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!” என்கிற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகையை மிகக் கீழ் நிலை அரசியலைத்தான் நிகழ்த்திக்காட்டியிருக்கிறது, தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கப்போகின்றோம் என்கிற கோசத்துடன்” என்கிறார் உதயன் ஆசிரியர்.
பதில்: இப்படி உப்புப்புளி இல்லாத ஒரு தலையங்கத்தை எழுதியுள்ள உதயன் ஆசிரிய தலையங்கத்தை படித்த போது எனக்கும் திரைப்படத்தில் வடிவேலு ““வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா” என அடிக்கடி கூறும் பகிடிதான் நினைவுக்கு வருகிறது.
இனிமேலாவது வரலாற்றைப் படித்துவிட்டு, அரசியலைப் படித்து விட்டு உதயன் ஆசிரியர் தலையங்கம் எழுதப் பழக வேண்டும்.
http://newuthayan.com/story/79206.html
ஏற்க முடியாத கொள்கை கூட்டமைப்பினுடையது!! – உதயன் ஆசிரியர்; இது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு
Leave a Reply
You must be logged in to post a comment.