பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை– நீதிபதி இளஞ்செழியன்!!
பொன்முடியார் என்னும் பெண்பாற்புலவர் (மறம்-வீரம்) மறக்குடிப் பெண்ணின் கூற்றில் வைத்துப் பாடிய ஒரு பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்கைத் கொண்டுள்ளது. .
◊ மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.
◊ அவனைச் சான்றோனாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும்.
◊ வேல் வடித்துக்கொடுத்தல் கொல்லனின் கடமை.
◊ நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்.
◊ விளங்கும் வாளைக் கையிலேந்தி களிற்றுயானைகளை அழித்து பகைவரை வெல்லுதல் அந்த ஆண்மகனின் கடமையாகும். என்பது பாடலின் பொருளாகும். இதனை,
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
ஆனால் இன்று சமூகம் மாறியிருக்கிறது. சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன் என்பது இன்றும் மாறவில்லை. ஆனால் சான்றோன் என்பதன் பொருள் மாறியிருக்கிறது. சங்ககாலத்தில் சான்றோன் என்பவன் வீரன் என்ற பொருள் இருந்தது. இற்றைக்காலத்தில் சான்றோன் என்பவன் அறிவாளி, படித்தவன், திறமைசாலி எனப் பொருள் மாறியிருக்கிறது.
சங்ககாலத்தில் கொல்லனின் பணியை இன்றைய கல்வியாளர்கள் செய்கிறார்கள். வீரனின் கையில் உள்ள கருவி அவன் போரில் வெற்றிபெற உதவும். இன்றைய கல்வியாளர்கள் தரும் அறிவு என்னும் கருவி மனிதன் வாழ்க்கையில் வெற்றிபெற உதவும்.
◊ சங்ககாலத்தில் நல்லொழுக்கம் சொல்லித்தந்தவன் வேந்தன். இன்று நல்லொழுக்கம் சொல்லித்தரவேண்டியது ஆசிரியர்கள், அரசு, நீதிமன்றம், காவல்நிலையம் போன்றவை.
ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் நீதி நூல்கள் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. பள்ளிக் கூடங்களில் இந்த நூல்கள் கற்பித்துக் கொடுக்க வேண்டும். ஔவையார் எழுதிய ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது, வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அறத்துப் பால் போன்ற நூல்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாத கல்வி, செல்வம், வீரம் பயனற்றவை.
பிள்ளைகளை கட்டுப்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை – நீதிபதி இளஞ்செழியன்
Leave a Reply
You must be logged in to post a comment.