தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்!

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்!
நக்கீரன்

 காவேரி! நினைத்தாலே இனிப்பவள்!

 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றிடு புலவோர் பொய்யிலா நாவிலே தவழ்ந்தவள்!

 முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள்!

 அந்நாள் தமிழகத்தின் வனப்புக்கும்  வளத்துக்கும் செழிப்புக்கும் செழுமைக்கும் பாரியே என மாரி பொய்க்காது வாரி வழங்கியவள்!

”ஞாயிறு போற்றுதும்!; ஞாயிறு போற்றுதும்;!
காவிரி நாடன் திகிரிபோல், பொன்கோட்டு
மேரு வலந்திரித லான்”

 என எந்நாளும் அழியா சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ போற்றிப் பாடியவள்!

 ”மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
 மணிப் பூ ஆடை-அது போர்த்துக்
 கருங்கயல் கண் விழித்து, ஒல்கி,
 நடந்தாய்,  வாழி காவேரி!
………………………………………………………………
பூவார் சோலை மயில் ஆடப்
 புரிந்து குயில்கள் இசைபாடக்,
 காமர் மாலை அருகு அசைய,
 நடந்தாய்! வாழி, காவேரி!”

 இதுவும் இளங்கோவின் சொல் வண்ணத்தில் பிறந்த பாவண்ணம்தான்!

 உன்னையும் உன் புகழையும் எந்தப் புலவன்தான் பாட மறந்தான்?

 ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா
 மலைத் தலைய கடற்காவிரி”

 பட்டினப் பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் உன்னை மெச்சிப் பாடிய வரிககள் இவை. இந்தப் பாடலுக்கு சோழன் கரிகாற் பெருவளத்தான் புலவருக்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசு கொடுத்து மகிழ்ந்தானாம்!

 ‘பூவிரி அகன்துறைக் கணைவிசைக்
 கடுநீர்க்காவிரி பேரியாற்று”

 என அகநானூறு பெருமிதத்தோடு உன்னைப் போற்றுகிறது!

 புத்தமத காப்பியமான மணிமேகலை இயற்றிய சாத்தனார் கூட உன் புகழ்பாட மறக்கவில்லை! நற்றமிழ் ஞான சம்பந்தர் உன்னை மறக்கவில்லை! சேக்கிளாரும் அப்படித்தான்!

 பாரதிதான் உன்னை விட்டு வைத்தானா?

 ‘காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-யென
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு”

 என்று பாமாலை பாடி உனக்குக் கவிமாலை சூட்டினான்!

தமிழ்நாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, கலை, வாழ்வு, நாகரிகம் இவற்றோடு  பிணைந்த பெருமை காவேரிக்கு மட்டுமே உண்டு. ஆரிய நாகரிகத்துக்கு ஒரு கங்கை என்றால் தமிழர் நாகரிகத்துக்கு காவேரி சான்றாக விளங்குகிறது.

 உலகத்தில் முதல் கல்லணை காவேரிக்குத்தான் கட்டப்பட்டது. சோழ மன்னன் கரிகாலன் ஈழப் படையெடுப்பின்பொழுது சிறை பிடித்துக் கொண்டுவந்த 12,000 சிங்களக் கைதிகளைப் பயன்படுத்தி கல்லணையைக் கட்டினான்.

1080 அடி நீளமும் 60 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட இந்த அணை பெருங் கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கல்லணை இன்றும் ஆடாது அசையாது பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.

 காவிரிப் படுக்கையில் விளைந்த பொருட்கள் பூம்புகார் பட்டினத்தின் வழியாக மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின. இதனை,

 ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
 காலின் வந்த கருங்கறி மூடையும்
 வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
 குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
 தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
 கங்கை வாரியும் காவிரிப் பயனும்
 ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”

 பட்டினப்பாலை படம்பிடித்துக் காட்டுகிறது.  

 ‘வான் பொய்க்கினும் தான் பொய்யா காவேரி’ இன்று பொய்த்து விட்டது. காவேரி ஆற்றுப் படுக்கை தண்ணீர் இல்லாது பாளம் பாளமாக வெடித்துக்  காட்சி அளிக்கிறது.  இலட்சக் கணக்கான ஏக்கர் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது. காவேரித் தண்ணீரை நம்பி வாழ்க்கை நடத்தும் தஞ்சை விவசாயிகள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அடுப்பினில் பூனை உறங்க  அவர்கள் வயிற்றில் கொடிய பசித் தீ கொளுந்து விட்டு எரிகிறது!Image result for Cauvery river

தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கன்னடம் தர மறுக்கிறது.  உச்ச நீதிமன்ற உத்தரவையும், காவேரி ஆணையத்தின் கட்டளையையும் கன்னடம் துச்சமாக மதிக்கிறது.  அவற்றை அச்சம் இன்றி மிதிக்கிறது.

கன்னடம் காவேரித் தண்ணீர் தமிழ்நாட்டுக்குப் பாய்வதைத்  தடுப்பது இது முதல் தடவையல்ல. இந்த அவலம் இந்தியாவை வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் இருந்து தொடர்கதையாக வருகிறது. கடந்த எழுபத்தி ஏழு ஆண்டுகளாக தீர்வின்றி காவேரிப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் காவிரி நீரைத் தமிழகம் வராமல் தடுக்கும் முயற்சியில் கன்னடத்தை ஆண்ட முதலாம் நரசிம்மன் (கிபி 1141-1175) ஈடுபட்டான்.  காவிரியின் போக்கை  செயற்கை மலைகளை ஏற்படுத்தி தடுத்தான். ”வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவேரி” பொய்த்தது.

சோழநாட்டில் இப்போது போலவே அப்போதும்  வரட்சி ஏற்பட்டது. அப்போது சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் இராசராசன் போசள (கன்னடம்) நாட்டின் மீது படையெடுத்துச் சென்று நரசிம்மனைத் தோற்கடித்து செயற்கை மலையை தகர்த்து காவேரித் தண்ணீர் மீண்டும் சோழ நாட்டுக்குப் பாய வழிதிறந்தான்!

இன்று மன்னர்களும் இல்லை.  அவர்கள் அணிந்த முடியும் இல்லை. கொடியும் இல்லை. படை நடத்த தடந்தோள் கொண்ட  தளபதிகளும் இல்லை.  காவேரி படுக்கைபோல் தமிழ்நாட்டுத் தமிழர் வீரமும் உணர்வும் வரண்டுபோய்க் கிடக்கிறது!

காவேரிச் சிக்கலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கோயில் நவக்கிரகங்கள் போல் மூலைக்கு மூலை ஒருவரை யொருவர் பாராது கிடக்கின்றன.
கன்னட மாநில அரசின் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை செய்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவோ ”எல்லாம் நானே” என்ற திமிரோடு அறிக்கைப் போர் தொடுக்கிறார். எதிர்க்கட்சிகளை திட்டித் தீர்த்துவிட்டு கூடிப் பேசலாம் என்று அழைப்பு விடுத்தார். அதனை எதிர்க்கட்சியான திமுக நிராகரித்தது.Image result for Cauvery river

கன்னட அரசியல்வாதிகள் மட்டுமல்ல அங்குள்ள திரையுலகக்  கலைஞர்கள்  சந்தன வீரப்பனால் விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் தலைமையில் கூடி காவேரி நீரைத் தமிழதத்துக்கு திறந்துவிடக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள்.

தமிழர்களது உடமை தீக்கிரையாக்கப்படுகிறது. தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு போக்குவரத்துப் பேரூந்துகள் சேதமாக்கப்படுகின்றன.
1991ஆம் ஆண்டு இதே காவேரிப் பிரச்சினை காரணமாக கன்னட வெறியர்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஒரு இலட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தார்கள்.

இப்போதும் அங்கு வாழும் 40 இலட்சம் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் அவல நிலை எழுந்துள்ளது.

பங்க;ரில் திரையுலக நடிகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நடித்துப் பிழைக்க வந்த கன்னட நடிகர்   ரமேஷ் அரவிந்த் (பஞ்சதந்திரம்) சென்னையில் இருந்து பங்க;ர் சென்று கலந்து கொண்டிருக்கிறார். அந்தளவு தூரம் மொழிப்பற்றும் இனப்பற்றும் கன்னடர்களுக்கு இருக்கிறது!

 ஆனால் தமிழ்நாட்டு நடிக நடிகர்கள் வாய் மூடி மவுனியாகக் கிடக்கிறார்கள். முன்னணி நடிகர் விஜயகாந்த் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் காவேரி சிக்கல் சம்பந்தமாக இதுவரை மூச்சே விடவில்லை!

தமிழ்த் திரைப்பட நடிகர் நடிகைகளில் சரி பாதிக்கு மேல் தமிழர் அல்லாதார்கள் இருப்பது இதற்கு ஒரு காரணம்.

ரமேஷ் அரவிந்த், முரளி, பிரபுதேவா, ரஜினி, அர்ச்சுன, பிரகாஷ்ராவ் இவர்கள் எல்லோரும் கன்னடக்காரர்கள்.  

இப்போது  தூங்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு திரைப்படப் படைப்பாளிகளை தட்டி எழுப்பும் பணியில் இயக்குனர் திலகம் பாரதிராசா ஈடுபட்டிருக்கிறார்!

‘காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே” என்ற முழக்கத்தோடு தமிழ்த் திரை உலகம் தமிழர் நல பாதுகாப்புக் கழகம் என்ற  அமைப்பின்  கீழ் அணி திரண்டு களத்தில் இறங்கியுள்ளது. 

எதிர் வரும் 12ம் நாள் நெய்வேலி அனல் மின் நியைத்தை முற்றுகையிட தமிழர்நல பாதுகாப்புக் கழகம்  வியூகம் வகுத்துள்ளது.  

காவிரி நீர் சிக்கலுக்கு முடிவு வரும் வரை தேசிய விருதுகளை தமிழ்க் கலைஞர்கள் புறக்கணிக்க வேண்டும், தமிழ்ப் படங்களுக்கு தமிழ் அல்லாத ஆங்கிலம் மற்றும் வேற்று மொழியில் பெயர் வைப்பது இனி அறவே தவிர்க்கப்பட வேண்டும்,

 தமிழ்த் திரையுலகின் எந்த சங்கங்களும் தமிழ் அல்லாத திரைப்படப் பெயர்களை பதிவு செய்யக் கூடாது, மீறி  படங்கள்  உருவாக்கப்பட்டால் தமிழ்நாடு திரைப்பட வினியோகத்தர்கள் அந்தப் படங்களை திரையிடக் கூடாது போன்ற அதிரடித் தீர்மானங்களை தமிழ் நல பாதுகாப்புக் கழகம் நிறைவேற்றியுள்ளது.

காவேரிபோல் தமிழ் உணர்வும் தமிழ் இனவுணர்வும் வற்றிப்போன தமிழகத்தில் அவற்றைத்  தட்டியெழுப்ப புதிய இரத்தம், புதிய முறுக்கு, புதி;ய செருக்கு,  புதிய தலைமை தேவைப்படுகிறது!

போராடிக் களைத்துவிட்ட கலைஞர் கருணாநிதியை தமிழ் மக்கள் இனிமேல் நம்பிப் பயன் இல்லை. அவரிடம் பெரியாரின் தன்மானமும் அண்ணாவின் இனமானமும் இருந்திருந்தால் தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரி ஜெயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்க முடியாது!  

தமிழ்நாட்டைத் தமிழ் ஆய்ந்த தமிழன்தான் ஆள வேண்டும். வந்தவர்கள்  போனவர்கள் ஆளக் கூடது. அப்போதுதான் காவேரி நீர் மட்டுமல்ல தமிழ் உணர்வும் தமிழ் மானமும் தமிழ் நாட்டில்  பாய்ந்தோடும்.

இயக்குனர் திலகம் பாரதிராசா மூட்டிவிட்ட தமிழ்த் தேசியத் தீ எங்கும் பரவட்டும். அதில் தமிழ்ப் பகை வெந்து மடியட்டும்! ஒரு தமிழனுக்குத்தானும்  தீங்கென்றால் அங்கெல்லாம் நாங்கள் இருப்போம்.  இது பிரபாகரன் காலம். (முழக்கம்-ஒக்தோபர் 04,2002)



ரொரன்ரோ
கனடா
திருவள்ளுவராண்டு 2032 புரட்டாதி 18
(ஒக்தோபர் 04,2002)
செய்தி அறிக்கை

”காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே”

”காவேரி கன்னடர்களுக்கு என்றால்  நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே” என்ற முழக்கத்தோடு தமிழ்த் திரை உலகம் தமிழர் நல  பாதுகாப்புக்  கழகம் என்ற  அமைப்பின் கீழ் அணி திரண்டு களத்தில்  இறங்கியுள்ளது.  இயக்குனர்  திலகம்   பாரதிராசா எடுத்த  முயற்சியினாலேயே இந்தக் கழகம் உருவாகியுள்ளது.

காவிரி நீர் சிக்கல் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் கடந்த 72 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்தச் சிக்கல் இப்போது தமிழக கர்நாடக  மாநிலங்களுக்கு  இடையே மோதலாக வெடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி  ஆணையத்தின் கட்டளையையும்  நடைமுறைப் படுத்த முடியாதென கர்நாடக அரசு சண்டித்தனம் செய்வதே இந்த மோதலுக்குக் காரணமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி ஆணையத்தின் கட்டளையையும் கர்நாடக அரசு துச்சமாகமதித்து அதனை நடைமுறைப் படுத்த மறுப்பது கர்நாடகம்   இந்தியாவின்  25 மாநிலங்களில் ஒன்றா அல்லது அது தனிநாடா  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடகஅரசு அங்கு காட்டப்படும் எதிர்ப்பை அடுத்து அந்த முடிவை மாற்றியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். காவிரி ஆணையத்தினை கேலி செய்வதாகும்.  ஒரே இந்தியா, எல்லோரும் இந்திய மக்கள்  என்ற கோட்பாட்டுக்கு ஆணி அறைவதாகும்.

காவிரி நீரைத் தமிழகத்துக்கு திறந்துவிடக் கூடாது என்பதில் கர்நாடக திரைப்பட உலகத்தினர் முனைப்பாக உள்ளனர். சந்தனக் கடத்தல் வீரப்பனால் விடுவிக்கப்பட்ட நடிகர் ராஜ்குமார்  எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்துகிறார்!   

எதிர்வரும் ஒக்தோபர் 12ஆம் நாள் நெய்வேலியில்   தமிழர் பாதுகாப்புக் கழகம் இயக்குனர் திலகம் பாராதிராசாவின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தஉள்ளது.  

இந்தப்  போராட்டத்துக்கு  பா.ம.க.   நிறுவனர் டாக்டர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. தலைவர் எல்.கணேசன் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களது  தமிழுணர்வையும்  இனவணர்வையும்  பாராட்டி வரவேற்கிறோம். அவை மேலும் வளர வேண்டும்.  

அதே சமயம்  இந்திய தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா, இந்திய காங்கிரஸ், ஐக்கிய  ஜனதா தளம், வலது  இடது கம்யூனிஸ்டு கட்சிகள் காவிரிச் சிக்கலில்  விடம்  உண்ட நீலகண்டனைப் போல விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் திண்டாடுகின்றன.  

காவிரிபோல் தமிழுணர்வும் தமிழ்த் தேசிய  உணர்வும்  வற்றிப்போனதன் காரணமாகவே  தமிழ்த்திரைப்படங்களுக்கு  ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் அளவுக்கு நிலமை சீர்குலைந்துள்ளது.   தமிழுணர்வையும் தமிழ்த் தேசியத்தையும் கட்டி  எழுப்பினால் காவிரிச் சிக்கலுக்கு  மட்டுமல்ல தமிழ்மொழிக் கல்வி,  தமிழில்  திருக்கோயில்  வழிபாடு  போன்றவற்றிற்கு காஞ்சி சங்கராச்சியார் போன்ற தமிழ்ப் பகைவர்கள் காட்டும் எதிர்ப்புக்கும்  முடிவு கட்டலாம். 

இயக்குனர் திலகம்  பாரதிராசா  தலைமையில் தமிழர் நல பாதுகாப்புக் கழகம் நடத்தும் இந்த உரிமைப் போராட்டத்துக்கு  கனேடிய  தமிழர்களின் சார்பில்  எங்கள் முழு ஆதரவையும் நல்வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.
-30-
தொடர்பு – (416) 281 1165, (416) 447 6314, (416) 261 9099, தொ.நகல் (416) 281 1165
– Email: athangav@sympatico.ca



தமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல்!

நக்கீரன்

அன்று சீதை தனது ‘கற்பை’ எண்பிக்க தீக்குளிக்குமாறு இராமன் கேட்டுக் கொண்டான்.  இன்று தங்கள் தமிழ் உணர்வை நிரூபிக்க நெய்வேலியில் குவியுமாறு  நடிக, நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளை இயக்குனர் திலகம் பாரதிராசா கேட்கிறார்.

”காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே” என்று முதன் முதலில் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதிராசாதான். கடந்த மாதம் 26ம் நாள் அவரது முதல் அறிக்கை வெளிவந்தது.

காவேரி நீர் சிக்கலை அரசியலாக்கி நடிகர் ராஜ்குமார் தலைமையில் கன்னட திரையுலகம் போராட்டத்தில் குதித்ததே தமிழ்த் திரையுலகத்தினரையும் போராட்டம்பற்றி சிந்திக்க வைத்தது.

கன்னட திரையுலகம் ஒரே தலைமையின் கீழ் ஒரே குடையின் கீழ் ஒன்று திரண்டார்கள். ஆனால் அந்த ஒற்றுமை தமிழ்த் திரையுலகத்தில் காணாமல் போய்விட்டது.  அதற்குக் காரணம் நடிகர் ரஜினிகாந்த்தான்!

போராட்டம்பற்றி செய்திகள் வெளிவந்த நாள்முதல் ரஜினிகாந்த் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார்.

”என் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் ஒரு பவுண் தங்கக்காசு கொடுத்தது தமிழ்மண் அல்லவா?” என்று பாடிய ரஜனிகாந்த் தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லை. கணக்கில் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறாரேயொழிய தண்ணீருக்காகத் தவிக்கிற தமிழக  விவசாயிகளைப்பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  

”காவேரியில் இருந்து தண்ணீர் விடுமாறு போராட்டத்தில் கலந்து  கொள்வேன். ஆனால் இரத்தம் கேட்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன். போராட்டம்பற்றிய முடிவை நடிகர் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ” என்று ஒக்தோபர் 3ம் நாள்   ரஜினிகாந்த் அறிக்கை விட்டார்.

பின்னர்  ”திரைப்பட நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கும் அதன் தலைவர் விஜயகாந்திற்கும் கட்டுப்படுவேன்” என்று அறிவித்தார்.  ஆனால் அடுத்த நாள் ”ஓய்வுக்காக ரிஷிகேஷ் போகிறேன்” தில்லியில் காவேரி சிக்கல்பற்றி பிரதமர் வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி  இருவரையும் சந்தித்து காவேரி-கங்கை இணைப்பைப்பற்றிப் பேசப் போவதாகச் சொன்னார். தனது மனைவி சகிதம் தில்லிக்கு ஒக்தோபர் 6ஆம் நாள்  விமானத்தில்  பறந்து போனார்.

ரஜினிகாந்த் பெரிய நடிகராக இருக்கலாம். அதனால் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் இருவரையும்  காணநினைத்தால் அவர்களது அலுவலக வாசற்கதவுகள் எப்போதும் அவருக்கு  அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று ரஜனிகாந்த் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதுதான் நடந்தது. பிரதமரையோ அல்லது துணைப் பிரதமரையோ ரஜனிகாந்த்தால் பார்க்க முடியவில்லை!

உடனே ரஜனிகாந்த் ரிஷிகேஷ் போவதாகத் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். ஒக்தோபர் 14ஆம் நாள் திரும்பி வருவதாகச் சொன்னார். ரிஷிகேஷில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜனி காந்தின் ஆன்மீகக் குரு பாபா இருக்கிறார். குரவைப்  பார்ப்பதில் ரஜனிக்கு சிக்கல் எதுவும் இல்லை என்பது தெரிந்ததே.

பன்னிரண்டாம்   நாள்  நடைபெற இருக்கும் நெய்வேலிப் போராட்டத்தைத் தவிர்த்துக் கொள்ளவே ரஜினிகாந்த் ரிஷிகேசுக்கு ஓடிப்போய்விட்டார் என்று பார்த்தால் இரண்டு நாள்  கழித்து போன  வேகத்தில்  சென்னை வந்து சேர்ந்தார். பத்திரிகையாளர்களைத்  தனது வீட்டுக்கு அவசர அவசரமாக அழைத்த ரஜினிகாந்த் வீரா வேசமாகவும் வாய்க்கு வந்தபடியும் பேசினார். அதனை ஒரு நாளேடு ”சிலித்தெழுந்தார், சீறிப்பாய்ந்தார், கர்ஜித்தார், அறிவித்தார்” என்று வர்ணித்து இருந்தது.
முதலில் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார்.  நெய்வேலிப்  போராட்டத்தை அடியோடு நிராகரித்தார். கன்னடத்தில் இருக்கின்ற தமிழர்கள் ”என்னோட போனில் பேசி அழறாங்க” என்றார். ”சிலருக்கு என்மீது பொறாமை… சிலருக்கு பயம்…..அவர்களை அடுத்த தேர்தலில் சந்திப்பேன்.” என்று பொரிந்து தள்ளினார்.
ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறார் என்ற பயமுறுத்தல் நீண்ட காலமாக செய்தித்தாள்களில்  வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்போது அவர் வாயாலேயே  ” என் எதிரிகளை அடுத்த தேர்தலில சந்திப்பேன்” என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

உண்மை என்னவென்றால் தொடக்கம் முதல் ரஜினிகாந்த் தானாக முன்வந்து முனைப்பாக காவேரி நீர்ச் சிக்கல்பற்றி ஒன்றையும் செய்யவில்லை.

குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றத் உத்தரைவையும் காவிரி நடுவர் மன்ற கட்டளையையும் கர்நாடக அரசு மதித்து தமிழ்நாட்டுக்கு 9 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் அறிக்கை விட்டிருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

”நான் முதலில் இந்தியன் அப்புறந்தான் தமிழன்” என்று மார்தட்டுகிற ரஜினிகாந்த், ”முதலில் நான் கன்னடன் அப்புறந்தான் இந்தியன்” என்று இந்திய தேசிய ஒற்றுமைக்கே வேட்டு வைக்கிற கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷ்ணாவை ஏன் தட்டிக் கேட்கவில்லை?

”நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் செய்தால் உடனே காவேரி தண்ணீரைத் திறந்து விட்டுவிடுவாங்களா?” என்று ரஜினிகாந்த் பாமரத்தன்மையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்குப் பதில் இறுத்த ”நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் ”சென்னையில் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விட்டுவிடுமா?”” என்று பதில் கேள்வி கேட்டார்.

கன்னடத்தில் வாழும் 40 இலட்சம் தமிழர்கள் ”என்னோட போனில் பேசி அழறாங்க” என்று கூறும் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான  கன்னடர்கள்  பத்திரமாக இருப்பார்கள் என்று யார் அவருக்குச் சொன்னது?

யார் செய்த நோன்போ  காவேரிச் சிக்கல் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களை ஒரு அணியிலும், வெறுப்பவர்களை எதிர் அணியிலும், இரண்டும் கெட்டான்களை மதில்மேலும் உட்கார வைத்து விட்டது.

பாரதிராசா- விஜயகாந்த்  தலைமையில் நெய்வேலியில் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவாக பின்வரும் கட்சிகள் கை நீட்டியுள்ளார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி
மதிமுக
இந்திய கம்யூனிஸ்ட்  மார்க்சிஸ்ட் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள்
திராவிடர் கழகம்
பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்ச் சான்றோர் பேரவை
முன்னாள் ராஜிவ் காந்தி காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி

இதில் ”சின்னப்பெரியார்” டாக்டர் இராமதாஸ் காவேரிச் சிக்கலில் தொடக்கம் தொட்டு மிகத்  தெளிவாகவம் நிதானத்தோடும் இருக்கிறார்.

”தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழ் உணர்வு மங்கிப்போய் விட்டதோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியிருக்கிறது. தமிழ் உணர்வும் தமிழ்நாட்டின் நலனில் அக்கறையும் கொண்டு திரைப்படத்துறையினர் இயக்குனர் பாரதிராசா தலைமையில் ஒன்று திரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அவர்களைப் பாராட்டுவதுடன் அந்த முடிவுகளை செயல்படுத்துவதில் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.  

”காவிரிப் பிரச்சினையில் தமிழ்த்திரை உலகத்தினர் பிளவுபட்டு நிற்கிறார்கள் என்ற தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. கர்நாடகத்துக்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தோற்றதம் உருவாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள்.
”காவேரிப் பிரச்சினை தமிழர்களின் பொதுப்  பிரச்சினை. தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் இதில் ஒரே வழியை நாடவேண்டும். இதில்  யாரும்அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தனி வழியை நாடக்கூடாது” என டாக்டர் இராமதாஸ் கூறியிருக்கிறார். ”தனி வழியை நாடக்கூடாது” என்பது ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனமாகும்.  

ரஜினிகாந்த் தலைமையில் சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகள்,

இந்திய தேசிய காங்கிரஸ்
பாரதிய ஜனதா கட்சி
ஜனநாயகப் பேரவை (ப.சிதம்பரம்)
புதிய தமிழகம்

இதில் முதல் மூன்று கட்சிகளும் இந்திய தேசியத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் கட்சிகள். இவற்றில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் கர்நாடகத்திலும் உண்டு. எனவே அவர்களால் விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாத வில்லங்கமான நிலைப்பாட்டுக்கு  தள்ளப்பட்டுள்ளன.  டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் நெய்வேலிப் போராட்டத்தை அதிமுக ஆதரவு நடிகர்கள் நடத்துகிறார்கள் என்று தவறாகப் புரிந்துள்ளது.

இதில் பரிதாபத்துக்குரிய கட்சி திமுக. அதன் ஆயுட்காலத் தலைவர் கலைஞர் கருணாநிதி மதில்மேல் பூனையாக இருக்கிறார். அவரது கட்சி இதை எழுதும்போது (புதன்கிழமை)  நெய்வேலி ஆர்ப்பாட்டத்தில் சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர், இராஜேந்திரர் கலந்து கொள்வதற்கு பாதுகாப்பைக் காரணம் காட்டி தடை விதித்துள்ளது.

கலைஞர் கருணாநிதியில் உள்ள பெரிய  குறைபாடு அவரை எல்லோரும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும். குறைந்த பட்சம் தோளில் ஆவது தூக்கி வைத்திருக்க வேண்டும்.   இல்லாவிட்டால் அவாகளுக்குக் குழிபறித்து அதற்குள் போட்டு மூடிவிடுவார்!

காவேரி நீர் சிக்கலில் கலைஞர் கருணாநிதி  தன்னைக்  கைது  செய்யப்பட்டபோது  காட்டிய தீவிரத்தில் நூற்றில் ஒரு விழுக்காடுகூடக் காட்டவில்லை. தன்னைக் கைது  செய்த போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று மத்திய அரசுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுத்தார். உடன்பிறப்புக்களை சென்னைக்கு அழைத்து மாபெரும் பேரணி நடத்தினார். அதில் கலந்து கொண்ட  5 திமுக தொண்டர்கள் போலிஸ் சூட்டுக்குப் பலியானார்கள்.

பாரதிராசா என்ன காரணத்தாலோ கலைஞரைப் பார்க்கவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சென்று பார்த்தார். நெய்வேலி போவதற்கு போலிஸ் பாதுகாப்புக் கேட்டார். ஜெயலலிதாவோ போலிஸ் பாதுகாப்பு மட்டுமல்ல நடிகர் சங்கத்துக்கு ஏற்படுகிற போக்குவரத்து, உணவுமற்றும் தங்குமிடச் செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லிவிட்டார்.

அது போதாதா கலைஞருக்கு? பாரதிராசா தன்னை அவமதித்து விட்டார் என்று கொதித்தார்.  அவர்  அதிமுக அனுதாபி என்று  முடிவு கட்டினார். அதற்கு ஏற்றாப்போல் தொலைக்காட்சியில் பேசிய பாரதிராசா நெய்வேலியில் எங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பது ரகசியமாக வைத்திருக்கிறோம் என்று சொன்னார். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கலைஞர்  நெய்வேலி ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடியலாம் என்று கூறி அதில் கலந்து கொள்ள இருந்த திமுக நடிகர்களுக்குத் தடை போட்டார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு  கொள்கை ரீதியாக முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரே அரசியல் கட்சித் தலைவர்  இந்திய உபகண்டத்தில் கலைஞர் கருணாநிதியாகத்தான் இருக்க வேண்டும்.

பக்தர்கள் ”அன்பே சிவம், சிவமே அன்பு” என்று சொல்லுவார்கள்.  அதேபோல ”கருணாநிதிதான் திமுக, திமுகதான் கருணாநிதி” என்று எளிதில் சொல்லிவிடலாம்.  திமுகவில் உட்கட்சி சனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை. அங்கே இருப்பது குடும்ப அரசியல்.  மேயர் பதவியென்றால் அது தனது மகனுக்கு. அமைச்சர் பதவி என்றால் அது தனது மருமகனுக்கு. எஞ்சியவைதான் மற்றவர்களுக்கு. ”அமைச்சர் அல்லது நாடாளுமன்ற சட்டசபைப் பதவிகள் நான் பார்த்துப் போட்ட பிச்சை ” என்று குத்திக்காட்டுவதில் அவர் கெட்டிக்காரர். அவரது  கடைசி ஆசை. தான் கண்ணை மூடுமுன் தனது மகன் மு.க. ஸ்டாலினுக்கு முடிசூட்டி விட வேண்டும் என்பதுதான்.

கலைஞர் கருணாநிதி மதில்மேல் பூனையாக  உட்கார்ந்துவிட  முடிவு செய்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அவரது குடும்பத்துக் சொந்தமான சன்ரிவி கன்னட ஒளிபரப்பு ”உதயா” முதலீட்டுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயம்.  

கன்னட வெறியர்கள் ஏற்கனவே தமிழ்த் திரைப்படங்கள், செய்தித்தாள்கள், ஒலி, ஒளிப் பேழைகள் போன்றவற்றுக்கு அங்கு தடை விதித்துள்ளார்கள். தமிழர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளார்கள். தமிழ் வணிக நிறுவனங்கள் தாக்கிச் சேதப்படுத்தப்படுகின்றன. 1991 மீண்டும் அரங்கேறலாம்.  

மேல் அதிகமாக இன்னொரு காரணம் இருக்கிறது. கலைஞர் கருணாநிதி ரஜினிகாந்த்தைப் பகைக்கவிரும்பவில்லை. அடுத்த  தேர்தலில்  ரஜினிகாந்தின்  திருப்பார்வை திமுக  பக்கம் இருக்க வேண்டும் என்பது அவரது பிரார்த்தனை.   

மொத்தத்தில் காவேரிச் சிக்கல் தமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்குகிறது!  


 


About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply