சனாதிபதி சந்திரிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறதா? எதிர்வரும் 21ம் நாள் சிறை மீட்பா?

சனாதிபதி சந்திரிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறதா? எதிர்வரும் 21ம் நாள் சிறை மீட்பா?

சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் நாட்கள் எண்ணப்படுகிறதா? அலரிமாளிகையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் சந்திரிகா எதிர்வரும் 21ம் நாள் சிறை மீட்கப்படுவரா?

இந்தக் கேள்விகளுக்கான சரியான விடைகள் கிடைக்க இன்னும் எண்ணி ஐந்து நாட்கள் பொறுத்து இருக்க வேண்டும. இருப்பினும் நாட்டின் அரசியல், பொருளாதார நாடிகளைப் பிடித்துப் பார்த்து முடிவை இப்போதே ஓரவு சொல்லி விடலாம்.

இன்னும் தனது பதவிக்காலம் முடிய மேலும் 12 மாதங்கள் இருந்தாலும் அவசர அவசரமாக அவர் முற்கூட்டியே தேர்தலை வைத்ததற்கு ஒரு காரணம், பிந்தித் தேர்தலை வைப்பதைவிட இப்போதே தேர்தலை வைத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற கணிப்பேயாகும்.

ஆனால் மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைப்பதுபோல சந்திரிகா ஒன்றை நினைக்க வி.புலிகள் வேறொன்றை நினைத்து விட்டார்கள்.

வன்னியில் சிங்கள இராணுவம் ஈட்டிய கணிசமான வெற்றியை முதலாக வைத்து சனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடுவதே சந்திரிகாவின் நோக்கமாக இருந்தது.
அதுமட்டும் அல்லாமல் மேலும் வன்னியில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு மேலும் சிவ இடங்களைக் கைப்பற்றுவதே சந்திரிகாவின் திட்டமாக இருந்தது.

ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட “திருப்புமுனை 1″ ‘திருப்புமுனை 11” மேற்கூறிய நோக்கத்தையும் திட்டத்தையும் நிறைவேற்ற எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் என்பது தெளிவு.

ஆனால் வி.புலிகளின் “ஓயாத அலைகள் 3” சந்திரிகாவின் கனவுகளைக் கலைத்து அவரது தேர்தல் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

இந்தத் தேர்தலில் 11.2 மில்லியன் (ஒரு கோடி 12 இலட்சம்) வாக்காளர்கள் வாக்குப்போட உரித்துடையவர்களாவர். இதில் சிங்களவர்கள் எண்ணிக்கை 74 விழுக்காடு. இலங்கைத் தமிழர்கள் 12.8 விழுக்காடு. மலையகத் தமிழர்கள் 5.5 விழுக்காடு. முஸ்லிம்கள் 7.1 விழுக்காடு.

சென்றமுறை சந்தரிகா 62.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். பெரும்பான்மைத் தமிழர்கள் அவருக்கே வாக்களித்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில (260,000 வாக்காளர்கள்- இதில் தமிழ் மக்கள் 75 விழுக்காடு) 87. 30 விழுக்காடு வாக்குகள் அவருக்கு விழுந்தது.

சென்ற தேர்தல் போல் இம்முறை பெரும்பான்மைத் தமிழர்களது வாக்குகள் அவருக்கு கிடைக்கப் போவதில்லை. சென்றமுறை அவரை ஆதரித்த த. விடுதலைக் கூடடணி இம் முறை தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. அதேபோல் தொண்டமானின் மறைவை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மலையக வாக்கு வங்கி வற்றியுள்ளது. மக்கள் மலையக முன்னணி தனது ஆதரவை இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு தெரிவித்துள்ளது.

சிங்கள வாக்குகள் இம்முறை சரிபாதியாகப் பிரிந்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது சிங்கள மக்களது வாக்குகள் சந்திரிகா – ரணில் இருவருக்கும் தனித்தனி 37 விழுக்காடு வாக்குகள் விழும் சாத்தியம் இருக்கிறது. முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்கு தேள்வைப்படும் வாக்கு விழுக்காடு 51 ஆகும். இது சந்திரிகாவிற்கோ – ரணிலுக்கோ கிடைக்கப் போவதில்லை.

எனவே சந்தரிகா – ரணில் இருவரது வெற்றி தோல்வி இரண்டாவது சுற்றில் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களது வாக்குகளிலேயே தங்கி இருக்கிறது.

தெற்கிலும், மலைநாட்டிலும், கிழக்கிலும் இருந்து வரும் செய்திகள் தமிழ்-முஸ்லிம் வாக்குகள் ரணிலுக்கு ஆதரவாகத் திரும்பி இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை சந்தரிகாவிற்கே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக சந்திரிகாவிற்குத்தான் தங்கள் வாக்குகளைப் போடுவார்கள் என்று கொள்ள முடியாது. அம்பாரை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் ஓரளவு விதிவிலக்காக இருக்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்கிற முஸ்லிம் மக்கள் சனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் சந்திரிகாவிற்குப் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்தத் தேர்தலில் யாருக்கும் ‘அலை’ வீசுவதாக இல்லை. தமிழ் -முஸ்லிம் மக்களது ஆதரவை “அலை” என வர்ணிப்பது தவறு. சென்ற முறை சந்திரிகா அலை வீசியது. அது போல இம்முறை ரணில் விக்கிரமசிங்கா ஆதரவு அலை இல்லை.

ஒரு காலத்தில் வட-கிழக்கில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் தென் இலங்கை மக்களை அதிகம் பாதிக்காமல் இருந்தது.

வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது சிங்களவர்கள் கொழும்பில் கிறிக்கட் ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போது நிலமை முற்றிலும் வேறு. இனப் பிரச்சினையை வைத்தே தேர்தல் யுத்தம் சந்திரிகா – ரணில் விக்கிரமசிங்கா இருவருக்கும் இடையில் இடம்பெறுகிறது.

எனவே பத்திரிகைச் செய்திகள், அரசியல் ஆய்வாளர்களின் கணிப்புகள் இவற்றை வைத்துப் பார்த்தால் பின்வரும் தேர்தல் கள நிலமை தெரிகிறது.
1) சிங்களவர்களது வாக்குகள் சந்திரிகா – ரணில் இருவருக்கும் இடையில் சரிபாதியாகப் பிரிந்துள்ளது.

2) தமிழர் (பெருமளவு) -முஸ்லிம் (ஓரளவு) மக்களது வாக்குகள் ரணில் பக்கம் சாய்ந்துள்ளது.

3) பங்குச்சந்தை வட்டாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எதிர்பார்க்கிறது. இதன் அறிகுறியாக பங்குச் சந்தையில் பங்குகளி;ன் விலை ஏறியுள்ளது. சாதாரணமாக தேர்தலின் போது பங்குகளின் விலை இறங்குமுகமாக இருக்கும். இந்த விலை ஏற்றம் அதற்கு நேர் மாறுதலாக இருக்கிறது.

4) வி.புலிகள் சந்திரிகா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று வருவதை விரும்பவில்லை.

தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சந்திரிகாவிற்கு விழும் கள்ள வாக்குகளே தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகிறது. யாழ்ப்பாணத்தில் தேர்தல் எப்படியும் நடக்கும். பெயருக்கு அங்கொன்று இங்கொன்றாக வாக்குச் சாவடிகள் வைத்தாலே போதுமானது. ஏற்கனவே 250,000 வாக்காளர்கள் இருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு 640,000 வாக்குச் சீட்டுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சந்திரிகா தனக்கு பெரும்பான்மை தமிழ் வாக்காளர்களது வாக்குகள் விழப்போவதில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதனை ஈடுசெய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியான தீவிர பௌத்த-சிங்கள வாக்காளர்களைக் கவரும் வண்ணம் தனது தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளார்.

1) நாட்டின் இறைமை, பிரதேசக் கட்டுமானம் (sovereignty and territorial integrity) இவற்றை விட்டுக் கொடுக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.

2) வன்னியில் அரச படைகள் அடைந்த தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் படையில் ஒரு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட சதியே காரணம்.

3) வட-கிழக்கை ரணில் விக்கிரமசிங்கா பிரபாகரனுக்கு விற்றுவிடப் போகிறார். இதற்கான ஒப்பந்தம் வி.புலிகளுக்கும் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உருவாக்கப் பட்டுள்ளது.

இவைதான் தேர்தல் மேடைகளில் சந்திரிகா நடாத்திவரும் முக்கிய தேர்தல் பரப்புரையாகும்.

இந்தத் தேர்தலை ஒட்டி ரணில் விக்கிரமசிங்கா ஒருவரே My Pact with the People என்று மகிடமிட்ட தேர்தல் அறி;க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சந்திரிகா அப்படியானதொரு தேர்தல் அறிக்கையை இம்முறை வாக்காளர் முன் வைக்கவில்லை. ஆனால் அதற்குப் பதில்  My Pledge to People  என்ற பெயரில் ஒரு மினி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதனை ஊன்றிப் படித்துப் பாத்தால் சனாதிபதி சந்திரிகா இனவாதத்தைக் கட்டிப் பிடிப்பதில் வேறு யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதும் அவரது சுயரூபம் எத்தகையது என்பதும் தெரியவரும்.

Even if we were to temporarily ignore this reality, let us look at the situation with regard to the war in the North and the ethnic conflict at the time I received your mandate in 1994. At that time:

        1. The LTTE’s power and writ reigned in 80% of the Northern Province including Jaffna.

        2. While one-third of the area in the Eastern Province came under the control of the LTTE, government administration in other parts of the East was either weak or dysfunctional.

        3. Many foreign countries had views and positions that were against the Government of Sri Lanka, and favourable to the LTTE.

        4. The sense of honour and trust of the country’s armed forces had almost been destroyed, due to the then government supplying arms and financial assistance to the LTTE.

        5. The ordinary Tamil people in these areas were in a state of despair and despondency with all hopes shattered, due to the activities of the armed cadres of the LTTE and the military operations of the security services.

இந்த யதார்த்தத்தை தற்காலிகமாக தள்ளிவிட்டாலும் நான் 1994ல் உங்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டபோது வட-கிழக்கில் நடைபெற்ற யுத்தம், இனப்பிரச்சினை இவற்றை நாங்கள் பார்ப்போமேயானால் அந்த நேரத்தில்.

1) வி. புலிகளின் அதிகாரம், ஆணை, யாழ்ப்பாணம் உட்பட, வடமாகாணத்தில் 80 விழுக்காடு பிரதேசத்தில் வியாபித்திருந்தது.

2) கிழக்கு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி வி.புலிகளது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் ஏனைய பிரதேசத்தில் அரசின் நிர்வாகம் ஒன்றில் பலவீனமாக இருந்தது அல்லது முடங்கிப்போய் இருந்தது.

3) பல வெளிநாட்டு அரசுகளின் எண்ணங்களும் நிலைப்பாடும் ஸ்ரீலங்க அரசுக்கு எதிராகவும் வி.புலிகளுக்கு சாதகமாகவும் இருந்தது.

4) நாட்டின் பாதுகாப்புப் படையின் தன்மான உணர்வும் நம்பிக்கையும் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு இருந்தது. காரணம் முன்னைய அரசு வி. புலிகளுக்கு ஆயுதங்களும் நிதியுதவியும் அளித்தமையே.

5) இந்த இடங்களில் (வட-கிழக்கு) வாழ்ந்த சாதாரண தமிழ்மக்கள் ஆயுதபாணிகளான வி.புலிகளது நடவடிக்கை காரணமாகவும், இராணுவ நடவடிக்கை காரணமாகவும் விரக்தியிலும், கையறுநிலையிலும் (எதிர்காலத்தைப்பற்றிய) எதிர்பார்ப்புக்கள் நொருங்கிய நிலையிலும் இருந்தார்கள்.

சந்திரிகா பட்டியல் போட்டுக் காட்டும் “சாதனைகளின்” தார்ப்பரியம் என்ன?

அ) சந்திரிகாவும் முன்னைய ஆட்சியாளர்கள் போலவே வடக்கும் – கிழக்கும் சிங்களவருடையது அதன் மீதான ஸ்ரீலங்கா அரசின் இறைமையை விட்டுக் கொடுக்க முடியாது.

ஆ) வட-கிழக்குப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா அரசின் நிர்வாகம் முற்றாக இல்லை. எனவே இழந்த அந்த நிர்வாகத்தை மீளக் கொண்டு வரவேண்டும்.
இ) நான் ஆட்சிக்கு வந்ததும் நிலமை மாறி வெளிநாட்டு அரசுகள் ஸ்ரீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் வி.புலிகளுக்கு எதிராகவும் திரும்பின. இதற்காக நான் தீர்வுப் பொதியைப் பயன்படுத்தினேன்.

ஈ) சிங்களப் படையின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. நான் பதவிக்கு வந்ததும் படையின் போரிடும் ஆற்றலை அதிகரிக்கச் செய்தேன். இராணுவம் கேட்ட ஆயுதங்கள், கப்பல்கள், விமானங்கள், மற்றும் தளபாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு ஆண்டொன்று சராசரி ரூபா. 5000 கோடி செலவில் யுத்தத்தை நடாத்தினேன்.

உ) வி.புலிகளின் பிடியிலிருந்த தமிழ் மக்களை, விரக்தியில் இருந்த தமிழ் மக்களை நான் அந்தப் பிடியிலிருந்து விடுவித்தேன். எப்படி? ஐந்து இலட்சம் தமிழ் மக்களை வன்னிக் காடுகளில் பசியால் மெலிய வைத்து பட்டினி போட்டு வதைத்தேன். நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் தலையில் இலக்குத் தவறாமல் குண்டு போட்டுக் கொன்று குவித்தேன். யாழ்ப்பாணக் குடாநாட்;டில் இராணுவம் பிடித்த 760 இளைஞர்களில் 540 பேரை எமது சிங்கள இராணுவம் சித்திரவதை செய்து கொன்று அவர்களை செம்மணியில் புதைத்தது. இன்னும் ஒரு ஆயிரம் பேரைக் கைது செய்து களுத்துறையிலும், அனுராதபுரத்திலும், பூசாவிலும் நீதி விசாரணையின்றி அடைத்து வைத்திருக்கிறேன்.

இவ்வாறு சிங்கள-பௌத்தர்களின் ஆட்சியை ஸ்ரீலங்காவின் எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் நிலைநாட்டி, யாழ்ப்பாணம், மாங்குளம், பூவரசங்குளம் போன்ற இடங்களில் எல்லாம் சிங்கக் கொடியை ஏற்றி வெற்றிமேல் வெற்றி குவித்த எனக்கு நீங்கள் துரோகம் செய்யக் கூடாது. எனக்குத்தான் சிங்கள-பௌத்தர்களாகிய நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று சனாதிபதி சந்திரிகா இந்த மினி தேர்தல் அறிக்கை மூலம் கேட்டிருக்கிறார்.

“ஓயாத அலைகள் 3” இல்லாவிட்டால் சந்திரிகா நிச்சயம் கூரை ஏறித் தனது வீரப்பிரதாபங்களை இன்னும் உரத்த குரலில் பறை சாற்றியிருப்பார். அவரது தேர்தல் வெற்றி சந்தேகத்துக்கு அப்பால் இருந்திருக்கும்.

இப்போது தென் இலங்கை தீவிர சிங்கள-பௌத்த அமைப்புக்களும் கட்சிகளும் சந்திரிகாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.
தினேஷ் குணவர்த்தனாவின் தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன சந்திரிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து போன டாக்டர் ஸ்ரான்லி கல்பகே, நந்தா மத்தியூ, சுனில் முனசிங்க, டாக்டர் சரத் அமுனுகம போன்ற கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகள் சந்திரிகாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இபிடிபியும், புளட்டும் (புளட் சந்திரிகா பக்கம் சாயும் என்ற சென்ற முறை எழுதியிருந்தேன்) இந்த இனவாதிகளுக்கு அரசியல் புகலிடம் அளித்த, அளித்தது மட்டும் அல்லாது அவர்களில் இரண்டு பேரை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் சந்திரிகாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இந்த இரண்டு குழுக்களையும் பொறுத்தளவில் நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்ற மாதிரி நடந்து கொண்டுள்ளன. அடுத்து ரணில் பதவிக்கு வந்தால் சந்திரிகாவின் காலை விட்டு விட்டு ரணிலின் காலை நக்கத் தொடங்குவார்கள். ஒரு முறை நக்கி உருசி கண்டால் பல முறை நக்கச் சொல்லும். சென்ற தேர்தலில் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி ஐக்கியத தேசியக் கட்சியை ஆதரித்தது ஞாபகம் இருக்கலாம்.

இன்றைய நிலையில் சனாதிபதி சந்திரிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறதா?. பெரும்பாலும் எதிர்வரும் 21ம் நாளோடு அது முடிந்து விடுமா?. இல்லை தப்பித் தவறி சந்திரிகா தேர்தலில் வென்றால் அது டக்லஸ் தேவானந்தாவின் உபயமாகவே இருக்கும்!


About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply