இடைக்கால அறிக்கையை சரியாக வாசித்தால்,  உண்மையான மனதோடு வாசித்தால்  நாங்கள் பிரமிப்பு அடைய வேண்டுமேயொழிய மனம் தளர மாட்டோம்!

இடைக்கால அறிக்கையை சரியாக வாசித்தால்,  உண்மையான மனதோடு வாசித்தால்  நாங்கள் பிரமிப்பு அடைய வேண்டுமேயொழிய மனம் தளர மாட்டோம்! ம.ஏ. சுமந்திரன்

“2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்றத் தேர்தலிலே உள்ளே இருந்தும் கூட எங்களுடைய கட்சிக்கு  எதிரான பிரச்சாரம்  செய்யப்பட்ட  போதும் கூட மக்களுடைய நம்பிக்கை தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுதான் இருந்தது.   இப்போதும்  அப்படியான விசமப் பிரச்சாரம்தான்  இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறது.  ஆனால் இந்தத் தடவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடித்து வெற்றியும் கொடுப்பார்கள் என்ற பூரண நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இது ஏதோ வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  வெற்றி பெறுச் செய்வதற்கான நோக்கோடு  நாங்கள் கூறும் கருத்தல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையிலே வெற்றிபெற்றால்த்தான் நாங்கள் எடுத்துக் கொண்ட புதிய அரசியலமைப்பு முயற்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்த முடியும். தங்கவேலு ஐயா சொன்னதைப் போல இன்றைக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு வரையும் முயற்சிகளிலே வழிகாட்டல் குழு ஒன்றிருக்கிறது, பாராளுமன்றம் முழுவதும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு இருக்கிறது. வடக்குக் கிழக்கிலே இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் பதினெட்டுப் பேரிலே பதினாறு பேர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் தேர்தல் முறைப்படி ஒவ்வொரு ஆசனத்துக்கும் தகுதியான  வாக்குகள் தேவை.

அந்த வாக்குகளைப்  பெறாதவர்கள்.  எஞ்சியுள்ள வாக்குகளிலே கூடுதலான வாக்குகளைப் பெற்று வந்தவர்ளுக்கே இடம் கிடைக்கும். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இருந்து இந்த எஞ்சிய வாக்குகளைப் பெற்றுத்  தெரிவு செய்யப்பட்டவர்களே அந்த எஞ்சிய இருவர்.  ஆகவே 18 பேரிலே 16 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்று சொல்வதை விட 18 ஆசனங்களையும் முழுமையாக பிரதிநித்துவப் படுத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமே. ஐயா சொன்னது போல வழிகாட்டல் குழுவில் இருக்கும் ஐந்து தமிழரில் இருவர் இருமுவதற்கோ தும்முவதற்கோ கூடத் தங்கள் வாயைத் திறக்கவில்லை.  மொத்தம் 76 கூட்டங்கள் நடந்தன. அவை யாவும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை வெளிவரும் போது அமைச்சர் திரு சுவாமிநாதனின் குரலையோ திரு டக்லஸ் தேவானந்தாவின் குரலையோ யாரும் கேட்க முடியாது. மனோ கணேசன் அவ்வவ்போது பேசியிருக்கிறார். அவர் தன்னுடைய பிரச்சினைகள் பற்றிப் பேசியிருக்கிறார்.  வட – கிழக்குப் பிரச்சினைகள் பற்றிப் பேசியது கிடையாது.

இன்று வெளியாகியிருப்பது இடைக்கால அறிக்கை – இடைக்கால அறிக்கை என்று சொல்லும் போது இது ஒரு இடைக்கால அரசியல் சாசன வரைவு அல்ல. இதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் சிலர் தூங்குவது போலப் பாசாங்கு செய்வதாலே இதை நாங்கள் இடித்து இடித்து சொல்ல வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையிலே யாரும் முழுயாப்பை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.

இந்த அறிக்கையை சரியாக வாசித்தால்,  உண்மையான மனதோடு வாசித்தால்  நாங்கள் பிரமிப்பு அடைய வேண்டுமே யொழிய மனம் தளர மாட்டோம்.  இந்த இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்  சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போமாயிருந்தால் இந்தத் தமிழ்த் தேசியப் பிரச்சினை என்றால் என்ன?  தமிழ்த் தேசியப் பிரச்சினை தமிழரசுக் கட்சி உதயமாகும் போது  தமிழ்மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் பின்னரே தேசியப் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டது. அது கால வரைக்கும் பிராந்திய அரசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. ஆனால்  மலையகத் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்ட பின்னரே தந்தை செல்வாவும் அவரோடு சிலரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சமஷ்டி அடிப்படையிலே ஒரு தீர்வு பெறவேண்டும் என்று நாங்கள் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்தோம்.”

என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம். எ. சுமந்திரன்   கனடாத்  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு  சனவரி 21,2018  நியூ யாஸ்மின் விருந்து மண்டபத்தில்  நடத்திய பொங்கல் விருந்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய போது குறிப்பிட்டார்.

வழமை போல மங்கள விளக்கேற்றலோடு நிகழ்ச்சி தொடங்கியது. மங்கள விளக்கை  பேராசிரியர் வண யோசேப் சந்திரகாந்தன்,  சட்டத்தரணி  தேவதாஸ்,   சட்டத்தரணி  யூட்  அந்தோனிப்பிள்ளை, திரு நிமால் வினாயகமூர்த்தி,  திருமதி இராஜி  அரசரத்தினம் (செந்தாமரை) மற்றும் திருமதி இன்பநாயகம் (Ambika Jewellers) ஆகியோர் ஏற்றி வைத்தார்கள்.

கனடிய தேசிய கீதம் /  தமிழ்த் தாய் வாழ்த்து இரண்டையும்  செல்வி. சாஜகி இராசசிங்கம் பாடினார்.

மூன்று நடனங்கள் சபையோரை மிகவும் உட்சாகத்தோடு மகிழ்வித்தன. (1)  செல்வி திருநீத்தா சபேசன்  (2)  அபிநயாலயா நாட்டியாலயம் ஆசிரியைகள் ஸ்ரீமதி ரஜனி சத்திரூபன் மற்றும்  மாதங்கி ஜெயக்குமார் ஆகியோரின் மாணவிகள்  செல்வி ஹரிணி ஹரிதரன்,  செல்வி ஜெனனி ஹரிதரன் , (3) அபிநயாலயா நாட்டியாலயம் ஆசிரியை ஸ்ரீமதி ரஜனி சத்திரூபன் அவர்களின் மாணவிகள் மாதங்கி ஜெயக்குமார், தாமிரா சிறிதரன், சூரியா சுரேஷ் ஆகியோர் அந்த நடனங்களை  வழங்கினார்கள்.

வி. சு. துரைராஜா அவர்கள்  (ததேகூ – கனடா)  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திரு வீர சுப்பிரமணியம் தலைமையுரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து பேசிய திரு சுமந்திரன்

” தமிழ்த் தேசியப் பிரச்சினையிலே தீர்வு காண்பதற்கான முயற்சியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அங்கே இடம் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே (மக்களால்)  அந்த ஆணை,  அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் எப்படியாவது  தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். வருவது உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் கூட இதிலே அனைத்து மக்களும் வாக்களிக்கிற காரணத்தாலே அதில் – தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு குறைந்து விட்டது என்ற  ஒரு செய்தி வருமாக இருந்தால்  அது  பேச்சு வார்த்தைகளில் நாங்கள் ஈடுபடும் போது  எங்களது சக்தியை, பலத்தைக் குறைப்பதாக இருக்கும்”  என்றார். (முழுப் பேச்சு பின்னர் இடம் பெறும்.)

இந்தப் பொங்கல் இரவு விருந்து நிகழ்வில் வண யோசேப் சந்திரகாந்தன், திரு (நக்கீரன்) தங்கவேலு ஆகியோரும் உரையாற்றினார்கள்.

விழாவுக்கு அனுசரணை வழங்கிய புரவலர்களை  பொருளாளர் சி. துரைராசா அவையோருக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு   நன்றி  தெரிவித்தார்.

திரு மு. தியாகலிங்கம் (துணை செயலாளர்) நன்றியுரை நவின்றார்.

திரு வின் மகாலிங்கம் (செயலாளர்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


 

 

 

 

 

 

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply