வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது பற்றி நேற்றைய தினம் சிறப்பு கலந்துரையாடல்
தயாளன் (யாழ்ப்பாணம்)
வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பான சாத்தியப்பாட்டினை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கோரிக்கையின் பெயரில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் முப்படைத் தளபதிகள் , மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் படையினர் வசமுள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்களில் பாவனை இன்றி படையினரின் பிடியில் உள்ள நிலவிடுவிப்பு தொடர்பிலும் ஏற்கனவே விடுவிப்பதற்கு படைத்தரப்பால் இணக்கம் கானப்பட்டும் இதுவரை விடுவிக்காத நிலங்களை விடுவிப்பது தொடர்பிலும் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது படைத்தரப்பால் விடுவிப்பதற்கு கடந்த ஆண்டு இணக்கம் தெரிவித்த நிலத்தில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எஞ்சிய நிலப்பரப்பும் விரைவில் விடுவிக்கப்படும்.
இதேநேரம் மேலும் பாவனை அற்று உள்ள மக்களிற்கு சொந்தமான நிலங்களை விடுவிக்கும்போது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கட்டுமானங்களிற்கான செலவீனங்களை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு இணக்கம் தெரிவித்தபோதும் முழுமையாக அன்றி பகுதியளவிலேயே நிதி கிடைத்தது. எஞ்சிய நிதிகளைகளையும் வழங்கினால் பணியை நிறைவு செய்து அப்பகுதி நிலங்களை தேர்தல் முடிவடைந்த்தும் விடுவிக்க முடியும். என படைத் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேநேரம் படைகளின் வசமுள்ள நிலம் தொடர்பில் ஊடகங்கள. மாவட்ட அரச அதிபர் மற்றும் படைத் தரப்பு ஆகியவற்றின் தரவுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாது மாறுபடுவதற்கான காரணம் அதன் உண்மைத் தன்மை தொடர்பிலும் விரைவில் சீர் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினரின் பகுதியில் உள்ள நிலங்களில் படைகளின் பயன்பாடு அற்றுக் கானப்படும் வெற்று நிலங்களில் மேலும் ஒரு தொகுதி நிலம் விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கா தலமையில் அடுத்த மாதம் முற்பகுதியில் ஓர் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இருப்பினும் தேர்தல் காலத்தில் விடுவிப்பதில் எழும் சர்ச்சையை தவிர்த்து அதன் பின்பே அவை விடுவிக்கப்படும். இதேநேரம் நீண்டகாலமாக சுவீகரித்த நிலத்திற்காக இழப்பீட்டினைப் பெற விரும்பும் மக்களின் விபரங்களை திரட்டி உரிமையாளர் விரும்பும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.
இதே நேரம் எதிர்காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சு , படைத்தரப்பு , மாவட்டச் செயலகம் ஆகியன கூட்டிணைந்து மாதாந்தம் படையினர் வசம் உள்ள நில விபரம் தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்திய வகையில் வெளியீடு செய்வது தொடர்பிலும் முடிவுகள் எட்டப்பட்டன.
பருத்தித்துறை பொன்னாலை வீதி
பருத்தித்துறை பொன்னாலை வீதியில் மயிலிட்டித் துறைமுகத்தினை அண்டிய பகுதியை அண்மித்த 3 கிலோ மீற்றர் வீதியும் எதிர்வரும் 4ம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் இருந்து காங்கேசன்துறை ஊடாக பொன்னாலை வரை செல்லும் வீதியில் பலாலி மற்றும் மயிலிட்டியை அண்டிய பகுதிகளில் சுமார் 3 கிலோ மீற்றர் வீதியானது கடந்த 27 ஆண்டுகளாக படையினரின் பிடியிலேயே கானப்படுகின்றது.
இவ்வாறு குறித்த வீதி படையினரின் பிடியில் இருப்பதனால் பருத்தித்துறையில் வசிக்கும் மயிலிட்டி மீனவர்கள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துனைமுகத்தின் பயனை முழுமையாகப் பெறமுடியாது பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்வதாக நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு குறித்த வீதியானது படையினரின் பிடியில் இருப்பதனால் பேரூந்துகளில் பயணிப்போர் மேலதிகமாக 50 கிலோ மீற்றரையும் தனி வாகனங்களில் பயணிப்போர. 20 கிலோ மீற்றரையும் மேலதிக பயணம் செய்யும் அவலம் நீடிப்பது படைத்தரப்பு உள்ளிட்ட சகல தரப்பிற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்நது.
இதனையடுத்து குறித்த வீதியினை கடந்த ஆண்டில் பாவனைக்கு அனுமதிப்பதாக படையினர் தெரிவித்திருந்தும் வீதி திறக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே மேற்படி வீதியானது எதிர்வரும் 4ம் திகதி இலங்பையின் சுதந்திர தினத்தன்று மேற்படி வீதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த வீதி திறக்கப்படும் பட்சத்தில் மயிலிட்டி மீனவர்கள் தமது கிராமத்திற்கு தினமும் வருகை தந்து தமது வாழ்விடத்தினை சீரமைத்து குடியமர்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.