பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து!
நக்கீரன்
மறைந்த முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் பரராஜசிங்கம் அவர்களின் அகதி மனுவை கனடிய பழமைவாதக் கட்சி அரசு நிராகரித்துவிட்டு அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது.
திரு. யோசேப் பரராஜசிங்கம் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடந்த அதிகாலைத் தொழுகையின் போது ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் பலத்த காயத்திற்கு உள்ளாகி நூலிழையில் உயிர் தப்பினார்.
அவருக்கு உயிராபத்து இருப்பதை உணர்ந்த கனடிய தூதுவராலயம் அவருக்கு பன்மடங்கு நுழைவிசைவுச் சீட்டை (Multiple Entry Visa) வழங்கி அவர் கனடாவுக்கு பயணம் செய்ய உதவியது.
2006 ஆம் ஆண்டு கனடா வந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அரசியல் அடைக்கலம் கேட்டு 2007 இல் ஏதிலி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார். அய்ந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரது ஏதிலி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்குக் காட்டப்படும் காரணம் மிகவும் விசித்திரமானது. திரு.சுகுணம் பரராஜசிங்கம் சிறிலங்காவில் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 17 அன்று தீர்ப்பாளர் ஒக்சானா கோவலிக் (Oksana Kowalyk) திரு. யோசேப் பரராஜசிங்கம் விடுதலைப் புலிகளோடு வைத்துக் கொண்ட தொடர்ச்சியான தொடர்பு காரணமாக அவர் நடைமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர் ஆவார் என தனது தீர்ப்பில் கூறியுள்ளார். சரி அப்படியே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திருமதி சுகுணம் பரராஜசிங்கம் தனது கணவனோடு வைத்துக் கொண்டிருந்த தொடர்பு காரணமாக எப்படி த.வி. புலிகள் இயக்க உறுப்பினர் எனக் கொள்ளலாம்?
சட்டத்தில் ஒருவர் தொடர்பு காரணமாக குற்றவாளி அல்ல (guilt by association) என்ற கோட்பாடு இருக்கிறது. அதாவது இரண்டு அல்லது அதற்குக் கூடிய பொருட்களுக்கு இடையே உள்ள பரிமாற்றத் தொடர்பை வைத்து முடிவுக்கு வருவது ஆகும். வேறுவிதமாகச் சொன்னால் தொடர்பில்லாத காரணத்துக்கும் அதன் விளைவுக்கும் முடிச்சுப் போடுவது. எடுத்துக் காட்டாக இட்லர் ஒரு மரக்கறி உணவி எனவே மரக்கறி உணவு தவறானது. காரணம் இட்லர் செய்ததெல்லாம் கெட்டவை. அல்லது இட்லர் குழந்தைகள் மற்றும் நாய்களை நேசித்தவர். ஆனபடியால் குழந்தைகளையும் நாய்களையும் நேசிப்பது தவறு என்பது போன்ற வாதமாகும்.
உண்மை என்ன வென்றால் ஆட்சியில் உள்ள பழமைவாதக் கட்சி புதிய குடிவரவாளர்களை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கடுமையாக எதிர்க்கிற கட்சி. அவர்களுக்கு எதிரான கட்சி.
எடுத்துக்காட்டாக சன் சீ கப்பல் கனடிய கரையை வந்து சேருமுன்னரே பழமைவாதக் கட்சி அரசின் அமைச்சர்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக மலிவான பரப்புரையைச் செய்து வந்தார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோஸ் (Vic Toews) தாய்லாந்தில் இருந்து மேலும் ஒரு கப்பல் வருவதாக எச்சரித்தார். ஆனால் அப்படியொரு கப்பல் இன்னும் வந்து சேரவில்லை.
பழமைவாதக் கட்சி அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் அய்ந்து சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆட்கடத்தல்காரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள், தமிழ்ப் புலிகள், பயங்கரவாத அமைப்பு, மேலும் ஏதிலிக் கப்பல்கள் வருகின்றன என்பவையே அந்தச் சொற்றொடர்களாகும்.
கப்பலில் வருபவர்களுக்கு பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருந்திருக்கிறது. எனவே இவர்களும் பயங்கரவாதிகளாக இருக்கலாம். இந்த ஏதிலிகள் தாய்லாந்தில் பல மாதங்கள் முகாம்களில் இருந்து கப்பலில் 3 மாதம் பெருங்கடலில் பயணம் செய்து துன்பத்துக்கு ஆளானவர்கள் என்பதை அரசு வசதியாக மறந்துவிடுகிறது.
அரசின் இடைவிடாத எதிர்மறைப் பரப்புரையினால் கனடிய பொதுமக்கள் கருத்து ஏதிலிகளுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.
குடிவரவு ஏதிலிகள் சபை பல ஏதிலிகளை வெளியில் விட்டாலும் அரசு அதற்கு எதிராக மத்திய நீதிமன்றத்தில் வாதாடுகிறது. பெண்கள், குழந்தைகள் வெளியில் விடுவிப்பதை அரசு எதிர்த்தது. நல்ல காலமாக நீதிமன்றம் குடிவரவு ஏதிலிகள் சபையின் பெரும்பாலான முடிவுகளை ஏற்றுக்கொண்டது.
மூன்று முறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஒரு ஏதிலியை தொடர்ந்து அரசு தடுத்துவைத்தது. அப்படிச் அரசு தடுத்து வைப்பது சட்ட முறைமையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு ஒப்பாகும் (abuse of due process) என்று மத்திய நீதிமன்ற நீதியரசர் அரசைக் கண்டித்தார். ஆனால் குடியுரிமை குடிவரவு அமைச்சர் யேசன் கெனி அதைப் பொருட்படுததவில்லை.
அமைச்சர் கனடிய குடிவரவு பொறிமுறையை மத்திய நீதிமன்ற நீதியரசர்களும் வழக்கறிஞர்களும் குழிதோண்டிப் புதைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். தனது அமைச்சு எடுக்கும் முடிவுகளை நியாயமற்ற முறையில் நீதிமன்றங்கள் கேள்விகள் எழுப்புவதாகக் குறைபடுகிறார். நாடாளுமன்றம் நியாயமான திறமையான குடிவரவு மற்றும் ஏதிலிகள் தொடர்பான சட்டங்களை வடிவமைத்தாலும் நீதித்துறை ஒத்துழைக்காமல் விட்டால் அவற்றை நடைமுறைப் படுத்த முடியாது. நீதி மன்றங்கள் அரசோடு ஒத்துழைக்க வேண்டும். கெட்டிக்கார வழக்கறிஞர்கள் ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக நீதிமன்றங்களை தங்கள் நயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று அமைச்சர் யேசன் கெனி சாடினார். நாடாளுமன்றத்தில் ஆட்கடத்துவோருக்கு எதிராக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் சேர்ந்து தோற்கடித்துவிட்டது. இவ்வாறு அமைச்சர் யேசன் கெனி மேற்கு ஒன்ரோறியோ பல்கலைக் கழக சட்ட வளாகத்தில் பேசும் போது இந்தத் தாக்குதலைத் தொடுத்தார்.
இப்படியான எதிர்மறைப் பரப்புரையை செவிமடுக்கும் தீர்ப்பாளர்கள் அமைச்சர்களுக்கு அஞ்சியோ அல்லது அவர்களை மகிழ்விக்கவோ ஏதிலிகளுக்கு எதிராகத் தீர்ப்புக் கூறுகிறார்கள். இவர்களை வீடுகொளுத்துகிற இராசாவுக்கு கொள்ளி கொடுக்கிற அமைச்சர்கள் என்று சொன்னால் குறையொன்றும் இல்லை!
2007 ஆண் ஆண்டில் நியமனம் பெற்ற மக் பீன் (Mc Bean) என்ற தீர்ப்பாளர் இதுவரை ஒரு அடைக்கல மனுவைத்தானும் ஏற்றுக் கொள்ளவில்லை. 2010 இல் 62 ஏதிலிகள் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்! இன்னும் சிலர் 6.45, 6.93, 6.67, 4.29, 2.94 விழுக்காட்டினரையே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இது ஒருதலைச் சார்ப்புப் போக்கைக் (bias) காட்டுவதாக ஒஸ்கூட் கோல் பேராசிரியர் Sean Rehaag கருத்துத் தெரிவித்தார். இந்த தீர்பாளர்கள் 1 – 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆண்டொன்றுக்கு 102,300 – 120,400 இடையிலான சம்பளம் கொடுக்கப்டுகிறது!
மே 02 இல் நடைபெற இருக்கும் தேர்தல் பரப்புரையில் பிரதமர் ஸ் ரீபன் கார்ப்பர் பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட சி – 49 சட்ட வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றப் போவதாகக் கூறிவருகிறார். பழமைவாதக் கட்சியின் தேர்தல் பரப்புரையில் இந்த சட்ட வரைவே முதல் இடம் பிடித்துள்ளது. இந்தப் பரப்புரை பெரும்பான்மை இனத்தவரை இலக்கு வைத்துச் செய்யப்படும் மறைமுக இனவாதமாகும்.
தமிழர்களில் சிலர் வெட்கம் துக்கம் எதுவுமின்றி பழமைவாதக் கட்சியை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். கேட்டால் உள்ளே நுழைந்தால்தான் எமது பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லலாம் என்கிறார்கள். மெத்தச் சரி. ஆனால் நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ அதே போல் பழமைவாதக் கட்சியின் முதலாளித்துவ சார்பான சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிரான, குறிப்பாக புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான போக்கை மாற்ற முடியாது.
ஏற்கனவே புதிய குடிவரவாளர்களது நலன்களை கவனிக்கும் தொண்டு அமைப்புக்களுக்கு ஒதுக்கும் நிதியுதவி வெட்டப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால் அப்படியான தொண்டு நிறுவனங்களை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்.
தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் பழமைவாதக் கட்சியே முன்னிலையில் இருப்பதாகச் சொல்கின்றன. பழமைவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்குமேயானால் புதிய குடிவரவாளர்கள், குறிப்பாக தமிழ் குடிவரவாளர்களுக்கு அது இருண்ட காலமாக அமைந்துவிடும்.
திருமதி சுகுணம் போன்றோர் நாடுகடத்தப்பட்டால் அவர்கள் எதிர்நோக்கும் உயிர் ஆபத்துப்பற்றி பழமைவாதக் கட்சி அரசு கிஞ்சித்தும் கவலைப் படாது. அவரைக் காப்பாற்றுவதற்கு வழி ஏதிலிகள் மேல் கொஞ்சமாவது கருணை காட்டக் கூடிய அரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதாகும்.
கனடாவின் புகழ்பெற்ற உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய பட்டயத்துக்கு பழமைவாதக கட்சி அரசு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. அதே போல் ஏதிலிகள் தொடர்பான அய்யன்னாவின் மரபுகளுக்கும் எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. இதனை மனிதவுரிமை அமைப்புக்களான பன்னாட்டு மன்னிப்பு சபை, மனிதவுரிமை கண்காணிப்பகம், பன்னாட்டு நெருக்கடி குழு மற்றும் சமூக அமைப்புக்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
எனவே தமிழ் வாக்காளர்கள் தமிழ் இனம், தமிழ் நலம் சார்ந்தவற்றை எதிர்க்கும் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது ஆகும். குறிப்பாக வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பின்வரும் தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் கட்டாயமாக பழமைவாதக் கட்சிக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும்.
கார்ப்பர் தலைமையிலான கருணை இல்லாப் பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த அய்ந்து ஆண்டுகள் தமிழர்களுக்கு இருண்ட காலமாகவே அமையும். பழமைவாதக் கட்சியே வி.புலிகள் அமைப்பையும் உலகத் தமிழர் இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துத் தடை செய்தது.
கடந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி சில தொகுதிகளில் சொற்ப வாக்குகளால் மட்டுமே வெற்றிபெற்றது. இந்தத் தொகுதிகளில் உள்ள தமிழ் வாக்காளர்கள் எந்தச் சூழ்நிலையிலும் என்ன காரணத்துக்கும் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது. அப்படிச் செய்வது நாமே வலியச் சென்று அரசியல் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமாகும்.
Newmarket-Aurora
கடந்த தேர்தலில் (2008) பழமைவாதக் கட்சி சார்பாக போட்டியிட்ட லூயிஸ் பிறவுண் 6,623 பெரும்பான்மை வாக்குகளால் வென்றார். அதற்கு முன்னர் (2006) இந்தத் தொகுதி லிபரல் வசம் இருந்தது. 2004 இல் Belinda Stronach பழமைவாதக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரே 2006 இல் கட்சிமாறி வென்றார்.
Oak Ridges-Markham
கடந்த தேர்தலில் (2008) பழமைவாதக் கட்சி சார்பாக போட்டியிட்ட போல் கலேன்றா 545 வாக்குகளால் வெற்றி பெற்றார். அதற்கு முன்னர் (2006), (2004) இந்தத் தொகுதி லிபரல் வசம் இருந்தது. 2006 இல் லிபரல் வேட்பாளர் Lui Temelkovski 6,353 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
Mississauga-South
இந்தத் தொகுதியில் 2008 இல் போல் சாபோ லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு 2,152 வாக்குகள் வித்தியாசத்தில் பழமைவாதக் கட்சி வேட்பாளர் கியு அரிசனைத் தோற்கடித்தார். போல் சாபோ இந்தத் தொகுதியில் 2000 தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
Brampton West
இந்தத் தொகுதியில் 2008 இல் அன்றூ கானியா லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு 231 வாக்குகள் வித்தியாசத்தில் பழமைவாதக் கட்சி வேட்பாளர் கைல் சீபாக் அவர்களைத் தோற்கடித்தார். போல் சாபோ இந்தத் தொகுதியில் 2000 தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். 2000, 2004 தேர்தலில் இந்தத் தொகுதி லிபரல் வசம் இருந்தது.
Halton
லிபரல் கட்சியிடம் இருந்த 2004 இல் இருந்த இந்தத் தொகுதி 2006 இல் பழமைவாதக் கட்சிக்கு கைமாறியது. 2008 இல் பழமைவாதக் கட்சி சார்பாக போட்டியிட்ட லீசா றயிற் 7850 அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்றார். இம்முறையும் இவரே பழமைவாதக் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
Don Valley West
Ajax Pickering
இந்தத் தொகுதியில் லிபரல் கட்சி 2004, 2006, 2008 இல் வென்றாலும் 2008 இல் லிபரல் கட்சி வேட்பாளரின் பெரும்பான்மை 3,204 ஆகக் குறைந்துவிட்டது.
Mississauga—Erindale
இந்தத் தொகுதியில் லிபரல் கட்சி 2004, 2006 வென்றிருந்தும் 2008 இல் நடந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி வேட்பாளர் 397 வாக்குகளால் வென்று விட்டார். 2006 இல் லிபரல் கட்சி வேட்பாளர் இந்தத் தொகுதியை 3,328 பெரும்பான்மை வாக்குகளாலும் 2004 இல் 11,646 பெரும்பான்மை வாக்குகளாலும் வென்றது குறிப்பிடத்தக்கது. சீக்கியர் செறிந்து வாழும் இந்தத் தொகுதியில் இரண்டு சீக்கியர்கள் போட்டியிட்டது லிபரல் கட்சியின் தோல்விக்குக் காரணமாகும்.
Mississauga—Erindale
இந்தத் தொகுதியில் லிபரல் கட்சி 2004, 2006, 2008 இல் நடந்த தேர்தலில் வென்றிருந்தாலும் அதன் பெரும்பான்மை குறைந்து கொண்டே வருகிறது. 2008 இல் நடந்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர் 773 அதிக வாக்குகளாலேயே வென்றிருந்தார். இந்த தொகுதியில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
Kitchener—Waterloo
இந்தத் தொகுதியில் லிபரல் கட்சி 2004, 2006 இல் வென்றது. ஆனால் 2008 இல் நடந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி வெறுமனே 17 வாக்குகளால் தொகுதியைக் கைப்பற்றியது. எனவே இந்தத் தொகுதியின் தலைவிதியை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது.
எனவே பிரதமர் கார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி மீண்டும் பதவிக்கு வந்தால் சன் சீ கப்பலில் வந்த 492 ஏதிலிகளுக்கோ திருமதி சுகுணம் பரராஜசிங்கத்துக்கோ நீதி கிடைக்காது. சி – 49 சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் ஏதிலிகள் அடிமைகளை விட மோசமாக நடத்தப்படுவார்கள் என்பது நிச்சயம். கருணையிலா ஆட்சி கடிகி ஒழிக!
Leave a Reply
You must be logged in to post a comment.