எமது வீர வரலாற்றைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு தமிழர் சரித்திரத்தில் உயர் இடம் ஒருபோதும் கிடையாது…
(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்)
எமது வீர வரலாற்றைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்னதான் பதவிகளுக்கு வந்தாலும், அபிவிருத்தி என்ற போர்வையில் வந்தாலும் இவர்களெல்லாம் எட்டப்பனாக, காக்கை வன்னியனாகக் காட்டப்படுவார்களே தவிர தமிழர் சரித்திரத்திலே இவர்களுக்கு எவ்வித உயர் இடமும் கிடைக்க மாட்டாது என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எஸ்.நல்லரெட்ணம் என்பவரின் அலுவலகம் கறுவாக்கேணியில் அவரது இல்லத்தில் நேற்று மாலை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
தமிழர்களுடைய வரலாறு எழுதப்படுகின்ற போது கருணா, பிள்ளையான் போன்றோரின் வரலாறு எவ்வாறு எழுதப்படும் என்பது எமக்குத் தெரியும். வீரகாவியம் படைக்கப்படுகின்ற போது அதனைக் காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற ரீதியில் தான் பொறிக்கப்படுகின்றார்கள். அந்தவகையில் எமது இந்த வரலாற்றைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்னதான் பதவிகளுக்கு வந்தாலும் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்தாலும் இவர்களெல்லாம் எட்டப்பனாக, காக்கை வன்னியனாகக் காட்டப்படுவார்களே தவிர தமிழர் சரித்திரத்திலே இவர்களுக்கு எவ்வித உயர் இடமும் கிடைக்க மாட்டாது.
இவர்களெல்லாம் வந்து இன்று களத்திலே நன்று எம்முடைய வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு என்ன பாடம் படிப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே எமது மக்கள் தீர்மானம் எடுத்து விட்டார்கள்.
ஒரு விடுதலை வரலாற்றின் அடைவு என்பது ஒரு ஜனநாயக நாட்டிலே அரசியல் அமைப்பு வரைபு ஒன்றை ஆக்குவதிலே தான் இருக்கிறது. அந்த விடயத்தை ஆக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்ற தேர்தல்களிலெல்லாம் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தொடர்ச்சியாக மக்களின் ஆணையோடு இன்னும் இன்னும் வீரியமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது என்ற செய்தியை இந்த நாட்டு அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வரிசையிலே இம்முறை இடம்பெறுகின்ற உள்ளுராட்சித் தேர்தலிலும் எமது மக்களின் ஆணை இன்னும் மேல்நோக்கியதாகவே செல்லும், எமது மக்கள் செல்ல வைப்பார்கள். இதன் போதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள், விடுதலையின் அடைவுகள் அரசியல் சாசனமாகத் தீட்டப்பட வேண்டும் என்ற நடவடிக்கையின் அடிப்படையிலே 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இடைக்கால அறிக்கையில் பல்வேறு விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டு அரசியல் அமைப்பிலே தமிழர்களும் இணைந்து உருவாக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது. முன்பெல்லாம் அரசியலமைப்பு உருவாக்கும் போது தமிழ் மக்களின் கோரிக்கைகள் சொல்லப்பட்ட மறுகணமே மறுக்கப்பட்டு தமிழ் பிரதிநிதிகள் வெளியேறியது தான் வரலாறாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. எமது உறுப்பினர்களும் தொடர்ச்சியாக இருந்து அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மதிப்பு மிக்க எமது உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறையாகவும், தமிழ் மக்களின் வாழ்வு தொடர்பில் பற்றுள்ளவராகவும் இருப்பாராக இருந்தால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பை ஆக்குவது பல்கலைக்கழகம் அல்ல பாராளுமன்றம் தான். தற்போது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த அரசியலமைப்புக்கு அர்த்தபுஷ்டியுள்ள கருத்துக்கள் சொல்ல வேண்டுமாக இருந்தால் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் கொண்டு செல்லப்பட வேண்டும். அவ்வாறு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுகி அவர்களிடம் உங்களிடம் இருக்கின்ற சந்தேகங்களைச் சொல்லி, தெளிவுபடுத்தி எவை எவை உள்ளடக்கப்பட வேண்டுமோ அவற்றை உள்ளடக்கக் கூடியதான முயற்சியை எடுக்க வேண்டும்.
பானை நிரம்ப வேண்டும் என்றால் பானைக்குள்ளே தான் தண்ணீர் ஊற்றப்பட வேண்டுமே தவிர புறக்குடத்திலே ஊற்றப்படுகின்ற தண்ணிர் பானையை நிரப்ப மாட்டாது.
எனவே 10ம் திகதி நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக வாக்குகளால் தமிழ் மக்கள் நாங்கள் ஆணை கொடுத்து அனுப்புகின்றோம் என்ற செய்தி இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்தக் கூடிய விதத்திலே எமது மக்கள் அனைவுரும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.