தமிழர்களுக்கு  திருப்தி தரும் தீர்வே தேவை! 

தமிழர்களுக்கு  திருப்தி தரும் தீர்வே தேவை! 

ஐரோப்பிய ஒன்றியத் தூதரிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்தல்

கொழும்பு, ஜனவரி 24 

இலங்கையின் நீண்டகாலத் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய அரசமைப்பு உருவாக்கம் முன்னுரிமைப்படுத்தப்பட்டு விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு நியாயமானதாகவும், நிரந்தரமானதாகவும் தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

– இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான அரசியல் பிரிவுத் தலைவர் போல் கொட்பிறீயிடம் நேரில் வலியுறுத்தித் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் அரசியல், வர்த்தகம், தொலைத்தொடர்புகள் பிரிவுத் தலைவர் போல் கொட்பிறீக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தச் செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு,

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத்தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ்மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் ஐரோப்பிய தூதுவரிடம்  தெளிவுபடுத்தினார். இதன் போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டிய ஒன்று என் பதை வலியுறுத்தினார். இது இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூ கத்துக்கு வழங்கிய வாக்குறுதி களில் ஒன்று என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமெனவும் இது தொடர்பில் மேலும் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

படையினரிடம் உள்ள  பொதுமக்களின் காணிகள் இன் னமும் மீளளிக்கப்படாமை தொடர்பில் தமது அதிருப்தியை ஐரோப்பிய தூதுவருக்கு வெளிப்படுத்திய இரா.சம்பந்தன், மக்கள் தமது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள், இதனைக் காலந்தாழ்த்துவது மக்கள் மனதில் விரக்தியையும் ஏமாற்றததையும் அளிப்பதாகவும் தெரிவித்தார். இம்மக்கள் காலாகாலமாக தாம் வாழ்ந்து வந்த இருப்பிடங்களை விடுவித்துத் தருமாறு நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். இந்த நியாயமான  கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தூதுவரைத் தெளிவு படுத்திய இரா.சம்பந்தன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தனது செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை நிலையை வெளிக்காட்டவேண்டுமெனவும் தெரிவித்தார். நீண்ட நாள்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இந்த உறவுகளுக்கு தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரித்து உண்டு எனவும், அந்த உரிமையை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு அவர் க ள் ம ன தி ல் ஆறுதலைக் கொண்டு வரும் வகையில் செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமது கருத்துக்களைத் தெரிவித்த இரா.சம்பந்தன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முடிந்த தன் பிற்பாடு இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு புதிய அரசமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படவேணடும் எனத் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மேலும் தாமதப்படுத்தப் படலாகாது எனவும், நீண்ட கால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இவ்விடயம் முன்னுரிமைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும்,ஏற்படுத்தப்படுகின்ற புதிய அரசமைப்பு நியாயமான தும் நிரந்தரமானதும் தமிழ் மககளுக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கவேண்டுமென்பதையும் வலியுறுத்தினார். இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மந்த கதியிலானசெயற்பாடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும் போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஓர் உந்துசக்தியாக அமைகின்றது. எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி கருமங்கள் துரிதமாக நடைபெறுகின்றமையை உறுதிசெய்யவேண்டும் எனவும், அதனைச் செய்வதற்கு சர்வதேச சமூகம் தனது தொடர்ச்சியான பயனுறுதி மிக்க ஈடுபாட்டை
இலங்கை அரசாங்கத்துடன் கொண்டிருக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.


 

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply