ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியையும் எதிர்க் கட்சியையும் ஒரு சேரத் தோற்கடித்த சுயேட்சை தினகரன்!
நக்கீரன்
ஆர்கே நகர் இடைத் தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் தமிழர்கள் வாழும் நாடுகளில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன. இந்த இடைத் தேர்தலில் அதிமுக துணைச் செயலாளர் ரிரிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புச் சொன்னாலும் அதனைப் பலர் நம்பவில்லை.
லோயலா கல்லூரி பேராசிரியர் இராசநாயகம் இரண்டு தடவை கருத்துக் கணிப்பு நடத்தி அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தார். முதல் கருத்துக் கணிப்பு டிசெம்பர் 14, 2017 நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு. அதில் ரிரிவி தினகரனுக்கு 35.5%, மதுசூதனனுக்கு 21.3%, மருதுகணேஷ் 28.5 %, கலைக்கோட்டுதயம் 4.6% ஆதரவு எனச் சொல்லப்பட்டது.
மீண்டும் டிசெம்பர் 24, 2017 இல் ஆர்.கே.நகரில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என அதே இராசநாயகம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில் ரிரிவி தினகரனுக்கு 37.4%, மருது கணேசுக்கு 24.3%, மதுசூதனனுக்கு 22.1%, பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 % வாக்குகள் கிடைக்கும் என கருத்து கணிப்பில் வெளியானது. தேர்தல் நாளன்று வாக்களித்த வாக்காளர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்குப் பெரும்பான்மை வாக்காளர்கள் தினகரனுக்கு வாக்களித்ததாகச் சொன்னார்கள்.
இப்போது நடந்து முடிந்த இடைத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரிரிவி தினகரன் வென்றிருக்கிறார். கட்சி வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளும், வாக்கு விழுக்காடும் பின்வருமாறு அமைந்திருக்கிறது.
அட்டவணை 1
வேட்பாளர் |
கட்சி |
பதிவானவாக்குகள் | விழுக்காடு | கருத்துக் கணிப்பு(1) | கருத்துக் கணிப்பு (2) |
ரிரிவி தினகரன் | சுயேட்சை | 89,013 | 52.48 | 35.5 | 37.4 |
மதுசூதனன் | அதிமுக | 48,306 | 28.48 | 21.3 | 24.3 |
மருதுகணேசு | திமுக | 24,651 | 14.53 | 28.5 | 22.1 |
கலைக்கோட்டுதயம் | நாம் தமிழர் | 3,860 | 2.28 | 4.6 | |
நோட்டா | 2,373 | 1.40 | |||
கரு. நாகராசன் | பாஜக | 1,417 | 0.83 | 1.5 | |
மொத்தம் | 169,420 | 100 |
ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,28,234; ஆண்கள் 110903, பெண்கள் 117232; மூன்றாம் பாலினத்தவர்99. (Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-by-election-results-today-306114.html)
மேலே குறிப்பிட்டது போல தினகரன் தேர்தலில் வென்றுவருவார் எனக் கருத்துக் கணிப்புச் சொன்னாலும் இப்படி ஒரு மகத்தான வெற்றியை (52.48%) பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வாக்கு எண்ணத் தொடங்கியது முதல் 19 ஆவது சுற்றுவரை தினகரன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். அதிமுக வாக்குகள் இரண்டாகப் பிரியும் போது திமுக வேட்பாளர் மருதுகணேசு வெல்லுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர் 24,651 வாக்குகளை மட்டும் பெற்று கட்டுக்காசை இழந்துள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இந்தத் தொகுதியில் நின்று முன்னர் வென்றிருக்கிறார். மேலும் இந்தத் தொகுதியில் கணிசமான தெலுங்கு வாக்காளர் இருப்பதால் தெலுங்கரான மதுசூதனுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சொற்ப வாக்குகளால்தான் கட்டுக் காசைத் தப்ப வைத்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருக்கும் தெரிந்த இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.
மே 2016 இல் நடந்த தேர்தலில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் போட்டியிட்டிருந்தார். அதன் முடிவு பின்வருமாறு,
அட்டவணை 2
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 97,037 | 61.17 |
சிம்லா முத்துச் சோழன் | திமுக | 57,420 | 36.20 |
வசந்தி தேவி,வி | வி. சிறுத்தைகள் | 4,182 | 2.63 |
2011 இல் நடந்த தேர்தலில் ஜெ.ஜெயலலிதா 150,431 (88.43%) வாக்களைப் பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாள் சி. மகேந்திரனை (கிடைத்த வாக்குகள் 9,710 – 5.35%) 150,721 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடித்திருந்தார். இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெல்ல வேண்டும் என்ற நிலையில் தான் இல்லையென்று சொல்லி அமைச்சர்கள் பணம் கொடுப்பற்கு ஜெயலலிதா தடை போட்டிருந்தார்.
இப்போது நடந்து முடிந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் 2016 இல் ஜெயலலிதாவுக்கு கிடைத்த பெரும்பான்மையை விட 1,162 வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 2016 தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட 32,719 வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ளார்.
தினகரன் வெற்றி பெற்றதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனையை படைத்துவிட்டார். அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து விட்டது.
தேர்தல் முடிவு பொது மக்கள் சசிகலா நடராசன் அவர்களையே ஜெயலலிதாவின் வாரிசாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சசிகலா முப்பது ஆண்டுகளாக (இடையில் சில மாதங்கள் தவிர) ஜெயலலிதாவின் இணைபிரியாத தோழியாக இருந்திருக்கிறார். நடராசனைக் கூட அவர் பார்ப்பதில்லை. ஜெயலலிதாவின் மனவோட்டத்துக்கு ஏற்றவாறு நடந்து கொண்டதோடு கட்சிப் பணிகளையும் திறம்படச் செய்து வந்திருக்கிறார். ஜெயலலிதா இறந்த போது சசிகலாவின் அரசியல் எதிரிகள் (அதிமுக உட்பட) சசிகலாதான் ஜெயலலிதாவை நஞ்சு வைத்துக் கொலை செய்துவிட்டார், இறந்த ஜெயலலிதாவே அப்பொலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று பல வதந்திகள் தவழ விடப்பட்டன. இதனை நான் நேரில் பார்த்து அறியக் கூடியதாக இருந்தது. ஜெயலலிதா அப்பொலோ மருத்துவமனையில் செப்தம்பர் 22, 2015 அன்று சேர்க்கப்பட்டார். நான் ஒரு கிழமை கழித்து செப்தெம்பர் 29 அன்று சென்னையில் இருந்தேன்.
ஆர்கே நகர் தேர்தல் பரப்புரையின் போது ஜெயலலிதாவைக் கொன்றது சசிகலாதான் அதனால்தான் அமைச்சர்கள் உட்பட யாரையும் ஜெயலலிதாவைப் பார்க்கவிடவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால் அதனைப் பொய்ப்பிக்க வேண்டிய அவசியம் தினகரன் தரப்புக்கு இருந்தது. அந்தக் கட்டத்தில்தான் ஜெயலலிதா அப்பொலோ மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி பழச்சாறு அருந்திக் கொண்டு தொலைக்காட்சி பார்க்கும் காணொளியை அதிமுக (தினகரன் அணி) சட்டமன்ற உறப்பினர் வெற்றிவேல் வெளியிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த காணொளியை சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்டார் என்றும் அந்த காணொளியால் தனது அணிக்குச் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை என்று தினகரன் தெரிவித்தார். இப்படிக் காணொளியை வெளியிட்டது பாதகத்தை விட சாதகமாக இருந்தது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தினகரன் தனது கீச்சுப் (Twitter) பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊடக நண்பர்களுக்கும் தோழமைகளுக்கும் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்கே நகர் இடைத் தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிப் பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கும் எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிருவாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நடிகர் விஷால், கார்த்தி சிதம்பரம், நடிகர் சரத்குமார் ஆகியோருக்கும் தினகரன் நன்றி தெரிவுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவுடன், 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தனது ஆர்கே நகர் சட்டமன்றப் பதவியை விலக்கிக் கொண்டவர் வெற்றிவேல்.
தினகரனின் இடைத் தேர்தல் வெற்றி அவரை இரவோடு இரவாக நட்சத்திர அரசியல்வாதி என்ற இடத்துக்கு உயர்த்திவிட்டது. ஓர் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து அவர் சாதனை படைத்துள்ளார். மேலே குறிப்பிட்டவாறு 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா பெற்ற பெரும்பான்மை வாக்குகளை விட மேலதிகமாக 1,162 வாக்குகள் பெற்றிருக்கிறார். அதிமுக தொடங்கிய காலம் தொட்டு அதன் வெற்றிக்கு இரட்டை இலைச் சின்னம் பெரும் துணையாக இருந்தது. ஒபிஎஸ் – இபிஎஸ் அதிமுக இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டித் தேர்தலில் வென்றிடலாம் எனக் கணக்குப் போட்டனர். இதனால் பரப்புரையின் போது புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கோ அல்லது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ கொடுக்காத முக்கியத்துவம் இரட்டை இலைக்குக் கொடுக்கப்பட்டது. அதே சமயம் தினகரனின் அழுத்த சமையல் அடுப்பு (pressure cooker) வாக்காளர்களுக்கு அறிமுகம் இல்லாத சின்னம். இரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலில் பெற்ற தொப்பியை மீண்டும் பெற தினகரன் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இருந்தும் சில நாள்களில் தினகரனின் அழுத்த சமையல் அடுப்புச் சின்னம் தொகுதி பூராகவும் வெகு விரைவாக அறிமுகம் பெற்றுவிட்டது. பெண்கள் வீட்டிலுள்ள அழுத்த சமையல் அடுப்போடு வீதிகளில் இறங்கிவிட்டார்கள்.
ரிரிவி தினகரன் (54) சசிகலாவின் அக்கா வனிதாமணி – விவேகானந்தன் இணையர்களுக்கு மூத்த மகன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். மாமன் (சசிகலாவின் அண்ணன்) சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துகொண்டார். ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடந்தது. தினகரனுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரது மனைவி அனுராதா ஜெயா தொலைக்காட்சியை நிருவாகம் செய்தார். ரிரிவி தினகரன், சசிகலாவின் அக்கா பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து ரிரிவி தினகரன் என மாறினார்.
1988 இல் அதிமுகவில் சேர்ந்தவர், பின்னர் அதிமுக பொருளாளராக நியமிக்கப் பட்டார். 1999 இல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 இல் அத்தொகுதியில் தோற்றாலும், மாநிலங்களவை உறுப்பினராகி மீண்டும் டெல்லி சென்றார்.
2011 இல் கட்சியில் இருந்து சசிகலா உறவினர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியபோது தினகரனும் தப்பவில்லை. அதன்பின் அரசியலில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை போயஸ் தோட்டம் பக்கம் கூட அவர் வரவில்லை. பின்னர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தார். சசிகலா சிறைக்குச் செல்லும் முன்பு ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு அதிமுக துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆட்சி அமைக்க ஆளுநரைச் சசிகலா சந்தித்தபோதும் பின் எடப்பாடி பழனிச்சாமி சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் அவர்களுடன் ரிரிவி தினகரன்தான் அருகில் நின்று கொண்டிருந்தார்.
தினகரன் சட்ட சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஓபிஎஸ் – இபிஸ் உட்கட்சிப் போரை மேலும் சூடாக்கப் போகிறது. ஏற்கனவே தினகரன் பக்கம் 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் அணிமாறியுள்ளனர். இனிமேல் இந்த அணிமாறும் காட்சிகள் அடிக்கடி நடக்கப் போகிறது.
ஒபிஎஸ் – இபிஎஸ் அணி
தேர்தலில் வெற்றி வாகை சூடிய தினகரன் இன்னும் மூன்று மாதங்களில் பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வம் அரசை வீட்டுக்கு அனுப்பப் போவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆர்கே நகர் இடைத் தேர்தல் முடிவு ஒபிஎஸ் – இபிஎஸ் அணிக்கு பெரிய தலையிடியாக இருக்கப் போகிறது. மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைப் பலத்துக்கு 118 உறுப்பினர்களது ஆதரவு தேவை. தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் பெரும்பான்மைக்கு வேண்டிய பலம் 108 ஆகக் குறைந்துள்ளது.
திமுகவும் டி.டி.வி.தினகரனும் கூட்டுச் சதி செய்து ஆர்கே நகர் தேர்தலைச் சந்தித்துள்ளனர். அதனால், ரிரிவி தினகரன் வெற்றிபெற்றுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் எம்ஜிஆரின் பெயருக்கும் ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திவிட வேண்டும் என்று திமுகவும் ரிரிவி தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டுச் சதியின் வெளிப்பாடாக இந்தத் தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இது சிறுபிள்ளைத்தனமான, அறிவுபூர்வமற்ற அறிக்கை. தங்களது அவமானகரமான தோல்வியை மறைக்க இப்படியொரு அறிக்கையை விட்டுள்ளார்கள். இது ஆர்கே நகர் வாக்காளர்களது சனநாயகத் தீர்ப்பை அவர்களால் செரிக்க முடியாது இருப்பதைக் காட்டுகிறது. அதன் காரணமாக இடைத் தேர்தலில் தினகரனை ஆதரித்த மாவட்டச் செயலாளர்கள் நால்வர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுளனர் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துளார்.
ரிரிவி தினகரன் அதிமுக கட்சியையும் தலைமையகத்தையும் முற்றாகத் தன்பிடிக்குள் கொண்டுவர முயற்சிப்பார். அதிமுக அரசு பலவீனப்படும். சட்டசபை கலைக்கப்படலாம். அதனை அடுத்து தேர்தல் வரலாம். வந்தால் ரிரிவி தினகரன் முதலமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது.
திமுக
திமுக இந்த இடைத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவராக மு க ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ளது அவருக்கு கெட்ட சகுனமாகும்.
அதிமுக மீது உள்ள அதிருப்தி, குழுப் பூசல்கள், தினகரன் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்குச் சாதகமான அம்சங்களாக அமையும் எனப் பார்க்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க ஆதரவும் திமுக வேட்பாளருக்குக் கூடுதல் பலம்.
பதிவான 169,620 மொத்த வாக்குகளில் திமுக 24,651 (14.53 ) விழுக்காடு வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2016 இல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவை எதிர்த்துக் களமிறங்கிய திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் 57673 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்திருந்தார். ஆனால் இரண்டு முறை அடுத்தடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மண்ணின் மைந்தன் என்று சொல்லப்பட்ட மருதுகணேசு கட்டுக் காசைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை. மொத்தம் 57 வேட்பாளர்கள் தங்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளார்கள். இந்தத் தொகுதி, கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்தே அதிமுக வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தனது தோல்விக்கான காரணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். 94 வயதைத் தாண்டிய அன்பழகன் தொடர்ந்து பொதுச் செயலாளராக இருக்க வேண்டுமா? அவரை விட்டால் திமுக இல் வேறு தலைவர் இல்லையா? திமுக இன் இளைஞர் அணியின் தலைவர் 68 வயதைத் தாண்டிய ஸ்டாலின், அவருக்கு பேரக் குழந்தைகளும் உண்டு. இந்தப் பதவிக்கு வேறு யாரும் கட்சியில் இல்லையா? மேலும் இவரே திமுக இன் பொருளாளர். இது பொருள் குடும்பத்துக்குள் இருக்க வேண்டும் என்பதற்குச் செய்யப்பட்ட ஏற்பாடு. மகளிர் அணித் தலைவி கனிமொழி. அவர் மாநில அவையில் ஒரு உறுப்பினரும் கூட., அவரைவிட கட்சியில் இந்தப் பதவிகளுக்கு வேறு யாரும் இல்லையா? எல்லாப் பதவிகளும் கருணாநிதி குடும்பத்துக்கா? ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுக கட்டுக்காசை இழந்திருக்கிறது. இது பெரிய அவமானம்.
நாம் தமிழர் கட்சி
நாலாவது இடத்துக்கு வந்துள்ள நாம் தமிழர் கட்சி 3,860 (2.28 விழுக்காடு) வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கட்சிக்கு விழுந்த வாக்குகள் என்பதை விட வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்களுக்கு விழுந்த வாக்குகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் களத்தில் குதித்த வேட்பாளர்களில் இவர்தான் பணக்கார வேட்பாளர்.
பாஜக
இந்தத் தேர்தலில் பாஜக ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு பரிதாகமாக தோல்வி அடைந்தது. விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று சொன்னவன் கதையாக இந்தத் தோல்வி தற்காரிக தோல்வி என தமிழக பாஜக கட்சித் தலைவி தமிழிசை சவுந்தரராசன் நிருபர்களுக்கு சொல்லியிருக்கிறார். பாஜக தலைகீழாக நின்றாலும் பெரியார் – அண்ணா பிறந்த மண்ணில் வேருன்ற அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு வாய்ப்பே இல்லை. அதிமுக (ஒபிஎஸ் – இபிஎஸ்) அணியின் முதுகில் சவாரி செய்து நாடாளுமன்றம் போகலாம் சட்டசபைக்குப் போகலாம், ஆட்சியில் பங்கு பெறலாம் என்ற கனவு கலைக்கப்பட்டுவிட்டது. உண்மையில் அதிமுக இன் தோல்விக்கு ஒபிஎஸ் – இபிஎஸ் அணி பாஜக இன் அழுதத்துக்கு பணிந்து போகிறது என்ற பொது மக்களது எண்ணம் ஒரு முக்கிய காரணமாகும்.
1967 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழகத்தை திமுக, அதிமுக மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. இரண்டு ஆட்சியிலும் ஊழல் மலிந்திருந்தாலும் அவை உறுதியோடு ஆட்சி செய்தன. ஆர்கே நகர் இடைத் தேர்தல் முடிவு தமிழகத்தில் ஒரு பலவீனமான ஆட்சி பதவியில் தொடரப் போகிறது என்பதைக் காட்டுகிறது. அதிமுக கட்சியும் அதிமுக அரசும் ஒட்டமுடியாத அளவுக்கு உடைந்து காணப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.