சைவ சமயம் 

சைவ சமயம் 

1. தமிழகத்துக் கோவில்கள்

தமிழகத்தில் இன்றுள்ள கோவில்கள் எப்பொழுது தோன்றின? அவற்றிற்கு மூலம் என்ன? கோவிற் கலைஉணர்வு தமிழர்க்கே உரியதா? பண்டைக் காலத்தில் கோவில்கள் எவற்றிற்குப் பயன்பட்டன? நம்து கடமை என்ன? என்பன போன்ற கேள்விகட்கு விடைகாணலே இவ்வாராய்ச்சிக் கட்டுரையின் நோக்கமாகும்.

கோவிலும் கல்வெட்டும்

“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திர சித்தன் (மகேந்திர பல்லவன்–அப்பர் காலத்தவன்) அமைத்த கோவில் இது” என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டு என்னும் இடத்துக் கோவிலிற் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 615 630 ஆகும்.

இக்கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன:–

(1) மகேந்திரன் காலத்திற்கு முன் தமிழகத்தில் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம் உலோகம் இவற்றால் ஆனவை.
(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழர் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆயின், அவை மண், மரம் முதலியவற்றாலாகிய அழியத்தக்கன.[1]
(3) இங்ஙனம் அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான்.[2]
——–
1]. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங்கோவிலுள் இருக்கிறது. அதன் அற்புத வேலைப்பாடு வியக்கத்தக்கது.
[2]. Longhurst – ‘The Pallava Architecture’, Part 1, pp 22-23.

தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆயது. அங்கங்கு இணைப்புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டன. இங்ஙனம் அமைந்த கோவில்களே அவை. இத்தகைய கோவில்களை இன்றும் மலையாள நாட்டிற் காணலாம். இங்ஙனம் கோவில்களை அமைப்பதில் தமிழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி. பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பல கோவில்கள் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய்விடுமு.[3]

“விமானங்கள் – ‘தூயது, கலப்பு, பெருங்கலப்பு’ என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் ‘தூய விமானம்’ எனப்படும்; இரண்டைக் கொண்டு அமைவது ‘கலப்பு விமானம்’ எனப்படும்; பல பொருள்களால் அமைவது ‘பெருங் கலப்பு விமானம்’ ஆகும்; [4] என்பது கட்டக்கலைநூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக்காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் உண்மையும் அறியலாம்.
——

[3]. R. Gopinatha Rao – ‘Epigraphia Indica’. Vol.15, P15.
[4]. Ramraz – ‘Essay on Indian Architecture,’ PP. 48-49.

இனித் தமிழகத்தில் மகேந்திரனுக்கு முன்பே கோவில்கள் இருந்தமைக்குக் கல்வெட்டுகளே சான்றாதல் காண்க. (1) திருக்கழுக்குன்றத்துக் கோவிற் பெருமானுக்குக் கந்த சிஷ்ய பல்லவன் (கி. பி. 436-460) நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்த சோழன் கல்வெட்டு கூறுகிறது. (2) ‘தென்னவனாய் உலகாண்ட’ கோச்செங்கணான் (கி. பி. 450-500) திருவக்கரையில் பெருமானுக்கு ஒரு கோவில் கட்டியிருந்தான். (அதிராசேந்திரன் அதனைக் கல்லாற் புதுப்பித்தான்) செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலின் கருவறையைக் கல்லாற் புதுப்பித்தார்; [5] அவர் திருக்கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார். [6]
—————–

[5]. K. A. N. Sastry’s Cholas Vol.II, Part I, P. 486: Vol.1. P. 385.
[6]. M. E. R. 36 of 1931.

சங்க காலத்துக் கோவில்கள்

பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்திற்குரிய கோவில்கள் இருந்தன. முருகன், திருமால், காடுகிழாள் முதலிய தெய்வங்கட்குக் கோவில்கள் இருந்தன. தொகை நூல்களில் சிவபெருமான், முருகன், திருமால், பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்படுகின்றனர். “ஆலமர் செல்வற்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை, ஆய்வேள் அளித்தனன்” என்று புறநானூறு புகலல் காண்க. இதனால் அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தமை நன்கறியலாம்.

கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காணப்படும் கோவில்கள் பல.

மணிமேகலையில்,
“காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்”

எனவரும் அடிகள் – வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமையை வலியுறுத்துகின்றன. சுடுமண் (செங்கல்) கோவில்கள் குன்றுகள்போல உயர்ந்திருந்தன என்பது அறியத்தக்கது.

அற்புத வேலைப்பாடு 

இக்கோவில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நோறிகயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,
“ஒருதிறம் சாரார் அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்து”
எனவரும் நெடுநெல்வாடை அடிகளாலும்,

“அறக்களத் தந்தனர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினக் கோட்டம்”
எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் நன்குணரக் கிடைத்தல் காண்க.

அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்றுமதில் உடையன; உயர்ந்த வாயில்களைப் பெற்றன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) உடையன; அம்மண்ணீடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது மணிமேகலை [7] மதுரைக் காஞ்சி [8] முதலிய நூல்கள் நுவலும் செய்தியாகும்.

இக்கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலோகத்-தகடுகளும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இங்ஙனமே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன.

“விண்பொர நிவந்த வேயா மாடம்”, “சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு” [9]
“நிரைநிலை மாடத்து அரமியந் தோறும்” [10] இவ்வாறு அமைந்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை யுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல்வாடை (வரி 76-88)அடிகள் அறிவிக்கும் அரிய செய்தியாகும். சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடனக் கோலத்தைக் காட்டி அருளினன் என்பது புராணச் செய்தி.
—–

[7]. சக்கரவாளக்கோட்டம், வரி. 42-48, 58-59; மலர்வனம் புக்க காதை 113-127.
[8]. மதுரைக்காஞ்சி, வரி, 352-355.
[9]. பெரும்பாண் ஆற்றுப்படை, வரி, 405.
[10]. மதுரைக் காஞ்சி; வரி, 451.

பதஞ்சலி முனிவர் காலம் கி. மு. 150 என்று ஆராய்ச்சியாளர் அறைவர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர் ஏற்ற சிதம்பரத்தில் உள்ள திருக்கோவில் கி. மு. 150-க்கு முற்பட்டதாதல் அறிக. அங்குள்ள நடராசர் மண்டபம் மரத்தால் கட்டப்பட்டிருத்தலும் அதன் பழைமைக்குச்சான்றாகும். [11]
——–

[11]. Navaratnam’s “S. I. Sculpture.” PP. 56-57.

கி. பி. 450 முதல் 500-க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கோட்சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பரும் சம்பந்தரும் இதனைத் தம் பதிகங்களிற் குறித்துளர்.

தேவாரகாலத்துக் கோவில்கள்

தேவாரகாலத்தில் தமிழகத்தில் ஏறத்தாழ 500 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் ஆனவை. அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில், (3) மணிக்கோவில், (4) ஆலக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலிய பலவகைப்படும். இவற்றுள் தம் காலத்தில் பெருங்கோவில்கள் 78 இருந்தன என்று அப்பரே அறைந்துள்ளார். பெரிய கோவில்களைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்துள்ள (பெரியகோவில் திருச் சுற்றில் உள்ள) சிறிய கோவிலே ‘இளங்கோவில்’ எனப்படும். பிறவும் இளங்கோவில் எனவும் பெயர் பெறும். எனவே, தேவார காலத்திற்கு முன்பே பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? இதனால், அவை முதலிற் கட்டப்பட்ட காலம் மிகப் பண்டையது என்பதும் வெளியாகுமென்றோ? தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம் தூங்கானை மாடம் கோவில் அமைப்பைக்கொண்டு நன்கறியலாம். விமானம் ‘தூங்கும் யானை’ வடிவில் அமைந்ததாகும். திரு இன்னம்பர், திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திருஅதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் (மூலத்தானம்) தேர் போன்ற அமைப்பு உடையவை; உருளைகளும் குதிரைகளும் பூட்டப்பெற்றவை. திருச்சாய்க்காட்டுக் கோவிலை ஒட்டித் தேர் போன்ற விமானம் ஒன்று உருளைகளுடன் உள்ளது.

பழைய கோவில்கள்

இந்த விமான அமைப்புடைய தேர்போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில் மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக் கோவில்களைப்போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான். சான்றாக, நகரியில் உள்ள சில கோவில்களைக் காணலாம். அவை கி.மு. 250-இல் ஆக்கப் பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள் [12] உள்ளன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப்
பட்டவையே யாகும்.
——

[12] O.C. Gangooly’s ‘Indian Architecture,’ P. 13.

“மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் கோவில்கள் எல்லாம், பல்லவர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டுக் கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம்” என அறிஞர் லாங்ஹர்ஸ்ட் குறித்தல் காண்க.

திராவிடக்கலை

கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆசிரியர் கைக்கொண்டனர். [13] “தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆசிரியர் கடன் பெற்றனர். இவை பிற்காலத்தில் இந்து சமயக் கோவில்களிற் காணப்பட்டன. இவற்றையே பௌத்தர் மேற்கொண்டனர். [14] விமான வகைகள் பல, தென் இந்தியாவில் உண்டு. அவை யாவும் கல்லறைகளிலிருந்து தோன்றின என்னல் தவறாகாது. தென் கன்னடக் கோட்டத்தில் உள்ள முதுபித்ரி என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில் மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந்நாட்டில் உண்டு. இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.[15]
——————

[13]. Dr. N.V. Ramanayya’s ‘origin of S-I Temple’ p. 44
[14] Ibid. PP 39-54,
[15] Ibid. PP 72-75.

தென்னாட்டுக் கட்டடக்கலை

தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள் இவற்றிற் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற்றனவே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு வளர்ச்சியுற்றாற் போலவே தமிழகக் கட்டடக் கலையும் வளர்ச்சிபெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனார் கோவில் வேலைப்பாட்டைக் கொண்டும் செவ்விதின் அறியலாம். [16]
—-

[16]. Prof. Dubriel’s ‘Dravidian Architecture,’ PP. 1-10, 22

கோவில்கள் பயன்பட்ட வகை

1. சங்க காலத்துக் கோவில்கள் அழியக்கூடிய பொருள்களால் ஆனவை. ஆதலால் நமக்குக் கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. பின்வந்த பல்லவர்கள் கற்கோவில்களை அமைத்தனர். ஆதலின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவர்க்குப் பின் வந்த சோழர் பழைய கோவில்களைக் கற்கோவில்களாக மாற்றினர். ஆதலின் அழியா நிலையுடைய கல்வெட்டுக்கள் தோன்றின. அவை கோவில் அறப்பணிகளைக் குறிக்க எழுந்தன ஆயினும், அரசர், மரபு, போர்கள், அரிய செயல்கள் இன்ன பிறவும் முதலிற் பொறிக்கப்பெற்றிருந்தன. அக் குறிப்புக்களே இன்று தமிழக வரலாறு கட்ட அடிப்படையாக இருந்து உதவுகின்றன.

2. கோவிலை அடுத்துச் சமய வளர்ச்சிக்குரிய மடங்கள் இருந்தன. அவை சமயக் கல்வியைப் புகட்டின; விழாக்களைக் காணவந்த அடியார்கட்கு உண்டியும் உறையுளும் உதவின. அம்மடங்கட்குப் பலர் தானம் அளித்துப் பாதுகாத்து வந்தனர்.

3. கோவிலை அடுத்து மருத்துவச்சாலை இருந்தது. இதனை எண்ணாயிரம், தஞ்சாவூர்ப் பெரிய கோவிற் கல்வெட்டுக்களால் அறியலாம்.

4. நடனம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் கோவிலில் வளர்க்கப்பெற்றன. இவற்றிற் பண்பட்ட பெண்மணிகள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர், உருத்திர கணிகையர் எனப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் 400 பேர் இருந்தனர்; காஞ்சி-முத்தீச்சுவரர் கோவிலின் 42 அடிகள்மார் இருந்தனர். பெருங்கோவில்களில் எல்லாம் நடன அரங்கு, இசை அரங்கு, நாடக அரங்குகள் இருந்தன.

5. கோவிலில் ‘தருக்க மண்டபம், ‘பிரசங்க மண்டபம்’ என்பனவும் இருந்தன என்பது திருவொற்றியூர்க் கோவிற் கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். பாரதம், ஆகமம் போன்ற நூல்களைப் பொதுமக்கட்குப் படித்துக்காட்டக் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

6. கோவில் திருச்சுற்று மாளிகையில் நூல் நிலையம் இருந்தது. அது ‘சரசுவதி பண்டாரம்’ எனப் பெயர் பெற்றது.

7. கோவிலில் ஊரவையார் கூடி ஊராட்சி பற்றிய செயல்களை ஆராய்ந்தனர்; ஊர் வழக்குகளைத் தீர்த்தனர்.

8. கோவில்கள் போர்க்காலத்தில் கோட்டைகளாக விளங்கின. அதனாற்றான் தஞ்சைப் பெரிய கோவில், திருப்பாசூர்க் கோவில், திருப்புகலூர்க் கோவில், பந்தணை நல்லூர்க் கோவில் முதலியவற்றைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் காணப்படுகின்றன.

9. இவை அனைத்திற்கும் மேலாகக் கோவில்கள் ஓவிய சிற்பக் கலைகட்குத் தாயகமாக விளங்கின. இன்று நமது பழம் பெருமையை உலகிற்குக் காட்டி நிற்பன இந்த இரண்டே அல்லவா? இவற்றைத் தம் அகத்தே கொண்டுள்ள கோவில்களே இன்று நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்துள்ளன என்னல் மிமையாமோ?

இன்றைய நிலை

இங்ஙனம் இவ்வுலக வாழ்வில் பேரின்பம் துய்த்தற்குரிய ஒப்பற்ற இடமாகக் கோவில்கள் விளங்கின. இவ்வுயரிய நோக்கம் கொண்டே அவை கட்டப்பட்டன. ஆயின், நாளடைவில் அறிவற்ற-பக்தியற்ற-பழம்பெருமையும் வரலாறும் உணராத பலர் கைகளில் கோவில் ஆட்சி சென்றமையாலும், பூசை முதலியன உணர்ச்சியற்ற முறையில் நடைபெற்றமையாலும், பெறலாலும் கோவில்கள் தம்பொலிவிழந்து விட்டன. அவற்றைப் பண்டைச் சிறப்பில் பாதியளவிலேனும் கொண்டு நிறுத்தல் தமிழறிஞர்-சமயப் பிரியர் நீங்காக் கடமையாகும்.

செய்யவேண்டுவன

1. சைவர் கோவில்களில் தேவாரப் பாடசாலைகள் தேவை; பெருமாள் கோவில்களில் நாலாயிரப் பிரபந்த பாடசாலைகள் தேவை; வழிபாடு தமிழிலேயே நடைபெறல் வேண்டும்.

2. குருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும். பத்தாம் வகுப்புத் தேறியவர்க்குப் பல்கலைக் கழகத்துச் சார்பில் 4 ஆண்டுகள் வரலாறு – சமயம் -ஓவியம்-சிற்பம்-நடனம் -இசை- கட்டடக் கலைகளில், ஓரளவு பயிற்சி அளித்துத் தேர்வு வைத்துப் பட்டம் தரல் வேண்டும். அப்பட்டதாரிகளே குருக்களாக அமையவேண்டும். அந்நிலையிற்றான் கோவில்கள் சாத்திரீய முறையில் விளங்கும்; யாவும் தூய்மையாக இருக்கும். இஃது அறிஞர் உடனே செய்யத்தக்கதாகும்.

3. கோவில் இயக்கநராக (Executive Officers) வருபவர் பல கலைகளில் புலமை உடையவராக இருத்தல் வேண்டும்.

4. இவை அனைத்திற்கும் மேலாக ‘நம் நாடு, நம் நாட்டுக் கோவில்கள், நம் நாட்டுச் சமயங்கள், நம் நாட்டுக் கலைகள் – இவற்றைப் பாதுகாத்தலும் போற்றுதலும் வளர்த்தலும் நமது கடமை’ என்பதை உளமார உணர்ந்து பாடுபடும் ஒருமைப்பாடு குருக்களிடமும் பிற (கோவில்) அலுவலரிடமும் இருத்தல் வேண்டும்.

இங்ஙனம் யாவும் அமையுமாயின், பண்டை வரலாற்றை இன்று கண்டு (making the Past real) பேரின்பமும் பெருவாழ்வும் பெற வழியுண்டு, இம்முயற்சிக்குத் தமிழர் ஒன்றுபட்ட மனமே வேண்டற்பாலது. இஃது எப்பொழுது கைகூடும்?
——————————

2. சங்க காலத்தில் சைவ சமயம் 
(கி.மு. – கி. பி. 300)

சைவத்தின் பழைமை

சிந்து வெளி நாகரிகம் உலகிற்குத் தெரிந்தது முதல் சைவ சமயத்தின் பழைமையும் கால எல்லை கடந்து நிற்கின்றது. இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைப் பொருள்களில் சிவ லிங்கங்கள் குறிப்பிடத்தக்கன. சிறியவும் பெரியவுமான சிவலிங்கங்களைக் கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளர் வியப்புற்ற, ‘சைவ சமயம் கணித்தறிய முடியாத பழைமை உடையது,’ என்று கூறியுள்ளனர். இந்த லிங்கங்களைப் பயன்படுத்திய சிந்துவெளி மக்கள் திராவிடரே என்பது ஆராய்ச்சியாளர் பலரது முடிவு.

இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் இருந்தவர் முண்டர், கோலர் என்ற பண்டை இனத்தவரும் திராவிடருமே ஆவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இவ்விரு இனத்தவருள் லிங்க வழிபாடு எவருக்கு முதலில் உரியதாக இருந்தபோதிலும், சிந்துவெளி நாகரிக காலத்தில் திராவிட மக்களுக்கும் உரிதாக இருந்தது என்று கூறுதல் தவறாகாது என்பதும் அவ்வாராய்ச்சியாளர் கருத்து. இந்த லிங்க வணக்கம் பல நாடுகளில் பரவி இருந்தது என்பதைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் பல சான்றுகளுடன் விளக்கி எழுதியுள்ளனர். அவ்விவரங்களை அறிய, சைவ சமயம் மிக்க பழைமையுடையது என்னும் உண்மை தெரிகின்றது.

தொல்காப்பியத்தில்

பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலப்பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். பயனுள்ள விளைச்சல் அற்ற இடம் பாலை எனப்படும். காடும் காடு சூழ்ந்த இடமும் முல்லையாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். ஒவ்வொரு நில மக்களும் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகன் வழிபடப்பட்டான். பாலநில் தேவைதையாகக் கொற்றவை வழிபடப்பட்டாள். கண்ணன் முல்லை நில மக்களால் வழிபடப்பட்டான். மழைக்கு அதிதேவதையான இந்திரன் மருதநில மக்கள் வணக்கத்துக்கு உரியவனானான். கடலரசானான வருணன் நெய்தல் நில மக்களாளல் வழிபடப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு நிலத்திற்கும் அமைந்த தெய்வத்தைத் தவிரக் கடவுள் என்ற ஒரு பொருள் வழிபடப்பட்டு வந்ததாகவும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் அப்பொருள் சிவன் என்ற பெயரை உடையதாக இருந்தது என்பதற்குத் தொல்காப்பியத்தில் சான்றில்லை.

தொகை நூல்களில் 

எட்டுத் தொகை நூல்கள் எனப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை என்பற்றிலும், திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாடல்களிலும் சிவனைப்பற்றிய குறிப்புகள் மிகப்பலவாகக் காண்கின்றன. ஆயினும், அவற்றுள் ‘சிவன்’ என்னும் பெயர் காணப்படவில்லை. அக்கடவுள் – ‘தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன்,’ ‘முக்கட் செல்வன்’, ‘கறைமிடற்று அண்ணல்,’ ‘நீலமணி மிடற்று அண்ணல்’, ‘முது முதல்வன்,’ ‘நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்,’ ‘மழை தலை வைத்தவன்,’ ‘புங்கம் ஊர்பவன்,’ ‘முக்கணான்.’ ‘ஆலமர் செல்வன்,’ முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறான். அவன் சடையிலும் மார்பிலும் கொன்றைமாலை அணிந்தவன்; முடிமேல் பிறைச் சந்திரனைச் சூடியவன்; முடிமீது மேகத்தையும் கங்கையையும் தாங்கியவன்; வேதத்தை வாயில் உடையவன்; அதனை அந்தணர்க்குச் சொன்னவன்; எட்டுக் கைகளை உடையவன்; புலித்தோல் ஆடையன்; உமாதேவியைப் பாதியாகக் கொண்டவன்; அரிய தவம் செய்பவன்; உயிர்கட்குப் பாதுகாவலன்; முப்புரங்களை எரித்தவன்; எரித்த அச்சாம்பலைப் பூசிக்கொண்டவன்; அவன் பல வடிவங்களைக் காட்டியும் ஒருக்கியும் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுபவன். ஊழி இறுதியில் அவன் ஆடும் கூத்து ‘கொடுகொட்டி’ எனப்படும். அவன் முப்புரங்களை அழித்து ஆடும் கூத்துப் ‘பாண்டரங்கம்’ எனப்படும். அவன் புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொன்றை மாலை தோளில் அசையப் பிரமன் தலையொன்றை ஏந்தி ஆடும் கூத்து ‘காபாலம்’ எனப்படும். அவன் உமையம்மை யுடன் இமயமலைமீதுள்ளான். இவைபோன்ற குறிப்புக்கள் தொகைநூல்களிற் காணப்படுகின்றன.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்

சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களிலும் பத்துப்பாட்டுள் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் தெய்வங்கள் வரிசையில் சிவபிரான் முதலிடம் பெற்றுள்ளான்.

“நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் 
பதிவாழ் சதுக்கப் பூதமீ றாக”
என்பது மணிமேகலை.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்…”
என்பது சிலப்பதிகாரம்.

சேரன் செங்குட்டுவன் சிவனருளால் பிறந்தவன், சிவபூசை செய்தவன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அவனது அவையில் சேரநாட்டுச் சாக்கையான் ஒருவன் சிவபிரான் ஆடிய கொடுகொட்டிக் கூத்தை ஆடிக்காட்டினான்.

இந்த நூல்களிலும் ‘சிவம்’ என்னும் சொல் இல்லை. ஆயின், சைவம் என்னும் சொல்
மணிமேகலையில் காணப்படுகிறது.

சைவவாதி 

மணிமேகலை ஒவ்வொரு மதவாதியிடமும் சென்று அவர்தம் மதக்கொள்கையையும் கடவுள் தன்மையையும் கேட்டறிந்தாள். அவள் சைவவாதியிடம் சென்று, “உன் கடவுள் எத்தைகையவர்?” என்று கேட்டாள். அதற்குச் சைவவாதி, “என் இறைவன் இருசுடன் இயமானன் ஐம்பூதம் என்ற எட்டினையும் உயிராகவும் உடம்பாகவும் உடையவன்; கலைகளை உருவாக உடையவன்; உலகங்களையும் உயிர்களையும் படைத்து விளையாடுபவன்; அவற்றை அழித்து உயிர்களின் களைப்பைப் போக்குபவன்; தன்னைத் தவிரப் பெரியோன் ஒருவனைப் பெற்றிராதவன். அவன் ஈசானன்,” என்று பதில் கூறினான்.

முருக வழிபாடு

குறிஞ்சி நிலத்துக்கே உரிய முருகன் வடவர் கூட்டுறவால் சுப்பிரமணியன் என்றும் கார்த்திகேயன் என்றும் சிவகுமாரன் என்றும் பெயர்பெற்றான்.[1] அவன் கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் பிறந்தவன் என்று பரிபாடல் கூறுகிறது.
——-
[1]. T. K. Sesha Ayyangar’s Ancient Dravidians

அவன் கொற்றவை மகன், உமையின் மகன் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இப்பாடலில் திருப்பங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருஏரகம், பழமுதிர்ச்சோலை, மலைகள் என்னும் ஆறிடங்கள் முருகனுக்குகந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. முருக வழிபாட்டைப் பற்றிய பழந்தமிழ்ச் செய்திகளும் நாற்பத்தெட்டு வயதுவரை பிரமசரிய விரதம் காக்கும் அந்தணரது வழிபாட்டுச் செய்திகளும் திருமுருகாற்றுப் படையுள் கூறப்பட்டுள்ளன.

பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டு பாடல்கள் இருக்கின்றன. முருகன் சூரபத்மனை வென்றவன்; ஆறு தலைகளும் பன்னிரண்டு கைகளையும் உடையவன்; தேவசேனாபதி; மும்மூர்த்திகட்கு முதல்வன்; வள்ளி தெய்வானையர்க்குக் கணவன்; திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் கோவில் இருக்கின்றது. அக்கோவிலில் இருந்த மண்டபச் சுவர்களிலும், மேற்கூரையிலும் பல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றுள் இரதி, மன்மதன், பூனை உருவாகக் கொண்ட இந்திரன், அகலிகை, கௌதமன் முதலியோரைக் குறிக்கும் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பாண்டி யன் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டனர். கோவில் களில் ஆடல், பாடல்கள் நிகழ்ந்தன. பண் அமைத்த பாடல்களைப் பாடி மக்கள் முருகனை வழி பட்டனர். இவை போன்ற செய்திகள் பரிபாடலில் காணப்படுகின்றன.

கொற்றவை வணக்கம்

தமிழ் நாட்டுப் பாலை நிலத்துத் தேவதையாகிய கொற்றவை வடவர் கூட்டுறவால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள்; [2] அதனால் கௌரி, சமரி, முதலிய புதிய பெயர்களைப் பெற்றாள்; அவள் வேடர்களுக்கு அதி தேவதை. அவள் நஞ்சுண்டும் சாகாதவள்- பேய்க்கணங்களை உடையவள்; முதலில் பாலைநிலத் தேவதையாக இருந்து வேடர் தொழுகைக்கு உரிய வளாக இருந்த கொற்றவை, பிறதிணைக்குரிய தெய் வங்கள் நகரங்களிற் குடியேறினாற்போலவே, நகரங் களிற் கோவில் கொண்டாள். மதுரை நகர மேற்கு வாயிலில் கொற்றவைக்குக் கோவில் இருந்தது.
—-
[2]. T.R.Sesha Ayyangar’s Ancient Dravidians.

கண்ணகி கணவனை இழந்து நகரை விட்டுப் போகை யில், கொற்றவை கோவில் வாசலில் தன் வளையல் களை உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் குறிக் கின்றது. பிரிந்தவர் மீண்டும் வந்து சேர்ந்தால், பின்பு பிரியாது உறைதல்வேண்டும் என்று மக்கள் கொற்றவையை வரம் வேண்டல் மரபு; கையில் காப்பு நூல் கட்டி நோன்பிருத்தல் வழக்கம். இக் கொற்றவை வணக்கமே நாளடைவில் சக்தி வணக்க மாக மாறியது; சக்தியையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட ஒரு பிரிவு ‘சாக்தேயம்’ அல்லது ‘வாமம்’ என்று பெயர் பெற்றது; சைவசமயப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது.

சைவமும் வைணவமும்

சிவனுக்கும் முருகனுக்கும் கோவில்கள் அமைந்தவாறே, திருமாலுக்கும் தமிழகத்தில் கோவில்கள் இருந்தன. முல்லை நிலக் கடவுளான திருமால் நாளடைவில் நகரங்களிலும் கோவில் கொண்டான்; கண்ணன் அண்ணனான பலராம வணக்கம் தமிழகத்தில் இருந்தது. சங்க காலத்தில் இந்நால்வர் (திருமால், பலராமன், சிவன், முருகன்) வணக்கமும் சிறப்புற்றிருந்தன. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நக் கீரர் பாடிய ஒரு செய்யுளில் அவனை இந்நால்வரு டனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்; “நீ சினத்தில் சிவனையும், வலிமையில் பலராமனையும், பகைவரை அழிப்பதில் மாயோனையும், கருதியதை முடிப்பதில் முருகனையும் ஒப்பாவாய்”. ‘வெள்ளை’, ‘காரி’ ‘குரால்’, ‘சேய்’ என்று நிறம் பற்றி எருது களுக்கு இவ்வாறு பெயர் கூறி, அவற்றுக்கு முறையே பலராமன், மாயோன், முக்கண்ணன், முருகன் என்னும் கடவுளரையும் அவர்தம் நிறம், மாலை, உடை முதலியவற்றையும் பொருந்த வைத்துக் கலித்தொகையில் உவமை கூறப்பட்டுள்ளது.

பரிபாடலில் திருமாலைப் பாடிய கடுவன் இள எயினனார் என்ற புலவரே முருகனையும் வாயார வாழ்த்தியுள்ளார். கேசவன், அச்சுதன் என்ற வைணவப் பெயர்களைக் கொண்ட புலவர் இருவர் முருகனைப் பாடியுள்ளனர். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு என்ற மூன்றிலும் கடவுள் வாழ்த்தாகச் சிவனையும், குறுந்தொகையில் முருகனையும், நற்றிணையில் திருமாலையும் பாடியுள்ளார். சேரன் செங்குட்டுவன் வட நாட்டு யாத்திரைக்குப் புறப்படும் முன் சிவபூசை செய்து சிவப்பிரசாதத்தைத் தன் முடியில் தாங்கியிருந்தான்; பின்னர் வந்த திருமால் பிரசாதத்தைத் தன் தோளில் தாங்கினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதே நூலில் சிவனுக்குரிய ஐந்தெழுத்தும் திருமாலுக்குரிய எட்டெழுத்தும் சம நிலையில் மதிக்கும்படி அடியவர்க்குக் கூறப்பட்டுள்ளது.

https://shaivam.org/articles/saiva-samayam-katturai-rasamanikkanar


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply