வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ!   

வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ!   

நக்கீரன்

(மகாகவி பாரதியாரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டிய  நினைவுக் கட்டுரை)

வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞர் பாரதியார்.

இன்று பாரதியாரின்  பிறந்த 135 ஆவது பிறந்து நாள். அவரது பிறந்த நாளை தமிழகப் பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!

என்று மார்தட்டியவர்  பாரதியார்.  பாரதியால் தமிழ் உயர்ந்ததும் தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொண்ட  உண்மை.  தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.

ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ பாவலர்களுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குக்  கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை!

தமிழ்த் தாய்க்கு பாமாலை பாடி  புகழ்மாலை சாத்தியவன் பாரதி. தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன் பாரதி. புதிய சுவை, புதிய கற்பனை, புதிய அழகு, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு புதுக் கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் கட்டிச்  செந்தமிழ் அன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.

இவை மட்டுமல்ல ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும் தன் எழுதுகோலை ஈட்டியாக்கி சாதியத்தையும், பென்ணடிமைத் தனத்தையும் ஒரு சேரக் குத்திக் கிழித்திவன்  பாரதி.   அவனைப் போய்ப்  ’பார்ப்பனன்’ என்று ஒதுக்கி வைக்கும்  பகுத்தறிவுவாதிகள் சிலர் இருக்கிறார்கள்!

மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றது. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றது.Image result for Bharathiyar

பாரதி காரிகை கற்றுக்  கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர்.

தமிழ்த் தாய் அவர் நாவில் நடனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று எழுந்தன.  இன்று பத்தி எழுத்தாளர்  (Columnist)  எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு பாரதிதான் அறிமுகப்படுத்தினார்.

வடமொழி தேவபாஷை தமிழ் மொழி நீசபாஷை என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று முரசறைந்தான்.

பாரதியாருக்குத்  தமிழோடு வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்புப் பட்டறிவின் அடிப்படையிலானது.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!      (செந்தமிழ்)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் பேடிகள் என்றும் பேதைகள் என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.

வேறு வேறு பாசைகள் கற்பாய் நீImage result for Bharathiyar
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
………………………………………
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –
அதைத் தொழுது படித்திடடி பாப்பா

தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து பாரதி,

நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்
நாயெனத் திரியும் ஒற்றர்கள்
வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்
கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்

என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்டார்.

வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும்
ஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்
கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?  

 

மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றிற்குப்  புதிய பொருள் சொன்னார்.

ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்,
போருக்கு நின்றிடும்போதும் -உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்!

மேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,

மந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு – களியே
அமிழ்தம், பயன்வருஞ் செய்கையே அறமாம்
அச்சமே நரகம், அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க!  

பாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா! தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன்! பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்!

இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
மேலும் கேட்பார்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! – பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா
மெனல் கேளீரோ?

சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விளிப்பார்,

சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா.

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு  மாறானது எதுவோ  அவை அனைத்தையும் செய்தார்.  பிராமணன் மீசை வைக்கக் கூடாது என்ற தடையை உடைத்தெறிந்து பெரிய மீசை வைத்துக் கொண்டார். அதனை எப்போதும் முறுக்கிக் கொண்டே இருப்பார்.  ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர் பாரதியார்!  இப்படி வேறு யாரால் எழுத முடியும்? அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்!Image result for Bharathiyar

சிவனும் சக்தியும் ஒன்று . சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு பெண்கள் ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றெல்லாம் பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
என்றார்.

ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் சரி தமிழீழத்தில் சரி  ஒழிந்தபாடாயில்லை. சாதியின்  பெயரால்  மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.

சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!
சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைத்திடும் வையம்! 

என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் இன்றும் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ?

பாரதியார் இயற்றிய கண்ணம்மா பாடல்களுக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம். அல்லது அவர் பாடிய பாஞ்சாலி சபதத்திற்குப் பரிசு கொடுத்திருக்கலாம். ஆனால் 1913 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வங்காளிக் கவிஞர் இரவீந்தநாத் தாகூருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம் அவர் ஆங்கிலத்திலும் கவிதைகள் இயற்றி இருந்தார்.

பாரதியார் உயிரோடு இருந்த போது அவரது அருமை பெருமை தெரியாது இருந்துவிட்டோம். அவன் பசியால் வாடி பட்டினியால் மெலிய விட்டுவிட்டோம். ஆனால் பாரதியார் கவலைப் படவில்லை. பராசக்தியிடம் காணி நிலம் கேட்டார். அதில் ஒலு மாளிகை கட்டித் தரவேண்டும் என்றார். பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப் பெண் வேணும் என்றார். கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும் என்றார். பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்றார்.

சராசரி மனித வாழ்க்கை வாழ விரும்பாதவர் பாரதியார்.Image result for Bharathiyar

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!                     (மகாகவி பாரதியார்)

எனக் காலனைப் பார்த்துக் கேட்டார். கேட்டது  போலவே மகாகவி பாரதியார் நரை திரை, முதுமை எய்தாது 39 ஆவது அகவையில் பூதவுடலை நீக்கிப்  புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882. மறைந்தது புரட்டாதி 11, 1921.

இடைப்பட்ட  39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, மூடபக்தி ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பேசாத  பொருளே இல்லை.

 

 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply