மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள்

மட்டக்களப்பு பூர்வீக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் – தரும் தகவல்கள் –  பாகம் – 1

விஜய்

மட்டக்களப்பின் பூர்விக வரலாறு தொடர்பான “மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும். பகுதி – 11 எனும் முன்னய கட்டுரையின் இறுதியில்,

“எனவே, சிங்கள வரலாற்று நூல்களில் கிழக்குப் பிரதேசம் பற்றிக் கூறப்படும் செய்திகளை அறிவதுவும், புராதான தொல்பொருள் சான்றுகள் குறித்த தேடலை மேற்கொள்வதுவும் இவ்விடயம் குறித்து அறிந்து கொள்வதற்கு அவசியமாகும்”  எனக்குறிப்பிட்டிருந்தேன்.

அவ்வகையில் மட்டக்களப்பின் பூர்விக வரலாறு தொடர்பாக, இலங்கையின் வரலாற்று ஆவணங்களில் காணப்படும் தகவல்களைப் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையின் மிகப் பணடயை வரலாற்று ஆவணங்களாக தொல்லியல் சான்றுகள், பிராமிச் சாசனங்கள், இலக்கியச் சான்றுகள் விளங்குகின்றன. ஆயினும் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு, இலக்கியச் சான்றுகளிலேயே அதிகம் தங்கியுள்ளது.

இலங்கையின் தொல்லியல் சான்றுகள் தரும் தகவல்கள்.

சேனக்க பண்டாரநாயக்கா அவர்கள், “மனிதக் குடியிருப்புப் பற்றிய நீண்டதொரு வராலற்றைக் கொண்ட இலங்கையின் இத்தகைய மக்கள் குடியமருகையின் சிக்கலான செயன்முறையைக் கவனத்திற் கொண்டு நோக்கும் போது, இலங்கை மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் ஆதி வரலாற்றுக் காலத்திலும் இன்று போல் பல்லின இயல்பினராயிருந்தனெர நம்ப இடமுண்டு… எனக்குறிப்பிடுகிறார். அவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றாதாரங்களைப் பற்றி விபரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடுகிறார். இங்கு கவனத்திற்குரிய விடயம், சேனக்க பண்டாரநாயக்கா இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆதி வரலாற்றுக் காலம் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பதே. இது கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். அக்காலத்தில் பல்லியல்பினரான மக்களே இலங்கையில் வாழ்ந்துள்ளார்கள் என்பது அவருடைய கருத்து.
ஆதிகாலத்தில் இலங்கையில் வாழ்ந்த இப்பல்லியல்பினரான மக்களில், மட்டக்களப்பில் பூர்விக காலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றி அறிந்து கொள்ள முடியுமா என்பதுவே நம்முன்னுள்ள வினாவாகும்.

மட்டக்களப்பின் பூர்விக வரலாறு மட்டுமல்லாது, தமிழ் மக்களின் வரலாறு தொடர்பில் காணக்கூடிய சிக்கலை “…இலங்கைத் தமிழ் மக்களின் வரலாறு சிங்கள மக்களுடைய வரலாற்றைப் போல எளிதான ஒரு தனிச்செயன்முறை அன்று..”  என அவர் குறிப்பிட்டுள்ளதன் மூலம் உணரமுடிகிறது. இவ்விடயமே அதாவது “ஒரு தனிச்செயன்முறை அற்ற தமிழ் மக்கள் வரலாறு” மட்டக்களப்பு பூர்விக வரலாற்றை கண்டறிவதிலுள்ள பிரச்சினையாகவும் அமைந்துள்ளது.

எனினும் இவ்விடயம் குறித்த ஆய்வினைத் தூண்டுவதற்குப் போதுமானளவு சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் ஆதி வரலாற்றுக்காலம், பெருங்கற்காலப் பண்பாடு எச்சங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. ஆதி வரலாற்றுக் காலத்திற்குரிய பெருங்கற்காலப் பண்பாடு எச்சங்கள் (ஈமச்சின்னங்கள்;) மட்டக்களப்பில் கதிரவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமானதொரு தகவலாகும். இத்தகவல் கிழக்கில் – மட்டக்களப்பில் நீண்டாலமகவே தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்துக்கு வலவூட்டவதாக அமைந்துள்ளது.
இப் பெருங்கற்காலப் பண்பாடு எச்சங்கள் (ஈமச்சின்னங்கள்) இலங்கையில் உலர்வலயப் பகுதிக்குரிய செம்பழுப்பு மண் பகுதிகளில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்திய ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு போன்ற இடங்களிலும் இத்தகைய எச்சங்கள் (ஈமச்சின்னங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  செனரத்ன அவர்கள், “இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் பொதுவான இப் பெருங்கற்காலப் பண்பாட்டின் குணாதிசயங்கள் நன்கு பிரபல்யமானவையாகும். ஒருவகையில் வதிவிடங்களின் தன்மையைப் பொறுத்த மட்டில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகிறது: சவ அடக்க முறையும் ஈமச்சின்னங்கள், கற்கவியல்கள், கற்சதுக்கம், ஈமத்தாழிகள் என்பன அடங்குகின்றன” எனக்குறிப்பிடுகிறார்.

குணராசா அவர்கள் கதிரவெளி ஈமச்சின்னங்கள் பற்றிக் குறிப்பிடவிட்டாலும் ஏனைய இடங்களில் கண்டடெடுக்கப்பட்ட ஈமத்தாழிகள் பற்றி, “… ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திராவிட மக்களது கலாசாரம் என்பது நிருபணமாகிவிட்டது” எனக்குறிப்பிடுகிறார்.  ஆயினும் இதன் காலம் இன்னும் பழமையானது. கதிரவெளி ஈமச்சின்னங்கள் குறித்து தனியாக ஆராய வேண்டும்.

குணவர்த்தன அவர்கள், மிகப்பழைய வரலாற்று ஆவணங்களான பிராமிச் சாசனங்கள் பற்றிய ஆய்வில், “சில சாசனங்கள் கபோஜா, மிலாக, தமடே போன்றவற்றின் குழுத்தனித்துவத்தைக் குறிக்கின்றன. கபோஜா, மிலாக என்பவை குழுநிலைச் சமூகம் போல காணப்படுகின்றன. தமடே திராவிடருக்குச் சமமானது எனப் பரணவிதான குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும் தமடே தமிழுக்குச் சமமானதாக அதிகம் காணப்படுகிறது.” (பக்63) எனக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் மட்டக்களப்பின் பூர்விக வரலாறு பற்றி ஏதும் அறிய முடியாத போதிலும் இலங்கையில் மிக நீண்ட காலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை அறிய முடிகிறது.

சேனக்க பண்டாரநாயக்கா அவர்கள், “இவர்கள்(தமிழர்கள்) ஆரம்ப வரலாற்றுக் காலத்திலிருந்து, நம்பகரமாக ஆதிவரலாற்றுக் காலத்திலிருந்து யாதாயினும் ஒரு வகையில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். மிக ஆரம்பகாலம் முதல் தமிழினத் தனித்துவச் சிறப்பியல்புடைய மக்கள் இங்கு வாழ்ந்து வந்தமைக்கு பிராமிக் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.”(பக்.20) எனவும் குறிப்பிடுகிறார். அவர், இக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை தென்னிந்தியவுடன்  தொடர்புபட்டவர்களாக நோக்குகிறார்.

ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் செவ்வியொன்றில், (பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்  27 மார்ச் 2012) “இலங்கையின் தெற்கில் திஸ்ஸமகாரகமவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நாணயங்கள் 2200 ஆண்டு பழமையானது எனவும் இவை தமிழ் வணிகர்களின் நாணயங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகவல்கள் யாவும், இலங்கையல், ஆதி வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதனையும், இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் அக்கலாத்தில் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதனையும் உறுதி செய்கின்றன. ஆனால், இதுவரைக்கும் இவ்விடயம் குறித்துப் போதுமானளவு சான்றாதாரங்கைளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது உண்மையே.

இவ்வகையில் மட்டக்களப்பிலுள்ள புராதான தொல்லியல் சான்றுகள் குறித்து ஆரம்பநிலைப் பணிகளையாவது மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இன்று மட்டக்களப்பிலுள்ள புராதான தொல்லியல் சான்றுகள்  புதைபொருள்களாகக் கருதப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன எனவும், அவற்றின் முக்கியத்துவம் உணரப்படாத நிலையில் அவை சிதைக்கப்பட்டு வருகின்றன எனவும் அறிய முடிகிறது.

இனி, இலங்கையின் வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ள, மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு பற்றிய தகவல்கள் குறித்து நோக்கலாம். இலங்கையின் பண்டைய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்ற விடயங்கள் முக்கியத்துவமுடையதாக இருக்கின்றன.

குணவர்த்தன அவர்கள், “ஐதீகத்தின்படி சிகளரின் ஆரம்பக் குடியேற்றங்கள் கதம்ப ஆறு (மல்வத்து ஓயா), கம்பீர ஆறு(கணதர?) ஆகியவற்றின் கரைகளிலும் அவற்றைச் சார்ந்த பகுதிகளிலும் அமைந்திருந்தன என்பதால் ஆரம்பத்தில் தானும் சிங்கள உணர்வு பிரதேசப்பண்பு கொண்டிருந்தது எனலாம். இலங்கையின் கிழக்கு, தென்கிழக்குப் பிரதேசங்களில் இருந்த குடியிருப்பக்களின் வேறுபட்ட மூலத்தை வரண்முறை ஏடுகள்  குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது (மகாவம்சம்சம் 9:7 – 11)” (பக்77)எனக்குறிப்பிடுகிறார். இலங்கையின் கிழக்கிலும் தென்கிழக்கிலும் நீண்ட காலமாக “சிகளர் (சிங்களவர்); அல்லாதவர்கள்” வாழ்ந்து வந்துள்ளார்கள் எனக் குறிப்பிடுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இலங்கை வரலாற்று நூல்களில் பிரபலயமான மகாவம்சம், துஸ்டகாமினியின் வெற்றி எனும் 25 ம் அத்தியாயத்தில்,

7.மஹியங்கானவுக்கு வந்து சேர்ந்த அவன் (துட்ட காமினி கி.மு 101-77) சத்தன் என்ற தமிழனை வெற்றி கொண்டான். அதே இடத்தில் அவனைக் கொன்று விட்டு அம்ப திட்டகத்துக்கு வந்தான்.

எனும் செய்யுள் கவனத்திற்குரியதாக அமைகிறது. அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தமிழன் எலராவுடன் போர் புரிவதற்காகச் சென்ற துட்ட காமினி வெற்றி கொண்ட தமிழன் பற்றிய செய்தியை இச்செய்யுள் கூறுகிறது. தொடர்ந்து வரும் செய்யுள்கள், கங்கையின் இக்கரையில் இருந்த மஹியங்கனாவில் தமிழர்கள் பலர் பலமுடன் வாழ்ந்த செய்திகைளை விபரிக்கிறது. துட்டகாமினி காலத்தில் (கி,மு. 100 ஆம் ஆண்டளவில்) தமிழர்கள் வாழ்ந்த இடம் மஹ்யங்கானவே, மகாவம்சத்தில் முதல் புத்தர் வருகையின் போது (கி,மு 500 ஆம் ஆண்டளவில்) பெருமளவு இயக்கர்கள் ஒன்று கூடும் இடமாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ள முதல் வரலாற்றுச் செய்தி இதுவாகும். மகாவம்சத்தில் காட்டப்பட்டுள்ள இலங்கையின் பூர்விக மக்கள் இவர்களே. எனவே, விஜயன் வழியில் நிகழ்ந்த ஆரியக் குடியேற்றங்களுக்கும்  பௌத்த மதத்தின்  வருகைக்கும்  சிங்கள மொழியின் தோற்றத்திற்கும் முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் பற்றிய “பழமைப் பதிவுகளாக” இத்தகவலைக் கருதலாம்.

இவ்விடயங்கள், மட்டக்களப்பின் பூர்விக வரலற்றைப் புதியதொரு தளத்தில் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறது.
இலங்கை வரலாற்று நூல்கள் பற்றியும் அந்நூல்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பற்றியும் ஆராய்வது விரிவானதொரு பகுதியாக அமைய வேண்டியிருக்கிறது. எனவே அவ்விடயத்தினை இக்கட்டுரையின் இரண்டாம் பாகமாக ஆக்கவேண்டியேற்பட்டுள்ளது.


முன்னைய பதிவுகள் :

மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும். பகுதி – 2 : விஜய்

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய் மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய் மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய் மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்


மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் தரும் தகவல்கள் (பாகம் 2 )

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்களில் இடம் பெற்றுள்ள வராலற்றுச் சித்தரிப்புக்களிலிருந்து, மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு – பூர்வீகக் குடிகள் பற்றிய தகவல்களை அறிய முயற்சிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்கள் பலவாகும். இந்நூல்கள் கூறும் வரலாறு குறித்து பல விமர்சனங்கள் உண்டு. வில்ஹெம் கெய்கர், “இலங்கையின் புரதான நூல்களை நுணுகித் திறனாய்ந்து பார்ப்பதையே வரலாற்று ஆசிரியர் எவரும் சரியானதெனக் கருதுவார். இலங்கை நூல்களுக்கு மட்டுமல்ல. அனைத்து வரலாற்று ஆவணங்களுக்கும் இக்கூற்றானது பொருந்தும். இதில் எனக்கு முரண் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். வில்ஹெம் கெய்கர் குறிப்பிடுவதனைப் போல “நுணுகித் திறனாய்ந்து பார்ப்பதிலும்; ” பல சிக்கல்கள் உண்டு.

இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் நூல்களில் பிரபல்யமான வரலாற்று நூலாக அமைவது மகாவம்சம் ஆகும். மகாவம்சம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாநாமன்(ர்) என்பவரால் இயற்றப்பட்டது என்பர். “புராதன முனிவர்களால் தொகுக்கப்பெற்ற அது(மாகவம்சம்) இங்கே விரிவாகக் கூறப்படுகிறது. பழைய நூல் சுருக்கமானது.”(அத்1.சூத்.2) எனும் மகாவம்சக் குறிப்பு, அந்நூல் எழுதப்பட்ட முறையை விளக்குகிறது.

பாளி(பாலி) மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தினை “வில்ஹெம் கெய்கர்” 1908 ஆம் ஆண்டில் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பினை “திருமதி மபெல் ஹேனெஸ் பொடே”, “ஆங்கிலத்துக்கு மொழிமாற்றினார். “வில்ஹெல்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இலங்கை சர்க்காரால் அதிகார பூர்வமான நூலாக வெளியிடப்பட்ட பதிப்பை” எஸ். சங்கரன் தமிழ்ப்; படுத்தி 1962 இல் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் “வில்ஹெம் கெய்கர்” இன்; ஆங்கில நூலும் அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பும் காணப்படுகிறது.

மகாவம்சம் எழுதப்பட்டுள்ள முறையும், மகாவம்சம் மொழி பெயர்க்கப்பட்ட முறையும், மகாவம்சத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழைய வரலாற்றுச் சம்பவங்கள் கூறப்படுவதுவும் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வதில் பெரும் இடர்பாடுகளாகக் காணப்படுகின்றன. மேலும், “இலங்கை வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றை விட கூறப்படாதவை முக்கியமானவை” என்ற கருத்தும் உண்டு. எனவேதான் நுணுகித் திறனாய்ந்து பாரப்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட வேண்டியுள்ளது. மகாவம்சத்துடன் ஏனைய வரலாற்று நூல்கள் குறிப்பிடும் விடயங்களையும், ஏனைய வரலாற்று ஆதாரங்களையும்; இணைத்து நோக்குவதினூடாகவே சில முடிவுகளை தற்போதைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

முதலில் மகாவம்சத்தில் இலங்கையின் பண்டைய வரலாறு பற்றிக் கூறப்படும் தகவல்களில மட்டக்களப்பு பற்றிய தகவல்கள் கூறப்பட்டள்ளனவா என ஆராயலாம்.

நான்கு புத்தர்களின் வருகை

மகாவம்சத்தில் கூறப்படும் இலங்கை தொடர்பான முதல் வரலாற்றுத் தகவல் நான்கு புத்தர்களின் வருகையுடன் தொடர்பு பட்டவையாகும்.

மகாவம்சத்தின் பதினைந்தாவது அத்தியாயமான “மகா விகாரை” யின் 51 வது செய்யுளில் இருந்து 55 வது செய்யுள்வரை, தீவின் நண்பரான மஹிந்த தேரர் பின்னால் மகாஸ்தூபம் ஏற்பட்ட இடத்தக்குச் சென்றார் எனவும், அரண்மனைப் பூங்காவுக்குள் இருந்த காகுத தடாகத்தின் மேல்கரையில் சண்பகமலரால் அர்ச்சனை செய்தபோது பூமி அதிர்ந்தது எனவும், காவலன் காரணத்தை கேட்ட போது தேரர் அதற்கான காரணத்தைக் கூறினார் எனவும் விபரிக்கப்பட்டுள்ளது. காவலனுக்கு மஹிந்த தேரர் கூறிய காரணங்கள் 56 ஆம் செய்யுளிலிருந்து கூறப்பட்டுள்ளது.

56. பேரரசனே ! நான்கு புத்தர்களும் விஜயம் செய்த இதே இடம் ஸ்தூபம் கட்டுவதற்கு மிகவும் ஏற்றது. அது ஜீவர்களுக்கு ஆசியும், ஆனந்தமும் அளிப்பதாக இருக்கும்.
57. இந்த உலக யுகத்தில் முதலாவதாக காகசந்தர் என்பவர் இருந்தார்;. சத்திய முணர்ந்த அவ்வித்தகர், உலகமனைத்திலும் இரக்கம் கொண்ட உத்தமர்.

58. அப்போது இந்த மகாமேக வனத்துக்கு மகாதிட்டு என்ற பெயர். தலை நகரான அபாய கிழக்கே கடம்ப நதியின் மறுகரையில் இருந்தது.

59. அபயன் என்பவன் அதன் அரசனாக இருந்தான். அப்போது இத்தீவுக்கு ஓஜதீபம் எனப்பெயர்.

60. பூதங்களையுடைய சக்தியால் இங்கு மக்களிடையே கொள்ளை நோய் பரவியது. பத்து அபூர்வ சக்திகளையும் பெற்றிருந்த காகசந்தர் இதையறிந்தார்.

61. இதற்கு முடிவு கட்டி, இங்குள்ள மக்களை மதம் மாற்றித் தர்மத்தைப் பரப்புவதற்காக அவர் இரக்க சிந்தனையால் துண்டப்பட்டு,

62. நாற்பதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்தார்.

63. வந்து, தேவகூட மலை மீது நின்று கொண்டரர்.

இலங்கை தொடர்பான முதல் வரலாற்றுத் தகவல் இதுவே எனலாம்.

மகாவம்சத்தின் 91 வது செய்யுளிலிருந்து இரண்டவதாக இலங்கைக்கு வந்த புத்தர் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுகின்றன.

91. இரண்டாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் கோநாகமனர். எல்லாம் அறிந்த அவர் உலக மக்களிடம் இரக்கம் கொண்டவர்.

92. அச்சமயம் இந்த மகா மேக வனத்துக்கு மகாநோமா என்று பெயர். தலைநகர் வர்த்தமானா தெற்குப் புறம் இருந்தது.

93. அந்தப் பகுதியை அப்போது அண்ட அரசனுடைய பெயர் சமிதன் என்பதாகும். அப்போது இத் தீவுக்கு வரதீபம் என்று பெயர்.
94. வரதீபத்தில் அப்போது பஞ்சக் கொடுமை நிலவியது. இதை யறிந்த கோநாகமனர் அதற்கு முடிவு கட்டவும்,

95. பின்னர் தமது மார்க்கத்தை இத்தீவில் பரவச் செய்து மக்களை மாற்றுவதற்காகவும் அவர்,

96. இரக்க உணர்வினால் உந்தப்பட்டு முப்பதாயிரம் சீடர்களுடன் ஆகாயமார்க்கமாக வந்து

97. சுமணகூட மலை மீது நின்று கொண்டார்.

125 வது செய்யுளிலிருந்து மூன்றாவதாக இலங்கைக்கு வந்த புத்தர் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுகின்றன.

125. மூன்றாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் காச்யபர். எல்லாம் அறிந்த இவர் ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர்.

126. மகா மேக வனத்துக்கு (அப்போது) மகா சாகரம் என்று பெயர்.

127. விசாலா எனப்பட்ட தலைநகரம் மேற்குப் புறம் இருந்தது. அதையாண்ட அரசனுடைய பெயர் ஜெயந்தன் என்பது. அப்போது இத்தீவுக்கு மந்ததீபம் என்று பெயர்.

128. அப்போது அரசன் ஜெயந்தனுக்கும், அவனுடைய தம்பிக்குமிடையே பயங்கரமான போர் மூண்டது.

129. பத்து விசேச சக்திகளைப் பெற்ற காச்யபர், போரினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளை அறிந்து இரக்கம் கொண்டார்.

130. அதற்கு முடிவு கட்டவும், பின்னர் தீவில் ஜீவர்களை மாற்றவும், தமது மார்க்கத்தைப் பரப்பவும்,

131. இரக்கத்தினால் உந்தப்பட்டவராக அவர் இருபதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, சுபகூட மலை மீது நின்று கொண்டார்.

160 வது செய்யுளிலிருந்து நான்காவது புத்தர் வருகை பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

160. இந்த யுகத்தில் நான்காவது புத்தராக கோதமர் அவதரித்தார். முழுமையாக சத்தியத்தை அறிந்த அவர் உலகிடம் இரக்கம் கொண்டவர்.

161. அவர் முதல் முறையாக இங்கு வந்து போது யÑர்களை இங்கிருந்து விரட்டினார். இரண்டாவது முறையாக மீண்டும் வந்துபோது நாகர்களை அடக்கினார்.

162. கல்யாணியில் நாக மணியகி வேண்டிக் கொண்டதற்கிணங்க மூன்றாவது முறையாக திரும்பி வந்த அவர், பிக்குகளுடன் அங்கு உணவருந்தினார்.

மகாவம்சத்தின் படி, நான்கு புத்தர்களின் வருகையில் முதல் புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு ஓஜதீபம் என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் அபயன். தலை நகரம் அபாய. இரண்டாவது புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு வரதீபம் என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் சமிதன். தலைநகர் வர்த்தமானா. மூன்றாவது புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு மந்ததீபம் என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் ஜெயந்தன். தலைநகரம் விசாலா. இந்த விபரிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களிலிருந்து குறிப்பான முடிவினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

பகவன் புத்தரின் வருகை

மகாவம்சத்தில் பதினைந்தாவது அத்தியாயமான “மகா விகாரை” யிலும், “புத்தர் வருகை” எனும் முதல் அத்தியாயத்திலும்;, பகவன் புத்தர் இலங்கைக்கு மும்முறை மேற்கொண்ட விஜயம் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. முதல் விஜயத்தின் போது, மகாநாகவனத்தில் (மஹியங்கனாவில்) வாழ்ந்த இயக்கர்களை (யக்கர்கள்) அங்கிருந்து விரட்டுவதற்காக சென்றார் எனவும், இரண்டாவது விஜயத்தின் போது, நாகர்களான மகேதரனுக்கும் குலாதரனுக்கும் இடையில் மூண்ட போரைத் தீர்த்துவைப்பதற்காக நாகத்வீபத்திற்குச் சென்றாரெனவும், (நாகர்களை அடக்கினார் எனவும்) மூன்றாவது விஜயத்தின் போது, நாக மன்னன் மணியக்கியன் அழைத்ததன் பேரில் கல்யாணி நாட்டிற்குச் சென்றார் எனவும் கூறப்பட்டுள்ளது. “புத்தர் வருகை” எனும் முதல் அத்தியாயத்தில்,

19. போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில் பூச பௌர்ணமியன்று இலங்கையில் தமது தர்மத்தைப் போதிப்பதற்காகத் தாமே அங்குப் புறப்பட்டார்.

20. தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப் போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது. அப்போது இலங்கையில் இயக்காஸ் (இயக்கர்)  நிரம்பியிந்தனர். அவர்களை அங்கிருந்து முதலில் விரட்ட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.

21. இலங்கையின் மத்தியில் அழகிய நதிக் கரையில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள, மனதுக்கு ரம்யமூட்டும் மகாநாகவனத்தில் இயக்கர்கள் வழக்கமாகக் கூடும் இடம் உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும்.

22. அப்போது தீவிலுள்ள எல்லா யக்கர்களும் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

23. அப்போது இயக்கர்களின் பேரவைக் கூட்டத்துக்கு பகவன் புத்தர் சென்றார். அங்கு கூட்டத்தின் நடுவில்.

24. அவர்களுடைய தலைக்கு மேலாக, பிற்காலத்தில் மஹியங்கான ஸதூபம் அமைந்த இடத்தில் அவர் வானத்தில் நின்றார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து,

27. “இங்கே நான் உட்காருவதற்கு ஓர் இடம் கொடுங்கள்” என்று கூறினார். யÑர்கள், “இறைவனே எங்கள் தீவு முழுவதையும் வேண்டுமானாலும் தருகிறோம். எங்களுக்குப் பயத்திலிருந்து விடுதலை அளியுங்கள்” என்று கூறினார்கள். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகவன் புத்தர் போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில் இலங்கை வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. புத்தர் காலம் கி.மு. 563 – கி.மு. 483 ஆகும். எனவே கி.மு. 500 களில் பகவன் புத்தரின் முதலாவது இலங்கை வருகை இடம் பெற்றிருக்காலம். இக்குறிப்புக்களனால்தான், புராதன காலத்தில் – புத்தரின் முதல் வருகைக்கு முன்னரே இயக்கர்கள்-யக்கர்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளார்கள் – அவர்கள் மஹியங்கனையில் (மகாநாகவனத்தில் – மஹியங்கானவில்) பேரவைக் கூட்டத்துக்கு அவர்கள் ஒன்று கூடினார்கள் என்ற முடிவு பெறப்பட்டுள்ளது.

மகாநாகவனம் (பிற்காலத்தில் மஹியங்கான ஸதூபம் அமைந்த இடம்) மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் கொண்டது எனக்குறிப்பிடப்படுகிறது. குணராசா அவர்கள், ஒரு ஜோசனா தூரம் என்பது ஏறத்தாழ 10 மைல் என்கிறார்.(பக். 11). எனவே முப்பது மைல் நீளமும் பத்து மைல் அகலமும் கொண்ட பிரதேசமாக மகாநாகவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தரின் இலங்கை வருகையுடன் இலங்கைத் தீவு முழுவதும் வாழ்ந்த யக்கர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து கிரீத்விபத்திற்கு விரட்டப்பட்டார்கள். இதன் பின்னர்,

28. தேவர்கள் கூட்டத்தில் பகவர் புத்தர் தமது தர்மத்தைப் போதித்தார். கோடிக்கணக்கான ஜீவர்கள் மதம் மாறினர். கணக்கற்றவர்கள் திரிசரண மடைந்து சீலத்தைப் பெற்றனர். எனக் கூறப்பட்டுள்ளது.

எச்.டபிள்யு.கொடிறின்றன், “கௌதமபுத்தர் வருகை அல்லது அவருக்கு முந்திய புத்தர்களின் வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா. பழங்கதைகளின் படி இந்நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கர், நாகர், தேவர் ஆகியோராவர். இப்பெயர்களில் யாதாயினும் உண்மை மறைந்திருக்கலாம்.”(பக் – 6) எனக்குறிப்பிடுகின்றார். எனவே, விஜயன் வழியில் நிகழ்ந்த ஆரியக் குடியேற்றங்களுக்கும், பௌத்த மதத்தின் வருகைக்கும் சிங்கள மொழியின் தோற்றத்திற்கும் முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் பற்றிய “பழமையான வராலற்றுப் பதிவுகளாக” இத்தகவல்களைக் கருதலாம்.

விஜயன் காலம்

இலங்கைக்கு விஜயன் வந்தமை பற்றி மகாவம்சம் ஆறாவது அத்தியாம் “விஜயன் வருகை எனும் பகுதியில்,

41. விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபண்ணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையிறங்கினான். ததாகதர் நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே அமர்ந்த அதே நாளில் இது நடந்தது

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் புத்தரின் நிர்வாண ஆண்டு கி.மு. 544 என்பதே வழக்கு என வில்ஹெம் கெய்கர் குறிப்பிட்டுள்ளதனை முன்னர் கண்டோம். கொடிறின்டனும் விஜயன் காலத்தை கி.மு. 543 எனக்   குறிப்பிட்டுள்ளார்.

மகாவம்சத்தின் ஏழாம் அத்தியாயம் “விஜயனின் பட்டாபிசேகம்” எனும் பகுதியில்,

9. …அங்கு பெண் நாய் உருவில் ஒரு ய~pனி தோன்றினாள். அவள் குவன்னா என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள்.

11. விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசன் தடுத்ததையும் கேளாமல் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.….
12. அவன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த ய~pனியின் எஜமானி குவன்னா என்பவள் மரத்தடியில் சந்நியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள். எனவே

புத்தரின் மகாநாகவனத்திற்கான முதல் வருகையின் போது, அங்கு புத்த மதம் பரவச் செய்யப்பட்ட போதும், யÑர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டப்பட்ட போதும், குறுகிய ஒரு காலத்தில் மீண்டும் இலங்கையில் யக்கர்கள் ஒரு ராஜ்யத்தை அமைத்து வாழந்துள்ளார்கள் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. தொடர்ந்து,

16. போனவர்கள் யாரும் திரும்பி வராததைக் கண்ட விஜயன் பயமடைந்தான். ஐந்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கொண்டு புறப்பட்டான்.

17. அங்கு யாரும் மனிதர்கள் வந்ததற்கான காலடிச் சுவடு தென்படவில்லை. சந்நியாசி உருவில் ய~pணியை மட்டும் கண்டான். எனவும்,

20. வில்லை அவளுடைய கழுத்தில் மாட்டி இழுத்து அவளுடைய தலைமயிரை இடது கையினால் பற்றித் தூக்கி நிறுத்தி வலது கையினால் கையிலிருந்த வாளை ஓங்கிக் கொண்டு கத்தினான்.

21. “அடிமையே! என்னுடைய ஆட்களைத் திருப்பிக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்.” ய~pணி பயத்தினால் நடுங்கியவளாக,
22. தன் உயிருக்கு மன்றாடினாள். ‘என்னைப் பிழைக்க விடுங்கள். நான் உங்களுக்கு ஒரு ராஜ்யத்தையே தருகிறேன்…. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் மகாவம்சக் குறிப்புக்களிலிருந்து இயக்கர்கள் ஒரு ராஜ்யத்தை அமைத்து சிறப்புறடன் இலங்கையில் வாழ்ந்து வந்ததை அறிய முடிகிறது. மேலும் மகாவம்சம் யக்கர்கள் பற்றிய சில தகவல்களைத் தருகிறது.

30. இரவு நகர்ந்து கொண்டேயிருக்க இசை ஒலியையும் பாடுவதையும் அவன் கேட்டான். அருகில் படுத்திருந்த யக்கிணியை ‘ இந்த சத்தத்தின் பொருள் என்ன?’ என்று கேட்டான்.

31. ‘எனது எஜமானுக்கு அரசுரிமைதை; தருவேன். ஏல்லா யக்கர்களையும் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் இங்கு என் மூலமாக வாழத்தொடங்கியதால் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்” என்று ய~pணி எண்ணினாள்.

32. அவள் அரசனிடம் கூறினாள் : ‘ இதோ இங்கு சிரிஸவத்து என்னும் பெயருடைய இயக்கர் நகரம் ஒன்றிருக்கிறது.

33. ‘இலங்கை நகரில் வசிக்கும் இயக்கர் தலைவனுடைய மகள் இலங்கையிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்; அவளுடன் அவளுடைய தாயும் வந்திருக்கிறாள்.

34. ‘திருமணத்திற்காக அங்கே பெரிய கொண்டாட்டம் நடைபெறுகிறது. அது ஏழு நாட்கள் நடக்கும். அந்த சத்தம்தான் இது. ஏராளமான பேர் அங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிலிருந்து, இயக்கர்கள் இலங்கை நகரில் வசித்து வந்ததனையும், ஒரு அரச அமைப்பை அவர்கள் பெற்றிருந்ததனையும் திருமணத்தினை பெரும் கொண்டாட்டமாக கொண்டாடியமையையும் அறிய முடிகிறது. பகவன் புத்தரினால் தேவர்கள் மற்றும் ஜீவர்கள் மதம் மாற்றப்பட்ட போதிலும் அம்மதம் வளர்ச்சியுற்றது என்ற தகவல் சொல்லப்படவில்லை. இது குறித்து குணவர்த்தனா, “விஜயனின் கதை பற்றி மகாவம்சத்தில், சில கூறுகள் புத்தரின் வருகை பற்றி இதே நூல் கூறும் சில சம்பவங்களுடன் முரண்படுகின்றன. முதல் தடவை புத்தர் இலங்கைக்கு வந்தபோது இங்கு இயக்கர்களை கிரிதீபத்திதுக்குத் துரத்தியதாகக் கூறுகிறது. ஆனால் விஜயன் இலங்கைக்கு வந்த போது இங்கு இயக்கர்களின் வளம் மிகுந்த அரசு இருந்ததென்றும் கூறுகின்றது.”(பக். 69) எனக்குறிப்பிடுகிறார்.

யக்கர்கள் கூடிய சிரிஸவத்து பற்றி கொடிறின்டன், “சிறீவத்து என்பது விசயன் இறங்கிய இடத்துக்கு அண்மையில் இருந்தது என்பதாகும். ஏனெனில் அங்கு நடந்து திருமண விளையாட்டுக்களின் ஓசையை அவன் கேட்டு…” எனக் குறிப்பிடுகிறார். அத்துடன், “ இவ்வியக்கர்களின் முக்கிய இடங்கள் சிறீவத்து, இலங்காபுரம் ஆகியவையாம். பின்னர் இவை “லொக்கலை”, “இலக்கலை” என்னும் குன்றுகளேயாம் எனக் கருதப்பட்டன.”(பக். 7) எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விசயன் இலங்கை வருகை குறித்து வேறு பல மரபுக்கதைகள் குறித்து விளக்கும் கொடிறின்டன், “இதிலிருந்து அறியக் கிடப்பது யாதெனில் விசயனின் கதை பழைய கட்டுக்கதைகளைச் சேர்ந்த ஒன்றாகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் இக்கட்டுக்கதைகளில் இலங்கையில் வாழ்ந்த இயக்கர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் அவர், “பழங்கதைகளின் படி இந்நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கர், நாகர், தேவர் ஆகியோராவர். இப்பெயர்களில் யாதாயினும் உண்மை மறைந்திருக்கலாம்”(பக் – 6) எனக்குறிப்பிடுகிறார்.

இதன் பின்னர் விஜயன் அரசனாக முடி சூட்டிக் கொள்ள, உயர்குல மங்கை ஒருத்தியை தேடி “தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகரிலுள்ள” “பாண்டிய மந்திரிகளிடம்” தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பெண் கேட்க சிலர் விஜயனுடைய மந்திரிகளால் தூது அனுப்பப்பட்டனர். அவர்கள் தூதினால் பாண்டியனும், தனது மகளையும், தேர்ந்தெடுத்த பெண்களையும், கைத்தொழில் கலைஞர்களையும், பதிணெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களையும் கொண்ட “பெருவாரியான மக்களை” அனுப்பி வைத்தான். ஆவர்கள் இலங்கைத் தீவில் மகாதிட்டு ( மாந்தோட்டை) எனப்படும் இடத்தில் கரையேறினர்.

இவ்விடயம் பற்றிக் கூறும் குணவர்த்தனா, “56-57 செய்யுள்கள் மதுரை அரசன் பற்றிக் கூறுகின்றன. விஜயனின் பரிவாரங்களான எழுநூறு பேரின் வழித்தோன்றல்கள் சிகளர் எனவும் ஆயிரம் குடும்பங்களின் வழித்தோன்றல்களை இக்குழுவிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் போதும் ஆயிரம் குடும்பங்களின் வழித்தோன்றல்கள் சிகளருடன் சேர்த்துக் கொள்ளப்படக்கூடாது என்பதை வம்சத்த பகசினி அழுத்தமாகச் சுட்டுகிறது எனலாம்” எனக் குறிப்பிடுகிறார். அதே வேளை பாண்டிய இளவரசிக்கும் விஜயனுக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இதன் பின் விஜயன்,

60. “அன்பே! குழந்தைகளை விட்டுவிட்டு நீ இப்போது போய்விடு. அமானுய சக்தி படைத்தவர்களைக் கண்டால் மனிதர்கள் எப்போதும் பயப்படுகிறார்கள், என்றான்.

61. இதைக் கேட்டதும் அவளுக்குப் யக்கர்கள் பற்றிய பயம் பற்றிக் கொண்டது. “தாமதிக்காதே, உனக்கு அயிரம் பணம் செலிவட்டு பூஜை போடுகிறேன்” என்று விஜயன் ய~pணியிடம் சொன்னான்.

62. மீண்டும் மீண்டும் அவள் மன்றாடிக் கேட்டது பயனில்லாமற் போகவே தன் இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு லங்காபுரத்துக்கு அதனால் தீங்கு நேரும் என்பதை அவள் அறிந்த போதிலும் சென்று விட்டாள்.

63. வெளியே குழந்தைகளை விட்டுவிட்டு அவள் மட்டும் நகருக்கள் சென்றாள். நகரத்திலிருந்த ய~ர்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டனர்.

64. அவர்களுடைய பயத்தில் அவளை உளவுகாண வந்தவளாகக் கருதிப் பரபரப்படைந்தனர். முரடனான ஒருவன் முட்டியினால் ஒரே குத்தில் அவளைக் கொன்றுவிட்டான்.

65. அவளுடைய தாய்மாமனான ஒரு   இயக்கன் நகரத்துக்கு வெளியே சென்றபோது அங்கு குழந்தைகளை கண்டு அவர்களை “நீங்கள் யாருடைய குழந்தைகள்”? என்று கேட்டான்.

66. அவர்கள் குவன்னாவின் மக்கள் என்பதை அறிந்ததும் அவன் “இங்கே உங்களுடைய தாயாரரைக் கொன்று விட்டார்கள். உங்களைப் பார்த்தால் கொன்று விடுவார்கள்.” என்றான்.

67. விரரைவாக அங்கிருந்து ஓடிய இவர்கள் சுமண கூடத்தை அடைந்தனர். இவர்களில் மகன்தான் மூத்தவன்.

68. உரிய வயதையடைந்ததும் அவன் தன்னுடைய தங்கையையே மனைவியாக்கிக் கொண்டான். நிறையக் குழந்தைகளைப் பெற்றுப் பெருக்கிக் கொண்டு மலயப்பகுதிகயில் அரசனது அனுமதியுடன் அவர்கள் வசித்து வந்தனர். இவர்களிடமிருந்து தோன்றியவர்கள் தான் புலிந்தர்கள்.

விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகளின் வாரிசுகாளவே புலிந்தர்களின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. குணவர்த்தனா அவர்கள், வம்சத்தபகசினி, இயக்கர்கள் பற்றிய மேலும் தகவல்கைளத் தருகிறது. இயக்கர்களுடைய தலைவன் மகாகலசேன எனவும் அவன் சிறிசவத்து என்ற இடத்தில் இருந்தான் எனவும் கொண்டா என்ற இயக்கினியின் புதல்வியான பொலமிதாவை அவன் மணமுடித்தான் எனவம் இந்நூல் கூறுகிறது. குவேனியின் இரு பிள்ளைகளும் ஜீவகத்தா, தீபல்ல என அழைக்கப்பட்டனர் எனவும் இது கூறுகிறது” (பக் 69) எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள வரலாற்று நூலில் குவேனியின் சகோதரன் “குமார” வும் எனக்கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்று நூல்களில் இயக்கர்கள் பற்றிய விபரிப்பு, அவர்களை அமானுஸ்ய சக்தி படைத்தவர்காளக காட்டுகிறது. புத்தரின் வருகைளின் போது (கி.மு. 500) அவர்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்தவர்கள். விஜயன் வருகையின் போது அவர்கள் இலங்கையில் சிறப்பானதொரு நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். பின்னர், பண்டு அபயன் (கி.மு. 437), துட்ட காமினி (கி.மு. 205. – 161) ஆகியோர் பற்றிய விபரிப்புக்களிலும் இயக்கர்கள் பற்றிய விபரிப்பு இடம் பெறுகிறது. இவ்வகையில் அவர்களுடைய வரலாறு கிமு 500 களிலிருந்து கி.மு 160 வரை ஏறக்குறைய 350 வருடங்கள் கொண்டதாக காணப்படுகிறது. எனவே  இலங்கையின் பண்டைய வரலாற்றில் முக்கியமானதொரு மக்கள் பிரிவினராக இவர்களைக் கருத வேண்டும்.

பௌத்த மதப் பரவலாக்கத்தின் போது அழிந்து போனவர்கள் அவர்கள் என்ற கருத்தினையும் வந்தடைய வேண்டியுள்ளது. சில வேளை இவர்கள் வியஜனுடன் ஆரம்பித்த குடியேற்றவாசிகளுடன் ஒன்று கலந்திருக்க வேண்டும். அல்லது தமது தனித்துவத்தினைப் பேணிக்கொண்டு ஒதுங்கி, அநுராதபுர இராச்சியத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறன பிரதேசம் இலங்கையின் வட – கிழக்கு மற்றும் உருகுணை பிரதேசமாகும்.

பண்டைய இலங்கை வராலற்று நூல்களில், நாகர்கள் பற்றிய தகவல்கள் நட்பு ரீதியிலானதாக விபரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இயக்கர்கள்பற்றிய விபரிப்புக்கள் அவர்களை எதிரிகளாக காட்டும் வகையில் இடம் பெறுகிறது.

மகாவம்சம் மட்டுமன்றி, தீபவம்சம், வம்சத்தபகசினி, திவ்யவதனா போன்ற இலங்கையின் பண்டைய வரலாற்றை விளக்கும் நூல்கள் பலவும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இது குறித்து விளக்கும் குணவர்த்தனா, “மேலே காட்டப்பட்ட பெரும்பாலான ஐதீகங்கள் இலங்கையின் முதன்முதலாக இயக்கர்களே இருந்தனர் என்பதைக் கூறுகின்றன. ஆனால் எல்லாக்கதைகளும் இயக்கர் பற்றிய பகை நோக்கினையே கொண்டுள்ளன. புத்தர் இயக்கர்களைத் துரத்தினார் எனத் தீபவம்சம் கூறுகிறது. ஆனால் திவ்யவதனாவும் ஹியன்-சாங்கின் இரண்டாவது கதையும் சிம்களவே அவர்கைளத் துரத்தினான் எனக்கூறுகின்றன.” (பக் 69-70) எனக்குறிப்பிடுகிறார்.

இயக்கர்கள் இலங்கைத்திவின் பல பாகத்திலும் வாழ்ந்தவர்கள் – மஹியங்கனையில் ஒன்று கூடுபவர்கள் என்ற மகாவம்சக் கதையினாலும் மஹியங்கனையில் தற்காலத்தில் வேடர்கள் வாழ்ந்து வருவதனாலும் இயக்கர்கள் தற்கால வேடர்கள் என்ற முடிவினை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது போலும். மஹியங்கனை மட்டக்களப்பின் மேற்கெல்லையில் அமைந்திருந்திருப்பதனாலும் மட்டக்களப்பில் பூர்விக குடிகளாக வேடர்கள் வாழ்ந்து வந்தமையாலும் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் இயக்கர்கள் (யக்கர்கள்) என்ற முடிவு ஏற்பட்டிருக்காலம்.

நாகர் என்ற தொடரினால் வரும் ஊர்ப்பெயர்கள் காரணமாக (நாகர் முனை) நாகர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்திருக்காலம் என்ற முடிவினை எட்டியிருக்காலம். ஆனால் மகாவம்சத்தில்,

84. எதிர்காலத்தில் இலங்கையின் உய்வையெண்ணி அப்போது இலங்கையில் இருந்த நாகர்களுக்கும் அசுரர்களுக்கும் அதிகமான அளவு நன்மைகளைச் செய்வதற்காக பேரருள் பெருந்தகை இவ்வாறாக இந்த அழகிய தீவுக்கு மூன்று முறை விஜயம் செய்தார். உண்மையின் ஒளி வீசி ஜொலிக்கும் இத்தீவு அதனால்தான் பௌத்தர்களுடைய பெருமதிப்புக்கு உள்ளானதாயிற்று. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் யக்கர்கள் என்பதற்குப் பதிலாக அசுரர்கள்(asuras) எனக்குறிப்பிடப்பட்டுள்ளமைய அவதானிக்கலாம். எனவே இயக்கர்கள் (யக்கர்கள்) எனும் சொல்லினால் குறிப்பிடப்படுபவர்கள் யார் என்பதனை அறியமுடியாமலுள்ளது. மேலும் 12 ஆம் அத்தியாயத்தில்,

20. இதே போல் இமாலயத்திலுள்ள எண்பத்தி நாலாயிரம் நாகர்களும், ஏராளமான கந்தர்வர்களும், யக்கர்கள், கும்பந்தர்களும் புத்த மார்க்கத்துக்கு வந்தனர். என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது போன்ற பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் யக்கர்கள் என்பது, பழங்குடி மக்களைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு சொல்லாக இருக்கலாம் எனக்கருத இடமுண்டு. தற்காலத்தில் யக்கர்கள் இந்திய – இலங்கை தொல் குடியினர் என்றே குறிப்பிடப்படுகிறார்கள். அவ்வாறெனில் உண்மையில் யக்கர்கள் எனக் குறிப்பிடப்பட்டோர் யார் என்பதனை கண்டறிய வேண்டும்.

மகாவம்சத்தில், பண்டு அபயன் பட்டபிசேகம் எனும் 10 ம் அத்தியாயத்தில், 95. வது செய்யுளில் “ … இதற்கு வடக்கே, (சண்டாள கிரமம்) இதற்கும் பாசான மலைக்குமிடையே வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. (அருகிலுள்ளது காமினி வாபி- கரம்பவக்குளம்)” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து யÑர்களும் வேடுவர்களும் வேறுபட்டவர்கள் என மகாவம்சம் காட்டுவதனை அவதானிக்க முடிகிறது. மேலும் தழிர்கள் என்ற சொல்லின் பயன்பாடும் மகாவம்சத்தில் காணப்படுவதனால் யÑர்களும் தமிழர்களும் வேறுபட்டவர்கள் என மகாவம்சம் குறிப்பிடுவதாகவே கருதவேண்டியள்ளது.

எனவே இயக்கர்கள் பற்றிய விரிவானதொரு தேடல் மூலமே பல வினாக்களுக்கு விடை கண்டறியலாம்.

இதே வேளை குணவர்த்தனா அவர்கள், இலங்கையில் மூன்று பிரதான மக்கட்குழுக்கள் இருந்ததை விஜயன் பற்றிய ஐதீகம் கூறுகிறது. இது சிங்களருடைய மூலம் பற்றி விரிவாகக் கூறும் அதே சமயம் புலிந்தர்கள், சேவை செய்யும் சாதியினர் ஆகியோர் மூலம் பற்றியும் கூறுகிறது எனவும் “எனினும் இராச்சியத்தில் இருந்த சகல மக்களையும் இணைக்கக்கூடிய சிங்கள உணர்வின் வளர்ச்சியை இக்காலத்தில் தொழிற்பட்ட சில காரணிகள் தடுத்தன என்று தோன்றுகின்றது”(பக்74) எனவும் குறிப்பிடுகிறார். சேவை செய்யும் சாதியினர் என்பது மதுரை இளவரிசியுடன் வந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மட்டக்களப்பில் பூர்விக காலத்தில புலிந்தர்கள் வாழ்ந்தார்கள் என்ற செய்தியும் கவனிப்பிற்குரியது. மதுரை இளவரசியினுடன் வந்த – சேவை செய்யும் குடியினர் பற்றியும் அறிய வேண்டும். இலங்கை வரலாற்று நூல்கள், இடப்பெயர்வுகள் குறித்துக் காட்டிய அக்கறையை உள்ளுர் சனத்தெகைப் பெருக்கம் தொடர்பாக காட்டவில்லை என்ற கருத்தும் கவனத்திற்குரியது.

பண்டு அபாயன் காலம்

மகாவம்சத்தில், “பாண்டு அபயன் பட்டபிசேகம்” எனும் பத்தாம் அத்தியாயத்தில், “பண்டுலா என்னும் பெயருடைய பிராமணன் பணக்காரன். வேதங்களைக் கற்றவன். அவன் தென் பகுதியில் பண்டுலகாமக என்னும் கிராமத்தில் வசித்து வந்தான்” (செய்.20) எனும் செய்யுளில் குறிப்பிடப்படும் தகவலானது வேதங்களைக் கற்ற பிரமணன் தென்பகுதியில் வாழ்ந்து வந்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிராமணனுடைய மகன் சந்தன். இவர்கள் இருவரிடமும் பாண்டு அபயன் ஆட்சி நடத்துவதற்குரிய கலைகளைக் கற்றுக் கொண்டான் எனவும், பண்டுலா, பாண்டு அபயனுக்கு நூறாயிரம் பணத்தைப் படை வீரர்களைத் திரட்டுவதற்கு கொடுத்தார் எனவும் பிராமணனுடைய மகன் சந்தன் என்பவன் பாண்டு அபயனுக்கு உதவியாகசச் சென்றான் எனவும் மகாவம்சச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற பாண்டு அபயன் சந்தனை தனது மந்திரியாக நியமித்தான். பாண்டு அபயன் காலம் கி.மு. 437 ஆகும். பிராமணர்கள் பற்றிய குறிப்பு பல இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

துட்ட  காமினி காலம்

மகாவம்சத்தில் “ஐந்து அரசர்கள்” எனும் 21 ஆவது அத்தியாயத்தில் “ சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப்பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான் (செய்.13) எனக்குறிப்பிடப்படுகிறது. தமிழன் ஏலாராவின் காலம் கி.மு. 205. – 161 ஆகும். இக்காலத்தில் உருகுணை இராச்சியம் வளர்ச்சி கண்டது. உருகுணையிலிருந்து படைதிரட்டிய துட்டகாமினி எல்லாளனுடன் போரிட்டு வெற்றி பெற்றான்.

மகாவம்சத்தில் “படைவீரர்களை; திரட்டல்” எனும் 23 ஆவது அத்தியாயத்தில்  துட்டகாமினி பலமிக்க பத்து துணைவர்களைத் திரட்டிய விபரம் விபரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நந்த மித்திரன் எல்லாளனுடன் தொடர்பு பட்டவனாக கூறப்பட்டுள்ளான். மற்றயோர் நிமிலன், மகா சோனன், கோதாயிரம்பன், தேரபுத்ர அபயன், பரணன், வேலு சுமணன், கஞ்ச தேவன், பூஸ தேவன், லபிய வசபன் என்போராவர். இவர்கள் “இரண்டு யோஜனை தூரத்துள் வசிக்கும் பிரபுக் குடும்பத்திலிருந்து” (செய்.18) காவலுக்கு வரவழைக்கப்பட்டோராவர். வேலு சுமணன் “குடும்பியங்கானா” கிராமத்தைச் சேர்ந்தவன். இதிலிருந்து உருகுணை இராச்சியத்தில் பல சமூகக் குழுக்கள் வாழ்ந்தள்ளமையை அறிய முடிகிறது. இவர்கள் தமிழர்களா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

தற்போது, திஸ்சமகாரகாமத்துக்கு அருகில் நடைபெற்றுவரும் அகழ்வில் 2200 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வணிகர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளமை இத்தகைய ஆய்வின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது.

மகாவம்சத்தின், “துட்டகாமினி வெற்றி” எனும் 25 ம் அத்தியாயத்தில், “அரசன் துட்டகாமினி, ‘மார்க்கத்துக்குப் பெருமை தேட’ பெரும் படையைத் திரட்டிக் கொண்டு நதியின் மறுகரைக்குச்  செல்வதற்கு முடிவெடுத்து, திசமகாராமாவுக்குச் சென்று – பிக்குகளையும் அழைத்துக் கொண்டு , மலையத்திற்குச் சென்று அங்கிருந்து சாலையை(அநுராதபுரத்திற்கான) சீர்படுத்திக் கொண்டு குத்தஹாலாவை அடைந்தான். பின், ( காமினி – கி.மு 101-77 )

7. மஹியங்கானவுக்கு வந்து சேர்ந்த அவன் சத்தன் என்ற தமிழனை(Damila Chatta) வெற்றி கொண்டான். அதே இடத்தில் அவனைக் கொன்று விட்டு அம்ப திட்டகத்துக்கு (Ambatitthaka) வந்தான். அங்கு நதியிலிருந்து ஒரு சுரங்க வாயில் இருந்தது.

8. தித்தம்பன் என்ற தமிழனை  எதிர்த்து அவன் நான்கு மாத காலம் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது.

9. பலமுள்ள எதிரியை அவனால் சூழ்ச்சியால்தான் வெற்றி கொள்ளகொள்ள முடிந்தது. தாயாரைக் காட்டி அவனை வெற்றி கொண்டான்.

10. பிறகு நதியைக் கடந்துவந்து அரசன் ஒரே நாளில் ஏழு தமிழர்களை வெற்றி கொண்டு அமைதியை நிலைநாட்டினான். போரில் கொள்ளையடித்த பொருள்களைத் தனது படை வீரர்களுக்குக் கொடுத்து விட்டான். அதனால் அந்த இடத்துக்கு கோமாராமா என்ற பெயர் வந்தது.

11. அந்தர சோபாவில் அவன் மகா கொத்தனை வெற்றி கொண்டான். டோண காவரத்திலும், ஹாலபொல இஸாரியத்திலும், நாழிசோப நாழிகாவிலும் அவனுக்கு வெற்றி கிடைத்தது.

12. தீகாபய கல்லகத்தில் அதே போல் தீகாபயனை வெற்றி கொண்டான். நான்கு மாதங்களுக்குள் கச்ச திட்டத்தில் கபிசீகனை வென்றான்.

13. கோதானகரத்தில் கோதனைப் போரிட்டு வென்றான். வஹித்தலையில் தமிழன் வஹித்தனை முறியடித்தான்.

14. கும்பாகம கும்பா, நந்திகாம நந்திகா, கானுகாமத்தில் கானு, மாமனும் மருமகனுமான தம்பா, உனமா ஆகியவர்களையும் அவன் தோற்கடித்தான்.

15. ஜம்புவும் அவன் வசப்பட்டது. அவன் கைப்பற்றிய ஒவ்வொரு கிராமமும் படைத்தலைவர்களின் பேரால் அழைக்கப்பட்டது.

என்ற விபரிப்புக்களில், மட்டக்களப்பின் மேற்கெல்லையில் உள்ள மஹியங்கனையில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளது.

இக்காலத்திற்கு முன்பு, மதுரை இளவரசியினுடன் வந்த – சேவை செய்யும் குடியினர், அநுராதபுரியினை ஆண்ட தென்னிந்திய தமிழ் அரசர்கள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. எல்லாளன் அநுராதபுரியை ஆட்சி செய்தது மட்டுமன்றி மகாவலி கங்கை வரை தனது படைகளை விஸ்தரித்திருந்தான். ஆனால் அவனது படையினைரைச் சேர்ந்தவர்கள்தான் இம் மஹியங்கணையில் வாழ்ந்த தமிழர்கள் என கூறமுடியாதுள்ளது. ஏற்கனவே மஹியங்கணை இயக்கர் ஒன்று கூடும் இடமாக சித்தரிக்கப்பட்டள்ளது. மஹியங்கணையில் அழிக்கப்பட்டவர்கள் பற்றி மகாவம்சத்தில், ‘தன்னைச் சேர்ந்தவர்களையே யாரென்று தெரிந்து கொள்ளாமல் அரசன் தன் மக்களையே கொல்கிறான்” (அத், 25: செய். 16) என்ற மகாவம்சச் செய்யுளினால் அழிக்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.

இச்செய்தி மூலம் மஹியங்கணையிலிருந்து பொலன்னறுவை வரையிலான பகுதியில், மஹியங்கானவில் சத்தன் என்ற தமிழன், அம்பதிட்டகத்தில் தித்தம்பன் என்ற தமிழன், நதிக்கப்பாலிருந்த (கோமாராமா) ஏழு தமிழர்கள், அந்தர சோபாவில் மகா கொத்தன், டோண காவரத்திலும், ஹாலபொல இஸாரியத்திலும், நாழிசோப நாழிகாவிலும் இருந்தவர்கள், தீகாபய கல்லகத்தில்; தீகாபயன், கச்ச திட்டத்தில் கபிசீகன், கோதானகரத்தில் கோதன், வஹித்தலையில் தமிழன் வஹித்தன், கும்பாகம கும்பா, நந்திகாம நந்திகா, கானுகாமத்தில் கானு, மாமனும் மருமகனுமான தம்பா, உனமா மற்றும் ஜம்பு ஆகியோர்கள் வாழ்ந்தமை பற்றி அறிய முடிகிறது. இதில் பலர் தமிழர்கள் ஆவர்.

பொலன்னறுவைக் காலம்

கொடிறின்றன் அவர்கள், “முதலாம் பராக்கிரமபாகுவின் காலத்து இலங்கைப் பதிவுகள் கன்னடர், கேரளர், தமிழர் ஆகியோரைப் பெயர்கொண்டு குறிக்கின்றன”(பக65) எனக்குறிப்பட்டுள்ளார். முதலாம் பராக்கிரமபாகு கி.பி.1153 முதல் 1186 வரை பொலன்னறுவை இராச்சியத்தின் மன்னாக இருந்தவனாவான். குணவர்த்தனா அவர்களின் கருத்துப்படி, (பக்.91-92) இக்காலத்தில் தென்கிழக்காசியாவிலிருந்து ஐாவகர் குடியேற்றங்கள் நிகழ்ந்தமை பற்றியும் அறிய முடிகிறது. ஆறாம் பராக்கிரமபாகு (1412-67) வின் காலத்தில் தனது தெமல, சிங்கள, மலல, கன்னட, தொலுவர ஆகிய எதிரிகைள முறியடித்து ஒரு பூரண தனியரசை ஸ்தாபித்தான். இக்காலப்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தின் வளர்ச்சி ஏற்படத்தொடங்குகிறது.

ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளை மணம் செய்தவன் தமிழ் இளவரசன் நன்னுருத்தன் ஆவான். இக்காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழக் கவிதைகளும் பாடங்களும் பிரபலயம் பெற்றிருந்தன. கோகில சந்தேஸ எனும் நூலில் தமிழ், பாளி, மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தொகுக்கப்பட் கவிதைகள் ஆறாம் பராக்கிரமபாகுவின் சபாமண்டபத்தில் பாடப்பட்டதகவும் தெரிவிக்கப்படுகிறது. கோகில சந்தேஸ ஆசிரியர் கூற்றுப்படி “மகாவலிகம” எனுமிடத்தில் தமிழப்பாடல்கள் இசைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அத்துடன் கணபதி, பத்தினி ஆகிய தெய்வ வழிபாட்டின் வளர்ச்சியும் ஏற்படுகிறது. கண்டி இராச்சியத்திலும் தமிழ் நூல்கள் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதல் இலங்கைத் தமிழ் நூலான சரசோதி மாலை தென்னிலங்கையில் தோற்றம் பெறுகிறது. கண்டி இராசதானியின் இறுதிக்காலத்தில்(1815இல்) ஆங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கண்டி இரசாதானி சார்பான பிரதிநிதிகள் தமிழில் கையொப்பமிட்டுள்ளமையும் கவனத்திற்குரியது. கண்டி இரசாதானிக் காலத்தில் மட்டக்களப்பின் தொடர்பு வளர்ச்சியடைந்திருந்தாக கூறப்படுகிறது. இதனை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு பூர்விகக் குடிகள் பற்றிய கட்டுரைத் தொடரை நிறைவு செய்யு முன் முக்கியமான வினாவொன்றை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் வேடர்கள் என பல மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பின் தெய்வ – வழிபாடு பற்றி விபரிக்கும் நூல்களும் இவ்வாறே கூறுகின்றன. மட்டக்களப்புக் கிராமங்களின் வரலாறு பற்றிய கட்டுரைகளும் இக்கருத்தையே குறிப்பிடுகின்றன. விடயம் தொடர்பான ஆர்வலர்களும் இக்கருத்தையே குறிப்பிடுகின்றன. ஆனால், தகவல்களின் படி இலங்கையில் வாழ்ந்த வேடுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும், அதிலும் மட்டக்களப்பில் வாழ்ந்த வேடர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பமானதே.

தரவுகளின் படி மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வேடர்கள், வரலாற்று விபரிப்புக்களில் எவ்வாறு பல கோவில்களின், கிராமங்களின் தோற்றத்திற்கு காரணமாயினர். அதே வேளை வேடர்கள் என்ற சொற்பயன்பாடு எவ்வாறு அறிமுகமாகிறது என்பதுவும் கண்டறியப்பட வேண்டும். இதனூடாக மட்டக்களப்பின் பூர்விக குடிகள் – வேடர்கள் – முன்னர் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்களா என்பதனை அறிய வேண்டும். அப்பெயர்கள் இலங்கையின் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களுடன் தொடர்பு பட்டனவா என்பது முக்கியமானதொரு வினாவாகும்.


மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் – தரும் தகவல்கள். பாகம் – 1 : விஜய்
மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும். பகுதி – 2 : விஜய்

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய்

மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய் மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும்

வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய் மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்

 


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply