பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்

பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்

கே. சந்திரசேகரன்
பவுத்த மதம் ஏறத்தாழ பன்னிரண்டு நூற்றாண்டுகள் தமிழகத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. அசோகப் பேரரசன் காலமாகிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ந்த நிலையில் அது இருந்தது.
அசோகப் பேரரசனின் மகன் மகீந்தர் தேரா இலங்கைக்குச் செல்லும் முன்னர் காவிரிப் பூம்பட்டினத்தில் தங்கி விகாரங்களைக் கட்டிய வரலாற்று உண்மைகளைப் பவுத்த நூல்களில் காண்கிறோம். பின்னர் பல்வேறு காரணங்களாலும், சமண மதம் கையோங்கி நின்றதாலும், பக்தி மார்க்கத்தின் தமிழ்ப்பண்கள் பரவத் தொடங்கிவிட்டமையாலும் பவுத்த மதம் தமிழகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆயினும், பவுத்த மதம் பல்வேறு நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கியதை மறுக்க முடியாது.
ஐம்பெருங்காப்பியத்துள் மணிமேகலையும் குண்டலகேசியும் பவுத்த நூல்களே. தமிழிலக்-கணமான  வீரசோழியம் பவுத்த நன்கொடையே. இவைகளின்றி சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், பிம்பிசாரன் கதை போன்ற பவுத்த நூல்கள் பல்வேறு பாடல்களிலும், நீலகேசி என்னும் சமண நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.
இவற்றுள் பிம்பிசாரன் கதை என்பது பவுத்த பெருமானின் நண்பனாக இருந்த மன்னன் பிம்பிசாரனுடைய வரலாறாக இருக்கும் என்பது அவர் கருத்து.
புத்த தம்மம் முக்கிய வாய்மைகளைக் கொண்டது. துக்கம் உள்ளதை அறிதல், துக்கத்-திற்குக் காரணம் அறிதல், துக்கம் நீக்கப்படக்-கூடியது என்பதை அறிதல், துக்கம் நீக்க எட்டு வழிகளை அறிதல்.
பவுத்த மதம் ஐந்தொழுக்க அறத்தை அடிப்படையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றது:
கொல்லாமை
பிறர் பொருள் கவராமை
பிழையுறு காமத்தில் ஈடுபடாமை
பொய்யுரை புகலாமை
மது அருந்தாமை
இந்த ஒழுக்கங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே புத்தரின் அறிவுரை.
தமிழில் பன்னெடுங்காலமாய்ப் பவுத்த எண்ணங்கள் பல்வேறு அறிவுத் திறத்தாரிடம் மலர்ந்து வந்திருக்கின்றன. ஆயினும் ஆங்கில மொழிகளையும் பல்வேறு மொழிகளையும் ஒப்பு நோக்கும்போது தமிழில் வெளியான நூல்கள் மிகச் சிலவே.
சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் 1832ஆம் ஆண்டு பிறந்தவர்(1832————————–_ 1902). ஆறுமுக நாவலருக்கு அடுத்த-படியாக பல நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்த பெருமுயற்சியின் பெருமை இவரைச் சேரும். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்க-ளுடன் சேர்ந்து பல்வேறு தமிழிலக்கியங்களை இருண்ட பரண்களிலிருந்து இறக்கி அச்சிலேற்றி வெளியுலகுக்கு அர்ப்பணித்தார்.
இவரே தமிழில் முதல்முதலாக புத்தமித்திரனால் இயற்றப்பட்ட தமிழிலக்கணமாகிய ‘வீரசோழியம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார். தமிழில் அச்சேறிய முதல் பவுத்த சார்புடைய நூல் இதுவேயாகும். போற்றுவார்களின்றி இறந்துபட்ட நூல்களைப் போன்றே இந்த நூலும் இறந்துபட்டிருக்கும். ஆனால் 1881ஆம் ஆண்டு பிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்துப் புத்துயிர் கொடுத்தார்கள்.
மணிமேகலை
மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் அவர்களால் இயற்றப்பட்ட காப்பியம் மணிமேகலை. பவுத்தத் தத்துவங்களை சீரிய முறையில் ஒரு காப்பியமாக ஆக்கித் தந்தவர் சீத்தலைச் சாத்தனார். இந்நூல் பண்டைய தமிழ் நாகரிகத்தையும், அக்கால சமயக் கொள்கை-களையும், பழக்கவழக்கங்களையும் விளக்கமாக இன்றும் அறிய உதவும் அரிய நூலாகும். சிலப்பதிகாரத்துடன் இணைத்து இரட்டைக் காப்பியமாகப் பெருமைப்படுத்தப்படுவது இந்நூலே.
தத்துவ ஆழம் மிகுந்த இந்நூலை முதல் முதலாகப் பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்களே. 1894ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டு 12 அணாவுக்கு விற்கப்பட்டது.
உ. வே. சாமிநாத ஐயர் (1855_1942) அவர்கள் தமிழுக்குச் செய்த அரும்பணிகளைத் தமிழுலகம் என்றும் மறவாது. பெட்டிகளிலும் பரண்களிலும் மூட்டைகளிலும் முடங்கிக்கிடந்த பல்வேறு  அரிய தமிழிலக்கியங்களைப் பிரதி பார்த்து ஒப்புநோக்கி, சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி அச்சேற்றி, நூல்கள் வடிவில் தமிழுலகிற்கு அளித்த பெருமை இவரைச் சாரும்.
திருமயிலை சண்முகம் பிள்ளை அவர்கள் மணிமேக-லையைப் பதிப்பித்த நான்கு ஆண்டுகள் கழித்து    உ. வே. சா. அவர்கள் பல பிரதி-களை ஆராய்ந்து, பிழைகளை நீக்கி 1898ஆம் ஆண்டு அரும்பதவுரை-யுடன் மணிமேகலையைப் பதிப்பித்தார். ஆனால் இவர் பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப் பற்றி ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் ஆகிய நூல்களையும் உ. வே. சா. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை,        சர் எட்வின் அர்னால்ட் அவர்கள் எழுதிய The light of Asia  என்னும் நூலைத் தமிழில் ‘ஆசிய ஜோதி’ என்னும் தலைப்பில் அழகிய கவிதை நடையில் பதிப்பித்தார்.
பவுத்த வாரப்பத்திரிகை
அயோத்திதாச பண்டிதர் (1845 _ 1954) திராவிட இயக்கத்திற்கும் பெரியாருக்கும் முன்னோடியாகவும், தலித் மக்கள் எழுச்சிக்கும் அம்பேத்கருக்கும் வழி அமைத்தவராகவும் இருந்தார். வைணவரான இவர் புத்தமதத்தைத் தழுவி பெரும்பான்மையான தலித் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். இவர் தியாசபிகல் சொசைட்டி கர்னல் ஓல்காட் அவர்களின் துணையுடன் இலங்கை சென்று பிக்கு சுமங்கல நாயகா அவர்களால் தீட்சை அளிக்கப்பட்டவர்.
முதன்முதலாக ‘ஒரு பைசா தமிழன்’ என்னும் வாரப்பத்திரிகையை 19.06.1907 அன்றிலிருந்து நடத்தி வந்தார். தமிழக அரசும் அவருடைய முயற்சியைப் பெருமைப்படுத்த 19.06.2007 அன்று அவ்வார இதழின் நூற்றாண்டைக் கொண்-டாடியது. இந்த வார நூலல்லாமல் புத்த மார்க்க வினா_விடை போன்ற பல சிறு நூல்களை இவர் தென்னிந்திய பௌத்த சங்கம் சார்பாக வெளியிட்டுள்ளார்.
ஆராய்ச்சி நூல்கள்
ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி (16. 12. 1900 _ 08. 05. 1980)
‘அஞ்சுதல் அறியா நெஞ்சன்
அகல்வர லாறனைத்தும்
மிஞ்சுதல் இன்றி(க்) கற்றோன்
மேம்படும் நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத்துலக்க
கேண்மையோ டுயர்வு செய்வான்
எஞ்சுவ துமக் கொன்றுண்டோ
இவனை நீர் மறந்து விட்டால்’         பாரதிதாசன் 14_ 10_ 1952.
என புரட்சிக்கவிஞர் அவர்களால் பாராட்டப் பெற்றவர் ஆராய்ச்சி அறிஞர் மயிலை  சீனி. வேங்கடசாமி. பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை குடியரசு, திராவிடன், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, திருக்கோயில், நண்பன், கல்வி, இலட்சுமி, ஆனந்த போதினி, தமிழ்நாடு, சௌபாக்கியம், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.
இவர் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ 2002ஆம் ஆண்டு புலவர் கோ. தேவராசன் எம்.ஏ., பி.எட். அவர்களால் மீண்டும் பதிப்பிக்கப்-பட்டது. இது பவுத்தத்தைப் பற்றிய மிக நுண்ணிய ஆராய்ச்சி நூலாகும். மணிமேகலையின் பவுத்தத் தத்துவங்களைப் பாங்குடன் எளியவர்களும் புரிந்துகொள்ளுமாறு எழுதும் பேராற்றல் பெரிதும் பாராட்டத்தக்கது.
இதுபோன்றே புலவர் தேவராசன் இவருடைய மற்ற நூலாகிய ‘கௌதம புத்தர்’ என்னும் நூலை அதே ஆண்டு பதிப்பித்துள்ளார். நம் நற்பயன் காரணமாக இந்நூல்கள் இன்னும் கிடைக்கப் பெறுகின்றன.
இவ்விரு நூல்களன்றி ‘புத்தர் ஜாதகக் கதைகள்’, ‘பௌத்த கதைகள்’ ஆகிய நூல்கள் முறையே 1960, 1952 ஆகிய ஆண்டுகளில் பதிப்பித்து வெளிக்கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசு அவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி பெருமைப்படுத்தியுள்ளது.
பேரா. வி. சுப்ரமணியம் அவர்களின் நடன நாடகங்கள் இவர் பல சமஸ்கிருத நடன நாடகங்களை இயற்றியுள்ளார். இவரது ஐந்து தமிழ் இசை நாடகங்கள் ‘வாழி வாழி வேந்தன் வாழி’ எனும் தலைப்பில் 1970ஆம் ஆண்டு ஸ்ரீவத்சா பதிப்பாளர்களால்(சென்னை) வெளியிடப்பட்-டது. புரபசர் வி. சுப்ரமணியம் ஐந்து கண்டங்-களிலும் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணி-யாற்றியுள்ளார். அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மே மாதம் 28ஆம் தேதி 2004 அன்று காலமானார்.
வணக்கத்திற்குரிய பிக்கு போதி பாலா அவர்கள்
பிக்கு போதி பாலா அவர்கள் மதுரையை மையமாகக் கொண்டு நல்ல பவுத்த நூல் பணிகளைச் செய்து வருகின்றார்.
அகிம்ஸை பெண்ணிய பெட்சி நிறுவனம்  மதுரை, அவரது கீழ்க்கண்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளது,
1. திபெத்திய  யோகம்
2. விபாசனா தியானம் (இரு பகுதிகள்)
இவரது ‘ஆனாபான  ஸதி சூத்திரம்’ எனும் நூலை இவர் சார்ந்துள்ள தர்ம விஜய மகாவிகார டிரஸ்ட், மதுரை பதிப்பித்துள்ளனர்.
விபாசன தியானமுறையை டாக்டர்.
பா. ஆனந்தி மொழிபெயர்த்து அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சோ. ந. கந்தசாமி
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்த கந்தசாமி அவர்கள் பவுத்த ஆராய்ச்சியில் பெரும் ஈடுபாடு உடையவர். அவர் எழுதிய கட்டுரைகள் பல வெளிநாட்டு ஆராய்ச்சி நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவர் எழுதிய பவுத்தம் என்னும் ஆராய்ச்சி நூலை சென்னைப் பல்கலைக்கழகம் தனது பொன்விழா வெளியீடாக வெளியிட்டுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்புகளையும், அந்நூலில் பொதிந்துள்ள பவுத்தத் தத்துவங்களையும் மிகவும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் சார்ந்த ஸ்ரீமத் சுவாமி நித்யானந்தர் ‘துறவிவேந்தன் புத்தர்’ என்னும் ஒரு சிறிய இனிய நாடக நூலை 1994இல் வெளியிட்டுள்ளார்.
வலபொல ராகுல அவர்களின் ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கிய நூலை ‘புத்தர் பகவான் அருளிய போதனை’ என்னும் தலைப்பில் நவாலியூர் சோ. நடராசர் 1989ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். இந்நூலை தாய்வான் நாட்டைச் சேர்ந்த புத்தர் கல்வி அறக்கட்டளை அச்சிட்டு இலவசமாக விநியோகித்துள்ளனர். விழுதுகள் சென்னை என்ற பெயரில் உள்ள பதிப்பகத்தார் ராமசாமி அவர்களின் நான்கு புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். அவை முறையே ‘போதி மாதவன்’, ‘புத்த ஞாயிறு—–’, ‘புத்தர் போதனைகள்’, ‘தம்மபதம்’ ஆகும்.
ஓய்வு பெற்ற மின் பொறியாளரான  ஓ. ரா. ந. கிருஷ்ணன் அவர்கள் சென்னை அண்ணாநகரில் தம்ம ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் தம்ம பேரவையின் அறங்காவலரும் ஆவர். பல ஆண்டுகளாக இவர் நடத்திவரும்  ஆராய்ச்சியின் முடிவாக கீழ்க்கண்ட நூல்களை வெளியிட்டுள்ளார்:
(1) சத்தம்ம கையேடு. பதிப்பாளர்: தம்ம பேரவை, சென்னை_29 (2) புத்தர் அழைக்கிறார் வாருங்கள் பேரின்ப வாழ்விற்கு.
பதிப்பாளர்: தம்ம ஆய்வு மையம், சென்னை_40. (3) பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும், பதிப்பாளர்: அஹிம்சை பெண்ணிய பெட்ஷி நிறுவனம், மதுரை.
பேராசிரியர் டாக்டர். சித்தார்த்தா பெரியார்தாசன் அவர்களின் மொழியாக்கப் பணி மிகவும் பெருமைப்படத்தக்கதாகும். சென்னை மகாபோதி சொசைட்டி அவர்களுடன் இணைத்து பல்வேறு நூல்களை மொழிபெயர்த்து அளித்துள்ளார்.
‘புத்த தம்மம்_ அடிப்படை நூல்கள்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவரின் தம்மமும்’ என்ற நூலை எரிமலை ரத்தினம், எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களுடைய ஒத்துழைப்புடன் டாக்டர். பாபா சாகிப் அம்பேத்கர் பவுத்த ஆய்வு மையம் மூலமாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. பின்னர் இந்நூல் தாய்வான் புத்த அறக்கட்டளை மூலமாகப் பெரும் அளவில் அச்சிடப்பட்டு உலகில் உள்ள தமிழர்கள் யாவரும் படித்துப் பயன்பெறுமாறு செய்துள்ளனர்.
அண்மைக் காலமாக, தமிழில் பவுத்த நூல்களை வெளிக்கொணர ஆழி பதிப்பகம் சில முயற்சிகளை எடுத்து வருகிறது. அறிஞர்
ஜி. அப்பாதுரையாரின் ‘புத்தர் அருள் அறம்’ என்கிற 1950 இல் வெளிவந்த நூலை இந்த ஆண்டு ஆழி பதிப்பகம் மூலமாக மறுவெளியீடு செய்திருக்கிறார் ஆய்வாளர் திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள். அது மட்டுமல்லாமல் தம்ம பேரவை, தம்ம ஆய்வு மையம் ஆகியவற்-றோடு இணைந்து பவுத்த நூல்களை மொழிபெயர்ப்பது சம்பந்தமாக ஆழி பதிப்பகம் 2008 நவம்பரில் ஒரு பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்தது. அதன் வழியாக, விரைவில் பவுத்த ஞானி தலாய் லாமா அவர்களின் நூல்கள் விரைவில் தமிழாக்கம் செய்யப்படவுள்ளன. பல மூல பவுத்த நூல்களும் தமிழாக்கம் பெறவுள்ளன.
குறிப்பிட்ட நூல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தனிப்பட்ட பௌத்த சார்பு உடையவரும், மகாபோதி சொசைட்டி, தென்னிந்திய பௌத்த சங்கம், பெரம்பூர் போன்ற நிறுவனங்களும் பல்வேறு பதிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன. இம்முறையில் அநேக நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் அவற்றுள் சிலவே இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளன.
தத்துவமுறையில் புறநானூறு கணியன் பூங்குன்றனார் அவர்களின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பாடல் தமிழர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை சுருங்கச் சொல்கிறது. திருவள்ளுவர் பல்வேறு இடங்களில் ஆழ்ந்த தத்துவங்களைத் தமிழுக்கு அளித்துள்ளார். அருணகிரிநாதர் ‘சும்மா இரு சொல் அற’ என்று சென் புத்த மதத்தின் அடிப்படையைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இவைகளின்றி சாத்தனார் முதலாக அயோத்திதாசர், டாக்டர் சித்தார்த்தா போன்ற பேரறி-ஞர்கள் தமிழுக்கு பௌத்தத் தத்துவங்களை அறிமுகப்படுத்தியும் விளக்கியும் ஆராய்ச்சி செய்தும் நல்ல பணியினைச் செய்துள்ளனர்.
இன்று உலகமெங்கும் ஒரு அமைதியான மவுனப்புரட்சியைச் செய்துகொண்டிருக்கும் பௌத்த நுண்ணிய தத்துவங்களைத் தமிழில் கிடைக்குமாறு செய்த இப்பேரறிஞர்கட்கு தமிழும் தமிழர்களும் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவர். இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தபொழுது, இதை ஒரு எளிமையான முயற்சியாக நினைத்தேன். ஆனால் உள் நுழைந்து பார்க்கும்பொழுது பல்வேறு பவுத்த சார்புடைய தமிழர்கள் தனி முயற்சியாகவோ அல்லது அமைப்புகளைச் சார்ந்தோ பல்வேறு அரிய நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளனர்.

இத்தகைய பெரும்பணியினை எதையும் எதிர்பாராமல் செய்த இப்பெருமக்கள் அனைவரைப் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பு தமிழ்மொழி வரலாற்றிற்கு இன்றியமையாதது. அனைவரைப் பற்றி ஆழ்ந்து எடுத்து இணைக்க இயலாதது என்னுடைய முயற்சியின் குறையே. இப்பெருமக்களின் அரிய பணியினை முழுமையாக்கி வெளியிட வேண்டி எல்லா முயற்சிகளையும் எடுப்பது தமிழர்களின் தலையாய கடமையாகும்.


About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply