தமிழர் சமயம் எது?

தமிழர் சமயம் எது?

18.12.2014

இது என்ன கேள்வி? சைவச மயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழ மை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சை வசமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள்.

கடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது.

மனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 14,000 ஆண்டுகள் மிக நீண்ட காலமாகும்.

மாந்த இனம் மனிதக் குருங்கில் இருந்து பிரிந்து தனியே வளர்ச்சி அடையத் தொடங்கிய காலம் சுமார் 30 இலட்சம் ஆண்டுகள் இருக்கும் என மனிதநூலார் (Anthropologists) சொல்கிறார்கள். அந்த மனிதக் குரங்கு இனம் Hominids என்று அழைக்கப்பட்டார்கள்.

அதன்பின் உரு மலர்ச்சியில் (evolution) 18-10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோமோ இறக்டஸ் ( Homo- erectus) என்ற மாந்த இனம் தோன்றியது. இவர்கள் ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் 300,000 ஆண்டுகள் முன்வரை வாழ்ந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து கோமோ சேப்பியன்ஸ் (Home-sapiens) தோன்றினார்கள். இவர்களது காலம் 200,000-300,000 ஆண்டுகளாகும். இவர்களைத் தொடர்ந்து நியாந்தர்தால் (Neanderthal) என்ற மாந்த இனம் தோன்றியது.

பின்னர் 40,000-30,000 ஆண்டுவரை இன்றைய நவீன மனிதன் தோன்றினான். நியாந்தர்தால் மனிதன் சில காலம் மனிதனோடு சம காலத்தில் வாழ்ந்ததும் உண்டு. ஆனால் நியாந்தர்தால் மனிதர்கள் 27,000 ஆண்டளவில் முற்றாக மறைந்து போனார்கள்.

தொல்லியளார்களது கண்ணோட்டத்தில் மாந்த இனத்தின் நாகரிக வளர்ச்சிக் காலத்தைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

பழைய கற்காலம் – 20 இலட்சம் ஆண்டுகள்

இடைக் கற்காலம் – கி.மு. 10,500- 4,300

புதிய கற்காலம் – கி.மு.4,300- 3300

வெண்கலக் காலம் – கி.மு. 3300 – 1200

இருப்புக் காலம் – கி.மு.1200- 586

சிந்துவெளி நாகரிகம் (கரப்பன் மற்றும் மொகென்ஜதாரோ) – கி.மு. 3000- 1900

மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர் குடியேற்றம் சிந்து பள்ளத்தாக்கு – கி.மு.1300

ஆரியர் குடியேற்றம் கங்கை பள்ளத்தாக்கு – கி.மு.1000

இருக்கு வேதம் – கி.மு. 1200- 900

இராமாயண காலம் – கி.மு. 1500

பாரத காலம் – கி.மு.1300

ஏனைய வேதங்கள் உபநிடதங்கள் – கி.மு.500

மகாவீரர் காலம் – கி.மு.550

புத்தர் காலம் – கி.மு. 563-483

மேலே தரப்பட்டுள்ள தரவுகள் வரலாற்றுக்கு முந்திய (கி.மு.3000-1200) மனித நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல் கற்கள் ஆகும்.

சிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் அல்லது நால்வேத மதத்தவர்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட அதன் காலம் 5,000 ஆண்டுகள் மட்டுமே. அதனால் சைவம் 14,000 ஆண்டுகளாக நிலைத்து வருகிறது என்ற கூற்று முற்றிலும் உயர்வு நவிர்ச்சியே!

இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஒரு இலக்கண நூல்.

இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவரது காலம் எதுவென்று அறிதியிட்டுச் சொல்ல முடியாது இருக்கிறது. எனினும் இவர் இடைச் சங்க காலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் கி.மு.500-300 இடையில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும் தொல்காப்பியம் தமிழ்மக்களின் மிகப் பழமையான ஒரு சமுதாயக் கட்டுமானத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதில் ஐயம் எதுவுமில்லை.

குறிஞ்சி நில (மலை) மக்கள் வேட்டையாடியும்,

முல்லை நில (காடு) மக்கள் ஆனிரை மேய்த்தும்,

மருதநில (ஆற்றுப்படுக்கை) மக்கள் பயிர் செய்தும்,

நெய்தல் நில (கடலோரம்) மக்கள் மீன் பிடித்தும்

வாழ்ந்த சமுதாயத்தையே தொல்காப்பியத்தில் காணக் கூடியதாக இருக்கிறது.

பிறமொழியும், பிறபண்பாடும் தமிழ் மொழியோடும் தமிழ்ப் பண்பாடோடும் உறவுகொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியிருக்கிறது.

தொல்காப்பியரே தனது நூற்பாக்களில் கூறப்படும் விதிகளுக்கு தனக்கு முன்னரும் தனது காலத்திலும் இருந்த புலவர்களது கூற்றுக்களைச் என்ப, என்மனார் புலவர், மொழிப, யாப்பென மொழிப யாப்பறி புலவர் என்று சான்று காட்டுவார்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் இலக்கணம் வகுக்கின்றது. பொருளதிகாரம் உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, வெவ்வேறு நிலம், அந்த நிலத்துக்குரிய தெய்வங்கள், மக்கள், மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை நெறிகள், ஆடவர்க்குரிய பண்புகள், பெண்களுக்குரிய பண்புகள், மரங்கள், விலங்குகள், இலக்கிய வகைகள், இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய மரபுகள், இலக்கியத் திறனாய்வுகள், உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மெய்ப்பாடுகள் இப்படி ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றிச் சொல்கிறது.

தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை. கடவுள் என்ற சொல் மிக அருமையாகப் பயன்படுத்தும் இடத்தில் அது தேவர்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளதிகாரம் புறத்திணையியல் (27)-

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.”

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதன் பொருள் ஞாயிறு, திங்கள், தீ மூன்றையும் வாழ்த்துவதும் அமரர் வாழ்த்துபட போலவே ம் வரும் என்பதே.

“காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.”

(தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23)

“இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடமிருந்தும் நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்” என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயபனப்பவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும், பிறவும் ஆம்” என்பது நச்சினார்க்கினியர் உரை.

தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, ஞாயிறு, திங்கள், தீ முதலியவைகளைத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். இமையவர்கள் என்ற தேவர்களையும் தெய்வங்களாகக் கொண்டிருந்தனர்.

தொல்காப்பியர் காலத்தில் நடுகல் வணக்கம் பரவலாக இருந்திருக்கிறது. நடுகல் வணக்கம்பற்றி தொல்காப்பியர் விரிவான செய்திகளைத் தந்திருக்கிறார்.

சைவ சமயத்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தி என்னவென்றால் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருக்கவில்லை. சிவனைக் குறிக்கும் சொல் 1610 தொல்காப்பிய நூற்பாக்களில் ஒன்றிலும் இல்லை. நால் வேதங்களில் முதல் வேதமான இருக்கு வேதமும் சிவனைக் குறிக்கவில்லை என்பதும் ஈங்கு கவனிக்கத்தக்கது.

சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர். வேதத்தில் சிவன் உருத்திரன் எனக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் அவனது பெயரை உச்சரிக்கக் கூடாதென்றும், அவனை யாகசாலைக்கு அழைக்கக் கூடாதென்றும், பலி கொடுக்கும்போது ஊருக்கு புறத்தே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இருக்கு வேதத்தில் உருத்திரன் அச்சம் தரும் தெய்வமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்..

குறிஞ்சி நிலத்துத் தெய்வத்தை சேயோன் என்று தொல்காப்பியர் குறிக்கிறார். குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன், செவ்வேள், சேயோன் என்பதே தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். குறிஞ்சி நிலமக்கள் குறவர், குறத்தியர் எனத் தொல்காப்பியம் கூறுவதால் முருகன் திருமணம் செய்த வள்ளி குறிஞ்சி நிலத்துக் குறத்திப் பெண். முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

எனவே இலக்கிய வழக்கிலும், உலகியல் வழக்கிலும் குறிஞ்சித் தெய்வம் முருகனாகவே எண்ணப்படுகிறான். சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு இலக்கிய வழக்கும் இல்லை. உலக வழக்கும் இல்லை. இருந்திருந்தால் தொல்காப்பியர் நிச்சயம் சுட்டியிருப்பார்.

உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக “நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று” எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை அன்றே கூறுயிருக்கிறார்.

“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.

(தொல். மரபியல் 1589)

இதே போல் இன்றைய உரு மலர்ச்சியை ஒட்டியதாக உயிர்களை ஓரறிவு தொடக்கம் ஆறறிவு வரை எடுத்துக்காட்டோடு விளக்கிக் கூறுகிறார்.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிவன் என்ற தெய்வமோ சிவ மதமோ இருக்கவில்லை என்;பது சாமி சிதம்பரனார் போன்ற தமிழறிஞர்களது துணிபாகும்.

தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.”முக்கட் செல்வர் நகர்” எனப் புறநானூற்றின் 6ம் பாடல் குறிக்கிறது. நூற்றித் தொண்ணூற்றெட்டாவது பாடல் திருமாலை “ஆல் அமர் கடவுள்” எனக் குறிக்கிறது.

தொல்காப்பியர் காலம்போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும். புறப்பாடல் 265 ஊருக்குப் புறத்தே இருந்த திடலில் வேங்கை மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையை அணிவித்து கோவலர் ஒரு வீரனுக்கு கல் நட்டதைக் கூறுகிறது.

இக் கற்களில் வீரனின் பெயரும் பெருமிதமும் எழுதப்பட்டு அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன என அகப்பாடல் ஒன்று (67) குறிக்கிறது.

நடுகல் வழிபாட்டில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது. பறைகள் முழக்கப்பட்டன. தோப்பிக்கள் படைக்கப்பட்டது (அகம் 35). இல்லங்களில் அடப்படும் கள்ளினையுடைய சிற்றூர் மக்கள் புறத்தே இருந்த நடுகற்களை நன்னீராட்டினர். விடியற் காலத்து பலியைப் படைத்து, நெய் விளக்கேற்றினர். தூபம் காட்டினர். மேகம் போன்ற புகை எழுந்து தெருவில் மணம் பரப்பியது (புறம்229).

மறக்குடி பிறந்த மக்கள் விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை (புறம் 335).

நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ வணக்கமாகவும், பெருந்தெய்வ வணக்கமாகவும் வளர்ச்சி அடைந்தது. தெய்வம் வந்து வெறியாடிய வேலன் நாளடைவில் கைவேல் தாங்கிய முருகனாக வழிபடப்பட்டான். வேலைத்தாங்கியவன் வேலன் எனப்பட்டான்.

‘வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயந்த காந்தளும்.        (தொ.பொ.புறத்திணை 5 )

கொல்லும் தன்மையுள்ள வேலைத் தாங்கியிருப்பவன் வேலன். அவன் தெய்வத்தின் கோபத்தை அறிந்து அதைத் திருப்தி செய்யும் சிறப்புள்ளவன். அவன் காந்தளின் மலர் மாலையை அணிந்து உருக்கொண்டு ஆடுவான். இந்த ஆட்டம் காந்தள் என அழைக்கப்பட்டது.

தொல்காப்பியர் குறிப்பிடும் ஐவகை நிலத் தெய்வங்களான மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்.

இன்று இறந்தவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்தபோது விரும்பி உண்ட உணவை ஏழாம் நாள் அன்று காய்ச்சிப் படைப்பதும், ஊர்க் கோயில்களில் பூசாரிகள் உருவந்து ஆடி அருள்வாக்குச் சொல்வதும் சங்க கால நடுகல் வணக்கம் மற்றும் வெறியாட்டின் எச்சங்களே.

கடற்கரையில் வாழ்ந்த பரதவர் முழு நிலா நாளில் சுறா மீனின் கொம்பினை மணலில் நட்டு அதனைத் தெய்வமாக வழிபட்டனர். அதற்கு மலர் மாலைகளை அணிந்து பனங்கள்ளையும் நெற்கள்ளையும் உண்டு மகிழ்ந்தனர் (பட்டினப். 86-96).

தைத்திங்கள் முதல் நாளில் மக்கள் நீராடி நோன்பு இருந்தனர் என்ற செய்தி தொகை நூலில் ஒன்றான நற்றிணையில் (22) காணப்படுகிறது. கார்த்திகை நாளில் உயர்ந்த மலையில் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம் என பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற சேரமன்னன் கூறியுள்ளான்.

கடலை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் இருந்தது. அங்கு ஓய்வில்லாமல் திருவிழாக்கள் நடந்தன என அகநானூறு (59, 149) தெரிவிக்கிறது.

ஒவ்வோர் ஊரிலும் அம்பலம் (பொதி) இருந்தது. அதில் கந்து என்னும் வழிபாட்டுக்குரிய மரத்தூண் (287) இருந்தது. அதனை ஊர் மக்கள் விடிகாலையில் வழிபட்டனர்.

தொல்காப்பியர் காலத்து ‘சேயோன் மேய மைவரை உலக’ குறிஞ்சி நிலத் தெய்வம் சங்க காலத்தில் முருகக் கடவுளாகத் தோற்றம் பெற்றார். இந்தப் பழமை காரணமாகவே முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்டுகிறார்.

குறத்தி குலத்து வள்ளியை மணந்த முருகன் வேதக் கடவுளான ஸ்கந்தசாமி- தெய்வயானை என்ற ஆரியக் கடவுளரோடு இணைக்கப்பட்டபோது அவருக்கு இரண்டு மனைவியர் வாய்க்கப் பெற்றார். நாளடைவில் முருகன் சிவனாரது மகன் எனவும் திருமாலின் மருகன் எனவும், கொற்றவையின் மகன் எனவும் அழைக்கப்பட்டான்.

சங்க இலக்கியங்களில் ‘வெல்போர்ச் சேஎய்’ ‘வெல்போர்க் கொற்றவைச் சிறுவ’ என முருகன் போர்க் கடவுளாகவும் கொற்றவையின் பிள்ளையாகவும் சித்தரிக்கப்படுகிறான்.

சேயோன் முருகனாக தோற்றம் பெற்றபோது ‘மாயோன் மேய காடுறை உலக” முல்லை நிலத் தெய்வம் திருமால் ஆக தோற்றம் பெற்றார். பின்னர் திருமால் ஆரியக் கடவுளான விட்டுணு (விஷ்ணு) வோடு இணைக்கப்பட்டார்.

அரசனை திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கிறது. மாயோனுக்குரிய முல்லை நிலத்தின் பெருமையையும் அழியாத புகழையும் அரசனோடு இணைத்துப் பாராட்டப்பட்டது. இது பூவை நிலை என அழைக்கப்பட்டது.

சங்க காலத்தின் இறுதியில் சமணம், பவுத்தம் ஆரியரின் நால்வேத சனாதன தர்மம் தமிழ்நாட்டின் நகரப் புறங்களில் நன்கு வேரூன்றி இருந்தது.

சமணப் பள்ளிகள், நால்வர்ணப் பாகுபாடு, வேள்வி வழிபாடு, பாரத, இராமயண புராணக் கதைகள் சங்கத் தமிழரிடையே நன்கு பரவியிருந்தன. பார்ப்பனர்களுக்கு தனிக் குடியிருப்புக்கள் இருந்தன. மூவேந்தர்கள் ஆரிய வேள்விகளை செய்வித்தார்கள். பார்ப்பார்க்கு மன்னர்களின் அரண்மனை வாயில் என்றும் அகலத் திறந்திருக்கும் என்று சிறுபாணாற்றுப்படை பாடல் (203-205) கூறுகிறது. இது பார்ப்பனர்களது செல்வாக்கு உயர்ந்திருந்ததைக் காட்டுகிறது.

இதே சமயம் சங்க காலத்தில் பொருள் முதல் (dialectical materialism) கருத்து முதல் (spiritualism) கூறுகள் பரவலாகக் காணப்படுகிறது.

‘தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்’

என்ற புறநானூற்று (27) வரிகள் என்ற பொருள் முதல் வாதம், புற உலகு உண்மையன்று என்ற கருத்து முதல் வாதத்தை மறுக்கிறது. உலகமும் அதன் இயக்கமும் உண்மை எனச் சொல்கிறர்.

உயிர் உடம்பு இரண்டும் தனித்தனி என்ற கருத்து முதல் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ‘உடம்பொடு இன்னுயிர் விரும்பும் கிழமை’ (உடம்போடு வாழ இன்னுயிர் பெற்றுள்ள உரிமை) என்ற புலவர் பொத்தியாரின் பாடல் வரிகள் (223) பொருள் முதல்வாத சார்புடையது.

முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ( புறம் 2) பூதவியல் கருத்தை முன்வைக்கிறது.

‘மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல.’

மறுபிறப்பு இருக்கலாம் அல்லது இருக்காமலும் இருக்கலாம் என்ற இரண்டு கருத்தும் சங்க காலத்தில் இருந்துள்ளது. போப்பெருஞ் சோழனின் பாடிய புறப்பாடல் (214) மறுபிறப்புக் கோட்பாட்டை மறுப்பவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.

கடவுள் உண்டு என்ற கருத்துமுதல் வாதம் பிறந்தபோதே கடவுள் இல்லை என்ற பொருள்முதல் வாதமும் பிறந்து விட்டது. வடமொழி நூல்களில் பொருள்முதல் வாதம் ‘உலகாய்தம்’ என அழைக்கப்பட்டது.

தமிழில் எழுந்த முதல் நூல் திருக்குறள். அது சமயம் சாராத நூல். திருவள்ளுவர்  ஒரு முழுமுதற்கடவுள் பற்றியும் ஆன்மா பற்றியும் எதையும் சொல்லவில்லை.

திருவள்ளுவர் காலத்தில் வைதீக, சமண, பவுத்த மதங்களும், இறைவன், ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை மறுக்கும் உலகாய்தம் மற்றும் சாங்கியம், யோனம், நையாயிகம், வைசேடிகம், மீமாம்சை போன்ற ‘சமய’ கோட்பாடுகளும் தமிழ் மக்களிடையே பரவி இருந்தன.

திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாயிரத்தில் குறிப்பிடப்படும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், தனக்குவமை இல்லான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்கள் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த மனம் மொழி மெய்களுக்கு எட்டாத ஒரு கடவுளைக் குறிப்பதாக இல்லை. மாறாக அவை சமண சமயக் கடவுள் அருகனைக் குறிப்பிடுவதாகவே கொள்ள வேண்டும். திருநூற்றந்தாதியில் இச் சொற்கள் அருகனைக் குறிக்கக் கையாளப்பட்டுள்ளன. திரு.வ.உ..சிதம்பரநாதர் திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் இடைச் செருக்கல் எனக் கருதுகிறார்.

திருக்குறள் குறிப்பிடும் தெய்வம், தேவர் மனிதரில் மேம்பட்டவர்களையே குறிக்கின்றன. ஆன காரணத்தினால்தான் திருவள்ளுவர் ‘தெய்வந்தொழாள்’ ‘ தெய்வத்தால் ஆகாதெனினும்’ ‘தேவர் அனையர் கயவர்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார்.

சங்க காலத்தை அடுத்த இரண்டு நூற்றாண்டு களப்பிரர் என்ற இனத்தவர் மூவேந்தர் ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆளுகின்றனர். இவர்கள் ஆட்சிக் காலத்த்pல் வைதீக மதம் செல்வாக்கு இழக்க சமணமும் பவுத்தமும் தலை தூக்குகின்றன.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வைதீகம், சமணம், பவுத்தம் தமிழ்நாட்டில் நன்றாக வேரூன்றி விட்டதையும், கோயில்கள், பள்ளிகள், விகாரைகள் இருந்ததையும் அங்கு வழிபாடு இடம்பெற்றதையும் எடுத்துக் கூறிகின்றன.

இந்த சமய மாற்றங்கள் தமிழர்கள் வைதீக. பவுத்த, சமண சமயங்களில் ஏக காலத்தில் இருந்து வந்ததைக் காட்டுகிறது.

சமணமும் பவுத்தமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வளத்துக்கும் பெரும் பங்காற்றின. ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறும் காப்பியங்களும் சமண அல்லது பவுத்தர்களால் இயற்றப்பட்டவை ஆகும்.

களப்பிரர் ஆட்சியைத் தொடர்ந்து பல்லவர் தொண்டமண்டலத்தை கைப்பற்றி காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டஆட்சி செய்தார்கள். பல்லவர் ஆட்சி கி.பி. 300-900 ஆண்டுகள் நிலைத்திருந்தது. பல்லவ மன்னர்களில் பெரும் புகழ்பெற்ற முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 610-630) அப்பரது முயற்சியால் சமணத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாறினான். அவ்வாறே பாண்டி நாட்டை ஆண்ட பாண்டியன் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறனும் ஞானசம்பந்தரால் பவுத்த சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாற்றப்பட்டான்.

பல்லவர் ஆட்சிக் காலத்தில்தான் சைவசமயம் அப்பர், ஆளுடைப் பிள்ளையார், சுந்தரர், மாணிக்வாசகர் தலைமையில் பக்தி இயக்கமாக எழுச்சி பெற்றது. இதுவே சைவ சமயத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். பக்தி இயக்கம் வெறும் உணர்வு பூர்வமான புராணக் கதைகளைப் பயன்படுத்தி சமண பவுத்த மதங்களின் அறிவுபூர்வமான தருக்க தத்துவங்களையும் உயர்ந்த ஒழுக்கங்களையும் தோற்கடித்தது.

‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்.’

‘அஞ்சுவதுமில்லை யஞ்சவருவது மில்லை’

என்ற அப்பரின் வீர முழக்கங்கள் மக்களுக்கு சங்ககால புற வாழ்க்கையை நினைவூட்ட உதவின போலும்.

சமய குரவர் நால்வரும் வேத நெறி வகுத்த வர்ண பேதத்தை நிராகரிக்கவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படையில் சமூகத்தை கட்டி எழுப்பத் துணியவில்லை. இருந்தும் சாதிபற்றிய அணுகுமுறையில் வைணவ ஆழ்வார்கள் போல் இல்லாவிட்டாலும் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை சமய குரவர்கள் பின்பற்றினார்கள்.

பன்னிரு ஆழ்வார்களில் தீண்டப்படாத பாணர் குலத்தவரான திருப்பாணாழ்வார் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆவுரித்துத் தின்றுலையும் புலையரேனும் கங்கைவார் சடைசங்கரர்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் தெய்வமாமே’ என்பதில் உள்ள ‘உம்’ வேற்றுமை உருபு சாதியை மறுக்கவில்லை. சாதிகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கிடையே சமரசம் காண முயற்சிப்பதாகவே உள்ளது. அதில்கூட அவர்கள் வெற்றிபெறவில்லை என்பதே உண்மையாகும்.

அதே காலகட்டத்தில் ஆழ்வார்கள் திருமால் வழிபாட்டை பக்தி மயப்படுத்தி வைணவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

இறைவனை பக்தியோடு உளமார நேசித்தால் வீடுபேறு அடையலாம் என சைவம்-வைணவம் இரண்டும் பறை சாற்றின.

தமிழர்களது சங்க கால அகத்துறை இலக்கணத்தில் வரும் தலைவன் தலைவி உலகியல் உறவுமுறை தேவார திருவாசக திவ்வியபிரபந்தங்களில் காதற்சுவை ததும்பும் தெய்வீக நாயகன் நாயகி உறவாக உருமாற்றம் செய்யப்பட்டது. அன்பினைந்திணைகளாகிய புணர்தல், பிரிதல், இரங்கல், இருத்தல், ஊடல் இறைவன் மேலேற்றிப் பாடப்பட்டது. மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை இதற்கு நல்ல சான்றாகும்.

இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவன் திருப்பாதம் அடையலாம் எனச் சொல்லப்பட்டது. ‘அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் எம்மை சொற்றமிழில் பாடுக’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.

வேள்விக்குப் பதில் நீரும் பூவுமே வழிபாட்டுக்கு உகந்த பொருட்களாகக் கொள்ளப்பட்டன.

தமிழ்மொழிக்கு ஏற்றம் கொடுக்குமாறு ‘நல்லிசையால் நாளும் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்’ என்று சம்பந்தர் தன்னைத் தானே கூறிக் கொண்டார். தமிழ் இசையும் பரதக் கலையும் இறைவன் புகழ்பாடப் பயன்படுத்தப்பட்டன.

இதனால் காதல் வெறுப்பையும் போர் வெறுப்பையும் கலை வெறுப்பையும் மூலாமாகக் கொண்ட ‘புற’ பவுத்த சமயண மதங்களை சைவமும் வைணவமும் புறங்கண்டன. சமணம் பவுத்தம் இரண்டும் தங்கள் செல்வாக்கை இழந்தன.

அதே சமயம் சமணம் பவுத்தம் இரண்டின் செல்வாக்கினால் வைதீக மதத்தில் காணப்பட்ட உயிர்ப்பலி நிறுத்தப்பட்டது, வேள்வி அருகி பூசைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

பவுத்தம் சமணம் இரண்டின் வீழ்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர் திருஞானசம்பந்தர். இதனால் அவர் ‘பரசமய கோளரி’ எனப் போற்றப்பட்டார்.

திருஞானசம்பந்தர் பவுத்த தேரரான புத்தந்தியோடு நடத்திய சமய வாதத்தில் ‘பவுத்தன் தலை உருண்டு வீழ்க’ என வெகுண்டுரைக்க அவ்வாறே இடிவிழுந்து தலை அறுபட்டு விழுந்தது என பெரியபுராணம் கூறுகிறது.

இது உண்மையானால் இந்தச் செய்தி பக்தி இயக்க காலத்தில் சைவ சமயம் பவுத்தத்தோடு தத்துவ அடிப்படையில் தருக்க வாதம் புரிய முடியாத நிலையில் இருந்ததைக் காட்டுகிறது.

மாணிக்கவாசகர் காலத்திலும் (கி.பி. 9ஆம் நூற்றாண்டு) பவுத்தத்துக்கு எதிரான வாதத்தில் இலங்கையில் இருந்து சென்ற பவுத்த தேரரை தத்துவ அடிப்படையில் வெல்ல முடியாத நிலையில் நாமகளின் துணையால் பவுத்தர்களை ஊமையாக்கினார் என திருவிளையாடல் புராணம் புகல்கிறது.

இவற்றின் பின்னரே சைவ சமயத்துக்கு தத்துவ அடிப்படையில் சித்தாந்தம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது போலும்.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்காப்பியமான பெரியபுராணமே, 13ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவ நெறியாக வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. சேக்கிழார் சுந்தரர் (8ஆம் நூற்றாண்டு) எழுதிய திருத்தொண்டத் தொகையையும் நம்பியாண்டார் நம்பி (10ஆம் நூற்றாண்டு) எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி இரண்டையும் பின்பற்றியே பெரியபுராணம் இயற்றப்பட்டது.

பக்திநெறி காலத்தில் தோன்றிய இலக்கியத்தை நம்பியாண்டார் நம்பி பன்னிருதிருமுறை வடிவில் வகுத்தும் தொகுத்தும் கொடுத்தார். இதில் சைவ தோத்திரங்களும் (இறைவன் புகழ் பாடுதல்) சாத்திரங்களும் (தத்துவ விளக்கவுரை) சேர்க்கப்பட்டன.

சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவார திருவாசகங்கள் முதல் எட்டுத் திருமுறையாகத் தொகுக்கப்பட்டன. ஒன்பதாம் திருமுறை ஒரு தொகை நூல். திருமூலர் எழுதிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளால் வெளிப்பட்டவை என முதன் முதலில் கூறியவர் திருமூலரே. சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவரும் அவரே. பதினொராம் திருமுறையும் ஒரு தொகை நூல். பதினொரு அடிகளார்கள் பாடிய 39 நூல் இதில் அடங்குகின்றன. பன்னிரண்டாம் திருமுறை சேக்கிளாரின் பெரிய புராணம்.

சங்கரரின் அத்வைதம் (பரமாத்மாவும் ஆத்மாவும் இரண்டல்ல)

இராமனுசரின் (12ஆம் நூற்றாண்டு) விசிட்டாதுவைதம்,

மத்துவரின் துவைதம் (13ஆம் நூற்றாண்டு) ஒன்றுக்கு ஒன்று முரணானவை.

உலகமும் உயிர்களும் பொருள்களும் அநித்தியம் அல்லது மாயை என்கின்ற சங்கரரின் வேதாந்தை விசிட்டாதுவைதம் மறுக்கிறது.

மத்துவரின் துவைதம் (இருமை) ஆன்மாவும் இறைவனும் வேறு வேறு என்கிறது.

மெய்கண்டாரின் ‘சுத்த அத்வைதம்’ உயிருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை விளக்கும் சங்கரரின் அத்வைதத்திற்கு புதிய பொருள் கொடுக்கிறது.

திருமுறைக்கு ஒப்பாக 13ஆம் நூற்றாண்டில் மெய்கண்டார் எழுதிய சித்தாந்த நூலான சிவஞான போதமும் அதற்கு அவரது தலை மாணாக்கர் அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞானசித்தியார் என்ற உரைநூலும் குறிப்பிடத்தக்கன. மெய்கண்ட சாத்திரம் என வழங்கும் சித்தாந்த சாதிரம் பதினான்கு ஆகும்.

அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞானசித்தியார் என்ற நூலில் பரபக்கம் என்ற பகுதியில் 14 மதங்கள் கண்டிக்கப்படுகின்றன.

அதில் பவுத்தம் முதல் இடம் வகிக்கிறது. சங்கரர் (கி.பி. 7ம் நூற்றாண்டு) எவ்வாறு பவுத்தத்தைப் புறங்காண பவுத்த தத்துவங்களைப் பயன்படுத்தியவாறு அருணந்தியும் பவுத்த அளவைகளை (தர்க்கங்களை) பயன்படுத்தி இருக்கிறார்.

சைவ சித்தாந்தம் நால்வேதங்களைப் பொதுவாகவும் ஆகமங்களை சிறப்பாகவும் கொள்கிறது. வேதங்கள் ஆகமங்கள் இரண்டும் சிவபெருமானால் அருளப்பபெற்றது என்பது சைவ சிந்தாத்தின் அடிப்படைக் கொள்கை. மாணிக்கவாசகர் ஆகமங்களே இறைவன் என்கிறார். ஆகமங்கள் சரிகை, கிரிகை, ஞானம், யோகம் என்னும் நான்கு பொருட்கள்பற்றிச் சொல்கிறது.

சைவ சித்தாந்தம் –

(1) பதி (கடவுள்)

(2) பசு (உயிர்கள்)

(3)பாசம் (போகப் பொருட்கள்)

(4) ஆணவம் (அறியாமை)

(5) மாயை (அண்டப்படைப்பிற்கான ஒரு மூலம் பொருள். ஒன்றை வேறாகக் காட்டும் ஒரு மயக்கம் என்று வேதாந்தம் கூறுவதை சைவ சித்தாந்தம் ஒப்புக் கொள்வதில்லை)

(6) கன்மம் (முன்வினைப்பயன்) ஆகிய ஆறும் ஆதியும் அந்தமும் இல்லா நித்தியப் பொருட்கள் எனச் சொல்கிறது.

இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை.

இறைவனைப் பதி என்றும், அநாதியானவன் என்றும் அவனுக்கு ஒரு சக்தி போன்றது ‘மாயை’ என்றும் (இது வேறு சங்கரர் சொல்லும் மாயை வேறு) உலகங்கள், பொருட்கள், உயிர்கள் தோன்றுவதற்கு காரணமானது மாயை என்றும், அம் மாயையும் ஆதியற்றது என்றும் உயிர்களும் நிலையானவை என்று மேலும் அது கூறுகிறது. உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஒன்றாய், வேறாய், உடனாய் உள்ளது. உயிர் இறைவனல்ல என்பது சித்தாந்தக் கொள்கை. இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கொள்கை.

பதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் வணிகத்துக்காக நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர். ஆங்கிலேயர் வருகையை அடுத்து கிறித்தவம் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பரவின. சமயம் பரப்ப தமிழ் படித்த றொபேர்ட் டி. நொபிலி, சீகன் பால்கு, வீரமாமுனிவர், டாக்டர் கல்டுவெல் போன்றோர் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வனப்பும் வடிவமும் கொடுத்தார்கள்.

இந்தியாவில் மொகாலயர் ஆட்சி காரணமாக இஸ்லாம் தமிழ்நாட்டில் பரவியது. பிறப்பால் தமிழராக இருந்தாலும் சமயத்தால் தங்களை இஸ்லாமியர் என இவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். இஸ்லாமியரின் தேசிய அடையாளம் மொழி அல்ல மதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பிய தமிழர்களிடையே தெய்வ வணக்கம் இருந்தது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ சமயமோ இருக்கவில்லை. சங்க காலத்தில் வேத நெறியும் கடவுள் நம்பிக்கையும் கால்கொள்ள ஆரம்பித்தன. இருந்தும் அமைப்பு முறையாக நிறுவப்பட்ட (established) சமயம் இருக்கவில்லை.

சங்கம் மருவிய காப்பிய காலத்தில் தமிழர்கள் வைதீக, சமண, பவுத்த மதத்தை தழுவி இருந்தார்கள்.

பக்திஇயக்க காலத்தில் ஆரியரின் வேதநெறி சங்க கால தலைவன் தலைவி உறவையும் நடுகல் வணக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு சமண பவுத்த மதச் செல்வாக்கை சாய்த்தன.

பிற்கால பல்லவர் சேர சோழ பாண்டியர் ஆட்சியில் சைவமும் வைணவமும் வளர்ச்சியடைந்தன. அதே சமயம் சாதிப்பாகுபாடும் கூர்மை அடைந்தன.

இன்று இந்து மதத்தின் உட்பிரிவான சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இருந்தும் பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது. இதனால் மதமாற்றம் சிறிய அளவில் நடைபெறுகிறது. காலப் போக்கில் தூவானம் பெரும் துளிகளாக மாறக் கூடும். ஐசவ மதம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழின பண்பாட்டு எழுச்ச்pக்கு தடையாக இருக்கிறது.

இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்ட துணை நூல்கள்

(1) தமிழர் மதம் – மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

(2) சிவ வழிபாடு – தி. பழநியப்பனார்

(3) தமிழர் சமய வரலாறு – டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை

(4) சைவசமயத் தோற்றமும் வளர்ச்சியும் – டாக்டர் டி.பி. சித்தலிங்கம்

(5) அகநானூறு

(6) புறநானூறு

(7) சிலப்பதிகாரம்

(8) வள்ளுவரின் மெய்யியல் – கு.கு. ஆனந்தன்

(9) தமிழ்மொழி இலக்கிய வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார்

(10) தமிழக வரலாறும் பண்பாடும் – டாக்டர் ஏ. சுவாமிநாதன்

(11) தமிழ் இலக்கிய வரலாறு -தமிழண்ணல்

(12) தமிழ் இலக்கிய வரலாறு – எம்.ஆர். அடைக்கலசாமி

(13) தமிழர் நாரிகமும் பண்பாடும் – டாக்டர் அ. தட்சணாமூர்த்தி

(14) சிலப்பதிகாரத் தமிழகம் – தமிழறிஞர் சாமி சிதம்பரனார்

(15) தொல்காப்பியத் தமிழர் – தமிழறிஞர் சாமி சிதம்பரனார்

(16) சமணமும் தமிழும்;- மயிலை சீனி வேங்கடசாமி

(17) பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்- கலாநிதி கைலாசபதி

(18) தெய்வத் தமிழ் – கோ.பூவராகன்

http://ariyaamai.blo…og-post_05.html

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply