தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள்

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள்
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (25) சூ. 274
‘ஒத்த கிழவனும் கிழத்தியும், (கள – 2) என்ற ஒப்புமையை விதந்து கூறுகின்றது.
ஐந்திணை மருங்கின் காமக் கூட்டமாவது, துணையமை நல்யாழ்த் துணைமை யோரியல்பெனவும் (களவு-1) அத்துணைவராவார் ஒத்த கிழவனும் கிழத்தியுமெனவும் அவர்தாம் ஒன்றியுயர்ந்த பாலதாணையாற்காண்ப. (களவு-2) எனவும் அவருள் தலைமகன் பெருமையும் உரனுமாகிய குணங்களை யுடையான் (களவு-7) எனவும் தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையுடையாள் (களவு-8) எனவும் கூறி அவர்தாம் இருவகைக் கைகோளானும் ஒழுகும் ஒழுக்கமே ‘மன்னிய வினை’ என்றும் ஆசிரியர் புலப்படுத்திப் புகுமுகம் புரிதல் முதலாகக் கலக்கம் ஈறாக ஓதப்பெற்றவை களவிற்குரிய நிமித்தமாம் என்றும் முட்டுவயிற்கழறல் முதலிய எட்டும் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்குரிய நிமித்தமாம் என்றும் தெய்வ மஞ்சல் முதலிய பத்தும் கற்பிற்குரிய பொருள்களாம் என்றும் கூறி அவையும் அவை போல்வன பிறவுமெல்லாம் எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய அடிப்படைப் பெருள்களாம் எனவும் இதுகாறும் எடுத்தோதினார். அங்ஙனம் மன்னியவினை பற்றி வரும் பொருள்கள் யாவும் மேற்கூறிய கிழவனும் கிழத்தியும் அத்தகைய சால்புடையராகிய வழியே நிகழுமாதலின் அச்சால்புடைமைக்கு அடிப்படை இவை என்பது விளங்கும்.
எனவே அகத்திணைக்கண் எண்முறை நிலையாய மெய்ப்பாடுகள் தோன்றுதற்கு அடிப்படைப் பொருள்கள் புகுமுகம் புரிதல் முதலாயவை என்பதும் புகுமுகம் புரிதல் முதலாய பொருள்கள் நிகழ்தற்கு அடிப்படை தலைமக்கட்குரிய குணங்கள் என்பதும் அக்குணங்கள் அமைதற்குரிய அடிப்படை பிறப்பு முதலாய ஒப்புமைகள் என்பதும் தெளிவாம்.
அவற்றுள் குணங்கள் தலைமக்கட்குரிய இலக்கணமாக நிற்றலின் அவற்றைக் களவியலுள் விதந்து கூறி, பிறப்பு முதலாய இப்பத்தும் தலைமக்கட்குரிய இலக்கணமன்மையான் ஆண்டுக் கூறாமல் மெய்ப்பாட்டுப் பொருள் தோன்றுதற்குக் காரணமாதல் பற்றி ஈண்டு அமைத்தார் என்க.
பொருள் : பிறப்பு முதல் திரு ஈறாகக் கூறிய இப்பத்தும் களவியலுள் ஒத்த கிழவனும் கிழத்தியும் எனக்கூறிய ஒப்பினது வகைகளாம்.
“முறையுறக் கிளந்த” என்றது களவியலுள் “ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ னாயினும்
கடிவரை யின்றே” என்றதையாம். ஈற்றேகாரம் இசைநிறை. ஏனைய ஏகாரமும் ஒடுவும் எண்ணுக் குறித்து நின்றன. வகை-கூறுபாடு.
1. பிறப்பாவது : குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த அந்தணர் முதலிய நாற்குலம். “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்” என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி விளங்குதல் புலனாகும்.
எ – டு :
அவனுந்தான்
ஏனல் இகணத் தகிற்புகை யுண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும்
கானக நாடன் மகன் …… …….                                 (கலி-39)
இதன்கண் அவனும் என்ற உம்மையான் அவளும் கானநாடன் மகள் என்பது போதரும்.
2. குடிமையாவது : பண்பாடு. அஃதாவது குலனுடையார்க்குரியவை எனச் சான்றோர் வகுத்துக் கொண்ட சால்பு.
குலம், குடிமை என்பன ஒரோவழி ஒத்த பொருளினவாய் வரும் எனினும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு என்பதை இலக்கண வகையான் உணர்த்தற்பொருட்டுக் குலத்தைப் பிறப்பென்று சிறப்பித்தோதினார் என அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வருமெனக் கொள்க.
மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக ஓதப்பெற்ற பொருள் யாவும் பண்பும் செயலுமே ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாய குடிமையையும் பிறப்பையும் ஒப்பினது வகையுள் தலைமை யுடையவை என்பது தோன்ற முதற்கண் வைத்தோதினார் என்க.
எ – டு :
நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்திற் றொடுத்த தீந்தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தாமின் றமையா நந்நயத் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே              (நற்-1)
இதன்கண் நின்ற சொல்லர் என்பதனான் தலைவனது பண்பும் (குடிமை) தம்மின்றமையா நம் என்பதனான் தலைவியது பண்பும் விளங்குதலைக் கண்டு கொள்க.
3. ஆண்மையாவது : ஆளுமைத்திறன். ஆண்தன்மை வேறு; ஆளுதல் தன்மைவேறு. இதன் முதனிலை உரிச்சொல் “ஆள்”. அதன் முதனிலை உரிச்சொல் ‘ஆண்’ என்று அறிக.
இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க.
எ – டு :
அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் பிரிந்தநங் காதலர்
வருவர் கொல்வயங் கிழாய்வலிப் பல்யான்                     (கலி-11)
இதன்கண் அளித்தலும் தெறுதலும் புணர்ச்சியும் தருமெனப் பொருள்வயிற்பிரிந்தான் தலைவன் என்பதும், தலைவி வலிப்பல் யான் என்பதும் இருவர்ஆளுமை ஒப்புமையைப் புலப்படுத்தி நின்றவாறு கண்டு கொள்க.
4. ஆண்டாவது : அகவை. அஃது ஈண்டுப் பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது.
அஃதாவது தலைவற்குப் பதினாறு ஆண்டும் தலைவிக்குப் பன்னிரண்டாண்டும் நிரம்பி நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம் தலைவன் அகவையிற் காற்கூறு குறைதல் ஒப்புமை யகவை (ஆண்டு) என்றுணர்க. இதனை “மிக்கோ னாயினும் கடிவரை யின்றே” எனக் களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க.
எ – டு :
குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி
வளையள் முளைவா ளெயிற்றள்
இளைய ளாயினும் ஆரணங் கினளே (ஐங்-256)
இதன்கண் வளையள் – எயிற்றள் என்பவற்றான் தலைவி பருவமும் ஆரணங்கினள் என்று கூறியதனான் தான் அணங்கப்பட்டமை
புலப்படுத்தினானாகலின் தலைவன் பருவமும் ஒத்துள்ளமை புலப்படும்.
5. உருவாவது : வனப்பு. அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை.
எ – டு :
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அஞ்சில் லோதி அனநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிதவள்
தன்போற் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே   (ஐங்-299)
எனவரும். இதன்கண் தலைவியின் கண் மலர்ந்தது எனக் கூறியதனான் தலைவன் எழிலுடைமையும் விளங்கும்.
6. நிறுத்த காமவாயிலாவது : நிலைபேறுடைய காம ஒழுக்கத்திற்குரிய உள்ளக்கிளர்ச்சி.
எ – டு :
ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையளென் றவட்புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியல்யான் முயங்குங் காலே            (குறு-70)
நறுந்தண்ணீரள் என்பதனால் தலைவனது உள்ளக்கிளர்ச்சியும் சிலமெல்லியவே கிளவி என்பதனால் தலைவியின் உள்ளக் கிளர்ச்சியும் ஒருங்கொத்தமைந்தமை கண்டு கொள்க.
அன்பு எனப்பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது யாவர்க்கும் வேண்டும் பொதுக்குணமாகலின் ஈண்டைக்குச் சிறவாமையறிக.
7. நிறையாவது : சால்பு. அடக்கமெனினும் ஒக்கும். அஃதாவது மறை பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்துதல்.
எ – டு :
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பின் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி ஓதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரப்பா டும்மே                               (குறு-9)
இது தலைமகள் நிறை. வல்லாரை வழிபட்டொன் றறிந்தான் போல நல்லார்கட் டோன்றும் அடக்கமு முடையன்  (கலி-47)
என்பது தலைமகன் நிறை.
8. அருளாவது ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும் மனமாட்சி. அருளுடைமை என்னும் பொதுக்குணம் ஈண்டுச் சிறப்புப் பொருள் படநின்றது. பொறை வேறு; குறையை நிறையாகக் கொள்ளும் பண்பு வேறென அறிக.
எ – டு :
……. ……. நெஞ்சே உறழ்ந்திவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன்
என்றடி சேர்தலுமுண்டு                                  (கலி-88)
இது தலைவி தலைவன் பரத்தைமையுணர்ந்தும் “புறஞ் சாய்த்துக் காண்டைப்பாய் நெஞ்சே” என்பதனான் அதனை நிறையாகக் கொண்டு அருளினமை கண்டு கொள்க.
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்                               (குறு-196)
என்பது தலைவன் தலைவியின் குறையை நிறையாகக் கொண்ட மனமாட்சியைப் புலப்படுத்தும்.
9. உணர்வாவது : ஒருவர் ஒருவர் தம் உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு.
எ – டு :
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்
சொற்கள் என்னபயனுமில என்பதனாற் கண்டு கொள்க.
10. திருவாவது : தெய்வத்தன்மை. அஃதாவது கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி என அவர் கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக.
எ – டு :
அஞ்சுடர்நீள் வாண்முகத்து ஆயிழையும், மாறிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண்டஞ்சி
ஒருசுடரு மின்றி உலகு பாழாக
இருசுடரும் போந்தவென் றார்                         (திணைமாலை-71)
இதன்கண் தலைவியையும் தலைவனையும் தெய்வத்தன்மை புலப்படக்கண்டோர் கூறி மகிழ்ந்தவா றறிந்து கொள்க. உரு வடிவழகு; திருவியந்துணரும் தெய்விகப் பொலிவு.
இனி, அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் இழிசினர் கண்ணும் ஈண்டுக் கூறப்பெற்ற ஒப்புமைகள் ஒருங்கு நேராமையான் அவர்தம் காமஒழுக்கம் அகனைந்திணைக் குரித்தாகாது பெருந்திணையின் பாற்பட்டு அடங்குமென அறிக.
http://www.tamilvu.org/slet/l0143/l0143ine.jsp?x=274&txt=%F0%A4
About editor 3122 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply