வவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள்

வவுனியா மாவட்டத்தில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்கள்

நடராசா லோகதயாளன்

வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்த தமிழ் கிராமக்கள் மூன்றில் இன்று ஒரு தமிழ்க் குடும்பமும் வாழாத நிலமைக்கு   ஆக்கப்பட்ட நிலையில் ஏனைய கிராமங்களும் அழிய முன்பு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும் அரசியல்வாதிகள் வரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராமத்தில் வாழ்ந்து இன்று ஏதிலிகள்போல் வாழும்  மக்கள் கோரிக்கக விடுக்கின்றனர்.

இது தொடர்பில் அந்த மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட எல்லைப்பகுதி கிராமங்களான நொச்சிக்குளம் , கோரமோட்டை , நாவர்பண்ண ஆகிய மூன்று கிராமத்திலும் 1997 வரைக்கும் சுமார் 250 குடும்பங்கள் வாழ்ந்தனர். ஆனால் இன்று  ஒரு தமிழ்க் குடும்பமும் வாழாத நிலைமைக்கு   இக்கிராமங்கள் ஆக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டபோதும் எச்சக்கள் மட்டும் மிஞ்சியுள்ளது.

இவ்வாறு எமது கிராமங்கள் போன்று அயல்  கிராமங்களும் அழிய முன்பு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும் அரசியல்வாதிகள் வரை அனைவரும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு இக் கிராமங்களில் வாழ்ந்த எமக்கான அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் அப்பகுதியில்  எம்மால் மீளக்குடியமர முடியும். இங்கு வாழ்ந்த எமக்கான வாழ்வாதாரமாக இப்பிரதேசத்தில் 450 ஏக்கர் வயல் நிலமும் உள்ளது.  இப் பிரதேசத்தில் போர்க் காலத்திலும் 1992 முதல் 1996 வரையில் நாம் விவசாயம்மேற்கொண்ட காலத்தில் எம்மால் பலரை ஆழ ஊடுருவும் படையணியினர் வந்து தலைகளை வெட்டிச் சென்ற காலத்தில்கூட அச்சமின்றி விவசாயம் மேற்கொண்ட எம்மால் இன்று வாழமுடியவில்லை.

இதற்கு யாணைகளின் தொல்லையே முக்கிய  காரணமாகவுள்ளது. அதனைவிட நாம்வாழ்ந்த பகுதிகளில் இருந்து நாம் 1996 ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும்இடம் பெயர்ந்தமையினால் இன்று 20 முதல் 25 ஆண்டுகளாகிவிட்டன. இதன் காரணத்தினால் அங்கே பல மரங்கள் பாரிய அளவில் வளர்ந்த காரணத்தினால் வனவளத் திணைக்களம் மக்களின் குடியேற்றத்திற்கு தடையாகவுள்ளனர்.

இதனையும் தாண்டி 450 ஏக்கர் வயல்ப் பகுதியில் விடுவிக்கப்பட்ட பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முயன்றால் யாணைகளுடன் தொல்லையோ மிக அதிகம். தென்னிலங்கையில் வயல்கள் குடியிருப்புகளிற்குள் பிடிக்கப்படும் யாணைகளை ஏற்றிவந்து கொரவப்பொத்தானை காட்டின் ஊடாக எமது பகுதிக் காடுகளிற்குள் இறக்கி விடுகின்றனர். தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களை கவனத்தில் எடுக்கும் அதிகாரிகள் எம்மையோ அல்லது எமது வாழ்வாதாரத்தினையோ கவனத்தில் கொள்ளாது இந்த ஈனச் செயலைப் புரிகின்றனர்.

இதனால் இப் பகுதியில் தற்போது 40ற்கும் மேற்பட்ட யாணைகள் உலாவுகின்றன. அத்தோடு வீதிகள் அனைத்தும் தாரைக் கண்டே பல தசாப்தங்கள் ஆகின்றன.  இதன் காரணத்தினால் தற்போது நெடுங்கேணியில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எமது பகுதிகளிற்கு பயணிப்பதானால் சுமார் 2 மணிநேரம் செல்கின்றது. எமது சொந்தக் கிராமத்தில் குடியமர எமது கிராமத்திற்கான வீதிகளை அமைத்து வீதி விளக்குகளைப் பொருத்தி முக்கியமாக யாணைகளில் இருந்து பாதுகாக்கும் வேலிகளை அமைத்து தருமாறு பல தடவைகள் கோரினோம்.

இவை எதுவுமே இடம்பெறவில்லை இதனால் எஞ்சி வாழ்க்கை காலத்தையும் ஏதிலி வாழ்விலேயே நடாத்தும் அவலத்தில் வாழ்கின்றோம். 100 ஆண்டுகளிற்கும் மேல் வாழ்ந்த எமக்கு யாணை வேலிகளை அமைத்து தருமாறு கோரிணால் 50 அல்லது 60 குடும்பத்திற்காக  ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தை சுற்றி யாணை வேலிகளை அமைக்க முடியாது எனக்கூறும் அதிகாரிகள் கடந்த 7 ஆண்டுகளிற்குள் வந்து குடியேறிய பொபஸ்வேவா சிங்கள குடியேற்றத்தினை சுற்றி இரண்டு அடுக்கு யாணைப் பாதுகாப்பு  வேலிகள் அமைத்து கொடுத்த அரசு தமிழ் மக்களின் உயிர்களின் பாதுகாப்பு விடயத்தில் மட்டும் அசட்டை செய்கின்றது.

எனவே இவற்றினை சீர் செய்து தமிழர் தாயகப்பகுதிகளை பாதுகாக்க முன்வரவேண்டும். அல்லது இக் கிராமங்களில் இருந்து சுமார் 7 மைல் தொலைவில் உள்ள சிங்கள மக்களே எதிர் காலத்தில் எமது கிராமங்களையும் ஆக்கிரமிக்கும் நிலமை ஏற்படும். அவ்வாறு ஒரு நிலமை ஏற்பட்டால் அதனையும் மாவட்ட அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். எனவும் தெரிவித்தனர்.

-101-

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply